கபீர் காட்டிய கடவுளின் தரிசனம்
கபீரிடம் ராம்தாஸ் என்னும் பக்தர், “நீங்கள் அற்புதங்களை நிகழ்த்த வல்லவர். எனக்கு கடவுளை ஒரு முறையேனும் நேரில் பார்க்கவேண்டும் என்று வெகு நாளாக ஆசை. தயவுசெய்து கடவுளைப் பார்க்கும்படியாக எனக்கு ஏற்பாடு செய்யவும்” என்று கேட்டுக்கொண்டார்.
ராம்தாஸ் கபீரின் பக்தர் என்பதால் அவரது வேண்டுதலை கபீரால் தட்டிக் கழிக்க இயலவில்லை. சற்று தயக்கத்தோடு ஒப்புக்கொண்டார்.
“ஆனால் அதற்கு முன்பாக நீ ஒரு காரியம் செய்யவேண்டும். இரு தினங்கள் கழித்து ஊரிலுள்ள பக்தர்கள் அனைவருக்கும் மிகச் சிறப்பான விருந்துக்கு ஏற்பாடு செய். அன்றைக்கு கடவுளின் தரிசனம் உனக்குக் கிடைக்கும்படி செய்கிறேன்.”
அதன்படியே ராம்தாஸ் ஊரில் உள்ள பக்தர்கள் அனைவரையும் அழைத்து, குறிப்பிட்ட அந்த நாளில் மிகச் சிறப்பான உயர் ரக விருந்துக்கு ஏற்பாடு செய்தார். பக்தர்களும் அதே போல குழுமினர்.
தனக்கு கடவுளின் தரிசனம் கிடைத்த பிறகுதான் அனைவருக்கும் விருந்து பரிமாறப்படும் என்று ராம்தாஸ் சொல்லிவிட்டார். பக்தர்கள் வழக்கம் போல பஜனைப் பாடல்களிலும் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டிருந்தனர். ராம்தாஸ் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். நண்பகல் ஆயிற்று. கடவுள் வரவில்லை. ராமதாஸும் பக்தர்களும் ஆவலோடு காத்திருந்தனர். பிற்பகல் ஆயிற்று. அப்போதும் கடவுள் வந்திருக்கவில்லை. விருந்தினர்கள் அனைவருக்கும் பசி அதிகரித்தது.
“கடவுளாவது நேரில் வருவதாவது! இது நடக்கக் கூடிய காரியமா? ராம்தாஸ் முட்டாள்தனமாக இதை நம்பிக்கொண்டிருக்கிறானே!” என்று சிலர் ராம்தாஸைக் குறை கூறினர்.
இன்னும் சிலரோ, “ஒருவேளை கபீரின் அருளால் கடவுள் வந்தாலும் வந்துவிடலாம். அப்படி அவர் வந்து தரிசனம் கொடுத்தால், ராம்தாஸோடு சேர்த்து நமக்கும் கடவுளின் அருள் கிடைக்கும் அல்லவா!” என்றனர்.
பிற்பகலும் கடந்துகொண்டிருந்தது. பக்தர்கள் பசியால் நெளிந்துகொண்டிருந்தனர். அப்போது சமையற்கட்டுக்குள் ஏதோ பதட்டம் நிலவியது. பாத்திரங்கள் தட்டி உருட்டப்படுவதும் பொருட்கள் விழுவதுமான ஆரவார சப்தங்கள் கேட்டன. விருந்தினர்களும் ராமதாஸும் சென்று பார்த்தபோது அவர்கள் அங்கே கண்ட காட்சி அவர்களைத் திகைக்கச் செய்தது. சமையற்கட்டுக்குள் ஓர் எருமை நுழைந்திருந்தது. அது சமையல்கட்டு முழுவதையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருந்தது. சமையல் பாத்திரங்கள் கீழே தள்ளிவிடப்பட்டிருந்தன. உணவு வகைகள் சிதறிக் கிடந்தன. அந்த எருமை தனது கொம்புகளால் அடுப்பையும் தள்ளிப் புரட்டிவிட்டிருந்தது.
சிந்தியிருந்த உணவுகளை அது தின்றதோடு, பாத்திரத்தில் இருந்த அல்வாவை கபளீகரம் செய்யத் தொடங்கியது. சமையல்கட்டு அலங்கோலமாகக் கிடந்தது. ஆங்காங்கே அந்த எருமையின் சாணமும் சிறுநீரும் அந்த இடத்தை அசுத்தமாக்கியும் இருந்தன.
பக்தர்கள் சிலர் வந்து அந்த எருமை மேலும் சேதத்தை உண்டாகாதவாறு அதைச் சுற்றி நின்று தடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். எருமை அவர்களைக் கண்டு பின்வாங்கவில்லை. ராம்தாஸ் விரைந்து சென்று ஒரு கனமான தடியை எடுத்து வந்து எருமையை மூர்க்கமாகத் தாக்கினார். எருமையின் கனத்த தோலே பட்டை பட்டையாகத் தடித்து வீங்கி விட்டது. காயங்களும் ஏற்பட்டன. வலி தாங்காமல் எருமை கதறிக்கொண்டே வெளியில் ஓடியது.
இது எல்லாம் அந்த கபீரால் வந்த வினை என்று பக்தர்கள் பழி கூறினர். ராம்தாஸ் அந்த எருமையைப் பின்தொடர்ந்து தடியோடு துரத்திச் சென்றார். அவரது ஆவேசம் இன்னும் அடங்கவில்லை.
அந்த எருமை தோட்டத்தின் மூலையில் கபீர் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிச் சென்றது. ராம்தாஸும் பக்த விருந்தினர்களும் அதைத் தொடர்ந்து சென்றனர். அவர்களுக்கு விருந்தைப் பாழாக்கிய எருமையை விடக் கூடாது என்கிற வெறியும், கபீரிடம் தங்களது கோபத்தைக் காட்ட வேண்டும் என்கிற ஆவேசமும் இருந்தது.
கபீரின் இருப்பிடத்தை அடைந்ததும் அவர்கள் கண்ட காட்சியால் திகைத்து நின்றுவிட்டனர். எருமையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்கியபடி கபீர் கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தார்.
“கடவுளே,… உங்களை இப்படி அடித்துக் காயப்படுத்திவிட்டார்களே…! நீங்கள் ராவணனுடன் போரிட்டபோதும், கம்சனிடம் போரிட்டபோதும் கூட இது போன்று காயங்கள் உங்களுக்கு ஆகியிருக்காது. அந்த அரக்கர்கள் கூட உங்களை இந்த அளவுக்குக் காயப்படுத்தியது இல்லை. ஆனால், உங்களுடைய பக்தர்களே உங்களை இந்த அளவுக்குக் காயப்படுத்திவிட்டார்களே…!” என்று ஆவலாதி கூறி அழுதார் கபீர்.
அதைக் கேட்டு ராம்தாஸும் மற்றவர்களும் அதிர்ந்தனர்.
“என்ன,… இந்த எருமை, கடவுளா? கடவுள் இந்த எருமையின் உருவத்தில் வந்திருக்கிறாரா?” என்று கேட்டார் ராம்தாஸ்.
“இல்லை, கடவுள் இந்த எருமையின் உருவத்தில் வரவில்லை. அவர் ஏற்கனவே எல்லா எருமையிலும் இருக்கிறார். ‘கடவுள் தூணிலும் இருக்கிறார்; துரும்பிலும் இருக்கிறார்’ என்ற பிரகலாதன் கூற்று உனக்குத் தெரியாதா? கடவுள் இல்லாத இடமோ, பொருளோ, வெளியோ இல்லை. அனைத்துமே கடவுள்தான். கடவுள் என்பது ஒரு தனித்த உயிரி அல்ல. ஒட்டு மொத்த
பிரபஞ்சமும் கடவுள்தான். அண்ட சராசரங்களில் உள்ள பஞ்ச பூதங்களும், அவற்றால் உண்டான அனைத்து விதமான உயிரினங்களும், ஜடப் பொருட்களும் கடவுள்தான். காலமும் வெளியும் கடவுள்தான். நாமும் கடவுளுடைய அங்கமே. நம்முடைய உடல் என்பது இன்னொருவரின் உடலும் கூடத்தான். நாம் என்பது நாம் மட்டுமல்ல. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே நாம்தான். அதேபோல இந்த அனைத்துமே கடவுள்தான். ஒட்டு மொத்த பிரபஞ்சமே கடவுளாக இருக்கும்போது, அதில் கடவுளைத் தனித்துப் பிரித்துக் காண்பது எப்படி? நாம் வேறு, கடவுள் வேறு அல்ல. பிரபஞ்சத்தில் உள்ள மற்றவர்களும், மற்ற உயிரினங்களும், பொருட்களும் நம்மிலிருந்தோ கடவுளிலிருந்தோ வேறானவை அல்ல. ஒட்டுமொத்த ப்ரபஞ்சமும் ஒரே மூலப் பொருளில் இருந்து உருவானதால், ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்துமே ஒன்றுதான். அந்த ஆதி மூலப் பொருள் கடவுளே என்பதால் இந்த அனைத்துமே கடவுள்தான். கடவுளின் தரிசனம் என்பது இந்த ஞானத்தின் மூலமாகத்தான் நிகழுமே தவிர, வெவ்வேறு மதங்களும் பல்வேறு விதமாக சித்தரித்திருக்கிற உருவங்களிலோ, உருவமின்மையிலோ அல்ல!” என்றார் கபீர்.