காத்திருப்பு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தீபம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 5, 2024
பார்வையிட்டோர்: 2,355 
 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மணி ஒன்பது அடித்துவிட்டது. தெருவில் ஜன நடமாட்டம் குறைந்துவிட்டது. இன்னும் சுகந்தியைக் காணவில்லை. 

அப்படியென்றால், தன்னைத் தந்திரமாய் ஏமாற்றி அவள் காரியத்தைச் சாதித்துக்கொண்டதுதானா? 

கிருஷ்ணசாமிக்கு என்னவோ போலிருந்தது. அப்படித் தன்னை ஏமாற்றிவிட்டு அவளால் தப்பித்துக்கொள்ளமுடியுமா? நாளை மறுபடியும் பரீட்சை ஹாலில் தன்னை அவள் எப்படி எதிர்கொள்வாள்? எதுக்கு எதிர்கொள்ளவேண்டும்? இன்று போல் அல்லாமல் நாளை முதல் பாடங்களை நன்றாகப் படித்துக் கொண்டு பரீட்சைக்கு அவள் வருவதாக இருந்தால், தன் தாட்சண்யம் ஒன்றும் அவளுக்குத் தேவை இல்லையே! 

ஆனால்… 

இன்றுதானே பி.எஸ்.ஸி. இறுதியாண்டு பப்ளிக் பரீட்சை தொடங்கியிருக்கிறது. முதல் நாளே இப்படி என்றால்… இனியுள்ள நாட்களில் அவள் என்னத்தைப் படித்துக் கிழித்துக் குப்பை கொட்டிவிடப்போகிறாள்! ஆனால் அவளைப் பார்த்தால் அப்படிப் படிப்பில் மோசமாக ஒன்றும் தோன்றவில்லையே! தன் வகுப்புக்களில் எல்லாம் அவள் பிரைட்டாகத்தான் இருந்திருக்கிறாள். 

இன்று மத்தியானம் பரீட்சை எழுத வந்தபோது மட்டும் அவளுக்கு என்ன வந்து விட்டதாம்? இப்போ வருவாளே, முதலில் இதைத்தான் அவள்கிட்டே கேட்கணும்…! 

அவருக்கு இப்போ உள்ளுக்குள் சிரிப்பு மூண்டது… அவள் எங்கே வரப்போகிறாள்… பிறக்காத குழந்தைக்கு ஜாதகம் பார்த்ததுபோல, பெய்யாத மழைக்குக் குடை பிடித்ததுபோல் வருவதே நிச்சயமில்லாத அவளிடம் முதலில் கேட்க வேண்டியதை, தான் இப்போது ஒத்திகை நிகழ்த்துகிறோமா? 

வெளிக் கதவை, வேண்டுமென்றேதான் உள்ளிருந்து தாள் போட்டுக் கொண்டு, இந்த முன் அறையின் விளக்கை அணைத்து இருட்டடித்துக்கொண்டு, மரணத்தின் நிறமாய் கனக்கும் இருளில் சொட்டச் சொட்ட நனைந்தவாறு இப்படித் தெருவைப் பார்த்திருந்த ஜன்னல் அருகில் அவள் வரவை எதிர்பார்த்து அவர் காத்திருந்தார். 

சாலை விளக்குகள் சிந்திக்கொண்டிருந்த மங்கிய வெளிச்சத்தில், தெரு முனையில் அவள் திரும்பிய உடனேயே, தன்னால் கண்டு கொள்ளமுடியும். இங்கே தன் வீட்டு வாசலில் நின்றுகொண்டு, அண்டை வீடுகளில் கேட்டு விடாமல் இருக்கும் பொருட்டு, கதவை மெதுவாய், மென்மையாய் அவள் தட்டுவதைக் கேட்ட பின்னரும், சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டு அவசரப் படாமல் கதவைப்போய்த் திறக்கவேண்டும். தெருவிளக்கின் பின்னணியில் வீட்டு நடையில் ஒரு அப்ஸரஸாக நிற்கும் அவளை எந்த ஆர்ப்பாட்டமும் காட்டாமல் உள்ளே அழைத்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் அப்படி ஒன்றும் அவளுக்காகத் தான் ஏங்கிக்கொண்டு காத்திருக்கவில்லை என்று அவளுக்குப் படும். ஏதோ அவள் வலிய நீட்டிய ஆஃபரை தன் ஆண்மை திரஸ்கரிக்கவில்லை. அவ்வளவுதான் என்று அவள் எண்ணலாம். 

ஆனால், நிஜம்? 

மெல்ல அடுத்த அறைக்கு வந்தார். இன்று இந்தத் தன் படுக்கை அறைக்கு ஏதோ ஒரு புது சௌந்தரியம் வந்து விட்டிருப்பது போல் படுகிறது. படுக்கையைச் சரி பண்ணினார். ஊதுவத்தியின் புகையிழைகளை சுவாசிக்கையில் ஒரு மாதிரி உணர்வு… 

உடுப்பி ஹோட்டலில் இருந்து வாங்கிக்கொண்டு வந்து வைத்தி ருந்த காப்பியை பிளாஸ்கில் இருந்து தம்ளரில் ஊற்றிக் குடிக்கும் போது, எதிரில் இருந்த நிலைக் கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தில் அவர் விழிகள் நிலைத்தன. 

கனத்த பிரேம் போட்ட கண்ணாடி தரிக்காத தன் முகம், வழக்கமாய் அணியும் மூக்குத்தியைக் கழற்றி எறிந்துவிட்ட பெண்ணின் முகம்போல மூளியாகத் தோற்றமளிக்கிறது. இரு செவிகளின் ஓரத்திலும் தென்படும் நரை! உள்ளே உள்ளே போய்க் கொண்டிருக்கும் விழிகளுடனும், கன்னங்களுடனும் கலகித்து வெளியே நீண்டு வந்துகொண்டிருந்த மூக்கு… மொத்தத்தில் தன் முகத்தில் இப்போதெல்லாம் தனக்குத் துல்லியமாய்த் தெரியும் அந்தப் பிரேதக் களை… 

அதோடு முதுகில் தெரியும் ஒரு சிறு வளைவு… 

-இப்படி தன்னைப் பார்த்துக்கொண்டிருக்கையில் எல்லாம் அந்தக் கணத்தில் அலை பாயும் தனக்கு மிகவும் பரிச்சயமான அந்த சுயவெறுப்பு இப்போதும் மெல்ல பந்தி விரிக்கத் தொடங்கியபோது அவர் மெல்லப் பின்வாங்கினார். 

இப்போது தனக்கு நாற்பத்தியெட்டு வயசிருக்காதா? நாற்பது வயசு வரைக்கும் கல்யாணம் பண்ணிக்கப் பார்க்கப் போன எந்தப் பெண்ணையும் தனக்குப் பிடிக்கவில்லை… நாற்பது வயசுக்குப் பிறகு எந்தப் பெண்ணுக்கும் தன்னைப் பிடிக்கவில்லை. 

எந்தப் பெண்ணுக்கும் என்ன! தனக்கே தன்னைப் பிடிக்கவில்லையே… இந்த லட்சணத்தில் சுகந்திக்கு மட்டும்… 

சுகந்திக்குத் தன்னைப் பிடித்தது என்று யார் சொன்னார்கள்…! அப்படியென்றால் சுகந்தி ஒரு பிரதி உபகாரம்… அவ்வளவுதான். 

மீண்டும் அவர் முன்னறைக்கு வந்தார். ஜன்னல் அருகில் போய் நின்றார். தெரு வெறிச்சோடிப் போய்க்கிடந்தது. மணி ஒன்பது நாற்பது. இனி அவள் வரவேமாட்டாளா…? 

சீ… சீ… என்று புளித்துப் போன ஒன்று. அபூர்வமாய் நெருப்புக்குக் கிடைத்த விறகாய் க்ஷண நேரத்திற்காவது கிடைக்கப் போவதாய் நான் காத்திருந்தது வீண்தானா? 

மனத்தின் இருட்டில் இப்போ ஒரு அமைதியின்மை… ஒரு ஏக்கம்… 

சுய வெறுப்பை சுய மோகமாய் உருமாற்ற அவர் பொறிகள் வெதும்பிப் பரபரத்தபோது, இன்றைய தேதியையும் அப்படி முடிக்க வேண்டுமா என்று ஏனோ கஷ்டமாக இருந்தது. 

பார்ப்போம்… சற்று நேரம்கூடக் காத்திருப்போம்… தெருவில் ஜன நடமாட்டம் அடியோடு நிற்கட்டும் என்று காத்திருக்கிறாளோ என்னவோ…! 

மீண்டும் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபோது முதுகுக்கு மிகவும் இதமாக இருந்தது. ஒரு முழு வெற்றிலையை எடுத்துக் காம்பைக் கிள்ளி எறிந்துவிட்டு, சுண்ணாம்பைத் தேய்த்து பாக்குத் துண்டுகளுடன் வாயில்போட்டுக் குதப்பிவிட்டு, புகையிலையையும் மென்றபோது உற்சாகம் வந்தது போலிருந்தது. 

இப்போது உட்காரப் பிடிக்கவில்லை. ஜன்னல் அருகில் வந்து பார்த்தபோது தெரு முனையில் ஒரு சொறி நாய் சாக்கடையை முகர்ந்து பார்த்துக்கொண்டே வருவது தெரிகிறது. அந்தக் காட்சியை அப்போது பார்க்க அவருக்கு எரிச்சலாக வந்தது. 

அடுத்த அறைக்குள் வந்து வாஷ்பேஸினில் வெற்றிலையைத் துப்பிவிட்டு பீரோவைத் திறந்து சிறிது பிராந்தி கலந்து குடித்த பின், மேஜைமீது மல்லாந்து கிடந்த தடிமனான புத்தகத்தைக் கையில் எடுத்தார். மூக்குக் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டு எழுத்துகளில் மனசை ஐக்கியப்படுத்த முயன்றார். 

ஊஹூம்… முடியவில்லை. 

அப்படி உட்கார்ந்திருக்கப் பிடிக்கவில்லை. எழுந்து அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கத்தொடங்கினார். கதவைத் தட்டும் ஓசைக்காக செவிகள் காத்திருந்தன. 

சுகந்தி… 

சு…கந்தி… 

ஒரு தடவை சந்தி பிரித்து அந்தப் பெயரை உச்சரிக்கையில் ஒரு மதுர நெடி அந்தராத்மாவில் மழை நேர மஞ்சள் வெயிலாக அனுபவமாவதை உணர்ந்துகொள்ள முடிகிறது. 

அன்று மத்தியானம் பரீட்சை ஹாலில் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்கையில் கிடைத்த தரிசனத்தின கந்தர்வ லகரியில் உறுப்புகள் இப்போ முறுக்கேறுகின்றன. 

நல்ல வேளை… வேறு யாரும் அதைப் பார்க்கவில்லை. வெளியில் வெயில் தீயாகக் காய்ந்துகொண்டிருந்தது. ஹாலில் இரண்டு வரிசையில், இடையில் நிறைய இடம் விட்டு டெஸ்குகள்… 

மாணவ மாணவிகள் விடைத் தாளில் பேனா முனையால் மும்முரமாய் துவந்த யுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். 

சுழலும் மின் விசிறிக் காற்றில் வெள்ளைக் காகிதங்கள் படபடக்கும் ஓசை மட்டும்… மற்றபடி நிசப்தம். 

ஒவ்வொருவரின் அசைவுகளையும் அளந்தவாறு அவர் டெஸ்குகளின் இடை வழி மெதுவாய் பரீட்சை ஹாலில் நடந்து கொண்டிருக்கிறார். ஒரு கோடியிலிருந்து மறு கோடியில், சுவர் அருகில் வந்ததும், சுவரைப் பார்த்துக்கிடந்த ஒரு ஒற்றை டெஸ்கின் முன் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த சுகந்தி சடக்கென்று எதையோ தன் சோளிக்குள் போடுவது தெரிகிறது. 

அவர் அவசரப்படவில்லை. அலட்டிக்கொள்ளாமல், அதைக் கவனிக்காததுபோல் அவள் முன் போய் நின்றார். 

சுதாவாகவே அவள் முகம் நல்ல சிகப்பு, இப்போ அது செம்பருத்திப் பூவாகிவிட்டது. மூக்கின் கீழ் வியர்வைத் துளிகள் அரும்பித் தந்த துகளாய் இளம் கருமை… அவரை கவனிக்க நேரமில்லாதவளைப்போல் விடைத்தாளில் வேகமாய் எதையோ கிறுக்கிக்கொண்டிருக்கிறாள். அவர் ஓரிரு நிமிஷ நேரம் அங்கே நின்றுவிட்டுத் திரும்பி மெல்ல நடந்தார். ஹாலின் பாதி வரைச் சென்றதும் மறுபடியும் திரும்ப வேகமாய் நடந்து அவள் பின்னால் போய் நின்றுகொண்டு பார்த்தபோது… 

கையும் களவுமாய் அவள்… 

யார் கண்ணிலும் படாமல் காபி அடிக்கும் வசதிக்காக விசிறி மடிப்பாய் மடக்கி, அவள் இடது கைக்குள் வைத்திருக்கும் காகிதத்தில் எறும்பு ஊர்வதுபோல் சின்னஞ்சிறு எழுத்துக்கள். 

ஹாலை, தான் ரவுண்ட் பண்ணி வர, குறைந்தது ஐந்து நிமிஷமாவது ஆகும் என்ற தைரியத்தால்தானோ என்னமோ, மும்முரமாய் கர்மமே கண்ணாகி, காப்பி அடிப்பதில் ஈடுபட்டிருந்த அவள், தன்னைக் கண்டதும் நடுங்கினாள். 

தலை உயர்த்திப் பார்த்த அவள் விழிகள் பனிப்பது தெரிகிறது. 

‘என்னைக் காட்டிக் கொடுத்து விடாதீங்க சார்’ என்று அந்த முகமும், உடம்பும் எல்லாம் தன்னை நோக்கி இறைஞ்சுவதாய்ப் புரிகிறது. 

ஆனால், பெண்மையின் அந்தச் சாகசத்தில் விழுந்து விடக்கூடிய விரைவில் இளகும் மனப்பான்மை கொண்டவனல்ல தான் என்ற வீம்பில் கடமையைச் செய்தே ஆகவேண்டும் என்ற விசுவாமித்திர வைராக்கியத்துடன் செயலாற்ற முனைகையில், சற்றும் எதிர்பார்க்காதவாறு, சடக்கென்று அவள் தன் ஊதா நிற சாரி முந்தானையை மார்பிலிருந்து டெஸ்கின்மீது நழுவ விட்டாள்… 

அதே நிற சோளிக்குள் மூச்சடக்கி நின்ற அவள் யௌவனத்தின் வாளிப்பு, தனக்கு நேர்முக தரிசனம் ஆகிறது. தான் தன்யனாகி விட்டோமோ என்று ஒரு பரவசம்… 

அதோடு கேள்வித் தாளின் ஒரு முனையில் அவள் ஆங்கிலத்தில் கிறுக்கிய ‘சார்… என்னை விட்டு விடுங்க. பதிலுக்கு இன்றிரவு என்னை நானே உங்களுக்குக் கொண்டுவந்து அளிப்பேன்’ என்ற எழுத்துகளை மனத்துக்குள் வாசித்ததும், தனக்கு வியர்த்துக் கொட்டியது. 

இவை யாவும் ஒரு கணத்தில் நடந்தேறி விட்டன… 

மோட்ச மார்க்கத்தைத் தேடி முன்னேறிக் கொண்டிருக்கையில், ‘என்னைப் பார், என் அழகைப் பார்…’ என்ற கொஞ்சல் மொழி கேட்டு, குருவின் கட்டளையை மறந்து அம்மண அழகிகளைத் திரும்பிப் பார்த்துக் கல்லாகிப் போன சிஷ்யனின் கதையை நினைத்துக்கொண்டே திரும்பி நடக்கையில், அவள் ஈரக் கசிவு இருந்த உதடு நுனியில் ஒரு புன்சிரிப்பு தவழ்வதும், அவள் இடக்கையில் இருந்த காகிதத்தில் இருந்து சின்னஞ்சிறு எழுத்துக்கள் விடைத் தாளில் பெரிசாய் வடிவம் பெறத் தொடங்குவதும் அவருக்கும் தெரியாமல் தெரிந்தது. 

ஒரு நாய் ஊளையிடும் சத்தம் பயங்கரமாய்க் கேட்டது. 

அவர் திடுக்கிட்டுக் கண் விழித்தார். அறையில் உலாவிக் கொண்டிருந்த தான் எப்போது சாய்வு நாற்காலியைச் சரணடைந்தோம் என்று தெரியவில்லை. கைக்கடிகாரம் பதினொன்றைக் காட்டியது. அப்படியென்றால், தான் தூங்கி விட்டிருக்கிறோம். மீண்டும் நாய் ஊளையிடும் சத்தம். சற்று முன் தெரு முனையில் தான் பார்த்த நாயாக இருக்குமா? இப்போது கதவுக்கு வலிக்காமல் யாரோ விரலால் தட்டுவதைப் போன்ற ஒரு சத்தம்… 

வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து ஒரு அடி வைத்தபோது அவருக்கு முழுக்க முழுக்கத் தன்னுணர்வு வந்துவிட்டது. 

ஒருவேளை காற்றின் குறும்பாக இருக்குமோ…? 

இல்லை… தன் மனப் பிரமைதானா…? 

எதுக்கும், மறுபடியும் அந்தச் சத்தம் கேட்ட பிறகு கதவைத் திறந்தால் போதும் என்று செவியைக் கூர்மையாக்கிக்கொண்டு இருளின் ஆழத்தில் அவர் காத்து நின்றார். 

– 17.10.1973

– தீபம் 12.1973

– இரண்டாவது முகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2012, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *