போய்க்கொண்டிருப்பவள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2025
பார்வையிட்டோர்: 173 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மாமா இல்லையா?”

அவள் குரல் கேட்டது. கீழே அம்மா அவளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் என்பதும் அவனுக்குக் கேட்டது. மாடியிலிருந்த அறையில் பாதிக்கு மேல் வெயில் வந்துவிட்டது. அவன் படுத்திருந்த இடத்தில் கூட லேசாக வெயில் கீற்று.

“அவுங்களும் வந்திருக்காங்க. வெளியே நிக்காங்க…”

“உள்ள கூப்பிடு…”

கூடவே அவளுடைய புதுக் கணவனும் வந்திருக்கிறான் என்று தோணியது. உள்ளே ஆள் நடந்து வரும் சப்தம் கேட்டது. அம்மாவின் குரலில் ஒரு நெளிவு.

“உக்காருங்க… மேலதான் இருக்கான்… கூப்பிடுறேன்.”

அம்மா படிக்கட்டுப் பக்கம் வந்து கூப்பிட்டாள்.

”சிவா… மல்லிகா வந்திருக்கா. உன்னையப் பாக்கணுமாம்.”

அவன் புரண்டு படுத்துக்கொண்டான். அம்மா அவனிடமிருந்து ஏதாவது பதில் வரும் என நின்றாள். கொஞ்ச நேரத்துக்குப் பின்பு திரும்பவும் குரல் கொடுத்தாள். கீழேயிருந்து ஆண் குரல் கேட்டது.

”தூங்குறாரோ என்னமோ…”

“இல்ல, உடம்புக்கு சொகமில்லைன்னு படுத்துக் கிடக்கான்.” அம்மா, படிக்கட்டை விட்டு உள் அறைக்குள் போன சப்தம்

கேட்டது. போய்ப் பார்க்க வேண்டும் என்றே தோணவில்லை. ஜன்னலுக்கு வெளியே இருந்த வெயிலைப் பார்த்தபடியே இருந்தாள்.

நாலு நாளாகவே அவன் கீழே வருவதே கிடையாது. அம்மா சாப்பாட்டைக் கூட மேலே கொண்டு வந்தாள். கீழே பேச்சரவம் கேட்டபடியே இருக்கும். நிறைய மனிதக் குரல்கள். பேச்சு, சிரிப்பு. எப்பவாவது சிறுவர்கள் மாடிக்கு ஏறி வருவார்கள். அவனைப் பார்த்துக் கத்தியபடியே இறங்கி ஓடுவார்கள். எல்லாம் மல்லிகாவின் கல்யாணத்துக்கு வந்தவர்கள். கல்யாணம் கோயிலில் நடந்தது. கல்யாணத்தன்று காலையில் அம்மா மேலே வந்து கூப்பிட்டாள்.

“குளிச்சுட்டுக் கிளம்பி வா. நான் கோயிலுக்குப் போறேன்.”

“எதுக்கு?”

“மல்லிகா கல்யாணத்துக்கு.’ “நான் வரலே, நீ போ.”

‘மனசு வருத்தப்படுவாடா. உனக்கு இப்ப என்ன செய்யுது. வர வேண்டியதுதானே?”

“வரலேன்னா போக வேண்டியதுதான். ஏன் உயிரை எடுக்கே?”

அம்மா முனங்கிக்கொண்டே கீழே இறங்கிப் போனாள். அன்று காலை அவன் சாப்பிடவில்லை. மதியம் கூட கல்யாண வீட்டுச் சாப்பாடு வந்தது. அதையும் சாப்பிடவில்லை. சுவரோரமாக ஒண்டியபடியே படுத்துக் கிடந்தான்.

நினைத்தாற்போல தொண்டை அடைத்துக்கொள்ளும். அன்று அவனைத் தேடி யாராவது வரக் கூடும் என நினைத்துப் போர்வையால் முழுக்க மூடிக்கொண்டான். கல்யாணத்தன்றே மதியம் மல்லிகாவின் தங்கை மாடிக்கு வந்தாள். அவள் பக்கத்தில் வந்து நின்று கூப்பிட்டாள்.

“மாமா,மாமா”

அவன் கண்களை இறுக மூடிக்கொண்டான். அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். பின்பு கீழே இறங்கிப்போய் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

“மாமாவுக்குக் காச்சல் இல்லயே… அக்கா, மாமா ஏன் கல்யாணத்துக்கு வரலேன்னு கேட்டுட்டு வரச் சொன்னா…’

அம்மா எதுவும் பதில் சொல்லவில்லை.

“எந்திரிச்ச பிறகு வீட்டுக்கு வரச் சொல்லுங்க அத்தை…” அவள் போய்விட்ட பின்பும் படுத்தபடியே கிடந்தான்.

முன்பெல்லாம் மல்லிகா வீட்டிலேதான் கிடப்பான். அதுவும் அவள் லீவில் வந்திருந்தால் அவள் வீட்டு மாடியில்தான் அரட்டை நடக்கும். அந்த மாடி பெரியது. பெரிய அறை இருக்கும். ரெண்டு அலமாரிகள் இருக்கும். இரண்டிலும் மல்லிகா புத்தகங்கள், வளையல்கள், ஹேர்பின்கள், சின்னப் பொம்மைகள் கிடக்கும். பெரிய ஜன்னல் உண்டு. அறையில் அதன் அருகில் சாய்ந்தபடியேதான் மல்லிகா படித்துக் கொண்டிருப்பாள்.

சுருண்டு விரல்களுள் அகப்பட்ட புஸ்தகம், ஒரு விரல் தனித்து பின் அட்டையின் முதுகில். அவளைப் பார்த்துக்கொண்டே இருப்பான். சில நேரம் அவள் பேசும்போது கூட பேச்சில் இல்லாது அவள் முகத்தில் அவன் லயித்துப்போயிருப்பான். எவ்வளவு அழகாக இருக்கிறாள் எனத் தோணும்.

மாமா வீட்டில் மல்லிகாவைத் தவிர மற்ற இருவரும் பெண்கள். மூத்தவளுக்குக் கல்யாணமாகி மதுரையில் இருந்தாள். மல்லிகா டீச்சர் டிரெயினிங் படித்துக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துத் தேவையான சாமான்கள் கொடுத்துவிட்டு வர எப்போதும் சிவாதான் போவான்.

நிறைய மரங்கள் அடர்ந்த ஸ்கூல் அது. பெரிய கம்பி கேட் வாசல். ஞாயிற்றுக்கிழமை அது திறந்தபடியே கிடக்கும். உள்ளே பெண்கள் கூட்டம். திடீர் திடீர் என திசையறியாத இடத்திலிருந்து சிரிப்புச் சத்தம் கேட்கும்.

மல்லிகாவும் அவள் சிநேகிதியும் எப்பவும் ஒரு மரத்தடியில்தான் இருப்பார்கள். அவனைத் தூரத்தில் பார்க்கும்போதே மல்லிகாவிடம் சிநேகிதி சொல்வாள்:

“உங்க மாமா வந்துட்டாரு.”

மல்லிகாவை நோக்கிப் போவான். கிட்டத்தில் போனதும் சிரிப்பார்கள். மல்லிகாவோடு இருப்பவள்தான் கேட்பாள்:

“இப்ப எந்த வேலை? ஒர்க்ஷாப் வேலையா, விட்டாச்சா?”

“ஒர்க்ஷாப்தான்.’

“ரொம்ப நாளா ஒரே வேலைல இருக்கீங்க…” – ரெண்டு பேரும் சிரிப்பார்கள். ஜடை புரண்டு முன்னால் விழ,

அவன் எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவுடனே படிப்பை முடித்துக் கொண்டான். பின்பு கொஞ்ச நாள் டிராக்டர் ஓட்டினான். மருந்துக் கடையில் வேலை செய்தான். தியேட்டரில் டிக்கெட் கொடுத்தான். லாரியில் ஓடினான். கடைசியாகத்தான் இந்த ஒர்க்ஷாப் வேலை.

மல்லிகா அவன் கொண்டு வந்த பொருள்களை உள்ளே எடுத்துவரச் சொல்லி அறைக்குக் கூப்பிட்டுப் போவாள். வழியெங்கும் பெண் துணிமணிகள். உலர்ந்துபோன பாவாடை, தாவணிகள், ஈரம் சொட்டும் சேலை, துண்டு. அறையில் நாலைந்து சிவப்பு பிளாஸ்டிக் வாளிகள். முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கும்.

கண்ணாடி இருக்கும் ஜன்னலின் புறத்தே சுருள், சுருளாகச் சுருட்டிப் பந்து போன்ற அளவில் தலைமயிர் கிடக்கும். எப்பவாவது தலை சீவும்போது பார்ப்பான். அறையில் இரண்டு பேர்தான் இருந்தார்கள். அவன் வந்த கொஞ்ச நேரத்துக்குப் பிறகு இருவரும் கிளம்பி டவுனுக்குள் போவார்கள்.

அவளுக்கு ஏதாவது நோட்டு, படம் வரையும் பேப்பர் வாங்க வேண்டியிருக்கும். அவள் உடன் நடப்பது மிகவும் அற்புதமாக இருக்கும். அவன் உயரம்தானிருப்பாள் அவளும். சீராக அலையும் சேலை கட்டி, நெருக்கத்தில் படும்போது பவுடர் வாசனையோடு ஏதாவது பேசிக்கொண்டே வருவாள். கடந்து போகும் உடன் படிப்பவர்கள் சிரித்தபடியே போவார்கள். இருவரும் கடைத்தெருவில் எல்லாம் வாங்கிய பின்பு ஹோட்டலுக்குப் போவார்கள்.

ஒரே மேஜையில் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். ஸ்வீட், பஜ்ஜி, காப்பி, எப்போதும் இதே. வெளியே வரும்போது வெயில்

இறங்கிப்போயிருக்கும். ஸ்கூல் மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்துவிட்டு அவள் இருட்டும்போது உள்ளே போவாள்.

இரவு அவன் வீடு திரும்பும்போது எங்கும் இருள் கவிழ்ந்து போயிருக்கும். நேராக மாமா வீட்டுக்குத்தான் போவான். வெளியே யாராவது உட்கார்ந்திருப்பார்கள். அத்தையிருந்தால் பேசிக்கொண்டிருந்துவிட்டு நெடுநேரம் கழித்துத் தனியே தெருவில் நடந்தபடி வீட்டுக்கு வருவான்.

தெரு முழு அமைதியில் இருக்கும். சில நேரம் விசிலடித்தபடி தெருவில் வருவான்.

படிக்கட்டுப் பக்கம் சப்தம் கேட்டது. மல்லிகாவின் சப்தம்தான் அது. அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

“மேல நான் போயி கூட்டிட்டு வாறேன் அத்தை. சாயங்காலம் ஊருக்குப் போறோம்.’

மேலே அவள் வரும் சப்தம் கேட்டது. கொலுசுச்சப்தம். புதுசாகப் போட்டிருக்கிறாள். படிகளில் ஒரு விதமான லயத்தோடு நடை. கண்களை இறுகிக்கொண்டான். அவன்கிட்டத்தில் பூவாடை பட்டதும் அரைக் கண்ணால் பார்த்தான்.

நின்றுகொண்டிருந்தாள், ஊதாவும் இளம் மஞ்சளுமான பட்டில் பூரணமான அலங்காரத்தோடு. மல்லிகாதானா எனத் தோன்றியது. இந்த ஆடையும் பூவும் அவள் முகத்துக்குப் புது ஜொலிப்பு கொடுத்திருந்தது. பெரிய பெண்ணைப் போலத் தெரிந்தாள். புரண்டபோது வெளிறிய பாதம் கொலுசு படரத் தெரிந்தது.

அவள் கிட்டத்தில் உட்கார்ந்து நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.

“மாமா…மாமா… காச்சலா…”

விழித்துக்கொண்டு சுவரோரமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். அவளை நேராகப் பார்க்க முடியவில்லை.

“ஏன், கல்யாணத்துக்கு வரலே… என்ன கோவம் எம்மேல?” பதில் சொல்லவில்லை அவன்.

“நான் என்ன செய்ய?” என்றாள்.

இரண்டு பேரும் பேசாமல் இருந்தார்கள். அவள் சப்தம் வராமல் குலுங்கி அழுதாள். அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. படிக்கட்டில் சப்தம் கேட்டது. அவள் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். அவனே கேட்டான்:

“எப்பப் போறீங்க?”

“சாயங்காலம்.”

மேலே வந்தது அவள் கணவன். அவனைப் பார்த்ததும் எழுந்தான் சிவா. அவன் சிரித்தபடியே பக்கத்திலிருந்த பாயில் உட்கார்ந்துகொண்டான்.

“என்ன காச்சலா? சரியாயிருச்சா?”

சிவா தலையாட்டினான்.

“நீங்க கல்யாணத்துக்கு வரலேன்னு ரொம்ப வருத்தப்பட்டா.’ அவன் பேசியபடியே அறையைப் பார்த்தான். அவள் வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“சாயங்காலம் கிளம்புறோம். அவசியம் நீங்க ஊருக்கு வரணும். எனக்கில்லேன்னாலும் உங்க சிஸ்டருக்காக… எப்ப வரீங்க.”

வெயில் தகித்துக்கொண்டிருந்தது வெளியே. இருவரும் எழுந்து கொண்டார்கள். அவனும் எழுந்துகொண்டான்.

“எந்த பஸ்ல போறீங்க?” என்றான் சிவா.

“கே.வி.வி.ல”

அவர்கள் இறங்கிப்போன பின்பு கண்ணாடியில் அவனைப் பார்த்தான். முகம் இறுகிப்போயிருந்தது. சாயங்காலமாகப் பெட்டியிலிருந்த சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டு பஸ் ஸ்டாப்புக்குப் போனான்.

நிறையக் கூட்டம் அவர்களை வழியனுப்ப, ஒரு ஓரமாக நின்று கொண்டான். அவன் நிற்பதைப் பார்த்துக் கிட்டத்தில் மல்லிகாவின் தங்கை வந்து நின்றுகொண்டாள். பஸ் வந்து திரும்பியது. அவர்கள் ஏறி உட்கார்ந்துகொண்டார்கள். மல்லிகா ஜன்னல் பக்கமாக உட்கார்ந்துகொண்டாள்.

பஸ் கிளம்பும்போது கையசைத்தாள். உள்ளேயிருந்து தலையை எட்டிப் பார்த்தாள். உள்ளிருந்த அவன் ஏதோ சொல்வது கேட்டது. அவர்கள் போனபின்பு வீட்டுக்குப் போனான்.

இராவெல்லாம் வெளியைப் பார்த்தபடியே கிடந்தான்.

காலையில் மாடிக்கு வந்த மல்லிகாவின் தங்கை மேலிருந்து கீழே சப்தமிட்டாள்:

“அத்தை, மாமாவுக்கு காச்சல் நெருப்பா கொதிக்கு…”

– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *