ஞானோதயம்
கதையாசிரியர்: சுகவனேஸ்வரன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 28, 2025
பார்வையிட்டோர்: 77

இந்தப் பூங்கா என் காதலின் நினைவுச்சின்னம். ஆதலால், நான் தற்கொலை செய்துகொள்ளும் முன் இறுதியாக இங்கே வந்திருக்கிறேன். என்னைச் சுற்றி நிறைய குழந்தைகள் சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள் போலக் குதூகலமாக இருப்பதைக் காணும் போதும் எனக்கு ஏனோ மகிழ்ச்சியே தோன்றவில்லை. மனிதர்களுக்கு ஒருபோதும் துயரம் தொற்றிக்கொள்வது போல மகிழ்ச்சி தொற்றிக்கொள்வதில்லை.
எல்லாம் கடந்து போகும். காலம் எல்லாவற்றையும் சரியாக்கும். எனக்கும் இதெல்லாமும் தெரியும்தான். புரியும்தான். ஆனால் பல சமயங்களில், நாம் ஏற்கனவே நன்கு அறிந்த பதிலை வேறு ஒருவரிடமிருந்து கேட்ட பிறகே அதை ஏற்றுக்கொண்டு மன அமைதி அடைகிறோம். எனக்கு அது இன்னும் கிடைக்கவில்லை, கிடைக்கப் போவதுமில்லை என்று நான் முடிவு செய்துவிட்டதால் இன்று நான் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப்போகிறேன்.
என்னருகே ஒரு சிறுவன் கம்பத்தை பிடித்துக் கொண்டு கீழே இறங்க முடியாமல் இருக்கிறான். தரைக்கும் அவனுக்கும் ஓர் அடி மட்டுமே இருக்கும். இருந்தாலும் பயத்தால் கால்களைத் தூக்கிக்கொண்டும், கண்களை மூடிக்கொண்டும் இருந்த அவனை அவன் சகோதரி தைரியப்படுத்துகிறாள்:
“உன்னை நம்புடா! இறுக்கமா பிடிச்சிருக்க உன்னோட பிடியை முதலில் கைவிடு!”.
சிறுவன் வெற்றிகரமாக கீழே இறங்கி மகிழ்ச்சியில் குதிக்கிறான்.
எனக்கான பதிலும் கிடைத்துவிட்டது!
“உன் பேரு என்னமா?”
சிறுமி அவளின் பெயரைச் சொல்கிறாள். எனக்குக் கண்ணீரும் புன்னகையும் ஒருசேரத் தோன்றுகின்றன அது என் காதலியின் பெயர் என்பதால்!