யார் மீது தவறு?
கதையாசிரியர்: பே.செல்வ கணேஷ்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 24, 2025
பார்வையிட்டோர்: 90

“சொல்லு,சொல்லு திருடுன கம்மலை எங்க வெச்சிருக்க,சொல்லு”
என்று அவளை ஒரு குச்சியால் நாய் அடிப்பது போன்று அடித்தாள் கமலா.
“நான் திருடலைம்மா நான் திருடலை”
என்று காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருந்தவளுக்கு வயது பதினான்கு.
“அம்மா!சத்தியமா நான் திருடலைம்மா சின்னய்யா என்மேல உள்ள ஏதோ ஒரு வெறுப்புல அபாண்டமா பழிப்போடறார்மா,சத்தியமா நான் திருடலைம்மா”
என்று அவள் கெஞ்ச,கமலாவோ அதனை காதிலேயே வாங்காதப்போல் அவளை அந்த குச்சியால் விளாசி எடுத்தாள்.
சின்னய்யா என்று அழைக்கப்படுகிற கமலாவின் பதினொன்று வயது மகனோ அவள் அடிவாங்குவதைக் கண்டு இரசித்துக்கொண்டிருந்தான்.
“இங்கிருந்து ஓடிரு இனி நீயும் சரி உங்க அம்மாவும் சரி இந்த வீட்டு வாசற்படியை மிதிச்சீங்க பிறகு நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”
என்று சொல்லி அவள் மேலேயே அந்த குச்சியை வீசிவிட்டு
“சரி! போனாப்போகுது பாவம்னு வேலைக்கு வெச்சா அது நம்மளையே பதம் பாக்குது”
என்று சொல்லிக்கொண்டே அவளது மகனை கூட்டிக்கொண்டு உள்ளே சென்று கதவை சாத்தினாள்.
அவளோ அடிபட்ட நாயைப்போல் கிடந்தாள் அவளது உடலில் ரத்தத்தின் தடங்கள் கோடுகளாக இருந்தன,அவளால் முடியாவிட்டாலும் தட்டுத்தடுமாறி எழுந்து மெதுவாக நடக்கத் தொடங்கினாள்.
அங்குள்ளவர்கள் எல்லோரும் அவளை அடிப்பதைப் பார்த்தார்கள் ஆனால் ஒருவரும் ‘இவளை ஏன் அடிக்கிறீர்கள்?’ என்று அவளை எதிர்த்து கேள்வி கேக்கவில்லை,அதனை நினைத்து இவள் கவலைப்படவுமில்லை ஏனெனில் இவர்கள் வேடிக்கை மட்டும்தான் பார்ப்பார்கள் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.அவளைப் பொருத்தவரை அவர்கள் எல்லாம் நடமாடும் பிணங்கள்.
வீட்டை அடைந்தவள் உள்ளே செல்வதற்கு முயலவும் உள்ளேயிருந்து அவளது அம்மா ஓடிவந்து அவளது சடைமுடியை பிடித்து இழுத்து வெளியே தள்ளினாள்,இந்த எதிர்ப்பாராத தாக்குதலை தாங்க முடியாதவள் வலியில் ‘ஆஆஆஆ’ என்று கத்திக்கொண்டே மண்ணில் விழுந்தாள்.
“ஏய்!பாதவத்தி இந்த இரண்டு நாளு உடம்பு சரியில்லாததுக்கு உன்னைய அனுப்பி வெச்சேனே, இப்படி என் வேலையிலேயே உலை வெச்சுட்டியேடி, இனி சோத்துக்கு என்னடி பண்ணுவ,சொல்லுடி பிணமாட்டம் இருக்கியே சொல்லு சோத்துக்கு சிங்கியா அடிப்ப” என்று சொல்லி சொல்லி அவளை அடித்தாள் அவளது அம்மா.
“எம்மா நான் ஒரு தப்பும் செய்யல்லம்மா அவங்கதான் என்னைய நம்ப மாட்டுறாங்க நீயுமாம்மா என்னைய நம்ப மாட்டேங்குற,நீதானம்மா எனக்கு நேர்மையா இருக்கனும்னு”என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளது அம்மா மறுபடியும் அறைந்தாள்
“பொய்ச்சொல்லாததடி, நீ திருடாம அவங்க உன்மேல என்ன பொய்யா சொல்றாங்க, உன்னையச் சொல்வி குத்தமில்ல உன்னோட திருட்டுக்கார அப்பனைச் சொல்லனும் என்ன இருந்தாலும் அவன் புத்திதான உனக்கும் வரும்”
“அம்மா, தயவு செஞ்சு நான் சொல்றதை நம்பும்மா நான் எப்படிம்மா திருடுவேன் அந்த வாசுப்பையன் தான்ம்மா என்மேல வீணா பழிப்போட்றான், நான் திருடலைம்மா நம்பும்மா நான் திருடலை” என்று அவள் காலைப் பிடித்து கதறினாள்,அவளோ அவள் பிடித்த காலை உதறித்தள்ளிவிட்டு
“சீ! நீயெல்லாம் என் காலைப் பிடிக்காதடி, நீயெல்லாம் என் காலைப் பிடிக்காத, தயவு செஞ்சு எங்கேயாவது போயிரு, இல்லன்னா நானே உன்னைய கொன்னுடுவேன்” என்று மிதிக்க வந்தவளை தடுக்கிறேன் என்கிற பெயரில் அவளைத் தள்ளிவிட அவளோ தவறி கீழே விழுந்தாள்.
விழுந்தவள் விழுந்தப்படியே கிடந்தாள் அவளது கண்களோ இமைக்காமல் அப்படியே நிலைக்குத்தியிருந்தன, இவளும் அவளது அருகில் சென்று ‘அம்மா’ என்று உசுப்பினாள் ஆனால் அசைவில்லை.
இவளோ பயத்தோடு அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள், அப்படியே இவள் பார்த்துக் கொண்டிருக்கையில் விழுந்தவளின் தலையிலிருந்து இரத்தம் நேர்கோடாக வழிந்து மண்ணில் கலந்துக் கொண்டிருந்தது.
அந்த போலீஸார் அக்கம் பக்கத்து வீடுகளிலுள்ளவர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்
“அந்த அம்மா அந்தப் புள்ளைய போட்டு அந்தா அடிஅடிச்சுது மிதிச்சுது, அதான் இந்தப் புள்ள அப்படியே கோவத்துல புடிச்சு தள்ளிவிட்ருச்சு அந்த அம்மாவும் பின்னக்காட்டி விழுந்ததுல மண்டைல அடிப்பட்டு ஸ்பாட் அவுட் ஆயிட்டு” என்று அந்த வீட்டிலுள்ள பெண்மணி அந்த போலீஸாரிடம் கூறிக்கொண்டிருந்தாள்.மேலும்,
“அந்தப்புள்ளயும் அவ்ளோ சொல்லுச்சு ‘நான் திருடலம்மா, நான் திருடலம்மா’ன்னு, ம்ஹூம் கேக்கவே இல்லையே, ஆனால் இந்தப் புள்ளையும் அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது அது இந்தப் பொண்ணோட அம்மாவுக்கும் தெரியும் இவ ஒன்னும் திருடியிருக்க மாட்டான்னு ஆனால் இவளால தனக்கு வேலையில்லாம போயிட்டேங்குற கோவத்துனாலதான் இவளைப் போட்டு அடிச்சுது, உச் இப்போ பாருங்க ஒரு உசுறே போய்ட்டு,வாழ்க்கைல எதுவேணாலும் நடக்கலாம்ங்குறதுக்கு இது ஒரு உதாரணமா எடுத்துக்க வேண்டியதுதான்”
என்று சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டாள். அந்தப் பெண்மணியிடம் விசாரணை முடித்துவிட்டு ஜீப்பில் ஏறிய அந்த போலீஸார் டிரைவரிடம் வண்டியை எடுக்கச் சொன்னார், அதற்கு பின்இருக்கையில் அந்த பதினான்கு வயது சிறுமி உட்கார்ந்திருந்தாள், தனது அம்மாவின் பிணத்தை பார்த்துக்கொண்டு.
அங்கிருந்து கிளம்பியவர் நேராக அந்த சிறுமி வேலை செய்யும் இடமான கமலாவின் வீட்டிற்கு வந்திருந்தார், விஷயத்தை கேள்விப்பட்ட கமலாவிற்கோ “இவளா இப்படி செய்தாள்?” என்று அதிர்ச்சியாக இருந்தது.
“இவளுக்கு திருட்டுப் புத்திதான் இருக்குன்னு நினைச்சா கொலைகாரப்புத்தியும்ல இருக்கு, இவ்ளோ நாள் இவளை தான் எங்க வீட்ல வெச்சிருந்தோம்னு நினைச்சுப் பாத்தாலே எனக்கு நெஞ்செல்லாம் படபடக்கு”
என்று அந்த போலீஸாரிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் அவளுக்கு அருகிலேயே அவளது மகன் வாசுவும் நின்றுக்கொண்டிருந்தான்.
ஜீப்புக்குள் அமர்ந்திருந்த அந்த பதினான்கு வயது சிறுமியோ அச்சிறுவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘திருடாத பொருளை திருடியதாக என் மீது அபாண்டமாக பழி சுமத்தியவனோ இதோ என் கண்முன்னே நிற்கிறான், எனது அம்மாவோ அங்கு பிணமாக கிடக்கிறாள், அவளைக் கொலை செய்தது யார்? என்று கேட்டால் நான்தான் என்று இந்த சமூகம் சொல்லும், ஆனால் அதற்குப்பின் இருக்கிற உண்மையை யாரும் பார்க்க மாட்டார்கள், இனி என் வாழ்க்கை அவ்வளவுதானா?, இனி என் வாழ்க்கை சிறையில் தானா?அப்படி சிறைதான் என்றால் அதற்குமுன் ஒரு காரியத்தை செய்தாக வேண்டும்’ என்று யோசித்துக்கொண்டிருந்தவள் திடீரென்று தனக்கு அருகிலிருந்த போலீஸ் வைத்திருந்த துப்பாக்கியை பிடுங்கிக்கொண்டு ஜீப்பை விட்டு வெளியே தாவிக்குதித்து, ஓடி வந்து கமலாவின் மகனின் தலையிலேயே துப்பாக்கியின் பின்பகுதியை வைத்து ஓங்கி அறைந்தாள், அந்த தாக்குதலிலேயே அவன் நிலைக்குழைந்து சரிந்து விழுந்தான்.
அப்போதும் அவள் அந்த துப்பாக்கியின் பின்பகுதியை வைத்து கீழே விழுந்தவனை வெறியோடு ஓங்கி ஓங்கி அறைந்தாள், அவனது இரத்தம் அவளது முகத்தில் தெறித்துக் கொண்டிருந்தது.
அவனது தலையே நசுங்கி போகும் அளவிற்கு அவள் அந்த துப்பாக்கியினை வைத்து அறைந்தாள்
“ஏன்டா பொய் சொன்ன? உனக்கு நான் என்னடா செஞ்சேன்? இப்படி அநியாயமா என் மேல பழியைப் போட்டு என் அம்மாவையும் என் கையாலே தள்ளிவிட்டு சாவடிச்சிட்டீயேடா, நீ மட்டும் அப்படி பழிப்போடாம இருந்தா என் அம்மா உயிரோடவாவது இருந்துருக்குமேடா சொல்லு, சொல்லு” என்று மறுபடி மறுபடி அந்த துப்பாக்கியினை வைத்து அடித்தாள், அங்குள்ளவர்கள் அனைவரும் அவளை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர் போலீஸ் முதற்கொண்டு.
அவனை வெறித்தீர கொன்றதும் இரத்தம் வழிகின்ற முகத்தோடு, அந்த துப்பாக்கியினையும் கையில் ஏந்திக்கொண்டு ஜீப்பில் ஏறி அமர்ந்தாள் சிறைக்குச் செல்வதற்காக.
யார் மீது தவறு?
திருடாத கம்மலை திருடியதாக அவள் மேல் வீண்பழி சுமத்திய அந்த சிறுவனின் மீதா?
நடந்தது என்ன என்று அறியாமல் அவளை நாய்ப்போல் அடித்த கமலாவின் மீதா? அல்லது அவளது தாய் மீதா?
அவள் அடிப்பதையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நடமாடும் பிணங்களின் மீதா?
இதில் யாரோ ஒருவர் அவருக்கு ஆதரவாக பேசியிருந்தாலோ? அல்லது பொறுமையாக என்ன நடந்தது என்று கேட்டிருந்தாலோ இன்று இரு உயிரும் போயிருக்காதுதானே?அவள் கொலைகாரியாகியிருக்க வேண்டிய அவசியமும் வந்திருக்காதுதானே?