கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: June 2, 2023
பார்வையிட்டோர்: 14,846 
 

(2019ல் வெளியான சரித்திர மர்ம திகில் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 23 – 25 | அத்தியாயம் 26 – 28

அத்தியாயம் 26 

பிரபு நிலவறையிலிருந்து சூலாயுதத்தை கொண்டு வர, 

மாதங்கியின் குரலோ அவசரப்படுத்தியது. 

‘நிர்மலா கதிரவன் மறைந்து சந்திரன் வந்துவிட்டால் மாயவன் சித்தி வேலை செய்ய ஆரம்பித்து விடும் . நீ விரைந்து அந்த சூலாயுதத்தை முன்னால் இருக்கும் மரத்தில் குத்திவிடு. அதன் மேல் அந்த இரு தகடுகளையும் வைத்து விட்டு நகர்ந்து விடு’. 

மாதங்கியின் குரல் கேட்டு பிரபு வேகமாக வேங்கை மரத்திற்கு அருகில் சென்றான். 

திடீரென்று அங்கிருந்த மரங்களெல்லாம் துளி அசைவின்றி நிற்க, 

எந்த ஒரு பறவையின் ஒலியும் இன்றி நிசப்த சூழல் அங்கே நிலவியது. 

பிரபு மரத்தை நெருங்கி கையிலிருந்த சூலாயுதத்தை கண்ணை மூடி ஒரு நிமிடம் தியானித்து கை ஓங்க, 

அந்த மரத்தின் கிளைகளெல்லாம் சடசடவென்று ஒருபுறம் ஒடிந்து விழுந்தது. 

நல்ல வேளையாக கிளை தன் மேல் விழும் முன் சுதாரித்து விலகிய பிரபு கண்களில் திடீர் ஆவேசம் வந்தவன் போல் வெறித்துப் பார்த்தபடி பற்களை கடித்தபடி சூலாயுதத்தை ஓங்கி மரத்தில் குத்த, 

பறவைகளும், கூகைகளும், கோட்டான்களும், வௌவாள்களும் படபடவென்று சிறகை விரித்து அடித்தபடி அந்த மரத்திலிருந்து பறக்கத் தொடங்கின. 

எங்கிருந்தோ நரிகளின் ஊளையிடும் ஒலியும் சேர்ந்து பயங்கர நிலையை ஏற்படுத்தியது. 

பயந்த சுபாவம் உள்ளவர் அங்கு இருந்திருந்தால் அவ்விடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்திருப்பார். 

உடனே கிளைகளிலிருந்து இலைகளும் கொட்டத் தொடங்கின. 

பிரபு தன் கையிலிருந்த அந்த இரு தகடுகளையும் சூலாயுதத்தின் முனைகள் இரண்டின் மீது வைக்க அவை எந்த பிடிமானம் இல்லாதிருந்த போதும் மரத்தில் பதிந்தார் போல நின்றது. 

அவ்வளவுதான் திடீர்நெருப்பு மரத்தில் பற்ற ஆரம்பித்தது. 

அது எரிவதைப் பார்த்த பிரபு புன்னகை புரிந்தவனாய் இரு கைகளையும் பலமாக தட்டத் தொடங்கினான். 

மரத்திலிருந்து ‘ஹீம்…ஹீம்’ என ஒலி கேட்கத் தொடங்கியது, 

சிறிது நேரந்தான் மரம் முழுவதுமாக பற்றி எரியத் தொடங்கியது. 

உடனே பங்களாவைச் சுற்றியுள்ள மரம் செடிகள் எல்லாம் தலைவிரித்து ஊழிக்காற்றில் ஆடுவது போல் ஆடத்தொடங்கியது. 

அவைகள் எரிவதை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பிரபு. 

எல்லாமே சிறிது நேரந்தான். ஆடி அசைந்த காற்றின் வேகமும், தீச்சுடரும் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. 

பிரபு தன் தோளை யாரோ தொடுவது போன்ற உணர்வு தோன்ற திரும்பிப் பார்த்தவன் கண்களில இரு உருவங்கள் நிழல் போல் நிழலாடியது. 

பின்பு சிறிது நேர மௌனம். 

விம்மி விம்மி அழுவது போல் குரல் கேட்க பிரபுவின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய ஆரம்பித்தது. 

அவனை அணைத்து ஆலாபனை செய்வது போல் தோன்றியது. 

‘நிர்மலா…! இந்த நிகழ்வுக்காகத்தானே பல நூறு ஆண்டுகளாக நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம். 

நீ சித்தரின் சீடனாக இருந்து மடிந்தமையால் பல பிறவியிலிருந்து தப்பித்து உலகில் ஜனனம் செய்யாமலிருந்தாய். நானும் நம் அம்மங்காவும் துஷ்யன் மாயவனால் சித்தின் சூழ்ச்சியால் உடலிலிருந்து உயிர் நீங்கினாலும் இறைவன் பாதத்தை அடைய முடியாமல் இங்கேயே சுழல வேண்டி இருந்ததாகிவிட்டது, 

பாதகன் நாம் வசித்த இல்லத்தை கோவில் போலிருந்த மாளிகையை நாங்கள் நெருங்காவண்ணம் கட்டி விட்டு அராத்மாவாக இருந்த விஸ்வேஸ்வரனை 

மாளிகையின் காவலனாக நிற்க வைத்து விட்டான். அதனால் இம்மாளிகை யாரும் பயன்படுத்தா நிலமை உண்டானது . 

இந்த நிலமையிலிருந்து எல்லாம் நீங்க வேண்டுமானால் நீ இப்பூவுலகில் மீண்டும் ஜனித்து நீ இல்லற வாழ்வை துவங்குவதற்கு முன் இப்பாதகர்களை அழிக்க வேண்டும் . 

நீ இப்பூவுலகில் எங்கு, எப்பொழுது ஜனிப்பாய் என்று இவ்வுலகம் எங்கும் சுற்றி சுற்றி வந்தேன். ஆனால் நீண் ட காலங்களுக்குப் பிறகே நீ அருகிலேயே ஜனித்திருக்கிறாய் என்பதை நீ ஒரு முறை உன் நண்பர்களுடன் இங்கு அருகிலிருக்கும் மலைக்கு உல்லாச பயணம் வந்திருந்த பொழுது, என் நிர்மலாவின் நறுமணத்தை என்னால் நுகர முடிந்தது. 

என் நிர்மலா வந்துவிட்டான் என்று அகமகிழ்ந்து உனைக் காண ஓடி வந்தேன். 

நீ உனது தாயின் அருமை குழந்தையாக வளர்ந்து வரும் அழகை கண்ணால் ரசித்து மகிழ்ந்து வந்தேன். 

எனை மீட்கும் வேளை நெருங்கும் சமயம் நீ காதல் வயப்பட, 

நான் துடித்துப் போனேன். 

ஒரு உண்மையைச் சொல்லவா நிர்மலா … இப்பொழுதும் நீ எனக்குரியவன்தான் என எண்ணியிருந்தேன். 

என் காதல் கண்ணாலன் மற்றொரு நங்கையின் ஸ்பரிசத்தை உணர்வதை என்னால் பொறுக்க இயலவில்லை. 

அதன் காரணந்தான் மலைமேல் நீங்கள் செல்லும் பயணத்தை தடுத்து நிறுத்த மாயவன் உனைத் தொடர்கிறான் என கூறி நீ அங்கு போகாமல் தடுக்கப் பார்த்தேன். 

தங்கியிருந்த விருந்தினர் விடுதியிலிருந்து உனது காதலியை உனது உருவத்தில் அழைத்துச் சென்று மலையிலிருந்து தள்ளிவிட முயற்சி செய்தேன். நீ அவளைக் காணாது கதறி அழுது ஓடி வந்த நிலையைக் கண்டு மனம் கலங்கிவிட்டேன். இதுபோலத்தானே நாங்கள் நீங்கினகாலம் நீ கதறி கதறி அழுதாய். 

அந்தப் பிறவியில் தான் நீ உனது காதலியை குழந்தையை கயவர்களால் பிரிந்தாய் என்றால் இப்பிறவியிலும் நீ பிரிவதற்கு நானே காரணமாகக் கூடாது என பரிதவித்தேன். 

அதன் காரணமாக அவளை ஒன்றும் செய்யாது நீங்கி அருகில் இருந்து கவனித்துக் கொண்டேன் . 

நான் நீண்ட காலமாக மாளிகையில் இல்லாதது மாயவனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த எனை பின் தொடர ஆரம்பித்தான். 

நீ நிலையான வாழ்வு வாழ்ந்தால் அவனை அழிக்க வந்துவிடுவாய் என நினைத்து உனை அழிப்பதற்காகவே அந்த மலையிலிருந்து கீழே தள்ளிவிடப் பாரத்தான். 

ஆனால் நான் அங்கு இருந்தாலேயே உனக்கு எந்தவித அபாயமும் ஏற்படாமல் காப்பாற்றினேன். 

உனக்கு தொழில் நிமித்த பகைவர்களால் ஆபத்து வந்தபோதெல்லாம் தடுத்து உனைக் காப்பாற்றி வந்தேன். 

நீ எந்த வகையிலாவது இந்த இடத்திற்கு வர வேண்டும் என்ற காரணத்தால் நீ வகிக்கும் நீதிமான் பதவி எனக்கு உதவியாய் இருந்தது. நீ அன்று எப்படி வீரனாக வலம் வந்தாயோ அப்படித்தான் இப்பிறப்பிலும் நீதியை நிலைநாட்டுபவனாகவும், வீரமுள்ள மனிதனாகவும் வலம் வருகிறாய். 

நிர்மலா … உன்னால் நாங்கள் இன்று புனிதனானோம் . இனி இப்பூவுலகை விட்டு நீங்கும் சமயம் வந்து விட்டது . 

நீ உன் மனதுக்கேற்ற மணாளினை மணம் புரிந்து நன்மக்கள் பெற்று உனது காலம் முடியும்வரை மகிழ்வுடன் வாழ்ந்து வளம் பெறுவாய். உன் பதவியில் நீதிக்கு மட்டுமே சத்தியத்துடன் நிலைப்புரிவாய். 

உனது காலம் முடிந்தால் உனக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் . அங்கு நம் காதல் வாழ்க்கையை வாழும் பறவைகளாய் வலம் வருவோம்’.

நீண்ட உரையாடலை முடித்தவள் அவனை தழுவுவது போல அவன் சிரசில் கைவைத்து ஆசிர்வாதம் புரிந்தாள் . கன்னத்தில் மூச்சுக்காற்று பட்டு அகன்றது. 

பின் கண்களில் நீர் வழிய கையில் சிறு குழந்தையைப் பிடித்தபடி அவனைப் பார்த்தவாறே மெல்ல மெல்ல மறைந்துப் போனாள் . 

அவள் செல்வதையே கண்களில் நீர் வழிய பார்த்துக் கொண்டே இருந்தவன் மயங்கிய நிலைக்குச் சென்று கீழே சரிந்தான். 

சிறிது நேரத்தில்மாளிகையின் மாடங்கள், தூண்கள், சுவர்கள் எல்லாம் மடமடவென இடிந்து விழத் தொடங்கியது. 

சிறிது நேரத்தில் அம்மாளிகை குவியல் மண்ணாக தரை மட்டமாகி மாளிகை இருந்த சுவடே இல்லாத நிலையில் காட்சியளித்தது . 

சுற்றிலும் மண்ணின் தூசி படர்ந்து புகை மண்டலத்தை ஏற்படுத்தியது. 

தூசினால் தும்மலும் இருமலும் ஏற்பட மெல்ல கண்விழித்தான் பிரபு . 

ஒருகணம் அவனுக்கு தான் எங்கிருக்கிறோம் என்பதே புரியவில்லை. 

கை கால்கள் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதைக் கண்டவன், 

மெல்ல எழுந்து தன் உடைகளிலிருந்த மண்ணைத் தட்டி விட்டவாறே சுற்றிலும் கண்களைச் சுழற்றிப் பார்த்தான் . 

கை எரிச்சல் ஏற்பட தன் கர்சிப்பை எடுத்து மெல்ல துடைத்தவன் என்ன இது … ஏன் நாம் இங்கு மயக்கமாகிக் கிடந்தோம். எப்படி எப்போது இங்கு வந்தோம். அதுவும் தனியாக வேறு வந்திருக்கிறோம். ஜானி வந்தியத்தேவன் இருவரும் காணோமே …? அய்யோ … அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டிருக்குமா …?’, 

உடனே வேகமாக நடக்கத் தொடங்கியவன் ஜானி வந்தியா என அழைத்துக் கொண்டே செல்லத் தொடங்கினான். 

தன் செல் பாக்கெட்டில் இருக்கிறதா என்று பார்த்தவன் அது பத்திரமாக இருக்கவும் அதை எடுத்து ஆன் செய்தான் . 

மணியைப் பார்க்க மாலை ஐந்து என்று காட்டியது. 

தான் காலையிலிருந்து என்ன செய்தோம் என நினைத்துப் பார்த்தும் எதுவும் நினைவில் வரவில்லை . 

பசி மெல்ல எடுக்க ஆரம்பித்தது . தான் எப்போது சாப்பிட்டோம் என்பதும் நினைவிலில்லை. 

ஏனோ எல்லாமே சூனியமாகத் தோன்றியது பிரபுவுக்கு செல்லில் வேறு சார்ஜ் சிறிதளவு தான் இருந்தது. 

ஜானிக்கு போன் போடலாம் என நினைத்தவனை யாரோ பேசும் குரல் கேட்கவே அவர்களை நோக்கி செல்லலானான். 

மாளிகை குவியலுக்கு மறுபுறம் இருவர் பேசும் குரல் கேட்க முன்புறத்தில் இருந்தவன் ஏதோ ஒரு முன் எச்சரிக்கை உணர்வு தோன்றவே அவர்களை நோக்கிச் செல்லாமல் மலை போல் கிடந்த குவியலில் ஓரமாக மறைந்தான். 

“டேய் முருகா …! ஏதோ மடமடனு சத்தம் கேட்டுச்சே…பாருடா பங்களா இடிஞ்சி கிடக்கு.” 

“ஆமா தேவா…! எப்படிடா அப்படியே சரிஞ்சி விழுஞ்சிடுச்சி .” 

“அதுதான் எப்ப எப்பன்னு விழுறதுக்கு இருந்தமாதிரியே இருந்துச்சில்ல …” 

“கடோசி வரைக்கும் இந்த பங்களாக்குள்ள போயி பாக்காமலே போயிடுச்சே … ச்சோ !” 

“ஏண்டா முருகா … என்னமோ எல்லாரும் நுலஞ்சி பாத்த மாதிரியும் நீ மட்டுமே பாக்காத மாதிரி பீலிங் உடறே…? 

எனக்கு தெரிஞ்சவரை ஒரு மனுச ஜென்மம் கூட இதுக்குள்ளேப் போயி பாத்துருக்காது “, 

“அதான் மச்சி எனக்கு பயங்கர டவுட்டா இருக்கு . இப்ப நாம இங்க வரைக்கும் வந்துருக்கோமே … ஆனா எப்பிமே ரெண்டு பர்லாங் டிஸ்டென்ச மெயிண்ட்டெயினு பண்ணிக்கிட்டு தானே இருப்போம்? 

டேய் தேவா … மெல்லமா பேசுடா . இது சாதாரண மேட்டரு கிடையாது . நம்ம பாஸ்ஸே என்ன சொல்லிருக்காரு . 

டே பசங்களா … நம்ம இடத்தைத் தாண்டி அப்பாலே கால கீல வச்சிடாதீங்க. 

அப்புடி வச்சிட்டீங்கன்னா திரும்ப பொணமாத்தான் வருவீங்க . அந்த பங்களா பேய் பங்களா. 

அதப் பாக்கணும்னு ஆசைப்பட்டு அங்கே போனீங்கன்னா மறுநாளு உங்களுக்கு பாலு தாண்டி னு சொல்லியிருக்காரு இல்லை.” 

“ஆமாண்டா முருகா …! ஆனா ஏதோ அதிசியம் நடந்துருக்கு . அது மட்டும் நா அடிச்சி சொல்லுவேன் . மதியம் நீ கவனிச்சியா … ஏதோ சத்தம் இந்த பக்கமிருந்து வந்துகிட்டே இருந்துச்சில்ல …” 

‘மச்சி … மொதல்ல இங்கின இருந்து கிளம்பிலாம்டா . எனக்கு பயமா இருக்கு. காத்து கறுப்பு நம்பளை கவுத்துடப் போகுது. 

“பயப்படாதடா . நாம இங்க இருந்து கிளம்பிட வேண்டியதுதான். முருகா அந்தப் பக்கம் பாருடா … மரம் தீப்பிடிச்சி எரிஞ்சிக்கினு இருக்கு . எப்படிடா மரம் தானா எரியும்?” 

மச்சி … நெசமாலுமே எனக்கு குல நடுங்குதுடா . மின்னலு இடி எதுவுமே இல்லாம எரியுதுன்னா கண்டிப்பா துஷ்ட தேவதை இங்க இருக்குதுடா . வேணா வா … சீக்கிரம் இடத்த காலி பண்ணுவோம் .” என்று கூறியவர்கள் ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து சென்றனர். 

இதையெல்லாம் மண் மேட்டின் பக்கமிருந்து கவனித்த பிரபு 

‘இவர்கள் யாராயிருக்கும் . கண்டிப்பாக இல்லீகல் ப்ராசஸ் ஏதோ இங்க நடக்குது. இன்னும் கொஞ்ச தூரம் போய் பார்ப்போம் ‘ 

என நினைத்தவனாய் அவர்கள் சென்ற திசையிலேயே சென்றான் . 

சுமார்இரண்டு கிலோ மீட்டர் தூரம் காட்டில் நடந்தவன் தூரத்தில் ஒரு ஷெட் போட்டு கட்டிடம் ஒன்று தெரியவே அதை நோக்கி நடந்தான். 

பக்கம் நெருங்கும் வேளை மனித நடமாட்டம் தெரியவே மெல்ல நடந்து மறைவாக நடந்து ஒரு மரத்தின் பின்னே ஒளிந்து நின்றான். 

தான் பார்த்த இருவர் வேறு புறமிருந்து வேக வேகமாக வர அவர்களைக் கண்ட இன்னொருவன் அவர்களிடம் 

என்ன முருகா…சத்தம் கேட்டதே…என்னன்னு தெரிஞ்சுதா …?” 

‘கோட்டி…! அதை ஏண்டா கேக்கிறே…? 

அந்த பங்களா பக்கம் போக முடியாதுன்னு தானே நினைச்சிருந்தோம் ஆனா எங்களுக்கு எதுவும் நடக்கலைடா. 

அந்த பங்களா அப்படியே தரைமட்டமா கிடக்குது. பக்கத்துல மரம் ஒன்னு எரியுது . 

என்ன நடந்துதுன்னேப் புரியலை .” 

என்னங்கடா சொல்றீங்க ….? நா எத்தனை முறை அந்தப் பக்கம் போக முயற்சி பண்ணியிருக்கேன். ஆனா பங்களா நெருங்க நெருங்க பாம்பு கூட்டமா இல்லை இருக்கும் . பக்கம் இல்லை தூரத்தில் இருந்து கூட அங்க போகமுடியாதே. அப்ப பாம்புங்க அங்க இல்லியா ..?” 

நாங்க ஒரு பாம்பைக் கூட பாக்கலையே .?”. 

“அங்க பூமி அதிர்ச்சி ஏதும் வந்துருக்குமா … ரொம்ப சத்தம் வேற கேட்டேதுல்ல .?” 

“தெரியலை . ஆனா ஏதோ ஒன்னு அங்க நடந்ததாலதானே பங்களா சரிஞ்சி விழுந்துருக்கு . சரி பாஸ் வந்துட்டாரா… 

வெளிநாட்டு கேங் ஒன்னு வருதுன்னு சொன்னாரே …?” 

“அவங்களை பிக்கப் பண்ணத்தான் போயிருக்காரு” 

இந்த வாட்டி செம மால் அள்ளிடலாம்னு பாஸ் சொன்னாருல்ல . பார்ட்டி பெருசா…?” 

“பெருசா…நீ வேற. அவங்கதான் வேர்ல்டு லெவல் மாபியா கோஷ்டி . 

பிரேசில் தெரியுமா உனக்கு…?” 

என்ன கோட்டி …. இந்தப் பீல்டுல பத்துவருசமா இருக்கேனே … இது கூடவா எனக்குத் தெரியாது. அங்கதானே சர்வதேச போதை பொருள் கடத்தல் அதிகம் .” 

ஆமாம். ஆனா எப்பவும் வர கோஷ்டி இல்லை . இது பவர்புல்லான நெட்வொர்க் .” 

‘நார்கோ ‘ எனப்படும் ( சட்டத்துக்குப் புறம்பாக போதைப் பொருளை கடத்துபவர் என்று பொருள் ) பெரிய கேங் லீடரே இங்க வரார் .” 

சரி பாஸ் வர நேரமாயிடுச்சி . அந்த செக்போஸ்ட் மாதவன் அங்க கேர்புல்லாதானே இருக்கான் .” 

“இன்னிக்கி அவனோட டூட்டிதானே . நல்லவேளை … பாஸ் பாங்காங் போயிட்டு வந்து சூப்பரா பிளான் பண்ணாரு” 

“ஆமா தேவா … எனக்கு கூட இது சரியா வருமான்னு டவுட்டாவே இருந்தது. 

ஆனா பாரேன் பத்து வருசமா வெற்றிகரமா யாரையும் இந்தப் பக்கம் வரவிடாம சேஸ்ரிவர்ஸ் ஹெல்ப் பண்ணுதிவ்லை “

‘ ஆமாம். அதை இங்க வைக்க எத்தனை லட்சம் நம்ம பாஸ் செலவு பண்ணினாரு. 

எவனும் அந்த செக்போஸ்டை தாண்டி அந்த மூணுரோடு பிரியற இடத்துக்கு வந்தாலே மண்ணுக்கு கீழே சுமார் ஒருகிமீட்டர் தூரத்துக்கு போட்டிருக்கிற சேஸ்ரிவர்ஸ் அவங்களை முன்னோக்கி போக விடாம ரிவர்ஸ்ஸிலேயே கொண்டுவந்து செக்போஸ்டுகிட்ட கொண்டு வந்து விட்டுடுமில்லை .” 

“ஏன் கோட்டி … அது என்ன தானாவே வேலை செஞ்சிடுதா…? 

நம்ம டீம் ஆளுங்க மாறி மாறி செக் போஸ்டுல இருந்து பத்துமரம் தள்ளி இருக்கிற ஆலமரத்து மேல இருக்கிற மரவீட்டுல இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் அந்தப் பக்கம் யார் வருவது என்று தெரிந்து ஆன் செய்து விடுவார்கள் . 

நடந்தாலும் வண்டிகள்ள வந்தாலும் பிரியிற மூணு ரோட்ல பங்களா பக்கம் வர்ர ரோட்டுல இருக்கிற சேஸ்ரிவர்ஸ் மீண்டும் செக்போஸ்ட்கிட்டயே கொண்டுவந்து சேர்த்திடுது .” 

“அதுக்கு நமக்கு செக்போஸ்ட் ரேஞ்சர்ஸ் ஹெல்ப் நமக்கு உதவியா இருக்கே”

“சும்மாவா செய்யிறாங்க . மாசமானா சுளையா பச்சை நோட்டு போய் சேர்ந்திடுதில்ல…” 

“முருகா … போன மாசம் வக்கீலு ஓருத்தன் வழி கேட்டு வந்தானே …. அப்ப அவனுங்களை பயமுறுத்தி அனுப்பியதை நினைச்சா எனக்கு சிரிப்பா வருதுடா…!”, 

ஏன் ஏன் வராது உனக்கு சிரிப்பு? 

அந்த இன்ஸ்பெக்டரு சற்குணத்துக்கிட்ட மாட்டிக்கிட்டு முழிச்சது நாந்தானே…! 

அப்புறம் ஒருவழியா அவனுங்களை கன்ப்பியூஸ் பண்ணிட்டேனுல்ல” 

ஆனாலும் அவன் செம ஷார்ப்புடா . உன்ன நம்பின மாதிரி நம்பிட்டு பின்னாலையே போலீஸ்காரன் ஒருத்தனை அனுப்பினான் இல்லியா …” 

“நா எப்படிப்பட்ட ஆளு . அவன் விடாகண்டன்னா நா கொடாகண்டன் . அதான் ஊரு பக்கமா போயிட்டு தண்ணிக் காட்டினேனில்ல அவனுங்களை”

‘ஹே … கார் வர்ர சத்தம் கேக்குது . உள்ள போய் எல்லாரையும் அலர்ட்டா இருக்கச் சொல்லுங்க. நான் இங்க இருக்கிறேன்”, தேவா கூற இருவரும் வேகமாக உள்ளே ஓடினர். 

இவர்கள் பேசியதை எல்லாம் பக்கமாக உள்ள மரத்தின் பின்புறமிருந்து ஒன்றுவிடாமல் கேட்டுக் கொண்டிருந்த பிரபு ஜானிக்கு போன் போடலாம் என்று போனை எடுக்க அப்போது டொயோட்டோ ஒன்று சர்ரென்று வந்து அந்தக் கட்டிடத்தின் அருகே நின்றது. 

கார் கதவை ஓடி தேவா திறக்க காரிலிருந்து இறங்கியவன் உள்ளே இருப்பவனிடம் தலையை ஆட்டி பேசியபடி திரும்பி நிற்க அவனை நன்றாகக் கவனித்தான் பிரபு . 

அவனைக் கண்டதும் திடுக்கிட்டான் பிரபு . 

அத்தியாயம் 27 

மாளிகையின் பின்புறமாக நடந்து வந்த பிரபு தான் பாலோ செய்ய நினைத்த அந்த இரு நபர்களும் வேறு வழியாக அங்கு வந்து தேவா என்பவனிடம் பேசிய பேச்சுகளை கேட்டதிலிருந்து தனக்கு டவுட்டாக இருந்த பல
விசயங்களை தனக்காகவே சொல்வது போல் அவர்கள் ரீவைண்ட் பண்ணிப் பேச, 

எல்லா விசயங்களும் அழகாக புரிந்துவிட்டது பிரபுவுக்கு . மேலும் அவர்கள் வேர்ல்டு லெவல் மாபியா தலைவனை வரவேற்க காத்திருப்பதாக கூறவும் பிரபுவும் இன்று ஒரே இடத்திலேயே அனைத்து போதைக் கும்பல்களின் தலைவர்களை அடையாளம் கண்டுவிடலாம் என ரொம்ப எக்ஸ்சைடாக இருந்தான் . பிறகு போனை எடுத்து ஜானிக்கு போன் போடலாம் என நினைக்கும் வேளை கார் ஒன்று வழுக்கிக் கொண்டு வந்து அந்த ஷெட் போன்ற பெரிய கட்டிடத்தின் முன்னால் வந்து நிற்க,

காரைத் திறந்து கீழே இறங்கிய மனிதன் பின்புறக் கதவை மிகவும் பணிவுடன் திறந்து குனிந்து ஏதோ அம்மனிதனிடம் தலையை ஆட்டியவாறே நிமிர்ந்து அருகில் நின்றிருந்த தேவா என்பவனிடம் பேசியவாறே திரும்ப அந்த மனிதனைப் பார்த்தவன் மிகவும் அதிர்ச்சியின் எல்லைக்கேச் சென்று விட்டான். 

இவரா … இவரா … போதைக்கும்பலோடு சம்மந்தம் உடையவர். அவனால் நம்பவே முடியவில்லை . தன் கண்களை நன்றாகத் தேய்த்துக் கொண்டவன் மெல்ல தன் கைகளை கிள்ளிப் பார்த்துக் கொண்டான். 

இல்லை .. இது கனவல்ல. நிசந்தான் . சே … இந்த உலகத்தில் யாரை நம்புவது என்றே தெரியவில்லை. தான் பார்த்த நபரை நினைத்து மனது வேதனையுடன் அப்படியே சிறிது நேரம் நின்று விட்டான் பிரபு. 

பிறகு ஏதோ முடிவு கண்டவனாய் வேகமாக போனில் ஜானியை தொடர்புக் கொள்ள முயற்சித்தான். நெட்வொர்க் அங்கே கிடைக்கவில்லை. மேலும் சார்ஜிம் கொஞ்சமாகவே இருக்க கவலையடைந்தவன் 

எப்படியாகிலும் ஜானியிடம் இதைச் சொல்லிவிட்டால் போதும். அவன் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வான் என நினைத்தான். 

மெல்ல அங்கிருந்து நகர முற்பட மீண்டும் இன்னொரு கார் வந்து நிற்க, 

அதிலிருந்து இறங்கியவனும் தனக்கு தெரிந்தவனாகவே இருக்க இது என்ன … இன்று நமக்கு பலருடைய முகமூடியை பார்க்க முடிகிறது .’ என நினைத்தவன் வேகமாக அங்கிருந்து நகன்றான். 

சிறிது தூரம் வந்தவன் சிறிய மரம் ஒன்றில் ஏறினான். மேலே கிளையில் அமர அங்கிருந்து தாம் பார்க்கவேண்டிய இடம் தெள்ளத் தெளிவாகத் தெரிய திருப்தியடைந்தவனாய் போன் போட்டுப் பார்த்தான். ரிங் செல்லவே நிம்மதியடைந்தான். 

மறுமுனையில் ஜானி பாஸ் பாஸ் என சத்தமாக அழைப்பதுக் கேட்டது. 

பிரபு பேச ஆரம்பிக்க ஜானி பாஸ் பாஸ் என அழ ஆரம்பித்தான். 

அவனிடம் ” ஜானி …! என் போன்ல ஜார்ஜ் கம்மியா இருக்கு . டீடெய்லா எதுவும் உங்கிட்ட பேசமுடியாது . நான் சொல்வதை மட்டும் கேட்டுக்கோ …” எனக் கூறியவன் மடமடவென்று நிறைய இன்ஸ்ட்ரக்சன் கொடுக்க, 

எல்லாற்றிற்கும் சரி பாஸ் சரி என்று கூறியவனிடம் ” சரி வைச்சிடறேன் . நீ நான் சொன்னமாதிரி செஞ்சிட்டு சற்குணத்தையும் பட்டாலியன் போலீசையும் உடன் அழைத்து வா. 

இரவா … அதை எப்படியாவது நான் சமாளிச்சிக்கிறேன் நீ விடியற்காலையில் இங்கே இருக்கணும் . அதுக்கு தகுந்தமாதிரி வேகமா காரியங்களைச் செய்யணும் . புரிஞ்சிதா…!” 

நிறைய கட்டளைகளை அவனிடம் கூறிவிட்டு நிம்மதியாக மரத்தில் சாய்ந்தான். 

காலை எல்லா கேள்விகளுக்கும் அவர்களிடமிருந்து பதில் கிடைத்துவிடும்.

ஆனால் இருட்ட ஆரம்பித்துவிட்டது . இந்த இருட்டில் வழி தேடி வெளியேச் செல்வது மிகவும் கடினம் . இந்த மரத்திலேயே இருந்துவிட வேண்டியதுதான் . 

ஆனால் இப்பொழுது மிகவும் பசிக்கிறது. தாகம் வேறு எடுக்கிறது . என்ன செய்வது” 

யோசிக்கலானான் பிரபு. 

‘வேறு வழியில்லை . அவர்கள் இருக்கும் ஏரியா பக்கம் சென்றுதான் தண்ணீரைத் தேட வேண்டும். தாகத்திலே உயிரே போயிடும் போல இருக்கு மெல்ல மரத்திலிருந்து இறங்கியவன் மரங்களின் நிழலிலேயே கீழே கிடந்த சருகுகளின் சத்தம் கூட கேக்காதவண்ணம் அடிமேல் அடி எடுத்து நகர்ந்தான். இருநூறு மீட்டர் தூரந்தான் . ஆனால் அரைமணி நேரமாயிற்று அவனுக்கு. 

இப்பொழுது அந்த கட்டிடத்தின் பின்புறமாக வந்து சேர்ந்திருந்தான். 

அங்கே நிறைய அட்டைப் பெட்டிகள் காலி டிரம்கள் கடப்பாரை மண்வெட்டி நிறைய கத்திகள் உடைந்தும் இன்னும் பல பொருட்கள் தாழ்வாரமாக இறக்கப்பட்டிருந்த இடத்தில் போட்டு வைக்கப்பட்டிருந்தது. 

இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்க்கும் போது தகரத்தால் ஆன இரு சிறு அறைகள் தென்பட அவற்றின் அருகே சென்றவன் கதவு என்று சொல்லும்படி இருந்த துருப்பிடித்து இருந்த கதவை தாள் மெல்ல நீக்கிப் பார்த்தான். 

ஒரு அறையில் நிறைய காலி மதுப் பாட்டில்களும் அருகில் தண்ணீர் கேன்களும் பிளாஸ்டிக் தம்ளர்களும் காணப்பட, 

அப்பாடா’என மூச்சு விட்டான் பிரபு. 

ஒரு சிறிய கேனை எடுத்துக் கொண்டவன் டம்ளரையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னால் சென்று நின்றான். 

தாகம் தீர்ந்திடுச்சி . பசிதான் ஆரம்பிச்சிடுச்சி . என்ன செய்வது யோசனையில் சிறிது நேரம் மரத்தின் பின்னாலேயே நின்றான். 

அப்போது கட்டிடத்தின் பின்புறக் கதவு திறக்கப்பட்டு அங்கிருந்து நான்கு பேர் வெளிவந்தனர். 

அவர்களில் மூவர் ஏற்கனவே அறிமுகமானவர்கள் தான் . அவர்களில் ஒருவனின் கையில் உணவுப் பொட்டலங்கள் காணப்பட்டது. 

அவர்கள் அங்கிருந்த மேடை ஒன்றில் அதை வைத்துவிட்டு அமர்ந்தனர் . 

“ஜீவா … அந்த ரூம்ல வாட்டரும் குவாட்டரும் எடுத்துவா ” என்று தேவா கூற 

சரியென்று அவன் உள்ளே செல்லத் திரும்பினான். அப்போது உள்ளேயிருந்து ஒருவன் வந்து உங்களையெல்லாம் பாஸ் கூப்பிடுகிறார் எனக் கூற உணவை அப்படியே வைத்துவிட்டு அனைவரும் கிளம்பினர். 

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பிரபு சிறிது நேரம் எட்டிப் பார்த்துக் கொண்டே இருக்க யாரும் வருவதாகத் தெரியவில்லை . 

சட்டென்று வேகமாக வந்தவன் பையிலிருந்த ஒரு பொட்டலத்தை எடுத்துக் கொண்டு பின்னால் மறைந்தான். 

சிறிது தூரம் சென்று கல் ஒன்றின் மேல் உட்கார்ந்து வேகவேகமாக சாப்பிடத் துவங்கினான். பசியின் கொடுமையை இதுவரை அறியாதவன் முதன் முதலாக அறிய நேர்ந்ததை எண்ணி எதுவும் எப்படியும் நடக்கவேண்டியது நடந்தே தீரும் என எண்ணியவனாய் சிறிது தூரம் நடந்து படுத்து இளைப்பாற இடம் தேடினான் . 

நடுஇரவில் திடீரென்று வண்டி ஒன்று வருகின்ற சத்தம் கேட்டு விழித்தவன் இந்த நடுராத்திரியில் அப்படி என்ன கொண்டு வருகிறார்கள் . 

எழுந்து இருட்டில் தட்டுத் தடுமாறி அருகில் வந்து மறைந்து கவனிக்கலானான். 

பெட்டி பெட்டியாக பத்து பேருக்குமேல் அந்த லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். 

இவையெல்லாம் எங்கு செல்லப் போகிறது. 

அதில் என்ன இருக்கிறது. விடிவதற்குள் சென்று விட்டால் எப்படி இதைப் பிடிப்பது. 

அப்போது தம் அடித்தபடி இருவர் சற்று ஒதுங்கினர். இருவரும் அங்கு நின்றபடி பேச ஆரம்பிக்க பிரபு உற்றுக் கேட்க ஆரம்பித்தான். 

“ஏம்பா … இந்த வாட்டி ஏன் ஸ்பாட்டை மாத்துறாங்க.?”

“யாரோ புது பார்ட்டி ஜாயிண்ட் ஆயிருக்கு. இப்ப நாம கொண்டு போறது பெரிய இடத்ததுன்னு பேசிக்கிட்டாங்க” 

கொள்ளை கொள்ளையா சம்பாதிக்கிறாங்க . ஆனா நமக்கு நியாயமான ஊதியம் கூட குடுக்கிறதில்லை. என்னா பொழப்பு இது போ .” சலித்துக் கொண்டான் ஒருவன். 

‘மெதுவா பேசுடா. கேட்டுடப் போகுது . இருட்ல சுவத்துக்கும் காது இருக்கும்.” 

“கருப்பா .. நான் ஒன்னு சொல்றேன் கேக்கிறியா…?” 

வில்லங்கமா ஏதும் சொல்லாதவரைக்கும் ஒகே .” 

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. லேசான விசயந்தான்” 

“சரி சொல்லு நேரமாகுது . கூப்பிடப் போறாங்க. ‘நாம பைபாஸ் வழியாத்தானே போவோம் . நாம போற வழியில சைடு ரோடு வர்ர இடத்துல வண்டியைத் திருப்பிடலாம். 

தார்ப் பாயை எடுத்துட்டு ஒரே ஒரு பாக்ஸை மட்டும் சுட்டுடலாம் . என்ன சொல்றே?” 

‘நீ என்ன புதுசாவா வேலைக்கு வந்திருக்கே . ஏதும் தெரியாத மாதிரி பேசறே. 

தார்ப்பாயை நீக்கறது கஷ்டம் . சீல் வச்சிதான் அனுப்புவாங்க. அதுமட்டுமல்ல… எத்தனை பாக்ஸ் இருக்கோ அத்தனை பாக்ஸிக்கும் நாமதான் பொறுப்புன்னு எழுதி வாங்கிகிட்டுதான் அனுப்புவாங்க 

ஒன்னு குறைஞ்சாலும் கட்டி வச்சு தோலை உரிச்சிடுவாங்க . பரவாயில்லையா…?”, 

ஏதோ முடியுமான்னு கேட்டுப் பார்த்தேன். விடப்பா டென்சனாகாத . சரி வா . கொஞ்ச நேரம் கண்ணசைப்போம் . காலையில அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பணும்”

இதுவரை இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பிரபுவுக்கு ஒன்று மட்டும் நன்றாகவே புரிந்தது. இதில் அரசியல்வாதிகளின் பங்களிப்பும் இருக்கவேண்டும் என. 

காலை எப்போது விடியும் என சரியாக உறங்காமல் விழித்தபடி படுத்திருந்தான் பிரபு . 

அதே நேரம் ஜானியும் வந்தியத்தேவனும் சற்குணத்தை காண்டாக்ட் செய்து விசயத்தைக் கூற ‘ இஸிட் நிசமாகவா!’ என கேட்டவர் பட்டாலியன் போலீஸிக்காக மேலிடத்தில் பர்மிசன் கேட்டு ஆர்டரை பெற்றுக் கொண்டவர் சீரிதரிடம் விசயத்தைக் கூறி அவரையும் தன்னுடன் அழைத்துச் செல்ல பர்மிசன் வாங்கி விட்டதாகவும் தங்களின் படைகளோடு உடனே கலந்து கொள்ள உத்தரவு வந்திருப்பதாகவும் கூற இரவு பத்துமணியளவில் அனைத்தும் அலர்ட்டாக வந்து பொன்ராயன் மங்கலத்தில் வந்து சேர்ந்தது. 

விடியற்காலை மூன்று மணிக்குள் காட்டுக்குள் போலீஸ் படை நுழைய ஆரம்பித்தது. 

செக்போஸ்ட் அருகில் மரத்தின் மீதிருந்த குடிலை நோக்கி இரு காவலர்கள் துப்பாக்கி முனையில் விரைய மற்றவர்கள் கீழே வலைபோல் மரத்தைச் சுற்றி நிற்க, 

நடுஇரவு என்பதனால் அசால்ட்டாக இருந்த மரக்குடிலில் உறங்கிக் கொண்டிருந்த இருவர் தங்கள் மீது துப்பாக்கி அழுத்தப்படும் விசையினால் புரண்டு படுத்தவர்கள் திடுக்கிட்டு எழுந்திருக்க, 

போலீஸ் தங்களைச் சுற்றி நிற்பதைப் பார்த்து பதறி அடித்து எழுந்தனர். 

பிரபு தான் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்தபடியே சரிந்து படுத்திருந்தவன் அப்படியே உறங்கிப் போனான். 

யாரோ தன்னை உலுக்குவது போல் தோன்ற சட்டென்று விழித்தவன் இருட்டில் நிற்பது யாரெனத் தெரியாமல் இருக்கவே மெல்ல எழுந்தான். 

‘பாஸ் … பாஸ் ! என்னைத் தெரியலையா …?’

வந்திருப்பது ஜானி என்பதை அறிந்து மகிழ்ச்சியுடன் அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். 

பாஸ் … பாஸ் ! என ஜானி கண்களில் நீர் வழிய கட்டிப்பிடித்தபடி ” உங்களை மறுபடி பார்ப்பேன் என்றே நினைக்கவில்லை. ஏன் … இப்படி எங்களிடம் கூட சொல்லாமல் இங்கு வந்தீர்கள். 

காலையிலிருந்து இந்தக் காட்டைச் சுற்றி சுற்றிதான் வரமுடிந்ததே தவிர மூணுரோடைத் தாண்டி எங்களால் வர முடியவில்லை. 

இங்கிருந்து திரும்பிப் போகவும் முடியாமல் நாங்கள் உங்களுக்காகவே காத்திருந்தோம்.

நேரமாக நேரமாக பயம் வந்ததால் சற்குணம் சாருக்கு போன் செய்து விவரத்தைக் கூறினோம் . அவரும் தன் சக போலீசுடன் வந்தும் எங்களால் வரவே முடியவில்லை.” 

“ஆமாம் … வந்தியன் எங்கே …?” 

“கேப்டன்… பின்னாலத்தான் நிற்கிறேன் என்று கூறியவாறு பக்கத்தில் அவனும் வந்து நிற்க, அவனுடைய கையை எடுத்து தன் கை மீது வைத்துக் கொண்டான் பிரபு. 

“சரி … நான் சொன்ன ஏற்பாடுகளை செய்து விட்டாயா…?” 

“பக்கா …! நீங்க சொன்ன விசயங்களை முடித்துதான் வந்தேன் . பாஸ் … சாப்டீங்களா…?” 

“பட்டினியின் வலிமையை இன்னிக்கிதான் உணர்ந்தேன் ஜானி . அப்பப்பா எப்படிப்பட்ட கொடுமை தெரியுமா …? 

ஆண்டவன் புண்ணியத்துல நல்ல சாப்பாடே கிடைச்சது. சரி சற்குணம் எங்கே …?” 

“அவர் முதல் வலையில் இருக்கிறார். 

அடுத்து பட்டாலியன் குரூப் அதற்கடுத்து சிரிதர் குரூப் என வியூகம் வகுத்து அதற்குத் தகுந்தாற் போல் சூழ்ந்துள்ளனர் . அதுமட்டுமல்லாமல் வான் வழி கண்காணிப்பும் இருக்கு. அவர்களால் எங்கும் தப்பித்து ஓடமுடியாது. 

சரி … முதல்ல கட்டிடத்தைச் சுற்றி மரமறைவுகளில் போலீசை நிறுத்த வேண்டும். பார்சல் அனைத்தும் இரண்டு லாரிகளில் ஏற்றப்பட்டிருக்கு. 

ஐந்து மணிக்கு கிளம்புவதாகப் பேசிக் கொண்டார்கள் 

உள்ளே வேர்ல்டு லெவல் இருக்கிறான். 

கூடவே நமக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது வெளி வருவார்கள் என்றுத் தெரியவில்லை.” 

‘யார் பாஸ் அவங்க நமக்குத் தெரிஞ்சவங்கன்னா தொழில் முறையிலா …. இல்லை உறவு முறையிலா …?” அவன் கேள்விக்கு பதில் சொல்லாத பிரபு சிரித்துக் கொண்டே, அவர்களை பத்திரமாக அழைத்துக் கொண்டு அருகில் உள்ள கட்டிடத்தின் முன்புறமாகச் சென்று நூறு மீட்டர் இடைவெளியில் இருக்கும் சரிவுப் பகுதியில் இறங்கி பள்ளத்திற்குள் அமர்ந்துக் கொண்டனர் . 

இதுவரையிலும் இந்தப் பகுதிக்குள் வேற்று மனிதர்கள் உள் நுழையாமலே வைத்திருந்ததால் கட்டிடத்திற்கென்று பாதுகாப்பு என்பதே இல்லாமல் இருந்தது. 

இது நல்ல சாதகமாக இருந்தது இவர்களுக்கு. நேரம் நெருங்கிக் கொண்டே இருக்க, மூவரும் திக் திக் மனத்தோடு வாயிலையே கவனித்துக் கொண்டிருந்தனர். 

முதலில் ஒருவன் வெளிவருவது போல் தோன்றியது. 

நேராக இவர்கள் இருக்கும் பள்ளப்பகுதிக்கு வர, மூச்சைப் பிடித்துக் கொண்டு மூவரும் அமர்ந்திருந்தனர். 

நல்லவேளை சிறிது தள்ளி அவன் சிறுநீர் கழித்துவிட்டுச் செல்ல மீண்டும் மூவரும் தலையைத் தூக்கி எட்டிப் பார்க்கத் தொடங்கினர். 

இப்பொழுது வெளிவிளக்குப் போடப்பட்டது. ஒவ்வொரு தலையாக தெரிய ஆரம்பித்தது. 

முன்பு இரவு பேசிய இரு நபர்களும் வெளிவந்து தலையில் மப்ளர் சுற்றியபடி மூன்றாவது நபரிடம் ஏதோ கூறிவிட்டு லாரிகளை எடுத்தனர். 

லாரி மெல்ல ஊர்ந்து வேகமெடுக்கத் தொடங்கியது. பாதி தூரம் சென்றிருக்காது . சாலையில் குறுக்கே பெரிய கல் ஒன்று கிடக்க முன்னால் லாரியில் இருந்தவன் சலித்துக் கொண்டே கீழே குதித்தான். அதைத் தொடர்ந்து பின்னால் வந்தவனும் இறங்கி என்னவென்று விசாரிக்க அவனிடம் பேசிக் கொண்டே இருவருமாகச் சேர்ந்து அதைத் தூக்க முயல இருவரின் முதுகிலும் துப்பாக்கி முனை அழுத்தவே குனிந்திருந்த நிலையிலேயே இருவரும் பயத்துடன் பார்க்க ‘உம் … நிமிருங்கள்’ என அதட்டல் வர நிமிர்ந்தவர்கள் தங்களின் முன்னால் போலீஸ் கும்பலாக இருப்பதைப் பார்த்து எச்சில் முழுங்கக்கூட மறந்தவர்களாய் பயத்துடன் மிரள மிரள நின்றனர். 

பிரபு ஜானியிடம் ஏதோக் கேட்க “இதோ இருக்கு” என்று தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுக்க அதை வாங்கி தன் கையில் வைத்துக் கொண்டான். 

நேரமாக மடமடவென்று வேலைகள் நடக்கத் தொடங்கின. 

ஒவ்வொருவனின் கையிலும் ஏதோ ஒரு பார்சல் போல் இருக்க நாம் எதிர்பார்த்த மாபியாத் தலைவன் கூடவே லோக்கல் தலைவன், இன்னொரு ஏரியா குரூப் என அனைவரும் ஒன்றாக வெளிவந்தனர். 

பாஸ் என அனைவராலும் கூறப்பட்டவனின் கைகளை நெடு நெடு வென்று உயரமுடன் செம்பட்டைத் தலையுடன் ரோஸ் கலரில் உள்ள மாபியாத் தலைவன் பிடித்துக் குலுக்கிவிட்டு சேர்த்து அணைக்க சிரித்தபடி இருவரும் காரை நோக்கிச் செல்ல ஒரு அடி எடுத்தனர். 

பிரபு தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட திடீர் வெடிச் சத்தத்தில் அரண்டு போன கும்பல் அப்படியே நின்று ஒருவரையொருவர் பார்த்தனர். 

உடனே அவர்கள் ஆட்கள் உள்ளே ஓடி அவரவர் கைகளில் ஏகே 47 எடுத்துக் கொண்டு ஓடிவர பத்துப் பேர் கொண்ட கும்பல் மாபியாத் தலைவனையும் தங்கள் தலைவனையும் வட்டம் போட்டு மறைத்துக் கொண்டனர். விளக்குகள் பளீர் என்று நாலாபுறமும் எரியத் தொடங்க அதிர்ச்சியின் உச்சத்திற்கே அந்தக் கும்பல் சென்றது. 

உள்ளே இருந்த மாபியாத் தலைவன் பாஸ் எனப்பட்டவனிடம் காச் மூச்சென்று ஆங்கிலத்தில் கத்த ஆரம்பிக்க பதிலுக்கு அவனும் ஏதோ பேச அவனின் ஆட்களோ கையிலிருந்த துப்பாக்கியை நேராக குறி பார்த்து நிற்க விளக்குகள் மெல்ல மெல்ல முன்னேறி வர ஆரம்பித்தது . 

உடனே பின்வாங்கி கட்டிடத்திற்குள் செல்ல முயல கட்டிடத்திற்குள்ளிருந்தும் விளக்கு வெளிச்சம் வரத் தொடங்கியது. 

நாலாபுறமும் விளக்கு வெளிச்சங்கள் தெரியத் தொடங்கின வேளை வானத்தில் இரண்டு போர் விமானம் போல் மேலேயிருந்து தலைக்கு மேல் அதிக இரைச்சலுடன் சுற்றத் தொடங்கியது. 

குத்துமதிப்பாக துப்பாக்கியை வெடிக்கத் தொடங்கின கும்பல். 

எதிர்புறமிருந்து பதிலுக்கு துப்பாக்கி வெடிக்கத் துவங்க சுற்றி வட்டம் போட்டு நின்றிருந்த கும்பலிருந்து ஒவ்வொருவராகச் சரியத் தொடங்கினர். மீதம் இருக்கின்றவர்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்குமிங்கும் கலைய நடுவில் இருப்பவர்கள் என்ன செய்வது எனப் புரியாமல் திருதிருவென நிற்க, 

பட்டாலியன் முன்னேறி அனைவரையும் வளைத்து நின்றது . 

தங்களின் மேல் துப்பாக்கி நீட்டப்பட்டிருப்பதால் தலைக்கு மேல் கைகளைத் தூக்கியபடி மூவரும் நிற்க, பட்டாலியனை விலக்கியபடி சற்குணம் முன்வந்து நின்றார். 

அப்போது குழிக்குள்ளிருந்து பிரபுவும் நண்பர்களும் வெளி வந்து நின்றனர். 

சற்குணம் போன் செய்து யாரிடமோ பேசி ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தார். 

ஜானி பிரபுவிடம் ” பாஸ் … நாம முன்னால போயி அவங்க யாருன்னு பாக்கலாம் . நீங்க நமக்கு தெரிஞ்சவங்கன்னு சொன்னதிலிருந்து ஏகத்துக்கு ஹார்ட் லப்டப்புன்னு எகிறுகிட்டு இருக்கு . வாங்க ” என்று முன்னால் வர அந்த மூவரும் சற்குணத்திடம் விவாதம் பண்ணிக் கொண்டிருந்தனர். 

தங்கள் வசமிருந்த சரக்குகள் எல்லாம் இரண்டு லாரிகளில் சென்றுவிட்டதால் சாட்சிக்கு எந்த ஒரு எவிடன்சும் இல்லை என்ற எண்ணத்தில் காவலர்களிடம் விவாதம் செய்ய ஆரம்பித்தனர். 

தங்களை எதற்காக இப்படி போலீஸ் வளைக்க வேண்டும், அப்படி தாங்கள் என்ன செய்துவிட்டோம் என்று எகிற ‘அதெல்லாம் நாங்கள் கோர்ட்டில் புரடியூஸ் பண்ணிக்குவோம் . நீங்கள் ஏறுங்கள் வேனில்’ சற்குணம் மிரட்டல் தொணியில் கூறி காவவர்களை விட்டு அவர்களின் கைகளில் விலங்குகளை பூட்டச் சொல்ல கைவிலங்குடன் ஏற்றப்பட வழி விட்டு பட்டாலியன் விலக இப்பொழுது மூவரையும் நன்றாகப் பார்த்தனர் இம்மூவரும். 

பார்த்தவுடன் ஜானி “, பாஸ் … இவரா இந்தக் கூட்டத்திற்கு தலைவர் ! என்னால் நம்பவே முடியவில்லை”, பிரபுவின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். 

வந்தியனுக்கு இவர்கள் யார் என்று தொரியாததால் குழப்பமாக ஜானியைப் பார்த்து ” பிரதர் … யார் இவர்கள் இருவரும் ?” என்று கேட்க 

ஒருவர் என் சித்தப்பா பரந்தாமன் . இன்னொருவர் நம் ஏரியா தாதா சேனா பார்த்திபன் “பிரபு கண்களில் நீருடன் கூறினான். 

அத்தியாயம் 28 

மர்ம மாளிகையைக் காரணம் காட்டி எந்த மனிதர்களும் உள்ளே வரவிடாமல் செய்திருந்த மாபியாக் கும்பல் இங்கு வந்து யாரும் நம்மைப் பிடிக்க முடியாது என்கின்ற தைரியத்தில் பாதுகாப்பில் கோட்டை விட்டதால் பிரபுவின் சாமர்த்தியத்தால் சர்வதேச கேங் லீடர் வந்த சமயத்தில் அனைவரும் கூண்டோடு பிடிபட்டனர். 

முன்னாள் படை நடத்தி சென்ற சற்குணமும் பின்னால் நிற்கின்ற சீரிதரனின் வலைவிரிப்பும் பாதுகாப்பு படையினரின் பட்டாலியனின் அதிரடி நடவடிக்கையால் போதைக் கும்பல் சுற்றி வளைக்கப்பட்டது. 

ஆனால் தான் கனவிலும் நினைக்காத சித்தப்பா இந்தியாவின் நம்பர் ஒன் தலைவனாக இருக்கிறார் என்பதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஜானி தன் பாஸின் தோளைத் தொட்டு கண்களில் நீருடன் நின்றிருந்த பிரபுவைப் பார்த்து ஆறுதலாக அவன் கையைப் பிடித்துக் கொண்டான். 

தலையைக் குனிந்து நின்றிருந்த பரந்தாமன் முன்பு பிரபு வந்து நிற்க சித்தப்பா என்ற குரல் கேட்டு அதிர்ச்சியுடன் தலையை நிமிர்த்தியவர் பிரபுவைப் பார்த்ததும் அதிர்ச்சியுடன் மிரள மிரளப் பார்த்தார். 

பின் தன் நிலையை மகன் பார்த்துவிட்டானே என வெட்கித் தலை குனிய, 

“ஏன் சித்தப்பா … எதற்காக இக்காரியத்தில் இறங்கினீர்கள் .? நமக்கு என்ன சொத்துக்களுக்கு ஏதும் குறைவா … இல்லை உங்கள் பெண்டாட்டி பிள்ளைகள் நான்கு தலைமுறைக்கும் சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆவலா …! கல்யாணமே வேண்டாமென்று பிரம்மச்சாரியாய் வாழும் நீங்கள் யாருக்காக வேண்டி போதை விற்பனையில் இறங்கினீர்கள். 

இதற்காகத்தான் யாத்திரை செல்கிறேன் என எங்களிடம் கூறிவிட்டு தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தீர்களா… 

அம்மா இதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறாரோ தெரியவில்லை 

உங்களை தன் மைத்துனராகவா நினைத்தார் . தன் இன்னொரு மகனாகத் தானே நினைத்துக் கொண்டிருக்கிறார் . 

ஏன் சித்தப்பா … எதற்காக சித்தப்பா … இப்படி சர்வதேச குற்றவாளியாக மாறினீர்கள் .?” அவர் கையைப் பிடித்துக் கதறத் தொடங்கினான். 

ஏதும் கூற முடியாத நிலையில் கண்களில் நீர் வழிய பரந்தாமன் நின்றிருந்தார் . 

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சற்குணம் திகைத்தவராய் பிரபுவின் அருகில் வந்து 

“பிரபு … இவர் உங்கள் சித்தப்பாவா ….. என்னால் நம்ப முடியவில்லையே …?” எனக் கேட்க 

“எனக்குந்தான் சற்குணம் நம்ப முடியவில்லை . இவர் இப்படி ஒரு காரியம் செய்து எங்கள் குடும்பத்திற்கு இழுக்கு ஏற்படுத்துவார் என்று .” மீண்டும் கதறத் தொடங்கினான். 

அவனை ஆறுதல் படுத்த முடியாத சூழலில் 

பரந்தாமனைப் பார்த்து ” நல்ல குடும்பத்தில் பிறந்தவர் நீங்கள் . ஏன் இப்படி ஈனத் தொழிலில் ஈடுபட்டீர்கள் . என்றைக்கிருந்தாலும் இது ஆபத்தான தொழில் என்பது உங்களுக்குத் தெரியாததா …? 

பிரபுவின் பெயர் இந்த சொசைட்டியில் கிரேட் லெவலில் இருக்கிறது . அவர் புகழுக்கும் இது களங்கந்தானே…! 

ஐஅம் சாரி பிரபு! 

உங்களுக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலை வரும்னு எதிர்பார்த்து இருந்திருக்க மாட்டீங்க . என்ன செய்வது …? மனுசனை பணம் படுத்தும் பாடு அது . 

கண்டிப்பாக இங்கே இது போல் இல்லீகல் பிராசஸ் நடக்கும் என்று ஊகித்திருந்தேன். 

ஆனால் இங்கே மிகப் பெரிய நெட்வொர்க் பிசினஸ் நடக்குமேன்று நினைக்கவேயில்லை. 

அதுவும் இன்று இங்கு வந்துள்ள மிகப் பெரிய வேர்ல்டுல நம்பர் ஒன் மாபியாத் தலைவனையும் பிடிப்போம் என்று நினைக்கவேயில்லை. 

பிரபு … உங்களுக்குத்தான் மிகப் பெரிய நன்றியைக் கூறனும் . நீங்க மாளிகை பாக்கணும்னு சொன்னப்பவே ஏதோ பிளானோடத்தான் வந்திருக்கீங்க. இதப் புரிஞ்சுக்காம உங்களை நாங்க தனியா இங்க வர லெவலுக்கு விட்டுட்டோம் . வெரி சாரி பிரபு …!” என சற்குணம் கூற 

“இட்ஸ் ஒகே சற்குணம் . எனக்கும் சில டவுட்ஸ் இருந்துகிட்டே இருந்துச்சி . ஆனா இவ்வளவு பெரிய நெட்வொர்க் இங்கே நடந்துகிட்டு இருக்கும்னு கனவிலும் நினைக்கலை . சரி சற்குணம் . நாங்க கிளம்புறோம் . நீங்க உங்க பார்மாலிட்டீஸ் முடிச்சிட்டு எனக்கு சொல்லியனுப்புங்க. நாங்க வரோம் ” என்று சொல்லிவிட்டு தன் சித்தப்பா பக்கம் கூட திரும்பாமல் வெளியேறினார்கள் . 

கொஞ்ச தூரம் வந்ததும் சிரிதரன் அங்கு நின்றிருக்க பிரபுவைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டார். 

“பிரபு … நீ ஏன் இப்படி எங்கிட்ட கூட சொல்லாம இந்த ஆபத்துல வந்து மாட்டிகிட்ட . ஜானி எனக்குப் போன் போட்டுச் சொல்லவும் எனக்கு என்ன செய்யிறதுன்னே தெரியலை. 

ஆனா இவனுங்க பண்ணின இந்த ரிவர்ஸ்ரிலேவை புரிஞ்சிக்காம பேய் பிசாசுன்னு நம்பி இருந்துட்டோம்னு வெறுப்பா இருக்கு எங்க மேலேயே. உன்னால எங்க டிபார்ட்மெண்ட்டுக்கு நல்ல பேர் கிடைக்கப் போகுது . கங்கிராட்ஸ் பிரபு . உன் கிரேடும் இதனால் உயரப் போகுது .” என்று கூற 

ஜானி குறுக்கிட்டு ” சார் … நிலமை புரியாம நீங்க பாட்டுக்கு பாராட்டிக்கிட்டேப் போகாதீங்க. விசயம் தெரிஞ்சா நீங்களே ஆடிப் போயிடுவீங்க ” என்று கூற 

என்னவென்று புரியாமல் குழப்பத்துடன் சிரீதரன் “என்ன ஜானி … புதிர் போடுறீங்க … புரியும்படியாச் சொல்லுங்க ” என்று கூற 

ஜானி விவரத்தைக் கூற உண்மையிலேயே சிரீதரனும் கலங்கித்தான் போனார். 

நிசமாத்தான் சொல்றீங்களா … சித்தப்பாதானா … ?” ஏதோ ஒரு நப்பாசையில் இது அவர் இல்லை எனக் கூற மாட்டார்களா என ஏங்கியவர் போல் காணப்பட்டார் . 

பின்பு பிரபுவின் கையைப் பிடித்து சிறிது நேரம் மௌனமாக நின்றவர் விருட்டென்று கண்களைத் துடைத்தபடி அங்கிருந்து நகன்றார். 

ஜானி தாங்கள் நிறுத்தியிருந்த கார் பக்கம் வந்தவர்கள் அங்கே நின்று காட்டை சுற்றி நோட்டமிட்டனர் . 

பாஸ் … காலையில எழுந்து வந்தீங்களே … எப்படி அந்த மூணுரோடு பிரியற இடத்திலிருந்து உள்ளே வந்தீங்க…? ஏன்னா இப்பத்தானே உங்களுக்கு அங்க இருக்கிற டெக்னிகல் சமாச்சாரம் தெரிஞ்சுது ” என்று கேட்க காலையில கிளம்பி செக்போஸ்ட் வரைக்கும் வந்ததுதான் எனக்குத் தெரியும் அதுக்குப் பிறகு என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியலை .” என பிரபு கூற 

“கேப்டன் … அந்த மாளிகையைப் பாத்துட்டுப் போலாமா… ஆசையா இருக்கு பாக்கிறதுக்கு ” என்று வந்தியத்தேவன் கூற 

“ஆமாம் பாஸ் … நானும் மறந்தேப் போயிட்டேன். அங்க போனீங்களா … அந்த லேடியைப் பாத்தீங்களா … அங்க வேற ஏதாச்சும் நடந்துதா …?” வரிசையாக கேள்விகளை அடுக்கினான் ஜானி . 

அதற்கெல்லாம் எந்தப் பதிலும் கூறாது அவர்களை “காரில் ஏறுங்கள் சொல்கிறேன்” என்று கூறிவிட்டு ஏற அவர்களும் காரில் ஏறினர் . 

பிரபு வழிகாட்ட காரை வந்தியன் ஓட்டிச் சென்றான். வழியில் அவன் எதுவும் பேசாமல் இருப்பதைப் பார்த்து இருவரும் அமைதியாகவே வந்தனர். 

ஓரிடத்திற்கு வந்ததும் “இங்கதான் நிறுத்துங்க” என்று பிரபு கூற 

கண்ணுக்குத் தெரியும் வரை எந்த ஒரு கட்டிடமும் தெரியாததால் குழப்பத்துடனே இருவரும் காரிலிருந்து இறங்கினர் 

அங்கே குவியலாக கிடந்த மண்மேடாகக் காட்சியளித்த மாளிகையைக் காட்டி ‘இங்கதான் நான் மயங்கிக் கிடந்தேன். 

விழிப்பு வந்தப்புறம் பார்த்தால் மாளிகை இடிந்து கிடந்திருக்கு . சுற்றிலும் புழுதிக்காற்றில் புகை மண்டலம் போல் இந்த இடம் காட்சியளித்தது. 

ஏன் இங்கே மயங்கிக் கிடக்கிறோம் என்று நினைத்துப் பார்த்தும் எனக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை. மெல்ல எழுந்து தட்டுத் தடுமாறி நடந்து மண்மேட்டிற்கருகில் நடந்து வந்தேன் . அப்போது இருவர் பேசும் குரல் கேட்க எதற்கும் இருக்கட்டும் என்று சாக்கிரதையாக ஒளிந்து நின்று அவர்கள் பேச்சைக் கேட்டேன் . 

அவர்கள் பேசியதிலிருந்து இங்கு இருந்த இடிந்து போய் சிதிலமாகக் கிடக்கும் இந்த மாளிகைப் பக்கமே இதுவரையில் யாருமே வந்ததில்லையென்றும், அதற்குக் காரணம் இங்கு அளவுக்கு மிஞ்சி பாம்புகள் நடமாட்டம் இருந்ததாகவும் அது யாரையுமே இங்கு வரவிடாமல் தடுத்ததாகவும் பேசிக் கொண்டார்கள். 

அதுவுமில்லாமல் இன்று மதியத்தில் இந்த இடத்திலிருந்து ஏதோ சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததாகவும் பின்பு மாளிகை சரிந்து விழும் ஓசைக் கேட்டதாகவும் கூறினார்கள். 

இந்த எல்லைக்கே வர முடியாமல் இருந்தவர்கள் இன்று சுலபமாக வர முடிந்திருக்கிறது என்றும் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டார்கள். 

இவை எதுவும் எனக்துத் தெரியாததால் இதைப் பற்றி நான் தெரிந்துக் கொள்ள விரும்பவில்லை. 

ஆனால் அவர்கள் பேச்சிலிருந்து அவர்கள் ஏதோ இல்லீகல் தொழில் செய்கிறார்கள் என்பது மட்டும் புரியவே அவர்களைப் பின்பற்ற வேண்டும் எனத் தோன்றியது. 

பிறகு நடந்ததைத் தான் உங்களிடம் கூறிவிட்டேனே.. என்று பிரபு கூறவும் ‘ச்சே .. நாம வந்த நேரமா பாத்துதானா இது இடிஞ்சி விழனும் . ஆனா எனக்கு ஒரு டவுட் பாஸ் …! நீங்க மயங்கி விழக் காரணம் என்ன ? அதுவும் இங்க எப்படி வந்தீங்கன்னும் உங்களுக்குத் தெரியலை. 

இதையெல்லாம் வச்சிப் பாக்கும்போது ஏதோ ஒன்னு இங்க உங்களால நடந்திருக்கு. 

அதுக்காகத்தான் எங்களை வரவிடாமல் தடுத்து உங்களை மட்டும் வர வழைச்சிருக்கு . ஏன் பாஸ் … இப்ப உங்களுக்கு காதுல குரல் கேக்குதா …?” 

சிறிது நேரம் யோசித்தவன் “அப்படி எதுவும் தெரியலை . இன்னிக்கி இல்லை . நாளைக்கு எப்படியோ ….?” 

விட்டவரைக்கும் லாபம். விடுங்க பாஸ். நாம பழையபடி நம்ம வேலையில கான்சன்ட்ரேட் பண்ணுவோம். 

இந்த ஒரு மாசமா கேசுங்களை வாய்தா வாங்கியே காலத்தை தள்ளிட்டோம் ” 

“ஒகே … இனிமே நம்ம வாழ்க்கையை ஆரம்பிப்போம். நிலா எப்படி இருக்கிறாளோ இந்த ரெண்டு நாளா … போன் கூட பண்ணலை நான் ” 

“பாஸ் … நான் பேசிட்டேன் நிலாகிட்ட . நாங்க வந்த கேசு முடிஞ்சிடுத்து . நாளைக்கு வந்துடுவோம்னு சொல்லிட்டேன் . அதனால பயமில்லாம நாம் போகலாம் ” 

மறுநாள் பேப்பர்களில் ஊடகங்களில் எல்லாம் தலைப்புச் செய்தியே மாபியா கும்பலின் கைதும் அதற்கு காரணமான பிரபுவின் பெயருமே அடிபட்டுக் கொண்டிருந்தது. 

பிரபுவின் ஆபிசில் ஆட்கள் வருவதும் வாழ்த்து சொல்வதும் போவதுமாக இருக்க வீட்டில் அவன் அம்மா அவனின் அப்பா படத்தின் முன் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தார் . 

பிரபுவினால் ஆன மட்டும் ஆறுதல் படுத்தி பார்த்தும் அவரின் சோகம் தீரவில்லை . 

அதற்குள் சேதி தெரிந்து உறவினர்களின் படையெடுப்பால் பிரபு ஆபிசுக்கு வந்துவிட, 

ஆபிசில் வருகிறவர்களுக்கெல்லாம் பதில் சொல்லக்கூடிய நிலையில் ஜானியும் வந்தியனும் தடுமாறிக் கொண்டிருந்தனர் . 

“ஏம்ப்பா வந்தியா … இந்த பாஸ் எங்கதான் போனாரு வந்தவங்களுக்கெல்லாம் பதில் சொல்லியே வாய் வலிக்குது . 

எங்கதான் போயிட்டார்…?” 

“பிரதர் கவனிச்சீங்களா …. நிலாவையும் கொஞ்ச நேரமா காணலை . இதுலேயிருந்து என்ன தெரியுது …?” 

“இங்க என்ன க்விஸ் போட்டியா நடக்குது . கொஸ்டீன் கேக்குறே …? 

அவர் மட்டும் ரொமான்ஸ் பண்ண போயிட்டாரா …? நானுந்தான் ஓரு மாசமா எந்தப் பிகரையும் பிக்கப் பண்ணாம காஞ்சிப் போய் கிடக்கிறேன் . 

நானும் கிளம்புறேன் . நீ இருந்து இங்கப் பாத்துக்க …” 

“என்னா பிரதர் … டினா அண்ணிக்கு போன் போடவா . அவங்ககிட்ட பர்மிசன் வாங்கிகிட்டு நீங்க பஸ்ஸ்டாண்டு பஸ்ஸ்டாண்டா போங்க. யாரும் தடுக்கலை” 

வந்தியத்தேவன் இவ்வாறு கூறியதும் ” ச்சே … என் மூடையே டினா பேரைச் சொல்லி ஸ்பாயில் பண்ணிட்டே . என்னோட சாபம் சும்மா விடாது உன்னை. 

நீயும் டினா போல பொண்டாட்டியைக் கட்டிகிட்டு அவஸ்தைப்படு .” என்று கூறி முடிக்கையில் 

” என்ன … என் பெயர் ஸ்லோகம் போல வரது . என் மேல அவ்வளவு பாசமா உங்களுக்கு…?” என்று கேட்டுக் கொண்டே ஆங்கிலோ இந்தியப் பெண்மணி போல் கவுன் அணிந்து வந்திருந்த ஜானியின் மனைவி டினா உள்ளே வர அவளைப் பார்த்ததும் திடுக்கிட்ட ஜானி 

“நீயா…இங்க…ஏன் … எப்படி ?” வாய் குளறி பேச 

அதைப் பார்த்த வந்தியன் அவனைப் பார்த்து “சொல்லட்டா பிரதர் …!” என்று கூற 

” ஏய் … என்ன …?” என்று கண்களால் வேண்டாமென்று ஜாடைக் காட்ட 

“என்ன வந்தியா … என்ன வேண்டாம்னு உங்க பிரதர் சொல்றார்”, என்று ஆங்கிலம் கலந்த தமிழில் வினவ “அது ஒன்னுமில்லை அண்ணி …! பிரதர் இந்த ஒரு மாசமா உங்களைச் சரியாவே கவனிக்கலையாம். வருத்தப்பட்டு நான் இன்னிக்கி சீக்கிரமா வீட்டுக்குப் போயி உங்களை வெளியில அழைச்சிக்கிட்டுப் போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. 

அப்ப பாத்து கரெக்டா நீங்க என்ட்ராவுரீங்க . என்ன ஓரு டைமிங் . சூப்பர் காம்பினேசன் நீங்க .” 

வந்தியன் சொல்லி முடிக்க அப்பாடா என மூச்சை விட்டு நன்றியோடுப் பார்த்தான் வந்தியனை ஜானி. 

‘ஓ … மை ஸ்வீட் டார்லிங்…!, இவ்வளவு லவ்வா என் மேல உங்களுக்கு. ஓ … ஐ ஈம் சாரி …! ஆக்சுவலா நான் உங்க மேல ரொம்ப ஆங்ரியாத்தான் வந்தேன் . 

பட் நீங்க என்னை சர்ப்ரைஸ் பண்ணிட்டீங்க . ஐ அம் சோ கிளாட் ” என்று கூறியவாறு அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள் . 

பரிதாபமாக வந்தியனை ஜானிப் பார்க்க வாயில் கர்சீப்பை வைத்து மூடியபடி சிரித்துக் கொண்டே வெளியேச் சென்று விட்டான் வந்தியத்தேவன். 

காபி ஷாப் ஒன்றில் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பிரபுவும் நிலாவும் காபி ஆறியபடி இருக்க ஓருவரை ஒருவர் பார்த்தபடியே அமர்ந்திருக்க மெல்ல நிலா பேச ஆரம்பித்தாள். 

” பிரபு … நிசமாலுமே அங்க ஏன்ன நடந்துதுன்னு உங்களுக்குத் தெரியலையா …? அப்ப இனிமே நீங்க பிரச்சினையிலிருந்து விடுபட்டு விட்டீங்களா …?”, 

அவன் கையோடு தன் கையை இணைத்து வைத்திருந்தவள் மெல்ல அழுத்தம் கொடுக்க 

“இனிமே நமக்கு நல்ல காலந்தான் நிலா . எதுவும் நடக்காதுங்கிற நம்பிக்கை இருக்கு . 

சரி சொல்லு … நாம நம்ம வீட்டுங்கள்ள பேசி சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாமா … 

இல்லை … கொஞ்ச நாள் காதலிச்சிட்டு கல்யாணம் பண்ணிக்கலாமா …? என்ன செய்யலாம் சொல்லு …?” என்று கேட்க, 

“ம் … எனக்கு எதுவும் சொல்லத் தெரியலை . நீங்க என்ன சொல்றீங்களோ அப்படியே செய்யலாம் . ஆனா லவ் பண்றதுக்கு நீங்க யோசிக்க கூடாது … புரியுதா …!” 

“என் செல்லத்தை லவ் பண்ண எனக்கு கசக்குமா என்ன . நீ கவலைப்படாதே கண்ணம்மா . நான் என் உயிர் உள்ள வரையில் உன்னை லவ் பண்ணிக்கிட்டே இருப்பேன்” 

பிரபு கூறிக் கொண்டிருக்கும் போதே 

“நீங்க லவ் பண்ணுவீங்க . ஆனா இதை யாரு பாத்துக்கிட்டு இருக்கிறது . எங்களுக்கு வேற வேலையே இல்லியா”, என்று 

கிராஸ்டாக் போல பேச்சுக் கேட்க நிமிர்ந்து பார்த்தவர்கள் அங்கே ஜானி, வந்தியத்தேவன் நின்றிருப்பதைப் பார்த்து, 

“ஹேய்… நீங்க எங்க இங்க சிவ பூஜையில கரடிபோல கொஞ்ச நேரம் தனியா விடமாட்டீங்களே …?” 

அலுத்துக் கொள்வது போல் நடித்த பிரபுவைப் பார்த்து, 

“பாஸ் … நீங்க எவ்வளவு நேரமானாலும் ரொமான்ஸ் பண்ணிக்குங்க. சற்குணம் இன்னும் கொஞ்ச நேரத்துல ஆபிசுக்கு வரதாச் சொல்லியிருக்கார் . அதைச் சொல்றதுக்குத்தான் வந்தோம். மத்தபடி உங்களை நாங்க ஏன் டிஸ்டர்ப் பண்ணப்போறோம். 

எங்களுக்கும் ஆள் இருக்கு. நாங்களும் ரொமான்ஸ் பண்ணுவோம்ல …”, ஜானியின் பேச்சைக் கேட்டு சிரித்தவர்கள் 

“ஏய் … நீ பாட்டுக்கு நாங்க நாங்கன்னு வாய்க்கு வாய் சொல்றியே …? பாவம் சின்னப்பையன் கூட இருக்கிறான் . அவனையும் சேர்த்துப் பேசறே …?” 

பிரபுவின் கிண்டலுக்கு ஜானி. 

“பாஸ் … அவனும் சிங்கிளா இருக்கக் கூடாதுன்னுதான் நம்ம ஆபிசுக்கு இன்னுமொரு ஜூனியர் தேவைன்னு நம்ம வெப்சைட்ல விளம்பரம் குடுத்திட்டு வந்திருக்கேன் . உங்களுக்கு ஒன்னும் அப்ஜெக்ஷன் இல்லியே …?”, என்று கூறவும் 

“அடப்பாவி …!” என பிரபுவும் நிலாவும் அலற,

அங்கிருந்து சிரித்துக் கொண்டே அகன்றனர் இருவரும்.

எதிர்புறமாக கண்ணீருடன் இவர்களையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் மாதங்கி. 

-முற்றும்-

– உள்ளே வராதே (திகில் நாவல்), துப்பறியும் செவென் ஸ்டார் சீரீஸ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *