மாமியார், மருமகள் உலகமகா யுத்தம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 12,864 
 

கி.மு….கி.பி. – அதாவது கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின் என்று காலத்தைக் கணக்கிடச் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அளவுகோல் வைத்திருக்கிறார்கள். அதேபோல, உலகில் மாமியார் – மருமகள் சண்டையே இல்லாத காலத்தையும், சண்டை இருந்த காலத்தையும் பாகுபடுத்திக் கூறவேண்டுமானால் அளவுகோலாக ஆ.ஏ.மு. – ஆ.ஏ.பி. என்ற வாசகங்களைத்தான் பயன்படுத்த வேண்டும்.

…. அதாவது, சண்டையே இல்லாத காலத்தை ஆதாம் ஏவாளுக்கு முன் என்றும், சண்டை இருந்த – இருக்கும் – நிச்சயமாக இருக்கப் போகும் காலத்தை – ஆதாம் ஏவாளுக்குப் பின் என்றும் கூறலாம். ஏவாளுக்குத்தான் பாவம், மாமியார் இல்லாததால் (ஆதாமின் அம்மா) வாழ்க்கை உப்புச்சப்பின்றி ஏனோதானோவென்று முடிந்து விட்டது. ஆதாம் ஏவாளுக்கு அடுத்த ஜெனரேஷனில் ஆரம்பித்த இந்த வரலாறு காணாத யுத்தம். இன்றுவரை வேதங்களைப் போல கோடிக்கணக்கான மாமியார் மாட்டுப்பெண்ஜோடிகளால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நமக்குத் தெரிந்து இந்த மாமியார் மாட்டுப்பெண் யுத்தம் ஒன்றுதான் நிஜமாகவே கத்தியின்றி, ரத்தமின்றி (சில வீடுகளில் யுத்தத்தில் உச்சக்கட்டத்தில் கரண்டி, டபரா, தட்டு, பறக்கலாம்…..) காலம் காலமாக நடந்துவரும் யுத்தம்.

…. பின்ன என்ன சார், அப்பேர்ப்பட்ட பாரத குருட்சேத்திர யுத்தமே பதினெட்டு நாட்களில் முடிந்துவிட்டது… இத்தனைக்கும் யானை, குதிரை, காலாட்படை என்று ஆயிரத்தெட்டு வசதிகளை வைத்துக்கொண்டு அல்பமாக…!

இதே மாமியார் மாட்டுப்பெண் யுத்தத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

மனைவி என்ற ஹோதாவில், என்று புக்ககத்தில் வலது காலை எடுத்து வைத்து வந்தாளோ, அன்றே மாமியாரோடு போட ஆரம்பித்த யுத்தத்தை இரவு, பகல் என்று பார்க்காமல் (பாரதப் போரைக்கூட இரவு வந்தால் யுத்த தர்மம் என்று ஏதாவது சாக்கு கூறிப் பாதியில் நிறுத்திக் கொண்டார்கள்…) ஒண்டிக்கு ஒண்டியாக நின்று போட்டு அடுத்த வீட்டு, பக்கத்து வீட்டு ஆடியன்ஸுக்கு உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் இறுதி ஆட்டம் பார்க்கும் ஆர்வத்தை உண்டாக்குவார்கள்.

ரொம்ப சொல்லப் போனால் இவ்வளவு விமரிசையாக நடக்கும், ‘மாமியார் மருமகள் பானிபட் டோடு ஒப்பிடுகையில் பாரத குருட்சேத்திரம் ஒரு சாதாரண குழாயடிச் சண்டையாகத் தோற்றமளிக்கிறது…

இந்த யுத்தத்தில் ஒரு விசித்திரம் என்னவென்றால், இருவரில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை ஐ.நா. சபையே கூடினாலும் தீர்வுகாண முடியாது. ஏதாவது ஒரு மாமியார் மாட்டுப்பெண் சண்டையைப் பாதியில் நிறுத்தி (நெஞ்சில் துணிவிருந்தால்…) சண்டையின் காரணத்தைக் கேட்டுப் பாருங்கள். இருவரும் இதுதான் சாக்கு என்று காரணத்தைக் கூறுவதை விட்டுவிட்டு “இவள் தான் ஆரம்பித்தாள் சண்டையை… இல்லை, அவள்தான் ஆரம்பித்தாள்” என்று ஒருவரையொருவர் ஆள்காட்டி, இதுவரை நடந்தது கராத்தே பாணி என்றால், இனி வருவது குங்ஃபூ ரகம் என்பது போல, சண்டையின் திரைக்கதை வசனத்தை மாற்றி அமைத்துக் கொள்வார்கள்.

ஏன் சார்….. பாம்பும் கீரிப்பிள்ளையும் சண்டை போடக் காரணம் வேற வேண்டுமா..?

ஜெயிப்பதற்காகவோ அல்லது தோற்பதற்காகவோ போடப்படும் சண்டையல்ல மாமியார் மருமகள் அடிதடி…

இதுநாள்வரை பல மாமியார் மருமகள்கள் போற்றிப் பாதுகாத்த இந்த அருங்கலையை டச்’ விட்டுப் போகாமல் இருக்கவே அவர்கள் முயலுகிறார்கள்.

ஒன்று நிச்சயம்… நமது அன்னையும் தர்மபத்தினியும் மோதும் காலங்களில் இருவரில் யார் ஜெயித்தாலும் தோல்வி நமக்குத்தான். மனைவியை ஆதரித்தால் நம்மைத் தாயார் ஈன்ற பொழுதில் இஸபெல்லாவில் பெரிதுவந்தேனே’ என்ற ஏமாற்றத்தை முகத்தில் தேக்கி கரிக்கட்டையாய்ப் பிறந்த உன்னைக் குப்பைத்தொட்டியில் தூக்கி எறியாமல் உச்சி முகர்ந்தேனே’ என்று கண்களால் கூறிப் பகல் நேரங்களில் சுட்டெரிப்பாள். பெற்றவள் பக்கம் பேசி விட்டாலோ கேட்கவே வேண்டாம். படுக்கும் நேரத்தில் பத்தினி நம்மிடம், “இரவெல்லாம் என்னோடு உடன்படுக்கை (ஸாரி , உடன்படிக்கை…) செய்து கொண்டு விட்டுப் பகலில் தாய் கட்சிக்குத் தாவிய கருங்காலியே ….” என்று கூறித் திரும்பிப் படுத்து நமக்குப் புறமுதுகு காட்டுவாள்.

ஜாக்கிரதை…! தாயாரும் தாரமும் ஆளுக்கொரு பக்கம் அபஸ்வரமாக வாசிப்பதற்கென்றே ஆண்டவனால் தயாரிக்கப்பட்ட மத்தளம் நீங்கள்.

திடமாக இருந்தால் மத்தளத்தின் தோல் கிழியாது.

இக்கட்டத்தில் என் ஆருயிர் நண்பன் சடகோபனை அறிமுகப்படுத்தி வைக்கிறேன், கேளுங்கள்.

திருமணம் ஆன ஐந்து வருடங்களில் தாயார் VS தாரம் யுத்தத்தில் சின்னாபின்னமாக்கப்பட்ட ஒரு குக்கிராமம்தான் சடகோபன்.

சடகோபனின் தாய் ஈராக் என்றால், மனைவி ஈரான்…. சடகோபனே இருவரைப் பற்றி என்னிடம் கூறுகையில் விரக்தியான வேடிக்கையில், காமராஜ் பாணியில், அவர்களை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று வர்ணித்தான்.

சமாதானம் செய்து செய்து அலுத்துப்போன சடகோபன், இவர்கள் சண்டையைத் தீர்க்க இயலாது என்ற உண்மையை உணர்ந்து, கடந்த சில மாதங்களாகச் சமாதியில் ஆழ்ந்து ஞானஸ்நானம் பெற்றுவிட்டான். இப்பொழுதெல்லாம் அவர்கள் இருவருக்குமிடையே கொலையே விழுந்தாலும் சடகோபன் சிரித்தவண்ணம் பட்டினத்தாரைப் போல போஸ் கொடுக்கப் பழகிவிட்டான்.

சென்ற வாரம் தன்னை மையமாக வைத்து, அவளும் அன்னையும் ‘வாய் கலப்புச் செய்தபோது கண்டும் காணாமல் தூங்குவது போல பாவித்த தனது திறமையைச் சடகோபன் ஓரங்க நாடகமாக விளக்கினான் கேளுங்கள்..

காட்சி : வழக்கம் போல சண்டைக் காட்சி. பாத்திரங்கள் : நல்லவேளையாக கைக்கெட்டும் தூரத்தில் எதுவும் இல்லை.

நேரம்: போறாத நேரம்.

இடம் : அதாவது களம் – நடுக்கூடம். சடகோபன் சோபாவில் படுத்திருக்கிறான். சடகோபனின் தாயார் களத்துக்கு வருகை. மாமியாரின் வருகைக்காகக் காத்திருப்பது போல எதிர்ப்புறத்தில் சடகோபனின் மனைவி தனியாக அணிவகுத்து நிற்கிறாள்.

தாயார் (மோவாயைத் தோளில் இடித்து … காட்சி முழுவதும் இந்த அபிநயம் அடிக்கடி வரும்.): மணி எட்டாறது… எருமை மாடாட்டம் இப்படியா ஒத்தன் தூங்குவான்?

தாரம் (அருந்ததி காட்டியவனை எருமை என்றதால் ஆவேசமடைந்து …): அவரை ஒண்ணும் இங்க யாரும் எருமை மாடுன்னு சொல்லத் தேவையில்லை!

தாயார் (நேரடித் தாக்குதல்…) : பத்து மாசம் அந்த எருமை மாட்டை இந்த வயத்துல சுமந்து பெத்துருக்கேன். அவனை எருமை மாடுன்னு சொல்ல அதிகாரம் உண்டு!

தாரம் (சாதுர்யமாகத் தப்பித்தல்….): ஆமாம்…. மத்தவாள்லாம் என்னமோ பையில் போட்டு பத்து மாசம் தோள்ல தொங்கவிட்டுண்டிருந்த மாதிரியும் பேசறேளே!

தாயார் (சூரபத்மன் போல வேறு உருவம் எடுத்து….): என் இஷ்டம் அப்படித்தான் சொல்வேன். எம்புள்ளை எருமைமாடு…. எருமைமாடு…. எருமைமாடு, இப்ப என்ன செய்வே?

தாரம் (நக்கலாக…); பெத்தவர் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.

தாயார் : அப்ப என்னையும் எருமை மாடுங்கறியா..?

தாரம் (ஆஸ்கார் அவார்டு வாங்கும் அளவுக்கு அட்டகாசமாக ஆமாம் என்கிற எக்ஸ்பிரஷன்….)

தாயார் (ஸ்தம்பித்து நின்றவள் கடைசி ஆயுதமாக ‘க்ளிசரினை’ ஊற்றிக்கொண்டு பொலபொலவென்று அழுது கொண்டே…)

ஆமாண்டியம்மா… எம் புள்ளை எருமைக் கன்னுக்குட்டி… நான் எருமைமாடு…. உன் மாமனார் காளைமாடு…. நீ ஒருத்திதான் தேவதை…. போறுமா?

(இப்படி ஆரம்பித்த காட்சி சடகோபனுக்குக் கொம்பு முளைக்கும் வரை தொடர்ந்தது. இருவரும் மாறிமாறி ஏதாவது ஒரு விதத்தில் சடகோபனை எருமை மாட்டோடு ஒப்பிட்டார்கள்… இன்னும் சிறிது நேரம் சடகோபன் – எருமைமாடு சம்பாஷணை தொடர்ந்திருந்தால் சொல்லமுடியாது சடகோபன் களைத்துவிட்டு, கழனிப்பானையில் தலையை முக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை )

சரி, ஒரு உதாரணத்துக்குச் சண்டையே போடாத மாமியார் மாட்டுப்பெண் காம்பினேஷனை எடுத்துக்கொள்வோம்.

அப்பொழுது நம் நிலை எப்படி இருக்கும்? மிகவும் மோசமாகிவிடும். இவர்கள் சண்டையே தேவலாம் என்றாகிவிடும்.

எப்படி என்று கேட்கிறீர்களா…? மனைவி சொல்வாள், “ஏம்மா இவர் எப்பப் பாரு தூங்கு மூஞ்சியாவே இருக்கார்…? ஆபீஸ் பரீட்சை எழுதி பாஸ் பண்ணுவோம்…. ஆபீசராவோம்… ஒரு ஆம்பிஷன்கூட இல்லாம இப்ப வாங்கற ஐநூத்தி ஐம்பத்தைந்து ரூபாய் – பார் சோப்பு மாதிரி – சம்பளம் வாங்கினா போறும்னு இருக்காரே…”

தாய் பதிலுக்குக் கூறுவாள், “சின்ன வயசுலேந்தே இவன் இப்படித்தான். நீதாம்மா இவனைத் திருத்திக்காட்டணும்.” தாயும் தாரமும் சேர்ந்து நம்மீது பலத்தத் தாக்குதல் செய்வார்கள்… நமது தனி மனிதச் சுதந்திரம் பறிபோகும்.

ஆபீசராகச் சொல்வார்கள். காலையும் மாலையும் ஆண்டவனைக் குறித்து ஆசாரமாகத் தோத்திரங்கள் கூறித் துதிக்கச் சொல்வார்கள். மொத்தத்தில் தாய், தாரம் கூட்டணி நம்மைப் பண்டாரமாக்கிவிடும்.

அவர்கள் இருவரையும் எப்பொழுதும் எதிரெதிர் கட்சிகளாக, வைத்திருந்தால்தான் நமக்கு இன்பம் இறுதிவரை. யாராவது சொன்னார்கள் என்று ஏமாந்து போய் அவர்களைச் சமாதானப்படுத்தி வைக்க முயலாதீர்கள். சாத்தியமாகக் கூறுகிறேன்….. முடிந்தால் தாய்க்கும் தாரத்துக்கும் சிண்டு முடிந்து (ஸாரி, கூந்தல் முடிந்து …) சண்டையை வளர்த்துவிட முயலுங்கள்.

அவர்கள் இணைந்து நம்மை வைத்து விளையாடாமல் ஒருவருக்கொருவர் சண்டை என்ற பெயரில் விளையாடும் ஆட்டத்தை ஓரமாக நின்று நாம் வேடிக்கைப் பார்த்து அதில் குளிர் காய்வோம்!

– ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *