கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 12,194 
 
 

2054 ஆண்டு ஐனவரி மாதம் 26 ம் தேதி. ஞாயிற்றுக்கிழமை. அந்த பிரமாண்டமான கல்லூரி வளாகத்தில் நுழைவுத் தேர்வுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்தது. காலை 9 மணிக்கே சுமார் ஆயிரம் பேர்களுக்கு மேல் கூடி விட்டார்கள்.

எல்லோருடைய கைகளிலும் நோட்ஸ் புக், கைடு என்று எதை எதையோ வைத்துக் கொண்டு கடைசி நேரத்தில் பரபரப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் கடந்த ஐந்தாண்டுகளாக நடந்த நுழைவுத் தேர்வு வினாத் தாள்களை வைத்துக் கொண்டு, அதற்குரிய விடைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“ சார்!….நீங்க இந்த வருடம் தான் முதன் முதலாக முயற்சி செய்கிறீர்களா?….”
“ அட…நீங்க வேறே…நான் கடந்த நாலு வருஷமா தொடர்ந்து நுழைவுத் தேர்வு எழுதிக் கொண்டுதானிருக்கிறேன்!….இந்த வருஷமாவது அட்மிஷன் கிடைச்சாப் பரவாயில்லே!….”

“ நான் இந்த வருஷம் தான் நுழைவுத் தேர்வு எழுத வந்திருக்கிறேன்!….இந்த ஆறு மாசமா எல்லா நோட்ஸையும் உருப்போட்டு வைத்திருக்கிறேன்!…”

இவர்களின் பேச்சுக்கு நடுவே புகுந்து மற்றொருவர் “ ஏன் சார்!…நீங்க நாலு வருஷமா எழுதுவதாகச் சொல்லறீங்க….கடந்த வருஷங்களில் கேட்ட கேள்விகளில் இருந்து தான், இந்த வருஷமும் கேள்விகள் வருமென்று சொல்றாங்களே?…” என்று சந்தேகம் கேட்டார்.

“ அதெல்லாம் கப்ஸா…..நாம கொஞ்சம் கூட எதிர் பார்க்காத கேள்விகள் எல்லாம் கேட்பாங்க!….”

“ ஐயோ!……அப்படியா!…..” என்று நொந்து போய் அப்படியே உட்கார்ந்து விட்டார்.

தேர்வு எழுத வந்த சுமார் ஆயிரம் பேர்களுக்குமே அறுபதிலிருந்து, எழுபது வயசு இருக்கும்! வயசானவர்களுக்குத் துணையாக அவர்கள் பெற்ற பையன்களும், பெண்களும் ஆபிஸுக்கு லீவு போட்டு விட்டு வந்து காத்திருந்தார்கள்.

அன்றைய நுழைவுத் தேர்வு அந்த நகரத்தில் செயல் படும் அரசு அங்கீகாரம் பெற்ற இருபத்திஐந்து முதியோர் இல்லங்களின் அட்மிஷனுக்காக நடத்தப் படும் தேர்வாகும்.

பெற்றோர் துணைக்கு வந்து காத்திருந்த ஒரு வாலிபன் “ இந்தக் காலத்தில் மெடிகல் சீட் முதல் அனைத்து துறைகளுக்கும், காலேஜில் சுலபமாக இடம் கிடைத்து விடுகிறது! வேலை வாய்ப்பும் ஈசியாகி விட்டது! இந்த சீனியர் சிட்டிஷன் ஹோம் அட்மிஷன் கிடைப்பதுதான் இப்ப குதிரைக் கொம்பாக போய் விட்டது!” என்று வேதனையோடு சொன்னான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *