பலிகிடா
கதையாசிரியர்: மணிராம் கார்த்திக்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 51

அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற சுந்தரம்.
தன் மனைவி இறப்புக்கு பின், தன் ஒரே மகள் சுதாவின் மீது அதீத பாசம் கொண்டவர். மனைவியின் இறப்பை மறக்க முடியாமல் , மகள் மீது மொத்த பாசத்தையும் காட்ட ஆரம்பித்தார். மகள் சுதாவை நன்கு படிக்க வைத்தார். மகளே தன் உலகம் என்று வாழ்ந்து வந்தவர்.
செல்லம் கொடுத்து வளர்த்த சுதா , தன் திருமண விசயத்தில் தந்தையை எதிர்த்து முடிவு எடுத்தாள்.
மாற்று சாதியில் பக்கத்து ஊரில் ஒருவரை காதலித்து , திருமணம் செய்து கொண்டாள் சுதா. தந்தை எதிர்ப்பை மீறி இந்த முடிவு எடுத்தாள்.
அவர் விசாரித்ததில் பையன் முரடன் , கோவக்காரன் , குடிகாரன் ,கோவம் வந்தால் கொலையும் செய்யும் அளவுக்கு செல்பவன் , படிக்காத காட்டு மிராண்டி , என்று பக்கத்து ஊர்கரர்களின் பேச்சு , சுந்தரத்தை மேலும் நிலைகுலைய செய்தது. பையனுக்கு சொந்த பந்தங்கள் யாரும் இல்லை. மகளின் வாழ்க்கை என்ன ஆகுமோ? என்ற கவலை அவருக்கு தொற்றி கொண்டது.
அதனால் தடுத்தார் சுந்தரம். மகள் சுதா அவரின் முடிவை ஏற்க்கும் எண்ணத்தில் இல்லை. சுதாவுக்கும் அந்த பையனுக்கு எந்த விதத்தில் ஒத்து போனது என்று தெரியாமல் தவித்தார் சுந்தரம். மிரட்டி காதலிக்க வைத்தானோ? , இல்லை ஏதேனும் பொய்களை கூறி ஆசையை உண்டாக்கி சுதாவின் மனதை மாற்றி விட்டானோ? என்ற குழப்பம் தந்தை சுந்தரத்தை விடவில்லை. என் மகளை ஏமாற்றி விட்டானே? என்ற கோவம் அந்த பையன் (மருமகன்) மீது.
இருப்பினும் தன் முடிவில் வெற்றி பெற்றாள் சுதா. திருமணம் முடிந்து அப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்க வந்தாள். சுந்தரம் ஏமாற்றத்தின் உச்சியில் இருந்ததால், அவர்களை ஏற்று கொள்ளவில்லை. அவர்களை பார்த்ததும் வீட்டு கதவை சாத்தி கொண்டார் சுந்தரம்.
பல மாதங்கள் ஓடின. சுதாவிடம் இருந்து அழைப்புகள் வந்தாலும் அதனை கண்டு கொள்வது இல்லை. அவளின் இந்த முடிவு அவருக்கு தன் மனைவி பார்வதியின் ஞாபகத்தை அதிக படுத்தியது. தனிமையில் தவித்தார்.
தந்தையை தன்னுடன் அழைத்து செல்ல எவளோ முயற்சி செய்தும் மகள் சுதா தோற்று போனாள்.
சுதாவை பற்றி அக்கம் பக்கத்தினர் ஏதேனும் கூறினாலும் காதில் வாங்க மாட்டார்.
நாளைய தினம் தீபாவளி,
மகள் சுதாவின் செல்போன் அழைப்பு. மீண்டும் தவிர்த்தார் தந்தை சுந்தரம்.
கண்களை மூடிய படி அந்த இருக்கையில் அமர்ந்து இருந்தார் சுந்தரம். தீபாவளி தினம் என்றால் சுதாவை கையில் பிடிக்க முடியாத சந்தோஷத்தில் இருப்பாள் , அந்த பழைய நினைவுகளை நினைத்து கண்ணீருடன் அமர்ந்து இருந்தார் சுந்தரம்.
செல்போன் சப்தம் சிணுங்கியது.
வாட்ஸ் அப் மூலமாக சுதாவின் வாய்ஸ் தகவல் வந்தது. தவிர்க்க நினைத்தார். கை பட்டு சுதாவின் வாய்ஸ் தகவல் கேட்க துவங்கியது.
சுதாவின் கதறல் சப்தம் , “ அப்பா என்னை காப்பாத்துங்க! , ஏய் என்னை தொடதே! விட்டு விடு , அப்பா வந்தார்னா நீ என்ன ஆவேன்னு தெரியாது , “ என்ற தகவல் , சுந்தரத்தின் காதில் விழுந்தது. அந்த தகவலில் அந்த முரடனின் சப்தம் பயங்கரமாக கேட்டது. சுந்தரம் தடுமாறினார்.
“சுதா , சுதா என்னடா ஆச்சு? “ என்று கண்களில் கண்ணீருடன் , சுதாவை தொடர்பு கொள்ள முயற்சித்தார்.
சுதா போன் எடுக்கவில்லை. சுந்தரம் மீண்டும் மீண்டும் முயற்சித்தார் , பலனில்லை.
வீட்டை பூட்டாமல் பக்கத்து ஊருக்கு தன் இரு சக்கர வாகனத்தை வேகமாக விரட்டினார்.
அவரின் அவசர பயணம் பக்கத்தில் இருப்போருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“என்ன ஆச்சு ? ஏன் இப்படி அவசர அவசரமா போறாரு. அவரு முகம் வேற சரியில்லையே? “ என்று அக்கம் பக்கத்தினர் பேச்சு கூட அவரின் காதில் விழுவதாக தெரியவில்லை.
அங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம், தன் மகள் சுதா குடியிருக்கும் வீடு.
சுந்தரத்தின் மனதில் கோவம் , கொலை வெறியாய் மாறிவிட்டது , என் பொண்ணை என்ன சித்திரவதை பண்றானோ தெரியல என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருக்க , வாகனத்தின் வேகம் அதிகம் ஆனது.
சில நிமிட பயணம் , மகள் சுதாவின் வீட்டை அடைந்தார் சுந்தரம்.
வீடு திறந்து இருந்தது.
“சுதா , சுதா , “ என்று கதறிய படி வீட்டில் உள்ளே நுழைந்தார் சுந்தரம்.
வீட்டில் ரத்த கரை , வீட்டு வாசலில் இருந்து , உள்ளே அந்த அறையை நோக்கி சென்று கொண்டு இருந்தது.
அதை பார்த்ததும் , மேலும் அதிர்ச்சி சுந்தரம்.
சுந்தரத்தின் சப்தம் மட்டுமே அந்த வீட்டில் இருந்தது.
அந்த அறையின் கதவை திறந்தார் சுந்தரம்.
“என் அம்மா மீனாட்சி , எனக்கு பிள்ளையாய் , வந்து இருக்கிறாள்! “ என்ற வாசகம் அடங்கிய பலகை அவரின் கண்களில் பட்டது.
அதனை படித்த படி, மகளை தேடினார் , அறையில் யாரும் இல்லை.
வெளியில் மாடியில் இருந்து பேச்சு சப்தம் கேட்க துவங்கியது. உடனே பேச்சு சப்தம் கேட்க்கும் அந்த மாடியை நோக்கி நகர்ந்தார் சுந்தரம்.
“அப்பா , நான் உங்க சுதா – நீங்க சொல்வீங்கள , உனக்கு பொண்ணு பிறந்தா உன் அம்மா பெயரை தான் வைக்கனும்னு , இதோ என் அம்மாவ பாருப்பா! “ என்று தன் ஒரு மாத குழந்தையை , படி ஏறி வந்து கொண்டு இருந்த சுந்தரத்திடம் காட்டினாள் சுதா.
“அப்பா, என்னை மன்னிச்சிருங்க , உங்கள எங்க வீட்டுக்கு வர வைக்க வேறு வழி தெரியல , இது ஒரு நாடகம் , கீழ சிந்திருக்க ரத்தம் ஆட்டு ரத்தம். எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கா , இன்றோடு ஒரு மாதம் ஆகிவிட்டது. உங்கள ஒரு மாதமா வர வைக்க எத்தனையோ முயற்சி பண்ணி , அதுல நாங்க தோத்து போய்ட்டோம். நான் பிறந்த பொழுது தான் , எனக்குன்னு யாரும் இல்லை , அதே நிலைமை என் பிள்ளைக்கு வரகூடாது ன்னு தான் இந்த நாடகம். உங்க மருமகன பத்தி கெட்ட விஷயம் மட்டும் தான் நீங்க கேள்வி பட்டு இருக்கீங்க , அவர் ரொம்ப நல்லவர் , கெட்டவங்களுக்கு தான் கெட்டவர். நான் உங்க கிட்ட இருந்த போது உணர்ந்த அந்த பாதுகாப்பு உணர்வை , அவர் கூட இருக்கும் போது உணர்ந்தேன். எனக்கு வந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்றினார். அவர் நெனச்சிருந்தா யாரும் இல்லாத அந்த இடத்தில் என்னைய என்ன வேணாலும் பண்ணிருக்கலாம் , அவர் அப்படி பண்ணல. காப்பாற்றி என்னைய நம்ம வீட்ல பத்திரமா சேர்த்தார்.” என்று சுதா தன் கணவரை பற்றி பெருமையாக கூறி கொண்டே வந்தாள்.
அவளின் பேச்சு சுந்தரத்தின் காதுகளில் விழவில்லை. அவரின் பார்வை சுதாவின் கையில் இருந்த அந்த பச்சிலம் குழந்தையின் மீது தான் இருந்தது.
“மீனாட்சி , மீனாட்சி “ என்று தன் பேத்தியை கையில் வாங்கி கொண்டார் சுந்தரம் , கண்களில் ஆனந்த கண்ணீரோடு.
காதலை எதிர்ப்பது அல்ல என் நோக்கம் , காதலித்து திருமணம் செய்து , வாழ்நாள் கடைசி வரை ஒற்றுமையாக, கணவன் மனைவியாக சேர்ந்து வாழ வேண்டும். அவசர காதல் , அவசர கல்யாணம் , அவசர விவாகரத்து , என்று மாறி உள்ள இன்றைய திருமண வாழ்க்கையாக என் மகளின் வாழ்க்கை மாறிவிட கூடாது என்று தான் ஒவ்வொரு பெற்றோரும் , காதலை எதிர்கிறார்கள்.
“வாங்க , மாமா , நான் தான் உங்க மருமகன் , நீங்க கேள்விபட்ட முரடன் , கோவக்காரன் , படிக்காதவன் , அநாதை. என் பெயர் அறிவு. அறிவே இல்லாத உனக்கு யார்ரா , அறிவுன்னு பெயர் வச்சதுன்னு கேட்கிறீங்களா? , இந்த உலகத்தில் வாழ்ற அளவுக்கு அறிவு இருக்கு மாமா. உங்க பேத்திய அப்புறம் கொஞ்சிக்கலாம் , வாங்க முதல்ல சாப்பிடுங்க. நீங்க வர்றீங்கன்னு ஒரு முழு ஆட்டை உரிச்சு வச்சிருக்கேன். போதும் என்ற அளவுக்கு எங்க வீட்ல விருந்து சாப்பிடுங்க மாமா. எங்களுக்கு துணையா இருங்க. நான் அனாதையா வாழ்ந்த மாதிரி, என் பொண்ணு வாழ கூடாது. அதான் நீங்க எங்க கூட இருந்திருங்க.“ என்று சுதாவின் கணவன் அறிவு கூறினான்.
“ உங்க கோவம் நியாயமானது தான் அப்பா. அந்த கோவத்தினால் ,உங்க பேத்தியோட வாழ்க்கைய பலிகிடா ஆக்கிறாதிங்க அப்பா. அவளுக்கு தாத்தா நீங்க வேணும்” என்று மகள் சுதாவின் பேச்சு , சுந்தரத்தை சற்று யோசிக்க வைத்து கொண்டு இருந்தது.
“எனக்கும் , என் பேத்திக்கும் எங்க ரூம் இருக்கு சொல்லுங்க! “ என்று அப்பா தன் சம்மதத்தை தெரிவித்தார்.
சுதா-அறிவு இருவரும் மிக்க மகிழ்ச்சியில்.
இன்றைய உலகில் திருமண வாழ்க்கை , கேலி கூத்தாகி கொண்டு உள்ளது. சகிப்பு தன்மை இல்லாமல் கணவன்-மனைவி இருவரும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு விவாகரத்து , செய்து இரண்டவது , மூன்றாவது என்று எண்ணிக்கையில் திருமணம் செய்து வருகின்றனர்.
கணவன் மனைவி இருவரும் விட்டு கொடுத்து வாழ்ந்தாலே போதும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். யார் , எதுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என்பது தான் இப்போதைய திருமண வாழ்க்கையில் பிரச்னை.
இந்த பிரச்சனை , பெற்றோரின் சம்மதத்தோடு நடக்கும் திருமணத்திலும் , காதல் திருமணம் என்று இரண்டிலும் இருக்கிறது.
பெற்றோர்கள் காதலை எதிர்ப்பது இது ஒரு முக்கிய காரணம்.
காதலே ஜெயம்…
![]() |
என் பெயர் : மணிராம் கார்த்திக். பிறந்த வருடம் : 25-ஜனவரி -1987 ஊர் - மதுரை மாவட்டம் , அனுப்பானடி . அப்பா : மணிராம் - அம்மா : மகாலட்சுமி - மனைவி : சித்ரா. நான் BCOM பட்டதாரி. 2007ம் ஆண்டு கல்லுரி படிப்பை முடித்தேன். தற்போது தனியார் ஜவுளி சார்ந்த கடை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறேன். எனக்கு கதை எழுதும் ஆர்வம் ,…மேலும் படிக்க... |
