ராதே என் ராதே வா ராதே

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 107 
 
 

ஞாயிற்றுக் கிழமை இரவு நேரம். வெளியே மழை பொழிந்து கொண்டிருந்தது. பனியன் வேட்டி அணிந்த பேராசிரியர் சதாசிவம், மாடியில் உள்ள படுக்கை அறையை விட்டு வெளியே வந்தார். மாடியின் ஓரத்தில் இருந்த பகுதியில் நின்று கொண்டு மழையை ரசித்துக் கொண்டிருந்தார். நடுத்தர வயது, கனமான சரீரம், கேசம் இல்லாத தலை, மழித்த மீசை இல்லாத முகம் கொண்ட சதாசிவம், தம்முடைய காதலி ராதாவை மணந்து கொண்டு அவள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவளுடைய வீட்டுக்கு வீட்டு மாப்பிள்ளையாக வந்து சேரந்தவர். கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கிருந்து தான் அவர் தமது கல்லூரி பணிக்குச் சென்று கொண்டிருக்கிறார். மனைவி ராதாவுக்கு இவர் மீது கொண்டுள்ள காதல் மாறவில்லை.தான். ஆனால் , அவளுடைய அண்ணன்கள் கருத்து இல்லாமல் இருப்பதால் திடீரென காலமாகி விட்ட அவளது அப்பாவின் பிசினஸ்சையும் நிலபுலன்களையும் குடும்ப நிர்வாகத்தையும் கவனிக்க வேண்டிய நிலைக்கு அவள் தள்ளப்பட்டாள் அல்லது அவளே அந்த அனைத்து பொறுப்புகளையும் தன் தலை மீது இழுத்துப் போட்டுக் கொண்டு விட்டாள். கே.பாலச்சந்தரின் திரைப்பட நாயகி போல் பிறந்த வீட்டுக் குடும்பம் தாங்கும் பெண்மணியாக அவள் மாறி விட்டதால் , ஆசை ஆசையாக காதலித்து கடிமணம் புரிந்த காதல் கணவனுடன் நேரம் செலவழிக்க முடியாத அளவுக்கு அவளுடைய வாழ்வின் போக்கு மாறி விட்டது. பேராசிரியர் சதாசிவம் மனைவி மீது பிணக்கு கொள்ளாமல் , சிறிதளவும் கோபம் கொள்ளாமல் அவளை விட்டு ஓடி விட நினைக்காமல் அவளுடன் தான் வாழக்கை என்று இருந்து வருகிறார்.

இப்பொழுது ஞாயிற்றுக் கிழமை அன்றும் நாளெல்லாம் வேலை பார்த்து, பணி புரிபவர்களுடன் மல்லுக் கட்டி விட்டு வந்த மனைவி உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் சதாசிவம் , சத்தத்துடன் பெய்து வரும் மழையில் மனம் பறி கொடுத்து நின்று கொண்டிருக்கிறார்.

சில நிமிடங்களில் , இரவு உடை அணிந்த, அழகான ,ஒடிசலான நடுத்தர வயது பெண்மணி – அவரது மனைவி தான் அவர் அருகில் வந்து நின்றாள்.

“சாரல் அடிக்குது இங்க ஏன் நிக்கறிங்க.. சதா…”

“இல்ல …ராதாம்மா .. மழையைப் பார்க்கலாம்னு வந்தேன்… “

“மலேசியாவுலேந்து வந்த ஒங்க தங்கச்சி கீர்த்தனாவைப் போய் பார்க்கணும்னு சொன்னீங்களே…”

“பார்த்துட்டு வந்துட்டேன்..“

“அது என்ன நம்ம வீட்டுக்கு வராம லாட்ஜ்ல தங்கிட்டு ஒங்கள வர சொல்றது … என்ன கேட்டா ஒங்க பாச மலர்? அண்ணிக்கு ஒன் கூட ரொமான்ஸ் பண்ண நேரம் இல்லையா ஒழியலயா அதான் புழுபூச்சி இல்லையா ன்னு கேட்டிருப்பாளே…”

“அதெல்லாம் கேட்கலம்மா …. நீயா ஏன் அப்படி நெனச்சுக்கறே?”

ராதா கணவரை கட்டியணைத்துக் கொண்டாள். அவர் அவளது கூந்தலை வருடியபடியே பேசினார் – “இப்படி ஏதேதோ நெனச்சு பாரு கூந்தல்ல வெள்ளை எட்டிப் பார்க்குது”

“உங்களுக்கு கேசமே இல்லையே அதுக்கு என்ன சொல்றதாம் “

ராதா சிரித்தாள். அவரை இறுக்கி அணைத்தாள்.

“உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதின்னு இரு” என்றார் சதாசிவம்.

“அப்ப ஒங்க தங்கச்சி ஒங்கள குடைஞ்சு இருக்கு… அதானே…”

“இன்னிக்கு சண்டேலயும் ஒன்ன கைல பிடிக்க முடியலயே…”

“பேச்சை மாத்தறியே பிராடு” ராதா, கணவரின் முதுகில் அடித்தாள். அடித்த அவளுடைய கைகளை தன்னுடைய கைகளுடன் பிணைத்துக் கொண்டார் சதாசிவம். அவரது பள்ளிக்கால தோழியான டாக்டர் பத்மினி, பிள்ளை பெறும் நிலையில் ராதாவின் கர்ப்பப்பை இல்லை என்று சொன்ன தகவலை இன்று வரை அவர் மனைவியிடம் சொல்லவில்லை.

பெரிதாக அடித்த மழைச்சாரலில் இருவரும் நனைந்தனர். அங்கேயே தரையில் அமர்ந்து விட்ட கணவனின் மடியில் அடைக்கலம் ஆனாள் ராதா.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *