மதுரிமாவின் காதல்
எம்.கே. குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் ராம மூர்த்தி , தமது அறையில் அமர்ந்து இருந்தார். அந்த புகைப்படம் அவருடைய கைக்கு கிடைத்த திலிருந்து அவருக்கு வேலை ஓடவில்லை. இருக்கையிலிருந்து எழுந்து ஜன்னலின் திரைச்சீலையை விலக்கி வெளி உலகைப் பார்த்தார். கதவைத் தட்டும் ஓசை கேட்டது. வாங்க என்றார் ராம மூர்த்தி . நல்ல கட்டுடல் கொண்ட இளைஞன் வந்து நின்றான். அவன் அவருடைய பி.ஏ . ‘சொல்லுங்க சதீஷ்’ என்றார். சதீஷ், ‘சார் உங்களை பார்க்க டிடெக்ட்டிவ் ஜெகந்நாத் வந்திருக்காரு’. ‘வரச் சொல்லுங்க’ என்றார் ராம மூர்த்தி. சதீஷ் வெளியே சென்றான். ஜெகந்நாத் உள்ளே வந்தான்.
‘வாங்க.. சேனாபதி கிட்ட ஒரு டிடெக்ட்டிவ் வேணும்னு கேட்டேன். வயசானவரா இருப்பான்னு பார்த்தா, நீங்க இளைஞரா இருக்கீங்க’ என்றார் ராம மூர்த்தி . மழித்த முகம் கொண்ட ஒல்லியான இளைஞன் ஜெகந்நாத் எதுவும் பேசாமல் புன்னகை பூத்தான். ராம மூர்த்தி, தமது இர்ருக்கைக்குச் செல்லாமல் ஜன்னல் அருகில் இருந்த சோபாவில் அவனை அமரச் சொன்னார். அவரும் அவனருகில் அமர்ந்தார்.
‘நான் பர்சனல் விஷயங்களை அங்கே உட்கார்ந்து பேசறது இல்ல மிஸ்டர்…’
‘என்னை ஜெகன்னு கூப்பிடலாம் சார்’
‘ஜெகன்..நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். இந்த போட்டாவ பாருங்க இது என்னோட மகள் மதுரிமா..இங்க என் கம்பெனில தான் எக்சிக்யூட்டிவ் டைரக்டரா இருக்கா துடிப்பா பிரமாதமா வேலை செய்வா..என் பணிச்சுமையை பாதியா குறைச்சசுட்டா. நான் காதலுக்கு எதிரானவன் இல்ல. இருந்தாலும் அவளோட உட்கார்ந்து இருக்கற இளைஞன் யாருன்னு…’
‘கண்டுபிடிச்சு உங்களுக்கு ரிபோர்ட் தரேன் சார். இவ்வளவு பெரிய குழுமத்தோட சிஎம்டி என் மேல நம்பிக்கை வெச்சு அசைன்மென்ட் அளிச்சது எனக்கு மகிழ்ச்சியா இருக்கு..நீங்க உங்க நேரத்துல சில நிமிஷம் கொடுத்தா நான் சில விஷயங்களை சொல்வேன்..’ என்றான் ஜெகன்.
‘சொல்லுங்க..’
‘மதுரிமா மேம் பத்தி தந்தையார் உங்களுக்கு தெரியாமல் போகாது. இருந்தாலும் என் மனசில ஓடறதை நான் சொல்றேன். மதுரிமா மேம பார்க்கும் போதே அவங்க முகத்துல தனித்துவமான அழகு, அந்தக் காலத்துல மேதாவிலாசம்ன்னு சொல்வாங்களே அது, மிடுக்கு எல்லாம் இருக்கும். இந்தப் பொண்ணு அழகை நான் குறைச்சு மதிப்பிடல.. ஆனா மதுரிமா மேம் கிட்ட…’
‘என்னய்யா உளர்ற?’
‘சார் இது கண்டிப்பா உங்க டாட்டர் இல்ல அவங்க உருவத்துல இருக்கிற வேறொரு இளம்பெண்…’
‘எதை வெச்சு சொல்றீங்க..’
‘அதான் சொன்னேன் இல்ல மிடுக்கு மேதாவிலாசம்..சரி இன்னொரு விஷயம் சொல்றேன்…மதுரிமா மேம் சமீபத்துல மகாராணி யூட்யூப் சானலுக்கு கொடுத்த பேட்டில பிசினஸ் கான்பரன்சுக்கு அதுக்கு ஏத்த கோட் ட்ரெஸ் அணிவேன் ரெகுலரா ஆபீஸ் போகும்போது காட்டன் சாரீஸ் உடுத்துவேன் சூரிதார் சல்வார் எல்லாம் காலேஜ் படிக்கும்போதும் போட்டதில்லை ன்னு சொல்லி இருக்காங்க..’
‘அதனால..‘
‘அதனால தான் சொல்றேன் இந்த சூரிதார் லேடி மதுரிமா இல்லேன்னு..’
‘மதுரிமா நேரத்தோட அருமை தெரிஞ்சவங்க இந்த மாதிரி பொது இடத்துல இப்படி இருக்க மாட்டாங்க..காதலன் இருந்தாலும் திருமணம் வரை காத்திருப்பாங்க மத்தவங்க தெரியாம படம் எடுக்கற அளவுக்கு எல்லாம் போக மாட்டாங்க. திருட்டுத் தனமா அவங்கள யாரும் படம் எடுத்துடவும் முடியாது..’
‘என்னய்யா அவ கூட பழகினா மாதிரி என்ன எல்லாமோ சொல்றே..எனக்கே தெரியாத விஷயமா சொல்றே?’
‘ஆமாம் சார் . நான் ஐஸ் வெச்சு பேசணும்னு பேசல நான் அப்படி பேசற ஆள் இல்ல அவங்கள பத்தி என்னோட அப்சர்வேஷனை வெச்சு சொல்றேன்… தூரத்திலிருந்து பார்த்து ஸ்ட்டி பண்ணதை வெச்சு சொல்றேன்.. இந்த பொண்ணு சாரி இந்த லேடி யாருன்னு கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கும் நல்லது. மதுரிமா மேமுக்கும் நல்லது..கண்டுபிடிப்பதையே அசைன்மென்ட ஆக எடுத்துக்கட்டுமா சார்..‘
ராம மூர்த்தி தலையசைத்தார். ஜெகன் அவரிடம் கைகுலுக்கி விடை பெற்றுச் சென்றான்.
ஜெகனின் வீடு. காலை மணி எட்டு . ஜெகன் , கூடத்தில் தரையில் அமர்ந்து சப்பாத்தி தயாரிப்பதில் மும்முரமாக இருந்தான். அழைப்பு மணி ஒலித்தது. அவன் பார்த்த காட்சியை அவனால் நம்ப முடியவில்லை. அழகான ஒல்லியான இளம்பெண் நின்று கொண்டிருந்தாள். அவள்தான் தொழிலதிபர் ராம மூர்த்தியின் மகள் மதுரிமா. அவளுடைய மலர்ந்த முகத்தில் புன்னகை. ஜெகன் , சில நொடிகள் அவளுடைய அழகைக் கண்களால் அளந்தான். பிறகு சுதாரித்துக் கொண்டு வாங்க மேம் என்றான்.
மதுரிமா உள்ளே வந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
‘என்ன சப்பாத்தி தயார் ஆகுதா.. ஒங்கள கல்யாணம் பண்ணிக்கற பொண்ணு கிச்சன் பக்கமே எட்டிப் பார்க்க வேணாம் இல்ல..‘ என்றாள்.
ஜெகன், அருகில் இருந்த அறைக்குள் சென்று சட்டையை அணிந்து வந்து மற்றொரு நாற்காலியில் உட்கார்ந்தான் .
‘என்ன சாப்பிடுவீங்க க்ரீன் டீயா.. காபியா’
‘அதெல்லாம் ஒண்ணும் வேணாம். பராவாயில்லையே பெரிய மாளிகைக்குள்ளே அவுட் அவுஸ் வீடு பிடிச்சுட்டீங்க. சுத்தி மரம் செடிகொடிகள் . வீட்டையும் நல்லா வெச்சு இருக்கீங்க..‘
‘தாங்க்ஸ்..மேம். இங்க என்னோட குடில்ல..என் இடத்துல ஒங்கள பார்க்கறது ஆச்சரியமா இருக்கு.. எப்படி என் முகவரி கிடைச்சுது..’
‘அப்பா கிட்ட என்னைப் பத்தி நிறைய பாயின்ட் அள்ளி விட்டீங்களாமே..‘
‘நான் அப்சர்வ் பண்ணதை வெச்சு சில விஷயம் சொன்னேன்..‘
‘துணிச்சல்தான் உங்களுக்கு..சொசைட்டில அவ்வளவு பெரிய மனுஷர் கிட்ட, ஒங்க பொண்ணு கம்பீரம் மேதாவிலாசம்ன்னு எல்லாம் வர்ணிச்சு தள்ளி இருக்கீங்க…‘
‘ஒரு ஃப்ளோல வந்துடுச்சு..அதுக்காக சந்தோஷத்தில என்னைப் பார்க்க வந்துட்டீங்களா…‘ நெளிந்தான் அவன்.
‘ஆமாம் வழியாதீங்க ரொம்ப..அந்த அறிவாளி யார்ன்னு பார்க்க வந்தேன். அந்த பெண்மணி யாருன்னு கண்டுபிடிப்பேன்னு சொன்னீங்களாமே ரெண்டு நாள்ல.. அப்பா ஆர்வமா இருக்காரு.. ஏதாவது தெரிஞ்சுதா? அப்பா கேரக்ட்டரை டேமேஜ் பண்றா மாதிரி எதுவும் சொல்லிடாதீங்கன்னு ஒங்கள எச்சரிக்க தான் வந்தேன்’
‘ஒங்க தந்தையார் பெயருக்கு ஏற்றாற் போல் ராமன் தான்..‘
‘என்ன’
‘சரி ராமர் தான். இந்த கதையே வேற..‘
‘ஒங்க கதையை விடுங்க சாரி சொல்லுங்க கேட்கறேன்.‘
‘நீங்க பிசியானவங்க ஒங்க நேரத்தை வீணாக்காமல் சுருக்கமா சொல்றேன். இருபத்தைந்து வருஷத்துக்க்கு முன்னால நீங்க பொறந்தப்ப…‘
‘சந்தடி சாக்குல என் வயசைப் பத்தி தெரிஞ்சுக்கட்டதை சொல்றீங்களா’
‘சாரி..இந்த வருஷக் கணக்கு வம்பு வேணாம். ஒங்க அம்மா லட்சுமி தேவி மேடம், பட்டிமன்றப் பேச்சாளர் புரபசர் சரஸ்வதி மேடம் ரெண்டு பேரும் நெருங்கிய சிநேகிதிங்க ரெண்டு பேருக்கும் குழந்தை பாக்கியம் தள்ளிப் போச்சு..கிடைச்சப்ப ரெண்டு பேரும் ஒரே சமயத்துல…அப்பல்லாம் கர்ப்பிணிகள் ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்க கூடாதுன்னு ஒரு பழக்கம் இருந்த தால ரெண்டு பேரும் சந்திக்கல. ஆனா இரண்டு பெண்மணிகளும் ஒரே ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனாங்க. அது தற்செயல் தான். அப்ப ஒங்க தந்தையார் வெளிநாடு போயிருந்தாரு. ஒங்க மதருக்கு இரட்டைப் பெண் குழந்தைங்க சரஸ்வதி அம்மாவோட குழந்தை பிறந்த உடன் உலகம் பிடிக்காம போயிடுச்சு . ஆஸ்பத்திரியில இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் போது எந்த தாயும் செய்ய முடியாத ஒரு வேலையை ஒங்க அம்மா செஞ்சாங்க அவங்களோட ட்வின்ஸ் ல ஒரு குழந்தையை சரஸ்வதி அம்மா கிட்ட கொடுத்தாங்க..சரஸ்வதியும் அவங்க கணவரும் அவங்கள நன்றிப் பெருக்கோடு பார்த்தாங்க..ஒங்க அம்மா, பின்னால மனசு மாறிடப் போவுதுன்னு தோழியோட தொடர்பையும் துண்டிச்சுகிட்டாங்க..ஒங்களோட ஒங்க மதர் வயித்துல இருந்தவங்க தான் சரஸ்வதி அம்மாவோட பொண்ணு பவித்ரா..அவங்களோட காதலன் இளங்கோ – தென்றல் டிவில மேனேஜரா இருக்காரு…‘
மதுரிமா , சேலைத் தலைப்பைக் கையில் வைத்துக் கொண்டு சிரித்தாள்.
‘பவித்ரா ஏன் என்னை மாதிரியே இருக்கான்னு நானே கண்டுபிடிச்சுக்கறேன்.
நீங்க சொன்ன கதை நல்லா இருந்துச்சு.. நீங்க இந்த துப்பறிய தோழிலை விட்டுட்டு இளங்கோ சாரை பிடிச்சு டிவி சீரியலுக்கு கதை எழுதற வாய்ப்பு கிடைக்குதான்னு பாருங்க.. நான் வரேன்’
அவள் எழுந்து நின்றாள். வாசலை நோக்கி நடந்தாள் .
‘மேம் … நான் சொன்னதை நீங்க நம்பல. தினச்சுடர் தீபாவளி மலர்ல சரஸ்வதி அம்மாவோட பேட்டி வந்திருக்கு. பேட்டில ஒரு குறிப்பிட்ட பகுதியை உங்களுக்கு வாட்ஸ்அப்ல அனுப்பி இருக்கேன் பாருங்க’ என்றான் ஜெகன் . மதுரிமா இறங்கி நடந்தாள். காரில் அமர்ந்து ஓட்டத் தொடங்கினாள்.
மதுரிமா , அலுவலகத்தில் தன்னுடைய அறையில் அமர்ந்து இருந்தாள். அவளுடைய பிஏ ஷீலா அருகில் வந்து நின்றாள்.
‘ஷீலா , இந்த செக் லிஸ்டல இருக்கிற ஒர்க் எல்லாம் முடிச்சுட்டு எனக்கு மெசேஜ் பண்ணுங்க . அம்மா ஹாஸப்பிட்டல்ல அட்மிட் ஆயிருக்காங்க நான் போய்ப் பார்த்துட்டு முடிஞ்சா திரும்பி வரேன்’
‘ஓகே மேம்’
மதுரிமாவின் மொபைல் ஒலித்தது.
‘வரேன் டாடி வந்துகிட்டு இருக்கேன். அம்மாவுக்கு பிபி தான் அதிகம் ஆயிருக்கும் வேற ஒண்ணும் இருக்காது..நான் வரேன்..‘
மொபைலை மேசையில் வைக்கும் போது வாட்ஸ்அப் பார்த்தாள். ஜெகன்
அனுப்பிய சரஸ்வதி நாகபூஷணத்தின் பேட்டி….
‘உங்களால் வாழ்வில் மறக்க முடியாத நபர் யார்?
என்னுடைய உயிருக்கு உயிராய் இருக்கும் ஒரு தோழி . அவளுடைய பெயரைக் கூற முடியாது. சமூகத்தில் பெரிய மனிதர்களுள் ஒருவரின் மனைவி அவள். எனக்கு கிடைக்காத ஒன்றை அவள் எனக்குக் கொடுத்தாள். என் கணவரை மறந்த நேரம் உண்டு. ஆனால் என் தோழியை நினைக்காத நேரம் இல்லை.‘
அறையிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்த ஷீலாவை அழைத்தாள் மதுரிமா.
அவள் அருகில் வந்தாள்.
‘ஷீலா, டிவி பட்டிமன்ற நிகழ்ச்சியில நம்ம ஆபீஸ் ஆளுங்க பேசறாங்க இல்ல’
‘ஆமாம் மேம் ரெண்டு மூணு பேர் ரெகுலரா கலந்துக்கறாங்க அக்கவுன்ட்ஸ் ரமேஷ் , பர்ச்சேஸ்ல ராஜமாணிக்கம்…’
‘சரி அவங்க கிட்ட புரபசர் சரஸ்வதி மேடத்தோட வீட்டு அட்ரஸ் வாங்கி எனக்கு அனுப்புங்க..’
‘எஸ் மேம்’
மதுரிமா அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள்.
அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் சரஸ்வதியின் வீடு. நண்பகல் நேரம் . வீட்டு வாசல் திறந்திருந்த து. வீட்டுக் கூடத்தில் பருத்த தேகம் கொண்ட சரஸ்வதி சோபாவில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்து இருந்தார். அவரது கணவர் நாகபூஷணம் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார். அவர் பேசினார்
‘இந்த விஷயத்தை பேட்டில பூடகமா சொல்ல வேண்டிய அவசியம் என்ன பவித்ரா, என்ன என்ன ன்னு நச்சரிச்சு உண்மையை வாங்கிட்டா இல்ல பெத்த பிள்ளை இல்லையா ன்னு ரூம்ல உக்காந்து அழுதிகிட்டு இருக்கா..எப்படி சமாதானப்படுத்தப் போறே…’
நாகபூஷணத்தின் உரத்த குரல் வெளியே கேட்டது. வீட்டு அழைப்பு மணி ஒலிக்க, கணவனும் மனைவியும் திரும்பிப் பார்த்தனர்.
மதுரிமா நின்று கொண்டிருந்தாள்.
நாகபூஷணம் அழைத்தார்…
வாம்மா சாரி வாங்க…
சரஸ்வதி எழுந்து நின்றார். ‘வாங்க’ என்றார்.
‘என்னை ரெண்டு பேரும் வா போன்னே கூப்பிடலாம்..இத்தனை நாள் தெரியாம போச்சு அம்மா மூச்சு விடவே இல்ல இதைப் பத்தி எல்லாம்..‘
சரஸ்வதியும் நாகபூஷணமும் என்ன பேசுவது என்று பிடிபடாமல் மௌனம் காத்தனர். இளம் பெண்ணின் பேச்சுக் குரல் கேட்டு, அச்சு அசலாக மதுரிமாவைப் போல் இருந்த பவித்ரா, அருகில் இருந்த அறையிலிருந்து வெளிப்பட்டாள்.
சரஸ்வதி தயக்கத்துடன் பேசினார்
‘பவி இவங்க இவ உன்னோட…’
மதுரிமாவையே பார்த்துக் கொண்டிருந்த பவித்ரா, சில நிமிடங்களில் அவளை ஆரத் தழுவிக் கொண்டாள். கண்ணீர் விட்டாள்.
‘ஒண்ணும் இல்ல அதான் எல்லாரும் ஒண்ணு சேர்ந்துட்டோம் இல்ல..உணர்ச்சி வசப்படாதே…அம்மா…அம்மாவை அப்பா ஹாஸ்பிட்டல்ல சேர்த்து இருக்காரு பவித்ராவை அழைச்சுகிட்டு போகட்டுமா?’
‘நாங்களும் வரோம் வா போகலாம்’ என்றார் சரஸ்வதி. பவித்ரா, மதுரிமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
தென்றல் மருத்துவமனையின் ஓர் அறையில் மதுரிமாவின் தாய் லட்சுமி தேவி கட்டிலில் படுத்திருந்தார். அருகில் அவரது கணவர் ராம மூர்த்தி. லட்சுமி தேவியின் வெள்ளைக் கூந்தலை வருடினார்.
‘மனசுக்குள்ளேயே போட்டு போட்டு புழுங்கி நாற்பத்தைந்து வயசுல கூந்தல் நரைச்சுப் போச்சு…‘
‘எனக்கு வெள்ளைக் கூந்தலாவது மிஞ்சியது உங்களுக்கு அதுவும் இல்லையே … ஐம்பது வயசுல..’ புன்னகைத்தார் லட்சுமி தேவி.
‘வயசுக் கணக்கு எதுக்கு இப்ப..‘
‘நீங்க தானே நாற்பத்தைந்து ன்னு ஆரம்பிச்சீங்க…என்னை மன்னிச்சிட்டிங்களா? தாம்பத்ய தர்மத்தை, கணவன் மனைவி இடையே உள்ள நம்பிக்கையை நான் மீறிட்டேனே என்னை மன்னிச்சிட்டிங்களா’
‘மன்னிக்க்காம தான் உனக்கு பணிவிடை செஞ்சுகிட்டு இருக்கேனா ஆபீசுக்கு போகாமல் உன் கூடயே இருக்கேன் உனக்கு புரியலயா’
‘புரியுதுங்க..‘
‘என்கிட்ட சொல்லி இருந்தா வேணாம்னா சொல்லி இருக்கப் போறேன். சரி குற்ற உணர்ச்சி வேண்டாம் விடு’
ராம மூர்த்தி மனைவியின் வலக் கரத்தை தன்னுடைய விரல்களுடன் பின்னிக் கொண்டார்.
மதுரிமா உள்ளே நுழைந்தாள்.
‘என்னப்பா அம்மா உடம்புல தெம்பு வந்துட்டதும் ரொமான்சா?‘
கேட்டாள் மதுரிமா . ராம மூர்த்தி தமது விரல்களை விடுவித்துக் கொண்டார்.
‘இதுல என்ன டாடி..எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது இந்நாடே…பாரதி பாடி இருக்காரு நான் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருப்பது இந்நாடு ன்னு மாத்திப் பாடறேன்.‘
‘இங்க பாட வேண்டாம் இது ஹாஸ்ப்பிட்டல்’ என்றார் ராம மூர்த்தி.
‘கிண்டலா…ப்பா…அம்மா யார் வந்திரு்காங்கன்னு பாரு..‘
இப்பொழுது அந்த அறைக்குள் சரஸ்வதி, நாகபூஷணம், பவித்ரா ஆகியோர் வந்தனர். பவித்ரா லட்சுமி தேவியின் கைகளைப் பற்றிக் கொண்டாள். சரஸ்வதி லட்சுமி தேவி அருகில் சென்றார். ராம மூர்த்தி, நாகபூஷணத்துடன் கை குலுக்கினார்.
மதுரிமாவின் மொபைல் சிணுங்கியது. அவள் அறையை விட்டு வெளியே வந்தாள். மருத்துவமனை தாழ்வாரத்தில் ஆள் அரவம் இல்லாத இடத்தில் நின்று கொண்டு பேசினாள்.
‘சொல்லுய்யா துப்பறியும் சாம்பு…’
‘என்ன ரொம்ப மரியாதை யோட யா சொல்றீங்க அப்புறம் டா ன்னு சொல்லிடுவீங்க போல..மேம் நான் சொன்னது கரெக்ட்டா இல்லையா?’
‘இது என்ன தீபாவளி மலர்ல படிச்சதை எடுத்து சொல்லி துப்பறிஞ்சதா போங்கு பண்ணி இருக்கே..’
‘அய்யோ அப்ப எனக்கு மீட்டர் கிடையாதா?’
‘அல்பம் எங்க கம்பெனி பத்தி உனக்கு தெரியாதா?‘
‘தெரியுமே..முதலாளி அம்மா மாதிரி இருக்கற பொண்ணு லவ்வர் கூட இருக்கும் போது போட்டோ எடுத்து அதை அவங்க அப்பா கேபின்ல வைக்கிற ஆளுங்க இருக்கும் ஆபீஸ் இல்ல ஒங்க ஆபீஸ்…நல்ல வேளை எடுத்தவன் இதை சோசியல் மீடியா ல போடாம விட்டான்…‘
‘நீ சொல்றது சரிதான் அந்த களவானி யாருன்னு கூட கண்டுபிடிச்சு சொல்லிடுவே போலிருக்கே . ஆனா அந்த வேலையை பார்த்தவனை இந்த தடவை நான் மன்னிச்சு விட்டுட்டேன் ஏன் னு கேளுய்யா’
‘ஏன் மேம்..‘
‘ஏன்னா என் கூடவே குடியிருந்த கோயில்ல இருந்த என் தங்கை கிடைச்சு இருக்கா..‘
‘நானும் கிடைச்சு இருக்கேன்..‘
‘என்னய்யா சொல்றே..‘
‘இல்ல என்னை மாதிரி ஒரு மதிநுட்பம் உள்ள டிடெக்ட்டிவ் ஒங்க நிறுவனத்திற்கு கிடைச்சதை சொல்ல வந்தேன்..‘
‘சரி சாம்பு , நீ இன்னொரு வேலை செய்யணும்..பவித்ராவோட ஆள பார்த்து சரஸ்வதி அம்மாவோட வீட்டுக்கு போய் பெண் கேட்க சொல்லு’
‘இதெல்லாம் நீங்க கொடுத்த அசைன்மென்ட் ல வராதே…ஒங்க தங்கச்சியே அவர்கிட்ட சொல்ல லாமே..‘
‘யோவ் அவன் தட்டிக் கழிக்கறான் யா..நீ போய் பேசு…’
‘யோவ்வா..சரி நீங்க சொன்னதால அவரைப் பார்த்து பேசிட்டு வரேன்..இவ்ளோ பெரிய குரூப் முதலாளி பொண்ணு தெரிஞ்சா ஓடோடி வந்து பொண்ணு கேட்க போறாரு…‘
‘எங்களுக்கும் பவித்ராவுக்கும் உள்ள உறவு பத்தி எல்லாம் இப்போதைக்கு மூச்சு விடாதே’
‘சரி ஒங்கள பெண் கேட்டு வரணுமா?‘
‘என்ன’
‘இல்ல ஒங்க ஆள் யாருன்னு சொன்னீங்கன்னா அவரைப் பார்த்து வெத்திலை பாக்கு பூ பழத்தோட பெண் கேட்க ஒங்க வீட்டுக்கு வர சொல்வேன்…’
‘அப்படியா..அப்ப நீயே வா..’
‘நானா….’
‘என்னய்யா ஆச்சு?’
‘அதிர்ச்சியில கீழே விழுந்துட்டேன் .. நீங்க நிற்கிற மருத்துவமனை தாழ்வாரத்துல மூலைல இருக்கேன் பாருங்க வாங்க தூக்கி விடுங்க..’
ஜெகன் அருகில் ஒரு மூதாட்டி வந்தார்.
‘எழுந்திருப்பா..விழுந்தா எழுந்திருக்க முடியல..என்ன பசங்க இந்த காலத்து பசங்க’ மூதாட்டி கை கொடுத்தார். ஜெகன் எழுந்து நின்றான். மதுரிமா இந்தக் காட்சியைப் பார்த்து சிரித்தாள் .
மதுரிமா , தன்னுடைய அலுவலக அறையில் மும்முரமாகப் பணியில் ஈடுபட்டிருந்தாள். அவளூடைய பி.ஏ ஷீலா வந்து நின்றாள்.
‘சொல்லுங்க ‘
‘மேம் ஒங்க ப்ரெண்ட் போலீஸ் ஆபீசர் பவானி வந்து இருக்காங்க’
‘சனிக்கிழமை ன்னா அவ தவறாம வந்திடுவாளே வரச் சொல்லுங்க’ என்று புன்னகை பூத்தாள் மதுரிமா. ஷீலா சென்றாள்.
பருமானான தேகம் கொண்ட இளம்பெண் பவானி உள்ளே வந்தாள்.
‘வாடி போலீஸ் காரி…சாரி ஏசி மேம் வாங்க..‘
மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள் மதுரிமா .
‘என்னடி ஃபுல் ஃபார்மல இருக்கே போல..‘
‘அப்புறம் சௌக்கியமா? எப்ப கல்யாணம்?‘
‘ஒன்கிட்டே சொல்லாம கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். டீ எதுவும் ஆபர் பண்ண மாட்டியா?‘
‘ஷீலா’ என்றழைத்தாள் மதுரிமா. ஷீலா வந்தாள்.
‘மேம் இங்க இருக்கிற அசிஸ்டன்ட் கல்யாணம் இன்னிக்கு வரல. சிஎம்டி யோட உதவியாளர் கோபாலை வரச் சொல்லட்டுமா?‘
‘வேணாம். அப்பா தேடும் போது ஆள் இருக்கிறது இல்லன்னு சொல்லிகிட்டு இருக்காரு’
‘நான் வேணா…’
‘சேச்சே…நாங்க ரெண்டு பேரும் கேன்டீன் போய்ட்டு வரோம்..நடக்கிறது பவானிக்கு நல்லதுதான்…’
‘என்னடி ஒன்னோட பிஏ எதிரே கலாய்க்கறே..’
‘கிண்டலடிக்க கூடாதா? வா போகலாம். ஷீலா, சிஸ்டர் பவித்ரா வருவா உட்காரச் சொல்லுங்க…’
இருவரும் சென்றார்கள். பவித்ரா எதிர்ப்பட்டாள்.
‘பவித்ரா, இவங்க பவானி அசிஸ்டன்ட் கமிஷ்னர் என்னோட ப்ரெண்ட்’
மதுரிமா அறிமுகப்படுத்தினாள். பவானியிடம் இவங்க என் தங்கை என்றாள். பவித்ரா வணக்கம் என்று பவானியுடன் கை குலுக்கினாள். பவித்ரா நான் உன் கேபின்ல இருக்கேன் என்று கூறி நகர்ந்தாள்.
‘உன் சீட்ல பவித்ரா இருந்தால் எல்லாரும் நீன்னு நெனச்சுடுவாங்க…இவ்ளோ பெரிய ஆள் நீ..எப்பவும் சாரில தான் இருக்கே வேற ட்ரெண்டி ட்ரெஸ் போட மாட்டேங்கற ஆச்சரியப்படுத்தறே..‘
மதுரிமாவும் பவானியும் நடந்து கொண்டே பேசினார்கள்.
‘நீ போலீஸ் சீருடைல ரொம்ப கெத்தா இருக்கே…’
‘என்ன நான் பேசினதுக்கு கவுன்ட்டரா சரி என் காதுல காத்து வாக்கில் வந்த செய்தி உண்மையா? இவ்வளவு பெரிய பிசினஸ் சாம்ராஜ்யத்தைப் பார்த்துக்கற நீ , சாதாரண நிலையில் இருக்கிற டிடெக்ட்டிவ் ஆளை லவ்வரா ஏத்துகிட்டியாமே..’
‘உன் காதுக்கு எட்டிடுச்சா நியுஸ்? நான் யோசிக்காம எதையும் செய்ய மாட்டேங்கறது உனக்கு தெரியும்..காதல் வந்தது உண்மைதான்..அது ஒரு பக்கம் இருந்தாலும் இது ராதா பார்முலா..அதுக்கு ஏத்தவரை நான் செலக்ட் பண்ணி இருக்கேன்…’
‘என்னடி சொல்றே..அது என்ன ராதா பார்முலா?‘
‘நம்ம ஸ்கூல்மெட் ராதா..தெரியும் இல்ல அவங்க அப்பா எங்க அப்பா மாதிரி இன்டஸ்ரியலிஸ்ட் அவ பேமஸ் பரத நாட்டியம் டேன்சராகணும்னு விரும்பினா அந்த இலட்சியத்துல ஜெயிச்சு இப்ப நாட்டியத்துல ஓகோன்னு வந்துட்டா..ராதா மூர்த்தி ன்னு உலகம் முழுக்க சுத்தி பெர்பாமன்ஸ் பண்றா..அவளோட கணவர் மூர்த்தி, ப்ரீலான்ஸ் ரைட்டர்ன்னு அவ பேட்டில எல்லாம் சொல்லிக்கறா ஆனா எனக்கு தெரிஞ்சு அவர் வீட்டுக் கணக்கு தான் எழுதுவாரு..‘
‘புரியல என்னடி சொல்ல வரே..‘
‘பவானி..அதான்டி வசதியான பணக்கார குடும்பத்துல பொறந்த பொண்ணு ராதா, அவ விரும்பி இருந்தா பெரிய அரசாங்க அதிகாரியையோ தொழில் அதிபரையோ இலட்சக்கணக்குல சம்பாதிக்கற டாக்டரையோ சாப்ட்வேர் எஞ்சினியரையோ வக்கீலையோ கல்யாணம் பண்ணிகிட்டு இருக்கலாம். இல்ல கோடிக்கணக்குல சம்பாதிக்கற செலிபிரிட்டியையோ கை பிடிச்சு இருக்கலாம். அதை அவ செஞ்சி இருந்தால் அவளோட இலட்சியம் குறிக்கோள் நிறைவேறி இருக்காது… அதனால தான் மூர்த்திங்கற ரைட்டர்னு சொல்லிக்கறவரை அவ தேர்ந்தெடுத்தா… மூர்த்தி, அவளோட ட்ராவல் பிளான், விசா வாங்கறது எல்லாம் பாத்துக்கறாரு.. குழந்தையை பார்த்துக்கறாரு குடும்ப நிர்வாகத்தை , நிதி நிர்வாகத்தை பார்த்துக்கறாரு அவளையும் தான்…’
‘நீ சொல்றபடி இருக்கறவங்கள நான் ஸ்கூல் டேஸ்லய ஓரளவு பார்த்து இருக்கேன். உதாரணமா..எங்க பேமிலி டாக்டர் கண்ணம்மா அப்படித்தான்…இதுக்கு பேரு ஹவுஸ் ஹஸ்பெண்ட் கான்செப்ட் இது ஒன்ன மாதிரி ப்ரொபைல் உள்ளவங்களுக்கு எப்படி செட் ஆகும்?‘
‘ஆமாம் பிசினஸ்ல கொடி கட்டிப் பறக்க ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கிட்டா அவர் ஒரு பக்கம் ஓடிகிட்டு இருப்பாரு. நான் ஒரு பக்கம் எங்க கம்பெனி வேலையில மும்முரமாக இருப்பேன்.. உடைச்சு சொல்லணும்னா காதலிக்க நேரமில்லை ங்கற நிலையில போய் முடியும்…’
‘புதுசா சொல்றே பிக் ஷாட்ஸ் யாரும் திருமண வாழ்க்கையில இல்லையா வம்ச விருத்தி பண்ணாமலா இருக்காங்க காலம் காலமா…உன்னுடைய நலம் விரும்பியா சொல்றேன். இப்பவும் நேரம் இருக்கு உன்னோட ஸ்டேச்சருக்கு ஏத்தா மாதிரி பொருத்தமான ஆளை தேர்ந்தெடுத்துக்கோ..பார்க்க வந்துட்டு பர்சனல் விஷயத்துல மூக்கை நுழைக்கிறன்னு நீ நெனச்சாலும் பரவாயில்ல…’
இருவரும் கேன்டீனுக்குள் நுழைந்தார்கள். கேன்டீன் உரிமையாளர் சதாசிவம் நாயர் ‘வாங்க மேடம்’ என்று வரவேற்றார். அவருடைய தம்பி மதுசூதனன், ‘வணக்கம் மேடம்’ என்றான். வட்டமேசை அருகில் இருவரும் நின்றனர்.
‘ஏண்டி இங்க உட்கார்ந்து டீ குடிக்க வசதி செய்யக் கூடாதா?‘
‘இங்க நாற்காலி ஸ்டூல் போட்டா இங்கேயே இருப்பாங்க..இப்படி இருந்தா டீயை குடிச்சுட்டு ஒர்க் ப்லேசுக்கு போயிடுவாங்க..‘
‘அது சரி..முதலாளி அம்மா நீயே நின்னுக்கிட்டு இருக்கணுமா?‘
சதாசிவம் நாயர், தேநீர்க் கோப்பைகளை மேசையில் வைத்தார். இருவரும் தேநீர் பருகினர். மதுரிமா, சதாசிவம் நாயரின் முக்கத்தைக் கவனித்தாள்.
‘என்ன சதாசிவம் சார் நான் வந்தா எப்பவும் கலகலன்னு ஏதாவது பேசுவீங்க இன்னிக்கு என்ன ஆச்சு’ கேட்டாள் மதுரிமா .
‘அதெல்லாம் ஒண்ணும் இல்ல மேடம் லேசா தலைவலி’ என்றார் அவர். அவருடைய தம்பி அங்கிருந்து நகரப் பார்த்தான்.
‘மதுசூதனா நில்லு ஏன் பம்மறே..என்ன நடந்துச்சு..’
‘மேடம்..’
‘சொல்லுப்பா’ அதட்டினாள் மதுரிமா.
‘அம்மா..இங்க நம்ம ஆபீஸ்ல அக்கவுன்ட்ஸ்ல ராஜு ன்னு இருந்தாரு..‘
‘அவருக்கு என்ன’
‘ அவரு நம்ம ஆபீஸ் ஆளுங்க கிட்ட தீபாவளி சீட்டுன்னு பணத்தை ரொக்கமா வசூல் பண்ணிட்டு கம்பி நீட்டிட்டாராம்..அவருக்கு அண்ணன் வீடு பார்த்துக் கொடுத்த காரணத்தால அவரு எங்கேன்னு சொல்லுன்னு இன்னிக்கு காலைல மேனேஜர் ரவிச்சந்திரன் இவர் கிட்ட நச்சரிச்சாரு..அடிக்கவும் அடிச்சிட்டாரு..சில ஊழியர்கள் வந்து தடுத்து அண்ணன காப்பாத்தினாங்க..‘
‘என்ன சதாசிவம் சார் இவ்வளவு நடந்து இருக்கு..என் கிட்ட வந்து சொல்ல வேண்டாமா?’
‘மன்னிச்சிடுங்க மேடம்’ என்றார் சதாசிவம். அவரும் அவருடைய தம்பியும் அங்கிருந்து நகர்ந்தனர்.
பவானி பேசினாள் – ‘மதுரிமா என்னடி இது ஒன்னோட ஆபீச நீ டிசிப்ளின்ட் ஆக வெச்சிருப்பே…அங்கேயா இப்படி…’
‘ஆமாம் எப்பவும் ஒழுக்கமா இருந்தா போரடிக்க்கும் இல்ல அதனால இந்த ஒழுங்கீனம்…’
‘சாரி மது…’
‘நீ ஏன் சாரி சொல்லணும் வா போகலாம்’ என்றாள் மதுரிமா. இருவரும் அங்கிருந்து சென்றனர்.
மதுரிமா, தன்னுடைய அலுவலக அறைக்கு வந்தாள். ஷீலா அவள் இருக்கை அருகில் நின்று கொண்டிருந்தாள்.
‘என்ன சொல்லுங்க’ குரலில் கடுமை தொனிக்க கேட்டாள் மதுரிமா.
‘சாரி மேம்..ஒங்க கிட்ட சொல்லணும்னு நெனச்சேன் அதுக்குள்ள ஒங்க தோழி வந்துட்டாங்க..‘
‘நான் ஆபீஸ் வர்றத்துக்குள்ளே மெசேஜ் ஆவது அனுப்பி இருக்கலாமே..இப்ப பவானி எதிரே சிரிச்சு போச்சு..உன்னோட ஒழுங்கான நிர்வாகத்துல இப்படியான்னு கேட்டுட்டா’
‘மேம் சாரி மேம்..’
‘சரி விடுங்க திரும்ப திரும்ப சாரி சொல்லாதீங்க..ஆக வேண்டியதை பாருங்க ஆபீஸ்ல சீட்டு நடத்தினாலும் எம்எல்எம் பிசினஸ் நடத்தினாலும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்ன்னு சர்க்குலர் ரெடி பண்ணுங்க உடனே…சரி..பெண் ஊழியர்களுக்கான கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம் ஏற்பாடு எந்த அளவில் இருக்கு…ஞாயிற்றுக் கிழமைன்னு நீங்க ஆலோசனை சொன்னீங்களாமே’
‘பீமேல் ஸ்டாப் சொன்னாங்க மேம்..’
‘பாதி பேர் கூட வர மாட்டாங்க…சனிக்கிழமை ல ஷெட்யூல் பண்ணுங்க’
‘சரி மேம்..எச் ஆர் மேனேஜர் ரவிச்சந்திரன்…‘
‘அவனை விட்டுத்தான் பிடிக்கணும்’
‘இல்ல அவரு சிஎம்டி கிட்ட பத்து நாள் லீவு சொல்லிட்டு கிளம்பிட்டாரு..’
‘அப்பாவுக்கு…’
‘சிஎம்டிக்கு எல்லாம் தெரியும்…அவர், ரவிச்சந்திரன் கிட்ட எதுவும் கேட்காம அனுப்பிட்டாருன்னு சொல்றாங்க..’
‘சரி நான் அப்பா கிட்ட பேசிக்கறேன்.. நீங்க சிஸ்டர் பவித்ராவை ஹெச் ஆர் டிபார்ட்மென்ட் க்கு அழைச்சுட்டுப் போங்க அவங்கள அங்க சார்ஜ் எடுத்துக்க சொல்லுங்க’
‘சரி மேம்’
ஷீலா சென்றாள்.
மதுரிமாவின் கைபேசி ஒலித்தது . ஜெகன் பேசினான்.
‘வணக்கம் மேம்..’
‘ஆபீஸ் நேரத்துல பேசாதேன்னு சொன்னா கேட்க மாட்டியா… ‘மேலும் பல வார்த்தைகளைக் கொட்டி அவனைப் பொரிந்து தள்ளினான்.
‘ஹலோ மேம் நான் கொஞ்சறதுக்கு கூப்பிடலை.. ஒங்க ஆபீஸ் கேன்டீன்ல நடந்த ரகளை , மாலைச் செய்தி மடல் வெப்சைட்ல வந்திருக்கு…’
‘என்னய்யா சொல்றே.. ஏன் கோபிச்ச்க்கறே…’
‘ஊழியர்கள் இடையே தீபாவளிச் சீட்டு மோசடி.. இன்று காலை எம்.கே. குரூப் கேன்டீனில் கேன்டீன் உரிமையாளருக்கும் கம்பெனி மேலாளருக்கும் இடையே கைகலப்பு….’
‘அய்யிய்யோ.. அதுக்குள்ள எப்படியா மீடியாவுக்கு நியுஸ் போச்சு..’
‘எனக்கு என்ன தெரியும்?’
‘நீ டிடெக்ட்டிவ் கரெக்ட்டா சொல்லிடுவியே.. சரி போகட்டும்.. மார்னிங் பேப்பர்ல ல, வேற மீடியாவுல பரவாம பாத்துக்கோயா ப்ளீஸ்..’
‘வேலை ஆக்கணும்னு குழையறீங்களா.. எனக்குத் தெரிஞ்ச சோர்ஸ் ல எல்லாம் சொல்லி வைக்கறேன்… ‘போன தடவை பேமென்ட்டே எனக்கு வந்து சேரலை..’
‘ யோவ் நான்தான் என்னையே உனக்கு கொடுத்துட்டேன் அப்புறம் என்ன..’
இதை சொல்லியே ஓட்டிகிட்டு இருக்கீங்க மேம் சாப்… ஒங்க ஆபீஸ்ல திங்க்ஸ் அவுட் ஆப் கன்ட்ரோல் ல போவுது பார்த்துக்கங்க…
‘சரி.. தாங்க்ஸ் ஜெகன்… வெச்சுட்டியா..’
மதுரிமா தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தாள்.
மாலை நேரம் . காபி ஷாப்பில் ஜெகன் அமர்ந்து இருந்தான். சில நிமிடங்களில் மதுரிமா அங்கே வந்தாள். அருகில் அமர்ந்தாள்.
‘குட் ஈவினிங் மேம் வாங்க ‘
‘என்னய்யா ஒரு வாரமா அழைப்பு இல்ல மெசேஜ் இல்ல இப்ப திடீர்ன்னு போன் பண்ணி இங்க வரவழைச்ச்சிருக்கே… என்ன..’
‘சொல்றேன் சொல்லாமலா இருக்கப் போறேன்.. கோல்டு காபி வருது அதை அருந்திகிட்டே கூலா கேளுங்க…’
காபி ஷாப் ஊழியர் , கோல்டு காபியை மேசையில் வைத்தார். ஒரு கோப்பையை மதுரிமாவின் அருகில் நகர்த்தி வைத்தான் ஜெகன்.
‘மதுரிமா மேம்.. நீங்க பெரிய மனசு பண்ணி ஒங்க மனசையே எனக்கு கொடுத்திட்டிங்க..திருப்பி கொடுக்க வேண்டிய கட்டாயத்துல நான் இருக்கேன் ‘
அவளுடைய முகத்தைப் பார்க்காமல் பேசினான்.
‘என்ன உளர்றே?’
‘உண்மையை எடுத்துச் சொல்ல முயற்சி செய்யறேன்..’
‘ஏதாவது பேசி டைவர்ட் பண்ணாதே எங்க ஆபீஸ்ல நடந்த பிரச்சினைக்கு காரணம் கண்டுபிடிக்கறேன்னு சொன்னியே என்ன ஆச்சு ?’
‘காரணம் நீங்க ன்னு சொல்லணும் இல்ல நான்னு சொல்லணும் ‘
‘இந்த காபியை ஒன் மூஞ்சில ஊத்திடுவேன்..’
‘காதல் கத்தரிக்காய் ன்னு எதுவும் இல்லாமல் யங் ஏஜ்ல கடுமையா உழைச்சு ஒங்க அப்பாவோட பிசினச தூக்கி நிறுத்தினீங்க..நீங்க ஒர்க்ஹாலிக்காவே இருந்திடுவீங்கன்னு பலரும் கணக்கு போட்டாங்க..’
‘இதெல்லாம் எதுக்குப்பா..’
இருங்க என்னை மாதிரி லோ ப்ரொபைல் ஆள நீங்க தேர்ந்தெடுத்துட்டிங்கற விஷயம்..’
‘எதுக்கு சுத்தி சுத்தி வரே போரடிக்குது நான் வேலையை எல்லாம் அப்படியே போட்டு வந்திருக்கேன்..’
‘அந்த கருணைக்கு நன்றி.. ஒங்க காதுல போட வேண்டிய விஷயத்தை எல்லாம் கொட்டிடறேன். ராஜு வை ஆபீஸ்ல ஊழியர்கள் கிட்ட சீட்டு நடத்த வைச்சது அவனை தலைமறைவாக வெச்சுது , கேன்டீன் ஓனரை அடிச்சது , மாலைச் செய்தி ல நியுஸ் போட வெச்சது எல்லாம் ஒரே நபரோட கைவரிசை.. எச் ஆர் மேனேஜர் ரவிச்சந்திரன்… எதுக்காக இதெல்லாம் செஞ்சார்ன்னு கேட்டீங்கன்னா ஒங்க அப்பா மிடில் கிளாஸ் லெவல்ல இருந்தப்ப ரவிச்சந்திரனோட அப்பாவும் ஒங்க டாடியும் நண்பர்கள் . அந்த நட்பின் காரணமாகத்தான் ஒங்க அப்பா , ஒங்கள ஃபோர்ஸ் பண்ணி வேலைல வெச்சாரு நீங்க அவரை எச் ஆர் ல உட்கார வெச்சீங்க.. அவரு எப்படியாவது ஒங்கள மடக்கி ஒங்களுக்கும் ஒங்க ராஜ்யத்துக்கும் ராஜாவாக ஆயிடலாம்ன்னு பார்த்தாரு. அது நடக்கலை நீங்க என்னை செலக்ட் பண்ணிட்டீங்க ங்கறதுக்காக ஆபீஸ் டெகரம் கெடுத்து சிட் மாதிரி வேண்டாத விஷயங்கள்ல ஸ்டாப அட்ராக்ட் ஆக வெச்சாரு.. ஒங்க ஊழியர்கள வெச்சே ஒங்கள பத்தி காசிப் பேச வச்சாரு.. இப்ப ஸ்டாப் பறி கொடுத்த பணத்தை மீட்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலைன்னு மீடியால நியுஸ் போட வெச்சாரு..’
‘இவ்வளவு தானா இன்னும் இருக்கா..’
‘இது ஒங்களுக்கு அதிர்ச்சி தரலையா மேம்…’
‘ஆண் மயிலோட ஆட்டத்துக்கு பெண் மயில் மயங்கும் ஆனா அதுக்கு பிடிச்ச இணையாக இருக்கிற ஆண் மயிலோட ஆட்டத்துல தான் அது கிறங்கிப் போகும்.. என் பர்சனல் லைப் பத்தி பேச என் ஊழியர்கள் உட்பட யாருக்கும் உரிமை கிடையாது. ஆனா , பேசாமல் இருக்க மாட்டாங்க தூண்டி விட ரவிச்சந்திரன் மாதிரி ஆளுங்க இருக்கும் போது.. இப்படி எல்லாம் என்னையோ என் நிறுவனத்தையோ டீஸ்டப்ளைஸ் பண்ணி விட முடியும்ன்னு நீ நெனக்கிறியா.. ‘ஜெகனின் முகத்தைப் பார்த்தபடியே பேசினாள் மதுரிமா.
எனக்குன்னு எந்த இலட்சியமும் கிடையாது . ஒங்க வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கப் போகிற ஆண்மகன் நான்தான்.. இந்த மகாராணிக்கு ஏத்த ராஜாவா மந்திரியா காதலனா காவலனா கணவனா இருக்கப் போவது நான்தான் ன்னு நீ பேசினே… சும்மாவா அதெல்லாம்..’
உருக்கம் காட்டினாள் மதுரிமா .
‘இல்ல.. நீங்க சொன்னா மாதிரி சப்போர்ட்டிவ் ஆன கணவனா நான் இருப்பேன் இருக்க முடியும்.. ஆனால் , வம்பு எழுந்து ஒங்கள பத்தி ஒங்க கம்பெனில ஒங்க ஆளுங்களே பேசும்போது… அதை நினைக்கும் போது..’
‘இந்த பெரிய இடத்துப் பொண்ண விட்டு விட்டு ஓடிலாம்ன்னு தோணுது.. அதுதானே… இந்த மாதிரி எண்ணத்தை விடு.. இனிமேல் இது மாதிரி பேசற வேலை வெச்சுக்காதே….. சரின்னு சொல்லுயா..’
‘சரிங்க மேம் . இனிமேல் அப்படி பேச மாட்டேன்.. கொஞ்சம் சிரிங்களேன். ‘என்றான் ஜெகன். காபி ஷாப்பின் உள்ளே வந்த பவித்ரா , அவர்கள் இருந்த மேசை அருகில் வந்தாள். இருக்கையில் அமர்ந்தாள்.
‘என்ன அக்கா என்ன சொல்றாரு என்னோட வருங்கால மாமா ?’
‘க்கும்.. சொல்றாரு சுரைக்காய்க்கு உப்பில்லை ன்னு.. நீ என்ன இங்கே ஒங்க ஆளு வந்துகிட்டு இருக்காரா?’
‘ஷீலாவும் நானும் தான் வந்தோம் அவங்க ஒன்ன பார்த்துட்டு மேம் இருக்காங்க நான் வரலைன்னு ஓடிட்டாங்க.. எனக்கு ஆர்ட்ர் பண்ணு..’
‘தங்கை கேட்கறா இல்ல ஆர்டர் பண்ணுங்க.. ஒங்களத்தான் ‘ என்றாள் மதுரிமா .
‘என்னைத்தானா..என்ன தங்கச்சி எதிரே மரியாதையா… ‘ஜெகன் கேட்டான் . ‘என்ன அக்கா தங்கச்சி.. மரியாதை…’
‘அது ஒண்ணும் இல்ல பவித்ரா கிட்ட மரியாதை வேணாம் நீ வா போன்னே பேசிங்கன்னு சொன்னேன் அதை சொல்றாரு இவரு..’
‘கில்லாடி அக்கா இவரு கில்லி மாதிரி வேலை செஞ்சு இருக்காரு.. அந்த ராஜுவை தேடி கண்டுபிடிச்சு பத்து இலட்சம் பணத்தை மீட்டுக் கொண்டு வந்துட்டாரு.. ‘என்றாள் பவித்ரா .
மதுரிமாவின் விழிகளில் வியப்பு .
‘என்னென்னவோ அளந்தே அளந்தீங்க இதை நீங்க சொல்லமா விட்டீங்க கள்ளர் ‘
‘சொல்லணும் நெனச்சேன் . நம்ம உரையாடல் ட்ராக் வேற டாபிக்ல போயிடுச்சே.. அவன் மெட்ராச விட்டு போயிருக்க மாட்டான்னு என் உள் உணர்வு சொல்லிக்கிட்டு இருந்தது . கிண்டில அவனை தற்செயலா பார்த்தேன். அவனை பாலோ பண்ணினா அவன் ஒரு வீட்டு மாடி ரூம்ல தங்கி இருக்கான்னு தெரிஞ்சுது.. அவனோட கெட்ட நேரம் அந்த வீட்டுக்கு பக்கத்து வீடு ஒங்க ப்ரெண்ட் போலீஸ் அதிகாரி பவானி யோட சொந்தக்காரங்க வீடு அவனை கையும் களவுமா பிடிச்சு ஏசி மேடத்தை வரவழைக்கட்டுமா ன்னு கேட்டேன் . இந்தாங்க பணம் என்னை ஆள விட்டுடுங்க ன்னு சொன்னான். ரவிச்சந்திரன் தான் அவனை ஆட்டுவிக்கிறார்ன்னும் சொன்னான்…. ‘கூறி முடித்தான் ஜெகன்.
‘பார்த்தியா அக்கா ‘ வியந்தாள் பவித்ரா.
‘சரி பணம் எங்கே ‘
‘என் கிட்ட தான் கொடுத்து வெச்சு இருக்காரு . என்ன செய்யணும்னு நீதான் சொல்லணும்.. நீ தானே எங்க எல்லாருக்கும் பாஸ் இவர் உட்பட’
‘இது வேறயா.. ஸ்டாப் பணம் நாம ஏன் வெச்சுகிட்டு இருக்கணும்..அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்ட் ல யாரோ ஸ்டாபோட சீட்டுக் கணக்கும் எழுதி வெச்சி இருக்காங்க ன்னு ஷீலா சொன்னாங்க.. யாருக்கு எவ்வளவு சேரணும்னு பார்த்து நீயே கொடுத்துடு ‘ என்றாள் மதுரிமா.
‘பார்த்தீங்களா பவித்ரா மேம் எந்த மாதிரி பிரமாதமான வேலை செஞ்சாலும் ஒங்க சிஸ்டர் கிட்டேந்து ஒரு தாங்க்ஸ் கூட வராது.. ‘என்றான் ஜெகன்.
‘ஏன் அக்கா அவரை ஏங்க விடறே.. சீக்கிரம் அவரை ஏத்துக்க அப்பா கிட்ட பேசு.. ‘என்றாள் பவித்ரா.
‘கல்யாணத்தைப் பத்தி யோசிக்க ஒங்க அக்காவுக்கு எங்கே நேரம் ? ‘என்றான் ஜெகன் .
மதுரிமா சொன்னாள் ‘ கல்யாணத்தை பத்திதான் யோசிச்சுகிட்டு இருக்கேன்.’
‘அப்படியா ‘ ஜெகன் முகத்தில் பிரகாசம் .
‘ஆமாங்க ஆபீஸ்ல என் கேபின்ல உதவியாளரா இருந்த கல்யாணம் பத்து நாளா ஆபீசுக்கு வரலை லீவும் கேட்கல.. அவன் என்ன வில்லங்கம் பண்ணி வெச்சு இருக்கானோ அதை பத்தி நீங்க தான்…. ‘சொன்னாள் மதுரிமா.
‘அய்யிய்யோ நான் வரலை இந்த ஆட்டத்துக்கு ‘ என்றபடியே ஜெகன் இருக்கையை விட்டு எழுந்தான் . பவித்ரா அவனைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தாள் . மதுரிமா அவனைப் பார்த்து புன்னகை பூத்தாள்.