நீலகண்டன் ஹோட்டல்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: December 9, 2024
பார்வையிட்டோர்: 12,404
(1958ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
10. கத்தியுடன் வந்த மூக்கறுக்கும் கண்டன்
மூன்று மணி நேரத்திற்கு மேலாக தமயந்தி தன் அறையில் உட்கார்ந்து ஆத்திரத்தால் குமுறிக்கொண்டு, அடுத்தாற்போல் என்ன செய்வது என்று திட்டமிட்டுக் கொண்டும், மனதைத் தேற்றிக் கொண்டும் இருந்தாள். மறுநாள் அங்கிருந்து புறப்படுவதென்று தீர்மானித்துவிட்டாள். நீலகண்டன், தன்னைக் காப்பாற்றத் தவறிவிட்டாரென்று, அவர்மீது அநியாயமாய் ஆத்திரப்பட்டாள். அம்மாதிரி எதுவும் நடவாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவருடைய கடமை என்று நினைத்தாள். ஆனால், அந்த மனோநிலை, அவளிடம் வெகுநேரம் இருக்கவில்லை. உண்மையில், தன்னைக் காட்டுக்குப் போகவேண்டாமென்று நீலகண்டன் எவ்வளவோ தடுத்தார். அவரைக் குற்றம் சாட்டுவது அநியாயமென்றும் அவள் மனதுக்கேபட்டது.
அவரிடம் நடந்ததைச் சொல்ல வேண்டுமா என்று நினைத்தாள் தமயந்தி. ஆனால், சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? இரண்டு இள வயதினர் தன்னந்தனியாக உட்கார்ந்து காதலின் மர்மத்தைப் பற்றி ஆராய முயன்றால், என்ன நடைபெறுமோ, அதுதான் நடந்தது! ஒரு குறிப்பிட்ட நிலையில், பொன்னம்பலம் அவளைத் தன் கைகளில் வாரி எடுத்துக் கொண்டான். அது ஒரு எதிர்பாராத விஷயமல்ல அம்மாதிரி நடக்குமென்று அவளுக்குத் தெரியும். அதை அவள் தடுத்திருக்க முடியும். ஆனால், அந்தச் சமயத்தில் அதைச் சமாளிக்கும் சக்தி தனக்கு இருக்கிறதென்று நினைத்து, முதலில் கொஞ்சம் அலட்சியமாக இருந்துவிட்டாள். ஆனால், நெருக்கடியான சமயம் நெருங்கிய போதும் கூட, அவளால் அதைச் சமாளிக்க முடியவில்லை. அவனிடம் போராடி, கெஞ்சி, தனக்கு அதில் இஷ்டம் இருப்பதுபோல் சாகசம் செய்து, எங்காவது மறைவிடத்துக்கு வரும்படி அழைப்பது போல் அவனை அழைத்து, அவன் பிடியிலிருந்து பிய்த்து ஓடும்படி இருந்தது. நினைக்கவே கேவலமாக இருந்தது அந்த நிகழ்ச்சி; மிருகத்தனமாக இருந்தது அந்த நிகழ்ச்சி!
நன்றாக ஸ்நானம் செய்து, தன் ஆடைகளை மாற்றிக்கொண்டாள். பொன்னம்பலம் தீண்டிய இடம் அவளுக்கு அவ்வளவு அருவருப்பை அளித்தது. இதை நீலகண்டத்திடம் அவள் கூறினாளானால்…..இல்லை; இல்லை! அவள் சொல்லக்கூடாது! செல்வராஜ் பொன்னம்பலத்தைக் கொலை செய்துவிடுவான்…..ஏன் அவனைக் கொலை செய்யவேண்டும்? ஒருக்கால், அவனும் பொன்னம்பலத்தைப் போலவே கெட்டவனாக இருக்கலாம்; இருக்கமாட்டான் என்பது என்ன நிச்சயம்?…
அவளுடைய பதட்டம் ஒருவாறு அடங்கியதும், அவளது அறிவு வேலை செய்யத் தொடங்கியது.
பொன்னம்பலத்தின் செய்கையை துஷ்டத்தனமானது என்று அவள் ஏன் சொல்லுகிறாள்? அவனை, அவளுடைய மனதிற்குப் பிடிக்காததால், அவன் செய்கை துஷ்டத்தனமாகத் தோன்றுகிறது. ஆனால், அவனை அவள் மனதிற்குப் பிடித்திருந்தால் அவன் செய்கைகள் எல்லாம் கவிதாநயம் நிறைந்த காதல் லீலைகளாகத் தோன்றியிருக்கும்! அவனை அவள் விரும்பாததாலும், அவனது உபசரிப்பை அவள் வெறுப்பதாலும், அவன் செய்தது எல்லாம் துஷ்டத்தனமாக அவளுக்குத் தோன்றியது!
இம்மாதிரி பலவிதமாக தன் மனதைக் குழப்பிக்கொண்ட தமயந்தி வாழ்க்கையில் போதிய அனுபவம் இல்லாததால், எந்தவித முடிவுக்கு வருவதென்று புரியாமல் தவித்தாள்.
இதற்கிடையில், இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி “வானப்பிரகாச” ஹோட்டலுக்கு வந்துவிட்டார். அங்கு வந்ததும், தம்பித்துரை அங்கு தங்கியிருக்கும் விவரம் அவருக்குத் தெரிய வந்தது. தம்பித்துரையைப் பற்றி அவர் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தார். இலங்கையில், அவர் பிரபல போலீஸ் உத்தியோகஸ்தர் என்பதும், மிகத் திறமைசாலி என்பதும் அவருக்குத் தெரியும். அவருக்குப் பரம்பரையாக ஏராளமான சொத்தும், எஸ்டேட்டும் இலங்கையில் இருந்தன. அவருடைய மகளை, யாரோ ஒரு பணக்கார வாலிபனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்ததாகவும், அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றும் பரஞ்சோதி கேள்விப்பட்டு இருந்தார். கொஞ்ச காலத்திற்கு முன்பு, அவர் தாம்பரம் வந்திருந்த விவரமும் பரஞ்சோதிக்குத் தெரிந்திருந்தது.
பரஞ்சோதி அங்கு வந்து சேர்ந்ததும், நீலகண்டனே வெளிவாசலுக்குச் சென்று அவரை வரவேற்று அழைத்து வந்தார்.
“நீங்கள் ஓய்வெடுப்பதற்காக இங்கு வந்திருக் கிறீர்களா, இன்ஸ்பெக்டர்?” என்று கேட்டார் நீலகண்டன்.
“வாழ்க்கை முழுவதுமே, எனக்கு ஓய்வு எடுத்துக் கொள்வது போலத்தான் உல்லாசமாகக் கழிகிறது, நீலகண்டன்!” என்று கூறிய பரஞ்சோதி, “நான் இப்பொழுது வேலையாகத்தான் வந்திருக்கிறேன். கிழவனைப் பற்றி ஏதும் விசேஷமுண்டா?” என்று கேட்டார்.
நீலகண்டன் ஒரு புன்னகை பூத்தபடி, “எனக்கு வேதாளக் கதைகளில் எப்பொழுதுமே அக்கறை கிடையாது. அதில் அக்கறை உள்ளவர்களில் யாரையாவது பார்த்து உங்களிடம் அனுப்புகிறேன்!” என்றார்.
அங்கு வந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம், இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி, தீ தீ விபத்தால் பாழாகிக் கிடந்த ராஜாபகதூரின் பங்களாவைப் போய்ப் பார்த்தார். அதன் பிறகு, அவர் சில ஆட்களைச் சந்தித்துப் பேச வேண்டியிருந்தது. அந்த ஆட்களுக்கெல்லாம், வேதாளக் கதைகளில் நம்பிக்கை இல்லை என்றாலும் கிழவன் விவகாரத்தில் அக்கறை இருந்தது. அவர்கள் அம்மாதிரி அக்கறை கொண்டு இருப்பதற்கும் தகுந்த காரணம் இருந்தது. ஏனென்றால், அவர்களெல்லாம் சமீப காலத்தில் கிழவனைத் தங்கள் கண்களால் பார்த்திருக்கிறார்கள்.
அவர்களெல்லாம் கூறிய விவரங்கள் ஒன்றுக் கொன்று ஒத்திருந்தன. இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி சென்னையில் இருந்து வரும்போது, தாம்பரம் குகைகளைப் பற்றிய ஒரு சர்வே படம் கொண்டு வந்திருந்தார். அந்த ஒரு சர்வே படம் தான், போலீஸார் வசம் இருந்தது.
வெளியே சுற்றி விசாரணைகளை முடித்துக் கொண்டு அவர் திரும்பி வந்த போது, “வானப்பிரகாசம்’ ஹோட்டலில் இருந்த பெரும்பாலான விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தன. முன் ஹால் கூட இருட்டாகத்தான் இருந்தது. அனாவசியமாக மின்சாரம் செலவழிவதை நீலகண்டன் விரும்பமாட்டார்.
உள்ளே நுழையும் போது தன் முன்னே எதிர்ப்பட்ட ராமையாவை, இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி குறுக்கிட்டு நிறுத்தி, “ராஜாபகதூர் இருக்கிறாரா?”என்று விசாரித்தார்.
ராமையாவுக்கு, பரஞ்சோதி மீது பழைய ஆத்திரம் இருந்தது. ஏனென்றால், அவனை அவர் ஒருமுறை சிறைக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால், பரஞ்சோதி அவனை அடையாளம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
“ராஜா பகதூர் டவுனுக்குப் போய்விட்டார்–சாயங்காலம் தான் போனார்–அறையைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய் விட்டார்!” என்று படபடப்புடன் கூறிவிட்டு, தப்பித்தால் போதுமென்று உள்ளே சென்று மறைந்தான் ராமையா.
பரஞ்சோதி தனக்குத் தானே, புன்னகை பூத்துக் கொண்டார். எதற்காக ஒரு பழையக் கேடியை நீலகண்டன் வேலைக்கு வைத்திருக்கிறார் என்று அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதைவிட ஆச்சரியமான அனுபவமும் அவருக்கு உடனே ஏற்பட்டது, குஞ்சம்மாள் ஒரு வெல்வெட் சட்டைப் போட்டுக் கொண்டு, பட்டுப் புடவை உடுத்தியபடி அங்கு வந்தாள்.
குஞ்சம்மாளை இன்ஸ்பெக்டர் பரஞ்சோதிக்கு நன்றாகத் தெரியும். அவளிடமிருந்து கடுகத்தனை விவரம்கூட அறிய முடியாதென்று தெரியும். அவளைப் பார்ப்பதுவே, அவருக்கு குதூகலத்தை ஏற்படுத்தும்.
“நீ இன்னும் இங்குதான் இருக்கிறாயா?”
குஞ்சம்மாள் ஒரு பரந்த புன்னகை பூத்தாள். அவளுடைய தந்தை, ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்தவர். தனக்கும் போலீஸ் இலாக்காவிற்கும் உள்ள தொடர்பை பெருமையாக சொல்லிக் கொள்ள அவள் தவறுவதில்லை.
“குஞ்சம்மாள்! ராணிபவானி டவுனுக்குப் போய் இருக்கிறாளா?”
குஞ்சம்மாள் அவரை வெறிக்கப் பார்த்தபடி”எனக்கு ராணியைப்பற்றி ஒன்றும் தெரியாது! அனாவசியக் கேள்வி கேட்க வேண்டாம்!” என்றாள்.
“தம்பித்துரை எங்கே?” என்று சளைக்காமல் கேட்டார் இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி.
“அவர் இப்போது வெளியே சென்றிருக்கிறார்.”
அந்தச் சமயத்தில், குஞ்சம்மாளின் பார்வை மாடிப் பக்கம் செல்வதைக் கவனித்த பரஞ்சோதி, அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தார்.
நீலகண்டன், தன் கையில் ஒரு நீண்ட கத்தியுடன் இறங்கி வந்து கொண்டு இருந்தார்.
“அது என்ன?” என்று ஆவலாகக் கேட்டார் பரஞ்சோதி.
“இது, ராஜாபகதூரின் கத்திகளில் ஒன்று. இம்மாதிரி அபூர்வ சாமான்களை அவர் சேகரித்து வருகிறார்!” என்று விளக்கிக் கூறிய நீலகண்டன், அந்தக் கத்தியை திருப்பித் திருப்பிப் பார்த்தபடி, “நீங்கள் சிங்கள நாட்டு சரித்திரம் படித்திருக்கிறீர்களா? அந்த நாட்டை கி.மு.15- வது ஆண்டில் அரசாட்சி செய்த குடக் கண்ணதீசன் என்ற மன்னனின் கத்தி இது! ராஜாபகதூர் இன்று தான் அதை என்னிடம் சொன்னார்!” என்று கூறிவிட்டு அந்தக் கத்தியின் கூர்மையைப் பரிசோதித்துப் பார்த்தார்.
“முகக்ஷவரம் செய்து கொள்ளும் அளவிற்கு இந்தக் கத்தி கூர்மையாக இருக்கிறது!” என்று வியப்புடன் கூறினார் நீலகண்டன்.
பரஞ்சோதி அந்தக் கத்தியைத் தன் கையில் வாங்கிப் பார்த்தார். குடக்கண்ண தீசனின் கத்தி! இந்தக் கத்தியை ஒட்டி ஒரு சரித்திரமே இருக்கிறது. எனக்கும் கொஞ்சம் தெரியும். இந்தக் கத்தியால், அவன் ராணி அனுலாவைக் குத்திக் கொலை செய்தான்; இல்லையா? இதை வைத்துக்கொண்டு நீ என்ன செய்கிறாய்?” என்று கேட்டார்.
அதைப் போன்ற பல கத்திகள் ராஜாபகதூரின் அறையில் இருப்பதாகவும், அதைத் தவறிப்போய் வெளியே வைத்து விட்டதாகவும் கூறினார் நீலகண்டன்.
“ராஜாபகதூரின் அறைச்சாவியை எடுத்துப் போகவே இங்கு வந்தேன். அவர் அறையைத் திறந்தே, இந்தக் கத்தியை உள்ளே வைக்க வேண்டும்!” என்று கூறிய நீலகண்டன் ஹோட்டல் மேஜை டிராயரைத் திறந்து, அதற்குள்ளிருந்து ஒரு சாவியை எடுத்தார்.
“அவர் இங்கு இல்லையா?” என்று கேட்டார் பரஞ்சோதி.
“அவர் டவுனுக்குப் போயிருக்கிறார். நாளைய தினம் திரும்பி வருவார். இந்தச் சனியனை அவர் அறைக்குள் வைத்துவிட்டு வருகிறேன்’ என்று நீலகண்டன் கூறியபடி பரஞ்சோதியின் கையிலிருந்து கத்தியை வாங்கிக்கொண்டு மாடிக்குச் சென்றார். சில விநாடிகளில், மீண்டும் திரும்பி வந்து அறைச் சாவியை மேஜைக்குள் வைத்து சாத்தினார்.
இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி அங்கிருந்து புறப்பட்டபடி, “நான் என் அறைக்குச் செல்லுகிறேன். சென்னையிலிருந்து ஏதாவது டெலிபோன் செய்தி வந்தால் எனக்குத் தகவல் தெரிவி” என்று கூறிவிட்டு மெதுவாக மாடிப்படிக்கட்டுகளில் ஏறினார்.
பாதிப்படிக்கட்டை அடைந்ததும், மீண்டும் திரும்பி, “உன்னுடைய வேலைக்காரன் பெயரென்ன?” என்று புரியாதவரைப்போல் கேட்டார்.
“எனக்குத் தெரிந்த அளவு, உங்களுக்கு அவனைப் பற்றித் தெரியும்! அவனுடைய பழைய சரித்திரமும் உங்களுக்குத் தெரியும். அவனுக்கு ஒழுங்கான ஒரு வேலையை ஏற்படுத்திக் கொடுத்து, அவனை நல்வழிக்குக் கொண்டு வர ஆசைப்படுகிறேன். உங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?” என்று கேட்டார் நீலகண்டன்.
ஆட்களை மட்டம் தட்டுவதில், நீலகண்டன் ரொம்பக் கெட்டிக்காரர். ஆனால், பரஞ்சோதி அதற்காக ஆத்திரப்படவில்லை. நீலகண்டத்தின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டினார்: “சபாஷ், நீலகண்டன். சரியாக என் மூக்கை அறுத்துவிட்டாய்! ஆனால், எத்தனையோ பேர் என் மூக்கை அறுத்தாலும், அதை வளர வைக்கிறான் ஆண்டவன். ஆண்டவனுக்கு நன்றி!”
11. மயக்கும் வாசனைத் திருடன்!
அன்று இரவு சாப்பாட்டுச் சமயத்தில், செல்வராஜும் தமயந்தியும் சேர்ந்து தான் சாப்பிட்டார்கள். சாப்பாட்டுச் சமயத்தில், தமயந்தி சரிவரப் பேசவே இல்லை.
சாப்பாடு முடிந்ததும், செல்வராஜ் நேரடியாக அவளிடம் பேச ஆரம்பித்தான்.
“இன்று மாலை ஏதோ நடந்திருக்கிறது தமயந்தி–அதாவது, காட்டுக்குள் உனக்கு ஏதோ நடந்திருக்கிறது. நீ திரும்பி வரும்போது நான் பார்த்தேன்–”
“நான் போகும்பொழுது நீங்கள் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று தொண்டை அடைக்க கூறினாள் தமயந்தி.
“என்ன நடந்தது?”
அந்தக் கேள்விக்கு, தமயந்தி எந்தவிதப் பதிலும் சொல்லவில்லை. திரும்பவும் கேட்டான் செல்வராஜ்.
“ஒன்றும் நடக்கவில்லை” என்று கூறிய தமயந்தி, “நீங்கள் கவலைப்படுமளவு எதுவும் நடக்கவில்லை!” என்றாள்.
செல்வராஜ் மௌனமாக உட்கார்ந்திருந்தான். சட்டென்று தமயந்தி அவனருகே குனிந்து, “கொலைகாரர்கள் எப்படி கொலை செய்கிறார்கள் என்று நான் ஆச்சரியப்பட்டது உண்டு. ஒரு ஜீவனை, மனம் துணிந்து எப்படிக்கொல்ல முடியுமென்று எனக்கே புரியாமல் இருந்தது……ஒவ்வொரு தடவை கொலைச் செய்தியைப் படிக்கும் போது, அது எங்கோ ராட்சஸ உலகில் நடந்ததைப் போன்ற எண்ணம் தான் எனக்குத் தோன்றும்–ஆனால் இப்பொழுது எனக்குப் புரிகிறது! எப்படிக் கொலை செய்ய முடியுமென்று எனக்குப் புரிகிறது! எதற்காக செய்ய வேண்டுமென்றும் புரிகிறது!” என்று கூறும்போதே, தமயந்தியின் குரல் நடுங்கியது. அந்தக் குரலில் காணப்பட்ட தீவிரம், அவனைக் கதிகலங்கச் செய்தது.
தன்னைச் சமாளித்து அவன் பேசுவதற்கே சில விநாடிகள் பிடித்தது. பேசும்பொழுது, தனது குரலையே, அவனால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை: “பொன்னம்பலமா? அவன் என்ன செய்தான்? எந்த அளவுக்குப் போனான்?”
“என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்–அதாவது, அந்த வகையில் கவலைப்பட வேண்டாம்” என்று தலையாட்டியபடி கூறிய தமயந்தி, எங்கோ பார்த்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். பிறகு “அது ரொம்பப் பயங்கரமாகத்தான் இருந்தது. ஏனென்றால் அவன் என் மீது எப்படியோ ஆதிக்கம் செலுத்திவிட்டான். நான் மிகவும் சிரமப்பட்டு மனதோடு போராடி சமாளித்துக் கொண்டேன். இல்லாவிட்டால், அவன் என்னிடம் எப்படி நடந்து கொள்ள திட்டமிட்டானோ, அந்த முறைக்கு, நானே என்னை ஒப்புக்கொடுத்திருப்பேன்” என்றாள்.
செல்வராஜின் முகம் வெளுத்தது. அவன் உதடுகள் வரண்டன. அவள் மீது அவனுக்கு அளவு கடந்த காதல் இருந்ததால், அவள் எல்லாவற்றையும் மறைக்காமல் கூறுகிறாள் என்று அவனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.
“இதை யாரிடமாகிலும் சொன்னாயா?–நீலகண்டனிடம் கூறினாயா?”
“இல்லை;…..உங்களிடம் தான் கூறினேன். இது நினைப்பதற்கே கேவலமானதாக இல்லையா? எனது தன்னம்பிக்கை உணர்ச்சியின் மீது விழுந்த பேரிடி இது. என்னிடமுள்ள ஒரு விசேஷ சக்தி தெய்வீக காந்தி– என்னை நெருங்க ஒட்டாமல், அவனைத் தடுத்து தூரவே நிறுத்தி வைக்குமென்று நினைத்திருந்தேன்” என்று கூறிவிட்டு ஒரு வரண்ட சிரிப்புச் சிரித்தாள் தமயந்தி.
“உங்களை டெலிபோனில் யாரோ கூப்பிடு கிறார்கள்” என்று கூறியபடி அப்போது ராமையா அங்கு வந்தான்.
“யாரது?”
“எனக்குத் தெரியாது” என்று கூறிய ராமையா, “அந்தக் குரல் ராஜாபகதூரின் குரலைப் போன்றிருந்தது!” என்றான்.
தமயந்தி நிமிர்ந்து பார்த்தாள்: “அவர் சென்னைக்குப் போயிருக்கிறார் அல்லவா?” என்று கேட்டாள்.
“ஆமாம்; போய் பேசிவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு செல்வராஜ் எழுந்து சென்றான்.
அவன் திரும்பி வரும் வரையில், அங்கேயே உட்கார்ந்திருந்தாள் தமயந்தி. திரும்பி வந்த போது, அவன் முகம் சங்கடத்தில் ஆழ்ந்திருந்தது.
“ராஜாபகதூர் மீனம்பாக்கத்தில் தான் இருக்கிறார். அங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று எனக்கே தெரியவில்லை! நான் போய் அவரைப் பார்க்க வேண்டும்!” என்றான்.
“அவர் சென்னைக்குச் செல்லவில்லையா?” என்று வியப்போடு கேட்ட தமயந்தி, “அவர் அங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறார்?” என்று கேட்டாள்.
உண்மையிலே, செல்வராஜுக்கு அப்பொழுது ராஜாபகதூரைப் பற்றி எந்தவிதக் கவலையும் இருக்க வில்லை. அவனுடைய முழுக்கவலையும், தமயந்தியைப் பற்றித்தான் இருந்தது. அவளையும், அங்கு நின்று கொண்டு இருந்த ராமையாவையும், மாறிமாறிப் பார்த்தான் செல்வராஜ். அவனுக்கு என்ன செய்வதென்றே தோன்ற வில்லை.
“நீ எதுவும் செய்யமுடியாதா–எங்கும் போக முடியாதா?” என்று தடுமாறிய செல்வராஜ், “நான் சொல்ல வந்தது என்னவென்றால், உன்னை இங்கு விட்டுப்போக நான் விரும்பவில்லை” என்றான்.
“உளறாதீர்கள்” என்று அநாவசியமாக ஆத்திரம் அடைந்த தமயந்தி, “என்னை ஏன் நீங்கள் இங்கு விட்டுப் போக முடியாது? நிச்சயமாக, நான் உங்களுடன் வரப்போவது இல்லை. நான் சென்னைக்குச் செல்லப் போகிறேன்!” என்றாள்.
செல்வராஜ் அங்கு நின்றிருந்த ராமையாவைப் பார்த்து, “நீலகண்டன் எங்கே?” என்று கேட்டான்.
“அவர் எங்காவது இருப்பார்! அவர் போகும் இடத்தை, என்னிடம் சொல்லி விட்டுப் போவதில்லை!” என்று சூடாகப் பதிலளித்தான் திமிர்பிடித்த ராமையா.
செல்வராஜும் தமயந்தியும் பிரியும் பொழுது, ரொம்பவும் சங்கடமான சூழ்நிலையில் தான் பிரிந்தார்கள். புறப்பட்டுச் செல்லும்போது, அவள் செல்வராஜிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. செல்வராஜும், அங்கிருந்து வேதனையோடு தான் எங்கோ கிளம்பினான்.
மாடியில் ஏறிச் செல்லும் போது, முதலில் பொன்னம்பலத்தின் அறைதான் இருந்தது. அதைத் தாண்டிக் கொண்டு தான், தமயந்தி தன் அறைக்குச் செல்ல வேண்டும். அந்த அறையில், எந்தவித மனித நடமாட்டமும் இல்லாமல் இருந்தது, தமயந்திக்கு ஆறுதலாக இருந்தது.
தன் அறையை அடைந்ததும், உள்ளே நுழைந்து, கதவைத் தாளிட்டுக் கொண்டாள். அறைக்குள், ஒரே இருட்டாக இருந்தது. மின்சார விளக்கைப் பொருத்துவதற்காக ஸ்விட்ச் இருந்த இடத்திற்குத் தன் கையைக் கொண்டுபோனாள். அப்போது, ஒரு மெதுவான குரல் ஒலித்தது: “விளக்கைப் பொருத்தாதே!”
கதி கலங்கிப் போன தமயந்தி சட்டென்று தன் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். அளவுகடந்த கலவரத்தால், மூர்ச்சையாகும் நிலையை அடைந்து விட்டாள்.
“யாரது?” என்று தமயந்தி நடுங்கியபடி கேட்டாள். அந்தக் கேள்வி, அநாவசியமானதென்று அவளுக்கே தெரியும். ஏனென்றால் தாழ்வாரத்தின் பக்கமிருந்த ஜன்னல் வழியாக வீசிய வான ஒளியில், அந்த ஆள் பொன்னம்பலம் தான் என்று புரிந்து கொண்டாள்.
“உன்னைப் பார்க்க வேண்டியிருந்தது, தமயந்தி!இன்று மாலை நடந்த நிகழ்ச்சிக்கு நான் ரொம்பவும் வருந்துகிறேன்–நான் அந்தச் சமயத்தில் என் வசமிழந்து விட்டேன். அவ்வளவு தான்–இந்த விஷயத்தை நீ செல்வராஜிடம் சொல்லவில்லையே? சொன்னாயா? ஆண்டவனே; நீ மேலே எப்பொழுது வரப்போகிறாய் என்று மணிக்கணக்கில் காத்திருந்தேன்!”
‘இப்பொழுது நீ அறையைவிட்டு வெளியே போகாவிட்டால், நீலகண்டனைக் கூப்பிடுவேன்!” என்று நடுங்கிக்கொண்டே கூறினாள் தமயந்தி. தனது பலவீனத்தைப் பார்த்து, தன்னையே நொந்து கொண்டாள்.
மின்சார விளக்கின் ஸ்விட்சைப் போடுவதற்காக அவள் கையை மேலே தூக்கியபோது, பொன்னம்பலம் அவள் கையைப்பற்றி வேகமாக தன் அருகே இழுத்துக் கொண்டான். தனது இரு கைகளாலும் அவளது இரு புஜங்களையும் பற்றி தன்னை நோக்கி அவளை வலிந்து இழுத்தான். அவள் இப்பொழுது ஏதாவது செய்தாக வேண்டும் வீறிட்டுக் கத்தவேண்டும்! தானிப்போது முரண்டுவதைவிட அதிகப்படியான எதிர்ப்பைக் காட்ட வேண்டும்….அவனுடைய கரங்கள், அவளுடைய புஜங்களை விட்டு விட்டு, அவளை முதுகுப் பக்கத்தில் கோர்த்துப் பிடித்தபடி மெதுவாக அவளை அணைத்தன. அவன், மனதைக் கிறுகிறுக்கச் செய்யும் ஒரு மனோகரமான வாசனைத் தைலத்தைப் பூசிக்கொண்டு இருந்தான்.
“உன்னைத் தெய்வமாகப் போற்றுகிறேன்!” என்று மெதுவான குரலில் கூறிய பொன்னம்பலம், “இந்த உலகத்திலேயே உன்னைப் போல ஒரு பெண் இருந்ததே இல்லை!’ என்று கூறியபடி அவளை மெல்ல மெல்ல இறுக அணைத்து, அவள் உதட்டருகில், தன் உதடுகளைக் கொண்டு போனான்.
எதையும் செய்யச் சக்தியற்றவளாய் தமயந்தி தன் முகத்தைக் கஷ்டப்பட்டு பின் நோக்கி இழுத்துக் கொள்ள முயன்றாள். கூச்சலிடக்கூட அவளால் முடியவில்லை. அந்தச் சமயத்தில், பொன்னம்பலம் அவளை இரு கைகளாலும் வாரி, கட்டிலை நோக்கி தூக்கிக் கொண்டு நடந்தான்.
சவுக்கடிபட்ட வேட்டை நாயைப்போல, அவளுடைய தன்மான உணர்ச்சி துள்ளி எழுந்தது. “பளார்’ என்று அவன் முகத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்தாள் தமயந்தி.
அந்த அறை, அவனை ஒரு விநாடி தடுமாறச் செய்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, மானைப்போல் கீழே துள்ளி, திறந்திருந்த கம்பியில்லா ஜன்னல் வழியாக நுழைந்து தாழ்வாரத்தில் குதித்த தமயந்தி, வெறிக் காண்டவளைப் போல் கண்மூடித்தனமான வேகத்தில் படிக்கட்டுகளில் இறங்கி ஓடினாள்.
ஹாலில் நின்று கொண்டு இருந்த நீலகண்டன், சட்டென்று அவள் கரத்தைப் பிடித்து, “என்ன நடந்தது?” என்று பதறினார்.
“என் அறையில் எவனோ இருக்கிறான்!” என்று மூச்சு வாங்கக் கூறினாள் தமயந்தி.
நீலகண்டன், சிறுத்தையைப்போல் பாய்ந்து, மாடிப்படிகளில் தாவி ஏறி, தமயந்தியின் அறைக்கதவை வேகமாகத் திறந்தார். அறை விளக்கை அவர் பொருத்திப் பார்த்தபோது, அறை காலியாக இருந்தது!
“யாரோ செண்டு போட்டுக்கொள்ளும் திருடன் வந்திருக்கிறான்!” என்று பின்னால் ஒரு குரல் கேட்கவே சட்டென்று திரும்பிப் பார்த்தார் நீலகண்டன். இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி அங்கு நின்று கொண்டு இருந்தார். நீலகண்டன் பதறிக்கொண்டு ஓடி வருவதைப் பார்த்து அவரும் பின்தொடர்ந்து வந்திருக்கிறார்.
“செண்டுபோட்ட மனிதர்களையே எனக்குப் பிடிப்பது இல்லை. ஏனென்றால், அவர்கள் மற்றவர்களை மயக்க திட்டம் போடும் பரமாத்மாக்கள் என்று, அந்த செண்டே அவர்களைக் காட்டிக் கொடுத்து விடுகிறது!-அந்த ஆள் யார்?” என்று கேட்டார் பரஞ்சோதி.
“அதைத்தான் நான் கண்டுபிடிக்கப் போகிறேன்” என்று நிதானமாகக் கூறிய நீலகண்டன், “எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது” என்று கூறிவிட்டு வேகமாக, கீழே ஹாலுக்கு இறங்கிச் சென்றார். இன்ஸ்பெக்டர் பரஞ்சோதியும் அவரைப் பின்பற்றி சென்றார்.
ஹாலில், ஒரு நாற்காலியில் சாய்ந்தபடி அசந்து போய் உட்கார்ந்திருந்தாள் தமயந்தி.
“அந்த ஆள் யாரென்று, உங்களுக்குத் தெரியவில்லையா, அம்மா” என்று கேட்டார் நீலகண்டன்.
நீலகண்டனையும், பரஞ்சோதியையும் மாறி மாறிப் பார்த்த தமயந்தி, “தெரியாது” என்று பாவனையில் தலையாட்டினாள். இருந்த போதிலும், அவள் புளுகுகிறாள் என்று புரிந்து கொண்டார் பரஞ்சோதி.
“அவன் யாரோ தெரியவில்லை; என்னைக் கதிகலங்க அடித்து விட்டான்; அவ்வளவு தான்! இதற்காக நான் இப்படி ஊரைத்திரட்டி இருக்க வேண்டியதில்லை!” என்றாள் தமயந்தி. அவள் குரல் இப்பொழுது நிதானமாக இருந்தது. இருந்த போதிலும், தன்னுடைய முகத்தில் பிரதிபலித்த உணர்ச்சியை அவளால் மறைக்க முடியவில்லை. அதைப் பரஞ்சோதி கவனித்துக் கொண்டார். அவளுக்கு வெறும் கலவரம் மாத்திரம் ஏற்படவில்லை; ஒரு பயங்கர அனுபவமே ஏற்பட்டு இருக்கிறது; அந்த அனுபவத்தை, தனது வாழ்நாள் முழுவதும் அவளால் மறக்கமுடியாது, என்று நினைத்தார் பரஞ்சோதி.
தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு தமயந்தி எழுந்ததும், அவளால் நிற்க முடியாமல் கால்கள் தடுமாறின.
“உங்களுக்கு வேறு அறை தருகிறேன், அம்மா! எனது அறைக்கு அடுத்த அறையை ஒழித்துத் தருகிறேன்” என்று கூறிய நீலகண்டன் அவளுடைய பதிலுக்கு எதிர்பார்க்காமல் ராமையாவை விட்டு அறையைத் தயார் செய்யச் சொல்லிவிட்டு, தமயந்தியைக் குஞ்சம்மாளின் துணையோடு அங்கு படுத்துக்கொள்ள ஏற்பாடு செய்தார்.
அதன் பிறகு, பொன்னம்பலத்தைத் தேடிக் கொண்டு கிளம்பினார். பொன்னம்பலம் தன் அறையில் ஏதோ கடிதங்கள் எழுதிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அதோடு, சர்வசாதாரண நிலையில், பதட்டமில்லாமல் காணப்பட்டான்.
“ஒருமணி நேரமாக கடிதங்கள் எழுதிக்கொண்டே இருக்கிறேன். இன்னும் முடியவில்லை!” என்று புன்னகையுடன் கூறினான்.
“யாரோ, தமயந்தியின் அறைக்குள் நுழைந்தார்கள் அது நீயா?” என்று கடுமையாகக் கேட்டார் நீலகண்டன்.
பொன்னம்பலம் சட்டென்று திரும்பி அவர் முகத்தை புன்னகையுடன் பார்த்தபடி, “அது நானல்ல–அது யாராக இருந்தாலும், அந்த ஆள் ரசனை உள்ளவனென்றே தோன்றுகிறது! அந்தக் கிழவனாக இருக்கலாம்–அதாவது உங்கள் மாயத்திருடன்!” என்று நிறுத்தினான்.
நீலகண்டன் அவனை ஆத்திரத்தோடு பார்த்துக் கொண்டு நின்றார். பொன்னம்பலம் ஒரு விஷமச் சிரிப்புடன், “நீலகண்டன்! நீர் ரொம்பப் பதறிப்போய் இருக்கிறீர்! அது இருக்கட்டும்; நீர் அந்தப் பெண்ணின் புருவத்தைக் கவனித்தீரா–” என்று ஆரம்பித்தான்.
நீலகண்டன் சட்டென்று திரும்பி, அறைக் கதவைப் படீரென்று சாத்திக்கொண்டு கீழ் தளத்திற்கு விரைந்தார்.
கீழ்தளத்திலே, இன்ஸ்பெக்டர் பரஞ்சோதியும், வெளியில் இருந்து திரும்பி வந்த தம்பித்துரையும் அளவளாவிக் கொண்டு இருந்தனர்.
“தம்பித்துரை! நீங்கள் எதை நாடி அலைகிறீர்கள்?” என்று கேட்டார் பரஞ்சோதி. அந்தச் சமயத்தில், நீலகண்டன் தம் அறைக்குள் போய் நுழைந்தார்.
“இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி! இந்த தாடிக் கிழவன் விஷயம் தான் எனக்கு ரொம்ப சிரத்தையை ஏற்படுத்தி இருக்கிறது அதோடு, தமிழ்நாட்டிற்கு வருவதென்றால் எனக்கு அலாதி ஆசை!” என்றார் தம்பித்துரை.
“இல்லை; நீங்கள் அந்தக் கிழவனைத் தேடி வரவில்லை! வேறு எதற்கோ வந்திருக்கிறீர்கள்! உங்களை நான் கவனித்துக் கொண்டு வருகிறேன்–அது போகட்டும்; உங்களுக்கு ராஜாபகதூர் தில்லையம் பலத்தைத் தெரியுமா?” என்று கேட்டார்.
“நான் அவரைப் பார்த்திருக்கிறேன்” என்றார் தம்பித்துரை.
“நீங்கள் அவரை வடநாடு பூராவும் சுற்றிக் கொண்டு திரிந்தீர்கள்!–எதற்காக அவரை அப்படிக் கண்காணித்தீர்கள்?”
தம்பித்துரை சிரித்தபடி, “உண்மையிலேயே எனக்கு ராஜாபகதூர் விஷயத்தில் எந்தவித அக்கறையும் கிடையாது!” என்றார்.
இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி அவரை உற்றுப் பார்த்தபடி, “உங்களுக்கு ராணிபவானி விஷயத்தில் எதுவும் சிரத்தை உண்டா?” என்று கேட்டார்.
“நிச்சயமாக இல்லை” என்று தன் நரைத்த தலையை ஆட்டிய தம்பித்துரை, ‘மணமான பெண்கள் விஷயத்தில் எனக்கு அக்கறை பிறப்பதில்லை; அவர்கள் பேரழகியாக இருந்தாலும், நான் ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன்! நான் எந்தவித திட்டமும் இல்லாமல் ஊர்சுற்றிக் கொண்டு இருந்தேன்!” என்றார்.
“எதனால், தீ விபத்து தினத்தன்று உங்கள் சாமான்கள் இங்கு வந்தன? தீ விபத்தின் போது எதனால் நீங்கள் அந்த இடத்தில் காணப்பட்டீர்கள்? இந்த ஓட்டலுக்கு, எதனால் மறுதினம் வந்து தீயைப்பற்றியே எதுவும் தெரியாதவர் போல் நடித்தீர்கள்?” என்று சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்தார் பரஞ்சோதி.
தம்பித்துரை ஒரு புன்னகையோடு, உங்களுக்கு உளவு சொன்னது யார்? ராமையா அல்லது குஞ்சம்மா ஆகிய இருவரில் ஒருவராகத்தான் இருக்க முடியும்!–தீ விபத்து சமயத்தில் நான் இந்தப் பக்கமாகப் போனது உண்மை. ஆனால், அன்றிரவு சென்னையில் தான் படுத்திருந்தேன். மறுநாள் காலை தான் இங்கு வந்தேன். அது ஏன் என்று என்னை நீங்கள் கேட்டால், அதை விளக்குவதற்கு ஒருமணி நேரத்திற்கு மேலாகும்!” என்றார்.
“நீங்கள் ராணிபாவானியை சந்தித்து இருக்கிறீர்களா?”
“நான் அவளைப் பார்த்திருக்கிறேன்” என்றார் தம்பித்துரை.
“நீங்கள் பொன்னம்பலத்தை சந்தித்து இருக்கிறீர்களா?”
“தூரத்தில் இருந்தபடி பார்த்திருக்கிறேன். ராஜாபகதூர் கோஷ்டியுடன் சுற்றிக்கொண்டு இருக்கும் அந்த இளைஞன் தானே? இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி! நான் உண்மையிலேயே பொழுது போக்குக்காகத்தான் ஊரைச் சுற்றி வருகிறேன். இதை நீங்கள் நம்பமாட்டீர்களா?”
“நம்பமாட்டேன்! முப்பது வருஷ போலீஸ் அனுபவமுள்ள ஒரு அதிகாரி அர்த்தமில்லாமல் ஒரு கோஷ்டியைச் சுற்றிக்கொண்டு இந்தியா பூராவும் அலையமாட்டார்!” என்று சிரித்துக் கொண்டே கூறினார் பரஞ்சோதி.
தம்பித்துரை மெதுவாகத் தம் இருப்பிடத்தை விட்டு எழுந்து, தம் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார்.
“கொஞ்சம் தாம்பரத்தைச் சுற்றி வேவு பார்த்து விட்டு வருகிறேன்!” என்று புன்னகையுடன் தலையாட்டி விட்டு, இருளுக்குள் நடந்தார்.
12. பரஞ்சோதியின் விஜயம்…?
நீலகண்டன் திரும்பவும் ஹாலுக்கு வந்தபொழுது, இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி, ஜுரவேகத்தில் ஏதோ எழுதிக்கொண்டு இருந்தார்.
நீலகண்டன் அவரைத் தாண்டிக் கொண்டு செல்லும் பொழுது, அவர் ஏதோ போட்டிப்பந்தயத்திற்கு அவ்வளவு சுவாரசியமாக விடையெழுதிக் கொண்டு இருக்கிறார் என்று கண்டுபிடித்தார். பரஞ்சோதியை நீலகண்டன் தாண்டிச் செல்லும்பொழுது, பரஞ்சோதி அவரைக் கூப்பிட்டார்.
“பொன்னம்பலம் என்பது யார்? அவனை நான் பார்த்ததே இல்லை”
“அவன் இலங்கைத் தீவை சேர்ந்தவன்” என்றார் நீலகண்டன்.
“ராஜாபகதூரின் கோஷ்டியைச் சேர்ந்தவனா?”
நீலகண்டன் ஒரு விநாடி மௌனமாக இருந்துவிட்டு, “முன்பு அப்படி இருந்தான்!” என்றார்.
“இப்பொழுது இல்லையாக்கும்? சென்னையில், ராஜாபகதூர் குடும்பத்தில் ஏதோ தகராறு ஏற்பட்டிருப்பதாக உலவும் வதந்தி உண்மையானதா? அல்லது வெறும் கட்டுக்கதையா?”
“பிறருடைய விவகாரத்தில், எனக்கு சிரத்தை கிடையாது என்று சுருக்கமாகக் கூறினார் நீலகண்டன்.
“இந்தப் பொன்னம்பலம் ஏதும் தகராறில் சிக்கிக் கொண்டு இருக்கிறானா என்று விடாப்பிடியாகக் கேட்ட இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி, “நான் அவனைப் பார்க்க ஆசைப்படுகிறேன்!” என்றார்.
“அவன் எட்டாம் நம்பர் அறையில் இருக்கிறான்” என்று குறிப்பாகக் கூறினார் நீலகண்டன்.
பரஞ்சோதி தொடர்ந்து, “அவன் எப்படி இருப்பானென்று நான் சொல்லுகிறேன். பார்வைக்கு ரொம்ப அழகாக இருப்பான் அதோடு, உயர்ந்த ‘ரகமான “ஸென்ட்”களை எல்லாம் அவன் உபயோகிப்பான். நான் சொல்லுவது, கிட்டத்தட்ட சரிதானே?” என்று கேட்டார்.
படிக்கட்டை நோக்கி நடந்து கொண்டு இருந்த நீலகண்டன், அவர் பக்கம் திரும்பி, “அவன் அழகனா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. இன்றிரவு நீங்கள் அவனைப் பார்க்கலாம். நான் சொல்லக் கூடியது இது தான், இன்ஸ்பெக்டர்–அவனை “எனக்கு அடியோடு பிடிக்காது!” என்றார்.
இந்தச் சமயத்தில், மாடிப்படிக்கட்டில் ராணிபவானி இறங்கி வருவதைக் கண்ட நீலகண்டன், ஒருபுறமாக ஒதுங்கி நின்று, அவள் செல்லுவதற்கு வழிவிட்டார்.
இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி அதற்கு முன்னால் பவானியை பார்த்ததில்லை. அவளுடைய புகைப்படம் ஏதோ சில பத்திரிகைகளில் வெளி வந்திருந்தன. அந்தப்படங்களை பரஞ்சோதி பார்த்திருக்கிறார். ஆனால் அவற்றில் காணப்பட்டதைவிட, அதிக அழகாக நேரில் தோற்றமளித்தாள். பவானியின் முகம், வெளுத்திருந்த போதிலும், அதில் நிலவிய வசீகரம் பாழ்படவில்லை. அங்கு உட்கார்ந்திருந்த பரஞ்சோதியையோ நீலகண்டத்தையோ கவனியாமல் அவள், சாப்பாட்டுக் கூடமிருந்த திசையை நோக்கி நடந்தாள்.
அவள் அப்பால் சென்று மறைந்ததும், இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி, “ராணிபவானியா?” என்று கேட்டார்.
‘ஆம்’ என்ற பாவனையில் தலையசைத்தார் நீலகண்டன்.
இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி யோசனையோடு தரையை பார்த்து கொண்டு இருந்தார். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவரைப் போல, “நான் கொஞ்ச நேரம் வெளியே உலாவப் போய்விட்டு வருகிறேன்” என்று கிளம்பினார்.
“வழியில் நீங்கள் தம்பித்துரையையும் சந்திக்கலாம்.”
“தம்பித்துரையை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா இல்லையா என்று எனக்கே இப்பொழுது தெரியவில்லை.”
இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி இருளில் சென்று மறையும் வரை அவர் போகும் திக்கையே பார்த்துக் கொண்டு இருந்தார் நீலகண்டன். திரும்பவும் ஹாலுக்கு வந்த பொழுது, ராணிபவானி அங்கு நின்று கொண்டு இருந்தாள்.
“அந்த மனிதர் யார்?” என்று கேட்டாள் பவானி.
“சென்னைப் போலீஸ் இலாக்காவைச் சேர்ந்த ஒரு பெரிய அதிகாரி, அவர் பெயர் பரஞ்சோதி–ரொம்ப நல்லவர், ராணிசாகிப்!”
“அவர் எதற்கு வந்திருக்கிறார்?” என்று அவசரமாகக் கேட்டாள் பவானி. அவளுடைய நினைவு, சட்டென்று கங்கணத்தின் விவகாரத்தில் சென்றது.
“அவர் ஓய்வு பெற வந்திருக்கிறார். குறிப்பாக அவருக்கு எந்த வேலையும் இருப்பதாகத் தெரியவில்லை” என்றார் நீலகண்டன்.
“ராஜாபகதூர் அவரைத் தருவிக்கவில்லையே?” என்று சிறிது பரபரப்புடன் கேட்டாள்.
“இல்லை, ராணிசாகிப்! அவருக்கு ராஜாபகதூரை தெரியாது– பரஞ்சோதிதான் அப்படி சொன்னார்–பொதுவாக நான் போலீஸ் அதிகாரிகளை நம்புவது இல்லை.”
சற்று முன் தம்பித்துரை அமர்ந்திருந்த நாற்காலியில் பவானி அமர்ந்தாள். அங்கு கிடந்த ஒரு பத்திரிகையை எடுத்து யோசனையோடு புரட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தாள். நீலகண்டன் அந்த இடத்தை விட்டு அப்பால் செல்வதற்காகக் காத்துக் கொண்டு இருந்தார்.
“நீங்கள் பொன்னம்பலத்தைப் பார்த்தீர்களா?” என்று தலை நிமிராமலே கேட்டாள் பவானி.
“அவன் அறையில் உட்கார்ந்து, ஏதோ கடிதங்கள் எழுதிக் கொண்டு இருக்கிறான், ராணிசாகிப்!”
“தீ விபத்தைப்பற்றி எழுதிக் கொண்டு இருக்கிறானோ?” என்று பத்திரிகையை புரட்டிய படியே கூறிய ராணிபவானி, “அந்த விபத்து, அவனை ரொம்ப அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது” என்றாள்.
“அது உங்களைத்தான் ரொம்ப அதிர்ச்சியடையச் செய்திருக்கும்.” என்று நேரடியாகப் பேசினார் நீலகண்டன்.
ராணிபவானி புன்னகையுடன் தலை நிமிர்ந்தபடி, “ஆமாம்; ஆனால், பெண்கள் கொஞ்சம் வலுவான உள்ளம் படைத்தவர்கள்! நீங்கள் தான், பொன்னம்பலத்தை அவன் அறையிலிருந்து வெளியே தூக்கி வந்தீர்கள் அல்லவா? உள்ளே வேறு யாருமிருப்பதாக அவன் சொல்லவில்லையா?”
இதற்கு நீலகண்டன் வாய்திறந்து பதில் சொல்லவில்லை. ஆனால் அவருடைய மௌனத்தின் மூலம், அவள் நடந்ததை தெரிந்து கொண்டாள்.
“முதலில் பொன்னம்பலத்தைத் தூக்கி வந்தீர்கள். பிறகு, என்னை நீங்கள் மறைத்து காப்பாற்ற வேண்டி இருந்தது; ஏனென்றால் அந்தச் சமயத்தில், ராஜாபகதூரும், வேலைக்காரர்களும் வராந்தாவில் நின்று கொண்டு இருந்தார்கள் என்று நினைக்கிறேன்?”
“ஆமாம், ராணிசாகிப்!”–ராணிபவானி பொறுமை இழந்தவளாய், “என்னை ராணிசாகிப் என்று சொல்லாதீர்கள். சாதாரண மனிதப் பிறவிகளாகவே நாம் நடந்து கொள்ளுவோம்! என்னுடைய கணவர் அப்பால் சென்றதும், என்னைக் காப்பாற்றுவதற்காக அறைக்குள் நுழைந்தீர்கள்?” என்று கேட்டாள்.
“ஆமாம்” என்று நிதானமாகக் கூறினார் நீலகண்டன்.
“நான் உள்ளே இருந்தது பொன்னம்பலத்திற்குத் தெரியும்?” நீலகண்டன் சிறிது தயங்கினார்.
“நிச்சயமாக அவனுக்குத் தெரியுமென்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டாள் பவானி!
“ஆம்! அவனை வெளியே தூக்கி வரும்பொழுது, நீங்கள் உள்ளே இருப்பதாகவும், அதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டான்”
ராணி பவானி ஒரு விநாடி மௌனமாக இருந்தாள்.
“நீலகண்டன்! எனக்காக நீங்கள் ஏன் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்ளுகிறீர்கள்?” என்று கேட்டாள்.
நீலகண்டன் ஒரு வரண்ட புன்னகையுடன், “எனக்கே தெரியவில்லை–ஏதோ ஒரு உள்ளுணர்ச்சியால் தூண்டப்பட்டு அப்படிச் செய்தேன்” என்றார்.
“எனக்காக நீங்கள் அநுதாபப்பட்டு, மனோ வேதனை அடைகிறீர்கள் அல்லவா?” என்று செயலற்ற புன்னகையுடன் கேட்டாள் பவானி.
“இல்லை–ஏதோ ஒரு உள்ளுணர்ச்சி, உங்களிடம் பரிவாக நடந்து கொள்ளும்படி தூண்டுகிறது”
“நீங்கள் என்னிடம் ரொம்ப உயர்வாக நடந்து கொள்கிறீர்கள். இதற்கு என்னால் கைம்மாறு செய்ய முடியுமா என்று எனக்கே தெரியவில்லை–ம்…..என்னைப்பற்றி ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்–”
நீலகண்டன் சுற்றிலும் ஒரு முறை பார்த்துக் கொண்டார். ஹாலில் யாரும் காணப்படவில்லை. இருந்த போதிலும் தனது குரலைத் தாழ்த்தியபடி, “உங்களைப்பற்றி, ஒரு முடிவான முடிவுக்கு வந்திருக்கிறேன்! நீங்கள் ஓர் அசடு! அதை மறைத்துப் பேசுவதில் அர்த்தமில்லை!” என்றார் நீலகண்டன்.
ராணிபவானி தனது ஆசனத்தை விட்டு ஒரு பெரு மூச்சுடன் எழுந்தாள்: “உங்களைப் போலவே அப்படி நினைப்பவர்கள் இரண்டு பேர் இந்த ஹோட்டலில் இருக்கிறார்கள்–ஒருக்கால் மூன்று பேர் இருக்கக்கூடும்! ஆனால், நான் எந்த அளவுக்கு, பயங்கரமான மூடமாகிவிட்டேன் என்று எனக்கே தெரியவில்லை!– என்னுடைய முட்டாள் தனத்தின் விளைவு கொஞ்சம் கொஞ்சமாக என்னை நெருங்குகிறது. அதைப் பார்க்கும் பொழுது எனக்கு ஒரே கதிகலக்கமாக இருக்கிறது!” என்றாள்.
“நீங்கள் கதிகலங்க வேண்டிய நிலைமை எதுவுமில்லை– நிதானமாக நடந்து கொண்டால், எதற்கும் அஞ்சத் தேவையில்லை!”
ராணிபவானி ஒரு விநாடி யோசனையில் ஆழ்ந்து விட்டு, “ராஜா பகதூர் சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டு சென்னைக்கு போய்விட்டாரா?” என்று கேட்டாள்.
“இல்லை, ராணிசாகிப்! ஒரு சிறு கைப்பெட்டியை மாத்திரம் எடுத்துக்கொண்டு சென்றார். இங்குள்ள அறையைக் காலி செய்யும் உத்தேசம் அவருக்கு இல்லை. நாளையோ, அல்லது மறுதினமோ, இங்கு வருவதாக கூறியிருக்கிறார்.”
மீண்டும் சில விநாடிகள், தனது கீழுதட்டை கடித்தபடி யோசனையுடன் நீலகண்டத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ராணிபவானி.
“அந்த பயங்கரமான கத்திகளை எல்லாம், தன்னோடு எடுத்து கொண்டு போயிருக்கிறாரா?” என்று கேட்டாள். அந்தக் கேள்வியைக் கேட்டு வியப்படைந்த நீலகண்டன், “இல்லை; அவை, இன்னும் அவருடைய அறையில் தான் இருக்கின்றன! அவருடைய படுக்கையின் மீது கிடக்கின்றன!” என்றார்.
பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, ஒரு விஷயத்தை நீலகண்டன் கவனித்தார். பவானியின் குரல் ரொம்பவும் இறுகிப் போயிருந்தது. அவளுடைய பேச்சிலே, அவள் மனக்கொதிப்பு பிரதிபலித்துக் கொண்டே இருந்தது. பத்திரிகையைப் பிரிக்கும் பொழுது, அவள் கரங்கள் இலேசாக நடுங்கின. அவள் தனியாக இருக்கவே பயந்தாளென்று நீலகண்டனிற்குத் தோன்றியது. ஏனென்றால், அவர் இரண்டு முறை, அப்பால் செல்ல நகர்ந்த பொழுதும், அவள் அவரைத் திருப்பியழைத்து கொண்டாள்.
அம்மாதிரி பவானி இரண்டாவது முறை அழைத்தபொழுது, அவள் கேட்ட கேள்வி நீலகண்டத்தை திடுக்கிடச் செய்தது.
“அந்தப் பெண் விஷயத்தில் அவன் ரொம்ப அக்கரையாக இருக்கிறானல்லவா?”
“யார்?”
“பொன்னம்பலத்தை சொல்லுகிறேன்! இங்கே தங்கியிருக்கிறாளே–தமயந்தி–அவளும் அவனும் நெருங்கிய நண்பர்களா?”
“அவர்கள் நண்பர்களேயல்ல!” என்று சுருக்கமாகக் கூறினார் நீலகண்டன்.
“இன்றிரவு அவளுடைய அறைக்குள் அவனிருந்தான்!” என்றாள் பவானி. அவள் குரலில் தொனித்த மனோவேகம் நீலகண்டனை திடுக்கிடச் செய்தது. பொன்னம்பலத்தின் மீது அவளுக்கிருந்த ஆத்திர உணர்ச்சி, மிகப் பயங்கரமாக வெளிப்பட்டது.
“அவள் அறைக்குள் அவனிருந்தானா?”
“நான் அதை வாய்விட்டு சொல்லி இருக்கக்கூடாது. ஆனால் நான்–நான் என் கண்ணால் பார்த்தேன்……அப்பொழுது, நான் மாடித் தாழ்வாரத்தில் நின்று கொண்டு இருந்தேன்…..அந்த மிருகம், அம்மாதிரி நடந்து கொண்டான்!” என்றாள் பவானி.
நீலகண்டன் மௌனமாக இருந்தார். “சே: எவ்வளவு கேவலமான பேச்சுக்களை எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறேன்! ஒருக்கால், அவர்கள் இருவரும் உண்மைக் காதலர்களாக இருக்கலாம். இதையெல்லாம், நான் உங்களிடம் சொல்லுவது ரொம்பத் தவறு” என்று தொடர்ந்து கூறினாள் பவானி.
“நீங்கள் என்ன பார்த்தீர்கள்?’ என்று வற்புறுத்திக் கேட்டார் நீலகண்டன்.
“அங்கு என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது… ஏதோ தகராறு நடந்திருக்கிறது இன்று மாலை தோட்டத்தில் இருந்து தமயந்தி ஓடி வந்ததைப் போல் கண்மூடித்தனமான வேகத்தில் ஓடி வந்தாள்! தோட்டத்தில் என்ன நடந்ததென்று எனக்குத் தெரியும்! நீங்கள் தான் அவளுக்கு இங்கு கார்டியன் போலிருக்கிறது……” என்று ஏதோ கூறிக்கொண்டே வந்த பவானி சட்டென்று தன்னைச் சமாளித்தபடி, “எவ்வளவு கீழ்த்தரமாகவும் முட்டாள்தனமாகவும் பேசுகிறேன். நீலகண்டன்! என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். சமீபத்து நிகழ்ச்சிகளால், என் மனப்போக்கு இம்மாதிரி ரொம்பவும் கெட்டிருக்கிறது. எனது நிலைமையை உங்களால் நன்றாக உணர்ந்து கொள்ளமுடியும்…..நீங்கள், எனது நண்பர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை…..எதற்காக என் கணவரிடம் பொய் சொன்னீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை….. என்னை மறைத்து காப்பாற்ற நீங்கள் ஏன் இவ்வளவுள் எஎனக்குப் புரியவில்லை…..” என்று நிறுத்தினாள்.
நீலகண்டன் அவள் முகத்தையே உற்றுப் பார்த்தபடி, “நான் ஏன் அப்படிச் செய்தேனென்று ஒரே வரியில் சொல்லுகிறேன். நீங்கள் எனக்கு ஒரு சமயத்தில் செய்த உதவிக்கு, நன்றி தெரிவிக்கும் முறையில் தான் நான் அம்மாதிரி நடந்து கொண்டேன்–அது வெறும் நன்றியறிதல் தான்!-இன்று மாலை, காட்டுக்குள் என்ன நடந்தது? அதாவது பொன்னம்பலத்திற்கும், தமயந்திக்கும் இடையில் என்ன நடந்தது? எனக்கு அது தெரியவேண்டும்” என்றார்.
பவானி மீண்டும் நாற்காலியில் உட்கார்ந்தபடி, “நிலைமை ரொம்பவும் கேவலமாகி விட்டதென்று சொல்ல முடியாது. ஆனால், கிட்டத்தட்ட அந்த நிலைமை நெருங்கியது–அவள் தப்பி ஓடிவிட்டாள்!” என்று சுருக்கமாகக் கூறினாள்.
“ஓ!” என்று அவளை வெறிக்கப் பார்த்தபடி கூறினார் நீலகண்டன்.
அவர் இருந்த நிலையைக் கவனித்த பவானி. “நீலகண்டன்! நீங்கள் எதுவும் அமர்க்களம் செய்யாதீர்கள்! தயவு செய்து வேண்டாம்! நாளைய தினம் பொன்னம்பலம் போய்விடுவான்; நானும் போய் விடுவேன். தயவு செய்து ஒன்றும் செய்யாதீர்கள்!” என்றாள்.
நீலகண்டன் அதைக் கவனியாதவர் போல், “அதைப்போல் எதுவும் நடந்திருக்கும் என்று தான் நானும் எதிர்பார்த்தேன்” என்று யோசனையுடன் கூறினார்.
பவானி பொறுமையிழந்தவளாய், “தமயந்தி சிறு குழந்தையல்ல; அவளைக் காப்பாற்றிக் கொள்ள அவளுக்கே தெரியும்! இங்கு வந்து தங்குபவர்களுக்கு எல்லாம், நீங்கள் மெய்க்காப்பாளராக இருக்க முடியாது!” என்றாள்.
நீலகண்டன் ஒரு வரண்ட புன்னகை பூத்தபடி, “பொன்னம்பலம் நாளைக்குப் புறப்படுவதாக இருந்தால் சரி–” என்று ஏதோ சொல்ல வந்தவர் சட்டென்று பேச்சை நிறுத்திக் கொண்டார்.
ஏனென்றால், அந்தச் சமயத்தில், பொன்னம்பலம் மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டு இருந்தான். அவன் முகத்திலே, புன்னகை படர்ந்திருந்தது.
கீழே இறங்கி வந்த பொன்னம்பலம் நீலகண்டத்தை கவனியாமல் புறக்கணித்துவிட்டு, ராணிபவானியைப் பார்த்து ஒரு புன்னகை பூத்தான்: “தனியாகவா இருக்கிறாய்? நீ இங்கு இருப்பாயென்று நான் எதிர்பார்க்கவில்லை!” என்றான்.
ராணிபவானி எந்தவிதப் பதிலும் சொல்லாமல் தனது ஆசனத்தில் நிமிர்ந்து உட்கார்ந்தாள். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவள் போல், சட்டென்று அந்த இடத்தை விட்டு எழுந்து மாடியை நோக்கி நடந்தாள்.
அவள் அப்பால் சென்றதும், பொன்னம்பலம், நீலகண்டத்தை நோக்கி, “இங்கு வந்திருக்கும் நபர் யார்?” என்று கேட்டான்.
“அவர் தான் இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி” என்று நிதானமாகக் கூறிய நீலகண்டன், “பரஞ்சோதி இங்கு வந்திருப்பதின் காரணம், ராஜாபகதூரின் காணாமற்போன வைரகங்கணம் சம்பந்தமாக என்று தெரிகிறது” என்றார்.
பொன்னம்பலம் அவரை வெறிக்கப் பார்த்தான். அவன் முகம் வெளுத்தது.
“வைரகங்கணமா?” என்று வியப்போடு கேட்டவன், சட்டென்று தன்னைச் சமாளித்துக் கொண்டு, “செல்வராஜ் எங்கே சென்றிருக்கிறான்?” என்று கேட்டான்.
“அது எனக்குத் தெரியாது”
கொஞ்ச நேரம் வரை மௌனமாக நின்று கொண்டு இருந்த பொன்னம்பலம், “இன்ஸ்பெக்டர் பரஞ்சோதியுடன் யாரோ ஒரு ஆள் பேசிக்கொண்டு இருந்தானே, அந்த ஆள் யார்?” என்று கேட்டான்.
“அவர் இலங்கையிலிருந்து வந்திருக்கிறார்”
மீண்டும் ஒரு விநாடி மௌனம் நிலவியது.
“அவன் பெயரென்ன?”
“தம்பித்துரை–மாஜி போலீஸ் அதிகாரி.”
இதைக்கேட்டதும் நிலை தடுமாறிப்போன பொன்னம்பலம், “தம்பித்துரை!” என்று மூச்சு வாங்கக் கூறினான். அவன் முகம் சவம்போல் வெளுத்தது. அளவு கடந்த பீதியால், அவன் கண்கள், வெளியே தெறித்து விழுந்து விடுவதைப் போல் முரண்டிக்கொண்டு நின்றன. “தம்பித்துரையா?” என்று மீண்டும் கலவரத்தோடு திருப்பிக் கூறிய பொன்னம்பலம், “இந்த ஹோட்டலில்….. இங்கேயா தங்கிக் கொண்டு இருக்கிறான்!” என்று பதறினான்.
நீலகண்டன் மெதுவாகத் தலையசைத்தபடி, “அவரை உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
அதற்குப்பதில் சொல்லாமல், பொன்னம்பலம், “எனது அறையின் நம்பர் அவருக்குத் தெரியுமா? தெரிந்தால் பரவாயில்லை உடனே என் அறையை மாற்றிவிடுங்கள்!” என்று தவித்தான்.
நீலகண்டன் அவனை நிதானமாகப் பார்த்தபடி, “வேறு அறைக்கு மாற்றிவிடுகிறேன். ஆனால் அந்த அறை கொஞ்சம் ஒதுப்புறமாகத் தள்ளியிருக்கிறது” என்றார்.
“எதுவாக இருந்தாலும் கவலையில்லை–உடனே மாற்றுங்கள்.”
தம்பித்துரை!–ஆண்டவனே! இதே ஹோட்டலில் தங்கியிருக்கிறார்! அது அவனுக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது!
“அவர் உன் நண்பரா?” என்று இகழ்ச்சியாகக் கேட்டார் நீலகண்டன்.
“நண்பரல்ல, உறவினர்!” என்று பதட்டத்துடன் கூறினான் பொன்னம்பலம்……
புதிதாக பொன்னம்பலத்திற்கு ஏற்பாடு செய்த அறையில் அவனோடு நின்று கொண்டு இருந்தார் நீலகண்டன்.
“நீலகண்டன்! இந்த இடம் ரொம்பப் பிரமாதமாக இருக்கிறது. தாம்பரம் போன்ற இடத்தில் இதைப்போன்ற ஒரு கட்டிடத்தை வைத்துக் கொண்டு, நம்மை ஏனென்று கேட்க யாருமில்லாமல், நிம்மதியான வாழ்க்கை நடத்துவது எவ்வளவோ அற்புதமாகத்தான் இருக்கும். நீர் ஓர் அதிருஷ்டக்காரர்!” என்றான் பொன்னம்பலம்.
நீலகண்டன் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாரே தவிர எந்தவிதப் பதிலும் சொல்லவில்லை.
“நான் நாளைய தினம் சென்னைக்குப் போகப் போகிறேன்!” என்று தொடர்ந்து கூறிய பொன்னம்பலம், “அங்கிருந்து வடநாடு சென்றாலும் செல்லுவேன். வெகு காலத்திற்கு, நீங்கள் என்னைப் பார்க்க முடியாது. அது போகட்டும்; நான் எனது “செக்” ஒன்றை தருகிறேன். அதற்குப் பணம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்!” என்றான்.
அவன் சொல்லுவதை உஷாராகக் கவனித்தார் நீலகண்டன். “பொதுவாக, நான் அம்மாதிரி வேலை எல்லாம் செய்வது கிடையாது. இருந்த போதிலும், நீ சிறுதொகைக்கு “செக்” எழுதிக் கொடுத்தால் நான் பணம் தருகிறேன்” என்றார்.
பொன்னம்பலம் சாவகாசமாக மேஜையருகே சென்று, ஒரு “செக்” புத்தகத்தை எடுத்து, சாவதானமாக எழுத ஆரம்பித்தான்.
“என்னை உமக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்.” என்றான் பொன்னம்பலம்.
“தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், உன்னை எனக்கு அடியோடு பிடிக்கவில்லை
“அது பரிதாபந்தான்!” என்றான் பொன்னம்பலம். பிறகு தான் எழுதிய செக்கைக் கிழித்து நீலகண்டத்திடம் கொடுத்தான்.
நீலகண்டன் அந்தச் செக்கை கையில் வாங்கி, வெகு நேரம் வரை அதைப் பார்த்துக் கொண்டு இருந்தார்,
“விளையாடுகிறாயா?” என்று நிதானமாகக் கேட்டார்.
“இல்லை”
“நான் ஒரு சிறு தொகைக்குத்தாளே ‘செக்’ எழுதச் சொன்னேன்” என்றார் நீலகண்டன்.
“என் பெயரில் நிறைய பணம் இருக்கிறது. நான் எவ்வளவு பெரிய பணக்காரன் என்று, நீர் புரிந்து கொள்ளவில்லை!” என்று புன்னகையுடன் கூறினான் பொன்னம்பலம்.
நீலகண்டன், ‘செக்’கை மடித்து தன் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டார்.
“நாளைய தினம் நீ சென்னைக்குப் போகிறாய் அல்லவா?” என்று கேட்டார் நீலகண்டன்.
“நான் திரும்பி வரக்கூடும்”
“திரும்பி வந்தால், இங்கு உனக்கு அறை கொடுக்க முடியாது, பொன்னம்பலம்–உன்னிடம் நான் வெளிப்படையாகவே பேசுகிறேன். இதுவரை, நான் உன்னிடம் ரொம்ப தாராளத் தன்மையுடன் நடந்து கொண்டேன்.”
“அப்படியானால் என்னை வரவேண்டாம் என்று சொல்கிறீர்களா?” என்று புன்னகையுடன் கேட்டான் பொன்னம்பலம்.
“தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், நீ இங்கு வருவதையே நான் அடியோடு வெறுக்கிறேன். அதற்குக் காரணம் என்னவென்று கேட்கமாட்டாய் என்று நினைக்கிறேன்” என்றார் நீலகண்டன்.
பொன்னம்பலம் விழுந்து விழுந்து சிரித்தான். நீலகண்டன் ஆத்திரமாக அவன் தோளை இறுகப்பற்றி உலுக்கியபடி, “பொன்னம்பலம்! நான், ஒரு குறிப்பிட்ட அளவுதான் நல்லவன். ஆனால் இங்கு தங்கும் வாடிக்கைக்காரர்கள், மற்றவருடைய அறைக்குள் நுழைவதைக் கண்டால், அவர்கள் எலும்பை நொறுக்கி விடுவேன். இன்னொரு தடவை நீ அதை செய்யாதே!’ என்று சீறினார். பொன்னம்பலம் தன்னை உதறி விடுவித்துக் கொண்டான். அவன் மனம், எரிமலையாய்க் குமுறியது.
“அந்தப் புருவக்காரப் பெண்தானே, புகார் செய்தது?” என்று விசித்திரமாகக் கேட்ட பொன்னம்பலம், “நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதோ என்னவோ?” என்றான்.
“நன்றாகப் புரிகிறது; அது புருவமாக இருந்தாலும் சரி; அது புருவமில்லாமல் இருந்தாலும் சரி; மரியாதையாக, உன் அறையிலேயே நீ அடங்கிக்கிட. கொஞ்ச நேரத்தில் நான் மீண்டும் திரும்பி வந்து, நீ எந்த இடத்திற்குச் சென்றால் தம்பித்துரையின் பயமில்லாமல் வாழமுடியும் என்று உனக்கு சொல்லிவிட்டுப் போகிறேன்!” என்றார்.
அவரது பேச்சு பொன்னம்பலத்திடம், அவர் எதிர்பார்த்த மாறுதலை ஏற்படுத்தியது.
– தொடரும்…
– நீலகண்டன் ஹோட்டல் (துப்பறியும் நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1958, பிரேமா பிரசுரம், சென்னை.