தாய்
கதையாசிரியர்: செ.கதிர்காமநாதன்
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 15, 2025
பார்வையிட்டோர்: 40
(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதல் வெடி –
இரண்டாம் வெடி –
சம்மட்டி ஒலிகள் – கல்லுப் பிளந்து துண்டம் துண்டமாகி, வெண்மையும் மண் செம்மையுமாக – மண் மேட்டிலே குவிகின்றன.
மூன்றாம் வெடி –
தொடர்ந்து சம்மட்டி ஒலிகள்…
நாலாவது –
சீறிவிட்டு தோல்வியிலே அமைதியாகிறது.
கமுகம் மடல்களை வளைத்து முழங்காலொடு கட்டி உடலெங்கும் மாப்புள்ளிகளாக அழகுக் கோலத்தில் நிற்கும் நாலைந்து கல்லுப்புரட்டிகள்….
அகலவாய்களைப் பிளந்துகொண்டு, சிதையும் நிலையில்’ முழிக்கும் கற்பாறைகளில் அவர்களின் கைகளின் அமுக்கம் சம்மட்டி அடி அழுத்தத்தில் பலம் காட்டுகின்றது.
சில்லவல்லமாகிச் சிதையும் கற்கள்.
அதுதான் அவர்கள் தொழில்
தலையிலே இருந்த செம்பாட்டுத் துவாயை கழற்றி ஒரு உதறு உதறி வாயை முகத்தை உடலைத் துடைத்துக் கொள்ளுகிறான் சின்னப்பன்.
வியர்வை நாசியில் குபீரென்று அடிக்கின்றது.
நித்தம் நித்தம் துடைத்து அது அவனுக்குப் பழக்கம்.
துளை கம்பியைச் சுழற்றிச் கழற்றி சிறு சுத்தியலால் கல்லைத் துளைத்து துளைத்து மறு வெடிக்கு தயார் செய்ய அவன் கைகள் துரு துருவென்று இயங்குகின்றன.
பார்வை மட்டும் வான் முகட்டில் செம்மையத் தேடுகிறது.
சோர்ந்து போன அவனுள்ளத்தைப் போல, நம்பிக்கை தளர்ந்து குமுறிக்கொண்டிருக்கும் அவன் எண்ணத்தைப் போலக்கைகளும் தளர்ந்து, சம்மட்டியைத் தூக்கிக் கற்பாறையில் ஒரு ஓங்கல் ஓங்கிக் கற்களை உடைத்தெறியத் திராணியற்றுச் சோர்கின்றன. கால்களிலும் கைகளிலும் முதுகிலுமாக’ விண் விண்ணென்ற வலி……
“எப்பதான் எங்களுக்கு விடிவு வருமோ…….? சும்மா சும்மா கல்லோடே மாரடிச்சு, கையும் காலும் கல்லாப் போனதுதான் மிச்சம்…. நேற்று பறந்து வந்து கல்லு அடிச்ச நோ இன்னும் மாறயில்லை…… நிம்மதியா மூலைக்குள் படுக்கமுடியாது சீ என்ன வாழ்க்கையடா….” வயிற்றுக்காக வயிறு இளைக்க உடல்சோர உழைத்துத்தானே ஆகவேண்டியிருக்கிறது? இல்லாவிட்டால்….?
“சரி பொழுது பட்டுப் போச்சட….வாருங்கோ போவம். மிச்சத்தை பாப்பம்….” சம்மட்டிகள் ஓய்கின்றன.
கமுக மடல் ‘காலணிகள் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. தளர்ச்சியான நடை. “இந்த அலுப்புக்கு இரண்டு போத்தில் அடிச்சுப் போட்டுப் போவம். களைப்பு பஞ்சாப் போயிடும்…. அப்படியெண்டாத்தான் என்ரை உடம்பு நானைக்குத் தாக்குப் பிடிக்கும்……
எதிரே கள்ளுக்கொட்டில் கள்ளுக்கொட்டிலைச் சுற்றியுள்ள பாவட்டைகளில் தூக்கணாங் குருவிகளின் கூடுகள் போன்று தொங்கும் பனையோலைப் பிளாக்கள்….. அசுரகதியில் தங்களுடைய பிளாக்களை இனங்கண்டு அவற்றை இருகைகளாலும் ஏந்தி ஒரே இழுவையில் கள்ளின் ருசியை ருசித்து….
‘இஞ்சார், நீ இனிக் கள்ளுக் குடிச்சிட்டு இங்கை வரக்கூடாது. சும்மா பினாத்தி அக்கம் பக்கம் பெண் பிரசு இருக்கிற இடத்திலை….’
‘அவளவை இருந்தா எனக்கென்னடி…? என்ன வேணுமாம்…. தெரியலை என்ர குணம்?’
‘மூதேசி….. பிரமசத்தி குடிச்சிட்டு வந்து இண்டைக்கு அடுப்பிலை உலையும் வையன்….. பாப்பம்…….
கள்ளில் அவன்
கள்ளுப்பிளா வாயுதட்டருகில் செல்லத் தயங்குகின்றது.
நீண்ட நேரம்… சாப்பாடு கேட்கப்படும்.
பசி…
வெறி…
மயக்கம்.
மயக்கம்.
பன்னிரெண்டு மணிக்கு அவள் தோளில் அவன் கரங்கள் அதன் ஸ்பரிசத்தில் வெறி நுகர்வைவிட வெறி……
“இனி குடிக்காதை…. ஒழும்பி வா சாப்பிட. ஒழும்பு…, கோபம் வேண்டாம் வாவன்……! கெஞ்சல்
மறுநாள் பழைய கதை.
“என்னடா சின்னப்புக் குடிக்காமை யோசிக்கிறாய்? மனுஷியைப் பத்தியோ இப்ப என்ன சும்மாவோ? ம்….. உதுக்கெல்லாம் யோசிக்கிறதோ? பொடியல் தனிய இருக்குங்கள்…. கெதியாய் போய்ச்சேர்…”
“போ……”
“போறன்….”
அம்பலன்வெளி அவர்கள் இராச்சியமாகிறது……
கிராயில் கடலை
கல்லுடைத்த களைப்பிலும் அதை போக்கடித்த கள் தந்த வெறியிலும் கூட…. சின்னப்பனின் கண்கள் கடலையை மொய்க்கின்றன.
செம்மை நிற பிள்ளைத் தாழையிலே, பூத்துக் குலுங்கும் தாளம் பூக்கள்…
அந்தத் தாளம் பூக்களைப் பிடுங்கி, சுண்டல் கறிக்கு வீட்டிற்குக் கொண்டு போனாலென்ன என்ற மனத்தூண்டல்
மறுகணம்
சலிப்பு
‘வீட்டிலை காய்ச்சிறதுக்கு யார் இருக்கினம் அவளும் ஒரு மாதமோ இரண்டு மாதமோ அரைவாசி வருஷமா மயிலிட்டியிலை போய் சுகமில்லாமக் கிடக்கிறாள்….. பொடிச்சி ராசுவாலை ஏலுமோ….? பாவம் குழந்தைப் பொடிச்சி…..”
ராசு-
மாணிக்கம்?
அவனுக்குப் பிடித்தமான தாளம்பூ வறுவலின் மனம் நாசியைத் துளைக்கின்றது…..
இஞ்சார் நீ கள்ளுக் குடிக்கிறதெண்டா என்னாலை ஒண்டும் செய்ய ஏலாது. உழைக்கிற காசும் மிச்சமில்லாமை உன்னைப் போல எந்த ஆம்பிளை இருக்கிறான். மாணிக்கத்தின் முணுமுணுப்பு.
அவளுக்காக குடிக்காமல் நேரகாலத்தோடு குடித்தாலும் வெற்றிலையைச் சப்பிக் கள்ளு நெடியின் தன்மையை மறைத்துக்கொண்டு நல்லபிள்ளையாகிறான் சின்னப்பன். இல்லையென்றால் –
சண்டை
இன்று இராசு
அவள் குழந்தை
அவளில் அவள் இல்லை. ஏதோ இருக்கும் அரிசியை போட்டிடித்து நாலு மிளகாயை அம்மியிலே வைத்து அரைத்து சம்பலென்ற வடிவில் கறியாக்கி அவன் அளிக்கும் அமுதம்…
மாணிக்கம், நீயேன் சுகமில்லாமப் போனாய்….?
தாளம் பூவினைத் தீண்டப்போன அவன் கைகள் அதை தீண்டவில்லை. கருகி வெதும்பிய கத்தாழைகளோடு புழுதியாகிக் கிடந்த சாம்பல் மண் நேற்றிருந்த உடலின் இன்றைய கோலமொன்றைப் பறைசாற்றுகின்றது.
சாம்பல்?
சாம்பல் சிரிக்கும் முகம்!
பதினெட்டு வருடங்களுக்கு முன்பு சாம்பலாகிப் போன அதே முகம்.
அப்பா…. அப்பா…. எனக்கு பீப்பி வாங்கித்தா அப்பா.. ஊத ஆசையாயிருக்கப்பா.
வல்லிபுரக் கோயில் வெண் மணல் புழுதியில், தன்னிச்சையாக இன்ப வெறியிலே நாதவெள்ளம் பரவுகிறது. ‘பீப்பி’ ஊதிய கரங்களில் சாம்பல்.
வெளியிலே மாணிக்கம் அவளின் பாடப்படி சமையல் செய்யும் கன்னிமுயற்சி. மூத்தவள் – கனகம் – குடும்பப் பெண்ணாகிறாள்.
தீ நடுவில் தாய்ச்சி.
‘அம்மா எங்கேயணை தேங்காயெண்ணை… நான் பப்படம் பொரிக்கிறன்….’
விறாக்கியிலை முதல் தட்டிலை போத்தில் இருக்கும் பார்.
பிஞ்சுக்கரங்களின் வேலைத்துடிப்பு.
மூடியைத் திறந்து தாய்ச்சிக்குள் எண்ணையை ஊற்ற, என்ன தாய்ச்சியும் எரியக் கூடியதா? அது ஏன் தீக்குள்ளாகி உடும்பு நாக்கைப் போல் நீளவேண்டும்!
‘ஐயையோ என்ரை அம்மா!’
Digitized by Noolaham Foundation.
மண்ணெண்ணை நெடி
பாவாடையில் தீ!
தீயின் வெம்மை தணியவில்லை.
பட்டு உடல் வெந்தது…. கருகியது… கடைசியில் உருவே அழிந்தது.
அவள் அவனின் முதல் உற்பத்தி.
இன்று அவளிருந்தால் தாயாகி இருப்பாள்… அப்பவே என்ன துடியாட்டம் ராசு அவளுக்கு நேர்மாறு.
அவள் சாம்பல் மண்ணிலே எத்தனையோ சாம்பல்
தேனப்பன் தாழையை பார்க்கிறான்.
தாழையிலே தலை நீட்டும் பூக்கள்?
அது அவளை அணைத்த தீ நாக்குகளா?
‘அப்பூ எணை அப்பூ’
பதினெட்டு வருடங்களாக கேட்க மறந்த குரல்.
“ஐயையோ என்ரை ராசு..நீயும். நீயும்.. வேண்டாமடி குழந்தை. நீ சமைக்க வேண்டாம். வேண்டாம்.
இரண்டாவது உற்பத்தி இராசு. அவள் உடலிலும் தீயா?
இ…ரா….சு….”
தலையில் சுடலை மடத்துாண் மோதுகிறது.
அவன் குப்புற விழுகிறான். வெறி மயக்கத்தில் சுடலை. மடத்திலே நிம்மதியான தூக்கம்.
நித்தம் நித்தம் சின்னப்பன் இரவில், குடிசையிலே இல்லாமல் நெடுநாள்.
இராசுவுக்கும் அவன் உடன் பிறப்புகளுக்கும் அது பழக்கம். சின்னப்பன் இருந்தாலும் ஒரே பேத்தல்.
இராசுவுக்கு சின்னஞ்சிறு வயதில் உலகம் சலிப்பாகிறது.
முன்பு என்றால் மாணிக்கம் பக்கத்திலே படுத்தால்தான் அவள் இருட்டிற்குள் நிம்மதியாக பயமின்றிப் படுப்பாள்.
இப்பொழுது அவள் தாய் இல்லையா?
அவளைச் சுற்றி அவள் உடன் பிறப்புக்கள்
சின்னப்பன் இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன இராசுதான் அவர்களின் தாய். துன்பத்தை மறைத்துக் கொண்டு சிதைந்துபோன இளம் உள்ளத்தின் ஆற்றாமையில் அவளுக்கு மௌனமான விபரிக்க முடியாத துயர அமுக்கங்கள்…….
‘எணை அம்மா….. நீயேனணை எங்களை விட்டுட்டு ஆசுபத்திரிக்கு போனநீ…? இஞ்சை நாங்கள் படுற பாட்டம்……? அப்பவும் தன்ரை பாடு…. என நாங்கள். எணை நாங்கள்….” பேட்டுக் கோழியின் இறக்கைக்குள் அணைந்து கொண்டு முடங்கிக் கிடக்கும் குஞ்சுகளாக அவள் உடன் பிறப்புகளும் அவளும்……
விடிவெள்ளி பூத்த நேரம் மக்கிய இருளில் வெறி கலைந்து எழுந்து வருகிறான் சின்னப்பன். நிசப்தம்
சிறு விளக்கின் சிறு ஒளி. அந்த ஒளியிலே அவன் இராசுவையும் மற்றக் குழந்தைகளையும் ஏறிட்டுப் பார்க்கிறான்… அந்தக் காட்சி அவன் நெஞ்சில் உவகையாகிறது… உவகையோடு துயரமாகிறது…
என்ன மனுஷன் நான்….? சும்மா குடிச்சிட்டு இப்படித் திரிஞ்சா….? என்ன மாதிரி என்ரை பிள்ளையள் வாடிட்டுதுகள்…. அவளையும் போய் கனகாலம் பார்த்து…..
கொஞ்சக் காசு கடன்பட்டு டாக்குத்தரையும் பார்த்து சொல்லிக் கில்லிப் பாப்பம்…… கவனமெடுப்பான்… நாளைக்குப் பாப்பம்…. போய்…. நாளைக்கு….’
மாணிக்கம், படுக்கையில் அவளுடைய மயக்கமான உணர்வு நிலையில் ஆஸ்பத்திரிக் கட்டடங்கள் மறைகின்றன……
முதல் வெடி
இரண்டாம் வெடி
மூன்றாம் வெடி..
ஐயையோ……..
பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு ஏறமுடியாமல் பசிக்களையிலே திராணியற்றுச் சோர்ந்து சுருண்டு விழுபவன் சின்னப்பனா?
மரங்கள், தடிகள் கீலம் கீலமாக தூக்கியெறியப்படுகின்றன….. அதோடு செங்குருதி வெள்ளத்திலே, மேட்டுபிரதேசத்தில்….
“இரத்தம் இரத்தமா…?”
‘என்ன? இரத்தம் போலத் தீ….?
‘இராசுவா….?’
‘கனகமா….?
‘இராசு இல்லை கனகம் இல்லை… இராசு’
பயங்கர அலறல்,
எல்லாப் படுக்கைகளும் ஒரு கணம் கிறீச்சிடுகின்றன. பார்க்கக் கூடாததை பார்க்க விரும்பாமல், கிலி கொண்டு பரபரப்பு அடைபவர்களுமாக.
அவள் படுக்கையில் இரத்தம்.
கட்டடங்களைப் பிளந்தெறியும் ஓங்காளச் சப்தம் ஆஸ்பத்திரியில் பரபரப்பு… கால்சட்டையை சரிசெய்து கொண்டும் ஓடும் டாக்டர்கள்….ஊசிகளும் கையுமாக வெண்உடை மோகினிகள்…மாணிக்கம் செத்துப் பிழைக்கிறாள். அவள் எண்ணங்கள் கனகமா? இராசுவா…? சின்னப்பனா…?
இதில் அவளைக் கொல்லும் கிருமிகள்…
நோயா… எண்ணங்களா. எது… அது?
செ.கதிர்காமநாதன்
அமரர் செ. கதிர்காமநாதன் ஈழத்தின் சிறந்ததொரு படைப்பாளி. அவரது சிறுகதைகளில் யாழ்ப்பாணக் கிராமங்களே பகைப் புலமாக அமைந்திருக்கும். ஈழநாடு இதழில் அவரின் ‘நினைவு மின்னல், தாய்’ என்ற இரு சிறுகதைகள் வெளிவந்துள்ளன. கொட்டும்பனி அன்னாரது சிறுகதைத்தொகுதி. நான்சாகமாட்டேன் இவரது மொழி பெயாப்பு நாவல்.
– 06.09.1966
– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.