சூறை!
(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என்றும் போல்தான் அன்றும் விடிந்தது. வழக்கம் போல் இலவ மரத்துக் காகங்கள் கரைந்தன
தூரத்திலிருந்த ‘பக்டரி’ச் சங்கொன்று ஊதியது. காமாட்சியம்மாளின் காதில் துல்லியமாகக்கேட்டது.
போர்வையை விட்டுக் கால்களை நீட்டினாள். வெகு நேரம்வரை படுக்கையின் ஒரே பக்கத்தில் சுருண்டு கிடந்த தால் இடது காலை நீட்ட முடியாதபடி முழங்கால் மூட் டுக்கள் வலித்தன. அதற்காக அவள் தன் வழக்கத்தை மாற்றவில்லை.
முழங்காலை இரண்டு தடவை நீவிவிட்டுவிட்டு படுக் கையில் எழுந்து உட்கார்ந்தாள். ஹாலில் உள்ள கவர்க் கடிகாரம் ‘டாண் டாண்’ என மணி நான்கடித்தது.
கடந்த நாற்பத்தைந்து ஐம்பது வருடங்களாக காமாட்சியம்மாளுக்கு இதுவே பழக்கமாகி விட்டது. மழையோ, பனியோ, இன்பமோ, துன்பமோ கறாராக மணி நான்கடிக்கும்பொழுதே எழுந்து உட்கார்ந்து விடுவாள். சரியாக நாலரைக்கு பூஜையறை விளக்கு ஏற்றப்படும். ஐந்து மணிக்கு சமையற்கட்டில் காபி கம கமக்கும்.
அவள் கணவர் திருப்பதியாபிள்ளை உயிருடன் இருந்த காலத்திலிருந்து இன்றுவரை அவள் இந்தப் பழக்கத்தை மாற்றவில்லை.
இன்றைக்கென்னவோ, காமாட்சியம்மாளின் முழங் கால் மூட்டில் அசாத்தியமாக வலித்தது.
‘…மாலையில் ஒரு தடவை டாக்டரைப் போய்…பார்க்கவேண்டும்…’ காப்பியைக் கலந்தபடி முடிவெடுத்தாள்.
”அம்மா … காப்பி ரெடியா…? இரண்டு நிமிடத்தில் குளித்து விட்டு வந்து விடுகிறேன்” என்றான், தூக்கத்திலிருந்து எழுந்து வந்த மூத்த பையன் ஜெயராமன்.
“…ம்…”
“அம்மாவின் காப்பி மணம் படுக்கையில் இருக்க விடவில்லை”யென வேடிக்கையாகக் கூறியபடி பின்னால் வந்தான், ஜெயராமனின் தம்பி செந்தில்.
“போடா… போய் முதலில் குளித்து விட்டு நெற்றியில் இட்டுக் கொண்டு வா… இன்றைக்குக் கொஞ்சம் டாக்டரிடம் சீக்கிரமாகக் கடையிலிருந்து வந்துவிடு, போய் இந்தக் காலைக் காட்ட வேண்டும்… வலி தாங்க முடியவில்லை…”
“இன்றைக்கா…?” செந்தில் எதையோ சொல்லத் தயங்குவது இழுத்த இழப்பிலிருந்து தெரிந்தது.
“கடையில் ஏதாவது பிரச்சனையா…?”
“அப்படியெல்லாமில்லை… ஆனால் நாட்டு நிலைமை தான்…அவ்வளவு நன்றாக இல்லை… யாழ்ப்பாணத்தில் ராணுவத்தினர் பதின்மூன்று பேரை விடுதலைப் புலிகள் கொன்று விட்டார்களாம். அதனால் கொழும்பு முழுவதும் சிங்களர் கலவரத்தால் தமிழர்கள் பீதியடைந்திருக்கிறார்கள்… எந்த நிமிடம் என்ன நடக்குமோ எனத் தெரியாது… நேற்றிரவு ‘பொரளை’ப் பகுதியில் தீவைப்பு, கொள்ளை நடக்கிறதாக கடை பூட்டும் சமயம் தகவல் கிடைத்தது… நானும் அண்ணாவும் கடைக்குப் போகிறோம்… நிலைமை சரியாக இருந்தால் கடை திறப்போம். இல்லாவிட்டால் பூட்டிக்கொண்டு வந்துவிடுவோம். நீங்கள் கோவில்…மார்க்கெட் எதற்கும் போக வேண்டாம். வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே இருங்கள்…” என்றான்.
எப்பொழுதுமே ஜெயராமனைவிட செந்தில்தான் தாயாரை வழிநடத்துவான்.
அவன் சொல்வதைக் கேட்டபடி வந்து காப்பியைப் பருகிய ஜெயராமன், “அம்மாவைக் கலவரப்படுத்தாதே, என்ன நடக்குதென்று பார்ப்போம். நிலைமை மோசமானால் அம்மாவை இந்தியாவுக்கு அனுப்பிவிடுவோம்” என்றான்.
பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவரவர்களும் தங்கள் தங்கள் வேலையில் மூழ்கினார்கள்.
மணி பத்தாகியது. மதியச் சமையலை முடித்த காமாட்சியம்மாள் அசதியுடன் சோபாவில் சாயும் சமயம் ஜெயராமனின் கார் உள்ளே நுழைந்தது.
காரை விட்டிறங்கி பரபரப்புடன் உள்ளே நுழைந்தவர்கள் ஜன்னல், கதவுகளையெல்லாம் அடித்துச் சாத்தியபடி, “அம்மா, வெள்ளவத்தை… பம்பலப்பிட்டி…கிரிலப்பனை யெல்லாம் கலவரம் பரவியிருக்கிறதாம்மா. கடைகள் மட்டுமல்ல, வீடுகளும் கொளுத்தப்படுகின்றன. நம்ம கடையைப் பூட்டிவிட்டு சிங்களவர் கண்ணில் படாமல் எப்படியோ தப்பித்து வந்துவிட்டோம்” என்றார்கள்.
கடையிலிருந்து கொண்டு வந்த ரொக்கங்கள், கழுத்தில் போட்டிருந்த தங்கச் சங்கிலி, வைர மோதிரம் தாயாரின் தங்க நகைகள் யாவற்றையும் ஒன்றாகத்திரட்டி இரும்பு ‘பீரோ’ வில் வைத்துப் பூட்டிவிட்டு சாவியைத். தன் ஷேர்ட் பாக்கெட்டுக்குள் போட்டான் ஜெயராமன்.
எல்லோரும் ஒருவித பீதியுடன் சிந்தனை வசப்பட்டவர்களாய் ஹாலில் உட்கார்ந்தார்கள்.
“அண்ணா போலீகக்குப் ‘போன்’ பண்ணி ‘செக்கிய யூரிட்டி’ கேட்டால் என்ன?” செந்தில் கேட்டான்.
“முதலில் ஞானம் மாமாவுக்கு ‘போன்’ பண்ணு- நிலைமையை அறியலாம். அவருக்கு இந்த அரசில் நல்ல செல்வாக்கு உண்டு. இதுவரையில் அவர் வீட்டுக்கு செக்கியூரிட்டி கொடுத்திருப்பார்கள்” என்றான் ஜெயம்.
செந்தில் எழுந்து சென்று ‘டெலிபோன் டயலை’ சுழற்றினான். மறுபக்கத்தில் சத்தம் இல்லை.
“போன் இஸ் டெட்” ஜெயத்தின் பக்கம் திரும்பிக் கூறினான் செந்தில்.
‘த்ஸு’- ஜெயராமன் சலித்துக் கொண்ட சமயம் தடதடவென வெளியே இடியோசைபோல் பெரும் சத்தம்.
ஒரு நொடிக்குள் வீட்டின் கண்ணாடிக் கதவுகள்-ஜன்னல்கள் கலீர் கலீரெனச் சிதறி விழுந்தன. தாக்குதல் எங்கிருந்து வருகிறதென்பதைக் கூடத் தெரிந்து கொள்ள முடியாதபடி நான்கு பக்கங்களில் இருந்தும் தாக்குதல்கள் தொடர்ந்தன.
திடுக்கிட்டுப் போய் விழித்துக் கொண்டு நின்ற தாயாரைக் கையில் பிடித்து இழுத்துக் கொண்டு போய் ‘பாத்ரூம்’ ஒன்றிற்குள் தள்ளிய செந்தில் “பயப்படாதேயம்மா’ என்று கூறிவிட்டு விடு விடெனக் ஹாலிற்குள் ஓட முயன்றான்.
“எங்கே போகிறாய்? ஜெயத்தையும் இங்கே கூப்பிடு”
“ஸ்…அம்மா, மூச்சுவிடாமல் உள்ளேயிரு, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” செந்தில், தாயின் கையை உதறிவிட்டு முன்னால் ஓடினான்.
கூச்சல்…குழப்பம்…பீரோக்கள் நகர்த்தப்படும் கடூரமான ஒலி, நிலநடுக்கம் ஏற்பட்டது போன்று மடமட வெனக் கீழே விழுந்து பொருள்கள் உருளும் சப்தம்…
இடையிடையே ஜெயராமன்… செந்தில் ஆகியோரின் ஆக்ரோஷமான குரலொலிகள்..
காமாட்சியால் எதையும் ஊகிக்க முடியவில்லை. காதைப்பொத்திக் கொண்டு பாத்ரூமுக்குள் உட்கார்ந்து கொண்டவளின் வாய் நமசி…வாய… நம… சிவா…ய என முணுமுணுத்தது.
வினாடிகள் மணித்தியாலங்களாக நகர்ந்தன. சத் தங்கள் குறைந்திருப்பதுபோல் இருக்கவே காமாட்சி மெதுவாக ‘பாத்ரூம்’ கதவை நீக்கினாள்.
மூக்கில் சுரீரென்று பெட்ரோல் வாசனை அடித்தது… தீயின் வெக்கை.
“அம்மா… அம்மா…” திடீரென்று கதறல் ஒலி… ஜெயமா…? செந்திலா…? யார் குரல்…
அதற்குமேல் ஒருகணம் கூட காமாட்சியால் தாமதிக்க முடியவில்லை. ‘விர்’ ரென்று முன் பக்கம் ஓடினாள் – ஹால் தூணொன்றில் ஜெயமும்… செந்திலும் கட்டப் பட்டு அவர்களுக்கு மேலே ‘கார்…டயர்…’ போட்டுத் தீ மூட்டப்பட்டிருப்பது தெரிந்தது.
“ஐயய்யோ… சிவ…சிவா, என் குழந்தைகள்! முருகா கடவுளே” என்று கதறியபடி முன்னால் பாய்ந்தாள்.
“அம்மா…இங்கே வரவேண்டாம் … வேண்டாம்… இங்கு வர வேண்டாம்…”
ஜெயாவும்… செந்திலும் மாறி மாறி அலறினார்கள். தீ அவர்களைச் சூழ்ந்து கொண்டிருந்தது. அவர்களைச் சுற்றிப் பீரோவிலிருந்த துணிகளும் படுக்கை விரிப்புகளும் குவிக்கப்பட்டிருந்தன. அவைகளைத் தீ நாக்குகள் சுவை பார்த்துக் கொண்டிருந்ததன.
காமாட்சியம்மாள் ஆவேசம் வந்தவள் போல் ஓடி வந்தாள்… எதிரேயொருவன் சாரத்தை உயர்த்திக் கொண்டு ஓடிவருவது தெரிந்தது. அவ்வளவுதான்… அவளது வலது கண்ணில் ஓர் கூர்மையான ஆயுதம் பாய்ந்தது.
‘அப்பா’ என்று அலறிக் கொண்டவள் அப்படியே நிலத்தில் சாய்ந்தாள்.
கண்ணிலிருந்து உதிரம் தாரை தாரையாகக் கொட்டியது.
கண்களைத் திறக்க முயன்றாள், முடியவில்லை. எங்கும் ஒரே இருள். உயிரே போவது போன்ற வலி, கண்களிலிருந்து மெதுவாகத் தன் கரங்களை எடுத்தாள். உறைந்து போன இரத்தத்தில் கைகள் தோய்ந்திருந்தன.
நெருப்பில் பொசுங்கிய துணிகளின் வாடை மூக்கில் நுழைந்தது. அப்பொழுது எங்கிருந்தோ முனகல் ஒலி.
சடாரென்று தன்னை மறந்து எழுந்த காமாட்சியம்மாள் பிள்ளைகள் கட்டப்பட்டிருந்த இடத்தை நோக்கி ஒற்றைக் கண்ணைப் பொத்தியபடி ஓடினாள்.
சாம்பலாகிப்போன துணிக் குவியல்களுக்கிடையே அவள் பார்த்துப் பார்த்து வளர்த்த இரண்டு மகன்களின் உடல்களும் கருப்புக்கட்டையாகக் கருகிப்போயிருந்தன.
கட்டி அணைக்கவோ, வாய்விட்டு அலறவோ அவளால் முடியவில்லை.
எதுவும் பேசமுடியாத நிலையில் பேதலித்து நின்றவளின் ஒற்றைக்கண்ணில் மகனொருவனின் வாய் முனகுவது தெரிந்தது.
காமாட்சி தலையிலடித்துக்கொண்டு கதறினாள். அந்த ஒலிகேட்டு ‘முனகல்’ சற்று அதிகமாகியது. நாக்கு, வெளியே நீண்டு தாகத்தில் தவிப்பது தெரிந்தது.
சின்னாபின்னமாகிக் கிடந்த சமையற்கட்டுக்குள் மீண்டும் ஓடிய காமாட்சி உருண்டு கிடந்த கிண்ணமொன்றில் தண்ணியை ஏந்தினாள்.
திரும்பச் சென்று மகனின் வாயில் ஊற்றிய வேளையில் அதற்காகவே காத்திருந்தவன் போல் அவன் தலை சரிந்தது வாயில் ஊட்டிய தண்ணீர் வெளியே வழிந்தது.
காமாட்சி கதறியபடியே அவர்கள் மீது சரிந்தாள் மீண்டும் நினைவு தப்பியது.
வலதுகண்ணின் மேல் இதமான வருடல். காமாட்சியம்மாள் இடது கண்ணைத் திறக்க முயன்றாள்… அவளைச் சுற்றி கசமுசாவென்ற சத்தம். திருவிழாக்கூட்டம் போல் மனிதர்கள்… தெரிந்தவர்கள்… தெரியாதவர்கள்… குழந்தைகள் பெரியவர்கள்… வயதானவர்கள்… இளைஞர்கள்…யுவதிகள் நிழலாட்டமாகத் தெரிந்தனர்.
காமாட்சிக்கு எதுவுமே புரியவில்லை. சிறிது நேரம் இடதுகண்ணை திறப்பதும், மூடுவதுமாக இருந்தாள்.
“அம்மா…!” பெண்ணொருத்தி குனிந்து அவள் காதில் கூப்பிடவே, நினைவுகள் மெதுவாகத் திரும்பின.
“இது என் வீடில்லையா…? என் பிள்ளைகள் எங்கே…? நான் எங்கிருக்கிறேன்…? ஐயய்யோ… என் செந்தில் எங்கே….? ஜெயம் எங்கே…?” வெறி பிடித்த நிலையில் எழுந்து உட்கார்ந்தாள் காமாட்சி. அப்பொழுதுதான் தான் படுத்திருந்தது தன் வீடல்ல என்பதும், ஏதோ ஒரு மண்டபத்தின் மூலையொன்றில் வெறும் ஜமக்காளத்தின் மேலென்பதும் அவளுக்குத் தெரிய வந்தது.
“செந்தில்… ஜெயம்… எங்கேயப்பா… போய் விட்டீர்கள்…? இதைப் பார்த்து அனுபவிக்கவா நான் உயிருடன் இருந்தேன்…” ஈனஸ்வரத்தில் புலம்பினாள்.
“கொஞ்சம் அமைதியாக இருங்கள்… அத்தை. நான் நடந்ததைக் கூறுகிறேன்…” என உறவுக்காரப் பையனொருவன் பக்கத்தில் வந்தமர்ந்து அவள் கையைக் கெட்டியாகப் பிடித்தான்.
அவன், காமாட்சியம்மாவிற்கு நடந்தவற்றை விளக்கினான்.
“இப்பொழுது… உங்கள் கண்கட்டைப் பார்த்து விட்டுச் சென்றாளே… அந்தப் பெண் ஒரு டாக்டர்… யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவள். அவளைக்கூடஅவளுக்குக் கீழ் வேலை செய்த சில சிங்களத் தொழிலாளர்கள் அவளது உடமைகள் எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு இரவோடிரவாக அடித்து விரட்டி விட்டிருக்கிறார்கள்… எப்படியோ இந்த முகாமுக்கு வந்து சேர்ந்திருக்கிறாள்… சிங்களவர்களிடம் அடிபட்டு, உதைபட்டு, எரிகாயங்களுடன் வரும் நோயாளிகளுக்கு ஓடியோடி உதவி செய்து கொண்டு இருக்கிறாள்… உங்கள் கண்ணுக்கு மருந்து போட்டது… கட்டியதெல்லாம் அந்தப்பெண் தான் அத்தை” என்றான்.
அவன் கூறியவற்றைக் கிரகிக்கும் நிலையில் காமாட்சி இல்லை. பிரமை பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். இடையிடையே “செந்திலுக்குக் காபி கொடுக்க வேண்டும். ஜெயம் குளித்து விட்டாயா? விடிந்து விட்டதா?” எனப் புலம்பிய வண்ணமிருந்தாள்.
இரண்டு நாட்களாக அவளருகே அமர்ந்திருந்த அந்த உறவுக்கார இளைஞனும் யாழ்ப்பாணத்துப் பெண்ணும் மாற்றி மாற்றித் தேறுதல் கூறி அவளை ஒரு நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.
“அத்தை, நாங்களெல்லாம் இந்தியா செல்ல முடிவு பண்ணி ‘பிளேனுக்கு டிக்கெட்’ வாங்கி விட்டோம். உங்கள் முடிவு என்ன?”
“நானா, இந்தியாவுக்கா?” கண்ணில் நீர் தாரை தாரையாக வழியக் கேட்டாள்.
“மாமா கேட்டது மாதிரி அன்றைக்கே வியாபாரத்தை இங்கு ‘குளோஸ்’ பண்ணிவிட்டு இந்தியாவுக்குச் சென்றிருந்தால் இப்படியொரு இழப்பு வந்திருக்குமா… செந்திலையும், ஜெயத்தையும் இப்படி அநியாயமாய் சிங்களவனுக்குப் பலி கொடுத்திருப்போமா?” மேலே பேச முடியாமல் அவ்வாலிபன் விசும்பி, விசும்பி அழுதான்.
அவன் செந்திலின் நல்ல நண்பன். திருப்பதியா பிள்ளையின் ஒன்றுவிட்ட தங்கை மகன்.
“…”
“அத்தை, இனிமேல் உங்கள் முடிவை நான் கேட்கப் போவதில்லை. உங்களுக்குமாகச் சேர்த்து புறப்படுவதற்கு. ஆயத்தங்கள் செய்துவிட்டேன். நாளையோ மறுநாளோ ‘பிளேன்’ கிடைக்கும். உங்களைக் கொண்டு போய் புதுக். கோட்டையில் சேர்த்துவிட வேண்டியது என் கடமை. கடைகள், வீடு, சொத்துக்கள் எல்லாம் எரிந்து சாம்பலாகி விட்டன. நஷ்டக்கணக்கெல்லாம் அரசுக்கு அறிவித் திருக்கிறேன். எங்கள் இழப்பை ஈடுசெய்ய அவன் றெஷரியில் கூட பணம் கிடையாது. வெளிநாட்டுக்குத். தான் பிச்சையெடுக்கப் போகவேண்டும். அதனால் அதை அவன் தரப்போவதில்லை. தந்தாலும் இனி மேல் இந்த ராட்சத நாட்டில் இருப்பதில்லை” என ஆத்திரத்துடனும், ஆணித்தரமாகவும் கூறி விட்டுச் சென்றான், அவ்விளைஞன்.
வேதனையும், விரக்தியுமாக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இறங்கிய காமாட்சி அம்மாளை, அவள் தங்கை பையன் கட்டியணைத்துக் கொண்டு கதறினான்
“செந்திலுக்கும் ஜெயமண்ணாவுக்கும் வைதீகக்காரியங்களை காசியில் செய்ய ஏற்பாடு பண்ணியுள்ளேன். நாளைக்கே புறப்படுவோம்” என்றான்.
நீண்ட நெடுங்காலத்துக்குப் பின்னர் தாய் நாட்டு மண்ணில் வேதனையில் வெந்தமனதுடன் அவன் பின்னே கூனிக்குறுகி நடந்தாள், காமாட்சி அம்மாள்.
– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.
![]() |
அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக! அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்! இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: October 1, 2025
பார்வையிட்டோர்: 490
