கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 11, 2024
பார்வையிட்டோர்: 2,222 
 
 

“இந்த உலகத்துல நம்ம ரெண்டு பேரத் தவிர வேற யாராவது இருக்காங்களா என்ன?” என்றாள். நான் “அத தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ணப் போற?” என்றேன். “எனக்கு என்னவோ நாம ரெண்டு பேர் மட்டும் தான் தான் இருக்கோமோனு தோணுது..” என்று சொல்லிக் கொண்டே நான் அமர்ந்திருந்த ச்சேரோடு பின்புறமாக அணைத்துக் கொண்டு கன்னத்தோடு கன்னம் உரசினாள்.

“பாவம், படிச்சிட்டு இருக்குற மனுஷனுக்கு எடஞ்சல் தரேன்” என்று அவளே முடிவு செய்து கொண்டு பால் எடுத்துவரச் சென்றாள். “இந்த நாலு சுவரே கதின்னு இருக்கவளுக்கு அப்படித்தான் இருக்கும்.” என்று மனதுக்குள் ஓடியது. கூடவே “என்ன நான் இப்படியெல்லாம் யோசிக்கிறேன்?” என்ற கேள்வியும். “ஆனா கொஞ்ச நாளா இவளுக்கு ரொம்பத்தான் கரிசனம் காட்டுறேன்” என்று முனகினேன்.

இவள் கதவை திறந்து ஒரு அடி வைத்தால் போதும். உலகமே வெளியே காத்திருக்கிறது. இவள் ஏன் எதற்கும் நேரத்தைத் தர மனமின்றி என்மீதே அனைத்தையும் கொட்டிக் கொண்டிருக்கிறாள் என்று புரியவில்லை. ஆனால் இவள் இப்படி இருப்பது தான் சரியெனப் பட்டது. அதற்குத்தான் என் மனம் உள்ளூர ஆசைப்படுகிறது. ஆனால் வாய் மட்டும் புதிதாக சமத்துவம் பேசுகிறது. இவள் காபி, சாப்பாடு என்று வாசலைத் தாண்டி அடுப்பறை வரை சென்றால் மட்டும் போதும். “நானே இங்க இருக்கும் போது வேற என்ன வேணும்?” என்று படிக்கத் தொடங்கினேன்.

நான் பெரிதாகப் புத்தகம் படிக்கும் ஆள் இல்லை. என் நண்பனின் வற்புறுத்தலுக்காக இந்தப் புத்தகத்தில் ஒரு கதையை மட்டும் சிறிது நாட்களாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் கதையை ஏற்கனவே அவன் கூறியிருக்கிறான். அதனால்தான் அவனே அடிக்கோடிட்டுத் தந்த முக்கியமான சில கட்டங்களை மட்டும் படிக்கலாம் என்று நேராக அந்தப் பக்கங்களை மட்டும் தேடிப் படிக்கிறேன். சொல்லப்போனால் அட்டையிலேயே இருந்தாலும் இந்த புத்தகத்தின் பெயர், அவ்வளவு ஏன் இந்த கதையின் பெயர் கூட எனக்குத் தெரியாது. அதைப் பார்க்கும் ஆர்வமும் இல்லை. பெயர் என்றால் சுருக்கமாக ஒரு வார்த்தையில் இருக்க வேண்டும். வாக்கியமாக இருந்தால் எப்படி?…

இந்தக் கதையில் வரும் ஆண் போல் தான் உல்லாசமான ஒரு வாழ்க்கையை வாழ நினைத்தேன். கல்யாணத்தில் உடன்பாடு இல்லை என்ற கொள்கையில் இருந்தேன். ஆனால் கல்யாணம் தான் ஒரு பிடிப்பை ஏற்படுத்துகிறது. இவள் எனக்கானவள் என்ற நம்பிக்கையையும், உறுதியையும் தருகிறது.

இவளும் என் நண்பனைப் போலவே கதை சொல்வாள். எப்பொழுதும் ஒரே கதை, அது ஒரு பட்டாம்பூச்சியின் கதை. அந்தப் பட்டாம்பூச்சி தனக்கு மட்டும் வாழ்க்கை ஏன் இவ்வளவு கஷ்டமாக உள்ளது என்று கடவுளிடம் முறையிடும். கடவுளின் அருளால் அந்த பட்டாம்பூச்சிக்கு ஒரு துணை தூரத்தில் தெரியும். பட்டாம்பூச்சியும் மனம் முழுக்க மகிழ்ச்சியுடன் ஆவலோடு பறந்து செல்லும். அருகில் சென்று பார்த்த போது தான் தெரியும் அது ஒரு வெட்டுக்கிளி என்று.

இப்படியே ஒவ்வொரு கதையிலும் அந்தப் பட்டாம்பூச்சி இன்னொரு பட்டாம்பூச்சியை எதிர்பார்த்து எங்கெங்கோ பறந்து சென்று இறுதியில் தும்பி, சிலந்தி, குருவி போன்று வேறேதாவதொன்றை கண்டடைவதாகக் கதை முடியும். இதற்கு அவனே பரவாயில்லை என்றிருக்கும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கதையோடு வந்தாள். என் மனதில் ஏதேதோ ஓடிக்கொண்டிருந்தது. இவள் என் மீது சாய்ந்து “இந்த பட்டாம்பூச்சி இருக்குல்ல” என்று ஆரம்பித்தாள் .

“நானே எதத் திண்ணா பித்தம் தெளியும்னு இருக்கேன். இதுல நீ வேற. பட்டாம்பூச்சி… இந்தப்பூச்சினு” என்று தள்ளினேன். நான் புத்தகத்தை விரித்து வைத்தபடி இதை நினைத்து வருந்தினேன். புத்தகத்தின் பக்கங்கள் காற்றில் இப்படியும், அப்படியும் ஓடின. இதற்கு முன்னாள் எவ்வளவோ செய்திருக்கிறேன். இப்பொழுது ஏன் இதற்கெல்லாம் வருந்துகிறேன் என்று தெரியவில்லை.

இவள் பால் எடுத்து வந்து என் கால் மாட்டில் உட்கார்ந்து ஆற்றிக் கொண்டிருந்தாள். நான் இரவு உணவு சாப்பிட்டு சற்று நேரம் தான் ஆகியிருந்தது. நான் குடித்துவிட்ட பின் முந்தானையால் துடைத்துவிட்டுப் போனாள். இவள் இப்படி செய்வது ஒருவித சங்கோஜத்தை ஏற்படுத்தியது. வீட்டிற்குள் சரிதான். ஆனால் வெளியிலும் இதையே தொடர்வது தான் பிரச்சனை.

நான் “இத பாரு நீ எனக்கு லாஸ்ட் பிரியரிட்டி தந்தா போதும்” என்றேன்.

“அப்படினா?” என்றாள்.

“கடைசி முக்கியத்துவம்” என்றேன்.

வெடுக்கென்று கண்கள் கசிந்தாள். நான் இழுத்து ச்சேரின் கைப்பிடியில் அமர்த்தி மார்பில் சாய்த்துக் கொண்டேன் “அதாவது, வீட்டுக்குள்ள இருக்கும் போது சரிதான். உங்க அம்மா வீட்டுக்குப் போனாலோ இல்ல எங்க அம்மா வீட்டுக்குப் போனாலோ நீ மத்தவங்கள கவனிச்சுட்டு கடைசியா என்ன கவனிச்சா போதும். குறிப்பா தொட மட்டும் செஞ்சிடாத..” என்றேன். அது ஏன் இவளை ஓயாமல் அழவைக்கிறேன் என்று புரியவில்லை. ஆனால் இம்முறை ஆறுதல் படுத்தியதால் எனக்கே என்னை நினைத்து ஒரு வித பெருமை. நான் இவளை இப்படி கனிவாக கையாண்டதே இல்லை. பொறுமையாக விளக்கம் கொடுத்ததும் இல்லை.

நான் தொட வேண்டாம் என்று சொன்னதற்கு மூஞ்சைத் தூக்கி வைத்துக்கொண்டாள். ஆனால் மற்ற விஷயங்களில் ஒரு குறையும் இல்லை. தூங்கும் முன் நான் சிறிது நேரம் மாடிக்குச் சென்று வானத்தைப் பார்த்தபடி பார்த்தபடி நின்றேன். நான் படித்துக்கொண்டிருந்த கதையின் பதின்நான்காம் பக்கத்தில் ஒரு பெண் அழுவது போல காட்சி. அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வீரமும், உறுதியுமாய் இருந்தவள் ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு அழுகிறாள். நான் மேகத்தைப் பார்த்தேன். அது அமைதியாக கூட்டம்-கூட்டமாய் நிலவைக் கடந்து சென்று கொண்டிருந்தது. நிஜத்தை விட கதையில் துக்கத்தையும்-துரோகத்தையும் ஏற்றுக்கொள்ள முடியவே இல்லை.

நான் திரும்பி வந்த போது இவளும் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தாள். என் மனம் கனத்தது. நான் கையைப் பிடித்துக்கொண்டேன். “மனக்கஷ்டத்தில் பிடித்துக்கொள்ளத்தானே கை” என்ற புத்தகத்தின் வரிகள் காதில் கேட்டது. “எனக்கு நீங்க தான் எல்லாமே” என்று விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தாள். எனக்கும் இவள் அப்படித்தான் என்று சொல்ல ஏன் வாய் வரமாட்டேன் என்கிறது..?

என்னால் இந்த தனிமையைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று கதறிய போது வந்தவள் இவள் என்று நான் நன்கு அறிவேன். இருந்தாலும் நான் “நம்ம அடிமைப்படுத்தும் அளவுக்கு அன்பு தேவையா?…” என்றேன். அமைதியாக இருந்தாள்.

“புரியுதா…” என்றேன். இவள் “அதெல்லாம் எனக்குப் புரியாது…” என்றாள்.

இதைச் சொல்வது இவளைக் கஷ்டப்படுத்தும் என்று அறிவேன். நான் என்னையே அறியாமல் இவள் கண்ணீருக்குப் பழகிவிட்டேன் என்று நினைக்கிறேன். எந்த நாளோ அல்லது உரையாடலோ இவளின் அழுகை இல்லாமல் முடிந்தால் அது நிறைவாகவே இல்லை.

இவளது கண்ணீர் என் தோளை நனைப்பதை உணர்ந்தேன்.

“நான் என்ன சொல்லிட்டேன்? எல்லாத்துக்கும் ஒரு இடம் பொருள் இருக்குனு சொன்னேன்” என்றேன். எனக்கு உள்ளூர உறுத்தியது. ஏனென்றால் இவளுக்கு முன்னால் என்னுடன் இருந்தவளும் நானும் பல ஆளில்லா வீதிகளில் முத்தங்களை பரிமாறிக் கொண்டிருக்கிறோம்.

“தூங்கி எழுந்திருப்போமான்றதே நிலை கிடையாது. பிடிச்ச ஒரே மனுஷன் பக்கத்துல இருக்கும் போது எந்த இடமாயிருந்தா என்ன. யாரு இருந்தாதான் என்ன? தொடறதுக்கெல்லாமா விதிமுறை…” என்றாள் இவள்.

அது சற்றே சம்பந்தம் இல்லாததாகத் தெரிந்தாலும். என் மன உறுத்தலுக்கு ஆறுதலாய் இருந்தது. இவள் சொல்வது உண்மைதான். நான் அருகில் இருப்பதே இவளுக்கு சந்தோஷம். நான் பேச வாய் திறந்தால் புன்னகை செய்யத் தொடங்கி விடுவாள்.

ஆனால் இவளுடன் இருப்பதற்கும், அவளுடன் இருந்ததற்கும் வித்தியாசம் உண்டு. அவளுடன் இருந்த போது எந்தவித கட்டாயமும் இல்லை. இவள் காட்டும் அன்பு என்னை அடிமைப்படுத்தி, நான் நானாக இயங்க முடியாமல் செய்கிறது. அதாவது நான் நானாக இருப்பதற்கு இவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டி இருக்கிறது.

எனக்கு ஏன் இவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது..? இதெல்லாம் இந்தக் கொஞ்ச நாட்களாகத்தான்.

“ஒருத்தங்க வாழ்க்கைல எவ்வளவு மனுஷங்கள நேசிச்சாங்க எவ்வளவு மனுஷங்களால நேசிக்கப்பட்டாங்க அப்படிங்கறது தான் வாழ்க்கையோட அர்த்தம்னு சொல்லியிருக்காங்க தெரியுமா?” என்று ஒரு எழுத்தாளர் சொன்னதாக என் நண்பன் சொல்லி கேட்டிருக்கிறேன். இதை எனக்கு சாதகமாக சொல்லி அவளுக்கு இருக்கும் சுதந்திரத்தையும் என்னுடைய பழைய வாழ்க்கையையும் அவளிடம் திறக்க நினைத்தேன்.

“இதெல்லாம் சாத்தியமா?… இதெல்லாம் ஏத்துக்க முடியுமா?” என்று கையை இறுகப் பிடித்து கொண்டாள். இவள் என்னவோ இறுகப் பிடித்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் மனம் எதற்கும் பிடிபடாமல் எங்கெங்கோ திரிந்து முட்டிமோதி ஒரு கணம் கடந்த கால கோபத்தின் – சந்தோஷத்தையும் மறுகணம் நிகழ் கால அன்பின் எரிச்சலையும் கண்முன்னே கொண்டு வந்தது.

எனக்கு குடிக்க வேண்டும் போலிருந்தது. ஹாலுக்குச் சென்று தேடினேன். எதுவும் இல்லை, நான் பணத்தை எடுத்து கொண்டு கேட்டை திறந்து வெளியே நின்றேன். நாய்கள் ஒரு குலை-குலைத்து, பின் “இவன் தானா…” என்பது போல் அடங்கின. அதோடு பேசிக்கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்தேன். அவனுக்கு எந்நேரமும் பாட்டில் கிடைக்கும் இடம் தெரியும். என்ன ப்ளாக்கில் வாங்குவதால் காசு சற்று அதிகம். விற்பவர்கள் ஏற்றி சொன்னால் இவன் பங்கிற்கு இவனும் சற்று காசு ஏற்றி வாங்கிக் கொள்வான். இம்முறையும் அப்படி வாங்கிக் கொண்டு தெருமுனைக்குச் சென்று ஒருமுறை தெருவைப் பார்த்து அனைத்தும் சரியாகத்தான் இருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு திரும்பி வரும் அவசரத்தில் விறு-விறுவெனச் சென்றான்.

நான் மாடிக்கு எடுத்துச் சென்று நிலவை நக்கிக் கொண்டு குடித்தேன். அண்ணாந்து பார்த்து இரு கைகளையும் விரித்து வானத்தைக் கட்டிக்கொண்டு அழவேண்டும் போல் இருந்தது. ஏன் சில நாட்களாக ஏதோ ஒரு மன உறுத்தல். இதில் இவள் வேறு இப்போது சேர்ந்து கொண்டாள்.

ஆனால் இவளை சட்டென்று மகிழ்ச்சியின் உச்சிக்குக் கொண்டு போகும் யுக்தி எனக்குத் தெரியும். வருடம் முழுக்க, ஏன் வாழ்க்கை முழுக்க கூட இதை இவள் தனக்கும், மற்றவர்களுக்கும் நினைவுபடுத்தி மகிழ்வாள். எனக்கு சரியாக ஞாபகம் இல்லை என்றாலும் இந்த மாதத்தில் ஏதோ ஒரு நாள் இவளுக்குப் பிறந்தநாள். திருமணமான புதிதில் ஒரு முறை கடைத்தெருவிற்குச் சென்றபோது பிங்க் கலர் பூ போட்ட ஒரு சிறிய ஹேண்ட் பேக் கேட்டிருந்தாள். “அப்புறம் வாங்கிக்கலாம்” என்றேன்.

அதையடுத்து ஓரிரு முறை இவளை ஊருக்கு பஸ்ஸில் அழைத்துச் செல்லும்போது, இவளின் மாதப் பிரச்சனைக்கான ஒரு சிறு பொருளை எடுப்பதற்கு கூட மேலிருக்கும் பெட்டியை எடுத்து சிரமப்பட வேண்டியிருப்பதாகச் சொல்லி “இதுவே ஒரு ஹேண்ட்பேக் அடக்கமா இருந்திருந்தா?” என்று நொந்து கொண்டாள்.

ஒரு ஹேண்ட் பேக் வாங்கிக் கொடுத்தால் போதாதா… சில நேரங்களில் வெறும் பலூனை வாங்கிக்கொடுத்து சந்தோஷப்படுத்தி இருக்கிறேன். எது கொடுத்தாலும் மூச்சுத்திணற கட்டிக் கொள்வாள்.

சீதனமாகக் கொடுத்த பைக்கில் இவளை ஏற்றி ஒரு வட்டம் அடித்ததை இன்னமும் சொல்வாள். “இந்த வண்டில மொதல்ல என்னத்தான் வச்சி ஓட்டுனாரு” என்று.

ஆனால் அவள் அப்படியில்லை, அவள்தான் என்னை வைத்துக் கொண்டு வட்டமடிப்பாள். சரி எதற்கு போனவள் பற்றிய பேச்சு…

கூடலுக்குப் பின் நள்ளிரவில் முழிப்புத் தட்டி புத்தகத்தை எடுத்துப் புரட்டினேன். ஒன்றை எடுத்து படித்துக் கொண்டிருக்கும் போதே, அதில் ஆர்வம் குறைந்து வேறு ஒரு கதைக்குப் புரட்டினேன். இதைப் படிக்கத் தொடங்கியதும் அதையே படித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. நான் ஒரு இடத்தில் இருக்க முடியாமல் நெளிந்து கொண்டிருந்தேன். கால்கள் குடைவது போலிருந்தது. இது பரிச்சயமானது தான். அவளின் நினைவு என்னைத் தின்று கொண்டிருந்தது.

இவளும் “கை, கால் முட்டிக்குமுட்டி உட்டுப்போவுது” என்று எழுந்தாள். என்னை பார்த்து “ஏன் தூக்கம் புடிக்கலையா?” என்றாள்.

நான் புத்தகத்தை விரித்து வைத்தபடி அமர்ந்திருந்தேன். “கத உள்ள போய்ட்டீங்களா” என்றாள். விழிகள் இடம்-வலமாய் ஆட, கீழ் உதட்டு தோலை பற்களால் பிய்த்தபடி ஏதோ ஒரு தர்க்கம் எனக்குள். எப்பொழுதும் ஏதோ ஒரு குரல் என் காதோரம் பேசி குற்றவுணர்ச்சி ஏற்படுத்துகிறது. இவள் கேட்டு 5 நிமிடம் ஆகியிருக்கும். இந்த வார்த்தை எனக்குள் சென்று பதில் சொல்ல மேலும் 5 நிமிடம் ஆனது. நான் “கத உள்ளதா போய்ட்டேன்” என்றேன்.

எனக்கு ஏன் இதெல்லாம் கேட்கிறது என்று முடியைப் பிய்த்துக் கொண்டேன். அப்போதும் “தன்நெஞ் சறிவது பொய்யற்க… இத்தான வாழ்க்க பொய்த்தபின் வாழ்றதா வாழ்க்க” என்று அந்தக் குரல் கேட்டது. இது போதாதா என்னைச் சீண்டிப்பார்க்க.

“உள்ள வேவுது, நான் மாடில இருந்துட்டு வர்றேன்” என்று மேலே நடந்தேன். இந்நேரத்தில் என்னைப் போலவே யாரேனும் மாடியில் இருந்துவிட்டால், என்று இவள் மேலே வரமாட்டாள்.

நான் வானத்தைப் பார்த்தேன். அமைதி அடைந்தேன். நிலவைக் கடந்தபடி மேகங்கள் சென்று கொண்டிருந்தன.

ஒரு ஜோடி இத்தெருவின் வசீகரத்தால் உள்ளிழுக்கப்பட்டு இருளை அடைந்ததும் முத்தங்களைப் பரிமாறிக் கொண்டனர். இது எனக்கு அவளை நினைவு படுத்தியது.

இதே நிலவொளியில் அவள் என் கன்னத்தில் முத்தமிட்டிருக்கிறாள். நான் சுற்றும் முற்றும் பார்த்து “ஆள் யாராவது வந்துடப் போறாங்க…” என்றேன். அவள் “வந்தா என்ன நா அவங்களுக்கா கொடுத்தேன்” என்றாள். இது போன்ற ஒன்றை நான் செய்ய பல அனாதை இடங்களைத் தேடி அலைந்ததை நினைத்து சிரித்துக் கொண்டேன். இப்பொழுது மட்டுமில்லை எதிர்காலத்தில் இக்காட்சியைப் பார்த்தாலும் எனக்கு அவளேதான் ஞாபகம் வருவாள். இக்காட்சியை தெருவை காக்கும் அச்சிறுவன் ஒளிந்திருந்து பார்ப்பதைக் கண்டேன். அவன் வாய் ஒழுக மட்டும்தான் இல்லை.

ம்ம்… என்ன நடந்து என்ன. அவள் இப்போது இல்லை. இதுவும் ஒரு மரணத்தைப் போல் தான். ஒரு நொடியில் நடந்து விட்டது. அந்த ஒரு நொடி வரும் என்று தெரியாமலே என்னென்ன செய்திருக்கிறேன்..? எத்தனை காலக் கோபமோ. அவள் எந்த விளக்கமும் சொல்லவில்லை. பல வகையான புரிதல் எனக்குள். இதில் ஏதேனும் ஒன்று என்று நினைப்பது முட்டாள்த்தனம். இது அத்தனையும் தான் என்பது தான் உண்மையாக இருக்கும். அவள் அனைத்தையும் அணு-அணுவாய்த் தேக்கி வைத்திருந்தது ஒரு கட்டத்தில் வெடித்திருக்கக் கூடும்.

எங்களிடம் இத்தனை காலம் அல்லது இதுவரை சேர்ந்திருக்க வேண்டும் என எந்தவித ஒப்பந்தமும் இல்லை. ஒப்பந்தம் என்று ஒன்று இருந்திருந்தால் அதுவும் அளவாகத் தான் இருந்திருக்கும். இறுதி வரை இருப்பேன் என்று உறுதி கொடுக்க முடியாது.

“ஒருவரை விதிமுறைப்படி அட்டவணை போட்டு விரும்பவும் வெறுக்கவும் முடியுமா என்ன?” என்றது குரல். நான் பல்லை கடித்து கொண்டேன்.

இருவரும் கைகுலுக்கி விடை பெற்ற போதும் கூட எனக்கு விளக்கம் கேட்கத் தோன்றவில்லை. அவளிடம் ஒரு ஆண்மை தெரிந்தது. பிரிந்த சில நாட்கள் எந்த வித்தியாசமும் இல்லை. அவள் என் வாழ்வில் இல்லை. சாகும் வரை அவளை மறுமுறை சந்திக்கவே கூடாது என்று முடிவெடுத்தேன். மழை காலம் வந்துவிட்டதால் அதை மாற்றிக் கொண்டேன்.

“எது-எது உன் கவனத்தை ஈர்க்கிறதோ… அது-அது கவனம் செலுத்த வேண்டிய கவலைக்குரிய நிலையில் இருக்கிறது” என்ற வரிகள் தலையில் ஓடியது. அவள் அருகில் இருக்கும் போதும் ஈர்த்தாள். இல்லாது போன போதும் ஈர்த்தாள்.

என்னால் இருக்க முடியவே இல்லை, அனைத்தையும் அவளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள அவளின் நினைப்புடன் இரவு பகலாய்த் தேடிக் கண்டடைந்தேன். அவள் பிரிந்திருந்த இத்தனை நாட்களின் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ளவில்லை, சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இத்தனை நாட்களைக் கடத்தி விட்டாள். அவள் சரியாக எப்போது சென்றாள் என்றால் இனிப் பிரிவே இல்லை என்று என் மனம் உறுதி செய்த போது. பல முறை உறுதி செய்ய சிரமப்பட்டேன். செய்தபோது சென்றுவிட்டாள். எனக்கு இது அவளேதானா என்ற சந்தேகம். நான் மெல்ல பழைய நினைவுகளை அடுக்கினேன். அவள் உதடுகள் ஒட்டிக் கொண்டு விம்மின. ஒரு கட்டத்தில் அவள் கண்கள் கலங்கின. சற்றே வென்றது போல் தோன்றியது. அவள் மிகுந்த மன வலியோடு பேசத்தொடங்கினாள். பாரத்தால் வார்த்தைகள் தொண்டையில் சிக்கி-சிக்கி ஒன்றும் பாதியுமாய் வெளியே வந்தன. நான் மட்டும் தான் அவளை நினைத்து வருத்தப்பட்டதாக நினைத்தேன். அவள் பிரிய முடிவெடுத்த காரணத்தைக் கேட்டறிந்தேன். “இதுக்காகவா…” என்று கோபமடைந்து அவளை தூக்கியெறிந்துவிட்டு வந்துவிட்டேன். அவளை நானாக வேண்டாம் என்று நிராகரித்ததில் ஒரு பெருமிதம். அவள் என்ன காரணம் சொல்லியிருந்தாலும் நான் இதைத்தான் செய்திருப்பேன் என்பது அவளை சந்திக்கும் வரை எனக்கே தெரியாது.

ஆனால் இதெல்லாம் முடிந்த கதை. என்று பெருமூச்சு விட்டேன்.

என்னதான் இருந்தாலும் அவள் என்னைப் போல் திருமணம் செய்து கொள்ளவில்லையே என்றது குரல். என் மனதை நான் போதும்-போதும் என்று அடக்கினேன். இந்தக் குரல் என்னோடு பேசுவது எரிச்சலைத் தந்தது.

எனக்கு ஏன் ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருக்கிறது. எல்லாம் சிறிது நாட்களாகத்தான். அனைத்திற்கும் காரணம் கதையா? அப்படியென்றால் இப்புத்தகம் இங்கு தொடங்கி நான் சிறுவயதில் இருந்து செய்த எல்லாத் தவறுகளையும் உணரச் செய்யுமா? இல்லை இது ஏதாவது மாந்திரீகமா? அதில் நம்பிக்கை இல்லையென்றாலும் அவளை நினைத்து பித்துப் பிடிக்க செய்வினை ஏதாவது வைத்திருக்கிறாளா? என்று சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் புரட்டிப் போட்டு தேடினேன். ஆனால் அப்படி எதுவும் அகப்படவில்லை. இதையெல்லாம் நினைத்துப் பார்த்து இப்போது என்ன ஆகப் போகிறது? நினைவு எதை மாற்றிவிடப் போகிறது… தூக்கம் தான் போனது. அப்படியே உடல் அலுப்பில் பத்து நிமிடம் கண் ஈர்த்துக் கொண்டு போனாலும் பற்கள் சில்லு-சில்லாய்க் கொட்டுவது போல் கனவு.

திடுக்கிட்டு எழுந்து பற்களைத் தொட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைதான் தொடர்கிறது.

இன்னும் சற்று நேரத்தில் விடிந்துவிடும் போலிருந்தது. நான் கீழே சென்றேன். புத்தகத்தை எடுத்து வெளியே வீசியெறிந்தேன். அப்போதும் அந்தக் கதையின் பெயரைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் துளியும் இல்லை.

இவளை பார்த்தேன், கால்களை கைகளால் கட்டிக்கொண்டு முகத்தைப் புதைத்தபடி அமர்ந்திருந்தாள். நான் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. முன்பொருமுறை கேட்டதற்கு எனது வாசம் இவள் மேல் எங்கும் வீசுவதாகவும். அதை வெளியே விடாமல் பிடித்து வைத்திருப்பதாகவும் சொன்னாள். அப்பொழுதே முடிவு செய்துவிட்டேன், இவளுக்கு முற்றிவிட்டது என்று எனக்கென்று ஒரு வாசம் இருப்பது எனக்கே அப்போது தான் தெரியும். ஆனால் உணரத்தான் முடியவில்லை.

நான் அருகில் அமர்ந்ததுதான் தாமதம். முட்டைக் கண்களால் மேல் நோக்கிப் பார்த்து. “உங்களுக்கு ஏன் பட்டாம்பூச்சி பிடிக்காது?” என்று பாவமாகக் கேட்டாள்.

“பிடிக்கும்” என்றேன்

“என்ன பிடிக்குமா” என்றாள்.

“பிடிக்கும்” என்றேன்

“எவ்வளவு?” என்றாள்.

“பிடிக்கும்னு சொன்ன உடனே ஏன் ஒரு அளவுகோல் கொண்டுவர சொல்ற? அளவு சொன்னா அதோட மதிப்புத் தெரிஞ்சிடும். அளக்க முடியாதது என் அன்பு” என்றேன். “வார்த்தைகளை வைத்து ஏமாற்றுவது மிகவும் சுலபம்.” என்று அந்த குரல் கரைந்தபடியே மெல்ல அடங்கியது.

என் தோளில் தலை சாய்த்து, கையைப் பிடித்துக் கொண்டு மீண்டும் அதே கதையை சொன்னாள். அது ஏனோ இவள் பேசினால் மட்டும் என் காதில் எதுவும் ஏற மறுக்கிறது. லைட்டில் கட்டப்பட்டு ஆடிக்கொண்டிருந்த காகிதத்தின் நிழல் முகத்தில் ஆடி தொந்தரவு தந்தது. இம்முறை இவள் சொன்ன கதையில் அந்தப் பட்டாம்பூச்சிக்கே தான் ஒரு பட்டாம்பூச்சியா என்று சந்தேகம் வந்துவிட்டது. அதை சோதித்துப் பார்க்க மனம் வராமல், “அது பட்டாம்பூச்சி தான்…. பட்டாம்பூச்சி தான்… பட்டாம்பூச்சி தான்…” என்று உரக்க சொல்லி உறுதிப்படுத்தினாள். சோகத்தை மறைத்து அடிமனதில் இருந்த விருப்பத்தை புகுத்தி இம்முறை அந்த பட்டாம்பூச்சி இணையை கண்டுபிடித்து அதோடு சேர்ந்து மகிழ்ச்சியுடன் கடற்கரையின் காற்றின் போக்கில் பறந்து, மறைந்து போனதாக ஒரு வழியாய் முடித்தாள்.

நான் வீட்டில் லைட்டில் தொங்கிக்கொண்டிருந்த எண்ணெய் காகிதத்தை பிய்த்து எறிந்தேன். அதில் ஒளியைத் தேடி வந்து மாட்டிக்கொண்ட ஈசலின் இறகுகள் ஒட்டிக் கொண்டிருந்தன. ஒளியைத் தேடி வந்து சாவதில் இவற்றிற்கெல்லாம் என்ன சந்தோஷமோ…

சில வாரங்களில் இவளின் பிறந்தநாள் வந்தது. நான் ஹேண்ட் பேக் வாங்க கடைத்தெருவிற்குச் சென்றேன். இவள் கேட்ட பை கிடைக்கவே இல்லை, தெருத்-தெருவாக சுற்றிக் கண்டுபிடித்தேன். அது அதே பை தான். ஆனால் அதன் பக்கத்தில் அதைவிடப் பெரிதாக இருந்த கருப்பு நிறம் கொண்ட வேறொரு பையை வாங்கினேன். அதில் என் பொருட்களையும் வைத்துக் கொண்டால் வெளியே பயணம் செல்லும் போது இவள் சிரமப்பட வேண்டியிருக்காது. எனக்கு எந்தக் குரலும் கேட்கவே இல்லை.

எதை வாங்கினால்தான் என்ன… மூச்சு திணற ஒரு அணைப்பு நிச்சயம் தானே!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *