டிஜிட்டல் டீடாக்ஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: October 9, 2025
பார்வையிட்டோர்: 142 
 
 

(இந்த சிறு நாடகத்தின் சூழலும் கதை மாந்தரும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல)

டிஜிட்டல் டீடாக்ஸ் பற்றி அடியேன் எழுதிய கட்டுரையின் ஒரு சிறு துளி ..

“டிஜிட்டல் கருவிகளுக்கு சற்றே ஓய்வு கொடுங்கள். உடல்நலனைக் காத்திடுங்கள் . டிஜிட்டல் டீடாக்ஸ் (digital detox) என்பது டிஜிட்டல் கருவிகளின் பயன்பாட்டிலிருந்து சில நாட்கள் அல்லது சில மணி நேரங்கள் விடுப்பு எடுத்துக் கொள்வதைக் குறிக்கிறது. தமிழில் எண்மத் தவிர்ப்பு என்று இதனைக் குறிப்பிடலாம். முன்பெல்லாம் நாம் பார்த்த திரை திரை அரங்கத் திரை மற்றும் சின்னத் திரை கம்ப்யூட்டர் திரை மட்டுமே . மாறிய இன்றைய கால கட்டத்தில் நமது பணிகள் , பொழுதுபோக்கு , தொழில் , கற்றல் , கற்பித்தல் , பகிர்தல் , தொடர்பு கொள்ளுதல் அனைத்தும் திரைகள் வாயிலாக டிஜிட்டல் திரைகள் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகின்றன. நீண்ட விடுமுறை நாட்களில் நீண்ட நேரம் டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். ஸ்க்ரீன் டைம் எனப்படும் திரை நேரத்தை ஒழுங்காக மேலாண்மை செய்வதால் , ஒழுங்கு , கட்டுப்பாடுடன் இருப்பதால் விழிகள் நலனும் விழிகளைத் தாங்கிய உடல் நலனும் மன நலனும் பாதுகாக்கப்படும் என்பதையே டிஜிட்டல் டீடாக்ஸ் என்னும் பதம் நமக்கு எடுத்துரைக்கிறது…“

(திரை எழுகிறது. மேடையில் திருவிழாக் காலத்தில் உற்சவ திருமேனிகள் எழுந்தருளும் கிராமத்து கோயில் கல் மண்டபம் போன்ற அமைப்பு . பின்னணியில் மழை பொழியும் சத்தம் … பேண்ட் சட்டை அணிந்த நடுத்தர வயது , வாட்டசாட்டமான உடல்வாகு கொண்ட தாடி முகம் கொண்ட மூன்று நபர்கள், ஒருவருக்கு ஒருவர் பேசாமல் நின்று கொண்டிருக்கின்றனர்.

மௌனத்தை உடைக்க ஒரு நபர் பேசத் தொடங்குகிறார்.

முதல் நபர் : என் பேரு ராஜேஷ் … என்னை மாதிரியே மழைக்கு ஒதுங்கி இருக்கீங்களா?

இரண்டாம் நபர் : ( அலுப்பு சலிப்புடன் ) வாழ்க்கைய வாழ முடியாமல் ஒதுங்கி இருக்கேன்னு சொல்லிக்கலாம். என் பேரு தினேஷ்… மணி என்ன இருக்கும்? மழையினால கதிரவனே வரல போலையே … கடிகாரம் இல்லையா ? மொபைல் போன்ல பாருங்க ..

ராஜேஷ் : நான் டிஜிட்டல் டீடாக்ஸ்ல இருக்கேன் அதனால மொபைல் இல்ல ..

மூன்றாம் நபர் : என் பேரு கணேஷ் .. சார் இப்ப ஒரு வார்த்தை சொன்னீங்களே அதற்கு என்ன அர்த்தம் ?

தினேஷ் : மொபைல் மாதிரி கருவிகளை சில நேரம் சில நாள் பயன்படுத்தாம இருக்கிறதுக்கு தான் டிஜிட்டல் டீடாக்ஸ்ன்னு சொல்வாங்க அதைத்தான் ஐயா சொல்றாரு …

ராஜேஷ் : ரயில் சிநேகம் மாதிரி இரவு முழுக்க , விடிய விடிய இந்த மண்டபத்துல அடைக்கலம் ஆகி இருந்துருக்கோம் .. ஐயா சார் எல்லாம் வேண்டாமே … கணேஷ் , ஒங்க கிட்டயும் போன் இல்லையா ? சரி முதல்ல என் கதையை சுருக்கமா சொல்றேன் ..

டிஜிட்டல் டீடாக்ஸ்ன்னு ஒரு சாக்கு சொன்னேனே தவிர , இந்த கிராமத்து கோயில் மண்டபத்துக்கு மழைப் பொழுதுல வந்த காரணம் என்ன்னா நான் எம்ஜி இண்டஸ்ட்ரீஸ்ல போர்மேனா வேலை பார்த்துகிட்டு இருந்தேன். கல்யாணம் காட்சி இல்ல வாழ்க்கையில…. கல்யாணம் பண்ணி வைக்கவும் சொந்த பந்தம் உடன்பிறப்பு

யாரும் இல்ல .. ஒண்டியா ஓட்டிடேன் .. நான் உண்டு வேலை உண்டுன்னு இருந்தேன் . யார் கண்ணு பட்டுதோன்னு சொல்லும் என் பாட்டி .. அதுபோல யாரு கண்ணு பட்டுதோ , எங்க பேக்ட்டரில ஒரு அவுட்சைடர் வந்து சீட்டு நடத்தறேன்னு எங்க ஆளுங்க கிட்ட பணத்தை வாங்கிகிட்டு கம்பி நீட்டிட்டான். அவன் ஒரு தொழிலாளி கிட்ட ராஜேஷும் நானும் பால்ய நண்பர்கள் கோலி குண்டு விளையாடினவங்கன்னு பிட் போட்டுட்டான். அதை அந்த லேபர் நம்பிட்டாரு . இந்த பிரச்சினை வெடிச்சப்ப அவர் ,நிர்வாகத்துக்கு கிட்டயும் இதை சொல்லிட்டாரு… யூனியன் லீடரும் மேனேஜ்மென்ட்டும் நம்பிட்டு கம்பெளெயின்ட்ல என் பேரையும் சேர்த்து விட்டுட்டாங்க … எப்ஐஆர்லேயும் சேர்த்துட்டாங்க .. உள்ளே போனா என்னை பெயில்ல எடுக்க ஒரு ஜீவனும் இல்ல … வேற என்ன செய்யறது … வேலை நேரம் போக மத்த நேரமெல்லாம் மொபைல்ல மூழ்கி இருக்கற ஆளு , இப்ப டிஜிட்டல் டீடாக்ஸ் நிலைக்கு நானே தள்ளப்பட்டிருக்கேன்…

தினேஷ் : பார்த்தீங்களா என் நிலைமையும் ஒங்க நிலைமை தான் . நானும் மொபைல் போன தலையை சுத்தி தூக்கி எறிய வேண்டியதா போச்சு … நான் ஜிகே கார்ப்பரேட் கம்பெனில சேரமனுக்கு பி ஏ . வர்ற வாழ்க்கைத் துணைவி எப்படி இருப்பாளோ ங்கற பயத்துல ஒங்கள மாதிரியே கல்யாணம் முடிக்காம வாழ்க்கையை ஓட்டிடேன். எங்க ஆபீஸ் பைனான்ஸ் டைரக்டர் , ஒரு முக்கியமான லீகல் டாகுமென்ட்ல எங்க சேர்மன் , பாரின் போய் இருந்த சமயத்துல அவர் கையெழுத்தைப் போட்டுட்டான். குட்டு வெளிப்பட்டதும் , அவன் , என் மேல பழியைப் போட்டுட்டு சேர்மனையும் பிரெயின் வாஷ் பண்ணி நம்ப வெச்சுட்டான். என் மேல கேஸ் ஆயிடுச்சு… நானும் இப்படித்தான் ஓடிகிட்டு இருக்கேன்….

கணேஷ் : நான் என் பெரிய மச்சான் கிட்ட , இப்பதான் மகளுக்கு சொத்துரிமை உண்டாச்சே ஒங்க தங்கச்சிக்கு அவங்க அப்பா இருந்த மாளிகையை விட்டுக் கொடுங்கன்னு என் மனைவிக்காக தான் பேசப் போனேன் . ரெண்டு நாள்ல அவரு இறந்துட்டாரு . நான்தான் சொத்து கிடைக்கலேன்னு ஏதோ பண்ணிட்டேன்னு கிளப்பி விட்டுட்டாங்க .. என்னோட மனைவியும் டீனேஜ் மகனும் இதை நம்பறாங்க … அவரோட சடங்குக்கு கூட இல்லாம ஓட ஆரம்பிச்சவன் இங்க வந்து நிக்கறேன்.

( ராஜேஷ் , கைப்பையிருந்து பன் பாக்கெட்டை மற்ற இருவரிடமும் கொடுக்கிறார். தண்ணீர் புட்டியைத் தருகிறார் )

ராஜேஷ் : கையில இருக்கிற ரொக்கம் தீர்ந்தப்புறம் புவாவுக்கு என்ன செய்யப் போறோம் ? கணேசுக்காவது அவரு பிள்ளை , அட் போட்டு அப்பா வந்துடுங்கன்னு கூப்பிடுவான் .. நமக்கு …

( ஒரு வழி இருக்கு என்று ஒரு கம்பீரக் குரல் ஒலிக்கிறது. வேட்டி சட்டை தலைப்பாகை அணிந்த மழித்த முகம் கொண்ட ஒல்லியான தேகம் கொண்ட வயதானவர் வருகிறார். )

ராஜேஷ் : பெரியவங்க யாரு நீங்கதான் அசரீரி மாதிரி குரல் கொடுத்தீங்களா ?

பெரியவர் : ஆமாம் நானும் இந்த மண்டபத்தில் தான் இருந்தேன். மழைக்குத் தான் ஒதுங்கினேன். … ஒங்க கதை எல்லாம் கேட்டேன்.

தினேஷ் : எங்களுக்கு நீங்க உதவி செய்ய முடியுமா ?

பெரியவர் : என் பேரு வெங்கடேசன் … அதோ தெரியுது பாருங்க ஏழுமலை சுவாமிகள் ஆசிரமம் … அதுல நான் பொறுப்பாளர். மழைக்கு முன்னோடியே , எங்களோட சமையலர் , நிர்வாகி , உதவியாளர் … வேலைய விட்டு நின்னுட்டாங்க .. நீங்க சரின்னா உங்க மூணு பேரையும் அந்த பொறுப்புல நான் உட்கார வைக்கறேன். ஆனா , ஒரு நிபந்தனை … நீங்க கடவுள் மறுப்பாளரா இருக்க கூடாது. எங்க சுவாமிகள் மீது மதிப்பு மரியாதை உள்ளவரா இருக்கணும்.

தினேஷ் : எவ்வளவோ உஷாரா இருந்தாலும் சோதனை காலம் வருது . அதுக்காக நாங்க சாமியை வெறுக்கல … ஏழுமலை சுவாமிகள் செய்யற நல்ல காரியங்கள் பத்தி கேள்விப்பட்டிருக்கேன்.

பெரியவர் : அப்ப ஒங்களல்ல யார் யாரு …

ராஜேஷ் : நான் என்னை வளர்த்த பாட்டி கிட்ட கூட இருந்து சமையல் கத்துகி்ட்டேன் . அதனால சமையல் காரர் பொறுப்பை நான் எடுத்துக்கறேன்.

தினேஷ் : நீ ஒரு பதவியை பிடிச்சுட்டே …

பெரியவர் : நிர்வாகி வேலை ங்கறது ஆசிரமத்து நிர்வாகம் , கணக்கு வழக்கு பார்க்கணும் ஆசிரமத்துல இருக்கிற வாண்டுங்களுக்கு டியூசன் எடுக்கணும். உதவியாளர் ங்கறது ஆசிரமத்துல இருக்கிற பெரியவர்களுக்கு வேண்டிய உதவியை செய்யணும் ..

தினேஷ் : நிர்வாகி வேலையை நான் பார்க்கிறேன். கணேஷ் , ஒங்க சன் , உங்கள கண்டுபிடிக்கற வரைக்கும் ..

கணேஷ் : நான் உதவியாளரா இருக்கேன்பா …

பெரியவர் : பளபளன்னு சூரியன் வந்திடுச்சு மழையும் நின்னுடுச்சு. வாங்க சுவாமிஜி கிட்ட அழைச்சுகிட்டு போறேன்..

ராஜேஷ் : நாங்க சில நிபந்தனைகள் ..

பெரியவர் : சொல்லுங்க ஆசிரம நிர்வாகம் பரிசீலிக்கும் ..

ராஜேஷ் : நீங்க தானே நிர்வாகம் …. வேலைல சேர்த்துக்க அடையாள அட்டை எல்லாம் கேட்க கூடாது.. ஓடி வர்றப்ப அதெல்லாம் எடுத்துக்கல எங்க மொபைல் நம்பர கேட்க கூடாது. நீங்க வேற நம்பர் வாங்கி கொடுத்து மொபைல் பயன்படுத்த நிர்ப்பந்திக்க கூடாது … சம்பளத்தை டிஜிட்டலா இல்லாம ரொக்கமா தான் கொடுக்கணும்

பெரியவர் : கைபேசி மேல அவ்வளவு கசப்பா ? ஒங்க நிலைமை புரியுது .. மலை போல் வந்த ஒங்க துன்பம் எல்லாம் பனி போல் விலகிப் போக இறைவன் உங்களுக்கு உறுதுணை புரிவான். ஒங்கள சுற்றி பின்னப்பட்ட சதி வலைகளிலிருந்து உங்களுக்கு கண்டிப்பா விடுதலை கிடைக்கும் அது வரை பாண்டவர்கள் வனவாசம் இருந்தா மாதிரி எங்க ஆசிரமத்துல இருங்க .. மரோ பிரபஞ்சத்துக்கு வாங்க ..

கணேஷ் : மரோ பிரபஞ்சம் னா .. பேய் உலகமா பயமா இருக்கே …

தினேஷ் : மரோ பிரபஞ்சம்ன்னா புது உலகம்ன்னு அர்த்தம் மரோ பிரபஞ்சம்ன்னு ஒரு பழைய தெலுங்கு கருப்பு வெள்ளை படம் .. நாகேஸ்வர ராவ் காரு நடிச்சது … அதை எப்பவோ டிவில பார்த்ததை ஞாபகம் வெச்சுகிட்டு சொல்றாரு பெரியவரு

பெரியவர் : இவ்வளவு தெரிஞ்சு வெச்சு இருக்கீங்க

ராஜேஷ் : எனக்கு மரோ சரித்ரா படம் தான் தெரியும்

(அனைவரும் சிரித்தபடியே மேடையில் வலப் பக்கத்தை நோக்கிச் செல்கின்றனர்.)

(திரை)

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *