வால் அறுந்த கரடி
கதையாசிரியர்: சிறுவர் கதைகள்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 14, 2025
பார்வையிட்டோர்: 6,242
(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன் ஒரு காலத்தில் இமயமலைச் சாரலில் பனி மிகவும் கடுமையாக இருந்தது. அங்கே சில செம் படவர்கள் மீன் பிடித்துக் கூடையில் வைத்திருந் தார்கள். ஒரு குள்ளநரி சில மீன்களைத் திருடி க் கொண்டு ஓடிற்று. அதன் எதிரில் ஒரு கரடி வந்தது.
“ஐயா நரியாரே! உமக்கு இன்று நல்ல வேட்டைபோல் இருக்கிறதே! இவ்வளவு நல்ல மீன் எங்கே கிடைத்தது?” என்று கரடி கேட்டது.
“ஓர் இடத்தில் அருமையான மீன் இருக்கிறது. இன்றிரவு என்னோடு வந்தால், அவைகளை எப்படிப் பிடிப்பது என்பதை உமக்குக் காட்டுகிறேன்,” என்று குள்ளநரி சொல்லிற்று.
“அப்படியே ஆகட்டும்; என்னுடைய தூண்டி லும் முள்ளும் எடுத்துக்கொண்டு வரட்டுமா?” என்று கரடி கேட்டது.
“தூண்டில் முள் வேண்டியதில்லை; நான் எப் போதும் என் வாலினாலே தான் மீன் பிடிப்பது வழக் கம்; உமக்கு நீளமான வால் இருப்பதால், நீர் என்னை விட நன்றாய் மீன் பிடிக்கலாம்,” என்று நரி சொல் லிற்று.
இரவு வந்ததும் குள்ளநரி கரடியை இமயமலை யின் அடிவாரத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கே ஒரு சிறிய ஓடை இருந்தது. அதில் தண் ணீர் பனிக்கட்டியாக இறுகிப்போய் இருந்தது. பனிக்கட்டியில் ஓரிடத்தில் கொஞ்சம் பிளவு இருந்தது.
“இங்கே உட்கார்ந்து உமது வாலைப் பனிக்கட்டி யின் சந்தில் நுழைத்துவைக்கவேண்டும். நீண்ட நேரம் வைத்திருந்தால், மீன்கள் வந்து உமது வாலைப் பிடித்துக்கொள்ளும். பிறகு ஒரே மூச்சில் வாலைப் பிடுங்கி வெளியில் எடுக்கவேண்டும்,” என்று குள்ளநரி சூழ்ச்சியாகச் சொல்லிற்று.
கரடி இதைநம்பிக்கொண்டு, குள்ள நரி சொல்லிய படியே செய்தது. நெடுநேரம் வரையில் அசையாமல் உட்கார்ந்திருந்தது. அதனால், குளிர் தாங்க முடிய வில்லை. மெள்ள உடலை அசைத்துப் பார்த்தது.
“ஐயோ! என் வால் பனிக்கட்டியில் ஒட்டிக் கொண்டதே! மீன்களை வெளியில் இழுக்கட்டுமா?” என்று கரடி குள்ளநரியைக் கேட்டது. அதன் வால் பனிக்கட்டியுடன் அப்படியே உறைந்துபோய் இருந்தது.
“இதற்குள் எடுத்துவிடக்கூடாது. இன்னும் கொஞ்சம் மீன்கள் சேரும்வரையில் பொறுமையுடன் இருக்கவேண்டும். நீர் நல்ல வலிமை யுடையவர் தாமே! இன்னும் கொஞ்சநேரம் பொறுத்துக் கொள்ளக்கூடாதா?” என்று நரி சொல்லிற்று.
கரடியும் விடியற்காலைவரையில் பொறுமையுடன் காத்திருந்தது. ஆற்றங்கரையில் நாய்கள் குலைக்கும் ஓசை கேட்டது. கரடி துள்ளிக் குதித்தது. தன்னால் ஆனமட்டும் வாலை இழுத்துப் பார்த்தது. அது வெளியில் வரவில்லை. பனிக்கட்டியில் நன்றாய் ஒட்டிக்கொண்டு இருந்தது.
மறுபடியும் மூச்சுப் பிடித்துக்கொண்டு ஒரே இழுப்பாக இழுத்தது. அதன் வால் ‘படீர்’ என்று அறுந்துபோயிற்று. குள்ளநரிக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. அது சிரித்துக்கொண்டே ஓடிப்போய் விட்டது. பெரிய கரடிக்கு வால் போனதிலிருந்து அதற்குத் தோன்றிய குட்டிகளுக்கெல்லாம் வால் குட்டையாகவே ஆய்விட்டது.
“தந்திர நரியுரை கேட்டதனுல்
தன்வால் இழந்தது கரடியுமே!”
அருஞ் சொற்கள்
அறுந்தது
ஆற்றங்கரை
சிரிப்பு
பனிக்கட்டி
சூழ்ச்சி
பிடுங்கி
இமயமலைச்சாரல்
செம்படவர்
பூசணிக்காய்
இழந்தது
தமக்கை
மந்திரக்கோல்
இளவரசர்
திருமணம்
மூச்சுப்பிடித்தல்
எலிவளை
தூண்டில்
வனதேவதை
சமையல்
நெடுநேரம்
வாசற்படி
– கழகக் கதைச் செல்வம், முதற் பதிப்பு: டிசம்பர் 1941, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.
தொடர்புள்ள சிறுகதைகள்
அச்சம் தவிர்!
வளர்கவி
April 21, 2026
மூவர் செய்த மேஜிக்
இரா.கலைச்செல்வி
April 18, 2026
மின்னுவதல்லாம்… பொன்னல்ல..!
வளர்கவி
April 9, 2026