கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 85 
 
 

(1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம் – 4

சகுந்தலா மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றதும், அவள் கூந்தலில் இருந்த முல்லையின் நறுமணம் வெகு நேரம் வரை சுந்தரையே சுற்றிக் கமழ்ந்து, அவன் உள்ளத்தில் ஒரு விதக் கிளர்ச்சியையும் ஏக்கத்தையும் உண்டாக்கி விட்டது. தன்னை வாட்டிக்கொண்டிருந்த அந்த உணர்ச்சியையும் ஏக்கத்தையும் பெருமூச்சுக்களாக வெளிப்படுத்திக் கொண் டிருந்தான். பொழுது விடிந்ததும் படுக்கையை விட்டு எழுந்தபோது, மேஜைக்கு அருகில் விழுந்து கிடந்த அந்த முல்லைமொட்டு வாடி வதங்கியிருப்பதை அவன் கண்டான். காலையில் அரும்பும் காதல் மொட்டு, மாலையில் மலர்ந்து, இரவெல்லாம் மணம் வீசிப் பொழுது விடியுமுன் வாடி வதங்கியல்லவா போய்விடுகிறது! 

அந்த மலரைத் தூக்கித் தூர எறிவதற்கு மனமில்லா மல் எடுத்து மேஜைக்குள் பத்திரப்படுத்திவிட்டு அவன் கீழே இறங்கிச் சென்றான். தோட்டத்தில் எறும்புகளுக்கு அரிசி போட்டுக் கொண்டிருந்தார் சர்மா. அவரைக் காணவே அவனுக்கு அச்சமாக இருந்தது.தானும் சகுந்தலாவும் முதல் நாள் இரவு மாடியில் கூடிப் பேசிக் கொண்டிருந்ததை அவர் அறிந்திருக்கமாட்டார் என்றே அவன் எண்ணியிருந்தான். ஆனால் அவரோ எல்லாவற்றையும் கவனித்துவிட்டு, ஏதும் அறியாதவர் போல் இருந்தார். 

காலட்சேபத்திலிருந்து திரும்பிய அவர், வந்ததும் கதவைத் தட்டவில்லை. வராந்தாவிலுள்ள படிகளின் வழியாக மாடிக்கு ஏறிச் சென்றார். அங்கே சுந்தரும் சகுந்தலாவும் சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டுவிட்டுச் சந்தடி செய்யாமல் கீழே இறங்கிச் சென்று கதவைத் தட்டினார். அதைக் கேட்டுத்தான் சகுந்தலா வந்து கதவைத் திறந்தாள்! 

சகுந்தலாவின் திருமணத்தை சீக்கிரமே முடித்துவிட வேண்டுமென்ற கவலை அன்றே தோன்றிவிட்டது அவருக்கு. ஆயினும், அதற்கு முன் அவள் கலியாண விஷயமாக டில்லியிலுள்ள தம் மாப்பிள்ளையின் கருத்து என்னவென் பதை அறிந்துகொள்ள வேண்டும் என்று அவர் எண்ணினார். அப்புறம் சுந்தரின் ஜாதகத்தையும் வாங்கிப் பார்த்தாக வேண்டும். ஒரு வேளை இது சரியாக இருந்தால் சுந்தரைச் சுவீகாரம் எடுத்துக் கொள்ளக் கங்காதரய்யரின் சம்மதத் தைப் பெற்றாக வேண்டும். சுந்தரம் கங்காதரய்யரின் ஒரே மகன். அவரிடம் சுவீகார விஷயமாக எப்படிப் பேசுவது? இத்தகைய ஒரு கெட்ட எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டே சுந்தரைத் தாம் ஆற்காட்டில் படிக்க வைத்துக் கொண்டிருப்பதாக அல்லவா அவர்கள் நினைப்பார்கள்? 

சகுந்தலாவோ சுந்தரை மனமார நேசிக்கிறாள். அவள் விரும்பும் ஒரு பொருளை அவளுக்கே உரியதாக்கி மகிழ வேண்டும் என்பதுதான் சர்மாவின் எண்ணமும். 

சகுந்தலா, சர்மாவின் பெண் வயிற்றுப் பேத்தி. சிறு வயதிலேயே தாயாரை இழந்துவிட்ட அப்பேதை இவ்வளவு காலமும் சர்மாவின் ஆதரவிலேயே வளர்ந்து வந்தாள். அவளைக் காணும்போதெல்லாம் சர்மாவுக்குத் தம் மனைவி மின் நினைவு வந்துவிடும். காரணம் அவருடைய மனைவி சகுந்தலாவின் வயதில் இவள் ஜாடையாகவே இருந்தது தான்! 


கோடை விடுமுறை தொடங்க இன்னும் சில நாட்களே இருந்தன. மண்டித் திண்ணையில் உட்கார்ந்திருந்த சர்மா விடம் தபால்காரர் இரண்டு கடிதங்களைக் கொடுத்துவிட்டுப் போனார். 

“அன்புள்ள சர்மாவுக்கு, 

சுந்தரத்துக்குப் பரீட்சை நடந்து முடிந்திருக்குமென்று நினைக்கிறேன். மாங்குயில் மாரியம்மன் திருவிழாவுக்குக் காப்புக் கட்டியிருக்கிறார்கள். இன்றைக்கு எட்டாவது நாள் விழா. தாங்கள் அவசியம் சகுந்தலாவையும் சுந்தரையும் அழைத்துக் கொண்டு வரவும். 

இப்படிக்கு,
கங்காதரய்யர்.” 

அடுத்தபடியாக மாப்பிள்ளையின் கடிதத்தை எடுத்துப் படித்தார் சர்மா. 

“மாமாவுக்கு, நமஸ்காரம். 

நான் டில்லியிலிருந்து புறப்பட்டுச் சனிக்கிழமையன்று ஆற்காடு வருகிறேன். டிசம்பரில் நான் இங்கிலாந்துக்குப் போகவிருப்பதால், அதற்குள் சகுந்தலாவின் கலியாணத்தை நடத்தி முடித்துவிட விரும்புகிறேன். திருமணத்தை ஆற்காட்டிலேயே வைத்துக்கொண்டு விடலாம். 

அங்கே இரண்டு நாட்கள் நான் தங்கியிருப்பேன். அப்போது சகுந்தலாவின் கலியாண விஷயமாக நாம் ஒரு முடிவுக்கு வரலாம். 

இப்படிக்கு,
ராமநாதன்.” 

கடிதங்கள் இரண்டையும் பெட்டியில் வைத்தபோது, “மாப்பிள்ளை வருவதும் நல்லதுதான்,மாங்குடி செல்லுமுன் அவன் விருப்பத்தையும் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?” என்று எண்ணிக்கொண்டார் சர்மா. 


ராமநாதன் ஐ.சி.எஸ். டெல்லி செக்ரடேரியட்டில் ஒரு முக்கிய அதிகாரி. சர்மாவின் மகளைத் திருமணம் செய்து காண்ட பிறகு அவருடைய அதிருஷ்டம் மேலும் மேலும் உயர்ந்துகொண்டே போய் உச்ச நிலையை அடைந்தது. அவ்வளவு அதிருஷ்டம் கூடாது என்பதாலோ என்னவோ சகுந்தலாவை ஈன்றெடுத்த மறு வருடமே அவருடைய மனைவி இறந்துவிட்டாள். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள ராமநாத னுக்கு நீண்ட காலம் ஆயிற்று. அப்புறம் அவருக்கு மறுமணம் செய்துகொள்ளும் யோசனையே எழவில்லை. வாழ்நாள் முழுதும் ஏகாங்கியாகவே வாழ்ந்து விடுவதென முடிவு செய்து, அதன் படியே வாழ்ந்தும் வந்தார் அவர். இப்போது சீமைக்கு செல்லுமுன் ஆற்காட்டுக்கு ஒருமுறை வந்து, சகுந்தலாவின் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து முடித்து விட விரும்பினார். 

தாம் எழுதியிருந்தபடியே சனிக்கிழமை இரண்டு மணிக் கெல்லாம் பெரிய கார் ஒன்றில் பெட்டியும், படுக்கையும், பழக்கூடைகளுமாக வந்து இறங்கினார் அவர். சகுந்தலா வுக்குப் பட்டுத் துணிகள், சர்மாவுக்குக் காஷ்மீர் சால்வை, சுந்தரத்துக்கு ‘ட்வீட்’ துணி, காவேரி பாட்டிக்கு மான் தோல் ஆசனம் – இவ்வளவும் வாங்கி வந்திருந்தார் அவர். 

மாப்பிள்ளை தனியாகக் காரில் வந்து இறங்குவதைக் கண்டபோது,சர்மாவுக்குத் தம் மகளின் நினைவு தோன்றிக் கண்ணீர் வந்துவிட்டது. கண்களைத் துடைத்துக்கொண்டே, “வாங்க, மாப்பிள்ளை!” என்று வரவேற்றார். 

சுந்தரும் சகுந்தலாவும் பெரியவர்களாக வளர்ந்து விட்டிருப்பதைக் காண ராமநாதனுக்கு விசித்திரமாயிருந்தது. சுந்தரை முன் ஒரு முறை ஆற்காட்டுக்கு வந்தபோது பார்த்ததுதான்; இப்போது அவன் முன்னிலும் அதிகமாகக் கவர்ச்சியும் கம்பீரமும் வாய்ந்தவனாகக் காணப்பட்டான். ‘நம் சகுந்தலாவுக்கு ஏற்ற ஜோடி இவன்!’ என்று எண்ணிப் பூரித்தது அவர் உள்ளம். 

“சகுந்தலாவை சுந்தருக்கே கொடுத்து விடலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் இருவரும் பொருத்த மான ஜோடியாக இருக்கிறார்கள். உங்கள் அபிப்பிராயம் என்னவோ?” என்றார் ராமநாதன். 

“எனக்கு இதில் பூரண சம்மதமே. கங்காதரய்யர் என் ஆப்த நண்பர்தான். ஆயினும் பையனுக்கு…” 

“படிப்பு போதவில்லை; வயசாகி விட்டது என்று நினைக் கிறீர்கள். அவ்வளவுதானே? அதைப்பற்றி கவலையில்லை. அப்படி அவனுக்கென்ன வயசாகி விட்டது? அவனை நாமே படிக்க வைத்தால் போகிறது!” என்றார் ராமநாதன். 

“எதற்கும் சுந்தரின் ஜாதகத்தைப் பார்த்த பிறகே எதையும் முடிவு செய்ய வேண்டும்.” 

“நீங்கள் வேறு எந்தப் பையனையாவது மனதில் வைத்துக் கொண்டிருந்தால் என்னிடம் தாராளமாகச் சொல்லுங்கள். உங்களுக்கு எது சரியாகப் படுகிறதோ, அதுவே எனக்கும் சரி. சகுந்தலாவின் நன்மையில் உங்களுக்கு இல்லாத அக்கறையா எனக்கு?” என்றார் மாப்பிள்ளை. 

“நான் இன்னும் ஒரு முடிவுக்கும் வரவில்லை; வரவும் முடியவில்லை. எல்லாம் ஒரே குழப்பமாயிருக்கிறது எனக்கு!” என்றார் சர்மா. 

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த அனாதைப் பையன் சாம்பசிவம் அங்கே வந்தான். 

“இந்தப் பையன் யார் தெரியுமா, உனக்கு?” என்று மாப்பிள்ளையிடம் கேட்டார் சர்மா. 

“தெரியவில்லையே?” என்று இழுத்தார் ராமநாதன். 

“உனக்கொரு சமையற்கார அம்மாள் தேவையென்று எழுதியிருந்தாயே, ஏழெட்டு வருஷத்துக்கு முந்தி, ஞாபகம் இருக்கிறதா?” 

“ஆமாம்; அன்னபூரணி என்று ஓர் அம்மாளை அனுப்பி யிருந்தீர்கள். அந்த அம்மாள் இப்போது டில்லியில் வேறொருவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறாள்.” 

“தெரியும், எனக்கு. அவளுடைய மகன்தான் இவன். பாவம் பரம ஏழை அந்த அம்மாள். எட்டு வருஷங்களுக்கு முன் இந்தப் பையனைக் கொண்டு வந்து என்னிடம் ஒப்படைத் தாள்; தனக்கும் ஒரு வழி காட்டவேண்டும் என்றாள். இவனைத் தீனபந்து ஆசிரமத்தில் சேர்த்துவிட்டேன். ஒரு வருஷம்கூடத் தவறாமல் பாஸ் செய்து, இப்போது, பத்தாவது வகுப்பை முடித்திருக்கிறான். ரொம்ப கெட்டிக்காரப் பையன். படிப்பில் ரொம்ப அக்கறையாயிருக்கிறான். மேற்கொண்டு படிக்க வேண்டுமாம், இவனுக்கு!” என்றார் சர்மா. 

“அன்னபூரணியின் மகனா இவன்? பேஷ்!” என்றார் ராமநாதன். பேஷ்!’ என்று கூறினாரே தவிர, ‘மனம் கறுப்பா யிருக்கிறானே!’ என்று எண்ணிற்று. 

“சரிடா, அடுத்த வாரம் வந்து பார்!” என்று சொல்லி அனுப்பினார் சர்மா. 

அந்தப் பையன் போனபிறகு, “இவனை உனக்குப் பிடிக்கிறதா” என்று கேட்டார் அவர் தம் மாப்பிள்ளையிடம். 

“ரொம்பக் கறுப்பாயிருக்கிறானே…!” என்று இழத்தார். ராமநாதன். 

“இவனுடைய ஜாதகம் என்னிடம் இருக்கிறது. அடக்கமான பையன்; ஆயுசும் கெட்டியாக இருக்கிறது. புருஷனுக்கு நிறமா முக்கியம்? குணம்தான் முக்கியம், இவனையே சகுந்தலா வுக்குப் பிணைத்து விடலாமா என்று சில சமயம் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் எந்த முடிவுக்கும் வந்துவிடவில்லை நான். இப்படி ஒரு பையன் இருக்கிறான் என்று சொல்லி வைத்தேன் அவ்வளவுதான். கங்காதரய்யரிடம் இருந்து சுந்தரத்தின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்த பிறகே வேறு யோசனை!” என்றார் சர்மா. 

எனக்கென்னவோ சுந்தரத்தை ரொம்பப் பிடித்திருக் கிறது. உங்களுக்குத் தெரியாத யோசனையை நான் என்ன புதிதாகச் சொல்லிவிடப் போகிறேன்…… இன்றைய மெயிலுக்கே நான் மெட்ராசுக்குப் போய், நாளை டில்லிக்குப் புறப்பட வேண்டும். எல்லாவற்றையும் முடிவு செய்து, இன்னும் ஒரு மாதத்துக்குள் எனக்குக் கடிதம் எழுதுங்கள்!” என்று கூறிய ராமநாதன், அன்று இரவே புறப்பட்டு விட்டார். 

அத்தியாயம் – 5

“நேற்றிலிருந்து காகம் கரைகிறது; ஒருவேளை சர்மா பசங்களை அழைத்துக்கொண்டு வருகிறாரோ, என்னவோ?” என்றாள் பார்வதி. 

“ஆமாம்; காகம் எப்பவும்தான் கரைந்து கொண்டிருக்கிறது. சர்மா வருவதாயிருந்தால் கடிதம் போட்டிருக்க மாட்டாரா?” என்றார் கங்காதரய்யர். 

“காக்கா கத்துவதில் எத்தனையோ தினுசு இருக்கிறது. விருந்தாளி வருவதை அறிவிக்கும்போது அது கத்துகிற மாதிரியே வேறு. அதெல்லாம் பெண்களுக்குத்தான் தெரியும்!” என்றாள் பார்வதி அம்மாள். 

அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “உன் வாய்க்குச் சர்க்கரைதான் போட வேண்டும். அதோ சர்மாவே வந்துவிட்டார்!” என்றார் கங்காதரய்யர் உற்சாகத்துடன். 

“சுந்தரம்கூட வரானே! அந்தண்டை யாரு? சகுந்தலாவா? ஏதேது!” என்று வியந்தாள் பார்வதி அம்மாள். 

சகுந்தலாவும் சுந்தரும் சேர்ந்து வரும் அழகைக் கண்ட போது பார்வதியம்மாள் என்னென்னவோ கோட்டை கட்டினாள். ‘தாய்க் கண் பொல்லாதது’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவளாய், ‘பரபர’ வென்று உள்ளே சென்று ஆரத்தி கரைத்து வந்தாள். 

திருஷ்டி சுற்றிக் கொட்டிய பார்வதி, “வாடி அம்மா. வா!” என்று அந்த ஆரத்தியிலேயே கையை நனைத்து அந்தப் பெண்ணின் நெற்றியில் பொட்டிட்டு அவளைக் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள். 

சகுந்தலா சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள். அப்போது அவள் கன்னங்களில் சுழித்த குழியைச் சுந்தரம் கவனிக்கத் தவறவில்லை. 

‘இது சொந்த வீடு. இங்கே சர்மாவின் கட்டுப்பாடு இருக்காது. சகுந்தலாவுடன் தாராளமாக பழகலாம்!’ என்று எண்ணிக் கொண்டான் அவன். 

அன்று முழுதும் தாரை தப்பட்டை வாத்தியங்களின் அமர்க்களத்தில் ஊரே செவிடாகியிருந்தது. மாரியம்மன் கிரகம் ஊர்வலமாக வந்துவிட்டுப் போன பிறகுதான் அந்த ஓசை கொஞ்சம் அடங்கிற்று. 

திருவிழாவை முன்னிட்டு இரவு தெருக்கூத்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். 

“மயில் ராவணன் சரித்திரம். ரொம்ப நன்றாக நடிப்பார் கள் கூத்தாடிகள். அவசியம் நீங்கள் பார்க்க வேண்டும்” என்று சர்மாவை வற்புறுத்தினார் கங்காதரய்யர். 

“ஆகட்டுமே, பார்க்கலாம்,” என்றார் சர்மா. சகுந்த லாவை அழைத்து, “நீயும் கூத்துப் பார்க்க வருகிறாயா?” என்று கேட்டார். 

“நான் வருகிறேன்!” என்றாள் அவள் மகிழ்ச்சியுடன். 

அந்தப் பெண் கிராமத்து ஜனங்களுக்கு மத்தியிலே புழுதியில் உட்கார்ந்து கூத்துப் பார்ப்பதில் கங்காதரய்யருக்குச் சம்மதமில்லை. எனவே, “அவள் எதற்கு? வேண்டாம். வீட்டிலேயே இருக்கட்டும்,” என்றார் அவர். 

“அதுவும் சரிதான்; மாமிக்குத் துணையாக இருப்பாள்!” என்றார் சர்மா. 

“என்னடா, நீ வரப்போகிறாயா கூத்துக்கு?” என்று சுந்தரத்தைப் பார்த்துக் கேட்டார் கங்காதரய்யர். 

”நான் வரவில்லை; நிறையப் பார்த்திருக்கிறேன். மயில் ராவணன் கதைதானே?” என்றான் சுந்தர் சுவாரசியமின்றி. 


சாப்பிட்டு முடிந்ததும் சர்மாவும் கங்காதரய்யரும் திறந்த வெளியில் பாயைப் பிரித்துப் போட்டு உட்கார்ந்த வண்ணம் பேசிக்கொண்டிருந்தனர். 

“வெற்றிலை போட்டுக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார் கங்காதரய்யர். 

“அந்தப் பழக்கம் கிடையாது எனக்கு; ஆனாலும் கொண்டுவரச் சொல்லுங்கள். இன்றைக்குப் போட்டுக் கொள்கிறேன்!” என்றார் சர்மா. 

“சுந்தர்!” என்று குரல் கொடுத்தார் கங்காதரய்யர். வீட்டுக்குள் சகுந்தலாவையே சுற்றிச் சுற்றி வட்டமிட்டபடி, அவளிடம் ஏதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான் அவன். தந்தை கூப்பிட்டதும் அவன் எரிச்சலுடன் காலைத் தரையில் உதைத்தபடியே வெளியே வந்து, “என்னப்பா, கூப்பிட்டீர்களா?” என்று கேட்டான். 

“ஆமாண்டா, உள்ளே போய் வெற்றிலைப் பாக்குத் தட்டை எடுத்து வா!” என்றார் கங்காதரய்யர்; அவன் உள்ளே சென்றான். 

“சுந்தருக்கு இப்போது என்ன வயசாகிறது?” என்று  பேச்சுக்கிடையே கேட்டு வைத்தார் சர்மா. 

“நள வருஷம் பிறந்தான்; வரும் ஆனியுடன் பதினெட்டு நிரம்பப் போகிறது” என்றார் கங்காதரய்யர். 

“மூல நட்சத்திரம் என்று சொன்னதாக ஞாபகம்” என்றார் சர்மா. 

“ஆமாம்; ‘ஆண்மூலம் அரசாளும்’ என்பார்கள். இவனோ இப்போதுதான் ஐந்தாவது பாரம் படிக்கிறான். எந்தக் காலத்தில் அரசாளப் போகிறானோ” என்று குறைப்பட்டுக் கொண்டார் கங்காதரய்யர். 

“படிப்பு வேறு.வாழ்க்கை வேறு. நன்றாகப் படித்தவர் கள் எல்லாம் சீராக வாழ்ந்து விடுவதில்லை; சீராக வாழ்பவர் களெல்லாம் நன்றாகப் படித்தவர்களும் இல்லை…சுந்தரத்தின் ஜாதகம் இருக்கிறதா? அதை நான் பார்க்க வேண்டும்” என்றார் சர்மா. 

“இருக்கிறதே, இதோ கொண்டு வருகிறேன்!” என்று உள்ளே போய் ஜாதகத்தை எடுத்து வந்து சர்மாவிடம் கொடுத்தார் கங்காதரய்யர். 

அதை கையில் வாங்கிக் கொண்ட சர்மா வெகு நேரம் வரை அதையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு விரல்களை மடக்கி, உதடுகளை அசைத்து, மனக்கணக்குப் போட்டுப் பார்த்தார். கடைசியாக, “சரிதான்; இப்போது சனி தசை நடக்கிறது!” என்றார். 

“சனி தசை இன்னும் எத்தனை வருஷம்?” என்று கேட் டார் கங்காதரய்யர். 

“இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது; இன்னும் ஏழரை வருஷத்துக்கு ஒரு மாதிரியாகத்தான் இருக்கும். அப்புறம் சந்திர தசையில் நன்றாயிருக்கும். அதையெல்லாம் நன்றாகக் கவனித்துப் பார்த்துத்தான் சொல்ல முடியும். இந்த ஜாதகத்தை நான் ஆற்காட்டுக்கு எடுத்துக்கொண்டு போகிறேன். இது என்னிடமே இருக்கட்டும்” என்றார்.

“எடுத்துக்கொண்டு போங்களேன்!” என்றார் கங்காதரய்யர். 

இந்தச் சமயத்தில், “கூத்து ஆரம்பிச்சுட்டாங்க; மணியக்காரர் உங்களை இட்டாரச் சொன்னாரு!” என்று ஊர்த் தலையாரி வந்து அழைத்தான். 

“சரி, புறப்படுவோமா?” சர்மாவைப் பார்த்துக் கேட்டார் கங்காதரய்யர். 

சர்மா உள்ளே போய் ஜாதகத்தைப் பத்திரப்படுத்தி விட்டுவந்து, சகுந்தலாவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டார். ஆயினும், அவருக்கு மனதில் நிம்மதி இல்லை. சகுந்த லாவும் சுந்தரும் வீட்டில் தனியாக இருக்கிறார்கள். ஆற்காட்டில் தம் வீட்டு மாடியில் கண்ட காட்சி சர்மாவின் நினைவுக்கு வந்துவிட்டது. எனினும், எதையும் வெளிப் படையாகச் சொல்லிக்கொள்ள முடியாதவராகக் கங்காதரய்யருடன் புறப்பட்டார். 

அவருடைய உள்ளத்தை நன்கு அறிந்திருந்த சுந்தர், நல்ல பிள்ளை போல் தான் படுக்கையைக் கொண்டு வந்து வாசல் திண்ணையில் போட்டுக் கொண்டான். அவன் திண்ணை யில் வந்து படுப்பதைக் கண்டபோதுதான் சர்மாவுக்குக் கொஞ்சம் நிம்மதி பிறந்தது. 

“நாங்க போயிட்டு வரோம்டா! வீட்டை ஜாக்கிரதை யாப் பார்த்துக்கோ; உன் அம்மா தூங்குறா!” என்று கங்காதரய்யர் தன் மகனை எச்சரித்து விட்டுக் கிளம்பினார். 

“போயிட்டு வாங்கப்பா, நான் பார்த்துக்கறேன்!” சுந்தர் உற்சாகத்துடன் கூறினான். 

சற்று நேரத்துக்கெல்லாம் உள் கதவைத் தாளிட்டுக் கொள்வதற்காக சகுந்தலா வாசலுக்கு வந்தாள். 

“கதவைத் தாளிடாதே, எனக்குத் தாகமெடுத்தால் தண்ணீர் குடிக்க உள்ளே வரவேண்டியிருக்கும்!” என்றான். சுந்தர். 

“உக்கும்…எடுக்கும் தாகம்!” என்று சொல்லிவிட்டுக் கதவைத் தாளிடாமலேயே உள்ளே போனாள் அவள். 

“அம்மா தூங்கியாச்சா?” என்று கேட்டான் சுந்தர்.

“இல்லை!” 

“நீ கூடத்திலே படுத்துக்கொள்; முற்றத்தின் வழியாய் நல்ல காற்று வரும்.” 

“நான் எங்கேயாவது படுத்துக்கொள்கிறேன்; உனக்கென்ன?” என்றாள் சகுந்தலா. 

“இது ஆற்காடு இல்லை, மாங்குடி!” என்றான் சுந்தர். அதனாலே நீ என்னை அதிகாரம் செய்ய முடியாது!” என்றாள் சகுந்தலா. 

“இரு, இரு; இன்னும் எத்தனை நாளைக்கு உன் பிகுவெல்லாம்? என் ஜாதகம் இப்போ யாரிடம் இருக்கு, தெரியுமா?’ 

“யாரிடம் இருந்தால் எனக்கென்ன?” என்று சொல்லிக் கொண்டே உள்ளே போய்விட்டாள் அவள். 

‘சகுந்தலா பலே திருடி! கதவைச் சாத்தாமலே போறாளே’ என்று எண்ணித் தனக்குள் மகிழ்ந்து கொண்டான் சுந்தர். அவ்வாறு அவன் எண்ணிக்கொண்டி ருக்கும் போதே, சகுந்தலா மீண்டும் வாசலுக்கு வந்தாள். வந்தவள் ‘டக்’கென்று கூஜாவைக் கீழே வைத்து, ‘இது நிறையத் தண்ணீர் இருக்கிறது. தாகம் எடுக்கும்போது குடிக்கலாம் என்று கூறிவிட்டு சட்டென உள்ளே மறைந்து, கதவை உட்பக்கம் தாளிட்டுக்கொண்டு விட்டாள்! 

உள்ளே சென்ற சகுந்தலா கூடத்தில் பாயை எடுத்துப் போட்டுப் படுத்தாள். அவளுக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. கதவைத்தான் தாளிட முடிந்ததே தவிர தன் உள்ளத்தை அவளால் தாளிட முடியவில்லை; சுந்தரையே நினைத்துக் கொண்டிருந்தாள். கூடத்தின் மற்றொரு புறத்தில் படுத்துக் கொண்டிருந்த பார்வதி அம்மாள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். 

திடீரென வானத்தில் சிம்மம் கர்ஜிப்பதுபோல் ஓர் இடி முழக்கம் கேட்டது. கோடை இடி! சகுந்தலா பயந்துபோய்ப் பார்வதி அம்மாளை எழுப்பினாள். 

என்ன சகுந்தலா? என்று கேட்டாள் பார்வதி. 

“மழை வரும்போல் இருக்கிறதம்மா, சுந்தரை உள்ளே வந்து படுத்துக்கொள்ளச் சொல்லட்டுமா?” 

“கதவைத் திறந்து அவனை இந்தக் கட்டிலில் வந்து படுத்துக்கச் சொல்!” என்றாள் பார்வதி. 

சகுந்தலா எழுந்துபோய் வாசல் கதவைத் திறந்து பார்த்தாள். அங்கே சுந்தர் பொய்த் தூக்கம் தூங்கிக் கொண்டிருந்தான். 

“சுந்தர்! சுந்தர்!” என்று கூப்பிட்டாள் சகுந்தலா. அப்போதும் அவன் எழுந்திருக்கவில்லை, அவள் தன்னைத் தொட்டுத்தான் எழுப்பட்டுமே என்பதற்காக! 

அவள் கூஜாவிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து அவன் முகத்திலே தெளித்தாள். 

“மழை! மழை!” என்று வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தான் சுந்தர். 

”ஆமாம். மழை! உள்ளே வந்து படுத்துக்கோ! புளுகுத் தூக்கமா தூங்கறே?” என்று கூறிவிட்டு, உள்ளே போனாள் அவள். சுந்தர் அவளுடைய கைகளைப் பற்றி இழுத்தான். அவனிடமிருந்து திமிறிக்கொண்டு அவள் உள்ளே ஓட விட்டாள். 

சுந்தர் இயற்கையை வாழ்த்திக்கொண்டே கூடத்தில் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டான். அந்தக் கட்டிலுக்குப் பக்கத்தில் சகுந்தலா படுத்திருந்தாள். அவளுக்கு அடுத்தாற்போல் படுத்திருந்தாள் பார்வதி அம்மாள். தூக்கம் அவளை நன்றாக வசப்படுத்தியிருந்தது. அறைகுறையாக ஒளி வீசிக்கொண்டிருந்த சிம்னி வெளிச்சத் தில் அவளுக்கு எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. 

“அம்மா நீ தூங்கிவிட்டாயா?” என்று கேட்டான் சுந்தர்; பதில் இல்லை. 

அம்மா தூங்கிவிட்டாள் என்பது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. 

“இந்த விளக்கு ஏன் சகுந்தலா; இதைக் கொண்டுபோய் மறைவாக வைத்துவிடேன்!” என்றான் மெல்லிய குரலில். 

“ஐயோ நான் மாட்டேன்; எனக்குப் பயமாயிருக்கும்!” என்றாள் சகுந்தலா. 

சுந்தர் அவளையே சிறிது நேரம் கண்கொட்டாமல் பார்த் துக் கொண்டிருந்தான். கட்டிலின் விளிம்பு வரை மெதுவாகப் புரண்டு சென்று, சிரித்தால் சுழிக்கும் அவள் கதுப்புக் கன்னத்தைக் கையால் எட்டிக் கிள்ளவேண்டும் போலிருந்தது அவனுக்கு. மெதுவாகப் புரண்டான்; கயிற்றுக் கட்டிலான தால் ‘கர், கர்’ என்று சத்தமிட்டது. 

‘இந்தக் கட்டில் போடும் கூச்சலில் அம்மா விழித்துக் கொண்டால்…?’ 

சுந்தருக்குப் பயம் தோன்றிவிட்டது. 

‘இந்தப் பாழும் கட்டிலும் எனக்கு எதிராகச் சதி செய்கிறதே!’ என்று பல்லைக் கடித்துக் கொண்டான். 

அப்போது பலமாக காற்று அடிக்கவே, சிம்னி விளக்கு அணைந்துவிட்டது. கூடம், முற்றம், தாழ்வாரம் எங்கும் ஒரே இருட்டு! 

‘சகுந்தலா பயப்படவில்லையே! ஒரு வேளை தூங்கிப்போய் விட்டாளோ?’ 

மீண்டும் ஓர் இடிமுழக்கம்; அந்தச் சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டான் சுந்தரம். இப்போது எழுந்தால் கட்டிலின் ஓசை இடி ஓசையில் அமுங்கிப் போகும்; அம்மாவுக்கும் நான் எழுந்திருப்பது தெரியாது. மெல்ல எழுந்து போய், சகுந்தலாவை நெருங்கி… 

சுந்தரத்தின் உள்ளம் ‘படபட’ வென்று அடித்துக் கொண்டது. அடுத்த இடி ஓசைக்காக அவன் காத்திருந்தான். ‘கிடுகிடு வென்ற இடியின் உறுமல் வானமெங்கும் ஓடிக் கொண்டிருந்தது. 

சுந்தரம் மெதுவாக கட்டிலில் புரண்டான். இரு கால்களையும் ஆகாயத்திலே தூக்கி, அப்படியே தரைப் பக்கமாகச் சாய்த்துச் சரித்துத் தரையிலே பாதங்களைப் பூப்போல் பதிய வைத்தான். கட்டில் ஓசையும் இடிக் குரலும் இரண்டறக் கலந்த சந்தர்ப்பம்… 

அடிமேல் அடிவைத்து சகுந்தலாவை நெருங்கிவிட்டான். அவன் அப்போது தூங்கிக் கொண்டிருந்தாளா, விழித்துக் கொண்டிருந்தாளா என்று அவனுக்கும் தெரியவில்லை; நமக்கும் தெரியவில்லை! 

சுந்தர் கீழே குனிந்து, மெதுவாகக் காலடி எடுத்துவைத்த போது, சட்டென அவன் கால்கள் சகுந்தலாவின் மீது பட்டு விடவே, “ஐயோ!” என்று அலறிவிட்டாள். பார்வதி அம்மாள் பதறி விழித்துக்கொண்டு, “என்ன சகுந்தலா, என்ன?” என்று கேட்டாள். 

சுந்தர் இரண்டே எட்டில் தாவிப் போய்க் கட்டிலில் படுத்துக் கொண்டான். விஷயத்தைப் புரிந்துகொண்ட சகுந்தலா, “ஏதோ பூனைபோல் இருக்கிறது; எழுந்து விளக்கை ஏற்றுகிறேன்!” என்று கூறிச் சமாளித்தாள். 

சுந்தருக்கு அப்புறம்தான் மூச்சு வந்தது. 

“சரி, உனக்குப் பயமாயிருந்தால் என் பக்கத்தில் வந்து படுத்துக்கொள்!” என்றாள் பார்வதி அம்மாள். 

விளக்கை ஏற்றிய சகுந்தலா, “திருட்டுப் பூனை, ஓடி விட்டது போலிருக்கிறது!” என்று சுந்தரைக் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டே கூறினாள். 

பிறகு, பார்வதி அம்மாளை ஒட்டிப் படுத்துக்கொண்டாள் அவள். 

அத்தியாயம் – 6

சற்று நேரத்துக்கெல்லாம் இடியும் மின்னலும் அதிக மாகி மழை பிடித்துக்கொள்ளவே தெருக்கூத்து பாதியிலேயே நின்றுவிட்டது. அவ்வளவுதான்; கூத்துப் பார்த்துக்கொண்டி ருந்த மக்கள் அனைவரும் ஒரு நொடியில் கலைந்து விட்டனர். சிறிது சிறிதாகச் சேர்த்த பணம் ஒரே விநாடியில் கரைந்து விடுவதைப்போல. 

சர்மாவும் கங்காதரய்யரும் வீட்டுக்குத் திரும்பி வந்த போது திண்ணையில் படுத்திருந்த சுந்தரைக் காணவில்லை. சர்மாவுக்குத் ‘திக்’ கென்றது. கங்காதரய்யர் கதவைத் தட்டி யதும் சுந்தரம்தான் வந்து கதவைத் திறந்தான். உள்ளே சென்ற சர்மாவின் கண்கள் முதல் காரியமாக ‘சகுந்தலா எங்கே இருக்கிறாள்’ என்று தேடின. 

கூடத்தில் அவளும் பார்வதியம்மாளும் ஒருவரையொரு வர் கட்டிக்கொண்டு படுத்திருப்பதைக் கண்டபோதுதான் அவருக்கு நிம்மதி பிறந்தது. 


மறு நாளே சர்மா ஆற்காட்டுக்குப் புறப்பட்டுவிட்டார். “என்ன சுந்தர், நீயும் வருகிறாயா?” என்று கேட்டார் சர்மா. 

“இப்போது விடுமுறைதானே? அவன் இன்னும் கொஞ்ச நாட்கள் மாங்குடியிலேயே இருந்துவிட்டுப் பிறகு வரட்டும்” என்றார் கங்காதரய்யர். 

“சகுந்தலாவும் பத்து நாட்கள் இங்கேதான் இருக்கட்டுமே? மாங்குடிக்கு அவள் வந்ததே இல்லை!” என்றாள் பார்வதி அம்மாள். 

“ஆகட்டும்; இன்னும் எத்தனையோ முறை வரவேண்டி யிருக்கும். அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது அவளை நான் அழைத்துச் செல்கிறேன்; ஆற்காட்டில் பாட்டிக்கு ஒத்தாசையாக யாருமே இல்லை” என்றார் சர்மா. 

சகுந்தலா கங்காதரய்யரையும் பார்வதி அம்மாளையும் நமஸ்காரம் செய்துவிட்டு, குதிரை வண்டியில் ஏறி உட்கார்ந் தாள். வண்டி நகர்ந்தது. 

சுந்தர் வாசலுக்கு வந்து நின்று சகுந்தலாவையே ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். அவள் பிரிவால் அவனுக்கு மாங்குடியே வெறிச்சென்றாவது போல் இருந்தது. 


ஆற்காட்டுக்குத் திரும்பிய சர்மா மனம் குழம்பி, அமைதி அற்றவராய் அலைந்து கொண்டிருந்தார். அதற்குக் காரணம் சுந்தரின் ஜாதகத்தை அவர் கட்டம் கட்டமாக அலசிப் பார்த்துவிட்டதுதான். பார்த்தபின் அவர் அவனிடம் அந்தரங்கமாகக் கொண்டிருந்த அன்பு, அபிமானம், நம்பிக்கை எல்லாமே துகள் துகளாகச் சிதறிவிட்டன. 

காலமெல்லாம் கஷ்டப்பட்டுச் சேர்த்துவைத்த நோட்டுக்கள் இனி செல்லாது’ என்று திடுமென அறிவிக்கப் பட்டது போன்ற அதிர்ச்சியை அவர் அடைந்தார். சுந்தரின் ஜாதகத்தில் வேறு எவ்விதக்கோளாறுகள். இருந்திருந்தாலும் அவர் அவற்றைப் பொருட்படுத்தியிருக்க மாட்டார். அவனுடைய ஆயுள் பாவமே சரியில்லாதபோது, அதை அவரால் எப்படி அலட்சியம் செய்ய முடியும்? 

சுந்தரைத் தத்து எடுத்துக் கொண்டு, தம்முடைய சொத்துக்களுக்கெல்லாம் அவனை வாரிசாக்கி, சகுந்தலாவை மணம் முடித்து வைத்து, தம்முடைய அந்திம கால ஈமக் கடனையும் அவன் கையாலேயே முடித்துக்கொள்ள வேண்டும் என்று மனக்கோட்டை கட்டியிருந்த சர்மாவைக் கண்டு சுந்தரின் ஜாதகம் எக்காளச் சிரிப்புச் சிரித்து எள்ளி நகை யாடியது! 

அன்று முதலே சர்மாவின் அறிவு குழம்பிற்று மேற் கொண்டு சுந்தரை ஆற்காட்டில் வைத்துக்கொண்டு படிப்புச் சொல்லிக் கொடுப்பதா, வேண்டாமா என்று குழம்பித் தவிக்கலானார். 

சகுந்தலா வயது வந்த பெண்ணாகிவிட்ட பிறகு அவளுக்கு உரியவன் அல்லாதவனாகி விட்ட ஓர் ஆண் மகனை, தம் வீட்டுக்குள் புழங்க விடுவதில் அவருக்குச் சிறிதளவும் சம்மதமில்லை. ஆயினும் இத்த இக்கட்டான, தர்ம சங்கட மான நிலையைத் தம் ஆருயிர் நண்பரான கங்காதரய்யரிடம் எப்படிச் சொல்வது? 

சுந்தரைப் பிரிந்து வந்தது முதல் சகுந்தலாவுக்கும் மன நிம்மதி இல்லை. அவளுடைய நினைவெல்லாம் மாங்குடி யிலேயே இருந்தது. அன்றிரவு நடந்த நிகழ்ச்சிகள், சுந்தரின் பொல்லாத்தனம், தான் கதவைத் தாளிட்டுக் கொண்டு அவனை அழவைத்தது,பூனை என்று கூக்குரலிட்டுப் பயமுறுத்தியது- இவ்வளவும் தன் நினைவில் நிழலாடியபோது அவள் கன்னம் குழியச் சிரித்துக்கொண்டாள். அந்த மாயக் கள்ளனின் நினைப்பிலேயே மயங்கிக் கிடந்தாள். மாடிக்குப் போனால் அவன் ஆசை முகம்; தோட்டத்துக்குச் சென்றால் அவனுடைய அழகிய தோற்றம்!… 

மாடியிலுள்ள சுந்தரின் அறைக்குள் சென்று பார்த்தாள் அவள். அங்கே அவன் உட்கார்ந்திருப்பது போலவும், சித்திரம் வரைவது போலவும், சிரிப்பது போலவும், பின்னலைப் பிடித்து இழுப்பது போலவும் பிரமை தட்டிற்று அவளுக்கு. மேஜை டிராயரைத் திறந்தபோது, அவன் வரைந்து விட்டுப் போயி ருந்த அவ்வழகிய தாமரை மலர் அவளைக் கண்டு இதழ் விரித் துச் சிரித்தபடி, “ஏ, கருவண்டே! எங்கே வந்தாய்?” என்று கேலி செய்வது போலிருந்தது. 

சுந்தருக்கு எவ்வளவு அழகாகச் சித்திரம் வரைய வந்து விட்டது?’ என்று தன்னுள் வியந்துகொண்டே அதை எடுத் துத் தன் பெட்டிக்குள் வைத்துக்கொண்டாள் அப் பேதை. 

ஊஞ்சலில் போய் உட்கார்ந்தபோது சுந்தரும் தானும் அதில் விளையாடிய காட்சியும், அவனுக்குத் தலை பின்னிய காட்சியும் நினைவுக்கு வந்தன. 

சுந்தரின் மாய உருவத்தை மறக்கும் நோக்குடன் அவள் கீழே இறங்கித் தோட்டத்தின் பக்கம் சென்றாள். அங்கே அவன் அந்த இருட்டறையில் வழுக்கி விழுந்ததும், அதைக் கண்டு தான் சிரித்ததும் புகைப் புலனாகக் காட்சி அளித்தது. 

சகுந்தலா அந்த அறைக்குள் சென்று பார்த்தாள். அங்கு சுந்தர் வைத்துவிட்டுப் போயிருந்த சோப்புப் பெட்டி அப்ப டியே கிடந்தது, அதிலிருந்த சந்தன சோப்பின் மணத்தை நுகரும்போது அவளுடைய கண்கள் ஏன் அப்படிச் சொக்கிச் சுழல்கின்றன? 

‘விடுமுறை கழிந்து சுந்தர் ஆற்காட்டுக்குத் திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகுமே! அது வரை இந்த வீட்டில் எப்படித் தனியாக இருப்பேன்?’…சகுந்தலாவின் இதயத்தி லிருந்து ஒரு கனத்த பெருமூச்சு வெளிப்பட்டது. 


மாலைப் பொழுது மயங்கும் நேரத்தில், வாசல் வராந்தா வில் விளக்கைக் கொண்டுபோய் வைப்பதற்காகச் சென்றாள் சகுந்தலா. அப்போது சுந்தருடைய பள்ளித் தோழன் சாமி நாதன் அங்கே தயங்கியவாறு நின்றுகொண்டிருப்பதைக் கண்ட அவள், “சுந்தர் ஊரில் இல்லையே, வருவதற்கு ஒரு மாதம் ஆகும்” என்றாள். 

“சுந்தர் பெயிலாயிட்டான்; பள்ளிக்கூடத்திலே இன்றைக்குத்தான் ‘ரிசல்ட்’ போட்டிருக்கிறார்கள். பாஸ் செய்தவர்கள் பெயர்களையெல்லாம் போர்டிலே போட்டிருக்கிறார்கள். அதில் சுந்தர் பெயரைக் காணோம். இதைச் சொல்லிவிட்டுப் போகத் தான் வந்தேன்!” என்றான் அவன். 

அப்போதுதான் மண்டியிலிருந்து வந்துகொண்டிருந்த சர்மா, “பெயிலாகிவிட்டான் அல்லவா? ரொம்ப சரி; எனக்கு அப்பவே தெரியும். எந்நேரமும் வாசகசாலை, இல்லாவிட்டால் டிராயிங், எப்படிப் பாஸ் பண்ணமுடியும்? இருக்கட்டும், நாளைக்கே மாங்குடிக்குக் கடிதம் எழுதிப் போடுகிறேன். மேற்கொண்டு படிக்க போகிறானோ இல்லையோ?” என்று கூறிக் கொண்டே உள்ளே போய்விட்டார் அவர். 

“அப்போ சுந்தர் இன்னும் இரண்டு வருஷங்கள் ஆற்காட்டிலேயே இருந்து படிப்பான்!” என்று மனதிற்குள்ளாகவே மகிழ்ந்து கொண்டாள் சகுந்தலா. 

சர்மாவோ, ‘சுந்தரம் பரீட்சையில் தவறிவிட்டதும் ஒரு விதத்தில் நல்லதாய்ப் போயிற்று. இப்போது அவனுக்கு வயது பதினெட்டுக்கு மேல் ஆகிறது. ஐந்தாவது பாரத்துக்கு மீறிய வயசு. இதற்கு மேலும் அவன் ஆற்காட்டில் தங்கிப் படிக்க விரும்ப மாட்டான் அல்லவா?’ என்று எண்ணித் திருப்தி அடைந்தார். 

சுந்தரத்தின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்ததிலிருந்தே அவர் தம்முடைய மனதை மாற்றிக்கொண்டு விட்டார். அவனைச் சுவீகாரமாக்கிக் கொண்டு சகுந்தலாவின் வாழ்வைப் பாழாக்குவதுடன், தாமும் அனாதையாகச் சாவதற்கு அவர் மனம் ஒப்பவில்லை. எனவே, சுந்தரத்துக்கும் தமக்கும் ஏற்பட இருந்த உறவு பந்தத்தை அப்போதே அறுத்தெறிந்துவிட அவர் முடிவு செய்துவிட்டார். 


தபாற்காரர் கொடுத்துவிட்டுப் போன கடிதத்தைப் பிரித்துப் படித்துக்கொண்டிருந்த கங்காதரய்யரின் முகம் ஒரு மாதிரியாக மாறுவதைக் கண்ட பார்வதி அம்மாள் கவலை யுடன், “யார் கடிதாசு அது? சர்மாவா போட்டிருக்கார்?” என்று கேட்டாள். 

“:ஆமாம்; உன் பிள்ளையாண்டான் பெயிலாகி விட்டானாம்!” என்றார் கங்காதரய்யர் கலக்கத்துடன். 

“பெயிலாயிட்டானா! ராத்திரியெல்லாம் கண் விழிச்சுப் படிச்சிருக்கேன்னு சொன்னானே?” என்றாள் பார்வதி. 

“ராத்திரியெல்லாம் கண் விழித்து டிராயிங் போட்டிருப்பான்!” என்றார் அவர். கிணற்றடியிலிருந்த சுந்தரம் அப்போதுதான் அங்கே வந்து நின்றான். 

“இந்தா, சர்மா என்ன எழுதியிருக்கார் பார்?” என்று கூறிய கங்காதரய்யர் கடிதத்தைக் கோபமாக வீசி எறிந்தார் 

அதை எடுத்துப் படித்த சுந்தரத்தின் முகம் கறுத்தது; உதட்டைக் கடித்துக்கொண்டான். சற்று நேரத்துக்கெல்லாம் தன் மனதைத் தேற்றிக் கொண்டவனாய், “உம் என்ன செய்ய லாம்? அக்கறையாகத்தான் படித்தேன்; போய்விட்டது. இந்தப் படிப்பு போதும் எனக்கு. பட்டணத்துக்குப் போய் ஏதாவது ஒரு வேலைத் தேடிக்கொள்கிறேன்!” என்றான். 

“ஆமாம். பி.ஏ.பாஸ் பண்ணியிருக்கிறாய் அல்லவா? போனவுடனே வேலை கிடைத்துவிடும் உனக்கு. முதலில் ஆற்காட்டுக்குப் போய் சர்மா என்ன சொல்கிறாரோ அதன்படி செய்; பட்டணம் போவதாயிருந்தாலும் அவர் உத்தரவைப் பெற்றுக்கொண்டே போக வேண்டும்; தெரிந்ததா? நம் குடும் பத்தின் தெய்வம் அவர். மேற்கொண்டு நீ படிக்க வேண்டும் என்று அவர் சொன்னால் படி; பட்டணம் போகச் சொன்னால் போ. மனதிற்குள்ளாகவே ஆயிரம் திட்டங்கள் போட்டு வைத்திருப்பார் அவர்! எதையும் வெளியே சொல்லிக்கொள்ள மாட்டார். அவருடைய அன்பு குடத்திலிட்ட விளக்கைப் போன்றது; சமயம் வரும்போது அவர் செய்யும் காரியத்தி லிருந்துதான் அது வெளிப்படும். தம் மனதில் ஏதோ இருக்கக் கொண்டுதான் அவர் உன் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்” என்றார் கங்காதரய்யர். 


சர்மா மண்டிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அவருக்கு எதிரே போய் நின்றான் சுந்தர். 

“என்ன சுந்தர், இப்போதுதான் வருகிறாயா? ஊரில் எல்லோரும் சவுக்கியமா?” என்று விசாரித்தபடியே வாசல் பக்கம் மெதுவாக நடந்தார் சர்மா. 

“ஆமாம்” என்று தலைகுனிந்தபடியே பதில் அளித்தான் சுந்தர். 

“மேற்கொண்டு என்ன செய்யப் போகிறாய்? மறுபடியும் படிக்கப் போகிறாயா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். 

“வேண்டாம் மாமா, நான் பட்டணத்துக்குப் போகலாம் என்று இருக்கிறேன். அதற்காகத் தங்களுடைய உத்தரவைப் பெற்றுப்போகவே வந்திருக்கிறேன்.” 

“பட்டணத்துக்கா? உன் அப்பா சரி என்று சொன்னாரா?” 

“உங்கள் அபிப்பிராயப்படி செய்யச் சொல்லி அனுப்பியிருக்கிறார்.” 

“பட்டணம் போய் என்ன செய்யப் போகிறாய்?” 

“ஒரு நல்ல வேலை கிடைக்கிறவரை விளம்பர போர்டு எழுதிச் சம்பாதிக்கலாமென்று இருக்கிறேன்” 

“அதற்கெல்லாம் அனுபவம் வேண்டுமே! உனக்கு போர்டு எழுதத் தெரியுமா?” 

“தெரியும்; ஆற்காட்டில்கூட ஒரு சோடா பாக்டரிக்கு எழுதிக் கொடுத்திருக்கிறேன்!” 

“சரி; உனக்குத் தைரியமிருந்தால் புறப்பட்டுப் போ! பத்தாவது வரையே படித்தாலும் என்ன வேலை கிடைத்து விடப் போகிறது? இப்படி ஒரு கைத்தொழிலைப் பழகிக் கொள்வது நல்லதுதான். ஆமாம்; ஒரு தொழிலில் புகுந்து அதில் நிரந்தர வருமானம் வருகிறவரை ரொம்பக் கஷ்டப் படுவாயே, அதுவரை பணத்துக்கு என்ன செய்யப் போறாய்?” 

“இன்றைக்கு லட்சாதிபதிகளாக இருப்பவர்கள் எல்லா ஒரு காலத்தில் பட்டணத்துக்கு வெறுங்கையுடன் போனவர்கள் தான். என் கையிலாவது ஒரு பிரஷ் இருக்கிறது. மேய போகிற மாடு தலையில் புல்லைக் கட்டிக்கொண்டா போகிறது. எப்படியோ சமாளித்துக் கொள்வேன். எனக்குத் தைரிய உண்டு. பிறர் உதவியை எத்தனை நாட்களுக்கு எதிர்பார்த்து கொண்டிருக்க முடியும்? நானே என் கால்களை ஊன்றி நிற்க பார்க்கிறேன்!” 

”உனக்கு நெஞ்சில் உறுதி உண்டு; உன்னைப்பற்றிய கவலை எனக்குத் துளியும் கிடையாது. ஆனால், உன் தந்தை இளகிய மனம் படைத்தவர்; நீ பட்டணம் செல்வது பற்றி அவர்தான் கவலை கொள்வார். நானே அவருக்குக் கடிதம் எழுதிப் போடுகிறேன்; நீ புறப்படு!” என்று தைரியமூட்டினார் சர்மா. 

தன்னைச் சுற்றிலும் இறுக்கிப் பிணைக்கப்பட்டிருந்த இரும்புச் சங்கிலிகள் மளமளவென்று கட்டவிழ்த்துக் கொண்டதைப் போல் இருந்தது சுந்தருக்கு.  சர்மா இத்தனை இலகுவில் தனக்கு விடுதலை அளிப்பார் என்று அவன் சொப்ப னத்திலும் கருதவில்லை. தன் பயணத்துக்கு அவர் முட்டுக் கட்டை போடுவார் என்றே அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவரோ அதற்கு நேர்மாறாக அவனை பட்டணத்துக்கு அனுப்பி வைப்பதில் மிகுந்த உற்சாகம் காட்டினார். 

“சரி நீ இன்றைய இரவு மெயிலுக்கு புறப்படலாம். உன் பெட்டி படுக்கைகளையெல்லாம் தயாராக எடுத்து வைத்துக் கொள். சாயுபுவிடம் சொல்லி உன்னை ராணிப்பேட்டை ஸ்டேஷன் வரை ஜட்காவில் கொண்டுபோய் விட ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டு அவர் மண்டிக்கு கிளம்பி விட்டார். 

சர்மா வெளியே சென்றதும், சுந்தர் மாடியிலிருந்த தன் அறைக்கு விரைந்தான். ஒரு புறம் சகுந்தலாவைக் காண வேண்டும் என்று அவன் உள்ளம் துடித்தாலும் இன்னொரு புறம் அவளைப் பார்ப்பதற்கே அவனுக்கு வெட்கமாயிருந்தது. மளமளவென்று தன் துணிமணிகளை எடுத்துப் பெட்டியில் வைத்துக்கொண்டான். மேஜையிலிருந்த புத்தகங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் எடுத்து அடுக்கி வேறொரு பக்கத் தில் கொண்டுபோய் வைத்தான். தலையணையையும் போர்வை யையும் எடுத்து ஜமக்காளத்துக்குள் வைத்துச் சுருட்டிக் கட்டிப் பெட்டிக்குப் பக்கத்தில் கொண்டு போய் வைத்தான். 

வளையல் ஒலி கேட்டது! 

“சு…ந்…த…ர்!” 

மெல்லிய குரலில் மெதுவாக அழைத்தாள் சகுந்தலா. 

“ம்..” 

“கோபமா?'” 

“இல்லே!” 

“பட்டணத்துக்கா போகிறாய்?” 

“ஆமாம்.” 

“ஆற்காட்டிலேயே இருப்பாய் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன்!” அவள் கண்களிலிருந்து சிந்திய நீர் முத்துக்கள் கீழே விழுந்து சிதறின. குனிந்தபடியே உட்கார்ந் திருந்த சுந்தரத்துக்கு அதைக் கண்டபோது இதயமே வெடித்துச் சிதறுவதுபோல் இருந்தது! 

“அழாதே, சகுந்தலா!” அவள் கைகளைப் பிடிக்கப் போனவன் ஏனோ சட்டெனப் பின் வாங்கிக்கொண்டான். 

“பட்டணத்திலே எங்கே தங்கப் போறே?” 

“எங்கேயோ!” 

“எங்கே சாப்பிடுவே?” 

“எங்கேயோ!” 

“லெட்டர் போடுவியா?” 

“பார்க்கலாம்.” 

“இந்தா…” 

“என்னது?”

“பணம்!” 

“ஏது?” 

“ஏதோ, வாங்கிக்க மாட்டாயா?” 

“சரி, கொடு!” அவளிடமிருந்து இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களை வாங்கிப் பெட்டியில் வைத்துக் கொண்டான்.

– தொடரும்…

– வழிப்போக்கன் (நாவல்), எட்டாம் பதிப்பு: 1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *