கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 7, 2025
பார்வையிட்டோர்: 76 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வேங்கடராம நாயுடு தாலுகா ஆபீஸ் பியூன். மாதம் பதினாறு ரூபாய் சம்பளம். ஆனால் சம்பளத்திற்கு ஏற்ற குடும்பமில்லை. ஆண் ரகத்தில் நாலு, பெண் ரகத்தில் மூன்று. ஆக மொத்தம் ஏழு குழந்தைகள். இது தவிர யமனுக்கு ‘டிமிக்கி’ கொடுத்துக் கொண்டு வரும் எழுபது வயசுள்ள சுமங்கிலியான தாயார். ‘சுமங்கிலி’ என்று சொன்னதிலிருந்தே ‘தகப்பனார் ஒருவர் இருக்கிறார்’ என்று சொல்ல வேண்டிய அவசியமே இராது. ஒற்றைப் படை நம்பர் ஆகாதென்று டஜனைப் பூர்த்தி செய்ய அவருடைய தங்கையும் விதவையாகிச் சென்ற வருஷம் வந்து சேர்ந்தாள். 

வேங்கடராம நாயுடு ராம பக்தர். எந்நேரமும் ராம நாமம் ஜபித்த வண்ணமாகவே இருப்பார். தினந்தோறும் பெருமாள் கோவிலுக்குப் போகத் தவற மாட்டார். பட்டை பட்டையாக நாமம் போட்டுக் கொள்வார். அவர் தமக்கே நாமம் சாத்தப் படிந்திருந்தாரேயொழிய, மற்றவர்களுக்கு நாமம் சாத்தும் வித்தையை இன்னும் அவர் கற்றுக்கொள்ள வில்லை. குமாஸ்தாக்கள் ஆபீஸில் ஒன்றிரண்டு லஞ்சம் வாங்குவதை அவர் பார்க்க நேரிட்டால், ‘ராமா!ராமா!’ என்று மனத்துக்குள்ளேயே ஜபித்துக்கொள்வார். அந்தப் பாதகத் தொழிலைப் பார்த்த பாவத்தைப் போக்கிக் கொள்வதாக அவர் நம்பிக்கை. தாலுகா ஆபீஸில் வேலை பார்த்துக்கூடத் தாமரை இலை நீர் போல், வேங்கடராம நாயுடு லஞ்சம் வாங்காமல் இருந்தது யாவருக்கும் வியப்பாகவே இருந்தது. 

வேங்கடராம நாயுடுவுக்கும் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருந்தது. அவருக்குப் பன்னிரண்டு வருஷம் ‘சர்விஸ்’ ஆகிறது. அடுத்த வருஷம் டபேதார் அப்துல் காதர் சாகிப் பென்ஷன் வாங்கப்போகிறான். அவனுக்குப் பின்பு, இருக்கிற பியூன்களிலெல்லாம் நாயுடுதாம் ‘சீனியர்’. அப்துல் காதருக்கு அப்புறம் டபேதார் வேலை நாயுடுவுக்குத்தான். டபேதார் வேலை வந்துவிட்டால் மாதம் இருபது ரூபாய் சம்பளம் கிடைக்கும். அப்புறந்தான் தம் மகளுக்குக் கல்யாணம் செய்ய வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தார் நாயுடு. 


“சாமி, எல்லாரும் கையெழுத்துக் காயிதம் குடுத்திட்டாங்க. நீங்க ஒருத்தர் தான் பாக்கி. மணி பத்தாச்சு. நான் புறப்பிடப் போறேன்” என்றார் வேங்கடராம நாயுடு. 

“ஓய் நாயுடுகாரு, கொஞ்சம் பொறும் ஓய். ஆப்காரி ஸ்டேட்மெண்ட் நாளைப் போகாட்டா கலெக்டர் கண்ணு முழியைப் புடுங்கிப்புடுவான். இதோ தந்திட்டேன். கொஞ்சம் பொறும்” என்றார் ஆப்காரி குமாஸ்தா. 

நாயுடு பொறுமைசாலி. கொஞ்ச நேரம் பொறுத்து அதையும் வாங்கிக்கொண்டு, எல்லாவற்றையும் கையெழுத்துப் பெட்டியில் போட்டுத் தூக்கிக்கொண்டு தாசில்தார் வீட்டிற்குப் போனார். மாடிக்குச் சென்று தாசில்தார் அறையை அணுகிய போது, அவருடன் யாரோ ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது 

“ஐந்நூறு ரூபாய் கொடுத்துவிடுகிறேன். எஜமான் கிருபை செய்து, ஏலத்தை என் பேருக்கு முடித்துவிட வேண்டும்.” 

“முழு ரூபாயாய் ஒரு ரூபாய் கொடுத்துவிட வேண்டும். அதற்குக் குறைந்தால் என்னிடத்தில் பேசவே வேண்டாம். மூவாயிரம் ரூபாய் பெறக்கூடிய நிலம்” என்றார் தாசில்தார். 

நாயுடு மூக்கில் விரலை வைத்துக்கொண்டு, பக்கத்தில் இருந்த பியூன் ஒருவனை, “என்ன நடக்கிறது உள்ளே?” என்று கேட்டார். 

“சத்தம் செய்யாதே!” என்று ஜாடை காட்டிக் கொண்டே, “‘சம்திங்’! நடக்குது, ‘சம்திங்’! இப்ப உள்ளே போகாதே” என்றான் அந்தப் பியூன். 

தாசில்தார் எசமான் கூடவா இப்படி!” என்று வாயைப் பிளந்தார் நாயுடு. 

“நீதான் பைத்தியம்! எசமானுக்குமா பைத்தியம்?” என்றான் பியூன். 

“எஜமான்! கிருபை செய்யணும். ஒங்க பேரைச் சொல்லி நான் பிழைச்சுக்கிருவேன். எசமான் பெரிய மனசு பண்ணணும்”. உள்ளே இருந்து சத்தம் வந்தது. 

“அந்தப் பேச்சே பேச வேண்டாம். ஆயிரத்துக்குக் குறைந்தால் காரியம் நடக்காது” என்றார் தாசில்தார். 

உடனே பத்து நோட்டுக்கள் எண்ணும் சத்தம் கேட்டது. தாசில்தார் இந்த விஷயத்தில் எல்லாம் கறாரான பேர்வழி என்பது வந்தவருக்குத் தெரியும். 


மறுநாள் ரெவினியூ டிபாஸிட் ரிபண்டு வௌச்சர் எடுத்துக்கொண்டு ஒருவன் தாலுகா ஆபீஸிற்கு வந்தான். கோழிக் குஞ்சை நோக்கி வட்டமிடும் கருடனைப்போல், நாயுடு அவனை வட்டமிட்டார். 

“எட்டணா கொடுக்கிறேன். சீக்கிரம் இதை மாற்றிக் கொடு.” 

“முழு ரூபாயாய் ஒரு ரூபாய் கொடுத்துவிட வேண்டும். அதற்குக் குறைந்தால் காரியம் முடியாது” என்றார் நாயுடு. தாசில்தாரிடத்தில் படித்த பாடம்! ஒரு தப்பிதங்கூட இல்லாமல் ஒப்பித்தார். ஆனால் முடிவு? 

வந்தவன் எஸ். எஸ். எல்.ஸி. படித்தவன். சிறிது சட்டம் தெரிந்தவன். உடனே ஹெட் அக்கவுண்டெண்டிடம் போய்ச் சொல்லிவிட்டான். 

இரண்டு நாட்களுக்கு முன்னால் ஹெட் அக்கவுண் டெண்டு நாயுடுவைத் தம் வீட்டிற்குத் தண்ணீர் எடுக்கச் சொன்னார். நாயுடு மறுத்துவிட்டார். அதிலிருந்து அவர் நாயுடுவின் மேல் கண்ணாகவே இருந்தார். இப்பொழுது அவர்மீது ஒரு ‘ரிப்போர்ட்’ வரவே, உடனே அவனிடம் ஒரு வாக்குமூலம் வாங்கி, தாசில்தாருக்கு ‘ரிப்போர்ட்’ செய்துவிட்டார். 

சில நாட்களுக்குப் பின் தாசில்தார் நாயுடுவை விசாரணை செய்தார். நாயுடு குற்றத்தை ஒப்புக் கொண்டார். நீதி தவறாத தாசில்தார் தமது கடமையைச் செய்தார். நாயுடுவின் சம்பளத்தில் இரண்டு ரூபாய் குறைக்கப்படும் என்றும், டபேதார் வேலைக்கு அவர் சிபார்சு செய்யப்பட மாட்டார் என்றும் தீர்ப்பளிக்கப் பட்டது. 

நாயுடு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்! 

மறுநாள் காலைத் தபாலில் தாசில்தாருக்கு ‘ஆர்டர்’ ஒன்று வந்தது. அவரை டிவிஷனல் டிப்டி கலெக்டராகப் ‘பிரமோஷன்’ செய்திருப்பதாக அதில் கண்டிருந்தது. 

ஊரார் அனைவரும் அவருக்கு ஒரு தேநீர்க் கச்சேரி வைத்துப் பிரிவுபசாரப் பத்திரம் ஒன்றும் வாசித்துக் கொடுத்தார்கள். அந்தப் பத்திரத்தில் தாசில்தார் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவரென்றும், நீதி தவறாதவ ரென்றும், தற்காலத்தில் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் லஞ்சம் வாங்குவதை அவர் எவ்வளவு வெறுக்கிறார் என்பது ஒரு பியூனுக்கு அவர் விதித்த தண்டனையிலிருந்தே தெரிய வருகிறதென்றும் குறிப்பிட்டிருந்தது. 


அன்றிரவு நாயுடு வீட்டிற்குத் திரும்பிய பொழுது அவருடைய மகன் மூன்றாவது வகுப்பில் வாசிக்கும் பையன் பழைய பாடங்களைப் படித்துக்கொண்டிருந்தான். 

“சத்தியமே ஜயம்!” “தர்மம் தலை காக்கும்!” என்று உரத்துப் படித்தான்.

– வாடா விளக்கு முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *