கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 15, 2025
பார்வையிட்டோர்: 35 
 
 

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவு மரித்து விட்டது. பகல் பொழுது இன்னும் வரவில்லை இரவின் இறப்பிற்கும். விடிவின் ஜெனிப்பிற்கும் இடைப்பட்ட வேளை. அது அம்மல் வேளை. காகங்கள் ஒன்றோ இரண்டோதான் கரைய ஆரம்பிக்கின்றன. முருகு எழுந்து, தட்டியில் செருகியிருந்த சேலம் பீடி ஒன்றை எடுத்து பற்ற வைத்துக் கொண்டு பொழுது விடிந்த புது நாளைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தான். 

அடுத்தமாதம் முதலாந் திகதியோடு முருகு தற்பொழுது இருக்கும் வீட்டின் குத்தகைக் காலம் முடிவடைகின்றது. முன்பு எத்தனையோதரம் முருகுவின் கெஞ்சலுக்கு மிஞ்சி ஒன்றும் செய்ய முடியாத நிலையில் குத்தகைக் காலத்தை நீடித்திருந்தும் இந்த முறை, முருகுவின் மனச்சாட்சியே விட்டுக்கொடுத்ததனால் இறுதித்தடவையாகி வீட்டை விட்டுக் கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலையும் ஏற்பட்டுவிட்டது. வீட்டை விட்டு எழும்புவதற்கு இன்னும் ஒரு கிழமைதானிருக்கிறது. அதற்கு முன்பதாக எங்காவது ஒரு காணி பார்க்கவேண்டுமென்ற சிந்தனை மனத்தை நசிக்கின்றது. எனவே முருகு தனக்குத் தெரிந்த இடங்களை எண்ணிப் பார்க்கிறான். 

செல்லத்தம்பி மூப்பரின் மேற்பார்வையில் சும்மா கிடக்கும் பிள்ளையார் கோயிலைக் கேட்டு அதில் ஒரு கொட்டில் கட்டுவதாக முடிவுக்கு வந்தான். 

சாறுபோக்கிய பனம்பழத்தின் தோற்றம் கொடுக்கும் தலையை மெல்ல வாரிவட்டு, தனது அகன்ற நெற்றியில் உத்துள்ளனமாக திருநீற்றை அள்ளி அப்பி, கற்பூரம் எரிந்த கல்லில் தொட்டு ஒரு கறுத்தப்பொட்டும் வைத்து, வாயில் புனிதமாக வெற்றிலையும் போட்டுக் கொண்டு, வழக்கமாக மரக்கறி சாமான் கொண்டுவரும் லெச்சுமியோடு சல்லாபமாக ஏதோ கதைத்துக்கொண்டிருக்கின்றார். செல்லத்தம்பி மூப்பர், மூப்பரின் சிரிப்புச் சத்தம் கேட்ட முருகுவுக்கு மனதிற்குள் ஆனந்தம். வந்த காரியம் வெற்றிதான் என்ற எண்ணத்தோடு மூப்பரின் படலையைத் திறக்கின்றான். 

லெச்சுமியோடு கதைத்துக் கொண்டிருந்த மூப்பர் முருகுவைக் கண்டவுடன்…. 

“எட முருகு… என்ன இந்தப் பக்கம்?” – என்று கேட்டார். 

“சும்மா உங்களிட்டைதான் ஐயா ஒரு அலுவலாய் வந்தனான்.” 

“என்ன அலுவல் சொல்லு…. சொல்லு” 

“உங்கடை புள்ளையார் கோயில் வளவு சும்மாதானே ஐயா கிடக்கு, அதை எனக்கு தந்தியளெண்டால் நான் ஏதும் மாதா மாதம் தந்து கொண்டு அதுக்குள்ளே ஒரு கொட்டில் கட்டி இருப்பமெண்டு கேக்கத்தானய்யா வந்தனான்….” 

“ஓ…. அதுக்கென்ன என்னவோ பெருமானுக்கும் காசாப் போச்சு. அதுகும் சும்மா தானே கிடக்கு. மாதம் மாதம் அஞ்சைப்பத்தைத் தந்திட்டு என்ன…! ” 

“ஓ….மய்யா என்னவோ என்னாலை இயண்டளவு தாறன். அந்தப் பெருமானுக்கும் தெரியும் எங்கடை நிலமையைப் பற்றி…” 

“அப்ப வேறை யென்ன….?” “ஒண்டுமில்லை அய்யா….. சந்தோசம் நான் போட்டுவாறன்…” 

வாய் நிறைய வெற்றிலை துப்பல் இருந்ததால் தனது இடது கைவிரல் இரண்டைக் கெவராக வாய் உதட்டில் வைத்து அருகில் நின்ற தென்னம் பிள்ளை வேரோடு சாய்ந்து துப்பிவிட்டு மேலும் எச்சிலை காறியபடி தலையை ஆட்டுகின்றார் செல்லத்தம்பி மூப்பர். 

முருகு பெரிய புளுகோடு வீடு நோக்கி வருகின்றான். குசினிக்குள்ளிருந்து வெளிவந்த அவன் மனைவி பொன்னம்மா வெளிவந்து, முருகுவின் வாயில் நெளியும் புன்சிரிப்பைக் கண்டதும், “காரிய பழம்போல -?” என்றாள். 

இதைக் கேட்ட முருகு “இதென்ன பின்னே காயோ? முருகு வெளிக்கிட்டானெண்டால்… கி..கி…” முருகுவின் மனத்தளத்திலிருந்து எழுந்த சந்தோஷம் சிரிப்போடு சங்கமிக்கிறது. முருகு சிரிப்பதைக் கண்டு அவளும் சிரிக்கின்றாள். தென்னம் பாளை விரிவதைப் போல. 

கதிரவன் தீப்பிழம்புகளை அனலாகக்கக்கும் வேளை, அந்த வெப்பத்தில் உடல் தசை பொரிந்துருக, முருகு தனது வண்டியில் சாமான்களை ஏற்றிக் கொண்டு செல்லுகிறான். அவனுக்குப் பின்னால் அவனுக்குச் சிறிது கையுதவி செய்யக் கூடிய வயதடைந்த சிறுவன் அவன் மகன் குணமும் ஏதோ சாமான்களைத் துாக்கிக் கொண்டு கோயில் வளவு நோக்கிப் போகின்றான். 

சாமான்களைக் கொண்டு வந்து சேர்த்தபின்பு இருவருமாக கொட்டிலைக் கட்டி முடிக்கின்றனர். கொட்டில் கட்டி முடிந்ததும் கர்ப்பவதியாயிருந்த பொன்னம்மா, தன் இளைப்பையும் களைப்பையும் பொருட்படுத்தாது அதை மெழுகி முடித்துவிட்டாள். 

இவ்வாறாக, முருகுப் பிள்ளையார் கோயில் வளவில் வந்து குடியேறி விட்டான். நாள் ஒன்றையொன்று விழுங்கிக் கடைசியில் மாதத்தைப் பிறப்பித்தது. மாதம் முடியாதோ என்று காத்துக்கொண்டிருந்த செல்லத்தம்பி மூப்பர், மாதம் முடியும் தறுவாயிலேயே வந்து விட்டார். அப்பொழுதுதான் முருகு தொழிலுக்குச் சென்று விட்டுத் திரும்பி, அடுப்பிலிருந்து இறக்கிய மீன்வற்றல் குழம்போடு சோற்றிலிருந்து ஆவி பறக்க உண்டு கொண்டிருந்தான். செல்லத் தம்பி மூப்பர் வருவதைக் கண்டதும் தனது உணவை அப்படியே நிறுத்திவிட்டு உடனே வெளியில் வந்தான். 

“என்ன முருகு இப்பத்தான் சாப்பாடு போலை?” 

“ஓமய்யா…. என்ன செய்யிறது….. இப்பிடித்தான்….” 

முருகுவின் வாழ்க்கைச் சுமை அந்த வாக்கியத்தில் பட்டும் படாமலும் இழையோடியது. 

“நான் சும்மா வளவை யொருக்கால் பார்த்துப் போவமெண்டு வந்தனான். முருங்கைத் தடியள், கமுகு, தென்னம் புள்ளையெல்லாம் நிறைய வெச்சுக்கிடக்கு… ஏதோ ஆடு காந்தாமல் பார்த்துக்கொள்….” 

முருகுவின் பிரயாசைக்கு ஒரு முலாம் பூசுகின்றார் மூப்பர். மூப்பர் முற்றத்தில் நின்ற படியே நாலாபக்கமும் கண்களை மேய விடுகின்றார். அந்த நேரத்தில் முருகுவின் மனைவி பொன்னம்மா தனது சேலைத் தலைப்பில் முடிந்து வைத்த ஐந்து ரூபாய்த்தாளை இரண்டு கைகளாலும் மூப்பரிடம் கொண்டுவந்து கொடுக்கின்றாள். மூப்பர் அதைப் பார்க்காமலே வாங்கி மடிக்குள் செருகுகின்றார். பார்க்காமல் வைப்பது பெரிய மனுசருக்குரிய குணமென்று மூப்பருக்குத் தெரியும். 

பொன்னம்மா கொடுத்த பணத்தை வெளியே வந்து பார்த்த மூப்பருக்கு, தான் எதிர்பார்த்ததிலும். அரைவாசி தான் கிடைத்ததால் மனதிலொரு வெறுப்பு அதை அவர் முகம் வெளிக்காட்டியது. முருகு தனது குத்தகை வளவில் தான் வைத்து உண்டாக்கிய காய் முருங்கை மரத்தில் காய்த்த முருங்கைக் காய்களை கட்டிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான். வழியில் மூப்பர் செல்லத்தம்பியும் தற்செயலாகச் சந்தித்துவிட்டார். 

“முருகு…. எங்கை முருங்கைக்காய் கட்டோடு?” 

“இதை கொண்டு விற்றுப் பார்ப்பமெண்டு சந்தைக்குப் போறனய்யா…” 

“சரி.. சரி… கொண்டு போ…” 

செல்லத்தம்பி மூப்பரின் கதையில் ஏதோ மறைந்திருந்ததை முருகு அவதானிக்க முடிந்தது. என்ன மூப்பர் ஒரு மாதிரிக் கதைக்கிறார். என்னத்தை அள்ளி வைக்கிறத்துக்கோ தெரியல்லை. தனக்கு இரண்டு முருங்கைக்காய் குடுக்கல்லையெண்டோ…. ச்சா…. பொன்னம்மா கொண்டு போய் குடுத்தாளே அண்டைக்கு … சரி பாப்பம்…. தனது மனதுள் ஒரு போராட்டத்தை நடத்திச் சென்றான் முருகு. 

முருகு கட்டோடு முருங்கைக் காயை கொண்டு சென்றதை கண்ட செல்லத்தம்பி மூப்பரின் மனத்திரையில் இவன் இந்த முருங்கைக் காய்களைக் கட்டுக் கட்டாய் கொண்டுபோய் வித்து நல்ல காசு சம்பாதிக்கிறான். எனக்குத்தான் மாதா மாதம் அஞ்சு ரூபாய் தாறான்’ என்ற எண்ணத்தினால் என்ற பொறாமைத் தீப்பிடிக்க அது ‘முளாசி’ எரிகிறது. முருகுவை அந்த வளவிலிருந்து எழும்புமளவிற்கு அது பரப்பிவிட்டது. ‘வாற மாதத்தோடை இவனை அனுப்பத்தான் வேணும்’ என்ற முடிவான எண்ணத்திற்கு வந்துவிட்டார். இத்தனையும் அந்த வளவை வேறு யாருக்காவது கூடிய குத்தகைக்குக் கொடுத்து அதில் தானும் ஒரு சிறு சம்பாத்தியம் தேடலாமென்ற அடிப்படையில் பிறந்த எண்ணங்கள் தாம்…

அடுத்த மாதம் முடிந்ததும் முருகுவே குத்தகைக் காசோடு மூப்பர் செல்லத்தம்பியின் வீட்டிற்குச் சென்றான். 

தடிமன் காய்சலுக்கு புளிக் கஞ்சி காய்ச்சி கோப்பையில் ஊற்றி குடித்துக் கொண்டிருக்கின்றார் மூப்பர். முருகுவைக் கண்டதும் கோப்பையை வைத்துவிட்டு முருகுவிற்கு கிட்ட வருகிறார். 

“முருகு…” 

“ஐயா…” 

“காசு கொண்டு வந்தனி போல……?” 

“ஓமய்யா…” 

முருகு காசைக் கொடுக்கின்றான். 

காசை வாங்கிய மூப்பர் அதை மடிக்குள் செருகுகின்றார். 

“இஞ்சை முருகு, ஒரு சங்கதியல்லோ…” 

“என்னய்யா….” 

“நான் சொல்றன் என்று குறை நினைக்காதை. உந்த வளவுக்கு மாதம் பனினைஞ்சு ரூபா தாறமெண்டு நேத்து ஒரு பகுதி வந்து அச்சாரமும் தந்திட்டுப் போகுது. உன்னாலை எங்கை பதினைஞ்சு ரூபா தர ஏலும். அதுவும் கூலி வண்டில் தள்ளுற உனக்கு… நீ வாற மாதம் முதல் வேறை வளவொண்டைப் பாக்கிறது நல்லது…. நரிக்குண்டு கனகத்திட்டே ஒரு வளவு கிடக்கெண்டு கேள்விப்பட்டன். அதை போய் கேட்டுப்பார்….” 

மூப்பர் செல்லத்தம்பி பேசிய போது அதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த முருகுவின் இரத்தம் கொதித்தது. தான் தனது தேக வலியையும் நேரத்தையும் பார்க்காது வெறும் கட்டாந்தரையாக கிடந்த கோயில் வளவில் முருங்கை தடிகளையும் தென்னம் பிள்ளை, கமுகு மரங்களையும் வைத்துத் தண்ணீரூற்றி வளர்த்துவிட, அதை வேறு யாராவது வந்து நோகாமல் பயனை அனுபவிப்பதா? உழைப்பவன் பெறாத ஊதியத்தை உழைக்காதவன் பெறுவதென்றால்…. முருகுவிற்குப் பொறுக்க முடியவில்லை. 

“என்னாலை இப்ப ஒழும்பேலாது ஐயா…” 

“என்ன!” மூப்பரின் புருவங்கள் உயிர் பெற்று சுருண்டு மேல் நோக்குகின்றன. 

“எனக்கு வசதியான நேரந்தான் விருப்பமென்டால் ஒழும்புவன்.” 

“ஓகோ அப்பிடியோ …. இந்த மாசம் முடிய வளவு விடவில்லையெண்டால் பாப்பம்…. அது பிறகு….” 

“நீங்கள் செய்யிறதைச் செய்யுங்கோ….” 

“நீ இப்பிடிப் பேசுற அளவுக்குப் போய்விட்டாய்.. உங்களுக்கு இடம் தந்ததுதான் பிசகு. இந்தா பார் இந்த நிமிஷம் விதானையைக் கொண்டு வாறன்…. 

விதானையை கொண்டு வந்து என்னய்யா செய்யிறது? நானென்ன சும்மாவா இருக்கிறன். மாதாம் மாதம் நில வாடகை தாறன். ஆர் வந்தாலும் எங்களை ஒழுப்பேலாது அந்தக் காலம் மலையேறி விட்டுது….” 

“என்னடா கனக்கப் பேசுறாய்… வலோற்காரமாய் இருந்துகொண்டு…” 

“ஐயா நான் கணக்குவழக்காகத்தான் பேசுகிறன். கோயில் வளவுதான் குத்தகைக்குக் குடுக்கிறியள். போய் வழக்கைவையும்… அதை மறந்து போனபடியால்தான் என்று சொன்னான்.” 

முருகு, மூப்பர் ‘ஐயா’ முன்னிலையில் மேலும் நிற்காமல் குத்தகை நிலத்தை நோக்கி, கோயில் வளவை நோக்கி, தர்ம பூமியில் தான் கட்டிய தன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருக்கிறான். மூப்பர் செல்லத் தம்பியின் பார்வை முருகுவை அவனது மறைவரை துரத்திச் செல்கிறது…. 

துரை சுப்பிரமணியன்

துரை சுப்பிரமணியம் முழுமையாகச் சிறுகதைத் தொகுதி ஒன்றினை வெளியிடுமளவிற்குத் தரமான சிறுகதைகளைப் படைத்துள்ளார். ‘எப்படியும் என் வாழ்க்கைப் பயணத்திற்குள் என் சிறுகதைத் தொகுதி ஒன்று வெளியிட வேண்டும் என்ற மன நெருடல் உண்டு’ எனச் செங்கை ஆழியானுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அவர் ஆசை இதுவரை நிறைவேறவில்லை.

– 07.04.1963

– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *