நான் கேவலமானவல்ல!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 5, 2025
பார்வையிட்டோர்: 391 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சூரிய அஸ்த்தமனமாகி இருளும் ஒளியும் சங்கமித்து இருள் தனித்துவம் பெற்றுக் கொண்டிருக்கும் மாலை நேரம். 

வழமை போல் நான் அந்த மதகில் அமர்ந்து இருக்கின்றேன். 

கள்ளுக் கடை வளைவால் திரும்பி றோட்டுக் கரையால் மிகவும் ஆறுதலாக ஒருத்தி வந்து கொண்டிருக்கின்றாள். பெண் என்பதைத் தவிர வேறு எதையும் என்னால் மட்டுப்படுத்த முடியவில்லை. நான் இருக்கின்ற இடத்தை நோக்கித் தானே வருகின்றாள் வரட்டுமே என்ற எண்ணம். 

திருகோணமலையிலிருந்து புல்மோட்டைக்குச் செல்லும் பிரதான வீதி… கிளித்தட்டு விளையாட்டில் தேர்ச்சியுள்ளவர்களால் தான் இந்த வீதியில் நடக்க முடியும்… ஏனென்றால் அவ்வளவு கேவலமான வீதி 

இதை உணர்ந்ததாலோ என்னவே அவளும் றோட்டுக் கரையால் நடந்து கொண்டிருக்கின்றாள். 

கள்ளுக் கடை வளைவிலிருந்து நூறு யார் தள்ளி ஒரு ஆலமரம் சாதாரண மரமல்ல. மிகப் பெரிய மரம். அந்த மரத்தடியோடு தான் நான் அமர்ந்திருக்கும் மதகு அமைந்திருக்கின்றது. வருவோர் போவோரை அவதானித்து அவர்களைப் பற்றி கணக்கிட்டுக் கொள்வதில் எனக்கு அதிகம் தேர்ச்சி உண்டு. ஏனென்றால் பிற்பகல் மூன்று மணி தொடக்கம் கிட்டத்தட்ட இரவு ஒன்பது மணி வரையில் இந்த இடத்திலேயே இருப்பேன். அது மட்டுமல்ல எனக்கு இப்போது நாற்பத்தைந்து வயது. இவ்வளவு காலமும் பிறரால் குட்டுப்பட்டு வாழ்ந்தவன்…. குட்டின் வலியை விட குட்டியவர்களைப் பற்றியே அதிகமாக நான் உணர்ந்திருக்கிறேன். 

அவள் என்னை அண்மித்து விட்டாள். இந்தப் பகுதிக்குப் புதியவள் தான். 

வாழ்க்கையில் ஈடு செய்ய முடியாத இழப்புக்களை அனுபவித்து பொரிந்து போன முகம் மிகவும் பரிதாபத்திற்குரியவள். 

தோழிலே ஒரு சீலைப் பை, கையிலே மரவள்ளிக் கிழங்கு சுற்றியது போல் சீலையால் சுற்றப்பட்ட ஒரு குழந்தை. 

கறுத்த உயர்ந்த மெலிந்த தோற்றம், கறுப்பிலும் சாதாரண கறுப்பல்ல காகக்கறுப்பு. எண்ணைய் இன்றி வரண்டு முறுக்கேறிய தலைமயிர்… வெற்றிலைக் காவி படிந்து ஊறிப் போன சிவந்த உதடுகள் ஒரு சட்டை, சீலை அவளது பார்வை நீரில் மிதக்கின்ற ஒலித் தேங்காய் போல் நோக்கமற்ற அலட்சியப் பார்வை… 

மொத்தத்தில் வறுமையின் தேக்கங்கள் படிந்த தோற்றம். 

வந்தவள் அந்த ஆலமரத்தடியோடு நின்று அங்குமிங்கும் பார்க்கின்றாள். அவள் என்னிடம் தான் ஏதாவது கேட்பாள் என்பது எனக்குத் தெரியும். அவளாகத் தொடங்கட்டுமே என்று நான் மௌனமாக இருக்கின்றேன். 

“ஐயா!” நான் எதிர்பார்த்தது போல் அவள் என்னை அழைக்கின்றாள். ஆனால் ஐயா என்று அழைத்து விட்டாள். அது தான் எனக்குச் சிரிப்பு. இதுவரை என்னை யாருமே ஐயா என்று அழைத்தது இல்லை. வெள்ளை வேட்டி, சேட் ஓரளவு துப்பரவாக இருக்கின்றேன். அதைப் பார்த்துத்தான் அவள் ஏமாந்து விட்டாள். 

இந்த மண்ணிலே மிகக் கேவலமானவன் நான் தான். என்னைப் பொறுத்தவரை நான் என்னைப் பற்றி எடுத்துக் கொண்ட முடிவு இதுதான். 

இதயங்கள் மட்டும் வெளியானதாக இருந்தால் இந்த மண்ணில் ஏமாற்றங்கள் இருந்திருக்காது… 

“என்ன” 

எங்கையாவது கொஞ்சம் சுடுதண்ணி எடுக்கலாமா…? 

“ஏன்?” 

“இந்தப் புள்ளைக்குப் பருக்க” 

அப்பிடி போய் இருந்து பாலைக் குடன்… ஆலமரத்தின் இடது பக்கமாக இருக்கும் கிராமஅபிவிருத்திச் சபைக் கட்டிடத்தை அவளுக்குக் காட்டுகிறேன். 

“இல்லை” கொஞ்சம் சுடுதண்ணி தான் வேணும்… குழந்தையும் அழ ஆரம்பிக்கிறது. 

பெற்றவளிடம் பால் இல்லாமல் போகுமா…? பெற்றவள் பிள்ளைக்கு பால் கொடுக்கத் தான் மறுப்பாளா? புது இடம் காரணமாக இருக்கலாம். 

…நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை… கட்டிடத்துக்குள்ளை போய் இருந்து பாலைக் குடு… நான் கூறியதையே திரும்பவும் கூறுகிறேன். ஆனால் அவள் ஏதோ தயங்குகிறாள்… 

வேண்டாம் நீங்க கொஞ்சம் சுடுதண்ணி தந்தியளெண்டால் உதவியாக இருக்கும் சக்கரம் சுற்றவது போல் அவள் ஒரே இடத்தில் நிற்கின்றாள். 

பிள்ளையும் அழுது கொண்டிருக்கின்றது… 

முன்பின் அறிமுகம் இல்லாதவளோடு பால் கொடுக்கிற பிரச்சினைக்காக தர்க்கிக்க முடியுமா? “கோப்பை” வெச்சிருக்கிறியா? 

சீலைக்குள் கையை விட்டு ஒரு ரின்பால் பேணியை எடுத்துத் தருகின்றாள். எனது குடிசைக்குள் சென்று சுடுதண்ணீர் எடுத்து வந்து கொடுக்கின்றேன். நான் கொடுத்ததும் எந்தப் பேச்சும் இன்றி அந்தக் கட்டிடத்துக்குள் சென்றமர்ந்து சீலைப் பைக்குள் கையை விட்டு ஒரு கடதாசிச் சரையை எடுத்து விரித்து அதற்குள் இருந்த மாவில் சிறு பகுதியை எடுத்து சுடு தண்ணீரில் கலக்கி குழந்தைக்கு பருக்குகின்றாள். 

நான் றோட்டுக் கரையில் நின்று சகலதையும் அவதானிக்கின்றேன். 

மரவள்ளி கிழங்கு போல் சுற்றப்பட்டிருந்த குழந்தை இப்போது பிறந்த மேனியாய் அவளது மடியில் கிடக்கின்றது. முகட்டால் தவறி விழுந்து பிறந்த வடு மாறாத எலிக்குஞ்சு போல்…பாவம் 

பிள்ளையின் அழுகை ஓய்ந்து போக ஒரு சீலைத் துண்டை நிலத்தில் விரித்துக் கிடத்துகின்றாள். “குழந்தை பிறந்து கனநாளா”… “பத்து நாள்” தலை நிமிர்த்தாமலேயே அவள் பதில் கூறுகின்றாள். பத்து நாள் புண் உடம்புக்காரி என்று கூறுவார்களே பாவம். பாதுகாப்புக்கள், பரிகாரங்கள், வெந்நீர் குளிப்புக்கள் 

உடம்பே புண்ணாகி வலிக்கும் போது புண்ணுடம்பின் வலி தெரியுமா?… ஆண்டவனின் பட்டியலில் இடம் பெறாதவர்கள் 

ஒரு புள்ளை தானா? 

ஓம் 

”உன்ரை பேரென்ன?” 

“புங்குடி” 

“புங்குடியா?” 

பூங்கொடி தான் என்ரை பெயர்… புங்குடி எண்டுதான் கூப்பிடுவினம். 

அவளைப் பற்றி ஏதோவெல்லாம் விசாரிக்க நினைத்த நான் பெயரை மட்டும் கேட்டதோடு விசாரணையை முடித்துக் கொள்கிறேன். 

விசாரணையில் ஏற்பட்ட சோர்வு 

நான் என்னைப் பற்றி எனக்குள் பெரும் விசாரணை நடத்தி… கண்ட முடிவு…? முடிவே இல்லாத முடிவு… 

திருப்பவும் அந்த மதகில் வந்து அமர்கிறேன். 

அந்த ஆலமரத்திற்கு முன்னால் ஒரு சிறிய கட்டிடம் 

இருக்கிறதே. அது தான் எனது தொழில் கூடம். 

இறைச்சிக்கடை 

விடியப்புறம் எழும்புவது இரண்டோ மூன்று மாடுகளைக் கொலை செய்வது இறைச்சியை விற்பது கணக்கு வழக்குக்காட்டி முதலாளியிடம் பணத்தையொப்படைப்பது அதன் பின் எனது கூலி. 

சட்டத்தின் அனுமதியோடு பகிரங்கமானக் கொலை செய்கின்ற ஒரு கொலைகாரன் நான். 

காலையில் தொழிற் கூடத்தை துப்பரவு செய்து குளித்து புனிதமான ஆடை அணிந்து சாமிப்படத்திற்கு பூ வைத்து சாம்பிராணி போட்டு பொட்டு வைத்துத் தொழில்கள் ஆரம்பிக்கப்படுகின்றன… நான்…! காலையில் எழுந்தவுடன் கொலை. தினசரி மூன்று கொலையாவது செய்வேன்… அதன் பின் இரத்தமும், இறைச்சியும்… 

என்னை விடக் கேவலமானவர்கள் இருக்க முடியுமா? நான் செய்கின்ற கொலைகளுக்கும் எனது உணர்வுகளுக்கும் சம்பந்த மில்லா விட்டாலும்… நான் செய்வது கொலை தானே 

நான் கேவலமானவன் தான். 

நான் நுவரெலியாவில் பிறந்ததாகவும் மண் சரிவினால் என்னைத் தவிர என் குடும்பத்தினர்கள் அனைவருமே இறந்து போனதாகவும் அதன் பின் என்னை யார் யாரே வளர்த்தார்கள் என்றும் கூறுகிறார்கள். என்னைப் பற்றி மற்றவர்கள் கூறுகின்ற இவ்வளவு வரலாறும் தான் எனக்குத் தெரியும். 

என்னுடைய வரலாறே என்ரை கையிலில்லை. நான் என்னை பற்றி சிறிது சிறிதா உணரத் தொடங்கிய காலத்தில் தம்பலகாமத்தில் ஒரு இறைச்சிக் கடையில் நின்றேன். அதன் பின் மூதூர், கிண்ணியா, கன்னியா இப்படி திருகோணமலை மாவட்டத்தில் நான் போகாத இடமில்லை. நான் செய்யாத வேலையுமில்லை. 

இடையில்

நிலாவெளியில் நான் நின்ற காலத்தில்… 

பலர் முன்னின்று ஒரு பெண் உருவத்திற்கும் எனக்கும் திருமணம் என்ற ஒரு கேலிக் கூத்தையும் நடத்தி முடித்தனர். கடலிலை தத்தளிக்கிறவன் பாம்பைக் கண்டாலும் கயிறு என்று பிடிப்பானாம் அது போல நானும்… 

ஆசைகளை என்னைப் போன்ற சாதாரணமானவர்களால் வெல்ல முடியுமா?… 

சில மாதங்களில் அவள் என்னை விட்டு பிரிந்து போய் விட்டாள்… அந்தப் பிரிவைப் பற்றி நீண்ட நேரம் கூறுவதை விட எனது “பெலவீனம்” என்ற கூறி சுருக்கமாகவும் விளக்கமாகவும் முடித்துக் கொள்ளலாம். 

அவள் இப்பொழுதும் இருக்கிறாளா இல்லையா என்ற விபரம் எனக்குத் தெரியாது… நமது குடும்ப வாழ்க்கை வெறும் மாமிச மணத்தோடு முடிந்து விட்டதால் அந்த வாழ்வு பற்றிய தாக்கமோ நினைவே எனக்கில்லை. 

பிள்ளையார் சுழி போடுவதைத் தவிர வேறு எதையும் எழுதவோ வாசிக்கவே எனக்குத் தெரியாது. 

ஆனால் நடந்து வந்த பாதையில் என்னையறியாமலேயே எனது இதயத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கும் அனுபவங்கள் ஏராளம்… 

அவைகளை ஆதாரமாகக் கொண்டு தான் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். எனக்கிப்போது நாற்பத்தைந்து வயது… நாற்பத்தைந்து முறை வாய் விட்டுச் சிரித்திருப்பேனா என்பது சந்தேகம். 

இறைச்சிக் கடைக்குப் பின்னால் ஒரு கொட்டில் இதுதான் எனது குடிநிலம். 

“ஐயா!” அவள்தான் புங்குடி, “இன்டைக்கு இரவு அந்தக் கட்டிடத்தில் தங்கலாமா?” இந்தக் கட்டிடம் இப்பகுதிக்குரிய சனசமூக நிலையம். இப்பகுதிக்குரிய மக்களுக்கென அரசாங்க த்தினால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஒரு அறையும் ஒரு மண்டபமும்.

திறப்பு விழாவின் பின் இந்தக் கட்டிடத்துள் தகுதியான மனிதர்கள் எவருமே போய் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கின்றேன்… அரசியல் தொடக்கம் பல அந்தரங்க விஷயங்கள் படங்களோடு அப்பட்டமாக எழுதப்பட்ட சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் இருந்த இடங்கள் மட்டும் உண்டு. பல ஓடுகள் இல்லை. வௌவால் சீவிப்பதற்கான சகல சுவாத்தியங்களும் நிறைந்த இடம். 

இதற்கு இவள் தனித்து… குழந்தைப் புள்ளையையும் வெச்சுக் கொண்டு உதுக்குள்ளே எப்பிடி தங்கப் போறாய் 

இந்த நேரத்திலை நான் எங்கை போறது கெஞ்சுவது போல் என்னிடம் கேட்கின்றாள். புங்குடி நீ ஏன் என்னட்டை கெஞ்சிறாய் உன்னைப் போல்தான் நானும் இந்த இறைச்சிக் கடையில் சம்பளத்திற்கு வேலை செய்கிறன்… அந்தக் கொட்டில் தான் என்ரை வீடு நானும் தனிக்கட்டை என்னைப் பற்றி அறிமுகம் அவளுக்கு ஏதோ ஒரு திருப்தியைக் கொடுத்திருக்க வேண்டும் துணிவோடு என்னைப் பார்க்கிறாள். 

உன்ரை சொந்த ஊரெது புங்குடி? 

எங்களுக்கெங்காலை சொந்த ஊர்!… கந்தளாயிலை கூடின காலம் இருந்திருக்கிறம் 

புருஷன் எங்கை…? நான் இப்படிக் கேட்டதும் கண்ணிமைக்காமல் என்னைப் பார்க்கிறாள். 

அவளது பார்வையில் சோகம் நிறைந்திருக்கிறது. 

அவர் செத்துப் போனார். செத்து எட்டு மாதம்… அவர் சாகையுக்கை நான் இரண்டு மாதம் சுகமில்லாமல் இருந்தன். தன்ரை புள்ளையை கூடப் பார்க்காமல் போட்டார்… தன் கண்களில் பனித்த கண்ணீரை துடைக்கின்றாள். அந்தக் கை வண்டு வெட்டிய வடலிக் குருத்து போல் பெருவிரலோடு சேர்ந்து மூன்று விரல்கள் இல்லை. 

புங்குடி உந்தக் கை! பொறுக்க முடியாமல் நான் கேட்டு விட்டேன். நான் கேட்டதும் மிகுதியாக இருந்த இரண்டு விரல்களையும் திருப்பித் திருப்பி அவள் பார்க்கிறாள். கண்களில் பனித்து முட்டிய கண்ணீர் துளிகளால் அந்தக் கையில் விழுகின்றன. 

அதெல்லாம் பெரிய கதை! 

அவள் மொட்டையாக கூறி முடித்து விடுகிறாள். 

குழந்தையின் முனகல் ஒலி நமது பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. அவள் அந்த இடத்தை விட்டுப் போகின்றாள். 

வழமை போல் நான் தனியாக இருக்கிறேன். எனது கொட்டிலுக்கு முன்னால் இரண்டு மாடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. 

நாளைய உதயத்தோடு அவற்றின் வாழ்க்கை அஸ்தமனமாகப் போகின்றது. எத்தனையோ மக்களின் நாவுக்குச் சுவையாகி உடலுக்குப் பசளையாகப் போகின்றன…! மரணத்தைப் பற்றி சிந்திக்காத ஜீவன்கள் 

அரை மணி நேரம் சென்றிருக்கும் அந்த குழந்தையின் அழுகை 

மண்ணைத் தழுவிய மனித ஜீவன்களின் முதற் செயல் அழுகை. அதன் பின் சிரிப்பு 

அழுகை, சிரிப்பு மனித வாழ்வின் உள்ளடக்கம். 

மனித வாழ்க்கைத் தத்துவத்தின் பாலர் வகுப்பு 

உலகத்தை மனிதன் புரிய முன்னரே இந்த உலகம் அவனது எதிர்கால வாழ்விற்குப் பச்சைக் கொடி காட்டுகின்றதா? 

குழந்தையின் அழுகை… 

நான் எழுந்து அந்தக் கட்டத்தை நோக்கிச் செல்கின்றேன். பக்கத்திலுள்ள தொலைபேசி இணைப்பகத்தில் பொருத்தப் பட்டிருக்கும் மின்சார பல்பின் பிரகாசத்தில் புங்குடியையும் பிள்ளை யையும் தெளிவாகப் பார்க்கின்றேன். 

நான் முன் கொடுத்த தண்ணீரில் மாக்கரைத்துக் கொண்டிருக்கின்றாள். 

அவள் இப்போதும் தாய்ப்பால் கொடுக்கவில்லை. இப்பிரச்சனை என் மனதை அரித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் நான் அவளிடம் கேட்கவில்லை. 

“தண்ணீர் ஆறிப் போயிருக்குமே…” 

“ஆறித்தான் போச்சு” 

“குழந்தைக்கு ஏதாவது சுகமில்லையா?’ 

“இல்லை” 

“அப்ப ஏன் நெடுகலும் அழுகிறது…?” 

”பசி” 

“ஏன் தாய்ப்பால் இல்லையா?”

அவள் எதுவுமே பேசவில்லை. முதல் முறை நான் கேட்ட போதும் அவள் இப்படித் தான் இருந்தாள். 

நான் போறன் கவனமாய்ப் படு நான் கூறி விட்டு எனது கொட்டிலை நோக்கிச் செல்கிறேன். 

கொட்டில் வாசலில் மரண தண்டனை வழங்கப்பட்ட அந்த இரண்டு மாடுகள்… 

நான் படுக்கிறேன்… 

இரவு நகர்ந்தது நடுச்சாமம் அமைதி. 

சீமெந்து நிலத்தில் மேசை இழுபடுவது போல் அந்தப் பிள்ளையின் கீச்சுக் குரல்… உலகம் புரியாத அந்த சீவனின் பட்டினிக் குரல் 

சில நிமிடங்கள் கிடக்கிறேன். அந்தக் குழந்தையின் பட்டினிக் குரல் ஓய்வதாக இல்லை. எழும்பி அந்தக் கட்டிடத்தை நோக்கி வருகின்றேன். புங்குடி குழந்தை மடியில் வைத்துக்  கொண்டிருக்கின்றாள். 

”புள்ளைக்குப் பசியா?” 

”ஓம்”

“பால் குடுத்தியா?” 

“தண்ணி இல்லை” 

“தாய்ப் பாலைக் குடன்” 

அவள் எதுவும் பேசவில்லை 

பிறந்த வடு மாறாத பச்சை மண்ணின் பட்டினிக் குரல்… எனது அனுதாப உணர்வில் கோபம் படர்கிறது. 

“புங்குடி பாலைக் குடன்… சிரிது உரமாகவே கூறுகிறேன். அவள் பேசவில்லை. 

கோபத்தின் சாயல் தடித்து கருணை உணர்வை முற்றாக மறைக்கின்றது. 

“புங்குடி இந்தப் புள்ளையை கொல்லப் போறியா? கொல்லுறதெண்டால் அதுகின்ரை கழுத்தை பிடிச்சுத் திருகிக் கொல்லன்… உப்பிடிப் பட்டினி போட்டு கொல்லாதை.” 

பட்டினிக் குரலில் மயங்கிய ஒலி… 

”புள்ளையை ஒழுங்காப் பெற வேணும் அப்பத்தான் ஒழுங்கா வளர்க்கலாம். நாயள்…” 

“ஐயா!” 

“தான் பொத்த பிள்ளைக்கு பால் கொடுக்கேலாது… மிருகப் பிறப்பு” 

“ஐயா!” 

எனது கோபம் உச்ச நிலையை அடைந்து கண்டபடி பேசுகிறேன். 

“ஐயா!” அந்தக் கட்டிடம் அதிரும் படி கத்தியவள் மார்போடு அணைத்து வைத்திருந்த குழந்தையை நிலத்தில் கிடத்தி விட்டு எழுந்து என்னை நோக்கி வருகிறாள். வந்தவள்… 

தான் போட்டிருந்த சட்டையின் மார்புப் புறத்தை இழுத்து கிழிக்கின்றாள். 

மார்புத் தசைகள் 

பாதியாக வெட்டப்பட்டு கயர் ஊறி கறுத்துப் போன வட்டமான முகப்பை உடைய நுங்குக் குரும்பை போல… மார்புத் தசைகள் வெட்டப்பட்டு அதன் தளும்புகள் மட்டும் தெரிகின்றன. 

அந்தப் பாசச் சுரப்பிகள் 

“நான் நாயா?” 

“….”

“நான் மிருகமா?” 

“….”

நான் …? 

நான் கூறியவைகளை திருப்பி என்னிடம் கேட்கிறாள்? 

அந்தக் காட்சியைப் பார்த்ததில் என் கண்கள் செத்து… வெறும் சதைக் குவியலாய் நான் நிற்கிறேன். 

“மரணித்து விட்ட மனித தர்மத்தின் சமாதியின் முன் அடிக்கடி நடாத்தப்படுகின்ற வேள்விகள்… அந்த வேள்விக்குப் பலியானவர்கள் நாங்கள்…” 

தனது மௌன மொழியால் புங்குடி இதைத் தான் கூறுகிறாளா? 

துயரம் கலந்த மௌன நிலையில் உணர்வுகள் கூறுகின்ற ஓசையற்ற வார்த்தைகளில் பொய்மை இருப்பதில்லை! 

நடந்து முடிந்த “வேள்விகள்” என் மனதில் சங்கிலித் தொடர்பாய் நீள்கிறது. 

இந்த வேள்விக்கு முடிவே இல்லையா…? 

எனக்குள் நானே கேட்கிறேன். ‘புங்குடி… இனிமேல் இறைச்சிக் கடையில் ஆடு மாடுகளைத் தான் வெட்டி விக்க வேணுமெண்டதில்லை மனிசனை வெட்டி வைச்சால்கூட விற்பனை ஆகும்” கூறி விட்டு தாய்ப் பாலின் மணத்தைக் கூட அனுபவிக்கக் கொடுத்து வைக்காத அந்த துர்ப்பாக்கிய சீவனுக்கு சுடுதண்ணீர் எடுப்பதற்கு எனது கொட்டிலை நோக்கி நடக்கிறேன். 

கொட்டில் வாசலில் நாளை காலை இறக்கப் போகின்ற இரண்டு மாடுகள் நிற்கின்றன…? அந்த இரண்டு மிருக முகங்களிலும் எத்தனையே மனித முகங்கள் தெரிகின்றன…! இந்த மாடுகளுக்கும், புங்குடி போன்ற மனிதப் பிறவிகளுக்கும் என்ன வித்தியாசம்? 

மாடுகள் இதுவரை தன்னிடத்தைக் கொண்றதில்லை… 

ஆனால் மனிதன்? 

தர்மத்தின் எல்லையை மீறாத மாடுகள் 

தர்மத்தின் எல்லையை மீறிய மனிதர்கள்… 

பகுத்தறிவின் ஒரு முனை விண்வெளியில்… 

பகுத்தறிவின் மறு முனை இரத்தவெறியில்… 

தினசரி கொலையோடு தொழிலை ஆரம்பிக்கின்ற நான்தான் 

இந்த மண்ணில் கேவலமானவனா? 

என்னை விட கேவலமானவர்களும் இருக்கின்றார்கள்!…? 

– வீரகேசரி, 17.02.1985. 

– மண்ணின் முனகல் (சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சகம், கொழும்பு.

கே.ஆர்.டேவிட் கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *