தூவானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 2, 2025
பார்வையிட்டோர்: 936 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எழுதுவினைஞர் ஏகாம்பரம் மெல்ல மெல்ல பூனை போல் அலுவலகத்துள் நுளைகிறார். கையில் அன்றைய சுடர் ஒளிப் பத்திரிகையும் கடந்த மாத ஞானம் சஞ்சிகையும் சுருளாக. 

வணக்கம் ஐயா! என்ற அலுவலக வேலையாள் ஆனந்தனின் வரவேற்பை கௌரவத்துடன் ஏற்றுக்கொள்ளும் தோரணையில் தலையைச் சாய்த்துவிட்டுப் போய் இருக்கையில் அமர்ந்தார். தாழ்ந்த தரத்தில் உள்ள அலுவலக வேலையாள் என்றாலும் அவனுடைய தயவும் சிலநேரம் தேவைப்படுமே! அவனையும் ‘பிளீஸ்’ செய்ய வேண்டிய கட்டாயம் அவருக்கு. ‘ஸ்….ஸ..’ என்றபடி இருக்கையில் அமர்ந்தவரை ‘என்ன காணும்’ எங்கே போய் வருகிறீர் இத்தனை நேரமா? என்று அருகில் இருந்த இராமலிங்கத்தாரின் கிணுகிணுப்பு உசுப்பியது. 

“அது” இராமலிங்கண்ணை மரக்கறி சாமான் வாங்கி வீட்டிலை கொண்டுபோய்க் குடுத்திட்டு வாறன். இண்டைக்கு வெள்ளிக்கிழமை எண்டபடியால் மீன் வாங்கச் சந்தைக்குப் போகவில்லை அல்லது இன்னும் தாமதமாகிப் போயிருக்கும்” 

“அதுக்கேன் இவ்வளவு நேரம்?” 

“அதையேன் அண்ணை கேட்கிறியள்? வீட்டுக்குப் போனால் மனுஷிக்காரி சும்மா விட்டாளே! கை தூக்க இயலாது. தேங்காய் துருவித் தந்துவிட்டுப் போங்கோ எண்டு ஒரே ஆய்க்கனை” 

“ஐயோ! ஏகாம்பரம்! உம்மை ஏ.ஓ எல்லா விசாரித்தவர் 

“நல்ல வேலை செய்தியளே! ஏன் இவ்வளவு நேரம் சொல்லவில்லை?. ஏகாம்பரம் பரபரத்தார். 

தன்னைச் சுதாரித்துக்கொண்டு நிர்வாக உத்தியோகத்தரின் அறைக்குள் ஏகாம்பரம் நுழைந்தார். 

“குட் மோணிங்”என்றார்.”சேர்” என்றெல்லாம் தலைப்பாகை கட்டுவதில் ஏகாம்பரத்திற்கெல்லாம் உடன்பாடில்லை. 

‘குட் மொணிங் மிஸ்டர் ஏகாம்பரம். என்ன சீற்றிலை ஆளையே காணவில்லை! 

“வ…வந்து வயிற்றிலே ஒரே குளறுபடி. இஞ்சி போட்டுப் பிளேன் ரீ குடிக்க வேணும் போல இருந்தது”. 

“அதுதான் வீட்டுக்குப் போய் வருகிறீயளோ?” 

“ஐயோ! இல்லை. நான் ‘சுவைச்சோலை’யிலே போய் ஒரு நல்ல….”

“அது சரி மிஸ்ரர் ஏகாம்பரம்.அடிக்கடி வயிற்றுக் கோளாறு வருகிறதுதான் மோசம். ஊரோடு உத்தியோகம் பார்த்தால் இந்தத் தொற்றுநோய் இருக்கத்தான் செய்யும். எதற்கும் ஒரு எல்லை உண்டில்லையோ?. 

இன்று வெள்ளிக்கிழமை. ‘பப்ளிக்’ வருகிற நாள். பொது சனங்களை நாங்கள் அசௌகரியத்துக்கு உள்ளாக்கக் கூடாது. அதோட நாங்களும் எங்களின்ர கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேணும். நீங்களெல்லாம் எங்களில் பார்க்க அனுபவம் நிரம்பப் பெற்ற ஆட்கள். 

நாங்கள் இதெல்லாம் உங்களுக்குச் சொல்லித் தரவேணு மென்றில்லை… 

ஒருமாதிரியாகச் சிரித்துக் கொண்டே கீழ்க்கண்ணால் நோக்கியபடி ஏதோ எழுதுவதில் சுறுசுறுப்புக் காட்டியபடி கூறினார். நிர்வாக உத்தியோகத்தர் சற்குணம் நிர்வாக உத்தியோகத்தர் வேலையில் மூழ்கி விட்டார்.அறையை விட்டு வெளியேறிய ஏகாம்பரத்துக்கு எரிச்சல் இப்போது குறைந்திருந்தது. நிர்வாக உத்தியோகத்தர் அத்தோடு விட்டாரே என்ற நிம்மதிப் பெருமூச்சு இதயத்தைக் குளிர்வித்தது. 

“அநியாயமாக இந்த ஆளைப்பற்றி அவதூறு எண்ணிவிட்டேனே. அவனல்லவோ மனிதன்.” என்று மானசீகமாகப் பாராட்டு வழங்கியபடி இருக்கையில் போய்த் தொப்பெனச் சாய்ந்தார் ஏகாம்பரம் 

“ஆ! நல்ல கதை. இவர் என்ன என்னிலை பிழை பிடிக்கிறது. நாங்கள் ஒரு நேரம் விளையாடினாலும் ஒரு நேரம் இருந்து வேலையை முடித்துக் கொடுக்கிறம் தானே! இவர் என்ன ‘ஓவர் ரைம்’ தருகிறாரோ 

‘லியூலீவ்’ தருகிறாரோ? நல்ல கதை ஆங்….. 

“எப்படி என்றாலும் உன் வாயச்சவடால் மட்டும் குறையாது. உந்த வாயும் உனக்கு இல்லையெண்டால் பெட்டைநாய் கொற கொற எண்டு இழுத்துக் கொண்டு போய்விடும்…. ம். இராமலிங்கம் அலுத்துக் கொண்டார் 

“சும்மா போங்கோ அண்ணை!” என்று வெகுளியாகச் சிரித்த ஏகாம்பரம் குரலைச் சற்றே தாழ்த்திக்கொண்டு. 

“அண்ணை விஜயம் தெரியுமோ? ஏ.ஓ வின்ர தங்கைக்குக் கல்யாணம். ‘காட’ அடிச்சு கல்யாணம் கொஞ்சம் ‘டீங்’காகச் செய்யப்போவதாகக் கேள்வி. 

“அதுக்கென்ன! நாங்களும் போய் மணமக்களை ஆசீர்வதிச்சிட்டு வருவம்.

ஏகாம்பரத்துக்கு எரிச்சலாக வந்தது. 

என்னண்ணை கதை விளங்காமல் ஏ…ஆள் கொஞ்சம் சாதி இளக்கமெல்லோ …நாங்கள் போய் சபை சந்தியில அளவளாவி செம்பெடுத்து வாய் நனைச்சு ம்…ம்… எனக்கெண்டா நல்லாகப்படயில்லை. அதுதான் … ஏகாம்பரத்துக்கு ஆத்திரம் உச்சிவரை ஏறியது. எரிச்சலுடன் .. என்ன காணும் நீர்! நாங்கள் இப்போ எங்கே இருக்கிறோம்? 

“கலியுகத்திலை….” 

“இல்லை ஹெலி யுகத்திலை ..கணினி யுகத்திலை..புத்தாயிரம் ஆண்டில்..லோகம் சுருங்கிக்கோண்டு வருகிறது. ஆனால் நம் மனப்பாங்கு விரிவடையக் காணோமே! இந்தக் காலகட்டத்திலும் உந்த சாதி சம்பிரதாயங்கள் பார்த்துக்கொண்டு வெட்கக்கேடு…சீ….” 

“நீங்கள் போற்றுகிற சாதிக்காரங்கள் எல்லாம் செய்கிற அட்டூழியங்களை இந்தக்கந்தோருக்குள்ளை நாங்கள் பார்க்கிறோம் தானே! 

“அது சரி ஏகாம்பரம். இப்ப ஒரு கதைக்குச் சொல்லுறன். உன்ர மகள் ஒரு இளக்க சாதிக்காரனைக் காதலிச்சிட்டாள் எண்டு வைப்பம். நீ என்ன செய்வாய்? காதலை…..” 

ஏகாம்பரம் இடை மறித்தான். 

“அதுதானே நான் சொல்லி வைத்திருக்கிறன். காதலிச்சாலும் புளியங் கொம்பாய்ப் பார்க்கச் சொல்லி ….” 

“அட விடுபேயா! காதல் சொல்லிக் கொண்டே வரும். சாதி சமயம் பார்த்துக்கொண்டே வருகிறது? சரி.. சரி… நீயும் உன்ட சட்டதிட்டங் களும்…..ஆனால் ஒன்று மட்டும் சொல்லுறன். நாங்கள் காலஓட்டத்தோடசேர்ந்து போக வேணும் இல்லை என்றால் நாங்கள் தான் வாழ்க்கையிலை பின்தங்கி விடுவம். 

“அண்ணை! எனக் கொரு ‘ஐடியா வருது. 

“எனக்குத் தெரியும், உன்னுடைய மோட்டு மூளைக்கு இப்படிக் கோணல் ஐடியாக்கள் சட்டுப் புட்டென்று முளைக்குமென்று.” 

“கதையைக் கெளுங்கோ! கல்யாண வீட்டு நேரம் அவையின்ர ஆட்களோடு கசமுசாவெண்டு பிளங்க எங்களுக்கு சரிப்பட்டு வராது. பார்க்கிறவை கேட்கிறவைக்கு மறுமொழி சொல்லித் தப்பேலாது. 

“அப்பிடி என்றால்? 

“கல்யாண வீடு அன்று போக வேண்டாம். அமளி அடங்கின பிறகு அடுத்த நாள் மாலை நாங்கள் இரண்டு பேரும் ‘சிமிக்கிடாமல் போய் வருவோம் “சரி அப்பா! உன் இஷ்டம் எப்படியோ அப்படியே ஆகட்டும். அடுத்த நாள் நாங்கள் போய் வரலாம். அவர் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார் அத்தனை பரந்த மனம் அவருக்குண்டு” என்றார். 

அவர்கள் தீர்மானித்தபடி திருமணநாளுக்கு அடுத்த நாள் இருவரும் மாலை ஐந்தரை மணியளவில் நிர்வாக உத்தியோகத்தர் சற்குணத்தின் வீடு தேடிப் புறப்பட்டனர். 

திருமணவீட்டு வாயிலுக்கு வந்துவிட்டார்கள். கல்யாணவீட்ட அமளி அடங்கி ஒரு அமைதி நிலவியது. கட்டிய குலை வாழையும் பந்தலும் அப்படியே இருந்தன. வாயில் நிறைகுடம் அகற்றப்பட்டு தரை ‘பளிச்’சென்று சுத்தமாய் இருந்தது. 

நிர்வாக உத்தியோகத்தர் சற்குணம் வாயிலில் நின்று இருவரையும் கை கூப்பி வரவேற்றார். 

“வாருங்கோ! வந்து உட்காருங்கோ. கல்யாண தம்பதிதான் இல்லை. இவை மாப்பிள்ளை வீட்டுக்கு ‘கால் மாறிப் போய் விட்டினம்” சற்குணம் சொல்ல. 

“அதனாலென்ன. அவை எங்கிருந்தாலும் எங்கள் ஆசீர்வாதம் உரித்தாகட்டும். வாழ்த்துக்களைக் ‘கொன்வே’ பண்ணிவிடுங்கோ” எனக் கூறியபடியே கொண்டுவந்த பரிசுப் பொருள் அடங்கிய “பார்சலை’ சற்குணத்திடம் கையளித்து விட்டு அமர்ந்தனர் 

நன்றி நவிலலுடன் பரிசை ஏற்றுக்கொண்ட சற்குணம். ஏதோ சம்பிரதாயத்துக்கு என்றில்லாமல் மனப்பூர்வமாகவே சொன்னார். 

“இதெல்லாம் என்ன வேலை பாருங்கோ. ஆளுக்கு ஆள் தான் முக்கியம். பரிசு, அன்பளிப்பு எல்லாம் இரண்டாம் பட்சம்தான்” 

இவர்களுக்கென்னவோ சற்குணம் ‘பொடி’ வைத்துப் பேசுவது போலிருந்தது. குற்றமுள்ள நெஞ்சு. 

அதன் பின் நாட்டுநடப்பு, அரசியல் அலசல், அலுவலக நடவடிக்கைகள் என்று பேச்சு காரசாரமாகவும் சிலசமயம் சுவாரஸ்யமாகவும் சில சமயம் நகைச்சுவையாகவும் நடந்தது.

பேசிக்கொண்டே இருந்த சற்குணம் உள்ளே சென்றவர், இரு தட்டுகளில் பலகாரம் கொண்டுவந்து வைத்தார். 

அப்போதுதான் சுட்டெடுத்த அரைத்த உழுந்துவடை பருத்தித்துறைக்கே உரித்தான அந்தத் தட்டைவடை, அரியதரம், சீடை சிற்றுண்டி வகைகள். அத்துடன் ‘கேக்” துண்டுகளும் பிஸ்கட் வகைகளும், பழங்களும் கண்ணைப்கறித்தன. 

ஏகாம்பரமும் இராமலிங்கமும் ஒருவரை ஒருவர் அர்த்தபுஷ்டியுடன் நோக்குவதை சற்குணம் கவனிக்கவில்லை. 

சில கணநேரம் ஒருவித சலனம். எல்லோர் மனதிலும். ‘பட்’டென இராமலிங்கம் தனக்கு வழங்கப்பட்ட தட்டிலிருந்து உழுந்து வடையை எடுத்து நோகாமல் கடித்தார். 

ஏகாம்பரத்துக்கோ இக்கட்டான நிலைமை. வேறு வழியின்றி தனக்குரிய தட்டில் கை வைத்தார். அவர் கை தானாகவே சென்று ‘பிஸ்கற்’றை எடுத்தது மெல்ல மெல்ல மென்று கொண்டிருந்தார். கூடவே ஒரு பழமும். அதற்கிடையில் இராமலிங்கம் தட்டிலுள்ள பலகாரங்களில் பாதிக்கு மேல் காலி செய்துவிட்டார். 

இராமலிங்கம் பட்சணங்களை எடுத்து உண்ணும் அதே வேளை. 

வீட்டுத்தயாரிப்பான பலகாரங்களை ஒதுக்கிவிட்டு கடைத்தயாரிப்பான பிஸ்கற்றையும் பழத்யுைம் மட்டும் சாப்பிட்டுத் தன் ஆசாரத்தன்மையை சாமர்த்தியமாக அமுல்படுத்திய ஏகாம்பரத்தின் சமயோசித்தை மனதிற்குள் வியந்தவாறே பருக என்ன கொண்டுவரட்டும் என்ற பாவனையில் “குடிக்க…” என்று இழுத்தார் 

“எனக்கு ஒன்றும் வேண்டாம். வயிறு ஏதோ கோளாறு பண்ணுது” என்று தயங்கினார் ஏகாம்பரம். இராமலிங்கத்துக்கு மட்டும் குளிர்பானப் பெட்டியிலிருந்து எடுத்துவந்த ‘பெப்சி’ போத்தலை உடைத்துக் கொடுத்தவர் எதேச்சையாகத் திரும்பி வெளியே பார்வைறை ஓடவிட்டார். 

இத்தனை வேகமாகக் கடுகடுத்த மழை இப்போது ஓய்ந்திருந்தது. 

மழை விட்டும் என்ன! தூவானம் விடவில்லையே!. 

– சுடரொளி, பங்குனி 26 – சித்திரை 1, 2002.

– என்னுயிர் நீ தானே! (சிறுகதைத் தொகுதி), முதலாம் பதிப்பு: மார்கழி 2018, கவிதா நிலையம், தும்பளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *