தோழமை என்பது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 2, 2026
பார்வையிட்டோர்: 89 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சதீஷ்! இவர்தான் மிஸ்டர் ராயர். இந்தக் கம்பெனியின் தூண்களில் ஒருவர் என்று அறிந்துகொள்ளுங்கள். என் அப்பா காலத்தில் வந்தார். முப்பத்தெட்டு வருஷங்களாக இந்த ஸ்தாபனத் துக்காக உழைத்திருக்கிறார். அதனால், களைத்தும் இருக்கிறார். இவர் உதவிக்காகத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். ராயரின் சுமையைச் சரி பாதியாக நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். மிஸ்டர் ராயர், உங்களுக்கு நிகரான பதவியில் இந்த இளைஞர் சதீஷை நியமனம் செய்திருக்கிறேன். இவருக்கு நம் வியாபார விஷயங்களை விளக்குங்கள். நீங்கள் ஓய்வு பெற்றால், உங்கள் இடத்தில் இருந்து பணி செய்யப் போகிறவர் சதீஷ். அதற்குத் தக இவரைத் தயாரிக்க வேண்டியது உங்கள் கடமை. சரிதானா?” என்றார், தமிழகத் தலைநகரில், இதயம் போன்று இருப்பதான மலைச் சாலையில், பன்னிரண்டு அடுக்குச் சொந்தக் கட்டடத்தில், ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் வரவு செலவு செய்யும் ஸ்தாபனத்தின் எம்.டி… கிருஷ்ணகுமார்! 

ராயர் எழுந்து நின்று தன் முதலாளியைப் பார்த்துப் பணிவாக, “ஹோ… ஷ்யூர்” என்றவர், சதீஷின் கைகளைப் பற்றிக்கொண்டு, “உங்களுக்கு நல்வரவு” என்றார். கிருஷ்ணகுமார் நகர்ந்து வெளியே சென்றதும், “உட்கார்ந்து கொள்ளுங்கள் மிஸ்டர் சதீஷ்” என்றும் உபசரித்தார். 

சதீஷ், ராயரின் முன் அமர்ந்தான். சலவை வேஷ்டி மாதிரி இருந்தது ராயரின் சற்றே மிகுந்திருந்த தலை முடியும். மீசையும். ஒரு சின்ன தண்ணீர்க் குடத்தைச் சட்டைக்குள் வைத்து மூடி வைத்தாற் போன்ற வயிறும், வீங்கிய கண்களுமாய் இருந்தார். 

“உங்களுக்கு என்ன வயசு மிஸ்டர் சதீஷ்” என்றார் ராயர். 

“இருபத்து ஏழு சார்…”

“எனக்கு ஐம்பத்து எட்டு. சரியாக என் இருபது வயசில், இந்த ஸ்தாபனத்தில் நுழைந்தேன். கல்யாணம் பண்ணிக் கொண்டேன். மூன்று பெண்களைப் பெற்றேன். படிக்க வைத்தேன். நல்ல இடமாகப் பார்த்துக் கட்டிக் கொடுத்தேன். பேரன், பேத்திகள் எடுத்தேன். எம்.டி. சொன்னதும் தான் தெரிகிறது, எனக்கும் ஓலை கிழியப் போகும் நேரம் வந்துவிட்டதென்று. துளிர்கள் வந்தால், சருகுகள் கழண்டு விழ வேண்டியது நியாயம்தானே…” என்றார், கசப்பும், நிராதரவும் தொனிக்கும் குரலில். 

ஒரு வயதான மனிதர், சந்தித்த சில நிமிஷங்களுக்குள் தன்னிடம் இவ்வாறு பேசியது மிகச் சங்கடமாக இருந்தது சதீஷுக்கு. “நீங்கள் அப்படியெல்லாம் நினைக்க வேண்டிய அவசியம் இல்லை.” 

“நான் எப்படியெல்லாம் நினைப்பதாக நீங்கள் தெரிந்து கொண்டீர்கள்?” 

“அதாவது, நான் வந்துவிட்டதால், உங்கள் உத்தியோகத்துல பழுது வந்துவிடும் என்று நினைப்பதாகத் தெரிகிறது. அது தேவை யில்லை என்று சொல்ல வந்தேன். இந்த ஸ்தாபனம் உங்களை வேலையை விட்டு அனுப்பாது. நீங்களே விரும்பிப் போகாத வரை.” 

“எப்படிச் சொல்கிறீர்கள்?” 

“பழம் பெரும் ஸ்தாபனங்கள் சில நியதிகளை வைத்திருக்கும். அவற்றை அவை பொதுவாக மீறுவதில்லை. அது மாத்திரமில்லாமல், எம்.டி. தங்களை எனக்கு அறிமுகப்படுத்துகையில், தங்கள் மேல் அவருக்கு இருந்த ஈடுபாடும் புரிந்தது. மேலும், என்னைத் தங்களுக்கு அவர் அறிமுகப்படுத்தினார் என்பதைக் காட்டிலும், தாங்கள் யார், தங்கள் தகுதி என்ன, நான் எவ்வாறு தங்களுடன் பழக வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்பதை எனக்கு விளக்கினார் என்றே நான் எடுத்துக் கொண்டேன்…” 

ராயர், சதீஷைப் பார்த்துப் புன்னகைத்து, “நீங்கள் புத்திசாலி” என்றார். 

மிகப் பெரும் நிறுவனத்தில் சதீஷுக்குப் பணி கிடைத்ததில் அவன் நண்பர்களுக்கு மகிழ்ச்சி. அவனுக்கும் தான். அதை அவன் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். கொள்வதென்றால், அந்த நிறுவனத்துக்கு அவன் அத்தியாவசியமானவன் என்பதை அதன் முதலாளி உணரும்படிச் செய்யவேண்டும். அதனினும் முக்கிய மானது, அவனுக்கு உத்தியோக பூர்வமாகச் சமமானவர் தான் எனினும், தன்னிலும் பல்லாண்டுகள் அநுபவம் கொண்டவராகிய ராயரின் அன்பையும் ஆதரவையும் சம்பாதிக்க வேண்டும் என்பதை உணர்ந்தான். ஏனெனில், இரண்டு ஊழியர்களுக்குள் பிணக்கு ஏற்படுகையில், நிர்வாகம் திறமைசாலிகளை அல்ல, மிக நீண்ட காலம் தன் நிறுவனத்துக்கு உழைத்தவரையே சார்ந்தும், ஆதரித்தும் நிற்கும் என்கிற பால பாடத்தையும் அவன் நன்கு அறிவான். 

பழைமையின்மீது மனிதர்க்கு எப்போதும் மரியாதை. இது ஆயிரம் வருஷத்துக் கல் என்றால், மனிதர் அதைக் கும்பிடவும் தயார். அந்த நிறுவனம் ஏழாவது மாடியில் இயங்கியது. சினிமா தியேட்டர்களுக்கே உரிய, பரந்த அகலமான அதன் வாயிலில் இருந்தே, இரண்டு அங்குலம் பருமனான கார்பெட் விரிப்பு தொடங்கி விடுகிறது. இளம் பச்சை வண்ணத்தில் திண்டு திண்டான சோபாக்கள், காற்றில் பரவிய சுகந்த மணம், சலவை செய்யப்பட்ட துணி மாதிரி மனிதர்கள் நிறைந்த அந்த நிறுவனத்தில், ராயர் போன்றவர்களும் ஓர் அலங்காரப் பொருள்தான். “எங்கள் நிறுவனத் தின் மிகப் பழைய ஊழியர்” என்று ராயர் போன்றவர்களைத் தன் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, எம்.டி. மகிழ்ந்துகொள்ள ஒரு சரித்திர நினைவுச் சின்னம். ராயர், வளர்ந்து வரும் வியாபார புது உத்திகளுக்கேற்ப சிந்திக்கக் கூடியவர் அல்லர் என்பதை நிறுவனம் அறியும். எனினும் ராயர்களும் அதற்கு வேண்டும்தான். 

ஆகவே, சதீஷ் மிகக் கூர்மையாக, விழிப்பாகச் செயல்பட வேண்டியிருந்தது. 

“நம் எம்.டி. இப்படிச் செய்திருக்கக் கூடாது..” என்றார், ராயர் சதீஷிடம். 

“எதைச் சொல்கிறீர்கள்?” 

“திடுதிப்பென்று நமக்குச் சம்பந்தமில்லாத, இந்த சைக்கிள் டயர் விற்பனைப் பொறுப்பை எதற்கு எடுத்துக் கொள்வது? நாம் உணவுப் பொருள்களை விற்பவர்கள். நமக்கு என்னத்துக்கு டயரும் டியூபும்? இது மார்க்கெட் பிடிக்க எவ்வளவு காலம் ஆகும்? இதனால் நமக்கு ஏற்பட இருக்கும் பொருள் நஷ்டம்? அனுபவம் இல்லாதவராக இருக்கிறார். இவர் அப்பா இப்படியெல்லாம் செய்வதில்லை, எப்போதும் என்னைக் கலந்து ஆலோசித்துதான் செய்வார்…” 

ராயரின் ஆதங்கம் சதீஷுக்குப் புரிந்தது. அவர் கவலை, தெரியாத துறையில் எம்.டி.க்கு ஏற்படும் நஷ்டம் இல்லை. தான் கலக்கப்படாமல் அவர் முடிவெடுத்ததே என்பதை சதீஷ் உணர்ந்தான். 

“தெரிந்தோ, தெரியாமலோ எடுத்துவிட்டார். அனுபவம் மிக்கத் தங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையாலே தான் சார்! சிந்திப்போம். கடுமையாக உழைப்போம். வெற்றி நம் கதவைத் தட்டாமலா போய்விடும்?” 

“உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?” 

“இருக்கிறது.” 

“நீ பொறுப்பை எடுத்துக் கொள்கிறாயா?”

“எடுத்துக் கொள்கிறேன், சார்.”

“விஷ் யூ ஆல் தி பெஸ்ட்.” 

“மிக்க நன்றி சார்.” 

சதீஷ் மகிழ்ந்தான். தனக்குச் சுயேச்சையாக பொறுப்பளிக்கப் பட்டிருக்கிறது. என்பதனால் மட்டும் அல்ல! ராயருக்குத் தன்மேல் ஏற்பட்டுள்ள நம்பிக்கைகாக மற்றும் நெருக்கத்துக்காக. நெருக்கத்தின் அடையாளமாகத்தானே, தன்னை நீங்கள் என்பவர் நீ என்றது? 

“என்ன சொல்கிறார், ராயர்? இந்த என் முயற்சி முட்டாள் தனம் என்கிறாரா?” என்றார் எம்.டி. 

“அப்படிச் சொல்லவில்லை சார். மார்க்கெட் பிடிப்பது சற்று சிரமமாக இருக்கும் என்கிறார்.” 

“அதனால்தான் டயர் ஃபைலை உங்களிடம் தள்ளி விட்டாரா?” “அவரும் மிகுந்த உதவியாகத்தான் இருக்கிறார், சார்?” “உதவியாகவா?” என்றார் எம்.டி. ஆச்சர்யத்துடன். தொடர்ந்து, “உங்களை அவர் ஏற்றுக்கொண்டார் என்று சொல்லுங்கள்” என்றார். 

“நிச்சயமாய்.” 

“எனக்குக் கவலை விட்டது. ராயர் முரண்டு பிடிப்பார் என்று எதிர்பார்த்தேன். தனி ஒருவராக அதிகாரம் செலுத்தியவர். பங்கு கொள்ள வந்திருக்கும் உங்களை ஏற்பாரோ என்று சந்தேகித்தேன்.” 

“எங்களுக்குள் ஒரு பிரச்சினையும் இல்லை சார்…” 

“நல்லது. நிறுவனத்துக்கு அறிவு பூர்வமாக அவரால் ஒரு உதவியும் இல்லை. புதுமையாகச் சிந்திக்க அவரால் முடியவில்லை. நீங்கள்தான் அந்த வகையில் அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும்.” 

“அப்படியும் இல்லை, சார். டயர் விளம்பரம் குறித்த அந்த முக்கிய அம்சத்தைச் சொன்னவர் அவர்தான்.” 

“எதைச் சொல்கிறீர்கள்?” 

“நம் இந்திய கிராமத்து இளைஞர்கள், சைக்கிளை ஒரு சிறு லாரியைப் போல, பொருள்களைச் சுமந்து செல்லவும், ‘டபிள்ஸ்’ ஏற்றிக்கொண்டு பக்கத்து ஊருக்குப் போகவும் தான் பயன்படுத்து கிறார்கள் என்கிற அம்சத்தைச் சொன்னவர் அவர்தான். அதன் அடிப்படையில் தான், ‘எவ்வளவு கனத்தையும் தாங்கும் டயர் இது’ என்று விளம்பரம் கொடுத்தோம். ‘மார்க்கட்’டையும் பிடித்தோம்.” 

“ரியலி?” 

“ஆம்… சார்.” 

“ராயர் இன்னும் அணைந்து போகாமல் தான் இருக்கிறார் என்று சொல்லுங்கள்” என்றார், எம்.டி. மகிழ்ச்சியுடன். 

எம்.டி. அறையிலிருந்து திரும்பிய சதீஷைப் பிடித்துக் கொண்டார், ராயர். 

“என்ன சொல்றார்?” 

“சும்மா, விற்பனைப் புள்ளிகளைப் பார்வையிட்டார்.”

“வேறே ஒண்ணும் சொல்லலையா?” 

“இல்லையே சார்.” 

“பார். இதுவே, இவன் அப்பனாக இருந்தால், உன்னைத் தலைக்கு மேல் தூக்கி உக்கார்த்தி வச்சுக்குவான் இந்த நேரம் புது வியாபாரம். ஆறே மாசத்துல டயர் சக்கை போடு போடுது. வாயைத் திறந்து உன்னை அவன் பாராட்ட வேண்டுமா? வேண்டாமா? சுத்த சின்னப் பயல்.” 

ராயர் சொல்லி முடிக்குமுன் எம்.டி.யின் அட்டெண்டர் தோன்றி, எம்.டி. ராயரை அழைப்பதாக அறிவித்தான். 


கடற்கரையைப் பார்த்திருக்கும் ஹோட்டலில் அமர்ந்தி ருந்தார்கள் ராயரும் சதீஷும், மொட்டை மாடிப் பூங்காவையும், மங்கிய வெளிச்சத்தையும், சற்றே மென்மையுடன் மிதந்து வரும் சங்கீதத்தையும் ரசித்தவாறு இருந்தான் சதீஷ். ராயர், கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கடலையே பார்த்துக் கொண்டிருந்தார், திடுமென சதீஷைப் பார்த்துச் சொன்னார். 

“என்னை இப்படி சின்னப் பையனா, அடிச்சுட்டியே சதீஷ். ஐம்பத்தொன்பது கிழவனை, உனக்கு முன்னாலே அரை டவுசர் பையனா, குறுக வச்சுட்டையே…” 

“என்ன ஸார் சொல்றீங்க?” 

“அதுதான், எம்.டி. கிட்டே, உன் யோசனைகளை யெல்லாம், உன் உழைப்பையெல்லாம் எம் மேலே போட்டுட்டு, உன் கழுத்துக்கு வர்ற மாலைய என் தோளுக்கு மாத்தினியே, அதைத்தான் சொல்றேன்…” 

“ஏன், நீங்களும்தானே எனக்கு ‘ஹெல்ப்’ பண்ணீங்க?” 

“எப்படி வந்ததுப்பா, உனக்கு இந்தப் பெரிய மனசு? எங்கே படிச்ச இதை? ஒவ்வொருத்தனும் யார், யாருடையதையோ தன்னோடதுன்னு சொல்லிட்டுக் கிரீடம்’ சூட்டிக்கிட்டு திரியறான். நீ என்னடான்னா. எப்படி எப்படி, இது பண்ணனும்னு தோணிச்சு.. இந்தக் கெழவனுக்குக் கடைசி காலத்திலே ஒரு மரியாதையைத் தேடிக் கொடுத்திட்டையே…” 

“சும்மா இருங்க சார்… என்ன சாப்பிடலாமா?” 

“இன்னைக்கு என் செலவுதான். ஸ்வீட், காரம், காபி எல்லாம். பில்லைக் கொடுப்பேன். என்றாயோ, உதைதான் வாங்குவே..” 

“என்னை உதைக்கலாம் சார். பெரியவர் உதைத்தால், பெருமாள் உதைத்தது மாதிரியில்லையா?” 

ராயர் சிரிக்கும் பெருஞ் சத்தத்தைக் கேட்டு, பக்கத்து மேசையில் இருந்தவர்கள் எல்லாம் திரும்பிப் பார்த்தார்கள். 

– 1987

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

பிரபஞ்சன் பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *