ஐந்தெழுத்தும் ஐந்தாம் படையும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 3, 2026
பார்வையிட்டோர்: 33 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

என்னங்க., நம்ம தெருவுல எல்லார் வீட்டிலேயும் கண்காணிப்பு காமெரா பொருத்தி இருக்காங்க.. நாமளும் CCTV போட்டுடலாமா? என்று கேட்டாள் அங்கயற்கண்ணி.

அதுக்கென்ன.. இப்போதே நமக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்கார், அவர்கிட்ட பேசுறேன் என்று கைபேசியை எடுத்தார் சுந்தரம். அதில் தனது அலுவலத்துக்கு CCTV போடுவதற்கு கேட்டு ஒரு பையன் வந்தான். அவன் ஒரு மிஸ்டு கால் குடுத்துட்டு போனான் என்று தேடிப்பிடித்து அந்த நம்பருக்கு போன் போட்டார் சுந்தரம்.

வணக்கம் “ஐந்தாம் படை” கண்காணிப்பு சேவை மையம் என்று ஒரு பெண் பேசினாள்.

என்னாம்மா இது, பேறே ஒரு தினுசா இருக்கு. அது என்ன ஐந்தாம் படை, ஒரு ஆறுபடை அப்படின்னு வச்சிருந்தாலும், தமிழ் கடவுள் முருகன்னு சொல்லலாம். ஒன்னும் புரியலையே..! என்றார் சுந்தரம்.

இதை நீங்க, எங்க முதலாளி கிட்ட தான் கேக்கனும் சார். நான் அவருக்கு இணைப்பு கொடுக்கிறேன் என்றாள் அவள்.

அந்த முனையில் தூசி பேசுறேன், சொல்லுங்க சார், என்றார்.

என்னாங்க, எல்லா பெயரும் ஒரு மார்க்கமா இருக்கு? ஐந்தாம் படை, தூசி, என்று கேட்டார் சுந்தரம்.

சார், ஐந்தாம் படை என்ற பெயர் ஒரு கன்சல்டன்ட் ஏஜென்சி தேர்வு பன்ன பேர். நான் என் பெயரை துப்பறியும் சிங்கம்-ங்கிறத சுருக்கி தூசி அப்படின்னு வச்சிருக்கேன், என்றார் தூசி.

பாத்துங்க.., காத்தடிச்சா காத்துல பறந்து காணாம போய்ட போறீங்க.., என்றார் சுந்தரம்.

யாருங்க நீங்க., எதுக்கு போன் பன்னி கலாய்க்கிறீங்க… உங்களுக்கு என்ன வேனும்? என்று சற்று கோபத்துடன் கேட்டார் தூசி.

எனக்கு கண்காணிப்பு காமெரா பொருத்தனும். அதுக்கு தான் போன் பன்னினேன், என்றார் சுந்தரம்.

அப்படியா? இருங்க சார். நான் எங்க மார்க்கெட்டிங் செக்ஷன் கிட்ட கொடுக்கிறேன், அப்படின்னார் தூசி.

இருங்க சார்., நீங்க ஐந்தாம் படைன்னு பேர் வச்சிருக்கீங்க, அதுக்கு விளக்கம் சொல்லிட்டு அப்புறம் மாத்தி விடுங்க, என்றார் சுந்தரம்.

நானே உங்களை கூப்பிடுறேன் சார், என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தார் தூசி.

வரவேற்பறை பெண்ணை கூப்பிட்டு திட்டினார். எதுக்கும்மா, அந்த போனை எனக்கு குடுத்த..!

அந்த ஆள், ஐந்தாம் படைக்கு விளக்கம் கேக்குறான், என் பேரையும் தூசி தட்டுறான். மண்டை காயுது, என்றார் தூசி.

சார்.. இருந்தாலும், அந்த ஐந்தாம் படை என்ற பேருக்கு, வேற யாரும் விளக்கம் கேட்டா, நான் என்ன சொல்றது சார் என்றாள், வரவேற்பு பெண்.

அதிருக்கட்டும், உன் பேர் என்னம்மா, என்றார் தூசி.

சார்.., ஏன் சார் கேக்குறீங்க.. விபூதி சார் என் பேர், என்றாள் வரவேற்பு பெண்.

இந்த பேரை, அந்த போன் பன்ன ஆள் கிட்ட சொன்னியா?

இல்ல சார், ஏன் சார் என்றாள் விபூதி. உன் பேர் விளக்கத்தையும் அந்த ஆள் கேட்டு இருப்பானே? என்றார் தூசி.

சார், அது வந்து சார், எங்கம்மாவுக்கு ரொம்ப நாள் குழந்தை இல்லாம இருந்து, ஒரு கோயில்ல மந்திரிச்ச விபூதி சாப்பிட்டு நான் பிறந்ததால, எனக்கு அந்த பேர் வச்சுட்டாங்க சார், என்றாள் விபூதி.

நல்ல வேளை, வாழைப்பழம் சாப்பிட்டு நீ பிறந்து இருந்தா என்ன ஆகியிருக்கும் உன் பேருக்கு? என்றார் தூசி.

போங்க சார், என்று வைத்து விட்டாள் விபூதி.

அப்போது தூசியிடம் வந்தார், பத்திரிகை நிருபர் அங்குசம்.

என்ன தூசி சார். கவலையா இருக்கீங்க? என்னா சமாச்சாரம் என்றார்.

யோவ்., உன் அங்குசத்தை இங்கேயும் போட்டு வாங்குறியா? எங்கயாவது யானை இருந்தா பாரு.., இந்த தூசிகிட்ட வந்து, ஏன் ஒரண்டைய இழுக்கிற, என்றார் தூசி.

ஒரண்டையும் இல்ல பெரண்டையும் இல்ல. உங்க கவலைய சரி பன்னலாம்னு தான் கேட்டேன், என்றார் அங்குசம்.

என்னா விபரம் என்று சொன்னார் தூசி.

இது ஒரு பெரிய விஷயமே இல்ல. எங்கள் அகங்காரம் பத்திரிக்கை ஆசிரியர் சூசை கிட்ட கேட்டா தெரியுது, என்றார் அங்குசம்.

அன்னிக்கி வந்தாரே, அவர் ஆபிஸ்ல கண்காணிப்பு காமெரா பொருத்தனும்னு சொன்னாரே, அவரா?

யோவ். அவர் நல்ல பட்டை அடிச்சு கிட்டு இருந்தார், அவர் பேர் சூசைன்னு சொல்ற, கிறித்தவ பேரா இருக்கு, என்று கேட்டார் தூசி.

உங்க பேர் மாதிரி தான் சார், அவர் பேர் சுத்த சைவம், அதை சுருக்கி “சு. சை” அப்படின்னு வச்சுக்கிட்டார், அது நாளடைவில் சூசை ஆயிடுச்சி, வேறொன்னும் இல்ல, என்றார் அங்குசம்.

சரி அவருகிட்ட போன் போடுங்க, கேட்போம் என்றார். அவர் போன் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தது.

இது என்னடா, தூசிக்கு வந்த சோதனை என்று நொந்து கொண்டார் தூசி.

அப்போது, தொலைக்காட்சியில் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியை ஒரு நிருபர் பேட்டி கண்டுகொண்டு இருந்தார்.

அவரிடம், நிருபர் கேட்டார், “ஐந்தாம் படை” என்பது பற்றி கேட்டார்.

இந்த “ஐந்தாம் படை” என்பது, இரண்டாம் உலகப்போரின் போது, ஒரு நாடு அல்லது அமைப்பிற்கு உள்ளே இருந்துகொண்டே, ரகசியமாக எதிரிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் குழு அல்லது துரோகிகளைக் குறிக்கும் சொல் ஆகும்.

இது பொதுவாக, நம் கூடவே இருந்து குழி பறிக்கும் நபர்களைப் பற்றி குறிப்பிடுவது, என்று விளக்கினார் அந்த ராணுவ அதிகாரி.

அது ஏன் “ஐந்தாம் படை” ன்னு சொல்லனும், என்று கேட்டார் நிருபர்.

ஒரு ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் (Four Pillars of Democracy) என்பது ஒரு நாட்டின் மக்களாட்சி முறை சிறப்பாகவும் சமநிலையோடும் செயல்படத் தேவையான முக்கிய அமைப்புகளான, சட்டமன்றம் (Legislature), நிர்வாகத்துறை (Executive), நீதித்துறை (Judiciary) மற்றும் ஊடகம் (Media) ஆகியவை ஆகும்.

இந்த ஐந்தாம் படை, நம் எதிரி நாட்டில் இருந்துகொண்டு நமக்கு தேவையான ரகசியங்களை சேகரித்து கொடுப்பதால், மற்ற நான்கு தூண்களை விட முக்கியமாக கருதப்படுகிறது, என்றார் அந்த ராணுவ அதிகாரி.

ஆஹா., என் சந்தேகத்தை தீர்த்து வைத்த தொலைக்காட்சிக்கு நன்றி, என்று குதூகலம் அடைந்தார் தூசி.

இருந்தாலும், உங்க கம்பெனிக்கு இந்த பெயர் சரியா பொருந்துதா? என்று பாருங்க சார், என்றார் அங்குசம்.

ஏன், அப்படிசொல்றீங்க, என்று கேட்டார் தூசி.

சார், இன்றைய டிஜிட்டல் மற்றும் உலகமயமாக்கப்பட்ட சமூகத்தில், “ஐந்தாம் படை” (Fifth Column) என்பது துப்பாக்கிகளுடன் எல்லையில் சண்டையிடும் ராணுவத்தைக் குறிப்பதில்லை. மாறாக, நவீன தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, ஒரு நாட்டின் உள்ளே இருந்துகொண்டே அதன் அமைதியையும் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் சக்திகளை இது குறிக்கிறது. அதனால், நீங்க கொஞ்சம் யோசித்து, பேரை மாத்துங்க, என்றார் அங்குசம்.

நீங்களே, ஒரு பேரை சொல்லுங்க அங்குசம் என்று கேட்டார் தூசி.

அங்குசம் ஆழ்ந்து யோசித்து, “ஐந்தெழுத்து”, என்று வைங்க என்றார். இல்லன்னா, “ஐங்கரன்” என்று வைங்க என்றார்.

நீங்க முதல்ல சொன்ன ஐந்தெழுத்து நல்லா இருக்கு, என்றார் தூசி.

அதிருக்கட்டும் தூசி சார். இந்த ஐந்தில் உங்களுக்கு என்ன ஒரு பிடிப்பு என்று கேட்டார் அங்குசம்.

அது “இந்தியன்” என்ற ஐந்தெழுத்து தான் என்றார் தூசி.

ஆனால் அவர் மனதுக்குள் “சாவித்திரி” என்று ஐந்தெழுத்து ஒலித்தது. எந்த சாவியோ, எப்போதோ திரி போட்டு, தீபம் ஏற்றி இருக்கிறாள், தூசி மனதில்.

அப்போது மறுபடியும் சுந்தரம் கூப்பிட்டார்.

தூசி சார், உங்க கம்பெனி பெயர் விபரம், நான் தொலைக்காட்சி பார்த்து தெரிந்து கொண்டேன்.

நீங்க உங்க படையை கொஞ்சம் அனுப்பி, எங்க வீட்டுல கண்காணிப்பு காமெரா பொருத்தி கொடுங்க, என்று சொன்னார்.

நல்லது சார். இப்போ, எங்க கம்பெனி பேர் “ஐந்தெழுத்து”, என்றார் தூசி.

ஆஹா..! “நமசிவாய” என்ற ஐந்தெழுத்து மந்திரமா! நல்லது, என்றார் சுந்தரம்.

இந்த ஐந்தெழுத்து, அவரவர் மனதிற்கேற்ப அர்த்தத்தை தருகிறது அல்லவா..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *