தமிழனுக்கு ஒரு கேள்வி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 3, 2025
பார்வையிட்டோர்: 70 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பேனாவை எடுத்துக் கொண்டு சற்று எழுதலாமென உட்கார்ந்தேன். வாசல் கதவில் யாரோ தட்டும் சப்தம் கேட்டது. 

“இந்த நேரத்தில் யாராக இருக்கும்…?” 

கையிலிருந்த பேனாவை மூடி வைத்துவிட்டு மெது வாக எழுந்து சென்று கதவைத் திறந்தேன். 

முன்பின் பரிச்சயமற்ற இளைஞனொருவர் ஒழுங்காக வாரப்படாத கிராப்பும், குறுந்தாடியும் தோளில் தொங் கிய துணிப்பையுமாக எதிரே நின்றார். அவரது கசங்கிய உடையும், எண்ணை வழுக்கேறியிருந்த முகமும் எனக்குள் ஒருவகை தயக்கத்தை வரவழைத்தது. 

இருப்பினும் அதனை வெளியே காட்டிக்கொள்ளா மல் “யாரைப் பார்க்க வேண்டும்…” என்று கேட்டேன் நிதானமாக. 

அவரோ என் பெயரையும், முகவரியையுமே அழுத்த மாக, அட்சரம் பிசகாமல் உச்சரித்தார். 

என் வியப்பு தீருவதற்குள் அவரே “நீங்கள் தான் ‘தேவி’யில் கண்ணீர்க் கதை எழுதுபவரா? உங்களிடம் சில நிமிடங்கள் பேச வேண்டும்” என்றார். 

“யார் இந்த இளைஞர்? இந்தக் காலை நேரத்தில் என்னிடம் எதைப்பற்றிப் பேசப் போகிறார்? ஏதாவது உளவுத் துறையைச்சேர்ந்தவராக இருப்பாரோ? ஒரு கணத்துக்குள் ஆயிரம் கேள்விக் கணைகள் நெஞ்சுக்குள் தோன்றிமறைய, அவருக்கு எதிரே கிடந்த கூடை நாற் காலியில் உட்கார்ந்தேன். 

என் தயக்கத்தையும், உணர்வுகளையும் தெளிவாகப் புரிந்து கொண்டவர் போல், “என் பெயர் சுதாகரன். வட இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிறேன்” என்றார். 

ஒவ்வொரு சொற்களையும் நிதானத்துடன் நிறுத்திப் பேசினார். 

என் மூச்சு நிம்மதியாக வந்தது. நிமிர்ந்து உட்கார்ந் தேன். 

“எப்பொழுது வந்தீர்கள்? எப்படி வந்தீர்கள்? படகில் வந்தீர்களா? கண்குத்திப் பாம்பு போல் தமிழ் இளைஞர் கள் மீதே குறியாக இருக்கும் இலங்கை ராணுவத்தினரின் கண்களிலிருந்து எப்படித் தப்பித்தீர்கள்?” பர பர வென்று நெஞ்சில் எழுந்த கேள்விகளை நான் கேட்பதற்கு முன்னால் அவ்வாலிபரே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார். 

“யாழ்ப்பாணத்துச் சராசரி இளைஞர்களில் நானும் ஒருவன். எழுத்துத் துறையிலும் சிறிது அனுபவமுண்டு. வேறு அதிகம் என்னைப் பற்றிச் சொல்வதற்கு எதுவு மில்லை”” என்று பேச்சை நிறுத்திக் கொண்டவர் வேறெதுவோ சொல்வதற்கு எத்தனிப்பதுபோல் என்னைப் பார்த்தார். 

“அப்படியா… ரொம்ப சந்தோஷம்.” 

“நான் நேற்றுத்தான் வேதாரண்யம் கடற்கரையில் வந்திறங்கினேன், நான் வந்த அந்தச் சின்னப் படகில் மட்டும் இருபத்தியேழு பேர் வந்தோம்.” 

பல நாட்கள் பட்டினி கிடந்தவர்போல் பேச முடியாமல் அவர் குரல் கர கரத்தது. 

 அதற்குள்ளாக அண்ணி காப்பி கொண்டு வந்து வைத்தாள். 

“தம்பி! காப்பியைச் சாப்பிடும்” என்றேன். 

‘சட்’டென்று காப்பியை எடுத்து ஒரு மிடறு விழுங்கி. விட்டு கதையைத் தொடர்ந்தார். 

“…படகில் ஏறும் சமயமும் நம் உயிருக்கு உத்தரவாத. மில்லை. ராணுவத்தினரின் கண்களில் படாமல் கடல் அலைகளிலும் சிக்காமல் வரவேண்டாமா? வேதாரண்யம் கரையைக் கண்டதும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொள்ளாத குறையாகக் குதூகலித்தோம். ஏழெட்டு மாதங்களாக துப்பாக்கிச்சூட்டையும், சாவையும், அவலக்குரல்களையுமே, பார்த்தும் கேட்டும் மனிதப் பிறவி யிலேயே வெறுப்புற்று இருந்த எனக்கு அந்தக் கணமே ஒரு புத்துணர்வு பிறந்தது. 

“நிம்மதிப் பெருமூச்சுடன் கரையில் இறங்கிய போதும். உள்ளூர ஒரு வேதனை. இனம் புரியாத குற்றவுணர்வு என் இதயத்தைப் பிழிந்தது. அங்குள்ள மற்ற இளைஞர் களின் தலைவிதியை சிங்கள ராணுவத்தினரின் கையிலேயே விட்டு வந்தது என்னைச் சித்ரவதைக்குள்ளாக்கியது. 

“இங்குள்ள அகதிகள் முகாமிலும் என்னால் நிம்மதி யாக உட்காரமுடியவில்லை. வெளியே வந்து இங்குள்ள தமிழ் மக்களின் உணர்வை அறியத் துடித்தேன். அப் பொழுது ‘தேவி’ பத்திரிகை என் கண்ணில் பட்டது” 

“உங்களுக்கு என்னால் ஆகவேண்டியது இருந்தால் தயங்காமல் கூறுங்கள்”

“எனக்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே யொன்று. அதாவது நான் கூறப்போவதைத் தவறாமல் நம் தமிழகத்து உடன் பிறப்புகளுக்கு உங்கள் எழுத்து மூலம் எடுத்துக் கூறுங்கள். சிங்கள ராணுவம் என்னிடம் கேட்டதொரு இரத்தம் தொதிக்க வைக்கும் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு ஈழத்தமிழர் களுக்கு மட்டுமில்லை தமிழகத்திலுள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் உண்டு” எனச் சொல்லியபடியே தன் கதையை ஆரம்பித்தார். 

அன்று… 

மாலை மணி நான்கிருக்கும். 

வழக்கம்போல் யாழ்ப்பாணம் பஸ் ஸ்டாண்டிலுள்ள பூபாலசிங்கம் புத்தகக் கடைக்குப் புறப்பட்டேன், ஏறக் குறைய என் வீட்டுக்கும், அக்கடைக்கும் அரைமைல் தூரம் தான் இருக்கும். நடந்துதான் செல்ல வேண்டும். சைக்கிள் ஓடுவதற்கு அப்பொழுது தடையுத்தரவு இருந்ததால் நடக்க ஆரம்பித்தேன். 

பாதித்தூரந்தான் நடந்திருப்பேன். எங்கோ ஒரு துப்பாக்கி வேட்டுப்போல் ஒரு சப்தம் கேட்டது. 

நடையைச் சற்று தாமதப்படுத்தி, காதைக் கூர்மை யாக்கிக் கொண்டேன். 

தொடர்ந்து இரண்டு, மூன்று வேட்டுகள். 

நெஞ்சில் பீதி பரவியது. ஓடிவிடுவதற்குக் கால்கள் பரபரத்தன. 

“சுதா…எங்கேயோ ஏதோ நடந்திருக்க வேண்டும். ராணுவ டிரக்குகள் நான்கைந்து ஒன்றாக வருவது போல் இரைச்சல் கேட்கிறது. ஓடிப்போய் எங்கையாவது ஒளிந்து கொள்” என என் முதுகில் தட்டி எச்சரித்து விட்டு ஓடினான், என் நண்பன் சந்திரன். 

நாங்கள் பக்கத்து வீட்டுக் ‘கேட்’டை அடைவதற்குள் எங்கள் துர்அதிர்ஷ்டம் வீட்டுக்காரன் உள்ளே இழுத்துத் தாழ்ப்பாள் போட்டு விட்டான். 

பக்கத்தில் ஒரு மிட்டாய்க்கடை. எங்களைப் பார்த்ததும் ‘சட்’டென்று இறக்க ஆரம்பித்த இரும்பு ஷட்டரை தூக்கிப் பிடித்தபடியே எங்களை ஓடி வரும் படி சைகை செய்தார், மிட்டாய்க்கடை உரிமையாளர். 

ம்ஹும்… கால்கள் தட தடத்தனவே தவிர ‘வேக’ மாக ஓட முடியவில்லை. அதற்குள் ‘டிரக்’ எங்களைச் சமீபித்து விட்டது. 

மிட்டாய்க்கடை உரிமையாளர் பயந்து போய் ‘பட்’ டென ஷட்டரை இறக்கிவிட்டு உள்ளே ஓடிவிட்டார். 

நாமிருவர் மட்டும் வீதியில் தனியாக நின்றோம். இனிமேல் ஓடி அவர்கள் கண்ணில்படாமல் மறைய முயல்வது மடமைத்தனம் என்று எண்ணிக் கொண்டு கைகள் இரண்டையும் மேலே தூக்கினோம். 

முதலில் வந்த ‘டிரக்’ பெரிய ‘பிரேக்’குடன் நின்றது. பின்னால் வந்த கவச வண்டிகளும் நின்றன. ‘டிரக்’கி லிருந்து குதித்த ராணுவ வீரர்களில் ஒருவன் என் நெஞ்சில் துப்பாக்கி முனையை அழுத்திப்பிடித்த வண்ணம் இருக்க, இன்னொருவன் சட்டைப் ‘பாக்கெட்’ ‘பான்ட் பாக்கெட்’ முதலியவற்றில் கையை விட்டுத் துழாவினான். 

என்னுடைய அதிர்ஷ்டங்கெட்ட வேளை. இரண்டு மாதங்களுக்கு முன்னால் ராணுவக் கொடுமைக்கு ஆளாகி, இங்கு தஞ்சம் புகுந்திருந்த என் நண்பன் மணி எழுதிய கடிதமொன்றைப் படித்துவிட்டு, மடித்து ‘பான்ட்’ பின் ‘பாக்கெட்’டில் செருகி வைத்திருந்தேன். காலப்போக்கில் நானே அதனை மறந்து விட்டேன். அத்துடன் அம்மாதம் மளிகைக் கடைக்குக் கொடுக்கவென என் தாயார் கொடுத்த இருநூறு ரூபாயும் இருந்தது, இரண்டும் அவ் ராணுவ வீரனின் கையில் சிக்கின. 

ஏதோ பெரிய புரட்சித் திட்டங்களைக் கண்டுபிடித் தவன் போல், கடிதத்தை எடுத்துக் கொண்டு ‘டிரக்’கி லிருந்த அதிகாரியிடம் ஓடினான். என் நெஞ்சில் பதிந் திருந்த துப்பாக்கி முனை மேலும் சற்று முரட்டுத்தனமாக அழுத்தப்பட்டது. ‘டிரக்’கிலிருந்த சிங்கள ராணுவ வீரர்களின் கண்கள்! நண்பனை விட்டு விட்டு என்னையே மொய்த்தன. 

எனக்கும் உலகுக்கும் உள்ள பந்தம் இன்றுடன் தீர்ந்து விட்டது என்றே எண்ணினேன். அதிகாரி எதையோ அவர்களுக்குச் சொல்லவும் நான்கைந்து வீரர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு, என்னை ‘டிரக்’ கினுள்ளே ஏறும்படி முதுகில் இடித்து முன்னே தள்ளினர். 

“உங்கள் அதிகாரியிடம் பேச ஒரு நிமிடம் அனுமதி கொடுங்கள்” என ஆங்கிலத்தில் கேட்டேன். 

அடுத்த வினாடி என் அடிவயிற்றில் ஒரு குத்து. உலகமே என் கண்முன்னால் சுழன்றது. கால்கள் பூமியில் பதிவதற்குப் பதிலாய் அந்தரத்தில் தொங்கின. 

என் நினைவுகள் திரும்பும்பொழுது; நான் ‘டிரக்’கினுள்ளே தலைகுப்புற விழுந்துகிடப்பதை உணர்ந்தேன். என் முதுகை ஏழெட்டுப் ‘பூட்ஸ்’ கால்கள் அழுத்திக் கொண்டிருந்தன. மூச்சு முட்டியது. தலையைத் தூக்க முடியவில்லை. மீண்டும் கண்களை மூடினேன். 

‘டிரக்’. செல்லும் பாதையைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் வண்டி வளைந்து நெளிந்து செல் லாமல் நேர்பாதையாக ஓடியதிலிருந்து யாழ்ப்பாண நகரைக் கடந்து வெளியே வந்துவிட்டதென்பது புரிந்தது. 

சில மணித்தியாலங்களின்பின் ராணுவ முகாமொன்றுக்குள் ‘டிரக்’ புகுந்தது. அங்குள்ள உயர் அதி காரிகளின் முன்னே கொண்டுசென்று என்னை நிறுத்தினர். 

அவர்களில் ஒருவன் என்னிடம், “தமஹ கொட்டி யாங் நேத? நீ புலி இயக்கத்தில் இருக்கிறாயா? இல்லையா?” என்றான். 

“இல்லை”

“பொறு கியாண்ட எப்பா” – “பொய் சொல்லாதே! உன்னைச் சுட்டுத் தள்ளிவிடுவோம்” – மற்றொருவன் ஆத்திரத்துடன் இரைந்தான். 

“இல்லை, கடவுள் சத்தியமாக இல்லை…” 

“அவங்… யாரையும் தெரியாது உனக்கு?” 

“இல்லை…!” 

“இது யாருங் எழுதினது, புலிதானே? இந்தியாங் குள்ள புலிதானே”- அதிகாரி கையில் என் நண்பனின் கடிதம் ஆடியது. 

”இல்லை…ஹி இஸ் ஏ பிரண்ட் ஒப் மைன்…” 

“அவன் ஏன் அங்கு போனான்…?” 

“படிக்க…” 

“பொறு கியாண்டஎப்பா-பொறு கியாண்ட எப்ப “அவன் ஒரு புலி” என் முதுகில் விழுந்த உதையில் எதிர்ச் சுவரில் போய் மோதினேன். அங்கிருந்த மற் றொருவன் என் நெஞ்சில் பலமாக இடித்தான். அதிகாரி களின் காலடியில் வந்து விழுந்தேன். 

என் பிடரி மயிரில் பிடித்து தூக்கி நிறுத்தினார்கள். மூக்கிலிருந்து இரத்தம் வடிந்தது. 

“இந்தியாவில் போய் ஒளிந்து கொண்டாலும் விட்டு விடமாட்டோம்.” ஆக்ரோஷமாக உறுமியபடி என்னை நெருங்கிய அதிகாரி ஒருவன், “இம்முறை மட்டும் உன்னை விட்டுவிடுகிறோம். ஓடித் தப்பிவிடு. இன்னொருமுறை இப்படிக் கடிதங்களுடன் உன்னைப் பார்த்தா உயிருடன் விடமாட்டோம்” என்று கூறியபடி என் பிடரியில் பிடித்து வெளியே தள்ளிவிட்டான். 

சில சமயம் ஓ டச் சொல்லி விட்டு பின்னாலிருந்து சுட்டுவிடப்போகிறார்களோ எனப் பயந்தபடி ஓடினேன். பல இடங்களில் இந்த மாதிரித்தான் தமிழ் இளைஞர்களை விடுதலை செய்வதுபோல் விட்டு விட்டு பின்னாலிருந்து சுட்டுத் தள்ளி விடுகிறார்கள். எனக்கென்னவோ நல்ல விதிபோலும். உயிர் தப்பிவிட்டேன் சிஸ்டர், ஆனா…” 

“சுதாகர்! இப்ப ஏன் அழவேண்டும்? எப்படியோ உயிர் தப்பி வந்தாகி விட்டதுதானே…!” 

“இல்லை… அவங்கள் என்னை உயிடன் விட்டதற்கும் காரணமுண்டு. எத்தனையோ சிரமப்பட்டு வீட்டிற்குப் போனபோது வீடு இருந்த இடம் வெறும் சாம்பல் மேடாகி இருந்தது! எனக்கு அப்பா இல்லை. அன்னை யும், வயதுவந்த தங்கை ஒருத்தியும்தான் வீட்டில் இருந்தவர்கள். 

அவர்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. பின்புதான் அறிந்தேன்-சிங்கள ராணுவத்தினர் என் தங்கையைத் துன்புறுத்தியதுடன், வீட்டிற்குள்ளே அவளை யும் வைத்து தீ மூட்டி விட்டதாகவும், தாய்-இளைஞர் -களால் காப்பாற்றப்பட்டு தமிழ் நாட்டுக்கு வந்து விட்ட தாகவும். இதற்குமேல் நான் வாழ விரும்பவில்லை சிஸ் டர். மீண்டும் இலங்கைக்குச் சென்று ஒரு சிங்களவனை யாவது என் கையால் சாகடித்தால்தான் என் மனக் கொதிப்பு அடங்கும். அதற்கு முன்னால் இந்த தமிழ் நாட்டிலுள்ள நம் தமிழர்களிடம் ஒன்று கேட்க விரும்பு கிறேன் சிஸ்டர்.” 

“என்ன கேட்க வேண்டும் சுதாகர்…?” 

“என்னைக் கொண்டுசென்ற ராணுவ முகாமில் ஒரு ராணுவ அதிகாரி என் கைகள் இரண்டையும் முறுக்கிப் பிடித்தபடி, ‘உங்க அண்ணாச்சி படுக்கையில் விழுந்திட் டாரு. அம்மாவும் போயிட்டார்! இனி என்ன பண்ணப் போறீங்க?” (அண்ணாச்சியென்றது நம் மாண்புமிகு முதல் வரை, அம்மா எனக் குறிப்பிட்டது அன்னை இந்திராவை. இச்சம்பவம் நிகழ்ந்தபோது முதல்வர் உயிருக்கு போராடிய சமயம்) 

இந்த ஏராளமானதொரு கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது? தமிழ்நாட்டு மக்களா? அல்லது இலங்கையில் செத்துமடியும் அப்பாவித் தமிழர்களா? தமிழ் நாடு தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும். “தேவி மூலம் இந்த கேள்வியைக் கேட்கிறேன், சிஸ்டர்.” 

கடமை முடிந்த நிறைவுடன் புறப்பட்டான், அவ் விளைஞன். 

– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.

அக்கினி வளையம் அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை  தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக!  அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்!  இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *