பரிவானது வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2025
பார்வையிட்டோர்: 169 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குழந்தைகளின் பேச்சரவம் கூட இல்லை. நிசப்தம்… கடிகாரம் ஓடும் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. இன்னும் படுக்கையில் இருந்தான். கதவு ஒரு பக்கமாகத் திறந்து கிடந்தது. அப்படியெங்கும் வெளிச்சம்… வெயில் கொஞ்சம் ஏறியிருந்தது. இப்போதெல்லாம் அவன் கதவை ஒட்டிய இடத்தில்தான் படுத்துக் கொள்கிறான். தூக்கம் கலையாது போனபடியே இருக்க அருகே நடந்துபோகும் சப்தங்கள் கேட்டபடியே இருக்கும். தண்ணீர் கொண்டு போகும்போது பானையிலிருந்து சில துளிகள் சிதறித் தெறிக்கும். உள்ளேயிருந்து அவன் மனைவியின் குரல் வரும்.

“அப்பா மேல சிந்தாம தண்ணி கொண்டு வாடி…”

கடந்து போகும் மகள் திரும்பிப் பார்த்துப் போவாள். இன்னும் சில நாள்களில் உறக்கம் விடுபட்ட பின்பும் படுக்கையிலே கிடப்பான். அரைக்கண் வெளிச்சம். கடந்து போகும் பாதம் தெரியும். வளைந்து விரலோடு இறுகிப்போன மெட்டியும் முண்டுகள் போல வெடித்த விரல்களும் தெரியும். கண்ணை மூடிக்கொள்வான்.

முன்பு குழந்தைகளோடுதான் உறங்கிக் கொண்டிருந்தான். காலையில் அவள் எழுப்பிவிடுவாள்.

“எழுந்து அப்பிடிப் படுங்க. தண்ணி எடுக்கணும். ”

சுவரோரமாக ஒண்டியபடிப் படுத்துக்கொள்வான். எப்போதும் முதலில் கிளம்புவது அவளாகத்தான் இருக்கும். சமையலை முடித்துவிட்டு எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு அவள் கிளம்புவாள்.

குழந்தைகள் தானாகச் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் போய்விடுவார்கள். போகும்போது கதவைச் சாத்திவிட்டுப் போவார்கள்.

அவன் எழுந்து கொள்ளும்போது யாருமற்று இருக்கும் வீடு. பின் கதவைத் திறந்து மரத்தடியில் கிடக்கும் கல்லில் உட்கார்ந்து கொள்வான். சாப்பிட வேண்டும் என்றே தோணாது. முருங்கை மரத்தில் நிறைய பூக்கள். உதிர்ந்துபோன சருகுகள்.

பாத்ரூமின் சிமெண்ட் தொட்டியில் குருவி அமர்ந்திருக்கும். வெயில் ஏறிய பின்பு குளிக்கப் போவான். அடுத்த வீடுகளின் பின்புறத்தில் பெண்கள் நிதானமாகப் பேசியபடியோ, துவைத்த படியோ இருப்பார்கள். அவன் பாத்ரூமுக்குள் போனதுமே கொடியில் துண்டு கிடக்கும். தினமும் அது சின்னவனின் வேலை. காலை ஸ்கூலுக்குக் கிளம்பும் முன்பு கொடியில் துண்டை எடுத்துப் போட்டுவிட்டு, சோப் வைத்துவிட்டு வருவான்.

தண்ணீர் சில்லென்று இருக்கும். குளித்தபடியே ஆகாசத்தைப் பார்ப்பான். வெளுத்துப் போயிருக்கும் கண்ணாடியில் தலைசீவ வரும்போது வீடெங்கும் ஈரத்தில் பதிந்த அவன் பாதச்சுவடு இருக்கும். கண்ணாடியைப் பார்த்தபடியே இருப்பான்.

நெற்றி ரொம்பவும் மேலேறிவிட்டது. கண்கள் கூட உள்ளே போய்தான் இருக்கின்றன. ஒரு வாரத்துக்கு முன்பு அவன் மனைவியே சொன்னாள்.

“ஏன் இப்பிடியிருக்கீங்க…’ “எப்படி!”

”கண்ணாடில முகத்தைப் பாருங்க தெரியும். வேலைக்குப் போகலைன்னா இப்பிடித்தான் இருக்கணுமா.’

இருவரும் பேசாமல் இருப்பார்கள். அவனுக்கு வேலை போய், ஆறு மாதத்துக்குள்தான் இருக்கும். எப்போதும் அவன் நிரந்தரமாக வேலை பார்த்தது இல்லை. எல்லா வேலைகளும் அவன் மெலிந்த திரேகத்துக்கு ஒத்து வருவதில்லை. ஹோட்ட லில் பில் போடும் வேலையைத்தான் பெரும்பாலும் பார்த்து வந்தான். இப்போது அதுவும் போய்விட்டது. ஹோட்டலையே

மூடிவிட்டார்கள். அவன் கேட்ட இடத்தில் கூப்பிடுவதாகச் சொன்னார்கள்.

அவள், கல்யாணமான போதிருந்தே வேலைக்குச் செல்கிறாள். கலர் கலராக வெட்டுத் துணிகள் நிறைந்து கிடக்கும் நீண்ட தாழ்வாரத்தின் கீழ் தையல் மிஷின் ஓடியபடியிருக்கும். நிறைய பெண்கள் அங்கே வேலை பார்த்தார்கள்.

மதியம் கூட குழந்தைகள் சாப்பிட வருவது கிடையாது. அவன் பெரும்பாலும் காலைச் சாப்பாட்டை மதியம் சாப்பிடுவான். சாம்பார் பாத்திரமும் மேலே மூடிவைத்த வடையுமிருக்கும். வடையின் ஏதாவது ஒரு பகுதி கொறிக்கப்பட்டிருக்கும். சரியாகப் போகும்போது வடையின் ஓரத்தைக் கிள்ளித் தின்று விட்டுப் போவாள் பெரியவள். சில சமயம் அவன் பார்த்துக் கொண்டிருப்பான்.

மதியம் உறக்கம் வராது. பின் கதவோரம் உட்கார்ந்துகொள்வான். எதிர் சுவரில் அணில் ஓடிக்கொண்டிருக்கும் அல்லது ஓட்டில் காகம் எதையாவது காலில் வைத்து தின்றபடியிருக்கும்.

குழந்தைகள் வருவதற்கு முன்பே வெளியே கிளம்பிவிடுவான். கொடியில் தொங்கும் சட்டையில் கை எடுத்துவிடப்பட்டிருக்கும். பையில் இரண்டு ரூபா இருக்கும். அவளுக்கு எப்போதும் சட்டைக் கையை மடக்கிப் போட்டுக்கொண்டால் பிடிப்பதில்லை.

அவன் சட்டையை எடுத்தவுடனே இயல்பிலே கை மடித்து விடும். அவள் பையில் காசு வைப்பதுதான் அவனுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. சில தடவைகள் அடுப்படி அலமாரியில் இருந்த பிளாஸ்டிக் டப்பாவில் அந்த ரூபாயைப் போட்டு விடுவான். நிறைய நாள்கள் அப்படியே செய்தான். ஒரு தரம் பெரிய பெண்தான் பார்த்து அம்மாவிடம் சொன்னாள்.

“இந்த டப்பாவில நிறைய ரூவா இருக்கும்மா…” ‘“ஏது…”

“தெரியலே, பாரேன்.’

ரெண்டு ரூபாய், ஒரு ரூபாய் தாள்கள் கிடந்தன. எல்லா வற்றையும் மடியில் கொட்டி எண்ணி முப்பது ரூபாய் என்று

சொன்னாள். அப்போதும் அவன் உள்ளே உட்கார்ந்து கொண்டு தானிருந்தான். உள்ளிருந்து அவள் பேசுவது கேட்டது.

“உங்க அப்பா போட்டாரான்னு கேளு.”

அவள் கிட்டத்தில் வந்து கேட்டாள்.

“அப்பா. இது உன் ரூபாயா”

“இல்லை”

அவன் மறுப்பதற்குள் உள்ளிருந்து அவளே வந்து கேட்டாள்.

“எதுக்கு இப்படி செய்றீங்க?’

அவன் பேசாமல் இருந்தான். பெரிய பெண் அம்மாவிடம் சொன்னாள்:

”அம்மா நான் வச்சுக்கிடவா. வளையல் பாசி வாங்கலாம்” அவன் அவளையே பார்த்தான். அவள் பெண்ணிடம் சொன்னாள்.

“எல்லாத்தையும் அப்பாகிட்ட கொடு.”

அவன் மறுத்தான்.

”வேணா சுசி, நீயே வச்சுக்க. ” அவன் பதில் சொன்னவுடன் அவள் அழ ஆரம்பித்தாள். எதற்கு எனத் தெரியாத அழுகை. கேவி, கேவி அழுதாள். சுசி பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவள் அழுதபடியே அடுப்படியில் போய் சுருண்டுகொண்டாள். குழந்தைகள் பயந்து மிரண்டுபோயிருந்தன. சுசி அம்மாவின் பக்கம் போய்ப் படுத்துக்கொண்டாள். இது அவனுக்கு இன்னும் கஷ்டமாயிருந்தது.

அன்று வெளியே கிளம்பினான். மாலையிலும் வெயில் இருந்தது.நடந்து ஸ்டேஷன் தாண்டி வந்தான். ஊரின் வெளி வரை வந்தது போல் இருந்தது. அவன் எப்போதும் பார்ப்பது போல ஊரைப் பார்த்தான். வெளியிலிருந்து பார்க்கும்போது ரொம்பவும் அழகாக இருந்தது. வருத்தமாக இருந்தது.

முன்பெல்லாம் கூட அவன் வேலை பார்க்கும் இடத்திலே தங்கிக் கொள்வான். குழந்தைகளும் அவளும் எப்போதும் இங்கே வருவதும் போவதுமாகவே இருப்பான்.

இருட்டும்வரை அன்று பாலத்தில் உட்கார்ந்து இருந்தான். ஊரெங்கும் வெளிச்சம் படர்ந்த பின்பு வந்தான். நகரம் இன்னும் சந்தடியோடிருந்தது. கிருஷ்ணன் கோவில் பக்கம் வரும்போது நாராயணனைப் பார்த்தான். அவனே சொன்னான்.

‘பழைய முதலாளி புதுசாகடை போடப் போறாராம். உங்களைப் பாத்தாக் கூடச் சொல்லச் சொன்னாரு.”

“எங்க”

“மேட்டில, கோவில் பக்கம்”

“எப்ப”

“மூணு மாசமாகும்”

“பார்த்தா வரேன்னு சொல்லு முதலாளிகிட்டே.”

“இப்ப எங்க போறீங்க, வீட்டுக்கா.”

அவன் பதில் சொல்லவில்லை. நாராயணன் அவனை செகண்ட் ஷோ கூட்டிட்டுப் போனான். பாதிப் படத்திலே அவன் எழுந்து வெளியே வந்தான் வீட்டுக்கு வரும்போது நடு இரவாகி யிருந்தது. விளக்கு எரிந்துகொண்டிருந்தது. கதவு தட்டும் முன்பு திறந்துகொண்டது. அவள் விழித்துக் கொண்டிருந்தாள். அவன் உள்ளே போனதும் கேட்டாள்.

“சாப்பிடலையா…”

“வேணாம். சாப்பிட்டாச்சு.”

“பொய் சொல்றீங்க. ஏன் இப்படியிருக்கீங்க.”

அவன் சட்டையைக் கழட்டிக் கொடியில் போட்டுவிட்டுக் கதவில் சாய்ந்து உட்கார்ந்தான். குழந்தைகள் உறங்கிக் கொண்டி ருந்தார்கள்.

“நாளையிலே இருந்து நான் வேலைக்குப் போகலே…” என்றாள்.

“ஏன்”

“என் ரூவா யாருக்கும் வேண்டான்னு ஆகிப்போச்சுல்ல…”

அவன் பேசவில்லை. அவன் திரும்பவும் அழுதாள். விம்மிய படியே அவன் மேல் சாய்ந்துகொண்டாள். அவன் அப்படியே யிருந்தான். அவன் மேல் படும்படியாக அவள் முகத்தை வைத்தாள். விம்மியது. அழுதபடியே அவனை முத்தமிட்டாள். அவனிடம் எந்த உயிர்ப்பும் இல்லை.

மறுநாளும் அவன் பையில் பணம் இருந்தது. அவன் எடுத்து வைக்கவில்லை. பின்பு பெரும்பாலும், மாலை கிளம்பிய பின்பு மலைக்குப் போகும் ரோட்டில் போவான். இரண்டு சிகரெட் குடிப்பான். சில சமயம் இரவு வீடு திரும்பும்போது இன்னொரு சிகரெட். மீதிச் சில்லறை பையில் கிடக்கும்.

பையில் கிடக்கும் மீதிச் சில்லறைக்குக் காலையில் பிள்ளைகள் அடித்துக்கொள்வார்கள். ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் எல்லோரும் வீட்டில் இருப்பார்கள். சுசி மட்டும் அன்று அவனோடுதானிருப்பாள். எதையாவது பேசியபடியே இருப்பாள்.

மறுநாளில் வீடு தனித்து இருக்கும். எப்பவாவது அவனைத் தேடி யாராவது வருவார்கள். ஒரு தரம் சங்கரன்கோவிலில் அவனோடு வேலை பார்த்த சாரதி வந்தான். பகலெல்லாம் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அன்று மாலை சாரதி சொன்னான்.

‘இப்படியிருக்கறது கஷ்டமா இல்லையா…’

“இருக்கு…”

”உண்மையில சண்டை போட்டாக் கூடப் பரவாயில்லை. இப்படி இருக்கறதுதான் என்னமோ செய்யும். எங்க மாமாகிட்ட நூறு ரூவா வாங்கிட்டு தெரிஞ்சே இல்லேன்னேன். அவரும் அப்பிடியா… மறந்திருப்பேன்னாரு சிரிச்சுக்கிட்டு. ரொம்ப சங்கடமாகப் போச்சு. அவரு வைய மாட்டாரான்னு தோணிச்சு.’

சாரதி கிளம்பும்போது அவனையும் கூப்பிட்டான். அவள்தான் பணம் கொடுத்தாள். சாரதியோடு கிளம்பி பஸ் ஸ்டாண்டுக்குப் போனான். பஸ் இல்லை. பஸ் வந்தபோது சாரதி யாரோ ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்து அவனிடம் சொன்னான்.

“எங்க அக்கா ஊருக்குப் போறேன் அவசரம்…”

அவன் எதுவும் சொல்லவில்லை. வீட்டுக்குத் திரும்பிவந்து அவளிடம் ரூபாயைக் கொடுத்தான். அவள் சொன்னாள்.

“வைங்க… சாயங்காலம் சினிமாக்குப் போகலாம்.”

எல்லோரும் கிளம்பிப் போனார்கள். தியேட்டரின் முன்பு உள்ள கிருஷ்ணன் சிலையைச் சுற்றிக் குழந்தைகள் விளையாண்டார் கள். பழைய படம் அது. கூட்டமில்லை. மாடி டிக்கெட் எடுத்துப் போனார்கள். அவள் அவனருகே உட்கார்ந்து கொண்டாள். அவனுக்குப் பிடித்தமான பாடல் இருந்தது படத்தில்.

இடைவேளையில் குழந்தைகளோடு கீழே போய் கலர் சாப்பிட்டான். சுசிதான் சொன்னாள்.

“நீயே சினிமாவுக்குக் கூட்டிட்டு வாப்பா… அம்மா கூட வந்தா இது எல்லாம் வாங்கித் தர மாட்டா…”

தலையாட்டினான்.

இரவு திரும்பும்போது குழந்தைகள் தெருவில் முன்னாடி ஓடின. அவனும் அவளும் மட்டும் வந்தார்கள். அவள் சொன்னாள்.

“எங்க பிளாக்ல வேலை இருக்காம், சொல்லவா.”

தலையாட்டினான்.

“பிள்ளைக உங்ககிட்டதான் ரொம்பவும் ஒட்டுதுக. நீங்கதான் கவனிக்க மாட்டீங்கிறீங்க” என்றாள்.

கதவைத் திறந்து உள்ளே போனதும் பிள்ளைகள் சாப்பிட ஓடினார்கள். அவள் அப்போதுதான் கவனித்தது போலச் சொன்னாள்.

“ஏன் இப்பிடி கையை மடக்குறீங்க.”

“பழகிப்போச்சு”

“எனக்குப் பிடிக்கலே, சொன்னா எத செய்றீங்க.”

அவள் இதைச் சொன்னதும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. கையை எடுத்துகிட்டு கண்ணாடியில் பார்த்தான். அதுகூட நன்றாகவே இருந்தது. அவள் சேலையின் நுனியை வாயில் பிடித்தவாறே திரும்பி அவனைப் பார்த்துவிட்டுச் சொன்னாள்.

“இது நல்லா இருக்கு…”

மடித்துவிடப்பட்ட இடங்கள் சுருள் சுருளாக இருந்தன. அவன் எப்போதும் போலவே படுத்துக்கொண்டான். அடுத்த நாளின் பகல் ஞாபகம் வந்தது. தனித்திருக்கும் வீடும் துக்கத்தின் சாயையான வெயிலோடும் வரும் பகல் பற்றியும் யோசித்த படியே படுத்துக்கொண்டான்.

அவனுக்கு, எப்போதும் போலவே நீண்ட நேரம் வரை உறக்கம் வரவில்லை.

– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *