பட்டாசு
கதையாசிரியர்: பே.செல்வ கணேஷ்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 149

இரவு தனது வீட்டுப்பாடத்தை எழுதிக்கொண்டிருந்தான் அழகேசன், அவனுக்கு அருகில் அவனது அப்பா தூங்கிக் கொண்டிருந்தார், அவனது அம்மா சுண்ட வைத்த குழம்பை தட்டில் போட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார், அவனது தம்பியான முருகனும் அவனது வீட்டுப்பாடத்தை செய்துக் கொண்டிருந்தான், பிறகு சிறிது தயங்கி தயங்கி தனது அம்மாவின் அருகில் வந்த அழகேசன் தனது அம்மாவிடம்,
“அம்மா, இன்னும் பத்து நாளில் தீபாவளி வந்துரும்லா, அப்போ உனக்கு ஒரு வெடி பாகஸ் அப்பாவுக்கு ஒரு வெடி பாக்ஸ்னு கொடுப்பாங்க தானே?”
“ஆமாடா”
“அதுல ஒரு வெடி பாக்ஸை நம்ம சுந்தருக்கு கொடுத்துருவோமாம்மா?”
“ஏன்டா?”
“இல்லம்மா, அவங்க அப்பா எந்த ஒரு தீபாவளிக்கும் வெடியோ, டிரஸ்ஸோ வாங்கிக் கொடுக்க மாட்டாங்களாம் எந்நேரமும் குடிச்சிக்கிட்டே இருப்பாங்களாம் அதனால் ஸ்கூலில் உள்ள பசங்க அவனை ரொம்பவே கிண்டல் பண்றாங்கம்மா, அதான் நமக்குத்தான் ரெண்டு வெடி பாக்ஸ் கிடைக்கும்லா அதில் ஒன்னு இவனுக்கு கொடுத்துடுவோம்மா, ப்ளீஸ்மா” என்று கெஞ்ச,அதற்கு அவனது அம்மாவோ,
“இதுக்கு ஏன்டா தயங்கி தயங்கி கேட்டுக்கிட்டு இருக்க, கொடுத்துட்டாப் போச்சு” என்று கூறவும், இவனிற்கு மகிழ்ச்சியில் வாயில் முப்பத்திரெண்டு பல்லும் தெரிந்தது.
மறுநாள் வகுப்பறையில் சுந்தரிடம் அழகேசன் பேசிக்கொண்டிருந்தான்
“டேய்!உனக்கு ஒரு சர்ப்ரைஸ்”
“என்னடா?”
“உன் அப்பா உனக்கு வெடி வாங்கிக்கொடுக்க மாட்டாங்கன்னு சொல்லி உன்னை நிறைய பேர் கிண்டல் செஞ்சாங்கல்ல? எங்களுக்கு மொத்தம் ரெண்டு வெடி பாக்ல் தருவாங்க அதுல ஒன்னு உனக்குத் தரேன், நீயும் உன் தங்கச்சியும் ஜாலியா தீபாவளியை கொண்டாடுங்க, அதுல பெரிய பெரிய வெடிலாம் நிறையவே இருக்கும்” என்று சொல்ல அதற்கு அவனோ,
“உண்மையாவாடா சொல்ற?”
“ஆமாடா” என்று சொல்லியும் அவன் நம்பவில்லை மறுபடியும்,
“உண்மையாவா? இல்ல என்னை சந்தோஷப்படுத்த ஏதேனும் சொல்றியா?”
“டேய்! எங்க அம்மா மேல சத்தியமா உனக்கு நான் வெடி பாக்ஸ் கொடுக்குறேன்டா” என்று அவன் கைமேல் அடித்து சத்தியம் செய்தான்.
இவர்கள் பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் அந்த பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு 41 பேர் சிக்கி உயிரிழந்திருந்தனர் அவர்களில் அழகேசனின் அப்பாவும், அம்மாவும் அடக்கம்.