கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 25, 2025
பார்வையிட்டோர்: 8,562 
 
 

அனுப்பனடி – காமாட்சி அம்மன் தெரு – முனையில் உள்ள டீ கடை முன்,

“என்னடா வினோத், உன் நண்பர் முருகன் வந்திருவாரா?, உன்னை நம்பி தான் இருக்கேன்!“ என்று வாசு கூறினான்.

“என்னைய நம்பி வந்துட்ட, அதோட விடு. உன் பிரச்சனைய முடிந்ததுன்னு நெனைச்சுக்கோ. ஏன்னா உனக்காக நான் நண்பன் முருகன்ட உதவி கேட்டு இருக்கேன். அவன் நிச்சயமா செய்வான். அதுவும் நான் கேட்டா இல்லைன்னு சொல்ல மாட்டான் “ என்று நண்பன் முருகனை பற்றி பெருமையாய் பேசி கொண்டு இருக்கும் போதே , அவர்களின் முன் இரு சக்கர வாகனத்தில் வந்து நின்றான் முருகன்.

“வாடா , முருகா , உன்னை பத்தி தான் பெருமையா பேசிட்டு இருந்தேன். அதுக்குள்ள வந்துட்ட.” என்று வினோத் கூறினான்.

சிறு புன்னகையுடன் முருகன் ,

“என்னை பற்றி பெருமை பேச்சு எல்லாம் வேணாம். இந்தா நீ கேட்ட பணம் ஐம்பது ஆயிரம் , பிரச்சனைய முடிச்சிட்டு திரும்பி கொடு “ என்று முருகன் கூறி கையில் இருந்த பண பையை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

முருகனின் செயலை பார்த்து வாசு ஆச்சரியபட்டான்.

“என்னடா வினோத், என்ன பிரச்சன, யாருக்கு பணம் என்று எதுவும் கேக்கல? பணத்தை கொடுத்துட்டு கிளம்பிட்டார், உன் மேல அவளோ நம்பிக்கையா?“ என்று வாசு வாயடைத்து போன மாதிரி பேசினான்.

“ஆமாம் , வாசு , நான் செய்த ஒரு உதவிக்கு நன்றி கடன் இது. நான் எப்ப உதவி கேட்டாலும் தயங்காம செய்வான். ரொம்ப நல்லவன் முருகன்” என்று பெருமையாய் கூறினான் வினோத்.

“ஆமாம்டா , நல்லவர் தான் , வாழ்ந்தா அவர போல வாழனும்ம்டா!, நம்ம வாழ்க்கையும் இருக்கே?“ என்று வாசு சலிப்பாய் கூறினான்.

“முதல்ல , அவர போல வாழனும்!, இவர போல வாழனும்! என்ற எண்ணத்தை மாத்துங்க. வெளி தோற்றத்தை வைத்து அந்த முடிவ எடுக்காதிங்க. இப்போ காசு கேட்டதும் கொண்டு வந்து கொடுத்துட்டு போன முருகன் , பெரிய பணக்காரன் மாதிரி இப்போ தெரியலாம் , ஆனா நான்கு வருடதிற்க்கு முன் வியாபாரம் நட்டத்தில் சிக்கி , பணம் இல்லாமல் பிச்சை எடுக்கிற நிலைக்கு போனவன். காசு இல்லாமல் போனதால் , சொந்த பந்தங்கள் அவனை கண்டு பயந்து ஒதுங்கி போனாங்க. கட்டுன பொண்டாட்டி பிள்ளைய கூட்டிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டா. கடன் கழுத்தை நெருக்க ஆரம்பித்தது. கடனை திருப்பி செலுத்த வழி இல்லை. உதவி செய்ய யாரும் இல்லாத அனாதையாய் நடுத்தெருவில் நின்றவன் தான் இந்த முருகன். வாழ்க்கை வாழ வழி தெரியாம என்ன பண்றதுன்னு புரியாம இருந்தான்.” என்று அதிர்ச்சி விசயங்களை தொடர்ந்து வினோத் கூறி கொண்டு இருந்தான்.

“அப்போ என் கிட்ட வந்து உதவி கேட்டான். அவன் கேட்ட நேரம் என் கிட்ட கொஞ்சம் பணம் இருந்தது. அதனால நானும் வேற வழி இல்லாமல் தான் கொடுத்தேன். அவன்ட பணம் கொடுத்தா, இப்போ அவன் இருக்கிற சூழ்நிலைல, அந்த பணம் திரும்ப நமக்கு கிடைக்குமா என்ற கேள்வி குறியுடன் தான் கொடுத்தேன்.”

“கொஞ்ச காலம் சிரமபட்டான். அப்புறம் கொஞ்ச கொஞ்சமா வாழ்க்கையில் மாற்றம் உண்டானது. நல்ல நிலைக்கு வந்துட்டான். இப்போ , அவனை விட்டு போன சொந்த பந்தங்கள் , மனைவி குழந்தைகள் என்று எல்லாரும் வந்துட்டாங்க. “

“இப்போ முருகன் நிம்மதியான நல்ல வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கான். அவன் வாழ்க்கை பண கஷ்டம் இன்றி , சமூகத்தில் நல்ல பெயருடன் உள்ளான். அதனால நான் கேட்டா உதவிகள் செய்றான். நானும் யாருக்காவது பண உதவி என்று கேட்டு பணத்தை வாங்கி தருவேன் , குறித்த நேரத்தில் திருப்பி கொடுத்து விடுவேன்.” என்று பெருமையாய் கூறினான் வினோத்.

வினோத் கூறியதை ஆச்சரியாமாக பார்த்தான் வாசு.

“ஆக , ஒவ்வொருவரும் , அவரவர் வாழ்க்கையில் ஒரு காலத்தில் , சிரமப்பட்டு , கஷ்டப்பட்டு தான் இருக்கிறார்கள். அதன் பிறகு நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறார்கள்.”

“நமக்கு அவர்களின் நல்ல நிலைமை தான் தெரிகிறது. அவர்கள் பட்ட கஷ்டம் தெரிவது இல்லை. அதனால் அவர போல இருக்கணும் , அவங்க குடும்பத்தில பிறந்திருக்கணும் , வாழ்ந்தா அவர போல வாழனும் என்று நினைப்பதை தவிர்க்க வேண்டும்.”

“நமக்கு கிடைத்த வாழ்க்கையில் நம்மால் என்ன மாற்றம் கொண்டு வந்து முன்னேற முடியும் என்பதை அறிய வேண்டும். கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையை கொடுத்திருக்கான் , அதை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டியது நம் பொறுப்பு “ என்று வினோத் கூறியது , வாசுவிற்கு சற்று உரைக்க ஆரம்பித்தது.

# நமக்கு கிடைத்த வாழ்க்கையில் நம்மால் என்ன செய்து நல்ல முறையில் முன்னேற முடியும் என்பதை யோசிக்க வேண்டும்.

# அடுத்தவர் போல வாழ நினைக்காமல் , நமக்கு கிடைத்தவற்றை வைத்து மகிழ்ச்சியாக வாழ கற்று கொள்ள வேண்டும்.

# நம் வாழ்க்கை , நம் கையில் தான் இருக்கிறது.

# தோல்வியில் பாடம் கற்றுக்கொண்டு , வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்க வேண்டும் , அதை தவிர்து தோல்வியிடம் நாம் தோற்று போக கூடாது.

# நிரந்தரம் இல்லா வாழ்க்கையில் வெற்றி / தோல்வியும் நிரந்திரம் இல்லை.

மணிராம் கார்த்திக் என் பெயர் : மணிராம் கார்த்திக். பிறந்த வருடம் : 25-ஜனவரி -1987 ஊர் - மதுரை மாவட்டம் , அனுப்பானடி . அப்பா : மணிராம் - அம்மா : மகாலட்சுமி - மனைவி : சித்ரா. நான் BCOM பட்டதாரி. 2007ம் ஆண்டு கல்லுரி படிப்பை முடித்தேன். தற்போது தனியார் ஜவுளி சார்ந்த கடை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறேன். எனக்கு கதை எழுதும் ஆர்வம் ,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *