கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 15, 2025
பார்வையிட்டோர்: 35 
 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலை ஏழுமணியாகியும் படுக்கையை விட்டு நான் எழவில்லை. நன்றாக இறுகப் போர்த்திக் கொண்டு படுத்து துாங்கினேன். 

ஜன்னலூடாகக் காற்று வீசியது. வழக்கமாக உடலைத் தழுவிச் செல்லும் காற்று இன்று என்னைப் போர்வையுடன் சேர்த்து மேலே தூக்கிவிடும் போலிருந்தது. வெளியிலே காற்றுப் பலமாக அடித்துக் கொண்டிருந்தது. மெதுவாகப் படுக்கையை விட்டெழுந்து, அறைக்கு வெளியே சென்றேன். 

விறாந்தையில் வந்து நின்றேன். மழை தூறிக்கொண்டிருந்தது. துறுகின்ற மழையைக் காற்று நீறு படுத்தியது. அதனுடைய சீற்றத்தின் வாயிலகப் பட்ட நீர் சின்னபின்னமாகச் சிதறி எங்கணும் தெறித்தது. துாவானம் என் மேலிலும் பட்டது. உடல் நடுங்கிற்று. 

‘லொக், லொக் இருமல் சத்தம், திரும்பிப் பார்த்தேன். ஓலைப்பாயில் என் அப்பா படுத்து இருமிக் கொண்டிருந்தார். 

பாவம்! அவருக்கு இப்பொழுது கிட்டத்தட்ட எழுபது வயதிருக்கும். அவர்தான் என் தந்தையின் தந்தை. அவருக்குக் கயரோகம்! 

எவ்வளவு தான் சொல்லிப் பார்த்தாலும், அப்பா உள் அறைக்குள் படுக்க மாட்டார். வெளியிலே, விறாந்தையிலே படுப்பார். எங்கள் தகப்பனார் எவ்வளவோ வற்புறுத்தியும் கூட அப்பா கேட்கவே இல்லை. 

ஆனால், ‘இந்த நேரத்தில், இத்தனை பெரிய காற்றடிக்கும் பொழுதும் அவர் வெளியில் படுத்திருப்பதா? 

“அப்பா! காற்றுப் பலமாக அடிக்கிறது. உள்ளே வந்து படுங்கள்” என்று அவருக்கு அருகிற் போய்ச் சொன்னேன். 

ஒரு நாளும் இல்லாத மாதிரி, அன்று அவர் ஒரு மறுப்பும் கூறவில்லை! “ம்ம்…. சரி…. துாக்கு” 

… முனகினார். நான் அவரை மெதுவாகத் துாக்கிச் சென்று உள்ளே படுக்க விட்டேன். 

“வெளியிலே, துப்பல் சிரட்டை…. அதை இங்கே கொண்டு வா!” என்றார். 

அதை எடுத்துச் சென்று கொடுத்தேன். பலமாக இருமினார். துப்பல் சிரட்டைக்குள் காறித் துப்பினார், சளி கட்டியாக விழுந்தது. 

‘பாவம் அப்பா’ என்று அவருக்காக என் மனம் ஏங்கியது. 

கிணற்றடிக்குச் சென்று முகங்கால் கழுவினேன். பின் சமையலறைக்கு விஜயம் செய்தேன். அங்கு என் மனைவி தோசை சுட்டுக்கொண்டிருந்தாள். 

அவளுக்குத் தெரியாமல் பின்பக்கமாகச் சென்று அவள் கண்களைப் பொத்தினேன். அவள் சும்மா விடுங்களேன். விடிந்து ஏழுமணியாச்சு, இப்போதானாக்கும் எழும்புவது? என்று குறை கூறினாள். இந்தப் பெண்களுக்கு எப்பொழுதுதான் மனம் நிம்மதியாக இருக்கிறது? எந்தச் சந்தர்ப்பத்திலும் குறை கூறுவது அவர்களின் இயற்கையான குணம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏமாற்றத்துடன் கைகளை எடுத்துவிட்டு “சரி, சரி, தோசையைப் போடு வயிற்றைக் கிள்ளுது’ என்று கூறினேன். 

‘வயிற்றைக் கிள்ளினால் நின்று துள்ளுங்கோ’ என்று புன்முறுவலுடன் பகர்ந்தாள் என் மனைவி. 

சாப்பிட உட்கார்ந்தேன். ‘ஓ’வென்ற இரைச்சல் துாரத்திலிருந்து செவிகளில் வந்து விழுந்தது. பிறகு அதே சப்தம் மெல்ல மெல்ல நகர்ந்து கிட்டக் கிட்ட வருவது போலிருந்தது. போலென்ன, வந்தே விட்டது! வீட்டைச் சுற்றி ஒரே இரைச்சல் புயல் வந்து விட்டது. சாப்பாடு முடிந்தது. விறாந்தையில் வந்து நின்றேன். தோட்டத்திலுள்ள மரம், செடி, எல்லாம் ஆட்டம் கண்டன. புயற்காற்று நினைத்த மாதிரியெல்லாம் அவற்றுடன் விளையாடிக் கொண்டிருந்தது. 

படார்! மள மளவென்று வானை நோக்கி வளர்ந்து கொண்டு வந்தவொரு பப்பாசி மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. தோட்டத்தில் நின்ற அத்தனை மரங்களுக்குள்ளும் அதுதான் பெரிய மரம். அது விழுந்துவிட்டது! இனி அதனுடைய இனிப்பான பழங்களும் கிடையாதே என்று எண்ணியது, என் இதயம் வருந்தியது. 

‘லொக்… லொக்…. லொக்!” அப்பாவின் இருமல் கடுமையாகிவிட்டது. அவருடைய படுக்கைக்கு ஓடினேன். 

“ரகு… லொக், லொக், லொக் ரகு என்னப்பா… ஒரே வலியாயிருக்கு… லொக், லொக்…” இருமல்களுக்கிடையில் கஷ்டப்பட்டுக் கதைத்தார் அப்பா. 

“பேசாமல் படுத்திருங்கோ, அப்பா, நான் கமலாவிடம் சொல்லிக் குடிநீர் போடச் சொல்லுகிறேன்” என்றேன் நான். 

இதற்கிடையில் கமலாவும் வந்து சேர்ந்தாள். என்ன அத்தான்? அப்பாவுக்கு இருமல் பலத்துவிட்டது போலிருக்கிறதே’ என்று கேட்டவளிடம் நான் ‘ஆம்’ என்று பதிலளித்துவிட்டு குடிநீர் தயார் பண்ணும்படி அனுப்பினேன் அவள் போய்விட்டாள். 

சிறிது நேரம் சென்றது. கமலா குடிநீரை ஒரு மூக்குப் பேணியில் ஊற்றிக் கொண்டு வந்தாள். நான் அதை வாங்கிக் குடிநீர் சிரட்டையில் ஊற்றி அப்பாவுக்குப் பருக்கினேன். குடித்துவிட்டு அவர் படுக்கையிற் சாய்ந்தார். நான் வெளியில் வந்தேன். 

காற்றுச் சிறிது ஓய்ந்திருந்தது. இன்னும் சிறிது நேரத்தில், திரும்பவும் புயல் வருமென்பதையும், அதுவும் முன்னிலும் பார்க்க மிகுந்த சக்தியுடன் வந்து சேரும் என்பதையும் அறிந்த நான், கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் அடித்துச் சாத்தினேன். 

மத்தியானமாகிவிட்டது. புயல் மழையுடன் வந்து சேர்ந்தது. அப்பாவின் இருமல், சிறிது ஓய்வுக்குப்பின், அதிக வேகத்துடன் மேல் ஏறியது. லொக்கு, லொக்கு…….’ என்று அடிவயிற்றிலிருந்து இருமினார் அவர். எனக்குப் பயம் வந்துவிட்டது. போய் அவருடைய போர்வைக்கு மேல் இன்னுமொரு போர்வையைப் போர்த்திவிட்டேன். 

கமலாவிடம் ஒரு சட்டியில் வேப்பங்கொட்டைகளைப் போட்டு, அவைக்கு மேல் நெருப்புத் தணல் சிலவற்றையும் போட்டுக்கொண்டு வரும்படி சொன்னேன். அவள் கொண்டு வந்தாள். அதை வாங்கி அப்பாவின் படுக்கைக்கு அருகில் வைத்தேன். புகை கிளம்பி அறை முழுவதும் பரவி நின்றது. குளிரான சூழ்நிலையிற் சூடாக அமைந்த அப்புகை உடலுக்கு இதமாக இருந்தது. அப்பாவுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் தான்! 

மாலைநேரம் வந்தது. புயலின் வேகம் தணியவேயில்லை. அப்பாவின் இருமல் இவ்வளவு நேரமும்,புயலுடன் போட்டியிட்டுவிட்டு இப்பொழுது சிறிது நேரமாகத்தான் ஓய்ந்து விட்டிருந்தது. 

இரவுச் சாப்பாட்டுக்கு உதவி செய்வதற்காக சமையல் அறைக்குச் சென்றேன். கமலாவுக்கு நான் சமயலறையில் சாட்டுக்கு நின்றாலும் போதும். தன் வேலையைத் துரிதமாக கவனிப்பாள். இல்லாவிடில் சாப்பாடு அரைமணியோ அல்லது ஒரு மணியோ பிந்தும்! 

சமயலறையில் எனது உதவி வேலை முடிந்துவிட்டது. விறாந்தையில் வந்து சாய்வு நாற்காலியில் ‘அப்பாடா’ என்று சாய்ந்தேன். புயலின் வேகம் சிறிது தணிந்துவிட்டது. போலிருந்தது. 

இந்தப் புயலே ஒரு தத்துவ ஆசிரியன்தான்! ‘ஓ’ வென்ற இரைச்சலுடன் வந்து சேர்ந்தாலும், அது கடைசியில் ஒரேயடியாக ஓய்ந்துவிடுகிறது. மனிதனின் வாழ்க்கையும் அப்படித்தானே! தாயின் வயிற்றிலிருந்து உற்பத்தியாகும் பொழுது ‘ஆ’ வென்று கொண்டு நாம் பிறக்கிறோம். ஈற்றில் மெதுவாக, ஓய்ந்து ஒழிந்து விடுகிறோம். 

இந்த எண்ணம் என் முனையில் தோன்றி மறைந்ததோ இல்லையோ மற்றோர் எண்ணம் தோன்றியது. மறுகணம் என் மனம் துணுக்குற்றது. ஆமாம்! அப்பாவின் அறையிலிருந்து ஒரு சப்தத்தையும் காணவில்லையே! ஒரு வேளை புயல் ஓய்ந்தது போல் அவர் வாழ்வும்….. சாய்வு நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்து ஓடினேன். அறைக்குள், அங்கே அப்பா நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தார். கண்கள் மூடியிருந்தன. குனிந்து மூக்கில் கையை வைத்துப் பார்த்தேன். அந்தச் சிரமம் எதற்கு…..? அப்பாவின் எழுபது வருட வாழ்க்கைப் புயல் ஓய்ந்துவிட்டது. 

மயில்வாகனன்

ஈழகேசரி, ஈழநாடு முதலான பத்திரிகைகளில் நல்ல சிறுகதைகளை நிறையவே எழுதியுள்ளார். புதுவாழ்வு, ஈழகேசரியில் வெளிவந்த நல்லதொரு சிறுகதை. புயல் ஈழநாட்டில் வெளிவந்தது. இவ்விரு பத்திரிகைகளிலும் அமைதியாகத் தன்னை இனங்காட்டாது நிறையவே படைத்துள்ளார். 

– 22.08.1959

– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *