நினைத்தாலே இனிக்கும் கசப்பு!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 106 
 
 

பாவம்
மதிப்பற்றது
பிரயோஜனம் அற்றது!.. – நம்மை
கரைபடுத்தி இழிவுபடுத்தக்கூடியது!..

மனிதனை வீழ்த்த
சாத்தான் கையில் வைத்திருக்கும்
பலமான ஆயுதம்
பயம்!..

ஆதாம்
பாவம் செய்த போது தான்
அவன் உள்ளே
பயம் வந்து புகுந்தது!..

அவன்
பாவம் செய்ததற்கு முன்னே
பயம் என்றால்
என்ன விலை என்று கேட்டிருப்பான்!..

பாவம் இல்லாத ஆதாம்
பரிசுத்தரோடு நடந்தான்!..
பழத்தை சாப்பிட்டதாலே – அந்த
பாக்கியத்தை இழந்தான்!..

ஆதாம் ஒரு மனிதனாக
பாவத்திடம் தோற்றான்!..
தேவன் ஒரு மனிதனாக அந்த
பாவத்தை ஜெயித்தார்!..

மனிதன் இன்றைக்கு
சந்தித்து கொண்டிருக்கும்
எல்லா பிரச்சனைக்கும் ஒரே காரணம்
பாவம் தான்!..

அவன் ஏற்கனவே
பாவத்தில் சிக்கி இருப்பதால் தான்
பிரச்சனைகளிலும் போய்
மாட்டிக் கொள்கிறான்!.

நம் கண்ணுக்கும் இருதயத்துக்கும்
இணைப்பு இருக்கிறது!.. எனவே
கண் சரியாக இருந்தால் தான்
இருதயம் வெளிச்சமாக இருக்கும்!..

நம் கண்
அவரை நோக்கிப் பார்த்தால் மட்டுமே
நம் இருதயத்தின் பாவம்
பரிகரிக்கப்படும்!..

மதுபானம்
பார்ப்பதற்கே பளபளப்பாய் இருக்கும்!..
பாவமும் அப்படித்தான்.. அதை
நினைத்தாலே இனிக்கும்!..

பாவம்
இனிப்பா.. கசப்பா..
அது
இனிப்பாய் இருக்கும் கசப்பு!..

பளபளப்பாய் இருப்பதை
பார்ப்பதால் என்ன தப்பு?.,
பார்ப்பது தான் தப்பு..
பார்த்தாலே போதும் பற்றிக் கொள்ளும்!..

பளபளப்பா இருப்பதை
பார்ப்பதே தப்பு என்றால்!..அனுபவித்தால்?..
அப்புறம்
ஆபத்து தான்!..

கர்த்தர்
தேவர்கள் உண்ணும் மண்ணாவை கொடுத்தார்!..
ஜனங்களோ எகிப்தியர் உண்ணும்
வெங்காயத்தையும் வெள்ளைப் பூண்டையும் விரும்பினர்!..

முடிவில்
நிச்சயமாய்
ஆபத்தை ஏற்படுத்தும் பாவத்தை
ஆரம்பத்திலேயே விட்டு விடுவது நல்லது!..

பாவம் .
இழிவையும் அவமானத்தையும்
அறிய முடியாமல் நம்மை
சுரணை அற்றவராய் மாற்றி விடும்!..

பாவத்தை கைவிட்டு
மனம் திருந்தாத பட்சத்தில்
மனம் திருந்துவதால் ஏற்படும்
நன்மைகளை இழந்து விடுவோம்!,.

திரும்பத் திரும்ப பாவம் செய்தாலும்
திரும்பத் திரும்ப மன்னிப்பார்!.. ஆனால்
திரும்பத் திரும்ப பாவம் செய்யும்போது
திரும்ப முடியா தூரத்துக்கு போயிருப்போம்!..

கண் பார்க்கும் தீமை
கண்ணோடு இருந்து விடாது!..
இருதயத்துக்குள் நுழைந்து
சரீரத்தையும் பாதித்துவிடும்!..

நாம் செயல்படுவதற்கு முன்பாக
நம் சிந்தை செயல்படும்!.. எனவே
நம் சிந்தையை
முதலில் ஜெயித்து விட வேண்டும் ! ..

நம்மால்
பாவம் செய்யவும் முடியும்
பாவம் செய்யாமல் இருக்கவும் முடியும்!. நாம்
இரண்டாவதை தேர்வு செய்யலாமே!….

தாவீது
யுத்தத்தின் மத்தியில்
பாதுகாப்பாய் இருந்திருக்க முடியும்!.. ஆனால்
உப்பரிக்கையில் உலாவி கெட்டுப் போனார்!..

(பாவம் எந்த இடத்திலும் வேலை செய்யும்..)

சும்மா இருந்தால்
தனியாக இருக்காதே!..
தனியாக இருந்தால்
சும்மா இருக்காதே!..

ஒரு பாவ சூழ்நிலையை
என்னால் சமாளித்து விட முடியும்
என்று ரிஸ்க் எடுக்காதே!..
ஓட்டமாய் ஓடி விடு!.. பாவம் பொல்லாதது!..

நம்முடைய வாழ்க்கையில்
கண்ணுக்குத் தெரியாத கோடு ஒன்று உள்ளது!..
அதை தாண்டிய பிறகு தான் அது
கண்களுக்கே புலப்படும்!…

பாவம் செய்ததால்
நேர்ந்து விட்ட கஷ்டத்தை
அனுபவிக்கும் போது தான்!.. அடடா
பாவம் செய்து விட்டோமே என்பது புரியும்!..

லோத்து
முதலில் சோதோமை ஏறெடுத்துப் பார்த்தான்..
பின்பு எதிரே கூடாரம் போட்டான் அப்புறம்
உள்ளே போய் உட்கார்ந்து விட்டான் !….

யோசேப்பு
அந்தப்புரத்தை விட்டு
தலை தெறிக்க ஓடி போனான்!..
அதனால் பிழைத்துக் கொண்டான் !..

சிங்கமாக உருவாக
ஆசைப்படும் பூனை!.. முதலில்
எலிகளை உண்ணும் ஆசையை
விட்டு ஒழிக்க வேண்டும்!..

பரிசுத்தரை
தரிசிக்க விரும்பும் பக்தன்!.. முதலில்
பாவத்தை தரிசிப்பதை!,,
விட்டு ஒழிக்க வேண்டும் !.

பாவம்
தேவனை நம்மை விட்டு பிரிப்பதோடு
மீண்டும் அவருடன் சேர முடியாமல்!
கவனமாய் பார்த்துக் கொள்ளும் !..

என்னில்
எந்த பாவத்தையும் நான் காணவில்லை என்பதினால்
என்னை நீதிமான் என்று சொல்லிவிட முடியாது!..
அவர் என்னில் எந்த பாவத்தையும் காணக் கூடாது!..

தேவனால்
தண்டியாமல் நஷ்டப்படுவதை விட!..
தேவனால் தண்டிக்கப்பட்டு
லாபம் அடைவது மேன்மை!..

இயேசு
மிகக் கொடூரமாக வதைக்கப்பட்டு
கோரமாக கொலை செய்யப்பட்டதற்கு காரணம்
நம் பாவங்கள் அவ்வளவு கோரமாக இருந்ததே!..

நான் சிறிது பாவம்
குறைத்து செய்திருப்பேன் என்றால்
கொஞ்சம் சவுக்கடிகள் அவருக்கு
குறைந்திருக்கும் !..

பாவம்
நாம் ஆண்டவரோடு
சேரும் பாக்கியத்தை
இழந்து விட செய்யும்!..

பாவத்திலே
மரித்து கிடக்கும் மனிதனால்
ஆண்டவருக்கும் பிரயோஜனமில்லை
சக மனிதனுக்கும் பிரயோஜனம் இல்லை!..

துரு
எவ்வளவு ஸ்ட்ராங்கான இரும்பையும்
தின்று தீர்த்து விடும்!.. பாவமும் எந்த மனிதனையும்
உயிரோடு கொன்று தின்றுவிடும்!..

40 நாள் மழையில்
எல்லா குடும்பங்களும் தண்ணீருக்கு கீழே கிடந்தன!..
நோவாவின் குடும்பம் மட்டும் தண்ணீருக்கு மேலே இருந்தது!..
பாவத்தை வெறுத்து பரிசுத்தரை விரும்பினதால்!..

பானையில் இருக்கும்
ஓட்டையை அடைக்காத வரை
உள்ளே தண்ணீர் ஊற்றுவதில்
ஒரு பயனும் இல்லை!..

செய்த தவறை
நியாயப்படுத்திக் கொண்டு இருக்காதீர்கள்!..
அதுவும் பாவத்தின் ஒரு குணம்..
மனம் திரும்புதலே மேல்!..

பாவம் வாசப்படியில் படுத்து
சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறது!..
அதை அழித்து விடுவது தான்
அதனிடமிருந்து தப்புவதற்கு ஒரே வழி!..

பாவத்தை வெறுத்தாலும்
பாவியை நேசிக்கிறார்!.. அவர்
பரிசுத்தராய் இருப்பதால் நாமும்
பரிசுத்தமாய் வாழ்வோம்!..

உன்னதத்தில் உயர்ந்தவரே
உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தீரே
பரிசுத்தம் நிறைந்தவரே
பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே!..

நீரே இன்றும் என்றும் பெரியவரே
நீரே ஆராதிக்க சிறந்தவரே!..

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *