கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 180 
 
 

(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

அத்தியாயம் – 13

தணிகாசலம், சேகர் வயல்வெளிக்குச் சென்றுவிட்டார்கள்.

ரகுநாதன் அறையிலிருந்தான்.

சிந்தாமணி வழக்கம் போல் அடுப்படியை விட்டு வெளியே வரவே இல்லை. இவள் ரகுநாதன் வந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறாள்.

மாமனாரோடு ‘இருக்கும்’ போது அவள் என்றைக்குமே எச்சரிக்கைதான். ஆனால்… அன்றைக்குத்தான் கொஞ்சம் பிசகிவிட்டது.

அதுவும் அவள் பிசகில்லை. வாசல் கதவு தட்டி நின்றிருந்தாலோ, இல்லை தட்டி உள்ளே வந்திருந்தாலோ…. இப்படி கையும் களவுமாக பிடிபட்டிருக்க மாட்டாள். ஆள் சத்தம் போடாமல் உள்ளே வந்ததன் விளைவு… அபத்தம். வகையாக மாட்டிவிட்டாள். முன்பின் அறிமுகமில்லாத கொழுந்தனோடு அறிமுகம் வெகு ஜோர். வெட்கக்கேடு.

இந்த அவமானத்தின் காரணமாகவே அவனை நிமிர்ந்து பார்க்கவே முடியாத தலைக்குனிவு. எப்படி நிமிர்ந்து பார்க்கமுடியும்..?

அண்ணனும் தம்பியும் சேர்ந்திருக்கும் ஒவ்வொரு நொடியும் இவளுக்கு அடி வயிற்றில் நெருப்பு! சொல்லமுடியாத கலவரம்..

மாமனார் சொன்ன பொய்யை கொழுந்தன் நம்பவில்லை என்று இவளுக்கு அப்போதே தெரிந்து விட்டது.

ஆளை நிமிர்ந்து பார்க்க முடியாமலும், நிம்மதியாய் வாழ் முடியாமலும்… தினம் தினம் செத்துச் செத்துப் பிழைக்கும் பிழைப்பு.

கிழவன் எப்படியெல்லாம் பேசினான். என்னவெல்லாம் சொல்லி மயக்கினான்.

அவனுக்கு வீட்டில் சேகர் இல்லாத நேரத்தில்தான் தாகமெடுக்கும். திட்டமிட்டே இவள் கணவனை வெளியே அனுப்பி வாய்ப்பு வசதிகளை உருவாக்கி இருப்பான்.

“சிந்தாமணி! தாகமா இருக்கு. தண்ணி கொண்டு வாயேன்..!” கூடத்தில் அமர்ந்துகொண்டு குரல் கொடுப்பான்.

சூதுவாது தெரியாத சிந்தாமணி… வீட்டிற்குள் நுழைந்த புதுசு கொண்டு வந்து கொடுத்தாள்.

சொம்பைக் கையைத் தொட்டு…இல்லை தடவி வாங்கினான். கள்ளங்கபடம் இல்லாத சிந்தாமணி தெரியாமல் பட்டு விட்டது என்று அதை எடுத்துக் கொண்டாள்.

அதுவே தொடர்கதையாகி பார்வையும், பல்லிளிப்பும் சகிக்காமல் போக சுதாரித்து விட்டாள்.

“என்னம்மா இதுக்கு சுளிச்சுக்கிறே..?”

மாமனார் பயம் போக… மரியாதை இல்லாமல் முறைத்தாள்.

“பணக்காரியைப் பார்க்காம சோத்துக்கு வழி இல்லாத உன்னை எதுக்கு கொண்டு வந்தேன் தெரியுமா…? சமைச்சிப் போடுவே, அடங்கிப் போவேன்னுதான்!”

“அட! ஏன் நிக்கிறே. உட்காரு. பக்கத்துல இல்லேன்னாலும் எதிர்ல உட்காரு. உள்ளே வேலை முடியலைன்னாலும் பரவாயில்லே உட்காரு. உன்னைப் பார்த்துக் கிட்டே இருக்கனும் போல இருக்கு. பொண்ணாவா பொண்டாட்டியான்னுதான் தெரியல..”

‘கொழுப்பு!’ சிந்தாமணி பல்லைக் கடித்தாள்.

“சிந்தாமணி! ரெண்டு பெத்தேன். ஒருத்தன் ஓடிட்டான். என் மூத்தப் பிள்ளையைத்தான் சொல்றேன். அவன் திரும்ப மாட்டான். திரும்பினாலும் சொத்துல சல்லிக்காசு கிடையாது. சொத்தெல்லாம்… உனக்கும், உன் புருசனுக்கும்தான். குடிசையில இருந்தவளைக் கோபுரத்துல ஏத்தி வச்சிருக்கேன். பெரிய இடத்து மருமகளா ஆக்கி இருக்கேனே. அந்த நன்றி விசுவாசம் இல்லாம இப்படி முரண்டு பண்ணினா எப்படி..?”

எல்லா பேச்சுகளும் சேகர் இல்லாத சமயத்தில்தான். ஆள் உள்ளே நுழையும் சத்தம் கேட்டுவிட்டால்… பெட்டிப் பாம்பாக அடங்கி..

“சேகர்! வேலையெல்லாம் முடிச்சிட்டியா..? ரொம்ப களைப்பா இருக்கே. காபி, மோர் ஏதாவது சாப்பிடு. சிந்தாமணி! புருசனைக் கவனி!” ஒரே குழைவு.

ஆரம்பத்தில்… நெஞ்சு கொதிக்க… இந்தாளை புருசனிடம் சொல்லி ஒரு கை பார்க்கலாமா….? நினைத்தாள். அவன் ஆத்திரத்தில் ஏடாகூடமாக செய்து விட்டால்..? பயந்து விட்டு விட்டாள்.

நிறைய பெண்கள் இப்பத்தான் பொறுத்துப் போகிறார்கள். இந்த பயத்தினால் தவறை அப்போதே தட்டிக் கேட்க முடியாமல் விட்டுவிடுகிறார்கள். இது ஆணுக்கு துணிவாகிப் போகிறது. எறும்பு ஊற கல்லையும் கரைக்கலாம். நினைப்பில் அடுத்து அடுத்து அத்து மீறுகிறார்கள்.

சிந்தாமணியும் அந்த தவற்றைத்தான் செய்தாள்.

“பொண்டாட்டி இல்லாம புள்ளைங்களை வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..? நான் சிறுவயசா இருக்கேன்னு.. ஒரு வயசுக்குட்டிக்கூட வீட்டு வேலைக்கு அமையல. அமையறவளும் ரெண்டு நாள் தாங்கல. கையைப் புடிச்சதும்.. காணாம போயிடுவா. அடுப்படிக்கு வர்றவ அப்படி இப்படி நடந்துக்கிட்டு கொறைஞ்சா போயிடுவா..? என்ன பொம்பளைங்களோ போ. தொட்டா குத்தம்ன்னு ஒதுங்கிடுறாளுங்க.”

“சிந்தாமணி..! நான் உன்னை பலாத்காரம் பண்றதா இல்லே. அதுக்கான வயசும், பலமும் உடம்புல இல்லே. எதுக்கு அது கஷ்டம்.?… என் மனசைத் தொறந்து சொல்லிட்டேன். நீயா வழிக்கு வர்றது நல்லது.”

“வழிக்கு வர்றலைன்னா… உன் மேல் கோபப்படுவேன், ஆத்திரப்படுவேன்னு நினைக்கிறீயா..? மாட்டேன். வெளியில நிறைய கொட்டிக் கிடக்கு. பணத்துக்குப் பத்தாளு போட்டிப்போட்டு விதவிதமா வருவாளுங்க. இதுக்குப் போய் காசைக் கொட்டி சொத்தை இழைக்கனும். உன்னையும், சேகரையும் ஏன் நடுத்தெருவில் விடணும்ன்னு. யோசனை!”

“அட! புருசன்கிட்ட சொல்லிடுவேன்னு பயமுறுத்துறீயா..? கவலைப்படமாட்டேன். ஆமாய்யா. அப்படித்தான். உனக்குப் பிடிக்கலைன்னா வெளியில போ. சல்லிக்காசு கிடையாதுன்னு துரத்திடுவேன்!”

“கொலைப் பண்ணிடுவான்னு நெனைக்கிறீயா..? முடியாது. எனக்கு ஆயுசு கெட்டி. ஆனானப்பட்ட மூத்தப்பிள்ளையே ஆடிப்போய் ஓடிட்டான். உன் புருசன் கிடக்கான் பொடியன்!”

“சரி கொலையே பண்ணட்டும். கவலை இல்லே. தாராளமா செத்துப் போறேன். ஆனா கொலைப் பண்ணினவன் ஆயுள் கைதியா சிறையிலே அடைஞ்சி கிடைக்கனும். இல்லே… தூக்குத் தண்டனைக் கைதியாய் தூக்குல தொங்கணும். நீ நடுத்தெருவுல நிப்பே.”

சமயம் கிடைக்கும்போதெல்லாம் இதே பேச்சு.

இதற்கெல்லாம் இவளும் மசியவில்லை, மனம் வைக்கவில்லை.

“சேச்சே! அவமானமா இருக்கு. வெளியில் தலை காட்ட முடியல..” சலிப்பாய் வந்து அமர்ந்தான்.

“என்னங்க..?” இவள் கேட்டாள்.

“தோட்டத்து போர்செட்டுக்குள்ள புது புது பொம்பளைங்களைப் போய் போய் வர்றாங்களாம்..!”

“புரியல..?”

“எனக்கு கலியாணம் பண்ணியும் என் அப்பன் அடங்கலை..”

“சொத்தை அழிச்சிடுவார் போலிருக்கு. ஒண்ணுமில்லாதவள் இன்னைக்கு மாடி வீடு கட்டுறாள்.!”

“நீங்க … உங்க அப்பாவைக் கேட்க வேண்டியதுதானே. கண்டிக்கிறதுதானே..?!”

“கண்டிச்சா அடங்க மாட்டான். இன்னும் அழிப்பான்..!” தலையிலடித்துக் கொண்டான்.

‘ஆள் சொன்னபடி செய்கிறார்!’ இவளுக்குப் புரிந்தது.

இதற்கும் இவள் மசியவில்லை. பாவி படுபாவி..! என்ன காரியம் செய்து தன்னைத் தொட்டு..ச்சே!

அன்றைக்கே செத்திருக்க வேண்டும். சாகாமல் விட்டது தவறு. அதையும் செய்ய விடாமல்..அவன்தான் எல்லாவற்றுக்கும் காரணம். கட் டையில் போகும் கிழவன் சரியான ஆள். பெண் தின்னி!

சரி களவை கையும் மெய்யுமாய் கண்ட கொழுந்தன் ஏன்… கிணற்றில் விழுந்த கல்லாய் இருக்கிறார்..? இவளுக்கு யோசனை ரகுநாதன் மேல் தாவியது.

இதுவரை தம்பியிடம் சொல்ல வில்லை. இனியும் சொல்லமாட்டானென்று என்ன நிச்சயம்..? சொல்லவிடாமல் வாயை அடக்க வழி..?

சிறிது நேர யோசனைக்குப் பின்…. அந்த வழியைத் தவிர வேறு இல்லை! என்று முடிவுக்கு வந்து அடுப்படியை விட்டு எழுந்து…வந்து ரகுநாதன் அறையைப் பார்த்தாள்.

அவன் புத்தகம் விரித்துப் படித்துக் கொண்டிருந்தான்.

அடுத்து கூடத்திற்குச் சென்றவள்…

“ஐயோ..!” – அலறினாள்.

படித்துக் கொண்டிருந்தவன் காதில் விழா…

“என்ன..?” வெளியே வந்தான்.

“புடவை மேல பல்லி விழுந்துடிச்சி…” பதறி முந்தானை எடுத்து உதறினாள்.

அவன் அருகிலே வர…

“ஐயோ! ஜாக்கெட்டுக்குள் புகுந்துடிச்சி!” நெளிய…

எதிர்பாராமல் சேகர் உள்ளே நுழைய…

அடுத்த வினாடி இவளுக்குப் புத்தி மாறியது…

“ஐயோ! உங்க அண்ணன்… அண்ணன் என்னை… என்னை..!” இவள் ஓடிப்போய் அவன் மார்பில் விழுந்து கதற…

திகைத்து நின்ற ரகுநாதனைப் பார்க்க அவனுக்கு ஆத்திரம்…

“உன் புத்தியை என் பொண்டாட்டிகிட்ட காட்டிட்டியேடா பாவி!” அவன் சீற…

இது இவன் வாழ்க்கையில் இரண்டாவது தாக்குதல். முதல் தாக்கல் அப்பா. இரண்டாவது இவள்..! உறைந்தான்.

என்ன சொல்ல..? வெளியே நடந்தான்.

அத்தியாயம் – 14

ரொம்ப தொய்ந்து, துவண்டு நேராக ஆற்றங்கரைக்குச் சென்றான் ரகுநாதன்.

மனம் நிறைய கசப்பு. மரத்தில் சாய்ந்து அமர்ந்து காலை நீட்டினான்.

சிந்தாமணி எவ்வளவு நடிப்புக்காரி! எவ்வளவு சுலபத்தில் பழி போட்டு விட்டாள்..? நினைக்க அவனுக்கு எண்சாண் உடம்பும் குறுகியது. மரத்தில் இன்னும் சரிந்து அமர்ந்தான்.

என்ன, ஏதென்று சுதாரிக்கும் முன்பே பழி. ஆக பல்லி விழுந்தது என்று என்று வளைந்து கத்தியது பொய். முந்தானையை உருவி அங்கே இங்கே நெளிந்ததெல்லாம் நடிப்பு.

ஏன் இந்த நடிப்பு, நாடகம்..? என்ன திட்டம்…?

சரியான நேரத்தில் சேகர் வரவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்…?

உண்மை என்று நம்பி … அவளைத் தொட்டிருப்போம்!

வந்த ஒரு மாதத்தில் எத்தனையோ நாட்கள் இருவரும் தனித்து இருந்திருக்கோம். ஆண் மோகம். தன்மீது ஆசை என்றால்… இந்த நாடகத்தை இவள் எப்போதோ அரங்கேற்றி இருப்பாள். இவ்வளவு கால தாமதம் செய்து நடிக்க வேண்டிய காரணம்…?

அப்பா சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவனை வம்புக்கு இழு. வாயை அடை! சொல்லி இருக்கிறார். இவளும் தன் வாழ்க்கைக்குப் பயந்து… இப்படி செய்திருக்கிறாள்.

இது நாடகம், நடிப்பு என்று தெரியாமல்… நம்பி போய் …தம்பி எவ்வளவு சீக்கிரம் வாயை விட்டு விட்டான்..?

உன் புத்தியைக் காட்டிட்டியே!

‘சேகர் ! சேகர் ! எனக்கா சின்ன புத்தி..?’

கண்களை மூடினான்.

அப்போது ரகுநாதனுக்கு வயது 18. கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தான். கோடை விடுமுறையில் சேகர் திருத்துறைப்பூண்டியில் உள்ள அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தான்.

வீட்டில் சமையல் வேலைக்கு ஆயா. வயசு 60. வயல்வெளிகளில் இருக்கும் அப்பாவிற்கு சமைத்ததை தூக்குவாளியில் எடுத்துக் போக செங்கேணி. சிறுவயசு. அவள் அதிகாலையிலேயே ஆர்ஜாகிவிடுவாள். வீட்டு வாசல், கொல்லை பெருக்குவாள். ஒன்பது மணிவரை புறவேலைகள் முடிப்பாள். மணி ஒன்பதானதும்…ஆயா சமைத்ததை எடுத்துக்கொண்டு அப்பாவிடம் சேர்ப்பாள். காலை, மதியம்… அப்பா எங்கிருந்தாலும் கொண்டு சேர்க்கும் பொறுப்பு அவளுடையது.

அப்பா இதற்கென்றே அவளை அமர்த்தி இருந்தார்.

ஒரு நாள் மதியம் இவன் 1.30 மணி அளவில் ஊரைத்தாண்டி ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் இவர்களின் பெரிய தோப்புக்கு நடுவே இருக்கும் போர்செட்டுக்குக் குளிக்கச் சென்றான்.

அது கட்டுக் கோப்பான இடம். ஒரு ஏக்கர் பூமி. சுற்றிலும் முள் வேலி. உள்ளே…. தென்னை, கொய்யா, மா, பலா, வாழை என்று பல மரங்களின் தொகுப்பு. அது இல்லாமல் கத்தரி, வெண்டை, மிளகாய் என வீட்டிற்குத் தேவையான காய்கறி செடிகள். தோப்புக்கு நடுவே … பத்துக்குப் பத்தில் ஒரு கட்டிடம். அதில் அப்பா ஓய்வெடுக்க கட்டில் மெத்தையுடன் ஒரு அறை. அடுத்ததாய் நீர் இறைக்கும் இயந்திரம். அது தோப்பைச் சுற்றி இருக்கும் இவர்களது வயல்களுக்கும், தோப்பிற்கும் நீர் இறைத்துக் கொண்டு இருக்கும். கோடை என்றால் அதற்கு பெரும்பாலும் ஓய்வு இருக்காது.

ரகுநாதன் கொல்லை படல் திருந்திருக்க.. உள்ளே சென்றான்.

போர்செட்டை நெருங்கினான். உள்ளே…ஆண். பெண் சிரிப்பு, சிணுங்கல் சத்தம். ‘யார்.?’ – நினைத்து கதவு திறந்தான்.

அப்பாவும் செங்கேணியும் அலங்கோலம்.

செங்கேணிக்கு உடம்பு நடுங்கியது. தணிகாசலத்திற்கு முகம் சிவந்தது.

“கம்மனாட்டி நாயே ! எங்கேடா வந்தே…?” பாய்ந்தார்.

ரகுநாதன் பயப்படவில்லை.

“ஊரில் பெரிய மிராசு. பெரிய பண்ணை. பெரிய மனிதர். இப்படியா நடந்து கொள்வது?” – என்கிற சுறுசுறு கோபம்.

“அப்பா! என்ன இது?” வெடித்தான்.

“சமய சந்தர்ப்பம் தெரியாமல் வந்ததுமில்லாமல், பயமில்லை, பேச்சு வேறயா…?” – இவருக்குள் கொதித்தது.

“சத்தம் போடாதே நாயே..! ஓடு..” அதட்டினார்.

“நான் ஏன் ஓடனும்…? உங்க வயசுக்கும் மரியாதைக்கும்…”

“இன்னும் ஒரு வார்த்தை பேசினே..? உதைப்பேன் படவா…? இங்கே அப்படிப் பார்த்தேன், இப்படிப் பார்த்தேன்னு எங்கேயாவது மூச்சு விட்டே…கொன்னு குழியில பொதைச்சுடுவேன் படவா..!” ஆத்திரம், அவமானம். எகிறினார். செய்தது அநியாயம். இதில் மிரட்டல் வேறா. உதைப்பேன் என்கிற திமிர் வேறு. பிள்ளைக்குத் தெரிந்துவிட்டது அவமானம் என்று கூனிக் குறுகாமல் என்ன முரட்டுத்தனம். நாளைக்கு வெளியில் தெரிந்தால் இவர் தானென்ன…தான், தம்பி எல்லாரும் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா…? கிராமத்தில நல்லவன், கெட்டவன், ஏழை, பணக்காரனுக்கெல்லாம் ஒரே நீதி. பஞ்சாயத்துக் கூட்டி தப்பு செய்தவனைக் கட்டி வைத்து உரிப்பார்கள். அதுமட்டுமில்லாமல்… அவளையே திருமணம் முடித்து வைப்பார்கள். இப்படியெல்லாம் மான அவமானப் படுவதைவிட… ஊரறிய ஒருத்தியை மணம் முடித்துக்கொள்ளலாம்.

“எலே! என்ன மொறைக்கிறே..?”

“இந்த அநியாயம் பண்றதுக்கு நீ இவளையே கட்டிக்கலாம்..”

“பயந்து ஓடாம எனக்கு பஞ்சாயத்துப் பண்றீயா… நீ..? உன்னை…” அதற்கு மேல் அவர் பேசவில்லை.

சுற்றும் முற்றும் பார்த்தார். உள்ளே, வெளியே …. பாம்பு, பல்லி அடிக்க மூலையில் சாத்தி வைத்திருக்கும் மூங்கில் கம்பை எடுத்தார்.

பளீர்! பளீர்! – என்று விளாசினார்.

ரகுநாதன் பயந்து நடுங்கவில்லை. வலியால் துடிக்கவில்லை. வளைந்து நெளியவில்லை.

‘ஆத்திரம் தீர அடிக்கட்டும். அப்பன் செய்த தவறுக்கு பிள்ளை தண்டனை பெறட்டும்!’ – பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான்.

தடுக்க வந்த செங்கேணியையும் தூரத் தள்ளினார்.

அந்த நேரம் பார்த்துதான் ராயப்பன், மாயாண்டி, முனியாண்டி… குளிக்க வந்தார்கள். தணிகாசலம் மகனை விளாசுவதைப் பார்த்தார்கள்.

பதைபதைத்து ஓடிவந்து …

“ஐயா! ஐயா! என்ன காரியம் பண்றீங்க…?” பதறி தடுத்தார்கள்.

“ஐயா! ஐயா! ரகு தம்பி என்ன தப்பு செய்தது இந்த அடி அடிக்கிறீங்க..” மாயாண்டி குறுக்கே பாய்ந்து அவர் கையைப் பற்றினான்.

“விடுடா. இந்த வயசுல இவன் செய்த அயோக்கியத்தனத்துக்கு நான் அடிச்சே கொல்றேன்.! ” திமிறினார்.

மாயாண்டி முரட்டு ஆள்

“விடுங்க..” இறுக்கிப் பிடித்தான்.

“தம்பி அப்படி என்ன தகாத காரியம் செய்தது..?” என்றான் ராயப்பன்.

“என் மானம் மரியாதையைக் கெடுத்துட்டான்டா..”

“ஐயா! என்ன சொல்றீங்க..??…”

“எனக்கு சோறு எடுத்து வந்த இந்த செங்கேணியைக் கையைப் புடிச்சிஇழுத்துட்டான் கயவாளி. சரியான நேரத்துக்கு நான் வரலேன்னா… இந்த பொண்ணு கதி..? மான அவமானம்!” ஓங்கி காலால் எட்டி உதைத்தார்.

ரகுநாதன் மல்லாந்து விழ…

“ஐயா…ஆ..ஆ…” செங்கேணி அலறினாள்!

அத்தியாயம் – 15

எதிர்பாராத தாக்குதல். பேரிடியின் பெரிய தாக்குதல். அதிர்ச்சியின் உச்சத்திற்குப் போய் உறைந்து வாய் இறுகிப்போனான் ரகுநாதன்.

விபரம் புரியாத மாயாண்டி….

“தம்பி! பெரிய இடத்துல நல்லவருக்குப் பொறந்த நீங்க இப்படி நடக்கலாமா..?” கேட்டான்.

‘ஐயோ! நான் இல்லே குற்றவாளி !அப்பா!’ சொன்னால் எடுபடுமா..?

தன்மீது குற்றம் சுமத்தியவர் பெற்ற அப்பா. ஊரில் பெரிய மிராசு. எப்படி எடுபடும்..?

செங்கேணி சொல்லுவாளா..?

மாட்டாள். சொன்னால் எவரும் நம்பப் போவதில்லை. மேலும் நாளைக்கு வேலை இருக்காது. குடிக்க கூழிருக்காது . குந்தி அழ இடமிருக்காது.

தணிகாசலம் ரொம்ப புத்திசாலி…

“விடுங்கய்யா..! அவனைக் கொன்னு போடுறேன்..” முரண்டினார். எதிரிகளை யோசிக்க விடாமல் நடித்தார்.

உண்மை தெரிந்த செங்கேணியும் வாயில் முந்தானையைச் சுருட்டி வாயில் அழுத்திக் கொண்டு அழுதாள்.

பாதிப்பினால் அழுகிறாள் என்பது என்று எதிரிகள் அவள் மீது பச்சாதாப்பட்டார்கள். ஆனால் அவளோ இவனுக்காக அழுதாள் என்பது இவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

“சரி. சரி. விடுங்க. சின்னப்புள்ள..”

“போடீ. ஏதோ வயசு கோளாறு!”

நடந்தது பொறுக்க மாட்டாமல் ஆளை விட்டால் போதுமென்று செங்கேணி ஓடினாள்.

அதன் பின்பும் நாடகம் நடந்தது.

“ஏதோ.. நீங்க சொன்னதால விடுறேன்..!” என்று கையிலிருந்த கம்பை கீழே போட்ட தணிகாசலம்…

“தயவு செய்து இந்த வெட்கக்கேட்டை வெளியில மறந்தும் சொல்லிடாதீங்கய்யா. எனக்குத்தான் அவமானம். வயசு கோளாறுல தம்பி தப்பு செய்துட்டாலும்… தாயில்லா புள்ளையைத் தட்டி வளர்க்கலன்னு ஊர் பேசும். மானம் தூக்கு மாட்டித் தொங்கணும். நடந்ததெல்லாம் இங்கேயே மறந்துடுங்க…” இரு கை கூப்பி வணங்க….

வந்தவர்கள் பதறிப் போய்விட்டார்கள்.

“சத்தியமா சொல்லமாட்டோம்!” என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.

“நீங்க போங்க தம்பி..” விபரம் தெரியாதவர்கள் இவனை அனுப்பி வைக்க… தன் அயோக்கியத்தனத்தை மறைக்க பெற்ற பிள்ளை மீதே ஒரு தகப்பன் பழி போடுகின்றானென்றால்…? இவன் சரியான தகப்பன் கிடையாது. தப்பிலி. இனி இங்கு இருக்கக்கூடாது! இதுத்தால் ஆபத்து! முடிவெடுத்து… இந்த ஆளின் முகத்திலேயே விழிக்கக் கூடாதென்று வீட்டிற்கு வந்து தேவையான துணிமணிகள், தன் படிப்பு சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளலாம். கிளம்பிவிட்டான்.

ரயிலேறி சென்னைக்கு வந்தான். நந்தனம் வந்து ராணுவத்தில் சேர்ந்து வடக்கே வந்து விட்டான்.

காலங்கள் கரைந்து காயங்கள் மாற…முதலில் தம்பியின் நினைவுதான் வந்தது.

‘புலியிடம் ஒரு புள்ளிமானை விட்டு வந்திருக்கோம்! அது ஆனானப்பட்ட தன்னையே அடித்து வீழ்த்த… தம்பி என்ன செய்வான்..?!’ திகில் வந்தது.

அந்த திகில் விரிந்து பறந்து விஸ்வரூபமெடுத்து… பாசத்தைத் தூண்ட… சேகருக்கு முதன் முதலாக ஒரு கடிதம் எழுதினான்.

சேகர் திரும்ப அவன் இதயத்தையே திருகி வைத்து பதில் எழுதினான். அப்புறம் அப்பா. தொடர்கதையாகி விட்டது.

இவனைப் பொறுத்தவரை சொத்து சுகத்திற்காக ஒட்டவில்லை. கை நிறைய சம்பளம். ஓய்வு பெற்றால் ஓய்வூதியம். அப்புறம் என்ன கவலை.! இவன் ஒட்டியதெல்லாம் தம்பி ஒருவனுக்காத்தான்.

‘எல்லாவற்றையும் மறந்து வந்தால்… ?!’

“உன் புத்தியைக் காட்டிவிட்டாயேடா..!” கேட்கிறான்.

அறியாமல் கேட்கவில்லை. விஷயம் தெரிந்தே கேட்கிறான். இவனுக்கும் பொய் உண்மை என்று போதிக்கப்பட்டிருக்கிறது.நல்ல நிலத்தில் நஞ்சு தெளிக்கப்பட்டிருக்கிறது.

யார் சொல்லி இருப்பார்கள்..?

அப்பா சொல்லி இருக்கலாம்….!

திருத்துறைப்பூண்டியிலிருந்து அவன் வந்ததும்..

“உன் அண்ணன் இப்படி செய்தான். அவமானம் அடிச்சேன். ஓடி தொலைஞ்சிட்டான்.” அப்பா அதே பொய்யை அப்படியே சொல்லி இருக்கலாம். அதற்கு மேலும் சொல்லி இருக்கலாம். பிளேட்டையே திரும்பியவர். தான் தப்பிக்க பெற்ற பிள்ளைமீதே பழியைப் போட்டு மகா நடிப்பு நடித்தவர். என்னன்னெமோ சொல்லி இருக்கலாம்.

அப்பா மட்டுமில்லாமல் அந்த ராயப்பன், முனியாண்டி, மாயாண்டிக்களும் சொல்லி இருக்கலாம். அவர்கள் இவனிடம் சொல்வதற்கு முன்பே ஊரில் சொல்லி இருப்பார்கள்.

“பெரிய மனுசன்னா பெரிய மனுசன்தான்! புள்ள இப்படி அநியாயம் செய்ஞ்சிட்டான்னு அடி பின்னி எடுத்து துரத்திட்டார்ல்லே! நாங்க சரியான சமயத்துல அங்கே போகலைன்னா… அந்த ரகுநாதன் அடிபட்டே செத்திருப்பான். மிதிச்சே கொன்னிருப்பார் மனுசன்!” அப்பாவைப் பற்றி பெருமையாகப் பேசி பீத்தி இருப்பார்கள்.

செம்பட்டையனுக்கும் சேதி தெரிந்திருக்கும்!

அவன் ஏன் விபரம் கேட்கவில்லை. விடு பழங்கதை! என்று விட்டிருக்கானா..? வந்தவனிடம் பிழையெல்லாம் துருவி ஏன் கஷ்டத்தைக் கொடுக்க வேண்டும் என்று விட்டிருக்கின்றானா..? அவன் நல்லவன் வாய் மூடி இருக்கிறான்.

நல்ல தம்பிக்கு இப்படியொரு மனைவி! ரகுநாதனுக்கு நினைக்க நினைக்க வேதனை மனதை அழுத்தியது.

மானம் போய்விட்டது. மரியாதை விழுந்து விட்டது. இன்னும் இருந்தால் இருப்பதும் இருக்காது.

அம்மாடீ! பெண்ணுக்கு என்ன மாய்மாலம்!

மயக்கவோ, மயங்கவோ இல்லாமல் கள்ள உறவுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து தன்னை அப்புறப்படுத்துவதற்காக கூட இந்த ஏற்பாட்டை அவள் செய்திருக்கலாம்.

இது அவளா செய்த ஏற்பாடா..? இல்லை.. அப்பா சொல்லிக் கொடுத்த ஏற்பாடா..? யார் செய்த சதி.? எவர் பின்னிய வலை?

எப்படியோ நல்ல நெஞ்சில் நஞ்சைத் தூவி.. தம்பியின் கண்ணாடி மனதை உடைத்துவிட்டார்கள். இனி ஒன்று சேர்ந்தாலும் ஒட்டாது. சேகர் மதிக்க மாட்டான். திரும்பி பார்க்க மாட்டான்.

சிந்தாமணிக்கு தான் இன்னும் இளக்காரம். வீட்டை விட்டே துரத்துவதில் குறியாக இருந்து… கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம். பார்த்தாலே தவறு சொல்லுவாள். உடைந்த மனதை இன்னும் சுக்கு நூறாக்கி தம்பியைப் பிரிப்பாள்.

அப்பாவிற்கு இனி திண்டாட்டமில்லை. கொண்டாட்டம்.!.

ஆக…. வீட்டில் மூணு பேர்களுமே தனக்கு வேண்டாதபட்டவர்களாக ஆகிவிட்டார்கள். இனி இருப்பது நியாயமில்லை. தம்பிக்காக வந்தோம். அவன் வெறுப்பிற்கே ஆளாகிவிட்டபிறகு…?

கிளம்ப வேண்டியதுதான்..! மனசுக்குள் அழுத்தமாக முடிச்சி விழ.. எழுந்தான்.

திகைப்பு..!

எவ்வளவு நேரமாக நிற்கிறானோ…? எதிரே நிலவொளியில் சேகர் !

“அ… அண்ணா!” விசும்பினான்.

என்ன பேச, என்ன சொல்ல…? எதுவும் முடியாமல்…

ரகுநாதன் தலை குனிந்தான்.

“மன்னிச்சுடு அண்ணா..!” சேகர் சட்டென்று மண்டியிட்டு இவன் கால்களை பிடித்தான்.

ரகுநாதன் இதை எதிர்பார்க்கவில்லை.

“ஏ….என்னடா இது…?” பதறி தூக்கினான்.

“அண்ணா! நான் தப்பா பேசிட்டேன். சட்டுன்னு ஆத்திரத்தில் உளறிட்டேன்…” அழுதான்.

“சேகர்! நான் ஒன்னும் தப்பு பண்ணலேடா…!” ரகுநாதனுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் தொண்டையடைக்க.. இறுக்கி தம்பி கையைப் பிடித்தான். கண்கள் கலங்கியது.

“சரி. வா வீட்டுக்குப் போவோம்..!”

“போகலாம். ஆனா… நான் நாளைக்கே ஊருக்குக் கிளம்பறேன். வேலைக்குப் போறேன்”. கண்களைத் துடைத்தான்.

“நீ இந்த முடிவுக்கு வருவேன்னு எனக்குத் தெரியும். வேணாம்!”

“இல்லேடா. இனிமேலும்…நான் வீட்டில நிம்மதியா இருக்க முடியாது! என்னை மன்னிச்சுடு..!”

“நீ என்னைவிட்டு பத்து வருசம் பிரிஞ்சி இருந்ததே பெரிய தண்டனை. இனிமேலும் எனக்குத் தாங்காது. விடுப்பு முடிஞ்சி போகலாம்..!”

“….”

“அண்ணா! எனக்காக வா. என்னை மன்னிக்க மாட்டீயா…? இந்த நிமிசம் நான் மறந்து மன்னிப்புக் கேட்டேனே.. நீ மன்னிக்கக்கூடாதா..? உனக்கு வீட்டில் ஒரு குறையும் இல்லாம நான் பார்த்துக்கிறேன். அதுக்கு நான் உத்திரவாதம். இதுக்கு மேலும் நீ என்னை விட்டுப் போகனுமின்னா தாராளமா போ. எனக்கு என்ன சங்கடம், சாக்காடு வந்தாலும் திரும்பாதே!” என்றான்.

இது…இது…இந்த வார்த்தைகள்தான் ரகுநாதனை உலுக்கியது. இவனை காப்பாற்ற வேண்டிய கடமை தனக்கிருக்கிறது! என்கிற உணர்வை தலை தூக்க வைத்தது.

விடுப்புக்குள்ளாக யார் குற்றவாளி, அயோக்கியன் என்பதைக் கண்டுபிடித்து தம்பியைக் காப்பாற்ற வேண்டும்! முடிவெடுத்தான்!

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *