பாண் போறனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 5, 2025
பார்வையிட்டோர்: 277 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தினசரி உப்பு நீரையே உறிஞ்சி, உப்புக் காற்றையே சுவாசித்தாலோ என்னவோ… சீரான வளர்ச்சி குன்றி குறண்டிப் போன பூவரசு மரங்கள்… தனக்குள் தானே வெந்து வெதும்பிப் போன ஒரு அபலையின் தோற்றம். அந்தப் பூவரசு மரங்களில்… உடல் முழுவதும் அனுபவக் கண்டல்கள்… கடற்கரைக்கும் பிரதான வீதிக்கும் இடைப்பட்ட மேட்டுநிலத்தில் கடற்கரையை அண்மித்து குறண்டிப் போன அந்தப் பூவரசு மரங்கள் வரிசையாக நிற்கின்றன. 

பொருத்தமற்ற சுவாத்தியத்தினால் அந்தப் பூவரசு மரங்கள் குறண்டிப் போனாலும்… அந்தப் பூவரசு மரங்கள் மேலால் அடர்த்தியான… பூவரசம் பூக்கள்… குறண்டிப் போன உடலுக்குள்ளும்… இயல்பான உணர்வுகளின் வெளிப்பாடுகள்… 

புத்தளம், கடற்கரை. 

ஆரவாரித்தெழும்புகின்ற பெரும் அலைகளின்றி சிறிய அலைகளோடு அமைதியாகக் காட்சி தரும் கடற்பரப்பு… வரிசையாக நிற்கும் குறண்டல் பூவுரசு மரங்கள்… சீரான இடைவெளிகள் உடன் கோடடித்தது போல வரிசையாக நிற்கும் அந்தக் குறண்டல் பூவுரசு மரங்களின் கீழ் சீமெந்தினால் கட்டப்பட்ட ஆசனங்கள்… தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் சிறியதொரு இறங்கு துறை… இந்த இறங்கு துறையை அண்மித்து சிறியதொரு ஜஸ்கிறீம் கடை, புத்தளம் கடற்கரை பற்றி இவ்வளவு தான் கூறலாம். 

இந்தக் கடற்கரையில் நின்று மேற்கு நோக்கிப் பார்த்தால் சீன நாட்டரசினால் நிர்மாணிக்கப்படும் நுரைச்சோலை அனல்மின் நிலையக் கோபுரம் மங்கலாக ஆனால் இனங் காணக் கூடியளவிற்குத் தெரியும். இந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தைப் பார்ப்பவர்களில் ஒரு சாரார் அதன் பிரமாண்டத்தைப் பற்றிப் பேசிக் கொள்கின்றனர். இன்னும் சிலர் சீனா நாட்டரசின் அரசியல் கபடத்தனமென்றும் பேசிக் கொள்கின்றனர். 

புத்தளம் கடற்கரையோடு அமைந்திருக்கும் பிரதான வீதியில் புத்தளம் நகரத்தின் நுழைவாயிலில் ஒரு முச்சந்தி மன்னார் பிரதான வீதி வந்து புத்தளம் பிரதான வீதியோடிணையும் முச்சந்தியிது. சந்தியின் ஒரு புறம் மீன் சந்தையும் மற்றைய இரு புறங்களும் கடைத்தொகுதிகளும் அமைந்துள்ளன. மூவின மக்களும் வாழ்கின்ற சிறியதொரு நகரம். புத்தளம் பிரதான வீதியோடு வந்திணையும் மன்னார் வீதியில் கல்லெறி தூரம் வரை நடந்து இடதுபக்கம் உள்ள குறுக்கு வீதியில் இறங்கி நடந்தால் கடற்கரையை வந்தடையலாம். 

புத்தளம் நகரப் பகுதியிலும் நகரத்தையண்டிய பகுதிகளிலும் வசிப்பவர்களுக்கு இந்தக் குறுக்கு வீதியும் இந்தக் கடற்கரையும் மிகவும் பழக்கப்பட இடம் மட்டுமல்ல. மிகப் பிரபலமான இடமென்று கூடக் கூறலாம். 

தினசரி அதிகாலை ஐந்து, ஐந்தரை மணி தொடக்கம் ஏறத்தாழ காலை ஒன்பது மணி வரை இந்தக் குறுக்கு வீதியும் கடற்கரையும் கலகலப்பாகவே இருக்கும். இரவு கடற்தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் அதிகாலையில் இந்த இடத்தில் தான் வந்து சேருவார்கள். 

வீதியின் வலது பக்கக் கரையோடு வரிசையாக மீன் வியாபாரிகள் இருப்பார்கள். இவர்களைத் தொடர்ந்து மீன்வெட்டிக் கொடுப்பவர்கள் இருப்பார்கள். இடது பக்கக் கரையோடு மரக்கறி வியாபாரிகளும்… நடமாடும் தேநீர்க்கடை வியாபாரிகளும் நிற்பார்கள். 

மூவின மக்களும் நிறைந்து போய் நிற்பார்கள். 

மீனவனின் வலைக்குள் சிக்கி தனது இயல்பான சூழலை இழந்து மரண அவலப்படும் மீன்களையும் தலைப் பகுதியோடு அமைந்திருக்கும் மீன் செதில்களை சுட்டு விரல் நகத்தினால் கிளப்பி… குருதி கசியும் மீன் பூவுள்ள மீன்களையும் வாங்குவதில் பொதுவாகவே சகல மக்களும் திருப்தியடைகின்றனர்… இத்திருப்திக்கு காரணம் நிறைந்ததொரு மரபுண்டு! 

காலை ஆறு மணியிருக்கும் 

வழமை போல் குறுக்கு வீதியும் குறுக்கு வீதி வந்து கடற்கரை வீதியோடிணையும் சிறிய சந்தியும் கடற்கரையும் கலகலப்பாகவே இருக்கின்றது. 

சில்லறை வியாபாரிகள், சைக்கிள் பெட்டி வியாபாரிகள், மொத்த வியாபாரிகள், வீட்டுத் தேவைக்கு மீன் வாங்குவோர்…. 

குறுக்கு வீதி வந்து கடற்கரை வீதியோடிணையும் சிறிய முச்சந்தியின் வலது பக்கமாகவுள்ள குறண்டிப் போன பூவரச மரத்தின் கீழ் குச்சன் அமர்ந்திருக்கின்றான். அவனுக்கு முன்னால், இரண்டு பக்கங்களும் கிழித்து விரிக்கப்பட்ட ‘சொப்பிங் பாக்கில்’ சில மீன் குஞ்சுகள் கிடக்கின்றன. 

பல வகையான மீன் குஞ்சுகள்… திரளி, கொய், கெழுறு, முரல், மணலை, இரண்டு மூன்று நண்டுக் குஞ்சுகள்… குச்சன் இப்போது ஒரு மீன் வியாபாரி… இப்போதென்ன தினசரி காலையில் இந்த இடத்தில் குச்சனைக் காணலாம்… மீன் குஞ்சுகளோடு இருப்பான்… 

“ஐயா வாங்கோ… அம்மா வாங்கோ… மலிவு விலை அறுபது ரூபா…லாபாய்… லாபாய்….”குச்சன் இரண்டு மொழிகளிலும் குரல் கொடுக்கிறான். 

குச்சன் சிங்களத்தில் மட்டுமல்ல, நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக இங்கு வந்து தங்கியிருக்கும் சீன நாட்டவரும் இங்கு மீன் வாங்க வருவார்கள்… அவர்களோடு ஆங்கிலத்திலும் கதைச்துச் சமாளிக்கும் வல்லமையுள்ளவன். 

குறண்டிப் போன அந்தப் பூவரசு மரங்கள், பூவரசம் கதியால்களாக இருக்கும் போது குறண்டிப் போனவைகளோ அல்லது வளர்ந்த பின்பு குறண்டிப் போனவைகளோ தெரியாது… ஆனால் குச்சன் குறண்டித்தான் பிறந்தான்…! 

சின்னமணி… இவள் தான் குச்சனைத் தனது வயிற்றுத் தோற்புரையில் பத்து மாதங்கள் சுமந்து பெற்றவள்… சின்னமணிக்கு நிரந்தர வறுமை… குறண்டிப் போன பூவரசு மரங்கள் பூத்திருப்பது போல… சின்னமணியின் கருப்பையில் குச்சன் கருவானான். பெண்களின் வயிற்றுக்குள் இரைப்பையும் கருப்பையும் மிக நெருங்கியே அமைந்துள்ளன கருப்பைக்குள் கிடந்த குச்சன் இரைப்பையின் பசிவெக்கையில் வெந்து… குறண்டி… முகட்டிலிருந்து விழுந்த எலும்புந் தோலுமான எலிக்குஞ்சு போல்… குச்சனும் எலும்புந் தோலுமாக சூம்பிப் போய் சின்னமணியின் வயிற்றிலிருந்து பூமியில் விழுந்தான்…! 

ஒல்லித் தேங்காய் போன்ற நெஞ்சாங் சூடு… பருத்த வயிறு… கண் குழிக்குள் சதையற்ற வெறும் தோலுக்குள் புரளும் செத்தல் முளிகள்… ஈக்கில்கள் போன்ற கை கால்கள்… வறுமை என்ற உத்தியோக பூர்வ ‘சீல்’ குத்தப்பட்டு மை காயாத நிலையிலேயே அவன் பிறந்தான்! 

குச்சனுக்கு இப்போது பத்து வயது உடல் நிலையில் வயதுக்குக் குறைந்த வளர்ச்சியையும் அனுபவத்தில் வயதுக்கு மிஞ்சிய வளர்ச்சியையும் அவன் பெற்றிருந்தான். 

வாழ்க்கை அனுபவங்களும், அந்த அனுபவங்களின் தொகுப்பில் புதிய பரிமாணங்களையும் பெறுகின்ற தத்துவப் படிமங்களும் துயர் வெக்கையில், கோதுகளை உடைத்து வெளியேறிய குஞ்சுகள் தானே…! 

குச்சுனுக்கு முன்னாலுள்ள சொப்பிங் பாக்கின் மீது அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல இன மீன் குஞ்சுகளைப் போல… குச்சனின் மனப் பறிக்குள் பல விதமான அனுபவப் படிமங்கள் நிறைந்திருந்தன… 

குச்சன் றோட்டின் வலது பக்கமாக அமர்ந்திருக்கின்றான். றோட்டின் இடது பக்கமாக குச்சனுக்கு நேர் எதிராக கபிரியேல் பாண் வண்டிலோடு நிற்கிறான். குச்சனைப் போல கபிரியேலும் பாண் வண்டிலோடு தினசரி அதிகாலையில் இங்கு வந்து விடுவான். கபிரியேல் பாண் வண்டிலோடு இதே இடத்தில் தான் நிற்பான். 

அதிகாலையில் இங்கு வருபவர்கள் பல நோக்கங்களுடனேயே வருகின்றனர். மலிவாக மீன் வாங்கலாம். மரக்கறி வாங்கலாம். காலை உணவுக்காக கபிரியேலிடம் சுடு பாண் வாங்கலாம்… இப்படிப்பல நோக்கங்கள். 

கபிரியோல் ஒரு கிறீஸ்த்தவன். அவனுக்கிப்போது ஐம்பது வயது. ஆவன் ஒரு இருதய நோயாளி. அவனால் பலத்த வேலைகள் செய்ய முடிவதில்லை. குண்டுச் சட்டிக்குள் கொட்டப்பட்ட நண்டுக் குஞ்சுகள் போல்… அவனுக்கு குஞ்சும் குருமானுமாய் ஐந்து பிள்ளைகள்… கபிரியேலின் குடிசைக்குள் சின்னனும் பெரிசுகளுமாய் ஏழு இரைப்பைகள்… இவைகள் தினசரி இயங்கிக் கொண்டே இருக்கும்… கபிரியேல் பதில் சொல்லித்தான் தீர வேண்டும்…! 

தனி மனிதனிலிருந்து… சமூகமாக.. தேசியமாக வளர்ந்திருக்கும் இந்த மனிதர்களின் இயக்க நிலையின் மூலஸ்தானத்திலுள்ள முதலாவது இயக்கப்புள்ளி… இந்த இரைப்பையும்… அதிலுள்ள பசியுந்தான்… 

கபிரியேல் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் பேக்கரிக்கு வந்துவிடுவான். புண் போறணைக்குள்ளால் இறக்கி வைக்கப்பட்டிருக்கும் சுடுபாண்களில் ஒரு தொகைப் பாண்களை வண்டிலுக்குள் அடுக்கிக் கொள்வான். அதேபோல் சீனி பணிசுகளிலும் ஒரு தொகையை வண்டிலுக்குள் அடுக்கி கொள்வான். 

பேக்கரி முதலாளி வந்து கணக்கெடுத்துப் பதிந்த பின் கபிரியேல் புறப்பட்டு இங்கு வந்து விடுவான். 

இங்கு வியாபாரம் முடிந்ததும் பேக்கரிக்குச் சென்று முதலாளியிடம் திரும்பவும் பாண்களையும் பணிசுகளையும் பெற்றுக் கொண்டு உள் வீதிகளுக்குள் இறங்கி விடுவான். 

பதினொரு மணி தொடக்கம் பிற்பகல் மூன்ற மணி வரை ஓய்வு… அதன் பின் நாலு மணிக்குத் திரும்பவும் பாண் வண்டிலோடு புறப்பட்டால் உள் வீதிகளில் விற்பனை செய்து… இரவு எட்டு மணியளவில் தான் பேக்கரிக்கு வருவான். 

மாதம் முடிய சிறிய தொகைப்பணம் சம்பளமாக அவனுக்குக் கிடைக்கும். 

குச்சனுக்கு இந்த மரத்தடியும் மீன் வியாபாரமும் கபிரியேலுக்கு பாண் வண்டிலும் வீதிகளும்… மிகவும் பழக்கப்பட்ட சங்கதிகள்…! 

சின்னமணி இவள் தான் குச்சனைப் பெற்றவள். சின்னமணி குச்சனைப் பெற்றதன் மூலம் தாய் என்ற ஸ்தானத்தைப் பெற்றது உண்மை தான்… ஆனால் ஒரு தாயின் கடமைகளை அவளால் செய்ய முடியவில்லை… அதிகாலை ஐந்தரை மணியளவில் சின்னமணி குச்சனை எழுப்புவாள். “ராசா குச்சன்… எழும்பையா… மீன் பொறுக்கப் போக வேணும்…” கால்கள் இரண்டையும் மடித்து கைகள் இரண்டையும் கால்களுக்கிடையில் செருகிய படி கேள்விக் குறி வடிவில் குறண்டிப் போய் குச்சன் படுத்திருப்பான். 

குச்சனை எழுப்புவதற்கு சின்னமணிக்கு மனம் வராது… அவனுக்குப் பக்கத்தில் குந்தியமர்ந்து குறண்டிப் போய்படுத்திருக்கும் அவனது உப்புப் படர்ந்த முதுகைத் தடவுவாள்… அவளது ஈரல் குலை வெந்து பிளக்கும்…! 

“ராசா… குச்சன் நேரம் போகிது… மீன் வள்ளங்கள் கரைப்பட்டிடும்… எழும்பு குஞ்சு…” அவள் திரும்பவும் எழும்புவாள். ஆவளின் கண்குளிக்குள்ளிருக்கும் வெண்மையான நித்திரை அழுக்கு அவளது கண்ணீரில் கரைந்து… நாடியில் தொங்கம்…” 

சம காலத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற பிள்ளைகளைத் தான் அதிகாலையில் படிப்பதற்காகப் பெற்றோர் எழுப்புவார்கள்… ஒரு பக்கத்தில் தாயும் மறுபக்கத்தில் தகப்பனும் நின்று… எழுப்பி… செல்லம் கொஞ்சி… ‘ரீ’ கொடுத்து படிக்க விடுவார்கள்… குச்சனுக்கு இப்போது பத்து வயது… ஐந்தாம் ஆண்டில் தான் படிக்கிறான். ஏனைய மாணவர்களைப் போல இவனும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருக்க வேண்டும்…? குச்சனுக்கு வாழ்க்கைப் பரீட்சை…! 

சின்னமணியும் ஏனைய தாய்மார்கள் போல் குச்சனைப் பத்து மாதம் சுமந்து தான் பெற்றாள். ஏனைய தாய்மார்களைப் போல சின்னமணியும் அதிகாலையில் குச்சனை எழுப்புகிறாள்… ஆனால்… பரீட்சைக்குப் படிக்கவல்ல. 

வலைக்குள்ளிருந்து மீன் தெரிவு நடத்தும் மீனவர்கள் பொருத்தமற்ற மீன் குஞ்சுகளைப் பொறுக்கி எறிவார்கள். அவைகளைப் பொறுக்கி விற்பதற்காக…! 

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை… அது தேவையோ… தேவையற்றதோ… அதுதான் போகட்டும்… ஒரு கிளாஸ் சாயத் தண்ணீர் கொடுத்தனுப்ப அவளிடம் தேயிலை இருக்காது… கண்கள் நிறையக் கண்ணீர் தான் இருக்கும். 

குச்சன் எழும்பி… சாறம் உடுப்பது போல களிசானை உடுத்திக் கொண்டு வலது கையால் இடது தோளையும் இடது கையால் வலது தோளையம் பிடித்துக் கொண்டு பனிக் குருவி நடப்பது போல் அவன் நடப்பான்… 

சின்னமணி பார்த்துக் கொண்டு நிற்பாள்… அவளது தொப்புள் குழியிலிருந்து கண்ணீர் வடியும்… 

குச்சன் இரண்டு வழிகளில் மீன் குஞ்சுகளைப் பெற்றுக் கொள்வான். ஓன்று மீனவர்களுக்கு மீன் தெரிவு செய்ய உதவி செய்தால் கூலியாக சில மீன்களைக் கொடுப்பார்கள்… அந்தச் சந்தர்ப்பம் சில வேளைகளில்தான் கிடைக்கும். 

கிடைக்கும். இரண்டாவது மீனவர்கள் சில மீன் குஞ்சுகளைக் கழித்து எறிவார்கள் அவைகளைக் குச்சன் பொறுக்கிக் கொள்வான். 

இன்று பொறுக்கப்பட்ட மீன் குஞ்சுகளையே குச்சன் வைத்திருக்கின்றான். 

குச்சனின் குடும்பத்தில் மொத்தமாக ஐந்து சீவன்கள். தகப்பன் மகேந்திரன், தாய் சின்னமணி, மூத்த தங்கை மலர், இவளுக்கு மூன்று வயது. மகேந்திரனும் சின்னமணியும் கூலி வேலைக்குச் செல்வார்கள். கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக நமது மண்ணில் நடந்த யுத்தத்தினால் நம்மவர்கள் கோவணங்களையும் இழந்து கூலிகளாகிவிட்டதால் மகேந்திரனுக்கும் சின்னமணிக்கும் கூலி வேலை கிடைப்பதும் அரிதாகி விட்டது. 

சூரிய ஒளிக்கதிர்கள் பூமியில் நீண்டு கொண்டிருக்கின்றன. மீன் சந்தை கலகலப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. 

குச்சன் மீன் குஞ்சுகளையும் பார்த்து அடிக்கடி பாண் வண்டிலையும் பார்த்துக் கொள்கிறான். மீன் குஞ்சுகளை விற்று பாண் வாங்குவது வழமையான செயற்பாடு இன்று மேலதிகமாக கடைசித் தங்கைக்கு ஒரு சீனி பணிஸ் வாங்க வேண்டுமென்றொரு ஆசை குச்சனுக்கு. 

“ஒரு பாண் முப்பது ரூபா. ஒரு சீனி பணிஸ் பத்து ரூபா… நாற்பது ரூபா… அப்ப ஐம்பது ரூபா சொன்னால்த்தான் நாற்பது ரூபாவுக்கு விற்கலாம்… இன்னும் பத்து ரூபா கூடச் சொன்னால் என்ன… அறுபது ரூபா சொல்லுவம்…” குச்சனின் மனம் கணக்குப் போடுகின்றது. 

குச்சன் பாண் வண்டிலைப் பார்க்கிறான்… பெருமளவு பாண்களும் சீனி பணிசுகளும் முடிந்து விட்டன…! 

“ஐயா வாங்கோ… உடன் மீன்… மலிவு… லாபாய்… லாபாய்…” குச்சன் தனது கீச்சுக்குரலில் இரு மொழிகளிலும் கூறுகின்றான். 

புத்தளம் மூவின மக்களும் வாழ்கின்ற ஒரு பிரதேசம். இங்குள்ளவர்கள் தங்களின் தாய் மொழியோடு ஏனைய இரண்டு மொழிகளையும் ஓரளவு பேசுகின்ற வல்லமையுள்ளவர்கள். 

குச்சன். 

மகேந்திரனுக்கும், சின்னமணிக்கும் திருமணமாகி அவர்களுக்கு முதல் பிறந்த பிள்ளையிவன். சின்னமணியின் வயிற்றில் குச்சன் ஒரு புள்ளியாள் கருத்தரித்த போது… புதுத்தம்பதிகளின் மனதில் இயல்பாக ஏற்படுகின்ற உணர்வுகள் அவர்களது மனதிலும் ஏற்படத்தான் செய்தது. 

ஆண் பிள்ளை பிறந்தால் ஜெயந்தன் என்றும், பெண் பிள்ளை பிறந்தால் ஜெயந்தினி என்றும் பெயர் வைப்பதாகத் தீர்மானித்துக் கொண்டனர். 

ஆண் பிள்ளை பிறந்தது… ஜெயந்தன் என்று பெயர் வைத்தனர். 

குச்சனின் உடல் தசைப்பிடிப்பின்றி எலும்புந் தோலுமாக குச்சி போல் இருந்தால் ‘குச்சன்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டு… நாளடைவில் அவனது ஜெயந்தன் என்ற உண்மைப் பெயர் மறக்கப்பட்டு குச்சன் என்ற பெயரே பாவனைக்கு வந்து… 

குச்சனே தனது உண்மைப் பெயரை மறந்து போய் விட்டான். 

“…டேய் குச்சன்… பள்ளிக்குடத்திலை புதுப்புத்தகங்கள் குடுத்து…என்ரை புள்ளங்கள் கொண்டு வந்தாங்கள்… உனக்கும் கிடைச்சிதா…” பாண் வண்டிலோடு நின்ற கபிரியேல் குரல் கொடுக்கிறான். 

“…நான் இரண்டு மூண்டு நாள் பள்ளிக்குடம் போகவில்லை. குச்சன் சர்வ சாதாரணமாகப் பதில் கூறுகின்றான். புதுப்புத்தகம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவனிடமில்லை. 

“என்ரா.. குச்சன்… பள்ளிக்குடத்துக்குப் போய் இரண்டெழுத்துப் படிச்சு… சோதினை பாஸ் பண்ணினால்தானே ஏதாவது வேலை வெட்டிக்குப் போகலாம்… இல்லாட்டி வாழ்க்கை முழுவதும் மீன் குஞ்சுகள் பொறுக்கி விக்க வேண்டித்தான் வரும்…” பாம்பின் காலைப் பாம்பறியும் என்பது போல தனது வறுமைக் கூடாகக் குச்சனின் வறுமையைப் புரிந்து கொண்ட கபிரியேல் இரக்கப்பட்டு இப்படிக் கூறுகிறான். 

கபிரியேல் வறுமைப்பட்டவன். மிகவும் நல்லவன். அவனது கழுத்தில் ஒரு கறுப்புக் கயிறு… அந்தக் கயிற்றில் யேசுவின் சிலையோடு சேர்ந்ததொரு சிலுவை… 

அவனது நெஞ்சாங்குழியோடு அந்தச் சிலுவை தொங்கிக் கொண்டிருக்கின்றது. அவன் சகல நம்பிக்கைகளையும் இழந்து… அந்தச் சிறுவையை மட்டுந்தான் இப்போது நம்புகிறான்! 

கல்விக் கூடங்கள் என்பன பரீட்சை வினாக்களுக்கான விடைகளைத் தயார்படுத்தும் நிலையங்களே தவிர வாழ்க்கைக்கான போதனைகளையோ சமூக முடிச்சுக்களை அவிழ்க்கும் அல்லது அறுக்கும் போதனைகளையோ செய்யும் சமூக நிலையங்களல்ல… 

என்ற உண்மையை… 

மிக நீண்ட கயிற்றில் ‘கல்வி மேய்ச்சல்’ நடத்திய மிகப் பெரும் கல்வியாளர்களாலேயே புரியப்படாமல் இருக்கும் போது… வறுமை என்ற ஒரு முழக் கயிற்றில் ‘சமூக மேய்ச்சல்’ நடத்திய கபிரியேலால் புரிந்து கொள்ள முடியுமா?… 

கபிரியேலின் கழுத்திலுள்ள கறுப்புக் கயிற்றில் நெஞ்சாங்குழியோடு தொங்குகின்ற யேசுவின் சிலையோடு கூடிய சிலுவை…யேசு இன்று வணக்கத்திற்குரியவர். ஆன்று யேசுவைச் சமூக விரோதியாக்கி… அவனது தலையில் முள் முடியை இறுக்கி… சிலுவையில் அறைந்து சொல்லும்படி ஆணையிட்டதும் அந்த நாட்டின் தலைவன் தான்! 

அரசுகளின் இயல்புகள்… அன்றும் இன்றும் ஒன்று தான்! 

“…டேய் குச்சன்… நேரம் ஏழரை ஆகிது… வித்து போட்டுப் போனால் தானே… பள்ளிக்குடம் போகலாம்…” கபிரியேல் கூறுகிறான். 

”நான் இண்டைக்குப் பள்ளிக்குடம் போகயில்லை” குச்சன் எந்த மனத் தாக்கமுமின்றிக் கூறுகின்றான். 

அதிகாலை ஆறு மணியளவில் இயங்க ஆரம்பிக்கும் இந்தச் சந்தை ஏழரை மணியளவில் உச்ச நிலையை அடைந்து அதன் பின்பு படிப்படியாக இறங்கி ஒன்பது மணியளவில் சந்தை முற்றாகக் கலைந்து விடும். 

இப்போது நேரம்… ஏழரை மணி… சந்தையின் உச்சநிலை… 

மிகவும் அழகானதொரு வெள்ளைக் கார்… குறுக்கு றோட்டில் வந்து கடற்கரைச் சந்தியால் வலது பக்கந் திரும்பி… றோட்டுக்கரையோடு நிற்கின்றது. 

கபிரியேலும் குச்சனும் ஒரு முறை அந்தக் காரைப் பார்த்துக் கொள்ளுகின்றனர். 

காரின் நான்கு கதவுகளும் திறக்கப்பட்டு ஆண்கள் ஆறு பேர் இங்குகின்றனர். இவர்கள் ஆறு பேரும் அடிக்கடி இங்கு வந்து போவார்கள். 

அகிலன், சாந்தசீலன், குமரவேள், மகேந்திரன், மூர்த்தி, பிரதீபன்… இவர்கள் ஆறு பேரும் அரச சேவைகளில் உள்ளவர்கள். கிழமையில் ஒரு நாள் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அன்றைய பொழுதைச் சந்தோஷமாகக் கழிப்பார்கள். 

கழிப்பார்கள். இன்று சாந்தசீலன் வீட்டில் கூழ் காய்ச்சுவதாகத் திட்டமிட்டுள்ளனர். அதற்கான பொருட்களை வாங்குவதற்காகவே இங்கு வந்துள்ளனர். 

‘…அகிலன்… அந்தப் பூவரசு மரத்தடியிலை இருக்கிற பொடியன் வைச்சிருக்கிற மீன் குஞ்சுகளைப் பாத்தியோ… கூழுக்குப் சூப்பராய் இருக்கும்” சாந்தசீலன் கூறுகிறான். சாந்தசீலனினடம் கூர்மையான கிரகித்தல் திறனுண்டு. மிக இளம் வயதில் பொறுப்பான பதவி வகிப்பவன். 

சாந்தசீலனின் பேச்சைக் கேட்ட அவர்கள் குச்சனையும் அவனுக்கு முன்னால் சொப்பிங் பாக்கில் கிடக்கும் மீன் குஞ்சுகளையும் பார்க்கின்றனர். 

குமரவேள்… அவர் ஒரு டாக்டர். ஆவரின் பார்வை குச்சனில் நங்கூரமிடுகின்றது:. 

“…என்ன குமரவேள்… அந்தப் பொடியனை உங்களுக்குத் தெரியுமா…” குமரவேளின் பார்வையை அவதானித்த மகேந்திரன் கேட்கிறான். மகேந்திரன் தினசரி பணத்தோடு பழகும் வாய்ப்புள்ள ஒரு வங்கி ஊழியன். 

“…அந்தப் பொடியனைப் பாத்தீங்களா… பச்சைப்பாலகன்…. மழையுக்கை நனைஞ்ச கோழிக் குஞ்சு போலை… சூறாவிப் போயிருக்கிறான்… சிறுவர் பாதுகாப்பு… சிறுவர்களுக்கு போசாக்குணவு வழங்க வேண்டும்… சிறுவர்களைப் படையில் சேர்ப்பது சட்டவிரோதமானது… சிறுவர்களை வீட்டு வேலைகளுக் கமர்த்துவது சட்ட விரோதம்… இப்படித் தினசரி நாலு பக்கங்களிலிருந்தும் குரல் எழுப்பப்படுகின்றது. ஆனால் நடைமுறைகள்… முழங்கைக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போட்ட கதைதான்…” குமரவேளின் கதையில் மனிதம் கசிகின்றது. 

“… குமரவேள்… நீங்கள் சொல்றதிலை நிறைய யதார்த்த உண்மைகள் இருக்கு…” 

“… நாங்கள் நாட்டோடிருந்தோம்… ஒருவன் ‘பைபிளோடு’ வந்தான்… இப்போது அவன் நாட்டோடிருக்கிறான்… நாங்கள் ‘பைபிளோடு’ நிற்கிறோம்…” 

“… எத்தனையோ அரசியல் முனிவர்களால் சபிக்கப்பட்ட பூமியிது” இது வரை மௌனமாக நின்ற பிரதீபன் கூறுகிறான். பிரதீபன் கல்விக் கந்தோரில் வேலை செய்பவன். அதனால்த் தானோ என்னவோ… அரசியல் வரலாற்றை முதன்மைப்படுத்தி மிகவும் அர்த்த புஷ்டியாகக் கூறுகிறான். 

“என்ன மூர்த்தி… மௌனமாய நிற்கிறியள். நீங்களும் ஏதாவது சொல்லுங்கோவன்…” அகிலன் மூர்த்தியைக் கிண்டுகிறான். மூர்த்தி பிரதேசசபை ஒன்றில் பணி புரிபவன். 

“…பூவரசு மரத்தடியிலை இருக்கிற அந்தப் பொடியனைப் போல ஆக்கள் மௌனமாய் இருப்பதும்… எங்களைப் போல ஆக்கள் அதிகமாகக் கதைக்கிறதுந்தான்… இன்றைய நிலைக்கு முக்கிய காரணமெண்டு நான் நினைக்கிறன்… மூர்த்தி ஆணி இறுக்கியது போல் கூறுகின்றான். 

“…கூட்டத்தில் கூடி நின்று கூடிப் பிதற்றலன்றி… நாட்டத்திற் கொள்ளாரடீ கிளியோ! நாளில் மறப்பாரடீ…” பாரதியின் இக்கவிதை வரிகள் இன்று மட்டுமல்ல. இன்றும் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு வாழத்தான் போகின்றது…” உச்ச நீதிமன்ற நீதிபதியின் தோரணையில் ஆனால் மிகவும் நாசுக்காக தன் கருத்தை  வெளிப்படுத்துகிறான் அகிலன். 

குச்சன் பாவம்… அவன் இவர்களின் பேச்சுக்களை அவதானிக்கவில்லை… கவனித்தாலும் அவனால் இவர்களின் சூக்குமமான பேச்சுக்களைப் புரிந்து கொண்டிருக்க முடியாது. ஆனால் கபிரியேல் இவர்களது பேச்சுக்களை அவதானித்துக் கொண்டு நின்றான். அவனாலும் சரிவரப் புரிந்திருக்க முடியாதென்றுதான் கூற வேண்டும். 

சாந்தசீலனின் தலைமையில் நண்பர்கள் கூழுக்கான பொருட்களை வாங்குவதற்காக காரடியிலிருந்து புறப்படுகின்றனர். 

“…சீலன் அந்தப் பொடியனிட்டை உள்ள மீன் குஞ்சுகளை வாங்குவமா…” குமரவேளின் மனம் இன்னமும் குச்சன் மீதே நங்கூரமிட்டு நிற்கின்றது. 

“…வாங்கலாம்… இப்ப கேட்டால் டபிள் விலை சொல்லுவான். திரும்பி வரயுக்கையெண்டால் நேரம் போகிடும் மலிவாய் வாங்கலாம்” சீலன் பதில் கூறுகிறான். 

“…ஐயா வாங்கோ… உடன்மீன்… மலிவு விலை குச்சன், சீலனையும் அவனது நண்பர்களையும் பார்த்துக் குரல் கொடுக்கிறான். 

சீலனும் நண்பர்களும் குச்சனைக் கடந்து செல்கின்றனர். 

குச்சன் பாண் வண்டிலைப் பார்க்கின்றான்… நாலைந்து பாண்களும், இரண்டு சீனி பணிசுகளும் மட்டும் கிடக்கின்றன. 

நேரம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

பாணும் சீனிபணிசும் முடியப் போகின்றது என்ற மனவேக்காட்டில் குந்தியிருந்த குச்சன் எழுந்து நின்று தலையைச் சொறிகிறான். 

‘பத்து ரூபா… குறைப்பம்…” குச்சனின் மனம் கூறுகின்றது. “ஐயா… வாங்கோ… ஐம்பது ரூபா…” குச்சன் குரல் கொடுக்கிறன். 

கபிரியேல் குச்சனுக்கு கடனாக பாணும் சீனி பணிசும் கொடுப்பான். அவ்வளவுக்கு கபிரியேல் நல்லவன். ஆனால் முதலாளியிடம் கணக்கை ஒப்படைக்கும் போது… முதலாளி கபிரியேலைத் திட்டுவான். 

நேரம் எட்டை நெருங்கி விட்டது… பாண் வண்டிலுக்குள் சீனி பணிஸ் கிடந்த இடம் வெறுமையாகக் கிடக்கின்றது. 

“கபிரியண்ணை சீனி பணிஸ் முடிஞ்சிதா…” குச்சன் மனம் பொறுக்க முடியாமல் கேட்கிறான். 

“ஒமடா குச்சன்… சீனி பணிஸ் முடிஞ்சிது… பாணும் முடியப் போகிது…” கபிரியேல் வேதனையோடு கூறுகிறான். 

சீலனும் நண்பர்களும் வருகின்றனர். ஒவ்வொருவரின் கைளிலும் ஒவ்வொரு சொப்பிங்க பாக்… 

“…தம்பி… மீன் குங்சுகள் என்ன விலை…” சாந்தசீலன் குச்சனிடம் கதை கொடுக்கிறான். அவனது கதையில் இலேசான நளினம்…! 

“நாப்பது ரூபா…” மீண்டும் பத்து ரூபா குறைத்து விலை கூறுகிறான் குச்சன். 

“என்ன தம்பி… முள்ளு முத்தாத இந்த மீன் குஞ்சுகள் நாப்பது பெறாது…” அந்த மீன் குங்சுகளை வாங்க வேண்டுமென்ற முடிவு சீலனுக்குண்டு… அதைக் காட்டிக் கொள்ளாமல் புறா இருக்க முட்டை எடுக்கும் தந்திரத்தில் பேசுகிறான். மீன்குஞ்சுகள் வாங்குவதில்க் கூட உளவியல் தந்திரம்…! 

“நீங்கள் எவ்வளவு கேக்கிறியள்” மூளை தலைமண்டைக்குள் அமைந்திருப்பதாலோ… என்னவோ தலையைச் சொறிந்த படி குச்சன் கேட்கிறான். 

“…என்ரை மதிப்புப்படி ஒரே பேச்சு இருபது ரூபா தாறன்…” இருபத்தைந்து ரூபா கொடுக்கலாம் என்ற தனது முடிவை வைத்துக் கொண்டு இருபது ரூபா கேட்கிறான். 

மீன் சந்தைக்குள்ளும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அனுபவங்கள் நிறைய உண்டு, கபிரியேல் அவதானித்தபடி நிற்கின்றான்… அவனுடைய அனுபவத்தனத்தில் இப்படி எத்தனையோ சூட்டுக்காயங்கள் உண்டு!… குச்சன் பாவம் அதிர்ந்து போய் நிற்கிறான்.ன 

”…என்ன தம்பி கடுமையாய் யோசிக்கிறாய்… நட்டமெண்டால் வைச்சுக்கொள். நான் போறன்…” குச்சனின் மனநிலை தனக்குச் சாதகமாக இருப்பதைப் புரிந்து கொண்ட சீலன் இரண்டாவது தாக்குதலை நடத்துகிறான். 

அதிகாலையில் ஒரு கிலோமீற்றர் தூரம் நடந்து… கடற்காற்றின் காலைக்குளிர்… கரம்பை முட்களாய் உடலைக் குத்த… மீனவர்களால் கழித்து எறியப்படும் மீன் குஞ்சுகளை ஓடியோடிப் பொறுக்கி… களிசானிலிருந்து நீர் சொட்டச் சொட்ட இரண்டு மணித்தியாலகளுக்கு மேலாகக் காத்திருந்து… முடிவு… தங்கச்சிக்கு ஒரு சீனி பணிஸ். அதுதான் போகட்டும் ஐஞ்சு சீவன்களின் காலைச் சாப்பாட்டிற்கு ஒரு பாண் வாங்க முடியாத நிலை…! 

“…சரி… தம்பி… ஐஞ்சு ரூபா கூடத்தாறன்… மீன் குங்சுகளைத் தா…” குச்சன் சஞ்சலப்பட்டுப் போய் நிற்பதை உணர்ந்த சீலன் தனது மூன்றாவது தாக்குதலை நடத்துகிறான். 

குச்சன் வீழ்ந்து விட்டான். 

சீலன் மீன்குஞ்சுகளோடு புறப்படுகின்றான். 

குச்சனின் பிஞ்சுப் கைகளுக்குள் இருபத்தைந்து ரூபா… திகைத்துப் போய் நின்கின்றான்!குச்சன்! 

“…என்ன குச்சன் யோசிக்கிறாய்… யோசிக்காதை… எங்களைப் போலை ஆக்களுக்கு இதுதான் முடிவு…” 

“…யேசு கூட ஒரு முறைதான் முள் முடி தாங்கினவர்… ஒரு முறையை சிலுவை சுமந்தவர்… ஆனால் எங்களுக்கு…” 

தினசரி வறுமை என்ற சிலுவை… கண்ணீர் என்ற முள்முடி எங்களைப் பெட்டியுக்கை வைக்கும் வரை இவைகளை இறக்கப் போறதில்லை. 

குச்சன் பச்சைப்பாலன் … அவனுக்கு இந்த அனுபவப் பேச்சுக்கள் புரியப் போவதில்லை என்பது கபிரியேலுக்குத் தெரியாமலில்லை. இருந்தும் குச்சனுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைப் புரிந்து கொண்டால் ஏற்பட்ட உணர்வு மேலீட்டால் தனது மனதில் பட்டத்தை அடிப்படியே கூறுகின்றான். 

கிபிரியேல் மிகவும் அனுபவசாலி. சமுகத் தாக்கங்களுக்குள்ளாகி உணர்ச்சி வசப்படும் போது தோன்றுபவைகளை அப்படியே கூறிவிடுவான். ஆனால் அவனது பேச்சில் நிறைய அர்த்தங்கள் இருக்கும்…! 

பாவன் குச்சன் அதே இடத்தில் விறைத்துப் போய் நின்கின்றான்! 

வறுமையின் யதார்த்த நிலை… வறுமைக்கான பின்புலம் வறுமையின் வரலாறு… இவைகளைத் தொகுத்துப் பார்த்துச் சிந்திக்க அவனால் முடியுமா?… 

பாம்பின் காலை பாம்பறியும் என்பார்களே… குச்சனின் மனவேதனையைத் தனதாக்கி உணர்கிறான் கபிரியேல் 

“…டேய் குச்சன்… என்னடா யோகிக்கிறாய். ஆரைக்கிலோ பச்சை அரிவு வாங்கிக் கொண்டு போய்க்குடு… கஞ்சி காய்ச்சிக் குடிச்சிட்டுப் படுக்க வேண்டியது தான்… “எங்களைப் போலை ஆக்கள் தங்கச்சிக்கு சீனி பணிஸ் வாங்கிக் குடுக்க ஆசைப் படக்குடாது… சுவையாய் சாப்பிட ஆசைப்படக் கூடாது… எதலையும் ஆசைப்படக் கூடாது. 

தினசரி… பசிக்குச் சாப்பிட்டால் அது போதும்…” இப்படிக் கூறிய கபிரியேல் தொடர்ந்தும் பாண் வண்டிலைத் துப்பரவாக்குவதில் ஈடுபடுகிறான். 

பாண் வண்டிலைத் துப்பரவாக்கியபடியே அவன் கதைக்கின்றான்… தனது பேச்சை யாராவது கேட்க வேண்டுமென்று அவன் எதிர்பாரக்கவில்லை… எதிர்ப்பார்ப்பதும் இல்லை…! 

அவன் பேசுகின்றான்… 

“… பிறந்த உடனை… இந்த மண்ணிலை என்ரை பிறப்பை உறுதிப்படுத்த பிறப்புப் பதிவு செய்ய வேணும்.”

“… பதினாறு வயது வந்திட்டால்… இந்த நாட்டுப் பிரசை எண்டதை உறுதிப்படுத்த அடையாள அட்டை எடுக்க வேணும்..” 

“..எல்லாப் பதிவுகளையும் செய்து போட்டு… அடுப்புக்கல்லிலை தலையை வைச்சு… இரைப்பபை வலிப்பெடுத்துப் படுத்திருக்கிறம்…” 

“அதுக்குப் பிறகு ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த வாக்குரிமைப் பதிவுசெய்ய வேணும்” 

“… அதுக்கொரு பதிவில்லை…! அதைப் பற்றிக் கேட்டால்… அதுக்குப் பதிலுமில்லை…!?”

“இரைப்பை வலிப்பெடுத்துச் செத்துப்போனால் அதுக்கொரு பதிவுண்டு… மரண அத்தாட்சிப்பத்திரம்!…?” 

“…எங்கடை வாழ்க்கை. பாண் போறணை மாதிரி வேந்து கருகிப் போறது தான் முடிவு…” இப்படிக் கூறிய படி வண்டிலைத் தள்ளிக் கொண்டு கபிரியேல் புறப்படுகின்றான். 

குச்சன் குந்தியிருந்த கல்லுமட்டும் கிடக்கிறது. குச்சனைக் காணவில்லை…! 

நாளைக்குக் காலை இதே நேரம் இதே இடத்தில் இருவரும் சந்திப்பார்கள்…!… 

– ஜீவநதி, தை 2010. 

– மண்ணின் முனகல் (சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சகம், கொழும்பு.

கே.ஆர்.டேவிட் கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *