விமோசனம் உண்டா?
(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“தமிழுக்கு விமோசனம் ஏது? மேனாட்டு ஆசிரியர்கள் எவ்வளவு அழகான கதைகளும், நாவல்களும், நாடகங்களும் எழுதுகிறார்கள்! இவ்விஷயத்தில் வட இந்திய ஆசிரியர்களாவது சிறிது தேவலை; நம் தமிழ் ஆசிரியர்கள் சுத்த மோசம்; உதவாக்கரைகள்!” என்றேன்.
“தமிழ் வசன இலக்கியம் ஆரம்பித்துச் சில வருஷங்களே ஆகின்றன. எவ்வளவோ அதற்குள் முன்னேற்றத்தைக் காண்கிறோமே!” என்றார் நண்பர் சுப்பிரமணியம்.
“அழகிய உயர்தரத் தமிழ் நாவல் ஒன்றாவது நான் படித்துவிட்டுச் சாவேனென்று எனக்கு நம்பிக்கை இல்லை.”
“ஆசிரியர் சுந்தரேசன் எழுதியதைப் படித்திருக்கி றீர்களா?”
“இல்லை.”
“வெகு அழகாய் எழுதுகிறார். அவர் என் நண்பர் தாம். ஒரு நாளைக்கு உங்களிடத்தில் அழைத்துக்கொண்டு வருகிறேன்.”
மேற்கூறிய சம்பாஷணை நடந்து சில தினங்களுக்குப் பின் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் நானும் நாகராஜனும் சமூத்திரத்தை நோக்கி உட்கார்ந்திருந்தோம். சிற்றலைகளும் பேரலைகளும் கரையில் வந்து மோதிக் கொண்டிருந்தன. அகங்காரங்கொண்ட அலைகளிற் சில, நாங்கள் உட்கார்ந்திருந்த இடம் வரைக்கும் வந்து எங்களுடைய கால்களைக் கழுவிவிட்டுச் சென்றன. எக்காலந் தொட்டு அவை முழங்குகின்றன, இனி எக்காலம் வரை அவை முழங்கிக்கொண்டிருக்கும் என்று நினைக்கலானேன். திடீரென்று என்னையும் அறியாமல், “கடலே, நீ ஏன் ஓயாது அலறுகிறாய்? வானத்தைப் பார்” என்றேன்.
“கடல் அலறுவதன் காரணம் உனக்குத் தெரிய வில்லையா?” என்று நாகராஜன் கேட்டான்.
என்னுடைய சிந்தனை கலைவதற்கு எனக்கு இஷ்டமில்லை. ஆகையால் நாகராஜன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் யோசித்துக்கொண்டிருந்தேன்.
நாகராஜன் மீண்டும் பேசினான் : “பண்டைத் தமிழகத்தை விழுங்கின பாவத்திற்குப் பிராயச்சித்தமாக அன்றிருந்து இன்றுவரை கடல் அலறிக்கொண்டே இருக்கிறது.”
“மடையா! அதற்கு முன்னால் கடல் கர்ஜிக்க வில்லையோ? காரணமாவது சரியாய்க் கற்பிக்கத் தெரிகிறதா, உனக்கு? நான் சொல்லுகிறேன்,பார். பாக்கியுள்ள தமிழ்நாட்டையும் விழுங்காமல் விட்டு விட்டோமே என மார்பில் அடித்தும், தரையில் மோதியும், தன்னைத்தானே நொந்துகொள்ளுகிறது கடல்.”
“ஏன் அப்படிச் சொல்லுகிறாய்?’
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல எனக்கு இஷ்டமில்லை. மௌனமாய் இருந்தேன்.
“அங்ஙனம் நீ விரும்புவதன் காரணம் என்ன?” என்று நாகராஜன் மீண்டும் வினவினான்.
“உனக்குத் தெரியவில்லையா?”
“தெரியவில்லை.”
“தமிழ் இலக்கியத்தைப் பார்; அதில் புதுமை மணம் வீசவில்லை. கம்பராமாயண காலத்திலிருந்து புதிய ஊற்றுக்கள் அதில் ஒன்றும் தோன்றவில்லை.”
“கமலாம்….” என்று ஆரம்பித்தான் நாகராஜன்.
“கமலாம்பாள் சரிதையையும், பிரதாப முதலியார் சரித்திரத்தையும் இன்னும் எத்தனை வருஷங்களுக்குத் தான் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்? இந்த நூற்றாண்டு முழுவதும் சொல்லுவீர்களா? அவைகளின் பெயரைக் கேட்டுக் கேட்டு என் காதுகூடப் புளித்துவிட்டது.”
எனக்குக் கோபம் பொறுக்க முடியவில்லை.
அச்சமயம் நண்பர் சுப்பிரமணியம் ஒரு வாலிபருடன் வந்து சேர்ந்தார்.
“இலக்கியப் பேச்சுத்தான் நடந்துகொண்டிருக்கிறது போலும்; சரியான சந்தர்ப்பந்தான். இவர் தாம் ஆசிரியர் சுந்தரேசன். உங்கள் வீட்டிற்கெல்லாம் போய்த் தேடிவிட்டு அல்லவா வருகிறோம்!” என்றார்.
எங்களுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த வாலிபரைப் பார்த்தேன். ‘கிராப்’ என்ற பெயருள்ள ஒரு பரட்டைத் தலை. அதைச் சீவிவிட்டு எத்தனை நாட்கள் ஆயினவோ? அதற்கும் எண்ணெய்க்கும் வெகு நாள் பகையாய் இருந்திருக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் க்ஷவரம் செய்யப்படாத அவருடைய தாடி மீசை ரோமங்கள், சிறுசிறு இரும்பு ஊசிகள், போல் அங்கங்கே நீட்டிக்கொண்டிருந்தன. ஆசிரியர்கள் கண்களிலிருந்து ஞான ஒளி வீசும் என்பார்கள். அவருடைய கண்களிலோ முகத்திலோ நான் எத்தகைய பிரகாசத்தையும் பார்க்கவில்லை. இத்தனைக்கும் முடி சூடுவதுபோல், அழுக்கு வேஷ்டியும் ஷர்ட்டும் அணிந்திருந்தார். அவருடைய தோற்றம் அருவருப்பை ஊட்டியது.
“ஆசிரியரென்றால் நாவலாசிரியரா, நாடகாசிரியரா?” என்று குத்தலாகக் கேட்டேன்.
“இன்னும் இவர் வாலிபர் தானே; இப்பொழுது கட்டுரைகளும் கதைகளும் எழுதுகிறார். இனிமேல் நாடகங்களும் நாவல்களும் எழுதுவார்” என்றார் சுப்பிரமணியம்.
இருவரும் உட்கார்ந்தார்கள்.
“இவருடைய கதைகளைக்கூட நீங்கள் பத்திரிகையில் படித்திருக்கலாமே?” என்று மீண்டும் சுப்பிரமணியம் கேட்டார்.
“நான் தமிழ்ப் பத்திரிகை படிக்கும் வழக்கத்தை விட்டு வெகுநாளாய் விட்டது.”
இங்ஙனம் கூறுவதில் உள்ளூற நான் சிறிது பெருமை கொண்டேன்.
கொஞ்ச நேரம் யாவரும் மௌனமாயிருந்தோம். ஆசிரியர் சுந்தரேசன் இலக்கிய விஷயமாய் ஏதாவது பேசுவார் என்று எதிர் பார்த்தேன். ஆனால் அவர் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்.
அவருடைய தோற்றந்தான் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை; ஆசாமியின் பேச்சு எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம் என்று நானே சிறிது கிண்ட ஆரம்பித்தேன்.
“மேனாட்டு ஆசிரியர்கள் எல்லாத் துறைகளிலும் மிக்க அனுபவம் வாய்ந்தவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுடைய கதைகள் எல்லாம் வாழ்க்கையிலிருந்து அப்படியே எடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் ஒரு ஜீவநாடி ஓடுகிறது. அவர்களுடைய சிருஷ்டிகளெல்லாம் உயிருள்ளவை” என்றேன்.
தமக்குத் தெரிந்த ஆசிரியர்களை உதாரணமாகக் காட்டிச் சுந்தரேசன் இவ் விஷயத்தை மேலும் விளக்குவார் என்பது என் எண்ணம். அவர் ஒன்றும் பேசாமல் இருப்பதைக் கண்டு, நான் மேலும் கூறலானேன். “தொழிலாளர்களின் நிலைமையை உள்ளது உள்ளபடி அறிந்து எழுதுவதற்கு, அப்டன் சிங்க்ளேர் என்னும் அமெரிக்க ஆசிரியர், தாமே மில்களுக்குச் சென்று ஒரு சாதாரணக் கூலியாக இருந்து வேலை செய்வாராம். அத்தகைய ஆசிரியர்கள் நமது நாட்டில் எங்கே இருக்கிறார்கள்?” என்றேன்.
“ஏன், நம் நாட்டிலும் ஓரிருவர் இருக்கிறார்கள்.” பதில் சொன்னது சுப்பிரமணியம்; சுந்தரேசன் அல்ல!
“மேலும் ஓர் ஆசிரியனுக்கு இலக்கியக் கலையில் நல்ல பயிற்சி இருப்பதோடு, சிற்பம், சித்திரம், சங்கீதம் முதலிய இதர கலைகளிலும் சிறிது பரிசயம் இருக்க வேண்டும். நம் ஆசிரியருக்கும் அவை கொஞ்சம் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்” என்றான் நாகராஜன்.
”அது ஒன்றும் எனக்குத் தெரியாது” என்றார் சுந்தரேசன்.
“இதர கலைகள் அறிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை; இலக்கியக்கலை நன்கு தெரிந்திருந்தால் போதும்” என்று சுப்பிரமணியம் தம் நண்பருக்காக வக்காலத்து வாங்கிப் பேசினார். அவர் பி.எல். வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார்!
“அப்டன் சிங்க்ளேரின் நாவல்கள் ஏதாவது படித் திருக்கிறீர்களா?” என்று நான் சுந்தரேசனைக் கேட்டேன்.
“இல்லை.”
“கார்க்கியின் அன்னை படித்திருப்பீர்கள்” என்றான் நாகராஜன்.
“இல்லை.”
நான் ஆச்சரியமுற்றேன். பிரபல ஆசிரியர்களின் புத்தகங்களைப் படிக்காத இவர் எப்படிக் கதைகள் எழுத முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. சுப்பிரமணியத்திற்குங் கூட இது அதிசயமாய் இருந்தது. பிறகு சுமார் பத்து நிமிஷங்கள் வரை ஒருவரும் ஒன்றும் பேசவில்லை. ஆசிரியர் சுந்தரேசனுடைய முகத்தைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. சில சமயம் தரையை நோக்கிக்கொண்டிருப்பார். சில சமயம் சமுத்திரத்தை நோக்குவார். நிமிஷத்திற்கு நிமிஷம் அவருடைய முகத்தின் நிறம் மாறியது. ஒன்றும் பேசாமலிருப்பது அவருக்கே கஷ்டமாக இருந்தது. ஆனால் பாவம்! பேசத் தெரியவில்லை! ‘இவர்களிடத்தில் அகப்பட்டுக்கொண்டு இப்படி விழிக்க வேண்டியிருக்கிறதே’ என்று நினைத்தார் போலும்! தப்புவதற்கு ஒரு வழி தேடிக் கொண்டு இருப்பதுபோல் தோன்றியது. திடீரென்று எழுந்திருந்து, “எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. நான் சென்று வருகிறேன்” என்று விடை பெற்றுக் கொண்டு போய்விட்டார்.
ஏன் தமிழ் இவ்வளவு மோசமான நிலைமையில் இருக்கிறது என்பது இப்பொழுது எனக்கு விளங்கி விட்டது. சுந்தரேசனைப்போல் ஆசிரியர்களையுடைய ஒரு பாஷை இவ்வளவு தூரம் முன்னேறி யிருப்பதே ஆச்சரியமல்லவா? ஆனால் சுப்பிரமணியம், தம் நண்பரை நான் அவமானப்படுத்தித் துரத்திவிட்டதாக என்னைக் குற்றஞ் சாட்டினார். எனக்குக் கோபம் பொறுக்க முடியவில்லை. “நாலு பேருக்கு மத்தியில் இரண்டு வார்த்தைகள் பேசத் தெரியவில்லை! இவன் எல்லாம் ஆசிரியனாம்! இவனுக்கெல்லாம் என்ன எழுதத் தெரியும்? ‘கட்டியணைத்து முத்தமிட்டார்கள்’ என்று கழிசறைக் காதற் கதைகள் எழுதுவான்!” என்றேன்.
“ஆசிரியருக்குப் பேசத் தெரியவேண்டுமென்று எந்தச் சாஸ்திரத்தில் எழுதியிருக்கிறது?” என்று சுப்பிரமணியம் கேட்டார்.
“ஆசிரியனாக இருப்பவன் நாநாவிதமான ஜனங்களோடு பழகி, பேசி, அவர்களிடம் துழாவித் துழாவிக் கேள்விகள் கேட்டு வாழ்க்கையை அறியவேண்டும். அவன் தான் பேராசிரியனாய் விளங்க முடியும்” என்றேன்.
“ஆசிரியனுக்குக் கண்களும் காதுகளும் கூர்மையாக இருந்தால் போதும். நாவை உபயோகிக்க வேண்டிய அவசியமில்லை. ஆலிவர் கோல்டுஸ்மித்தும், அடிஸனும் வெகு அழகாய்ப் பேசுவார்களோ?” என்றார் சுப்பிரமணியம்.
எனக்குக் கோபம் பொங்கியது. “குருடனெல்லாம் தன்னை மில்டனென்றும், பித்தனெல்லாம் தன்னைச் சார்லஸ் லாம்பென்றும், பேசத் தெரியாதவனெல்லாம் தன்னைக் கோல்டு ஸ்மித்தென்றுந்தான் நினைத்துக் கொண்டு திரிகிறான்கள், மடச் சாம்பிராணிகள்!” என்றேன்.
இதற்குமேல் சுப்பிரமணியம் வாய் திறக்கவில்லை. என்ன சொல்லுவார்?
அப்புறம் வெகு நாள் வரைக்கும் ஆசிரியர் சுந்தரேசனை நான் பார்க்கவில்லை. அவரைப்பற்றிக் கேள்விப்படவும் இல்லை. சில தினங்களுக்கு முன்னால் எழும்பூர் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் அவரைச் சந்தித்தேன். அதே அழுக்குத் துணியும், ஷர்ட்டும் அணிந்துகொண்டு பைத்தியக்காரனைப்போல் போய்க் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் லேசாய்ப் புன்னகை செய்தார். ஆனால் அந்தக் கிறுக்கனோடு அறிமுகம் உள்ளவனாய்க் காட்டிக்கொள்வதற்கே எனக்கு வெட்கமாய் இருந்தது. அவரைப் பாராதவன்போல் நான் போய்விட்டேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் என் அறையில் உட்கார்ந்து, தாமஸ் ஹார்டி நாவல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். மத்தியான்னம் சுமார் ஒரு மணி இருக்கும். கையில் ஒரு பத்திரிகையுடன் சுப்பிரமணியம் ஓடி வந்தார். “சுந்தரேசனுடைய திறமையைப்பற்றி நான எவ்வளவு கூறியும் உங்களுக்கு நம்பிக்கையில்லை. இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள்” என்றார்.
நாவலில் கதாநாயகன் கதாநாயகியை முத்தமிடப் போகும் கட்டம். இவ்வழகிய பாகத்தில் ‘சிவ பூஜை வேளையில் கரடி வந்தது’ போல் இவன் எங்கிருந்தடா வந்தான் என்று மனத்திற்குள் நினைத்துக்கொண்டு, “இப்பொழுது எனக்கு நேரமில்லை” என்றேன்.
“இதைப் படித்துப் பாருங்களேன், எவ்வளவு அழகாய் இருக்கிறதென்று” என என்னைத் தொந்தரவு பண்ணினார் சுப்பிரமணியம். ஆசாமி என்னை விட மாட்டார் போலத் தோன்றியது. தலைவிதியே என்று ஹார்டியின் நாவலை வலது கையில் பிடித்த வண்ணம் இடது கையினால் பத்திரிகையை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்தில் வலது கையிலிருந்த நாவல் விழுந்ததைக்கூட நான் கவனிக்கவில்லை. ‘போர்ட்டர் மாரியப்பன்’ என்னும் அந்தக் கதை உண்மையிலேயே வெகு அழகாய் இருந்தது. ரெயில் கூலி ஒருவனுடைய வாழ்க்கையின் உள்ளும் புறமும் அதில் வெகு அழகாய்ச் சித்திரிக்கப்பட்டிருந்தது. மேனாடுகளில் கூட இரண்டொரு பேராசிரியர்களால்தான் அத்தகைய வாழ்க்கைச் சித்திரம் வரைய முடியும். அதை அழியாச் சிறு கதைகளில் ஒன்றாய் மதிக்க வேண்டும். ஆனால் சுந்தரேசன் இவ்வளவு அழகாய் எழுதியிருப்பார் என்று நான் நம்பவில்லை. “எத்தனை கோயில்களில் வேண்டுமென்றாலும் சத்தியம் செய்யத் தயார்; இது ஆசிரியர் சுந்தரேசனுடைய சொந்தக் கதை அல்ல!” என்றேன்.
“இந்த மாதிரியான கதையை நீங்கள் வேறு எங்காவது படித்திருக்கிறீர்களா?” என்று சுப்பிரமணியம் கேட்டார்.
“இதுவரை படித்ததில்லை; ஆனால் இதன் மூலம் வேறு எந்தப் பாஷையிலாவது இருக்கும் என்று நிச்சயமாய்ச் சொல்லுவேன்”. இங்ஙனம் சொல்லி முடிப்பதற்குள், சில தினங்களுக்கு முன்னால் ஆசிரியர் சுந்தரேசனை எழும்பூர் ஸ்டேஷனுக்குச் சமீபத்தில் பார்த்தது திடீரென்று ஞாபகம் வந்தது. ‘அத்தகைய ஆசிரியர்கள் தமிழிலுமா இருக்கிறார்கள்?’ என்று அடுத்த நிமிஷமே என் மனத்தில் ஒரு குரல் சொல்லியது. என்ன இருந்தாலும் நான் கடற்கரையில், அன்று பார்த்த அசடு இக் கதையை எழுதியிருக்காது என்று தீர்மானித்தேன்.
அச் சமயம் வெளியிலிருந்து யாரோ ஒருவர் என்னைக் கூப்பிடும் சப்தம் கேட்டது. கிருஷ்ணன் வருவதாக எழுதியிருந்தான். அவனாகத்தான் இருக்கலாம் என்று நினைத்து. “கிருஷ்ணனா? உள்ளே வாயேன்” என அறையில் இருந்தவாறே கத்தினேன். ஆனால் இரண்டு மூன்று நிமிஷங்கள் ஆகியும் அவன் வரவில்லை. போர்ட்டரோடு ஏதோ தகராறு செய்துகொண்டிருந்தான்.
“சாமான்களை உள்ளே கொண்டுவந்தால்தான் காசு கொடுப்பேன்” என்றான் கிருஷ்ணன்.
“காசு கொடுக்காவிட்டால் போங்கள். இந்த வீடு என்று முன்பே தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்” என்று சொல்லிச் சாமான்களைத் திண்ணையிலே வைத்துவிட்டுப் போர்ட்டர் நடக்க ஆரம்பித்தான்.
இதைக் கவனித்துக்கொண்டிருந்த நான் ஆச்சரிய முற்றேன். பேசின பணத்திற்குமேல் அரையணாவாவது அதிகம் வாங்காமல் செல்லும் போர்ட்டரை என் சிறிய வாழ்க்கையில் நான் இதுவரை கண்டதில்லை. அங்ஙனம் இருக்க, மத்தியான்ன வெயிலில் ஸ்டேஷனிலிருந்து சுமார் ஒருமைல் தூரம் கழுத்து வலிக்கச் சாமான்களைச் சுமந்து கொண்டு வந்துவிட்டு ஒரு பைசா கூட வாங்காமல் செல்லும் இந்த அதிசயப் போர்ட்டர் யார் என்று பார்க்க விரைவாய் வெளியில் சென்றேன். அந்தப் போர்ட்டரைப் பார்த்ததும் என் கண்களை நம்ப முடியவில்லை. அப்படியே பிரமித்து நின்றேன். இரண்டொரு நிமிஷங்களுக்கு அப்புறம் கிருஷ்ணனைப் பார்த்து, “அதோ போகிறாரே, அவரா உன் சாமான்களைச் சுமந்துகொண்டு வந்தது ?” என்று கேட்டேன்.
“ஆமாம். அந்த அகங்காரம் பிடித்த பயல்தான்” என்றான் கிருஷ்ணன்.
அழுக்கு வேஷ்டியும் கிழிந்த பனியனும் அணிந்து கொண்டு ஆசிரியர் சுந்தரேசன் தெருவழியே போய்க் கொண்டிருந்தார்!
– வாடா விளக்கு முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.
![]() |
சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 7, 2025
பார்வையிட்டோர்: 79
