தெய்வசிகாமணி
கதையாசிரியர்: மு.வீ.சங்கமுத்துப்பிள்ளை
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 29, 2026
பார்வையிட்டோர்: 258
(1924ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அதிகாரம் 4-6 | அதிகாரம் 7-9 | அதிகாரம் 10-12
ஏழாம் அதிகாரம்

தங்கச்சாமிபிள்ளை விவகாரம் எப்படியும் நடக்கட்டும் சாமிநாதபிள்ளை என்ன செய்கிறாரென்று கவனிப்போம். ஒரு நாட் பகல் இரண்டுமணிக்கு மஹாபலேசுரர் கோவிலை நாடிப் போகிறார் அவருடைய முகத்தில் ஆழ்ந்த ஆலோசனைக் குறியும் ஒரு பெருங் காரியத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பதான கம்பீரநடையும் தோன்றுகிறது,.சோமசுந்தரம்பிள்ளையைப் பார்க்கக் கோவிலுக்குள் நுழைந்தார். அங்கே ஒரு சாமியார் நிற்கிறார். சோமசுந்தரம்பிள்ளை நிஷ்டை கலைந்து எழுந்தவுடனே ஏதோ ஒரு முக்யமான காரியத்தைப் பற்றிப் பேசவந்திருப்பது போல் அவர் பார்வையும் நிலையும் பகுத்துக் காட்டிற்று கோவிலுக்குட் பிரவேசித்த சாமிநாதபிள்ளை மிராசுப்பிள்ளையை நெருங்கினார். சாமியாரைக் கண்டதும் இவரை அப்புரப்படுத்தி விட்டன்றோ நாம் தனியாக்கண்டு பேசவேண்டியிருக்கிறது எனக்கருதி.
சாமிநாதபிள்ளை அடியேன் நமஸ்கரரம் சுவாமிகள் எவ்விட மிருந்து எழுந்தருளியாயிற்று.
சாமியார்:- அடுமை திருவாளூரிலிருந்து வருது.
சா பி:- அப்படியா, அவ்வூரில் சுந்தரமூர்த்தி சுவாமிகளது திருத்தேவி பரவை நாச்சியாருடைய வம்ஸம் இன்னமும் இருக்கிறதாகச் சொல்லுகிறார்களே தங்களுக்குத் தெரியுமா?
சாமி:- அடுமை முத்திரி வாங்கின போது கூட முத்திரிவாங்கினது ஒரு அடியாரு அதையுஞ் சுந்தரமூர்த்தியிண்ணு தான் சொல்லுகிறது. அவருக்கு முந்தி விட்டபேரு இசக்கியாபிள்ளையாம். அதொடைய தேவி சீகுண்ட மிண்ணல் லா கேள்வி.
சா பி:- சரி, சரி. நீர் என்ன திருமேனி.
சாமி:- இப்பம் ஒருமாதம் உடலுக்குக் கொணமில்லாமே இருந்தேன். இல்லையிண்ணா திருமேனி கண் கொண்டு பாக்க முடியுமா.
சா பி – இதென்னடா சனியன் நாம் வந்த அவசரமும், இந்தப் பரமயோகி எதிர்பட்டுக்கொண்டு பிராணனை வதைக்கிறதும் ஒன்றும் சரியாயில்லையே நீர் என்னஜாதி?
சாமி: அடிமை பிள்ளைமார்
சா பி:- அப்படியல்லவா கேட்டிருக்க வேண்டும், நீர் எந்தவூர்?
சாமி:- அய்பாவுக்கு அடிமையைத்தெரிஞ் சிருக்குமிண்ணுல்லா இருக்கேன்
சா பி:- உம்மை எனக்கெப்படித் தெரியும் நீர் என்னை எப்போதாவதுங் கண்டிருக்கிறீரா?
சாமி:- அப்பாவை அடிமை சிறுபிள்ளைமுதல் கண்டிருக்கிறேன் அய்யாவுக்கும் நான் நல்லாத்தெரியும் இப்போ யாவுகப்பிசகா இருக்கும்போலே தோணுது.
சா பி:- இதென்ன பெருந்தொல்லை, கேட்கிற கேள்விக்குப் பதிலைக் காணோம் என்னென்னமோ விஸ்தரிக்கிறான் எந்தவூர் சாமி யாரே?
சாமி:- அடிபார்களை ஊரும் பேரும் விசாரிக்கப் படாதிண்ணு என்னுடைய குருவுக்கு ஒரு பெரியவர் சொன்னாராம் அது ஒங்களுக்குத்தான் ஆகாதாம்.
சா பி:- அது சரிதான் காணும் சாமிகளே உம்முடைய ஊரைச் சொல்லும்.
சாமி:- அடியேன் இந்தவூர் தான். பிள்ளையவா வீட்டிலே தவசிப் பிள்ளையா இருக்கலைபா, கணபதியில்லா. என்னா ஐயா இவ்ளவு யாவுகமில்லாமே அபத்திட்டியளே.
இந்த வார்த்தையைக் கேட்டதும் சாமிநாதபிள்ளை நிதானித்துப் பார்த்து ஆச்சரியமும் ஆனந்தமு முடையவராய் “அப்பா கணபதி இவ்வளவு காலம் எங்கே போயிருந்தாய்? என்ன காரணத்திற்காக இப்படிப் பரதேசி வேடங்கொண்டிருக்கிறாய்? இக்கோலங்கொண்டு எவ்வளவு நாளாயிற்று? உன் வீட்டாருக்கு நீ வந்திருப்பது தெரியுமா?” என்றார்.
சாமியார்:- சற்றுநேரம் முகவாட்டத்துடனின்று தங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறேன். ஆதியில் நான் புத்திக்குறைவாகச் செய்த குற்றத்தை மன்னிக்க வேணும். பிள்ளையவா வீட்டிலே சிறுபிள்ளை முதல் உண்ணு திண்ணு வளர்ந்துவிட்டு அவாளுக்கே கேடு நினைச்ச பாதகன். நான் அந்தச்சண்டாளப் பாவி பூமிநாதபிள்ளை பெரும் பணந் தருவதாக என்னையே மாற்றி என் புத்தியைக் கெடுத்து விட்டார். இப்பவும் பிள்ளையவா, குழந்தையைப் பிரிந்த துக்கத்தினாலே சாமியாராகப் போய் விட்டதாகத் திருவாளூருக்கு வந்த ஒரு சாமியார் சொன்னார். எனக்கு ரெம்ப மனவருத்தமா யிருந்தது. இனி மேலாவது நாம் உண்மையைச் சொல்லி விட்டால் அதற்குரிய காரியத்தைச் செய்து கொள்வார்களென்று நினைத்துத் தான் வந்தேன் என்றார்.
இதற்குட் சோமசுந்தரம்பிள்ளை நிஷ்டை கலந்து சாமியாரைப் பார்த்து வரணும் என்றார், சாமிநாதபிள்ளை மிராசுப்பிள்ளையின் சமீபத்தில் உட்காந்து கொண்டு சாமியார் வரலாற்றைத் தவறாமற் சொன்னார். அவர் எல்லாஞ் சிவன் செயலே என்றார். கணபதிச்சாமியார் இருந்து கொண்டு சாமிாதபிள்ளை முகத்தைப் பார்த்துச் சொல்லத் தொடங்கினார்.
பிள்ளையவாள் திருச்செந்தூருக்குப் போய் வந்த வருஷம் புத்தூரிலிருந்து பூமிநாதபிள்ளை தன் மகளுக்குப் பொங்கப்பொடி கொடுக்க நம்முடைய ஊருக்கு வந்திருந்தார். சங்கிராந்திக்கு மறுநாள் பூமிநாதபிள்ளை, சின்னப்பிள்ளையவாள், காமாக்ஷியம்மாள் மூன்று பேரும் மேல் வீட்டில் என்னைத் தனித்துக் கூட்டிவைத்துக் கொண்டு தெய்வசிகாமணியை எப்படியாவது கொன்று விட்டால் முந்நாறு ரூபா கொடுக்கிறதாச் சொன்னார்கள் கொலை செய்ய நான் சம்மதிக்க மாட்டேன் என்றேன். அப்படியானால் நாங்கள் சொல்லுகிற மனிதனிடம் ஒருவருக்குந் தெரியாமல் குழந்தையைத் தூக்கிக்கொடுத்து விடவேண்டுமென்று கேட்டராகள். அதற்கு நான் சரியென்று சம்மதித்தேன் வெகுநாளைக்குப் பிறகு, திருச்செந்தூருக்கு ஐயா புறப்பட்டார்கள். அந்தச்சமயம் ஒருவனை என்னிடங் கொண்டு வந்து காட்டி அவன் வசம் ஒப்பிக்கச் சொன்னார்கள். அப்படியே அவனும் என்னைத் தொடர்ந்தே வந்தான். இனிச்சொல்லிக் காரியமென்ன. விசாகத் தன்றைக்கே அந்தப் புது மனுஷன் கையிலே பிள்ளையைத்தூக்கிக் கொடுத்துவிட்டு நாலு நாழிகைக்குப் பிறகு யாரோ ஒருவன், கையைத் திருகிப் பிள்ளையைப் பிடுங்கிக் கொண்டு போகிறானே, என்று சத்தமிட்டேன். உடனே பெருங்கூட்டங் கூடி விட்டது போலீஸ்காரரும் வந்து புகுந்து கொண்டார்கள். யாருடைய குழந்தை? எப்படிக் காணாமற் போயிற்று. என்ன நகை போடப்பட்டிருந்தது? எத்தனை வயஸு ஆணா? பெண்ணா? பெற்றோட்களுக்கு விரோதிகளுண்டா? அவர்கள் பெயரென்ன? ஊரெது? என்று, வீண் ஆடம்பரமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந் தார்களேயன்றி அந்நேரமே தேட முயற்சி பண்ணவில்லை. ஓடியாடிப்பார்த்தால் கிடைத்திருக்குமே. அப்பால் பதினைந்து நாட் கழித்துப் பாப்பையாபுரம் வந்து சேர்ந்தோம். அதுமுதல் மூன்று மாதம் வரை எனக்குப் பேசின தொகை கொடுக்கவில்லை. சொச்சத்தையும் சொல்லிப் போடுகிறேன். பிறகு ஒருநாள் இரவு முன்னாலே கூடின பாவிகளும் நானும் பிள்ளையவாள் படுக்கை வீட்டுக்கு மேல்புறமிருக்கிற திண்ணையில் சந்தித்தோம். எனக்குப்பணங் கொடுக்க வேண்டிய விஷயத்தில் ஆரம்பத்திற் கொஞ்சம் ஆடங்கம் பண்ணினார்கள். நான் தங்களிடம் வெளிப்படுத்தி விடுவதாகச் சொன்னதன் பேரில், பணத்தைக் கொடுத்தார்கள்.
நான் மடியிலே பணத்தைக் கட்டிக்கொண்டு தூக்கம் பிடியாமல் முகப்புத் திண்ணையிற் படுத்திருந்தேன். அந்தச்சமயம், தாங்கள் பிள்ளையவாள் படுக்கை வீட்டுக்குள்ளிருந்து வெளியேறிப் போனீர்கள், அது மற்றவர்களுக்குத் தெரியாது நான் மாத்திரங் கண்டேன். எனக்குப் பெருந்திகிலுண்டாய் விட்டது. என்ன ஆபத்து வருமோ என்று பயந்து கொண்டே என் வீட்டுக்குப்போய் பணத்தைப் பத்திரப்படுத்தி விட்டிருந்தேன். மறுநாட் காலையில் செல்லப்பன் வந்து தாங்கள் வரச்சொன்னதாக என்னைக் கூப்பிட்டான்.
கொஞ்ச நஞ்சம், உடம்பில் ஒட்டிக் கொண்டிருந்த உயிரும் போய்விட்டது. இதோ வருகிறேனென்று அவனிடம் தாக்கல் சொல்லியனுப்பி விட்டு யோசனை பண்ணினேன். இராத்திரிப் பேசிக் கொண்ட காரியமெல்லாம். தங்களுக்குத் தெரிந்திருப்பதால், எப்படியுஞ் சந்திக்குக் கொண்டு வந்து விடுவீர்களென்றும் இனி இவ்விடத்திலிருப்பது சரியல்லவென்றும், அப்போதே புறப்பட்டுத் தே சாந்தாம் போய்விட்டேன். எளிதில் அடையாளங்கண்டு கொள்ளாத விதமாக இந்தப் பரதேசி வேடம் பூண்டு கொண்டு திரிகிறேன். நான் போயிருந்த தேசங்களை யெண்ணமுடியாது. ஒரு ஊரிலாவது இரண்டு நாள் தங்கியிருந்ததே கிடையாது. இப்பவும் ஒவ்வொரு சமயம் பையனை நினைத்தால் அழுகை வருகிறது. என்னிடம் குழந்தையை வாங்கிக் கொண்டு போனவன், ஜாதியில் கள்ளன் மணிமங்கலம் தாலூகாப் பக்கத்தில் அவனூரிருக்கிறதென்று சொன்னான் அவன் பெயர் ஒச்சன். அவனோடு நம்முடைய ஊருக்கு வந்திருந்து திருச்செந்தூருக்குப் போகும் போதும் கூடவே வந்து இடை வழியில் விலகிக் கொண்டவன் ஒருவன் அவன் பெயர் காளி. அவனும் கள்ளச் சாதிதானாம். இதுவே நடந்த செய்கை. எனக்கு என் வீட்டிலிருக்க மனமில்லை. நான் எப்படியும் அலைஞ்சு கெட்டு என் பொறியைத் தொலைக்கிறேன். நீங்கள் குழந்தையைத் தேடிப்பாருங்கள். தாங்களும் ஐயாவும், நான் செய்த குற்றத்தைத் தெய்வத்திற்காகப் பொறுத்துக் கொள்ள வேண்டியது. நான் இங்கே வந்தது ஒருவருக்குந் தெரியவேண்டாம். “என்று சொல்லிச் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணி எழுந்து ஒன்றும் பேசாமற் சரசரவென்று நடந்து ஊருக்கு வடபுறமிருக்கிற செடியடர்ந்த காட்டுவழியாய்ப் புகுந்து மறந்து விட்டார் கணபதிச்சாமியார்.
இவைகளைக் கேட்டுக்கொண்டு வந்த சோமசுந்தரம்பிள்ளை இடையிடையே சிவ சிவ வென்றுச்சரித்துக் கொண்டிருந்தார். பின்பு தெய்வசிகாமணியைக் கண்டு பிடிப்பதற்குத் தான் கொண்டிருக்கும் உத்தேசமும், தங்கச்சாமிபிள்ளை நடத்திக்கொண்டிருக்கும் மான்ய நில வழக்குத்தான் சம்பந்தப்படாதிருக்க வேண்டிய விவரத்தையும் சுருக்கமாகவே சோழசுந்தரபபிள்ளையிடஞ் சொல்லி விடை பெற்றுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிப்போய்க் குடும்பக் காரியங்களை யெல்லாம் ஒழுங்கு பண்ணி வைத்து விட்டு மறுநாளே புறப்பட்டு எவ்விடத்திற்கோ போய் விட்டார் சாமிநாதபிள்ளை.
எட்டாம் அதிகாரம்
இன்னமும், இன்றைக்குத் தபால் வரக்காணோமே, நம்முடைய விலாசத்திற்குக் கடிதம் இல்லாவிட்டாலும், தெருவிலிருக்கிற மற்றவர்களுக்கும் ஒரு கடிதமும் இல்லாதிருக்குமா? தபாலாபீஸிலேயே போய்ப் பார்த்துவிட்டு வரலாமென்றேன். நீ தடுத்துவிட்டாய். இன்னம் அரைமணி நேரம் பார்ப்போம்! என்று மணிமங்கலம் தாசில்தார் வீட்டு மேல் மாடியில் அமைக்கப் பட்டுள்ள ‘தெய்வ சுந்தர’ விலாசத்திலிருந்து நமது தெய்வசிகாமணி தனது தோழனைப் பார்த்துச் சொன்னான். கல்யாணம் மேலும் அவன் இவ்வருஷத்திய கேள்விப்பத்திரம் (க்வெஸ்ட்ச்சன்) வெகு கடினமென்றே நினைக்கிறேன். நீ ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதிலெழுதியிருப்பாயா? ஏன் உன மனஸுக்கே தெரியுமே என்றான்.
கல்பாண சுந்தரம்:- அண்ணா, இங்கிலீஷ் கேள்விக்குச் சரியான விடை யெழுகியிருக்கிறேனென்று உறுதியாகச் சொல்லுவேன் தமிழ் வினாவுக்குத் திருப்திகரமான விடை இறுத்திருப்பேன் என்று கருத முடியவில்லை. ஏனெனில்,
“அளக பந்திமிசை அளிகள் பந்தரிடும்
அரிவை மீர் கடை கடிறமினோ”
என்பதற்கு பதவுரையும்,
“நமரங்காள் என்னே வழுத்தாத
தெம்பிரான் மன்று ”
என்பதற்கு நமாங்காள் என்பதற்கு இலக்கணச் சந்திவிதியும்,
“கலிங்கத்துப் பரணியா கலிங்கத்துப் பாணியா?”
என்பதற்குப் பாணியே சரியென்றும்,
”பாணியானாற் பரணி வழக்கு வழங்குவானேன்”?
என்பதற்குக் காவிகித வழுஉ எனவும், எழுதியிருக்கின்றேனே யன்றிப் பலவுகாரணங்களையும் எடுத்தாண்டு விஸ்தரித்தெழுதவில்லை தமிழென்ன பிரமாதமோ. அதில் தவறினாலும் அதைக் கவனிக்கமாட்டார்கள் பரீக்ஷாதிகாரிகள்.
தெய்வசிகாமணி:– கல்யாணம், நீ தமிழ்க் கேள்விக்குச் சரியான பதில் எழுதவில்லை யென்றும், பிரமாதம் அன்றென்றும், பேசிய வார்த்தையைக் கேட்க எனக்கே வெட்கமாயிருக்கிறது. தாய் முலைப் பாலோடூட்டித் தாலாட்டிச் சீராட்டி வளர்த்து வாலிபமாக்கி விட்ட தமிழ்ப் பாஷையிற் கொஞ்சமும் அபிமானமில்லாமல் இப்படிச் சொல்லத் துணிந்து விட்டாயே. சர்வாபிமானங்களையுந் துறந்த ஞானிகளும், பாஷாபிமானத்தை நீக்கக் கருதார்கள். தமிழ்த் தேசத்திலே தமிழ்ச்சாதியிலே பிறந்து தமிழ்ப் பாஷையிலே வளர்ந்த நீ அப்பாஷைபில் இவ்வளவு அலக்ஷியம் வைத்திருப்பது மிகவும் அருவருக்கத் தக்கதல்லவா? வடமொழியைப் பாணினிக்கு வகுத்துரைத்த மணிகண்டன் தென்மொழியாகிய நம் தமிழை அகத்தியனாருக்கு அருளின் தோடமையாது, தாமும் ஒரு தமிழ்ப்புலவமாகிச் சங்கப் புலவருடன் சம்பாஷித்து ‘இறையனார் அகப்பொருள்’ என்னும் பெயரிய ஒரு இலக்கண நூலும் இயற்றியிருப்பகெனின் நந்திரா விட பாஷைச் சிறப்பினைச் செப்பவும்படுமோ? நேற்று சித்தாந்ததே சிக சங்கரலிங்க முதலியாரவர்கள் செந்தமிழ்ச் சிறப்பைப் பற்றி சமயாசிரியர்களில் ஒருவர் தமிழ்க் கவியால் எலும்பைப் பெண்ணாக்கின ரெனவும், மற்றொருவர் சில வருஷங்களுக்கு முன் முதலைவாயிற் சிக்கி இறந்துபோன குழந்தையை அன்றையவரை வளர்ச்சியுடன் வருவித்தரெனவும், வேறொருவர் ஊமையைப் பேசுவித்தனரென்றும், மழைமாரி பொழிந்தது போல உபாதியசிதத்ததை நீயுங் கேட்டுக் கொண்டிருந்தாயன்றே. அதில் உனக்குண்மை பிறக்கவில்லையோ? சிந்தாமணி, மணி மேகலை, சூளாமணி முதலிய திவ்ய ஆபரணங்கள் அணியப் பெற்ற தமிழ்ச் செல்வியின் தரத்தை வருணிக்க இளங் கல்வியாளனான என்னாற் கூடுமோ? சில போலிப்பாஷைகளைப் போல ஆண்பாலைப் பெண்பாலாகவும், பெண்பாலைப் பலர் பாலாகவும், உயர் தினையை அஃறிணை பென்றும் மயங்கிக்கூறும் இலக்கண முடையதன்று. நம் தமிழ்ப்பாஷை என் அறிவுக்கெட்டினமட்டிலும் தமிழ்ப் பாஷையே அநேக பாஷைகளுக்குத் தாய்ப் பாஷையாயிருக்கிறது. பல பாஷைகளிலுமுள்ள ஒவ்வொரு வார்த்தையையுங் கருத்தூன்றிப் பார்ப்போமாயின் தமிழீலிருந்தே உண்டானதாகக் காணப்படும் – இனித் தமிழ் என்னும் பதத்திற்கு, இனிமை அல்லது ஒப்பும் உயர்வுமற்றதனி அல்லது “ழ்” என்னும் சிறப்பு ‘ழ்’ காத்தைத் தனக்கே சொந்தபாக உடையது எனப் பொருள் கொள்ளக் கிடக்கின்றது. இந்தக் காரணங்களினாலேயே இதனருமை நன்கு விளங்கும். பற்பல கொடிய அந்திய அரசாங்கங்களாலும், புறமதங்களாலும் வீழ்த்தப் படாது மஹோன்னத் தசையிலிருக்கிற செழுந்தமிழ்ச் செல்வத்தைப் பெரிதும் பாராட்டாது இங்ஙனம் உல்லங்கனமாக நினைத்தது இழிவன்றோ? ஐரோப்பியனொருவன் தனக்கு அந்நியபாஷையிலிருக்கிற ஞானம் இங்கிலீஷில் இல்லையென்று வெட்கமில்லாமற் சொல்லுவானா?
கல்யா: அண்ணா, உன் பிரசங்கமட்டும் இனிமையாயிருக்கிறது. ஆனால் நமது தமிழ்ப் புராணக்கதைகளை அவைகளிற் சொல்லியபடி துளிகூடச் சிந்தாமல் உன்னைப்போல நம்பிக்கொள்ள எனக்குப்பிரியமில்லை. ஏன்? ஒன்றைப் பத்தாக்கி ஒன்றுக்கொன்று விரோதமாகச் சொல்வதே நமது காவியங்களின் இயற்கையா யிருப்பதினாலேயே, இதற்கு உதாரணமாக ஒன்று சொல்லுகிறேன். இராமாயாணக் கதாநாயகனாகிய ஸ்ரீ ராமன் பிறந்த காலத்தை ஸ்ரீராம ஜாதக சுலோக முதலியவைகளைக் கொண்டும் தகுந்த ஆகாரங்களின் பேரிலும், கிறிஸ்து பிறக்கு முன் 1761- ம் வருஷத்துப் பிப்ரவரி மாஸம் 10உ யென்று மிஸ்டர். வால்ட்டர் ஆர் ஓல்டு என்னும் பண்டிதர் நிர்ணயித்திருக்கிறார். அப்படியானால் இன்றைக்கு முன் 3675-வது வருஷத்திற் பிறந்திருக்க வேண்டிய ராமனைப் பல லக்ஷம் வருஷங்களுக்கு முன் பிறந்தாரென்பது கண்மூடித்தனமல்லவா? சிறந்த இதிகாசமாகிய இராமாபாணத்தில் இப்படிப்பட்ட கதி ஏற்பட்டிருக்குமானால், பிறநால்களைப்பற்றி பேசவும் வாயுண்டா.
தெய்வ:- கல்யாணம், இராமாயாணத்திற் பென்னம் பெரிய அபத்தமிருக்கிற தென்று வாய் கூசாமற் சொல்லிவிட்டாயே. அது உன் சொந்த ஆராய்ச்சியிற் றெரிந்து சொன்னதில்லை யென்கிறாய். அது உண்மையே. எதையும் தீர்க்க விசாரணை செய்யாமற் குறை கூறுவது பிழை இருக்கட்டும். இந்த உலகமுண்டாகி 6000 வருஷங்களேயாகின்றன வென்னும் பிரமாணத்தை ஆதரவாகக்கொண்டு சரித்திர ஆராய்ச்சி செய்வாரது தீர்மானத்தை நான் ஒரு நாளும் அங்கீகரிக்க மாட்டேன். ஏன் எனில் இந்துவான சாஸ்திரரீதிப்படி இந்நிலவுலகந் தோன்றி 1955885025-வருஷங்களாகின்றன.அதை யறியாது கலியுகத்தின் ஆரம்ப முதலில் ஏற்பட்ட பிரளயத்தின் பின்னிட்ட காலமே உலகமுண்டான தென்று கூறியிடர்ப்படுகின்றார் சிலர்.
புதன்,சுக்கிரன், பூமி, செவ்வாய், குரு,சனி,சந்திரன் முதலிய கிரகங்கள், முறையே சூரியனைச் சுற்றி வருகிற காலங்களுக்கு அதமப் பொது மடங்கு எடுத்து நோக்கின் அது நானூற்று முப்பத்திரண்டு கோடி வருஷங்களெனக் கணக்காகின்றன. இந்தக்காலந் தான் மேஷத்தை விட்டு நீங்கின கிரகங்கள் மீண்டும் மேஷத்தில் அதே நிலையில் வந்து நிற்குங்காலம். இதையே ஒரு கற்பம் என்பர். இக்கற்பம் ஆயிரம் சதுர்யுகங்கள் அடங்கியது. ஆகவே ஒரு சதுர்யுகம் நாற்பத்து மூன்றிலக்ஷத்திருபதினாயிர வருஷங்கள் கொண்டதாகும். இதனுட் கலியுகம் பத்திலொரு பாகம்; துவாபாயுகம் கலியுகத்தின் இரு மடங்கும்; திரேதாயுகம் கவியின்மும்மடியும்; கிருதயுகம் கவியின் நான்கு மடங்குமாகும். இனி இக்கற்பமே பிரமனுக்கு ஒருநாள் என்பர். இப்போது கலியுகம் பிறந்து 5025-வருஷங்களாகின்ன்றன. துவாபரயுகத்தின் இறுதியிலுண்டான பிரளயத்தையே (Old Testament) ல் குறிக்கப்பட்டுளது. இதையே நீ சொன்ன பண்டிதர் உலகமுண்டான காலமாக நிர்ணயித்திருக்கக் கூடும். ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் பிரளய முண்டாகுமென்றும் பின்னர் நீர்வற்றி உலகு வெளிவந்தோங்கு மென்றும் அநுபவ சாலிகள் கூறாநிற்பர். இவ்வரிய உண்மைகளை மேல் நாட்டு வித்தியார்த்திகளான (Max muller) மோட்சமூலர் (greppith) கிரிபித் முதலான விவேகிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.
இனி ஸ்ரீராம ஜாதகத்தைக் கவனிப்போம்.
மேடமாமதிதி நலமி மீன்கழை
நீடுறுமாலை கற்கடகம் நீதிசேர்
ஓடைமால் களிறனான் உதயராசிகோள்
நாடினே காதசர் நால்வருச்சேரே. (கம்பர்)
இப்படிக் கிரகங்கள் அமைந்த ஒருகாலத்துச் சித்திரை மாஸத்தில் ஸ்ரீராமன் பிறந்தாரென்று தெரிகிறது. பண்டிதரோ பிப்ரவரிமீ 10உ என்கிறார். அதற்குச் சரியான தமிழ் மாஸம் மாசியாகும். எனவே நீ சொன்னபடி ராமஜாதக சுலோகத்தை வைத்து நிர்ணயிக்கவில்லை யென்று தோன்றுகிறது. மேஷாதி பன்னிரண்டு ராசிகளைச் சித்திரையாதி மாஸங்களெனக் கூறும் கணித நூல் வழக்கும் சூரியன் ஒவ்வொரு மாஸ ராசியில் ஒவ்வொரு மாஸம் சஞ்சரிப்பான் என்றும் நமது நாட்டுத் திண்ணைப் பள்ளிக்கூடத்துச் சிறுவரும் தெற்றெனச் செப்புவரே.
எந்த மதத்திலும் சமயக்கோட் பாட்டில் ஈடுபட்டுப் புஸ்தகங்கள் எழுதுகிறவர்கள் காலங்களைக் குறிப்பிட்டுத் தெளிவாயெழுதிக் கொண்டு போகிறதேயில்லை. காரணமென்ன? பத்திமேலீட்டினாற் பாடிக்கொண்டு போவதனாலும், சரித்திர ஆராய்ச்சி செய்யப் போதிய அவகாசம் இன்மையாலுமே. இந்தக்குறை நம் முன்னோர்களுக்குட் பெரும்பாலு மிருக்கிறதென்பதை நாம் ஒப்புக்கொள்ளா மற்றீராது. இதை வைத்துக் கொண்டு தற்கால சரித்திர ஆராய்ச்சி நாகரீகர்கள் குண்டு சட்டிக்குள் குதிரையை வையாளிவிட்டது போல எல்லாச் சரித்திரங்களையும் வேதங்களையும் ஆகமங்களையும் அவர்களுடைய 6000 வருஷத்திற்குள் அடக்கப் பார்க்கிறார்கள்.
(Ante diluvian fossils) ஊழிக்கு முந்திய பூதலவியற் கைச்சேடங்களையும், பிராணிகளது கங்காளங்களையும் கண்டு மத வாயிலாய்க் கொண்ட வருஷம் ஆறாயிரத்தை வாரிச்சுருட்டி எரிந்து விட்டு மனமுட்கி வாளா நிற்பாரை அறியார் போலும் இவர். ஸ்ரீராம ஜாதக சக்கரத்திற் கண்டபடி இரகங்கள் அமைந்திருந்த முந்திய யுகங்களின் ஒன்றில் இராமன் பிறந்திருப்பாரென்று கொள்வார்க்கு நேரும் இழுக்கென்னையோ?
ஸ்ரீராமயாணத்தின் கதாநாயகன் பிறந்தகால வரையறையைக் கவனித்துப் பார்த்த நீ அந்நூலில் மக்களுயிர்க் குறுதிபயப்பனவரகிய விஷயங்களுள்ளனவா? அவை யெவை? யாண்டுக் கூறியுள்ளன? அதிற் கூறியாங்கு நடந்தோர் யாவர்? நடக்க நாம் யாது செய்தல் வேண்டும்? என்பன வாதிய சற்காரியத்திலும் நின் மூளையைச் செலுத்தியிருக்க வேண்டாமா? சாமி தெரிசனம் பண்ணக் கோவிலுக்குப் போன ஒருவன் தான் கருதி வந்த விஷயத்தை மறந்து கோவிலின் அகலம்? நீளம்? எத்தனைபடி? விக்கஹத்தின் சுற்றள வென்ன? வெள்ளைக்கல்லா? கருங்கல்லா? எந்தவூர்ச் சிற்பிசெய்தது ஆலயத்திற்குத் தாசிகளுண்டா? இன்றைக்கு முறைக்காரி பெயர் என்ன? என் விசாரித்துக் கொண்டு திரிவது போல, ஒரு நூலை எடுத்துக் கொண்டு அதைப்பாடினவன் பெயரென்ன? அவனது எத்தனையாவது வயஸில் இதை இயற்றினான்? அவன் எச்சாதியைச் சேர்ந்தவன்? எவ்வூரில் வசித்தான்? காலம் எது? என்னும் இந்த விசாரணை தானா சிறந்தது. ஒருவாறு வேண்டியதே எனினும், பொருளையும் நடையையும் போற்றுவார்க்கு, இது முக்கியமல்ல. ஜீ யூ.போப்பு என்னும், மேல்நாட்டுப் பண்டிதர் திருவாசகம் என்றும் தமிழ் நூலைத் தமது ஆங்கில பாஷையில் மொழி பெயர்த்துப் படித்துப்பரமானந்தங் கொண்டது பொருளருமை கருதியோ? அன்றிப் பிறகாரணத்தாலோ?
“வலதுகை செய்கிற தருமம் இடதுகைக்குத் தெரியாது” என்பது போல தங்கள் தங்களது புஸ்தகத்தால் உலகம் நன்மார்க்கத்திற்கு வர வேண்டுமென்பது தான் நமது முன்னோர்கள் கருத்தே யன்றி அழிந்து போகும், தமது பூதவுடம்புக் கிட்டபெயரும் காலமும் பிரசித்தியாக வேண்டுமென்பதல்ல. வருஷமாஸந் தேதி மணிநோம் குறிக்கப்படாததால், சரித்திரங்கள் நடந்தது பொய்யாகுமா? அதிற் சொல்லியிருக்கிற பொருளுண்மையும், நீதியும் பொய்க்குமா? பொய்யாகாது, இவைகளெல்லாம் எப்படிப்போனா லும் போகட்டும். நினைத்தாலும் சரீரமெங்கும் செழுந்தேனொழு கத் திக்திக்கும் செந்தமிழ் பாஷைக்குக் குறையென்ன நேர்ந்தது. நீ மிழ் பாஷையைத் தாழ்வாக ம தித்தது என்னுள்ளத்தைச் சுடுகிறது. இதன் அருமையை நோக்கிய ஓர் ஐரோப்பிய பண்டிதர் இத்தமிழை நன்காராய்ந்து கற்று வல்லராகித் “தேம்பாவணி” என்னும் ஒரு பெரிய தமிழ்க் காவியமும், பல இலக்கண நூலும் செய்திருக்கின்றார். நாம் இடைவிடாது கையில் வைத்துக் கொண்டிருக்கும் சதுரகராதியும், அவர் கோவையிட்டதே. அவருக்குத் தமிழிலிட்ட பெயர் வீரமா முனிவர் என்ப. அவகாசம் நேரும் போது இதை பற்றி இன்னும் விவரமாக உனக்குச் சொல்லுகிறேன். அதோ தபாற்காரன் வருகிறது போலிருக்கிறது.
கல்யா: அண்ணா, இன்றைக் கென்ன உனக்குத் தமிழ்த் தெய்வம் பிரசன்ன மாகியிருந்ததா? கிடு கிடு வென்று ஆரம்பித்து விட்டாயே அப்பா என்ன தாட்டி என்ன நுட்பம். இதையெல்லாம் படிக்க உனக்கு நேரம் எப்படிக் கிடைத்தது, ஆனால் நான் பந்தடிக்கப் போகும் போதெல்லாம் நீ படித்துக் கொண்டிருப்பாயே! அநேக அரிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். இன்னொரு சமயம் தமிழ்நாட்டுப் பூர்வீகப் புலவரைப் பற்றி எனக்குச் சொல்ல வேண்டும்.
எதையோ சொல்வதற்குத் தெய்வசிகாமணி வாயைத்திறந்தான் இதற்குள் மேஜையின் பேரில் ஒரு கடிதத்தை கொண்டு வந்து வைத்தான் தபாற் சேவகன் உடனே பேச உத்தேசித்ததை நிறுத்திவிட்டு வெகு ஆவலுடன் கடிதத்தைப் பிரித்துப் படித்தான் தெய்வசிகாமணி, அஃது சென்னையிலிருந்து சிநேகிதன் ஒருவன் எழுதியதாம். அதில் அவ்வருட மெட்ரிக் லேஷன் பரீக்ஷையில் தெய்வசிகரமணியும், கல்யாணசுந்தரமும் தேர்ச்சி யடைந்திருப்பதாயும், இராஜதானியிலிருந்து பரீக்ஷைக்குப் போயிருந்த மாணாக்கர்களுக்குள்ளே கல்யாண சுந்தரம் முதன்மையாகத் தேரியிருப்பதாயும் குறிக்கப்பட்டிருந்தது. கடிதம் படித்து முடியவும், அவ்விருகுமரரும் மேல்மாடியிலிருந்து கீழே யிறங்கித் தாசில்தாரிடம் போனார்கள். பெரிய மனிதர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர் குழந்தைகளைக் கண்டவுடன் பேச்சை நிறுத்திவிட்டு, என்னசங்கதி யென்று கையை நீட்டினார் தெய்வசிகாமணி. கடிதத்தைக் கொடுத்தான், தாசில்தார் படித்துக்கொண்டே அம்மனிதர்களிடம் சொல்லுகிறார்.
இலண்டன் மாநகரத்தில் ஒரு கலாசாலை ஸ்தாபித்து என்றென்றைக்கும் அது சோர்வின்றி நடந்து வரும்படிக்கான மூலதிரவியம் சேர்ப்பதற்காக அறுபதினாயிரஞ் சீட்டின் பேரில் ஆறுலக்ஷ ரூபா வசூலித்து, மூன்று லக்ஷரூபாவை மேற்கண்ட பாடசாலைக்கு உபயோகித்துக் கொண்டு, மீத முள்ளபாதியைத் திருவுளச்சீட்டு (லாட்டரி) மூலமாக அச்சந்தாதாரர்களுக்குப் பாகித்துக் கொடுப்பதாகவும், முதலில் உதயமாகும் சீட்டுக்கு ஐம்பதினாயிரம் ரூபா கொடுக்கப் படுமென்றும் பிரசுரித்துள்ள ஒரு பத்திரிகை சென்ற வருஷத்தில் நமக்குக்கிடைத்தது. அப்பெரிய தர்ம கைங்கர்யத்திற் பிரரவேசித்திருப்பவர்கள் சத்தியவந்தர்களான சில ஐரோப்பியர் களென்று முன்னமே நாம் கேள்விப் பட்டிருந்த படியினாலே நம்முடைய குடும்பத்திலிருந்து, மாசிலாமணிக்குஞ் சேர்த்து 5 சீட்டுகளுக்கு 50 ரூபா சீமைக்கு மணியாடர் செய்யப்பட்டது. பணம் பெற்றுக் கொண்டதாகக் கையெழுத்து வந்து ஒன்பது மாதமாகிறது. இன்று வந்த, வர்த்தமானப் பத்திரிகையில், நமது கல்யாணசுந்தரத்தின் பேருக்கு முதற்சீட்டுக் கிடைத்திருப்பதாயும் அதற்குரிய ரூபாவை இரண்டு மாஸத்திற்குட் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கண்டிருக்கிறது.
“ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல்”. இரண்டு நிமிஷத்திற்கு முந்திவரையும் குழந்தை கல்யாணசுந்தரத்தை, இந்த உலகம் பரம ஏழைகளின் வகுப்பிற் சேர்த்து வைத்திருந்தது இப்போதோ ஒரு பிரபுவாக்கியிருக்கிறது,பணத்தைப் போல இவ்வுலகத்திற் சீருஞ் சிறப்புந்தரத்தக்க பொருள் வேறொன்றுமே இல்லை. பணக்காரன் எத்தனை துன்மார்க்கனா யிருந்தாலும் அவனை ஜனங்கள் பெரிதும் வி ரும்புகிறார்கள். பணக்காரன் எந்த வேலையைத் தொடங்கினாலும் வெகு எளிதில் முடிகிறது. பணக்காரன் உலோபியாயிருந்தாலும் அவனைச் சுற்றி நான்கு பேர் எப்போதுங் காத்தே இருக்கிறார்கள். பணக்காரன் சர்வமுட்டாளாயிருந்தாலும், அவன் வாயிலிருந்து புறப்படுகிற வசனத்தை மிகவும் பாராட்டிப் பேசுகிறார்கள். பணக்காரன் கடற்புளுகன் மலைப்புளுகனாயிருந்தாலும் நியாயஸ்தலங்களில் அவன் சாக்ஷியத்தை மதித்தேற்றுக்கொள்கிறார்கள். பணக்காரன் செய்த குற்றம் பெரிதாயிருந்தாலும், அது சாமான்யமாக நினைக்கப்படுகிறது. பூமியில் அனுபவிக்க வேண்டிய சர்வ இன்பங்களுக்கும் பணமே முசிற்சாதனமாக இருக்கின்றது. தக்கவாறு சத்கருமங்களுக்கு உபபோகிக்கப்படின் அப்பணமே மேலுலக இன்பத்திற்குந் துணைக்காரணமாகிறது. பணத்தைக் கையால் தொடுவதில்லை யென்று விரதம் பூண்டிருந்த ஞானபாநுவாகியஸ்வாமி விவேகாநந்தரை அமெரிக்கா கண்டத்துச் சிகாகோ நகரஞ் சென்று இந்துமதஸ்தாபனம் பண்ணிவரும்படியாகச் செய்ததும், காலஞ்சென்ற இராமநாதபுரம் ராஜா பாஸ்கர ஸேதுபதியவர்களுக விய இப்பணமே. பணக்காரனே யதார்த்த மனுஷியனாக விளங்குகி றான். இதையறியாமலா “ஈட்டி பெட்டமட்டும் பாயும் பணம் பர தாளந்தைக்கும்” என்கிறார்கள்.
பணம் இவ்வளவு பிரயோசனமுள்ள தாயிருந்தாலும், திருடர் மோசக்காரர், துர்வழக்காளிகள், வேசையர், அநீத உத்தியோகஸ்தர், பொய்யர், குடியர் முதலான காட்டு மிருகங்கள் எளிதில் நுழைந்து மேய்ந்து கெடுத்து விடும்படியான பயிருக்குச் சமானமாக இருக்கிறது. அப்பயிருக்குக் கல்வியாகிய ஒரு பெரிய வேலி போட்டா லொழிய அக்கொடிய மிருகங்களின் உபத்திரவத்தைத் தடுப்பது அசாத்தியமாகும். அக்கல்வியும் படாடோப மற்றதாய் சர்வ ஜனங்களுக்கும் இதஞ்செய்வதாய் சன்மார்க்க மென்னும் தோழமையுடைய தாய் இறைக்க இறைக்க வற்றாத மணற்கேணிக்கிணையான பொருள் நிறைவுள்ளதாய் தியாகீயென்று தம்மை யடைந்தவர்களுக்கு இல்லை பென்னாதுதவும் வள்ளன்மையுடையதாய் இருத்தல் வேண்டும். எழுத்து, சொல் என்னும் கற்களை நாட்டிப் பொருள் என்னும் வரிச்சை யாப்பு, எனும் நாராற்கட்டி அலங்காரம் என்னும் பசுங்கொடிகளை அதன்மேற் படரவிட்டு ஒழுக்கம் என்னும் நங்கூரத்தால் இறுக்கியமைத்தலே செல்வப்பயிரைக் காக்கச் செய்யுங் கல்வி வேலியாம். அகங்காரமென்னும் மண்ணேறிக் கர்வமென்னுஞ் செல்லரிக்கப்பட்டு மறப்பென்னும் மாடு மேய்ந்து. கல்விவேலி கெட்டுப் போகாமல் அடிக்கடி சீலம், சிந்தனை என்னும் சேவகராற் பாதுகாத்துவரல் வேண்டும். சிறு குழந்தையாகிய கல்யாணசுந்தரத்திற்கு இத்துணைப் பெருவாழ்வைத் தந்தருளிய எல்லாம் வல்ல இறைவன் இனிமேலும் செல்வம், கல்வி யென்னும் செருக்குட் புகுவியாது மேன்மேலும் சுகுணனாய் விளங்கும்படி அனுக் கிரகிக்க மனதார வந்தனஞ் செய்து கொண்டிருக்கிறேன்.
இவன் கொடுத்த இக்கடிதம் சிறிது மனவருத்தத்தையும், பெரியதோர் ஆனந்தத்தையும், உண்டு பண்ணுவதாயிருக்குறது. கல்விக்கிருவர் என்பது போல, பையன்களிருவரும் ஓரிடத்திலிருந்து அப்பியசித்து வந்தால் மிக்க நலமாயிருக்குமென்றே ஆரம்பத்தில் இவர்களை கூட்டி வைத்தோம். இவ்வருஷம் கல்யாணசுந்தரம் தகுதியான தேர்ச்சியடைந்திருப்பதால் ஸகாலர்ஷிப் பெறுபவனாக இருக்கிறான். இந்த வூரிலிருந்து படிப்பதானால் அவ்வுதவியைத் துரைத்தனத்தார் கொடுக்க மாட்டார்கள். இராஜதானிக் கல்லூரியிற் சேர்ந்து வாசித்தால் மாத்திரம் கிடைக்கும். அவ்வாறிவனை அனுப்பும் பக்ஷக்தில் ஒரு சரீரத்தை இரண்டாய்ப் பிரித்தது போல் நாமே வேறாக்கி விடும்படி நேரிடுகிறது. உதவிப்பொருளை ஒரு பொருளாக எண்ணாமல் இவடத்திலேயே நிறுத்திவிடலா மென்றாலும், அவனுடைய மனோற்சாகத்தைக் கெடுத்தது போலாகிறது. தவிரவும் நாட்டுப்புறத்துப் படிப்பைக் காட்டிலும், நகரவாசப்படிப்பானது. அனுபவத்திலும், சேர்க்கையிலும் நாகரீசுமுடையதாயிருக்கிறது. எவ்வகையிலும் குழந்தைகளைப் பிரிக்கும்படி நேர்ந்ததே யென்பது தான் என் மனஸுக்குக் கவலையென்று பேசி முடித்தார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த தெய்வசிகாமணி கல்யாணசுந்தரத்தின் முகத்தைப்பார்த்தான். அவன் சற்று முகவாட்டத்துடன் நின்றிருந்தான்.
ஒன்பதாம் அதிகாரம்
கல்யாண சுந்தரத்திற்குச் சீட்டு விழுந்திருக்கிற சமாசாரம் ஊருக்குட் பிரஸ்தாபமானவுடன் ஜனங்கள் கூட்டங் கூட்டமாகக் கூடிப் பேசத்தலைப்பட்டார்கள். அவனுடைய முகலக்ஷணத்திற்கே எல்லாச் செல்வமுங் கைகூடி வருமே என்பர் சிலர். விளையும் பயிர் முளையிலே என்பது போல சிறு பருவத்திலேயே தாசில் எசமான் பிள்ளையாகப் பாவித்தது பெருஞ் செல்வமல்லவா என்பர் பலர். கப்பலோடி ஆறுமுகஞ் செட்டியார் செய்ததவம் பலித்ததென்பர் சிற்சிலர். அந்தப் பதிவிரதா பத்தினி பெற்ற பிள்ளைக்கு யோகமும் வராமற் போகுமா? என்பார் அநேகர். தாய் பிள்ளைகளெல்லாம் இனி வந்து கூடிவிடுமப்பா என்பர் பற்பலர். ரூபா ஐம்பதினாயிரத்தையும் இவனுக்கே கொட்டிவிடப்போகிறாரோ என்பார் பலப்பலர்.ஆமா தெற்கித்தி வெள்ளாளன் கொடுத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பான் என்பார் சில பேர். போடாபோ அவரென்ன ஏழையா! இதில் ஒரு சல்லி கூட எடுக்க மாட்டார் என்பார் சிலர். கல்யாணசுந்தரத்திற்குக் தக்க வயது வரும் வரை வட்டிக்கு விட்டிருந்தால் அந்த லாபமே போதுமே எசமானுக்கு என்பர் அநேகர். சீட்டு விழுந்ததும் பணம் வந்து விட்டதுந்தானோ என்னமோ இது ஒரு பைத்தியம் என்பர் சிலர். எவனோ ஒரு கேலிக்காரன் இப்படி யெழுதிப்போட்டிருப்பான் என்பார் சிலர். என்னடா வாய்கொண்ட மட்டும் பேசுகிறீர்கள். தபாலா, கையெழுத்தா, முத்திரை முகரா ஒன்றுமில்லையோ? கையெழுத்துப் போடத் தெரியாத நமக்கிருக்கிற யோசனைகளும், யுத்திகளும் ஒரு தாசில்தாருக்குத் தெரியாதோ என்பார் சிலர். ஏதோ பெரிய இடத்துக்காரியம் ஒன்றுமே பேசக்கூடாதென்பார் சிலர். எல்லாம் பத்துநாளையில் தெரியுமல்லவா என்பார் பலர் இவ்விதமாக அவ்வூர் முழுதும் இதே பேச்சாக இருந்தது. அன்று மாலை நாலு மணிக்குத் தாசில்தார், காந்தியம்மாள், கல்யாணசுந்தரத்தின் தாயார் மாசிலாமணி இந்நால்வரும் ஆலோசனைபண்ணிக் கல்யாணசுந்தரத்தை ராஜதானிக் காலேஜுக்கு அனுப்புகிறதென்றும், அவன் தாயும் அவனுக்குதவியாய்ப் போயிருக்க வேண்டுமென்றும் தீர்மானித்தார்கள். இந்த விஷயங்களெல்லாம் மறுநாளே பாடசாலை மாணாக்கர்களுக்குத் தெரிந்து விட்டது. தெய்வசிகாமணியின் அக்ராசனத்தின் கீழ் ஒரு சங்கங்கூடிக் கல்யாண சுந்தரத்திற்கு ஒரு விருந்து நடத்திப் பிரிவாற்றாமைப் பத்திரம் படித்தார்கள். காந்திமதியம்மாள் அவ்வூரிலிருக்கிற சர்வாலயங்களுக்கும் அர்ச்சனையும், மஹா நைவேத்யமும் செய்வித்தாள். ஆலயங்களில் சுவாமி புறப்பாடாகும் போது சீவிலி முதலிலே புறப்படுவதுபோல இந்த விசேஷங்களுக்கெல்லாம் மாசிலாமணி ஆர்ப்பாடம் பண்ணிக் கொண்டு திரிகிறான். இவன் இயல்பிலேயே சுறு சுறுப்புள்ளவன். இச்சந்தோஷ சமயமோ ஒரு இளஞ் சிங்கக்குட்டி போல் வெகு கெம்பீரப் பார்வையோடு உலாவலானான். இது நடந்த நாலு நாளைக்கெல்லாம், கல்வியிலாகாத் தலைவரால் ஓர் பிரசுரம் வெளியாயிற்று. அஃதாவது “ஸ்காலர்ஷிப்புக்குக் தகுதியான மாணவர்கள் பதினைந்து தினத்திற்குள் கல்கத்தா ராஜதானிப் பாடசாலையிற் சேர்ந்து கொள்ளல் வேண்டும், தவணைதப்பியாவது இதர காலேஜிலாவது சேர்ந்தால் ஸ்காலர்ஷிப்பை இழந்துவிடுவார்கள்” என்பதே. இதைப் பார்த்தவுடனே தெய்வசிகாமணிக்கு மனஸிற் கலக்கமுண்டாகி விட்டது. குழந்தை முதல் ஒரு நிமிஷ நேரமும் பிரியாத சிநேகனைப்பிரிய நேரிட்ட வருத்தம் சாமான்யமா யிருக்குமா? ”விலங்கிற்கும் விள்ளலரிது” என்பது முதுமொழி யன்றோ. நேசமென்பது அன்பென்னும் வித்திலிருந்துண்டான தல்லவா? கூத்துப்பார்த்துக்கொண்டிருந்த குருடன் அவனுஞ் சிரித்தான் நானுஞ் சிரித்தேன் என்று சொன்னது போல சிரித்துப் பேசித் திரியவர் சிநேகங்கொள்வது? உயிரை இழக்கும்படியான ஆபத்து நேர்ந்தாலும் வெளிப்படுத்தக் கூடாதென்ற இரகசியத்தையும் அன்பனிடஞ் சொல்ல நேரிடுவது அன்பின் முதிர்ச்சியான தோழமை யல்லவா?
தெய்வசிகாமணி தனி ஓரிடத்திலிருந்து தன் மனத்துள் நினைந்து துன்புறலானான். கல்யாணம் கல்கத்தாவுக்குப் போனால் அவனுடைய தற்கால நிலைமைக்கு இவிடம் திரும்பி வர வேண்டிய அவசியமே இல்லை. மூன்று வருஷங் கழித்தாவது வருவானோ வெனின் அதுவும் சந்தேகமே, ஏனெனில் வித்யாபட்ட மென்னும் செல்வம் ஏற ஏற இந்த நாட்டுப்புறத்து நினைப்புக் கொஞ்சமும் இராது.ஒரு வேளை ஐயா அவர்களை மறக்கமாட்டா னென்று வைத்துக் கொண்டாலும் வருகிறதற்குச் சமீபமில்லை. அவகாசங் கிடைப் பதும் அபூர்வம். நாமாவது அடிக்கடி போய்ப் பார்த்து விட்டு வரலாமென்றால், நம்மைப் பிரிந்த தாய் தந்தையர், கணமொரு கற்பமாயெண்ணி வருந்துவர். நாமுங் கல்கத்தாவிலேயே போய்ப் படிக்கலாமென்றால் அனுமதி கிடைக்க மாட்டாது. எவ்வகையிலும் பிரியும் படியாகவே நேர்ந்திருக்கிறது. ‘அட கல்யாணம்’ உன் மடல் விரிந்த செந்தாமரை போல் விளங்கும் வதன மண்டலத்தை மறந் திருக்க மனங் கூட வில்லையே. உன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வாக்யமும் எனக்கு சுரோத்ராநந்த மாயிருக்குமே! கடவுள் கருணையில்லான், சூரியன் தேராதவன், அகத்தியன் மலைப்புடையான், என்னும் வாக்கியங்களிலிருக்கிற சிலேஷைப் பொருளைச் சொல்லிப் புன்னகை புரியும், நின்வசன சல்லாபம் என்று கிட்டுமோ! அட ஐயா! நின் பேச்செல்லாம் சாந்தப் பார்வை யெல்லாங் கருணை; படிப்பெல்லாம் நீதி; தொழிலெல்லாம் விசித்திரம்; நினைப் பெல்லாம் பரிசுத்தம். நடையெல்லாங் கம்பீரம்! என்ன அழகு! என்ன சொகுசு! என்னபெருந்தன்மை! அப்பா! எப்போது கல்கத் தாவை விட்டுத்திரும்பு வாயடா? சாப்பிடப்போகும் போதெல்லாம் உன் நினைவுவருமே. விளையாட்டிடங்களெங்கும் உன் உருவெளி வந்துலவுமே என தன்பிற்சிறந்த நண்ப! நண்பா! என்று. வாய்விட்டுக் கதறினான்.
லண்டன் மாநகரத்திற் கல்யாணசுந்தரத்தின் பேருக்குக் கிடைத்த சீட்டு ரூபாவை கல்கத்தா இண்டியன் பாங்க் மானேஜர். கொ.கும. முத்துக்கருப்பசெட்டியாரிடம், கல்யாணசுந்தரத்தின் பேரால் போட்டு வைக்கும்படி லண்டன் லாட்டரிச்சீட்டுக்கம்பெனி மானேஜருக்கு ஒரு கடிதமும், நடப்பு வட்டி ஈகிதம் கல்யாண சுந்தரத்திற்குயுக்த வயது வந்தவுடன் மேற்படி தொகையைக் கொடுத்துவிட வேண்டிய நிபந்தனையோடு ஒப்புக்கொள்ளும்படி தமது சிநேகராகிய செட்டியாருக்கு ஒரு கடிதமும், தாசில்தார் எழுதிய னுப்பிவிட்டு மறுதினமே கல்யாணசுந்தரத்தைக் கல்கத்தாவுக்குப் பிரயாணப்படுத்தினார். மணிமங்கலம் ரயில்வே ஸ்டேஷனுக்கும் தாசில்தார் வீட்டுக்கும் ஒன்றாக நிற்கிறார்கள் பாடசாலை மாணாக்கர்கள். முதலிற் புறப்பட்ட இரண்டு குதிரைவண்டியில் தாசில்தாரும் தெய்வசிகாமணி கல்யாணசுந் தாமும், மற்றொரு பெட்டி வண்டியில் காந்திமதியும், கல்யாணத்தின் தாயும் சென்றார்கள். ரயில்வே ஸ்டேஷனுக்குச் சமீபமாய் வண்டி சென்றவுடன் ரயில்வே உத்தியோகஸ்தர்கள் தாசில்தாரை வரவேற்று உபசரித்துக் கல்யாணசுந்தரத்தின் வைபவத்தைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். பள்ளிச்சிருவரும் தெய்வசிகாமணியும் கல்யாணசுந்தரத்துடன் அங்கோர் பக்கத்தில் நின்றார்கள். ரயிலும் வந்துவிட்டது, உடனே நாலு போர்ட்டர்கள் சாமான்களை வண்டியிலேற்றினார்கள். தாசில்தாரும் தெய்வசிகாமணியும் எழுந்து சென்று கல்யாணசுந்தரத்தை ஒரு முதல் வகுப்பு வண்டியிலேற்றிவிட்டுக் கண்ணீர்ததும்பி நின்றார்கள். காந்திமதியம்மாள் வண்டியி லிருந்திறங்கி வந்து, “அடே அப்பாவு சுகமே போயிட்டுவா எல்லாம் நல்லாப்படிச்சு வந்து சேரு” என்று கூறி நெற்றி நிறைய விபூதிபூசியனுப்பினாள். கலயாணசுந்தரத்தின் தாயார் பெண்கள் வண்டியில் உட்கார்ந்தாள், கல்யாணசுந்தரம், தாசில்தார், அவர் மனைவி, யிவர்கள் பாதத்தில் விழுந்து வணங்கினான். அவர் ‘சிரஞ்சீவியாய் வாழக்கடவாய்’ என்றார்கள்.தெய்வசிகாமணியையும் நமஸ்கரித்து அண்ணா போய்விட்டு வருகிறேன் என்றான். வாய்குழறிவிட்டது. தன்றோழன் முகத்தைப் பார்த்தவுடனே கல்யாணசுந்தரம் துக்கம் பெருகி நெஞ்சடைக்க ஒன்றும் பேசாது மார்பெல்லாங் கண்ணீர் வடிய நின்றான். பக்கத்தில் நின்றவர்கள் உருக்குப் போகிறவரிடத்தில் துயாமுகம் காட்டுவது நன்றன்று என்றார்கள். மாசிலாமணி ஒரு ஓரமாக நின்று ‘சின்னையா போயிட்டு வாருங்க சேவிக்கேன்’ என்றான். எல்லாரையும் பார்த்து ஒரு நமஸ்காரம் பண்ணிவிட்டு திருநத் திருக விழித்துக்கொண்டிருக்கிறான் கல்யாணசுந்தரம், வண்டியும் ஓடத்தொடங்கியது. ரயிலின் ஜன்னல் வழியாய் முகத்தை நீட்டி அண்ணா, அண்ணா போய் வருகிறேன். அடிக்கடி லட்டர்ப் போடு, ஐயா கைப்பெட்டியில் என் ஜாதகமிருக்கிறது, யாராவது நல்லஜோஸ்பர்கள் வந்தால்… எனக்கு… நான்.. இதற்குள் வண்டி நெடுந்தூரம் போய்விட்டது.
– தொடரும்…
– தெய்வசிகாமணி (ஒரு நவீனகம்), முதற் பதிப்பு: 1924, லெக்ஷிமி விலாசம் பிரஸ், சாத்தூர்.
தொடர்புள்ள சிறுகதைகள்
கல்விக்கண்
நெல்லை அன்புடன் ஆனந்தி
October 29, 2026
ரேவதம்
அனந்த் ரவி
October 29, 2026
பரிகாரம்
இரா.துரைமாணிக்கம்
October 29, 2026