58, 77, 83! நாளை?
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 24, 2024
பார்வையிட்டோர்: 884
(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இங்கே இன்னும் வாழ வேண்டுமே என்பதற்குரிய தற்காப்புக் கேடயமாக, இவன்களையெல்லாம் நான் ‘மன்னித்து’ விட்டேனா?
ஒரு முத்துச்சாமிப் பிள்ளையுடைய அகால இறப்பின் நன்றிக் கடனுக்காக என்ற போர்வையில், ஏழு வருஷங்களுக்கு முன் தமிழ்ச் சத்தியபாமாவைக் கதிரேசன் கோவிலில் கைப்பிடித்துக் கொண்ட ஊரின், நாட்டின் ‘முன்னோடி’ சுமணதாஸ், சுமணே, கடந்த பன்னிரண்டு வருஷங்களாகவே அவரின் அதே இண்டஸ்ட்றியில், அவர்தம் படத்துக்குத் தினசரி காலையும் மல்லிகைச் சரம் போர்த்து வணங்கிவிட்டு வேலை தொடங்குவதைக் காணும்போதோ நினைக்கும்போதோ-
உயில் எழுதப்பட்டுவிட்ட அதே முத்துச்சாமிப் பிள்ளையின் உயிருக்காக என் இரத்தம் மௌனமாகச் சூடேறித்தான் என்ன புண்ணியம்?……
ஐம்பத்தெட்டு அவ்வளவாக நினைவில் இல்லை. பெருமூச்சுடன் எழுபத்தேழையும் மறக்கலாம். ஆனால் எண்பத்து மூன்றை?…..
ஒன்றாய் விளையாடத் தெரியாத மூன்றே மூன்று வகுப்புகளால் எப்படி மனித நேயப் பரீட்சை எழுத முடியும்?
எங்களூர் சிறியது. ஆனாலும் சின்ன மனங்கள் சிறிய விகிதத்திலும் பெரிய மனங்கள் பெரிய விகிதத்திலும் இருந்தும், அங்கே அந்தச் சின்ன விகிதத்தால் பதம் பார்க்கப்பட்ட சோறுதான் இன்று பெரிய விகிதத்தில் அன்னதானமாக்கப்படுகிறது.
எங்கள் தகப்பனார் ஒரு தேயிலைத் தோட்டத்தில் டீ மேக்கராகக் காய்ந்து காய்ந்தே எங்களுக்கு நீர் ஏற்றியவர். ஓய்வூதியத்தால் இந்தப் பாதையோரத்துப் பழங்கால வீட்டை வாங்கினார்.
பாதையோரத்து வீட்டையொத்த யோகம் அன்று வேறொன்றும் இருந்ததில்லை; இன்றோ அது போன்ற கேடு காலமும் வேறில்லை தமிழர்களுக்கு.
பாதைப் பள்ளத்தில் எங்கள் வீடு; பாதைக்கப்பால் முத்துச்சாமிப் பிள்ளையின் ஹேண்ட்லூம் இண்டஸ்ட்றி. எட்டுப் பெண் பிள்ளைகளோடு சுமணதாஸப் பொடியனும் வேலை செய்த முப்பதுக்குப் பதினைந்தடிக் கட்டிடம். மற்றும் சுற்றுப் புறத்துக் கால் மைல் சுற்றாடலுக்குள் வெறும் இனுக்குக் காடுதான். ஏழெட்டுக் கடைகளின் மண்டி வடக்கே ஒரு கால் மைலுக்கு அப்பால். தேயிலைத் தோட்டங்கள் தூரே தூரே மேற்புறம் படர்ந்திருக்க, சிங்கள நாடுகள் அடுக்கடுக்காய்ப் பள்ளத்தில்
ஊரடங்குச் சட்டம், வலியோர் உயிர்களைக் காத்து எளியோர் உயிர்களைக் குடித்துக் கொண்டிருந்த நான்காம் நாள். நடந்தவை போக நடக்காதவையும் சகல நெஞ்சுகளிலிருந்தும் முளைவிட்டு வாய் வழி வியாபித்துக் கொண்டிருந்தன.
எங்களூரில் ஊரடங்குச் சட்டம் பற்றிப் பயப்படத் தேவை இல்லை. பொலீஸோ இராணுவமோ ஓரிரு தடைவை தார்ப்பாதை அளப்பதோடு சரி. கடைகளில் ‘ஒருபலகை வியாபாரம்’ நடக்கும்.
அன்றையத் தினமும் ஒன்பது மணிக்குத்தான் எழும்பினேன். பாதைப் பக்கம் போய்க் கொட்டாவிகளுடன் கண்களைப் பழக்கினேன். பிரம்மச்சாரி முத்துச்சாமிப் பிள்ளையின் முகம் மூடியே கிடந்தது.
கடைமண்டிப் பக்கமிருந்து ரேஸ் :புக்கிப் பியசேன வந்தார்.
“ஹாங், ராஜா! இப்பத்தான் எலும்புனதா?”
“என்ட முதலாளி, என்ட!”
எனக்கு முன்பாக நடந்து வீட்டுக்குள் நுழைந்து கூடத்து இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.
“அம்மா!… பியசேன முதலாளி வந்திருக்கிறாங்க!”
நெருப்பை உள்ளே வைத்துக் கொண்டு புகை வெளி வராமல் தடுக்கும் மூடிகளாக அப்பா, அம்மாவின் முகமனும் உபசரிப்பும்.
“…இப்ப மஹத்தியா நாங் வந்ததி மிச்சங் முக்கியமான ஒன்னுக்குத்தாங்! நுவர, கொலம்ப பக்கமெல்லாங் மிச்சங் மோசங்! ஆலுகல், ஊடுகல், கார், ஃபஸ், எல்லாம் எரிக்கறது! காட பயலுகல் மிச்சங் அனியாயங் செய்யறது! இப்ப யாரயுங் நம்பேலாதி மஹத்தியா! மொனவத ராஜா கியன்னே?….”
“எத்தமாய் முதலாளி!”
”இந்த ஊர்க்கி ஒன்னுங் வரமாட்டாங்தாங்! வந்தாலுங் நம்ம ஸும்மா பாத்திக்கிட்டிருக்கப் போறதா? ஆனா கவனமா இரிக்க வேனும்தானே, நோனா மஹத்தயா?”
“அது சரிங்க, மொதலாளி!… அப்பிடி வந்துட்டாலும் என்னதாம் பண்றது? எல்லாருக்கும் வர்றதுதானே நமக்கும்ங்க!”
“அப்பிடி ஸொல்லி போட்டு நம்ம ஸும்மா இரிக்க ஏலுமா மஹத்தியா? அவெங் வெட்ட வாரதி! நம்ம கலுத்து குடுக்கறதா?”
‘உன் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு!…’
அண்ணாந்து சுவரைப் பார்த்தேன். யேசுவானவர் என்னையும். மனதுக்குள் சிலுவையிட்டுக்கொண்டேன்.
“அதுன்னா நெசந்தாங்க, பியசேன மொதலாளி! நாம எதுத்து வெட்டாட்டிப் போனாலுந் தடுக்காட்டிப் போனாலும் இன்னும் வெட்டுடான்னு முன்னுக்கு நிக்காம இருந்தாப் போதும்! றூத்! போய்த் தேத்தண்ணியக் கொண்டாங்க ளேன்!”
‘யேசுவே!… பரமண்டலத்தில் இருக்கும் பிதாவே! நீங்கள் கூறிய படிமத்தின் உண்மை என்ன’?
“நாங் ஒன்னு சொல்றதி டீ மேக்கர் மஹத்தியா! நல்ல ஸாமானங் எல்லாத்தயுங் நம்ம ஊட்ல போட்றது! நீங்க எல்லாருங் கோலாஹல முடியற காட்டிங் நம்ம ஊட்லயே இரிக்கறது! :பஜார்ல யாருங் வர மாட்டாங்! நீங்க தனியதானே இரிக்கறது? நீங்கலுங் சாமி புல்லேயுங் நம்ம ஊட்டுக்கு ரவைக்கி வாரதி!…”
அப்பாவும் நானும் மௌன யோசனையில் இருந்தோம்.
எங்களுக்கெல்லாம் காட்டுக்குள் போய் ஒளித்து வாழ முடியாதுதான். முந்தாநாள் இரவு மேமலைத் தோட்டத்துக்குப் போன காடையர்களின் மேல் கொதித்த எண்ணெய் ஊற்றி இரணப்படுத்தி அனுப்பிய தொழிலாளர்களைப் போல் ஏதாவது செய்ய ஆள் பலமும் இல்லை. எனவே தப்பிப்பதற்கு, அல்லது தடுத்துக் கொள்வதற்கு, அவர் கூறியதுதான் வழியாகத் தெரிந்தாலும்-
எதிரி எங்களைக் கோழையாக மையப்படுத்துவான்; குட்டுப்பட வேண்டும்; அமைதியாகிவிட வேண்டும்; அல்லது அமைதியானதாய் நடிக்க வேண்டும்; மீண்டும் அவன் முஷ்ட்டி உயர நாம் தலை குனிந்து, வீட்டிலொரு மாதிரியும் வெளியில் ஒரு மாதிரியுமாய் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டும்!
தப்பிக்கத்தான் வேண்டும் – தன்மானத்தோடு வாழுவதற்காய்.
அரசு எங்களைக் காப்பாற்றுவதைவிட அயல்தான் காப்பாற்ற வேண்டியிருக்கிறது நெருப்பை விட நீரிடம்தான் அதிக மனித நேயம் நிறைந்திருப்பதைப் போல!
“மஹத்தியா, என்னா யோசிக்கறது?…. ராஜா?….”
“அனியாயமா….. பியசேன மொதலாளி….. ஒங்களுக்கும் கரச்சலா இருக்குமேன்னுதான்…”
“நமக்கென்னா கரச்சல் மஹத்தியா?…..”
நானும் சிரித்துவிட்டுப் பேசாமலிருந்தேன்.
“பியசேன மொதலாளி மாதிரி ஊருக்கு ஒராளாவது இருந்தாப் போதுமே! ஆனா நீங்க எங்களுக்கு ஒதவி செய்யப் போய் இந்தக் காடயங்களோட கோவம் ஒங்க மேலயும் வருமே!……”
“நம்ம மேலயா!..ஹாஹ்ஹா!…. டீ. மேக்கர் மஹத்தியா நல்லா ஜோக் பேசறதில்லியா! நாங் அவன வெட்டி சூப் போடறதில்லியா! இந்த அப்புரானி தமுலாலுககிட்ட ஆட்ற மாதிரி நம்மகிட்ட வாலாட்ட ஏலாதிதானே!… நல்ல கதயில்லியா ராஜா அப்பா பேஸ்றதி!….”
தேனீர் வந்தது.
அவரின் அழைப்பை அம்மாவிடம் சொன்னார் அப்பா. அம்மா முகத்தில் ஒளி; நெஞ்சின் மேல் கைச்சிலுவை.
“அதிதாங் ஸெய்ய வேனுங், நோன மஹத்தியா! இன்னைக்கி நாலைக்கி வாக்கில் இங்கயும் பொடியன்மார் வரபோறதி சொல்லி நமக்கு கேல்வி. வேற வேற ஊர்ல இரிந்தி வாரதாங்! நம்மட ஊர்ல அப்பிடி வர உட ஏலாதி! அதி பொரவு பாப்பம்! இப்ப ஒங்கலயுங் ஸாமிபுல்லேயுங் காப்பாத்த வேனுந்தானே ?……”
குட்டி மகாநாடு ஒன்றின் பிறகு பியசேன கிளம்பினார். நானும் பாதை வரையில் நடந்தேன்.
பாதையை அடையவும் முத்துச்சாமிப் பிள்ளை தம் இல்லத் தொழிற்சாலைக் கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது ஊரடங்குச் சட்டம் அவரது சூரியனையும் அதுவரை போர்த்து வைத்திருந்த மாதிரி.
“ஹாங்!… ஸாமி முதலாலிகிட்ட வரத்தான் வாரதி! இப்பதாங் எலும்புனதா?”
“ஆயுபோண்டா மொதலாளி, வாங்க!… அப்பறம் என்னாதாஞ் செய்யச் சொல்றீங்க! திங்க வேண்டியது; தூங்க வேண்டியது! நம்ம பாடு சரியாப் போஹ்து ; ஒண்டிக் கட்ட! அஞ்சாறு புள்ள குட்டிங்களோட அன்னாடங் காச்சிங்க என்னா செய்வாங்க?”
“அதிக்கி ஒன்னுங் ஸெய்யேலாதிதானே ஸாமி முதலாலி? கவர்மேந்து நமக்கி நல்லதிதானே ஸெய்றாங்?….”
“ஸாமி முதலாலி!… நாங் ராஜா ஊட்லயுங் ஸொன்னதி. அவுங்க எல்லாருங் கலபொல முடியிற காட்டியுங் நம்ம ஊட்லதாங் இரிக்க போரதி! நீங்கலுங் வாரதி! ஸரியா? கொலபங் கூடுறதிதானே? நம்மால அதி நிப்பாட்ட ஏலாதிதானே? அதிதாங் ஸொல்லீட்டு போரதி! ஸரியா? அவெங், சுமனதாஸ கொல்லாவுக்கு இங்க ரவைக்கி படுக்க ஸொல்ரதி!”
“அவனத்தான் ரெண்டு மூணு நாளாக் காணுங்களே!”
“அப்ப பூட்டி போட்டு வாரதி! ஸரியா?”
“நம்பள யாரு என்னா செய்யப் போறாங்க, மொதலாளி! நாங் கெழவன்; ஒண்டிக் கட்ட! அதும் போக சிங்களப் புள்ளைங்கதானுங்களே நம்பகிட்ட வேல செய்யுதுங்க! எத்தனப் புள்ளைங்களுக்குக் கலியாணங் கட்டி வச்சிருப்பேன்; எத்தனப் புள்ளைங்கள மிடிலீசுக்கு அனுப்பிச்சிருப்பேன்; நம்பளைக் கொன்னு என்னா பொரோசனமுங்க! அட கொன்னாக கொல்லட்டும், வாங்க! நாம்ப போனாலும் ஒண்ணுதேன்; இருந்தாலும் ஒண்ணுதேன்! நம்ப பொடியேஞ் சுமுணா பெட்டேரியப் பாத்துக்கிடுவானுங்க!…”
“மெயா ஹரி கதாவக்நே கியான்னே, ராஜா!.. அந்த பைத்தியங் கதயெல்லாங் இப்ப ஸரிவர மாட்டாங், முதலாலி! ரஸ்த்தியாதுகாரேங் எல்லாங் இப்ப ஸுடு புடிச்ச நாய் மாதிரி திரியறதி! ராஜா, ஸாமிபுல்லே முதலாலியுங் ரவைக்கி கூட்டிகிட்டு வாரதி!…”
“ஹரி முதலாளி!”
“போம்.ப சூத்திங்க!”
பியசேன படியேறிப் போய்விட்டார்
“போகாட்டிப் போனாலும் பெரிய மனுசனாப் போய்ட்டோம்னு சொல்லுவாஹ! சரி, ராவைக்கி ஒரு பொழுதுதானுங்களே !… இந்தப் பயணம்னா சேதம் ரொம்ப சாஸ்த்தி போல! யாழ்ப்பாணத்தாளுக ஈழம் கேட்டா நம்பள ஏம் போட்டு இப்பிடிக் கொல்றானுஹ? அங்க போய்க் கேக்குறது? அவிங்களோட அடிச்சிப் புடிச்சி பாக்குறது? இதென்னமோ எவனயோ உட்டுப்புட்டு எதையோ வெட்டுற கதையா இல்ல இருக்கு!…”
எனக்குள்ளேயே நான் அந்நியமான ஓர் உபத்திரவத்தோடு, நானே என்னைக் கொன்றுவிடுவேனோ என்ற இடர்ப்பாட்டோடு, கடைசி நடையைப் பியசேன முதலாளி வீட்டில் இறக்கி விட்டுத் திரும்பும் போது இரண்டு மணிப் பசியாயிருந்தது.
கடைமண்டிப் பக்கமிருந்து திஸ்ஸ வந்துகொண்டிருந்தான். என்னைக் காணாதவனாகத் தார்ப் பாதையுடன் கதைத்துக் கொண்டே போனான்:-
”ராஜா! எனக்கொன்றும் செய்வதற்கில்லை! இன்றிரவு கண்டிப் பொடியன்மார் இந்தப் பக்கம் வருவதாகக் கேள்வி. மேமலைத் தோட்டம் தூளாகப் போகிறது! எங்கேயாவது காட்டுப் பக்கம் போய்த் தப்பித்துக் கொள்ளுங்கள்! :பஜாருக்கும் தோட்டங்களுக்கும் செய்தி அனுப்பி விட்டோம்! என்னைக் காட்டிக் கொடுத்து விடாதே!”
பசி குடைந்தும் சாப்பிட முடியாமல் சாப்பிட்டு எழுந்தோம். ஒரு மணித்தியாலம் ஜெபம் பண்ணினோம். அம்மா வேறு நான் வேறாக நேர்ந்து கொண்டோம். மிச்ச மீதிகளை வீட்டுக்குள் ஒழுங்கு படுத்தினோம் – மீண்டும் வந்து வாழ வேண்டியிருக்கிறதே என்ற நம்பிக்கையில்.
ஆறு மணிக்கெல்லாம் அம்மாவும் அப்பாவும் தங்கையும் கடைசித் தம்பியும் புறப்பட்டார்கள் – சகுனம் பார்த்து இறங்குவதுபோல் எதிரிகள் காணாதபடிக்கு! வேண்டுதல்கள், கண்ணீர், எச்சரிக்கை, சிலுவைக் கரங்களுடன் அம்மா.
யேசுநாதரின் காலடியில் தவிர வீட்டுள் இருள் குடியேறத் தொடங்கியது. வாள்களைத் தயாராக முன் கதவடியில் வைத்தேன். தம்பிமார் இருவருடன் சோபாவில் இருந்தேன்.
இருள் கனத்தது. ஜன்னல் கண்ணாடிகளும் இருண்டன.
அப்போதுதான் முத்துச்சாமிப் பிள்ளையின் நினைவு வந்தது. போய் விட்டாரா? இல்லாவிட்டால் உடனடியாக அனுப்பிவைக்க வேண்டுமே!… ஏழு மணி ஆகிறதே!…….
கதவைத் திறக்க எழுந்தேன்.
தெற்குப் பக்கமாக இருந்து ஏழெட்டுத் தீப்பந்தங்கள் தார்ப் பாதையில் வருவது கண்ணாடிக் கூடாக மங்கலாகத் தெரிந்தது.
தீ வைப்புக்கு வாகான தீப்பந்தங்கள்! நெருங்கி வர வர, வாள்களும் கத்திகளும் மின்னுவதுவும் தெரிந்தது.
“பின் பக்கக் கதவ ரெடியாத் தொறந்து வை, தம்பி !… நம்ப ஊட்டுப் பக்கமாத் திரும்புனானுகள்னா பாஞ்சி ஓடீறணும்! டோர்ச் ரெண்டயுங் கைல எடுத்துக்கங்க!…. இந்த வாள்களயும் ……”
புதிய முகங்கள். ஆனால் வெறி ஏறிக் காணப்பட்டன.
பளிச்சென ஒரு பரிச்சய முகம்!…. ‘இவன் என்ன இந்தக் கூட்டத்தோடு?… முத்துச்சாமிப் பிள்ளையின் ‘சிஷ்யன்’ சுமணதாஸ?… தகப்பன் பேர் தெரியாத இவனுமா….’
முத்துச்சாமிப் பிள்ளை வீட்டின் முன் கூட்டம் நின்றது. தம்பிமாரும் என் பின்னால் நின்று ஜன்னல் திரைச்சீலையை இன்னுங் கொஞ்சம் விலக்கிக் கொண்டார்கள்.
‘பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் மேல் ஆணையாக! பிதாவே! பாவிகளை இரட்சித்தருளும்! இந்த மனிதர் போயிருக்க வேண்டுமே, பிதாவே !….’
“முதலாலி!… முதலாலி, நாந்தாங் சுமனே!…”
‘அவர் இருக்கக் கூடாதே! மொதலாளி, அவன் சுமணே இல்ல! யமன்!…’
அதுதான் அவர் வயதென்று பிதா தீர்மானித்திருக்கிறான்.
வெள்ளை வேஷ்ட்டி, கறுப்புத் தொந்தி, அப்பா(வி) முகம்!
“என்ன கமுணே?…”
சுமணதாஸ கபடமாகப் பின்னடையக் கூட்டம் முன்னேற என் இதயம் நெளிந்து துடித்தது.
“மூவ மரபங்!….. கபபங் :பெல்ல!… பற தெமலா!…”
வெட்டிக் கூத்தாடும் பந்தங்களும் ஜூவாலை கனலும் வாள்களுமாக அந்தக் கூட்ட வேலி அவரை மறைத்தது.
தம்பிமார் தேம்பினார்கள். நான் அமானுஷ்யமாக நடுங்குவதை உணர்ந்தேன். இனி நிற்கக் கூடாது! அடுத்த குறி இங்குதான். பின் பக்கமாக ஓட வேண்டும்!… மனிதாபிமானமின்றி நாங்கள் மூவரும் அபாண்டமாக இறந்து பட்டால், எங்கள் மூவருக்காக எதிர்காலத்தில் விதி எத்தனை நல்லவர்களைப் பழி எடுக்குமோ! இதற்காகவாவது ஓடித் தப்பித்து எதிர் காலத்தைக் காப்பாற்ற வேண்டும்!
பளீரென்று ஒரு வெளிச்சம் கடைமண்டிப் பக்கமிருந்து. ரோந்து ஜீப்.
கூட்டம் பந்தங்களை எறிந்துவிட்டு இருண்டு போனது.
வெள்ளை வேஷ்ட்டியில் தன் பிரமச்சரியக் குங்குமத்தை ஏற்றி மல்லாந்து மலர்ந்து கிடந்தார் முத்துச்சாமிப் பிள்ளை தன் வயிற்றுக்குள் கூடத் தான் எதையும் இம்மண்ணிலிருந்து பறித்தெடுத்து வைத்திருக்கவில்லை என்று காட்டுவதைப் போல!
தலையில் அடித்த ஒப்பாரியோடு பக்கமாக நின்றிருந்தான் சுமணதாஸ!
ஒரு பாடையைப் போல் நிறுத்தப்பட்டது ஜீப்.
அதிகாரச் சப்பாத்துகளை சுமணே பிடித்துக் கொண்டான்!
“…தெய்யனே!…. மஹத்தயோ!… ஏழெட்டுப் பேர் கதவைத் தட்டினார்கள்! வேண்டாமென்று சொல்லச் சொல்லத் திறந்தாரே !….”
இங்கே இன்னும் வாழவேண்டும் என்பதற்குரிய தற்காப்புக் கேடயமாக, இவன்களையெல்லாம் நான் ‘மன்னித்து’ விட்டேனா?
ஒரு முத்துச்சாமிப் பிள்ளையுடைய அகால இறப்பின் நன்றிக் கடனுக்காக என்ற போர்வையில், ஏழு வருஷங்களுக்கு முன் தமிழ்ச் சத்தியபாமாவைக் கதிரேசன் கோவிலில் கைப்பிடித்துக்கொண்ட ஊரின், நாட்டின் ‘முன்னோடி’ சுமணதாஸ, சுமணே, கடந்த பன்னிரண்டு வருஷங்களாகவே அவரின் அதே இண்டஸ்ட்றியில், அவர்தம் படத்துக்குத் தினசரி காலையும் மல்லிகைச் சரம் போட்டு வணங்கி விட்டு வேலை தொடங்குவதைக் காணும்போதோ நினைக்கும்போதோ-
உயில் எழுதப்பட்டுவிட்ட அதே முத்துச்சாமிப் பிள்ளையின் உயிருக்காக என் இரத்தம் மௌனமாகச் சூடேறித்தான் என்ன புண்ணியம் ?……
பலவந்தமாகவாவது சிறிய விகிதத்தின் சின்ன மனங்களை மன்னிக்கத்தான் வேண்டும் பெரிய விகிதத்தின் பெரிய மனங்கள் நம்மைப் போலுமே நம்மோடிருப்பதால்.
– 1996ல் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாடளாவிய ரீதியில் ‘தினகரன் பத்திரிகையுடன் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை.
– தினகரன்
– வெள்ளை மரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, துரைவி பதிப்பகம், கொழும்பு.