சிவகாமியின் செல்வன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: சாவி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 102 
 
 

(1990ல் வெளியான வாழ்க்கை வரலாறு, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

அத்தியாயம் – 19

இந்திய வரலாற்றில் எத்தனையோ ஊர்களும் நகரங்களும் அழியாத இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றாகப் பங்களூரும் ஆகிவிட்டது. ‘காங்கிரஸ்’ என்ற மாபெரும் ஸ்தாபனத்தை உடைத்த, அல்லது உடைவதற்குக் காரணமாயிருந்த பெருமை அதைச் சேர்ந்தது தானே? 

1969 இல் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் பங்களூரில் நடந்தது. அப்போது அங்கே என்ன நடந்ததென்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விஷயந்தான். காங்கிரஸ் ‘ஹைகமாண்’டில் ஏதோ கசமுச என்பதை பின்னால் இந்திரா காந்தி பங்களூரில் பத்திரிகை நிருபர் கூட்டத்தில் பொரிந்து தள்ளியதிலிருந்து அனைவரும் அறிந்து கொண்டனர். பிரசித்தி பெற்ற இந்தச் சம்பவத்தின் பின்னணி பலருக்குத் தெரியாது. அதைப் பற்றி நான் காமராஜைக் கேட்டேன். அவர் சொன்னார்: 

“பங்களூர்க் கூட்டத்திற்கு முதல் நாள் இந்திராகாந்தி வரவில்லை. இரண்டாவது நாள்தான் வந்தாங்க. வரும் போதே ஏதோ சில தீர்மானங்களைத் தயார் செஞ்சுகிட்டு வந்தாங்க.” 

“ஸ்ட்ரே தாட்ஸா?” 

“ஆமா, ஸ்ட்ரே தாட்ஸ் தரீன். பங்களூர்க் கூட்டத்திலே யாரை ஜனாதிபதியா நிறுத்தறது என்கிறதை நிச்சயிக்கத் திட்டம் போட்டிருந்தோம். 

சஞ்சீவ ரெட்டியிடம் ‘பிரசிடெண்டாக இருக்க உங்களுக்குச் சம்மதமா?’ என்று முதலில் கேட்டது இந்திராகாந்தி தான். அவரும் ஆட்சேபம் இல்லை என்று சொல்லி விட்டார். நான் தடை செய்வேனோ என்று அவருக்குப் பயம். சஞ்சீவ ரெட்டியைச் சந்திக்கிறதுக்கு முன்னால் இந்திராகாந்தி என்னிடம் யோசனை கேட்டாங்க. எனக்கு என்னவோ கிரியை பிரசிடெண்டாப் போட இஷ்டமில்லை. அதற்கான காரணங்களை விளக்கினேன். ஏன், ஜகஜீவன்ராமைப் போடலாமேன்னேன். ‘இல்லை, அவர் காபினெட்லே இருக்கணும்’னு இந்திராகாந்தி சொன்னாங்க. மொரார்ஜியைப் போடலாம்னு நினைச்சேன்; அவரைப் பற்றி ஒரு புகார். அதாவது சில முற்போக்குச் சட்டங்களுக்கு அவர் உற்சாகமாக ஆதரவு தருவதில்லை என்று புகார். இது ஆதாரமில்லாத புகார் என்றாலும் பரவலாக இருந்தது. இரண்டு நாள் கழிச்சு வந்து இந்திராகாந்தி என்னிடம் ‘சஞ்சீவ ரெட்டியைப் போடலாமா?’ என்று கேட்டாங்க. செய்யுங்கன்னேன். 

நான் திருப்பதிக்கு டில்லியிலிருந்து பிளேன்ல வரேன் ரெட்டியும் அதே பிளேன்ல வந்தார். விமானத்திலே சந்திச்சோம். ‘இந்திரா காந்தி என்னை ஜனாதிபதியா நிற்கச் சொல்றாங்க. நீங்க என்ன சொல்றீங்க?’ அப்படின்னு கேட்டாரு. நான் மொரார்ஜியை ஸப்போர்ட் பண்ணுவேன்னு அவருக்குச் சந்தேகம். விஷயம் என்ன தெரியுமா? மொரார்ஜியை நான் ஆதரிக்கத் தயாராக இருந்தாலும் அவர் நிற்கத் தயாராக இல்லையே! ‘நான் ஜனாதிபதியாக நிற்க மாட்டேன். வேணும்னா இந்திரா காந்தியை நிற்கச் சொல்லுங்க’ன்னு அவர் சொல்லி விட்டார். இந்த ‘பேக் ரவுண்டு’ சஞ்சீவ ரெட்டிக்குத் தெரியாது. அதனால் அவருக்கு என் மேல் சந்தேகம். நான் சிரிச்சுக்கிட்டே ‘எனக்குச் சம்மதம்’னு சொன்னேன். அத்துடன், ‘அந்த அம்மாவை நம்பாதீங்க. ஜாக்கிரதையாயிருங்க’ன்னும் சொல்லி வச்சேன்…” 

ஏன் இப்படிச் சொன்னார் காமராஜ்? 1967 தேர்தலுக்குப். பிறகு மந்திரி சபையில் இந்திரா காந்தி கடைசி வரையில் சஞ்சீவ ரெட்டியைச் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்திரா காந்திக்கு அவரை என்னவோ பிடிக்கவில்லை. அப்புறம் சபா நாயகராக அவரை நிற்கச் சொன்னார்கள். அதனால் தான் ‘அந்த அம்மாவை நம்பாதீங்க’ என்று காமராஜ் சொல்லி வைத்தார். 

யாரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றிய இந்தப் பேச்சு வார்த்தைகள் நடந்த ஓரிரு தினங்களில் சஞ்சீவ ரெட்டி பார்லிமெண்ட் குழுவினருடன் வெளிநாடு சுற்றுப் பயணம் சென்று விட்டார். நாம்தான் அடுத்த ஜனாதிபதி என்று அவர் அப்போதே நிச்சயம் செய்து கொண்டு விட்டார். பங்களூர்க் கூட்டத்திலும் அவரையே தேர்ந்தெடுக்கத் தயாராக இருந்தோம். இது ஒரு ஃபார்மாலிடிதான். ஆனால் அன்றைய தினம் என்ன நடந்தது தெரியுமா? பகல் பன்னிரண்டு மணிக்குக் கூட்டம். பத்து மணிக்கு ஜகஜீவன்ராம் என்னிடம் வந்தார். ‘என்னை ஜனாதிபதி பதவிக்கு நிற்கச் சொல்றாங்க இந்திரா காந்தி’ அப்படின்னு சொன்னார். எனக்கு ஒரே ஆச்சரியமாப் போயிடிச்சு. முன்னால் ஜகஜவன்ராமைப் போடலாம்னு நான் சொன்னபோது, ‘காபினெட்டில் அவர் இல்லாவிட்டால் ஒன்றுமே நடக்காது’ என்கிற மாதிரி சொன்னவங்க. இப்போ ஏன் ஒரேயடியாக மாறிட்டாங்கன்னு எனக்கும் புரியலே. ‘ரெட்டியைப் போடறதுன்னு பேச்சாச்சே, அவரை ஏன் மாத்தணும்?’னு கேட்டேன். அவர் பேசாம் இருந்தார். ‘சரி, சவான் என்ன சொல்றார்?’ன்னு கேட்டேன். ‘அவர் என்னை ஸப்போர்ட் செய்யறாராம்’ என்றார் ஜகஜீவன்ராம். ‘சரி, மீட்டிங்கில் எல்லாம் விவரமாகப் பேசி கொள்ளலாம்’னு சொல்லி அனுப்பிவிட்டேன். 

மீட்டிங்கில் இந்த விஷயம் ஆலோசனைக்கு வந்தது ‘சஞ்சீவ ரெட்டியை நிறுத்தி வைக்கலாம்’னு பட்டீல் சொன்னார். ‘ஜகஜீவன்ராமைப் போடணும்’னு இந்திரா காந்தி சொன்னாங்க. 

“வோட்டு எடுக்கப்பட்டதா?” 

“வோட்டு எடுக்கிற வழக்கம் இல்லை. மெஜாரிட்டி சம்மதிச்சு ஏகோபித்த தீர்மானம் போடறதுதான் வழக்கம். பக்ருதீன் அகமதும் இந்திரா காந்தியும் ஜகஜீவன்ராமைப் போடலாம் என்கிறார்கள். சவானோ சஞ்சீவ ரெட்டியை ஆதரித்தார். ஆக, மெஜாரிட்டி சஞ்சீவரெட்டிக்கு என்றாகி விட்டது. மறுநாள் பத்திரிகைகளிலும் செய்தி வெளியாயிற்று. இந்திரா காந்திக்கு ஒரே கோபம். முக்கியமாக சவானின் மேல் தான் கோபம், கடைசி நிமிஷத்தில் அவர் மாறி விட்டார் என்று. அதனால் இந்திரா காந்தி டில்லிக்கு வந்ததும் முதலில் அவரை நீக்கிவிட வேண்டும் என்று நினைத்தார். சரியான காரணம் கிடைக்கவில்லை. அடுத்தாற்போல் அந்தக் கோபம் மொரார்ஜி மேல் திரும்பியது. முற்போக்குச் சட்டங்களுக்கு உதவிப் பிரதமரான மொரார்ஜி முழு மனத்துடன் ஆதரவு தர மாட்டார் என்ற கற்பனைக் குற்றச்சாட்டைக் கொண்டு அவரை ‘டிஸ்மிஸ்’ செய்தார். ‘போர்ட்ஃபோலியோ’ எடுத்துட்டாங்கன்னா ஏறக்குறைய டிஸ்மிஸ் தானே? ஒரு டெபுடி பிரைம் மினிஸ்டரை, இவ்வளவு கேவலமா நடத்தினதிலே எனக்கு ரொம்ப வருத்தம். இந்திரா காந்தி அத்துடன் திருப்தி அடையவில்லை, மேலே மேலே ஏதேதோ செய்து கிட்டே போனாங்க. அதனால் பின்னாலே நடந்தவை எல்லாவற்றுக்கும் அவரே பொறுப்பாளி!” என்றார் காமராஜ். 

அத்தியாயம் – 20

எட்டு வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் ராஜாஜியைச் சந்தித்தார் காமராஜ். இது பத்திரிகைகளில் பெரிய சேதியாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. விசேஷப் புகைப்படங்கள் வேறு எடுத்து வெளியிட்டிருந்தார்கள். 

இதற்குச் சில நாட்களுக்கு முன்னால் காமராஜுடன் பேசிக் கொண்டிருந்த போது, “ராஜாஜி இப்போதெல்லாம் நீங்கள் கூறுவதை ஆதரிக்கிறாரே, உங்களிருவருக்கும் பல விஷயங் களில் கருத்து ஒற்றுமை காணப்படுகிறதே, நீங்கள் ராஜாஜியைப் பார்த்துப் பேசினீர்களா?” என்று கேட்டேன். 

“நான் அவரை இன்னும் பார்க்கவில்லை. ஆனால் அவருடைய அறிக்கைகளையும், பேச்சுக்களையும் கவனமாகப் படிச்சிக்கிட்டு வர்றேன். அவர் சொல்கிற விஷயங்களில் நியாயம் இருக்கிறது. நான் சொல்லுகிற கருத்துக்களை அவர் ஏத்துக்கிற மாதிரி படுது. போகட்டும்… இப்போ நான் அவரைப் பார்த்தா, பத்திரிகைகாரங்க ஏதேதோ கற்பனை பண்ணி எழுதி விடுவாங்க. இதனால் காரியம் பாதகமாப் போயிட்டாலும் போயிடும். சரியான சமயத்தில் அவரைப் பார்க்கணும்னு நெனைச்சுகிட்டு இருக்கேன்” என்றார். 

‘ராஜாஜிக்கும், காமராஜுக்கும் விரோதம். அதனால்தான் 1954-இல் அவரை ராஜிநாமாச் செய்ய வைத்து விட்டுக் காமராஜே முதலமைச்சர் ஆனார்’ என்று ஒரு பேச்சு இருக்கிறதல்லவா? அதைப் பற்றியும் கேட்டேன். “அதெல்லாம் ஆதாரமற்றது” என்றார் காமராஜ். அப்போது நடந்தது இதுதானாம்: 

ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது காமராஜ் மலேசியாவுக்குச் சென்றிருந்தார். அப்போது ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் ராஜாஜிக்கு எதிராகக் ‘கையெழுத்து வேட்டை’ ஆடிக் கொண்டிருந்தார்கள். காமராஜ் ஊர் திரும்பிய சமயம் ராஜாஜி ராஜிநாமா செய்து விட்டார். அவருடைய ராஜிநாமாவுக்குக் காரணமாயிருந்தவர்கள் காமராஜ் தலைமை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ‘ஒரு நிபந்தனைக்கு நீங்கள் ஒத்துக் கொண்டால் நான் தலைமை ஏற்கிறேன்’ என்று சொன்னார் காமராஜ். அவர்கள் ‘சரி’ என்று கூறி, அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். 

‘நான் என்ன செய்தேன், தெரியுமா? ராஜாஜி மந்திரி சபையில் இருந்தவர்களை அப்படியே மந்திரிங்களா வச்சுக்கிட்டேன். எனக்குப் பதவி, உனக்குப் பதவி என்று யாரையும் வரவிடவில்லை. ‘மந்திரி சபை அமைப்பதில் யாரும் குறுக்கிடக் கூடாது’ என்பதுதான் என் கண்டிஷன். ராஜாஜியின் மேல் எனக்கு விரோதம் என்பது உண்மையாக இருந்தால் அவர் வைத்திருந்த மந்திரிகளை நான் எடுத்துக்கிட்டிருப்பேனா…? ராஜாஜி செய்த ஒரு சில காரியங்கள், பல எம்.எல்.ஏ.க்களுக்குப் பிடிக்கவில்லை. அதுதான் உண்மையே தவிர, எனக்கு அவர் மேல் கோபம் எதுவும் கிடையாது” என்றார் காமராஜ். 

“அதுசரி, இப்போது உங்களுக்கு இந்திரா காந்தியின் மேல் கோபம் என்கிறார்களே?” 

“கோபம் ஒன்றும் இல்லை; கொள்கைகள் சிலவற்றில் மன வேற்றுமை இருந்தது… முக்கியமாக ரூபாய் மதிப்பைக் குறைத்தது தவறு என்பது என் கருத்து. திடீரென்று யாரையும் கலந்தாலோசிக்காமல் அதை அவங்க செய்துட்டாங்க. ‘என்னம்மா, இப்படி அவசரப்பட்டு முடிவு எடுத்திட்டிங்களே?’ன்னு கேட்டேன். அதுக்கு அந்த அம்மா என்ன சொன்னாங்க, தெரியுமா? ‘இதெல்லாம் ரகசியமாகச் செய்ய வேண்டிய காரியம். எல்லாரையும் கலந்து செய்யணுமின்னா வெளியே பரவி விடும்’ அப்படின்னு சொன்னாங்க. இது எனக்குத் தெரியாத சமாசாரமா? அவங்க சொன்ன காரணம் சப்பைக்கட்டு மாதிரி பட்டுது. அப்பவே எனக்குத் தோணிடுச்சு…” 

காமராஜ் முடிக்கவில்லை; “பாங்குகளைத் தேசிய மயமாக்கியது சரியான காரியந்தானே?” என்று கேட்டேன். 

காமராஜ் விளக்கினார். 

“பாங்குகள் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என்பது எல்லாரும் சொல்லிக் கொண்டிருந்தது தான். மொரார்ஜி தேசாய் இதற்கு ஆதரவு தரமாட்டார் என்று இந்திரா காந்தி. கருதினார். ‘மந்திரி சபைக் கூட்டத்தில் முடிவெடுங்கள். அதை நிறைவேற்ற வேண்டியது நிதி அமைச்சரின் பொறுப்பு. மந்திரி சபையின் முடிவை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அவரே விலகித்தானே ஆக வேண்டும்?’ என்றேன். இந்திரா காந்தி அப்படி எதுவும் செய்யவில்லை. மொரார்ஜி தடையாக இருப்பார் என்று தாமே முடிவெடுத்து அவருடைய இலாகாவை எடுத்துக் கொண்டார். ஒரு நாட்டின் உதவிப் பிரதமரை இப்படியா அலட்சியமாக நடத்துவது? தாம் கோபத்தில் அப்படிச் செய்யவில்லை என்று காண்பிக்கவோ என்னவோ, அவசர அவசரமாகப் பாங்குகளைத் தேசிய மயமாக்கினார். ஆக, இது எந்தச் சமயத்தில், எந்த உள்நோக்குடன் செய்யப்பட்டது என்பதே கேள்வி. நான் சொன்னபடி காபினெட்டில் முடிவெடுத்தாங்களா? மொரார்ஜி ‘மாட்டேன்’ என்று குறுக்கே நின்றாரா? இல்லையே…! இப்படி அவசர அவசரமாச் செய்தாங்க… ஆரம்பத்திலே பூக்கடைக்காரருக்கும், பட்டாணிக் கடைக்காரருக்கும் கடன் கொடுக்கிறாங்கன்னு பிரபலப்படுத்திட்டாங்க… இப்போ என்ன ஆச்சு? ஒரு வருஷம் ஆச்சு, ‘ஃபாலோ அப்’ காரியம் சரியாச் செய்யலையே…! கடனும் சுலபமாக் கிடைக்கலையாம்; செக்யூரிட்டி கேட்கிறாங்களாம்; இதை யெல்லாம் எதுக்குச் சொல்ல வந்தேன்னா பாங்குகளைத் தேசிய மயமாக்க வேண்டுமென்ற நோக்கத்திற்குப் பின்னே மொரார்ஜிக்குப் பிற்போக்குவாதின்னு பட்டம் கட்டணும் என்பதுதானே ஐடியாவா இருந்திருக்குன்னேன்!” 

சவான் பங்களூரில் சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவாக இருந்து, பின்னால் இந்திரா காந்தியின் பக்கம் சென்று விட்டாரல்லவா? – அதைப் பற்றியும் காமராஜைக் கேட்டேன். 

“சவானுக்கு அவங்க செய்தது சரியில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் தைரியமில்லே. என்னவோ மராட்டா என்கிறார். வீர சிவாஜி மாநிலம் என்கிறார். பயப்படறாரே! நான் என்ன செய்வேன்னேன்? அவர் ரிஸ்க் எடுக்கப் பயப்படறாரு!” என்றார் காமராஜ். 

“அவர் பிரதமராக வருவதற்குக்கூட வாய்ப்பு இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்களே?” 

“ஆமாம், இருக்கத்தான் இருந்தது. இப்போது இல்லாவிடினும் 1972-க்குப் பிறகு அந்த வாய்ப்பு அவருக்கு வந்தே இருக்கும். அவரது பயந்த சுபாவமே அந்த வாய்ப்புகளை வர விடாமல் செய்து விட்டது. அடுத்த தேர்தலுக்குப் பிறகு சவான் பிரதம மந்திரியாக வருவதில் மொரார்ஜிக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. ஆனால் இன்றுள்ள நிலைமை அந்த வாய்ப்புகளை மாற்றி விட்டன. இப்ப அதைப் பற்றிப் பேசறதிலே என்ன லாபம்?” என்றார் காமராஜ். 

அத்தியாயம் – 21

காங்கிரஸ் மகாசபைக்குக் காமராஜ் தலைவரானது தொண் டர்களுக்கெல்லாம் அளவற்ற உற்சாகத்தைத் தந்தது. சாதாரணத் தொண்டராகத் தம் அரசியல் வாழ்க்கையைத் துவங்கிய காமராஜ், மகாசபையின் தலைவர் பதவிக்கு உயர்ந்தது மட்டுமல்ல அவர்களுடைய உற்சாகத்துக்குக் காரணம்; தொண்டனுக்கும் மேலே உயர வாய்ப்புகளும், வழிகளும் காங்கிரஸில் உள்ளன என்பதும் காரணமாகும். 

‘காமராஜ் திட்டம்’ என்ற தம் திட்டத்தைத் தாமே ஏற்று அவர் முதலமைச்சர் பதவியைத் துறந்தார். ஆனாலும் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை அவர் ஏற்க வேண்டி வந்தது. சூழ்நிலை அப்பதவியை அவர் மேல் சுமத்தி விட்டது. 

பதவியை நாடிப் போவது என்பது காமராஜுக்குத் தெரியாத வித்தை. அவருடைய சரித்திரமே அதற்குச் சான்று. அதன் படி பதவிதான் அவரை எப்போதும் துரத்திக் கொண்டு வந்துள்ளது. 

“தலைவர் பதவியை எனக்குக் கொடுக்காதீங்கன்னு சொன்னேன்; யாரும் கேட்கலை. எலெக்ஷனுக்கு நாலைஞ்சு மாசத்துக்கு முந்தி நேரு என்னிடம் தலைவராக இருக்கும்படி சொன்னார். பெரிய பொறுப்பாச்சேன்னேன். எத்தனையோ தொல்லைகளைச் சமாளிக்க வேண்டி வருமேன்னேன். முதலமைச்சர் வேலையை விட்டது, தமிழ் நாட்டிலே கட்சியைப் பலப்படுத்தற எண்ணத்தோடு தானே, மறுபடியும் பதவியை ஏத்துக்கிடறது எப்படின்னேன். அப்போ நேரு என் பேச்சைக் கேட்டுக்கிட்டார்; மேலே என்னை வற்புறுத்தலை. பின்னால் நிலைமைகள் மாறிப் போய் விட்டன” என்றார் காமராஜ். 

இது முழுக்க முழுக்க உண்மை. சின்ன மந்திரி சபையை வைத்துக் கொண்டு குழப்பம், பிளவு எதுவுமின்றிச் சீரான ஆட்சியைத் தமிழகத்தில் நடத்தி வந்தவர் காமராஜ். அவரே கட்சிக்காகப் பதவியை விட்டது அவருடைய மதிப்பை அகில இந்திய அளவில் உயர்த்தி விட்டது. அவருடைய புகழ் பெற்ற ‘காமராஜ் திட்ட’த்தைத் தக்க சமயத்தில் கொண்டு வரப்பட்ட ‘பெனிசிலின் சிகிச்சை’ என்று மக்கள் நினைத்தனர். ஆகவே, அவரையே தலைவராகப் போட முடிவெடுத்தது காங்கிரஸ் மகாசபை. 

காமராஜ் காங்கிரஸ் தலைவராக இருந்த சில ஆண்டுகள் மறக்க முடியாத ஆண்டுகள். அப்போது இந்திய வரலாற்றில் அவருடைய அரிய செயல்கள் பல இடம் பெற்றன. 

காமராஜின் அகில் இந்தியச் செல்வாக்கைக் கண்டு வெளி நாட்டினரும் வியந்தனர். அமெரிக்காவும், ரஷ்யாவும் காமராஜைத் தங்கள் நாட்டிற்கு அழைத்தன. 

ஒரு கட்சித் தலைவரை ரஷ்ய அரசு அழைத்தது அதுதான் முதல் தடவை. கட்சி என்றால் கம்யூனிஸ்ட் அல்லாத கட்சி என்பதை இங்கு நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். 

அவர்களுடைய அழைப்புக்களைக் காமராஜ் ஏற்றார். ஆனால் இந்தியா – பாகிஸ்தான் பூசல் போன்ற காரணங்களால் அவர் அப்போது நாட்டை விட்டு வெளியே போக இயலவில்லை. அந்தப் பூசலை ஓரளவு சமரசமாகத் தீர்த்து வைக்கக் கோஸிஜின் முயற்சி எடுத்துக் கொண்டார். அதன் பயனாகத் தாஷ்கண்ட் ஒப்பந்தம் ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக லால்பகதூர் சாஸ்திரி அங்கே மரணம் அடைந்ததும் அவருடைய சடலத்துடன் டில்லி வந்த கோஸிஜின், மறுபடியும் காமராஜைத் தம் நாட்டிற்கு வருமாறு அழைத்தார். 

அந்த அழைப்பை ஏற்றுக் காமராஜ் ரஷ்யா செல்லத் திட்டமிட்டார். ஒரு கட்சித் தலைவர் இப்படி வெளிநாட்டினர் அழைப்பை ஏற்றுக் கொள்ளலாமா என்ற சர்ச்சை அப்போது எழுந்தது. அதைப் பொருட்படுத்தாமல் திரு. ஆர். வேங்கட ராமனுடன் அவர் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்தார். அத்துடன் யூகோஸ்லேவியா, கிழக்கு ஜெர்மனி போன்ற நாடுகளுக்கும் விஜயம் செய்தார். 

காமராஜை ரஷ்ய மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றார்கள். அங்கே ரஷ்ய பார்லிமெண்ட் தலைவரின் விருந்தினராகக் காமராஜ் இருந்தார். 

காமராஜின் எளிமை ரஷ்ய மக்களை வெகுவாகக் கவர்ந்தது. அதே நான்கு முழ வேட்டி; முக்கால் கைச்சட்டை; மேல் துண்டு. கிரெம்ளினில் கோளிஜினுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திய போதும் அதே உடைதான். அங்குள்ள தொழிற்சாலைகளையும், மற்ற இடங்களையும் பார்க்கச் சென்ற போதும் அதே உடைதான். 

சோவியத் பத்திரிகைகள் வேறு காமராஜ் விஜயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதின. இந்தியத் துணைக் கண்டத்தில் காமராஜ் ஒரு முக்கியப் புள்ளி என்பதை ரஷ்யாவும், ரஷ்யப் பத்திரிகைகளும் உணர்ந்திருந்ததே அதற்குக் காரணம். ரஷ்யாவுக்குப் பிறகு வேறு பல நாடுகளுக்கும் காமராஜ் சென்று திரும்பினார். 

ரஷ்யாவுக்குச் சென்றதால் கம்யூனிஸ்டுகளின் பக்கம் சாய்ந்து விடுவார் என்று ஒரு பேச்சு அப்போது இருந்தது. அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இந்தியாவின் நடுநிலைக் கொள்கைக்கு ரஷ்யாவினால் ஊறு நேராது என்பதைக் காமராஜ் கண்டார். நாம் ராணுவக் கூட்டு எதிலும் சேராததை ரஷ்யா பாராட்டுகிறது என்பதையும் அவர் அறிந்தார். 

ரஷ்யாவில் எந்தப் பொருளையும் காமராஜ் வாங்கவில்லை. பரிசுகளையும், அன்பளிப்புகளையுங்கூட அவர் தம்முடன் எடுத்து வரவில்லை. அன்றும், இன்றும் தமக்கென்று எதையும் சேர்த்துக் கொள்ளாத பெருந்தலைவர் காமராஜ். 

ரஷ்ய விஜயத்திற்குப் பிறகு அவர் அமெரிக்கா போகத் திட்டமிட்டார். பல காரணங்களால் அது தள்ளிப் போடப் பட்டு விட்டது. அதற்குள் அவருடைய காங்கிரஸ் தலைவர் பதவிக் காலமும் முடிவுற்றது. அவருக்குப் பின் திரு.நிஜலிங்கப்பா காங்கிரஸ் தலைவரானார். 

“ஆமாம்; நிஜலிங்கப்பா பெயர் பத்திரிகைகளில் வந்த போது, ‘அவர் என் கேண்டிடேட்’ என்று நீங்கள் சொன்னதாக ஒரு செய்தி வந்ததே, அதன் பின்னணி என்ன?” என்று கேட் டேன். 

“அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. காங்கிரஸ் பிரசிடெண்டா யாரைப் போடலாம் என்ற பேச்சு வந்தது. யார் யார் பெயரை எல்லாமோ யோசனை செய்தோம். எனக்கு மோகன்லால் சுகாதியாவைப் போடலாம்னு எண்ணம். இந்திரா காந்தியிடம் சொன்னேன். இந்த யோசனைகள் நடந்து கொண்டிருக்கிற போது டில்லிக்கு ஏதோ வேலையாக வந்திருந்தார் நிஜலிங்கப்பா. அவர் அப்போது மைசூர் முதல் மந்திரியாக இருந்தார். 

ராத்திரி பத்து மணி வரைக்கும் இந்திரா காந்தி, நான், மற்ற எல்லாரும் அடுத்த தலைவரைப் பற்றிப் பேசி முடிவெடுக்காமல் வீட்டுக்குத் திரும்பி விட்டோம். அப்புறம் இந்திரா காந்தி நிஜலிங்கப்பாவைக் கூப்பிட்டுப் பேசியிருக்காங்க. அவர் சம்மதம்னு சொன்னாலும் ‘காமராஜைக் கேட்கணுமே’ என்று சொல்லியிருக்கார். ‘இல்லை, நீங்க சரின்னு சொல்லுங்க. அவரைக் காலையில் கேட்டுக் கொள்ளலாம்’ என்று இந்திரா காந்தி சொல்லிட்டாங்க. அப்போது மணி 11, 12 இருக்கும். 

காலையில் எழுந்து பேப்பரைப் பார்க்கிறேன். ‘அடுத்த தலைவர் நிஜலிங்கப்பா!’ன்னு போட்டிருந்தது. ராத்திரி அவர் கிட்டே சம்மதத்தை வாங்கிக்கிட்டு உடனே பேப்பருக்கு நியூஸ் கொடுத்துட்டாங்க. நிஜலிங்கப்பா பேப்பரைப் பார்த்ததும் ‘என்னடா இது?’ன்னு ஆச்சரியப்பட்டார். நேராக என் வீட் டுக்கு வந்தார். அப்பதான் நான் ஷேவ் பண்ணிக்கிட்டிருக்கேன். அவர் விஷயத்தைச் சொன்னார். ‘நீங்க பிரசிடெண்டாக வருவதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது’ன்னு அவரிடம் சொன்னேன். உடனே பேப்பருக்கு அறிக்கை கொடுத்தேன், ‘அவர் என் கேண்டிடேட்’ என்று…” 

நிஜலிங்கப்பாவுக்கும், காமராஜுக்கும் இடையே மனக் கசப்பை ஏற்படுத்த வேண்டும் என்றோ என்னவோ, இரவோடு இரவாக அவருடைய சம்மதம் பெற்றுப் பத்திரிகைகளுக்கும் செய்தி கொடுத்து விட்டார் இந்திரா காந்தி. ஆனால் காமராஜிடம் அவருடைய சூழ்ச்சி பலிக்கவில்லை! நிஜலிங்கப்பாவைத் தாம் ஆதரிப்பதாக உடனே அறிக்கை விட்டு விட்டார். 

அன்று எந்த நோக்கத்துடன் நிஜலிங்கப்பாவை ‘என் கேண்டிடேட்’ என்று காமராஜ் கூறினாரோ, பின்னால் ஏற்பட்ட பல பெரும் பிரச்னைகளின் போதும், சூறாவளிகளின் போதும் அவருடைய ஆதரவு நிஜலிங்கப்பாவிற்குப் பூரணமாக இருந்தது. காமராஜின் துணை இல்லாதிருந்தால் நிஜலிங்கப்பா அவ்வளவு துணிவான காரியங்கள் பலவற்றைச் செய்திருப்பாரா என்பது சந்தேகந்தான். 

காமராஜுடன் ஒரு நாள் 

இரண்டு மாதங்களுக்கு முன் திரு.காமராஜ் அவர்களைச் க்க நான் டில்லிக்குப் போயிருந்த போது அவர் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தார். 

சில தினங்கள் கழித்து மீண்டும் அவரை டில்லி சந்தித்தேன். அப்போது முதலமைச்சராக அங்கு வரவில்லை. பதவியிலிருந்து விலகி விட்ட வெறும் காமராஜராகவே வந்திருந்தார். 

அன்று மாலை திரு.லால்பகதூர் சாஸ்திரி காமராஜரைக் காண ‘மெட்ராஸ் ஹவுஸு’க்கு வந்திருந்தார். வாசலில் நின்று கொண்டிருந்த ரிஸப்ஷன் ஆபீஸர் திரு.தீனதயாளைக் கண்டதும் அவர், “காமராஜைப் பழையபடியே கவனித்துக் கொள்கிறீர்கள் அல்லவா? முன்பு அவர் தங்கியிருந்த அதே அறையில் தானே இறக்கியிருக்கிறீர்கள்? உபசரிப்பில் ஒன்றும் குறைவில்லையே!” என்று சிரித்தபடி கேட்டுக் கொண்டே மாடிக்கு ஏறிச் சென்றார். 

காமராஜ் பதவியிலிருந்து விலகி விட்டதால் எங்கே அவரைச் சரியாகக் கவனிக்காமல் இருந்து விடுகிறார்களோ என்ற கவலையிலேயே சாஸ்திரி அவ்வாறு கேட்டார். ஆனால் உண்மையில் காமராஜுக்கு அங்கே முன்னைக் காட்டிலும் இரட்டிப்பு உபசாரம் நடந்து கொண்டிருந்தது. 

மறுநாள் காலை. நான் மெதுவாகக் காமராஜ் தங்கியிருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தேன். என்னைக் கண்டதும், “என்…ன…? வாங்க…” என்று புன்முறுவலோடு அழைத்தார் அவர். 

‘விசிட்டர்கள்’ அதிகமில்லாத நேரமாகையால் நிம்மதியாக உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். அகில இந்தியக் காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு யார் வரப் போகிறார்கள் என்பது பற்றிப் பத்திரிகைகளில் ஏதேதோ செய்திகள் வெளி யாகியிருந்தன, காமராஜரும் அப்போது அதுபற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று எண்ணினேன். 

“லால்பகதூர் சாஸ்திரியையே காங்கிரஸ் தலைவராகப் போட்டு விடலாமே…?” என்று மெதுவாகப் பேச்சைத் தொடங்கினேன். 

“ஆமாம்; போட்டு விடலாம்; அப்படித்தான் நாங்களும் எண்ணிக் கொண்டிருக்கிறோம் (நாங்கள் என்பது திரு.சஞ்சீவ ரெட்டியையும், திரு.அதுல்ய கோஷையும் சேர்த்துச் சொன்னது). சாஸ்திரியிடமும் கேட்டுப் பார்த்தோம். 

ஆனால் அவர் தலைமைப் பதவி தமக்கு வேண்டாம் என்கிறார். இன்றைக்கு மறுபடியும் சாஸ்திரியைச் சந்தித்து ‘கன்வின்ஸ்’ பண்ண வேண்டும்” என்றார். 

ஆனால் மறுநாள் காலைப் பத்திரிகைகளைப் புரட்டிய போது தலைமைப் பதவிக்குக் காமராஜையே காரியக் கமிட்டி தேர்ந்தெடுத்திருப்பதைக் கண்ட போது எனக்கு வியப்புத் தாங்க வில்லை. 

“என்ன இப்படி ஆகி விட்டது?” என்று திரு.காமராஜிடம் கேட்டேன். 

“எனக்கு ஒன்றுமே தெரியாது; காரியக் கமிட்டிக் கூட்டத்தில் அதுல்ய கோஷும், சஞ்சீவ ரெட்டியும் காதைக் கடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த வேலை இது என்று எண்ணுகிறேன்” என்றார் அவர். 

‘எப்படி இருந்தாலும் நல்ல முடிவு’ என்று கூறி என் மகிழ்ச்சியைத் தெரிவித்து விட்டு அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன். வாசல் வராந்தாவுக்கு வந்த போது, தலைவர்களும், மந்திரிகளும், எம்.பி.க்களும் பெருங்கூட்டமாக மலர் மாலைகள்; பழத்தட்டுகள் சகிதம் காத்திருந்தனர். 

“பதினைந்து நாட்களுக்கு முன்னால், முதலமைச்சராக இங்கு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னால் பதவியில்லாத சாதாரண மனிதராக வந்தார். இன்றைக்கு அகில இந்தியக் காங்கிரஸ் தலைமைப் பதவி அவரைத் தேடி வந்திருக்கிறது. இத்தனை மாறுதல்களும் இரண்டே வாரங்களில் நடந்து விட்டன. ஆனாலும் அவரிடத்தில் எந்தவித மாறுதலையும் காண முடியவில்லை. பதவியில் இருந்த போது, பதவியை விட்ட போது, பதவி அவரைத் தேடி வந்துள்ள போது ஆக எந்த நிலையிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்” என்றார் திரு.தீனதயாள். 

திரு. காமராஜ் முதலமைச்சராக இருந்த போது ஒரு சமயம் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் நானும் போயிருந்தேன். காரிலேயே கிராமம் கிராமமாகச் சென்று சொற்பொழிவு நிகழ்த்தி விட்டுக் கடைசியாக இரவு பன்னிரண்டு மணிக்கு முசாபரி பங்களா ஒன்றில் தங்கினார். அங்கே படுக்கப் போகுமுன், “சரி, நான் தூங்கப் போகிறேன். என்னைச் சரியாக ஆறு மணிக்கு எழுப்பி விடுங்க” என்று கூறிவிட்டுக் கதவைச் சாத்திக் கொண்டார். உடனே அங்கிருந்தவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அந்த அறையின் கதவை வெளிப் பக்கம் பூட்டிக் கொண்டார்கள்! எனக்கு ஒரே ஆச்சரியமாகப் போய் விட்டது. “எதற்காக வெளியே பூட்டி விடுகிறீர்கள்?” என்று கேட்டேன். 

“காமராஜ் கதவை உள்பக்கம் தாளிட்டுக் கொண்டு தூங்கி விட்டால் குறித்த நேரத்தில் அவரை எப்படி எழுப்ப முடியும்? அதற்காகத்தான் வெளியே பூட்டிக் கொள்கிறோம்! ஆறு மணிக் குக் கதவைத் திறந்து நாங்கள் எழுப்பி விடுவோம்” என்று பதில் சொன்னார்கள். 

இந்த நிகழ்ச்சி எனக்கு ஞாபகம் வரவே, “இங்கே மெட்ராஸ் ஹவுஸில் என்ன செய்கிறீர்கள்?” என்று திரு.தீனதயாளை விசாரித்தேன். 

“இங்கே அவர் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு படுக்கப் போவதற்கு மணி பன்னிரண்டு ஆகிவிடும். அதற்கு மேல் அரை மணி, முக்கால் மணி நேரம் புத்தகம் படிப்பார். எவ்வளவு நேரமானாலும் படிக்காமல் மட்டும் உறங்குவதில்லை. இரவு அவர் படுத்துக் கொண்டதும் நான் கதவைச் சாத்திக் கொண்டு வந்து விடுவேன். காலையில் இத்தனை மணிக்குக் காப்பியுடன் எழுப்ப வேண்டும் என்பார். அவர் தூங்கும் போது எத்தனை முறை குரல் கொடுத்தாலும் எழுந்திருக்க மாட்டார். கையினால் மெதுவாகத் தொட்டால் போதும், உடனே எழுந்து விடுவார்.” 

“என்ன புத்தகங்கள் படிக்கிறார்?” என்று கேட்டேன். 

“தமிழ்ப் புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பதையும் கவனித்திருக்கிறேன். ஆனால் அவை என்னென்ன புத்தகங்கள் என்பது மட்டும் எனக்குத் தெரியாது. பெட்டிக்குள் நிறையப் புத்தகங்கள் வைத்திருக்கிறார். அவ்வளவுதான் தெரியும்…” 

அவை என்ன புத்தகங்கள் என்பதை எப்படியாவது தெரிந்து கொண்டுவிட வேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. 

மறுநாள் காலை காமராஜ் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். அவர் சோபா ஒன்றில் கால்களைச் சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். சட்டைப் பித்தான்களைக் கழற்றி விட்டு, வலது கையை முதுகுப் பக்கமாகச் செலுத்தி இடது தோளைத் தேய்த்தபடியே பத்திரிகை படிப்பதில் சுவாரசியமாக ஈடுபட்டிருந்தார். 

மேஜை மீது அன்றைய ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், இண்டியன் எக்ஸ்பிரஸ் இவ்வளவு பத்திரிகைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

“பத்திரிகைகளில் அரசியல் செய்தி மட்டும்தான் படிப்பீர்களா? அல்லது…”

“எல்லாந்தான், எந்த ஊரில் என்ன பிரச்னை என்று பார்ப்பேன். ஒரு ஊரில் தண்ணீர் இல்லை என்ற செய்தி இருந்தால் அதையுந்தான் பார்ப்பேன். தண்ணீர் இல்லை என்பதும் அரசியல் சம்பந்தப்பட்டதுதானே?” என்று சொல்லிக் கொண்டே எழுந்தார். எழுந்தவர் கவனமாக மின் விசிறியை நிறுத்தி விட்டு அடுத்த அறைக்குள் சென்றார். அதுதான் அவருடைய படுக்கை அறை, படுக்கை அறையை ஒட்டினாற் போல் இன்னொரு சின்ன அறை. அங்கேதான் அவருடைய பெட்டி இருந்தது. சாதாரணமாக ‘விஸிடர்கள்’ யாரும் அந்த அறைக்குள் அநுமதிக்கப்படுவதில்லை. அந்தச் சின்ன அறைக்குள் இருந்த சிறு மேஜை, ‘கோட் ஸ்டாண்ட்’, முகம் பார்க்கும் கண்ணாடி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் கண்ணோட்டமிட்டேன். 

“என்ன… என்ன பாக்கறீங்க?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார். 

“ஒன்றுமில்லை; தங்களைக் கூடவே இருந்து கவனிக்கப் போகிறேன். இது என்னுடைய நெடுநாளைய ஆசை” என்றேன். 

“ஓ, தாராளமா இருங்களேன்.இப்படி வந்து உட்காருங்க” என்று கூறிக் கொண்டே பெட்டியிலிருந்த சலவைத் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழை வைத்தார். 

அந்தப் பெட்டிக்குள் என்னென்ன இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கூர்ந்து கவனித்தேன். 

INSIDE AFRICA – by John Gunther 
ENDS AND MEANS – by Aldous Huxley
TIME MAGAZINE 
NEWS WEEK 
சிந்தனைச் செல்வம் வி.ச.காண்டேகர் 

இவ்வளவும் இருந்தன. இவ்வளவையும் கவனிக்காதது போல் கவனித்துக் கொண்டேன். நான் கவனிக்காதது போல் கவனித்ததை அவரும் கவனிக்கத் தவறவில்லை. 

“இன்ஸைட் ஆப்பிரிக்கா’வைப் பற்றி இவருக்கு என்ன கவலை? ‘இன்ஸைட் இந்தியா’வைப் பற்றி இவர் படுகிற கவலை போதாதா?” என்று எண்ணிக் கொண்டேன். யார் கண்டார்கள்? இந்தப் பொல்லாத மனிதர் அகில இந்தியாவுக்கும் ஒரு ‘காமராஜ் திட்டம்’ கொண்டு வந்தது போல் ஆப்பிரிக்கா தேசத்துக்கும் இன்னொரு திட்டம் வைத்திருக்கிறாரோ என்னவோ? 

அடுத்தாற் போல் பெட்டியிலிருந்து ‘ஷேவிங் ஸெட்’டை எடுத்துக் கண்ணாடி முன் வைத்துக் கொண்டார். அந்த நித்தியக் கடமை முடிந்ததும். தமது சட்டையைக் கழற்றி ஒழுங்காக மடித்து அதற்குரிய இடத்தில் கொண்டு போய் வைத்தார். அங்கு ஏற்கெனவே பல சட்டைகள் இம்மாதிரி மடித்து வைக்கப்பட்டிருந்தன. 

“ஒரு நாளைக்கு எத்தனை சட்டை மாற்றிக் கொள்வீர்கள்?” 

“இரண்டு மூன்று முறை குளிக்க வேண்டும் எனக்கு. ஓவ்வொரு முறை குளித்து முடித்ததும் சலவைச் சட்டை போட்டுக் கொள்ள வேண்டும்” என்றார். 

”பனியன் போட்டுக் கொள்ள மாட்டீர்களா” என்று நான் கேட்கவில்லை. அவர் பனியன் போட்டுக் கொள்ளுவதில்லை என்பது தெரிந்த விஷயந்தானே? 

“குளிர்ந்த தண்ணீரில்தான் குளிப்பீர்களோ?” 

“ஆமாம்; பெரும்பாலும் பச்சைத் தண்ணீரில்தான், ரொம்ப குளிராயிருந்தால்தான் வெந்நீரில் குளிப்பேன்.” 

“எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் வழக்கம் உண்டா?”

“கிடையாது; அந்த வழக்கமில்லை…” 

“தீபாவளியன்று?…” 

“அன்று கூடக் கிடையாது.” 

“தீபாவளியன்று…’ என்று நான் அடுத்த கேள்வியை ஆரம்பித்தேன். அதை முடிப்பதற்குள்ளாகவே அவர். “ஆமாம்; புதுவேட்டி கட்டிக் கொள்வேன்….” என்று கேள்வியை முன்கூட்டியே எதிர்பார்த்தவர் போல் சட்டென்று பதில் கூறிவிட்டார். 

“குளிர் காலத்தில் டில்லியில் இருக்கும்போது கம்பனி சட்டை, கோட்டு ஏதாவது போட்டுக் கொள்வீர்களா?” 

“அதெல்லாம் ஒன்றும் கிடையாது. இப்போதுள்ளபடியே தாள் எப்பவாவது தேவையானால் பிளாளல் சால்வை போட்டுக் கொள்வேன்…” 

“இப்படி ஓயாமல் அலைந்து கொண்டிருக்கிறீர்களே? இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவதில்லையா?” 

“கிடையாது.” 

“தலைவலி வருவதுண்டா?” 

“வந்ததில்லை.” 

“அதற்கு என்ன காரணம்?” 

“நான் ஆகாரத்தில் ரொம்ப உஷாராக இருந்து விடுவேன். காலையில் சூடாக ஒரு கப் காப்பி சாப்பிடுவேன். அப்புறம் கோட்டைக்குப் போவதாயிருந்தால் பதினொரு மணிக்குள் சாப்பிடுவேன். அத்துடன் இரண்டு மணிக்கு ஒரு கப் காப்பி. இரவு இட்லியும், சட்னியும். இவ்வளவுதான் என் ஆகாரம். கிராமங்களில் சுற்றுப் பயணம் செய்யும் நாட்களில் சில சமயம் பகலில் மணி இரண்டுக்கு மேல் ஆகிவிடும். அந்த நேரத்தில் லேசாக வெறும் மோர் சாதம் சாப்பிட்டால் போதுமென்று தோணும். ஆனால் எனக்குச் சாப்பாடு போடுகிறவர்களிடம் மோர் சாதம் போதுமென்று சொன்னால் கேட்க மாட்டாங்க. இலையில் எல்லாவற்றையும் போட்டுக் கஷ்டப்படுத்தி விடுவாங்க. என் நிலையைப் புரிந்து கொள்ளாமல் தொந்தரவு கொடுப்பாங்க. இதற்காக நான் ஒரேயடியாகச் சாப்பாடே வேண்டாமென்று சொல்லிப் பட்டினி போட்டு விடுவேன். இதனால் உடல் நலம் கெட்டுப் போவதில்லை.” 

“தாங்கள் கை கடியாரம் கட்டிக் கொள்வதில்லையே; ஏன்?” 

“அதெல்லாம் எதுக்கு! அவசியமில்லை. யாரைக் கேட் டாலும் நேரம் சொல்றாங்க. கிராமங்களுக்குப் போகும் போது மட்டும் சில சமயம் நேரம் தெரியாமல் போய்விடும். அதற்காக ஒரு சின்ன டைம்பீஸ் வாங்கி வைத்திருக்கிறேன்” என்றார். 

அன்று நண்பர் ஜி.ராஜகோபாலன் வீட்டில் காலை உணவுக்கு ஏற்பாடாகியிருந்தது. பொங்கல், வடை, தோசை, இட்லி, சாம்பார், சட்னி இவ்வளவும் தயாரித்து வைத்திருந்தார்கள். 

திரு.காமராஜ் மேஜை முன் உட்கார்ந்து மேல் நாட்டுப் பாணியில் கைக்குட்டைப் பிரித்து மடி மீது பரப்பிக் கொண்டு ஃபோர்க் ‘ஸ்பூன்’ இவ்விரண்டு உதவியாலும் தோசை, இட்லி முதலியவற்றை மிக லாவகமாகவும் வேகமாகவும் எடுத்து, கீழே சிந்தாமல் சாப்பிட்டார். 

“தங்களுக்கு ரொம்பப் பிடித்த சிற்றுண்டி எது?” என்று கேட்டேன். 

அதற்கு அவர் பதில் கூறுமுன் பக்கத்திலிருந்த நண்பர் ஒருவர் “இட்லியும், தேங்காய்ச் சட்னியும் தான்” என்றார். 

”ஆமாம்” என்று அதைப் புன்சிரிப்புடன் மோதித்தார் திரு.காமராஜ். 

“சாப்பாத்தி போட்டால் சாப்பிடுவீர்களா?”

“சாப்பிடுவேன்.” 

“நாடகம், சினிமா பார்ப்பதில் விருப்பம் உண்டா? என்னென்ன படம் பார்த்திருக்கிறீர்கள்?” 

“ரொம்பப் பார்த்ததில்லை. அதற்கெல்லாம் நேரம் ஏது? ஏதோ இரண்டொரு படங்கள் பார்த்திருக்கிறேன். ஒளவையார் படம் பார்த்திருக்கிறேன். துண்டு துண்டாக நியூஸ் ரீல், பிரசாரப் படம் இப்படிப் பார்த்திருக்கிறேன்.”’ 

”தினமும் நூற்றுக்கணக்கான பேர் தங்களைத் தேடி வந்து தங்கள் வீட்டு வாசலில் காத்திருக்கிறார்களே அவர்கள் எல்லாம் தங்களிடம் என்ன கேட்பார்கள்?” 

“சிபாரிசுக்கு வருவாங்க. ஏழை எளிய மக்கள் கேட்கிற உதவியெல்லாம் சுலபமாகச் செய்யக் கூடியதாயிருக்கும். முடிந்ததை நானும் செய்து விடுவேன். படிச்சவங்க, விஷயம் தெரிஞ்சவங்க வந்து கேட்கிற காரியங்களில்தான் சிக்கலெல் லாம் இருக்கும். அவர்களே வக்கீலிடம் கேட்டுக் கொண்டு வந்து இப்படிச் செய்யலாமே என்று எனக்கு ஆலோசனை சொல்லுவாங்க. நான் ‘ஆகட்டும், பார்க்கலாம்’ என்பேன். யாருக்காவது இரண்டொருவருக்குச் செய்துவிட்டு மற்றவர்களுக்குச் செய்யவில்லையென்றால் தானே கோபம் வருகிறது? ஆகையால், எல்லோருக்குமே சமமாக இருந்து விடுவேன். யாராவது ஒரு பையன் ஸ்கூல் அட்மிஷனுக்கு வருவான். மார்க் கொஞ்சமா வாங்கியிருப்பான். ‘நீ வாங்கியிருக்கும் மார்க்கை விடக் குறைந்த மார்க் வாங்கியுள்ள பையன் யாருக்காவது அட்மிஷன் கொடுத்திருந்தால் சொல்’ என்பேன். அப்படி இருக்காது. ஒரு வேளை யாருக்காவது அம்மாதிரி அட்மிஷன் கொடுத்திருந்தால் அவனிடம் ‘ஆமாம்! நீ சொன்னது உண்மைதான்’ என்று ஒப்புக் கொள்வேன். அவன், அதிலேயே திருப்தி அடைந்து போய்விடுவான்!” 

“தினந்தோறும் இவர்கள் அத்தனை பேருக்கும் பதில் சொல்லி அனுப்புவது கஷ்டமான காரியம் ஆயிற்றே? அலுப்பாக இருக்குமே!” 

“எனக்கு அலுப்பே கிடையாது அவ்வளவு பேர் வந்தாலும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் இதில் எனக்குள்ள சங்கடம், பத்திரிகை படிக்க நேரமில்லாமல் போய் விடுவது தான். ஆகையால், காலை வேளையில் என்னை யாரும் தொந்தரவு செய்யாமலிருந்தால் நல்லது. பத்திரிகை படிக்கும் நேரம் எனக்கு ரொம்ப முக்கியம். ‘விஸிட்டர்’களால் அது தடைப்பட்டுப் போகிறது. அந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் எப்போது வந்தாலும் பார்க்க தயார்” என்றார். 

அன்றிரவு மணி பன்னிரண்டு இருக்கும். காமராஜ் கட்டிலில் படுத்தவாறே மிகச் சுவாரசியமாக ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். என்ன புத்தகம் என்று எட்டிப் பார்த்தேன். வேறொன்றும் இல்லை; கம்ப ராமாயணம். 

டில்லியில் காமராஜ் 

டில்லியில் சாணக்கியபுரியில் ஓர் அழகிய இல்லம். ‘மெட்ராஸ் ஹவுஸ்’ என்பது அதன் பெயர். 

காலை ஏழரை மணியிலிருந்து இரவு பன்னிரண்டு மணி வரை அந்த இல்லத்தைத் தேடிப் பல ராஜ்யங்களைச் சேர்ந்த மந்திரிகளும், எம்.பி.க்களும், எம்.எல்.ஏக்களும் வந்து போய்க் கொண்டே இருக்கிறார்கள். 

‘இந்த படா படா ஆத்மி’களெல்லாம் எதற்காகக் காத்திருக்கிறார்கள்? இவ்வளவு பேரும் அவரிடம் என்னத்தைச் சொல்லப் போகிறார்கள்? இவர்களுக்கெல்லாம் அவர் என்ன பதில் கூறப் போகிறார்’ என்ற வியப்புடன் கவனித்துக் கொண்டிருக்கிறேன். 

மணி எட்டு இருக்கலாம். குஜராத் முதலமைச்சர் டாக்டர் ஜீவராஜ் மேத்தா புன்சிரிப்புடன் அந்த இல்லத்தின் மாடியிலிருந்து கீழே இறங்கி வருகிறார். அவரைத் தொடர்ந்து திரு.காமராஜும் கீழே இறங்கி வந்து, அவரை வழி அனுப்பி வைக்கிறார். 

வராந்தாவில் காத்திருப்பவர்களில் இடது கையில் பாண்டேஜ் கட்டுடன் காணப்பட்டவரும் ஒருவர். 

அவரை அணுகி, “தங்கள் பெயர் என்ன?” என்று விசாரித்தேன். 

“ராம்பியரா!” என்றார் அவர்.

“எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்?” 

“பஞ்சாபிலிருந்து.” 

“ஏன்?” 

“பஞ்சாப் முதல் மந்திரி கெய்ரோனின் ஆட்கள் என்னைத் தாக்கி என் கையை உடைத்து விட்டார்கள். நான் ஒரு எம்.எல்.ஏ…” 

‘நம் ஊரில் கை உடைந்தால் புத்தூருக்கல்லவா போவார்கள்? இவர் பாவம், இங்கே வந்திருக்கிறாரே?’ என்று எண்ணிக் கொண்டேன். 

“இங்கே ஏன் வந்திருக்கிறீர்கள்?” 

“காமராஜைப் பார்த்து, நடந்த விவரங்களை நேரில் சொல்லிவிட்டுப் போகலாம் என்றுதான். அவரிடம் சொல்லி விட்டால் என் மனதுக்குச் சாந்தி ஏற்படும்” என்றார். 

திரு. ராம்பியாராவைத் தவிரப் பஞ்சாபிலிருந்து இன்னும் ஏழெட்டுப் பேர் திரு.காமராஜைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்களில் சிலர், முதன் மந்திரி கெய்ரோனுக்குச் சாதகமானவர்கள். சிலர் கெய்ரோன் ஆட்சியை பிடிக்காதவர்கள். 

திரு.காமராஜ் அவர்களைக் கும்பலாகச் சேர்த்துப் பார்க்கவில்லை. முதலில், சமீபத்தில் மந்திரிப் பதவியை ராஜிநாமாச் செய்து விட்ட தர்பராசிங்கையும், கை உடைந்த ராம்பியா ராவையும் தனித்தனியாக அழைத்துப் பேசினார். பின்னர், திரு.கெய்ரோனுக்குச் சாதகமானவர்களையும், அப்புறம் அல்லாதவர்களையும் வரச் சொன்னார். எல்லோருக்கும் ஐந்து நிமிஷ நேரம்தான் பேட்டி. 

திரு.காமராஜ் அவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொன்னாரோ, என்ன மந்திரம் போட்டாரோ? மேலே சென்றவர்கள் அத்தனை பேரும் திருப்தியுடன் திரும்பி வந்தார்கள். 

அப்புறம், உ.பி. முதல் மந்திரி சி.பி.குப்தா வந்திருந்தார். 

“நீங்கள் அவரிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருங்கள்” என்று மதராஸ் ஹவுஸ் ஆபீஸர் திரு.தீனதயாள் என்னிடம் சொன்னார். நான் யார் என்பதை அறிந்து கொண்ட திரு.குப்தா என்னைக் கேட்ட முதல் கேள்வி இது தான்: 

“காமராஜ் தமிழில் தான் பேசுவாரா?” 

“இல்லை; ஆங்கிலத்தில் பேசுவார். தாங்களும் அவரிடம் ஆங்கிலத்திலேயே பேசலாம். தாங்கள் கூறுவதை யெல்லாம் அவர் நன்கு புரிந்து கொள்வார். உங்களுக்குத் தேவையான பதில்களையும் ஆங்கிலத்திலேயே சொல்வார்” என்றேன் நான். 

“நான் இதுவரை அவரைச் சந்தித்ததில்லை. அதற்குச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. காமராஜ் விவசாயக் குடும்பத்தில் பிறந்த கிராமவாசியா?” 

“விருதுநகர் என்ற ஊரில் பிறந்தார். ஓர் எளிய குடும்பத் தில் பிறந்தவர்.” 

“நானும் உங்கள் காமராஜைப் போல் கலியாணமாகாதவன் தான். எனக்கு வயது அறுபத்திரண்டாகிறது” என்றார் திரு.குப்தா. 

அப்போது அங்கே வந்த திரு.தீனதயாள், “தங்களைக் காமராஜ் அழைக்கிறார்” என்று கூறவே, திரு.குப்தா ‘பைல்’ கட்டுடன் மாடிக்கு ஏறிச் சென்றார். 

பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கெல்லாம் காமராஜும் அவரும் கீழே இறங்கி வந்தார்கள். குப்தா காரில் ஏறிக் கொண்டார். 

காமராஜ் அவரை வழி அனுப்பி விட்டு இந்தப் பக்கம் திரும்பினார். என்னைப் பார்த்துப் புன்சிரிப்புடன், ”என்ன?”
என்று நாவில் ஓர் அழுத்தம் கொடுத்துக் கேட்டார். 

“ஒன்றுமில்லை…” என்றேன் நான். 

“நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்து விடுகிறேன். நேருஜியின் வீட்டில் ஒரு மீட்டிங்… நீங்க நான் வந்தப்புறம் என்னுடனேயே சாப்பிடலாம்” என்றார். 

அவர் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்த சமயம் “அசோக் மேத்தாவுக்குத் தங்களைப் பார்க்க வேண்டுமாம். எப்போது சந்தித்துப் பேசலாம் என்று கேட்கிறார்?” என்றார் தீனதயாள். 

“பிரதம மந்திரி வீட்டுக்கு வருவார் இல்லையா?”

”ஆமாம்.” 

“அங்கேயே பார்த்து விடுகிறேனே” என்று சொல்லிய படியே போய்க் காரில் ஏறிக் கொண்டார். அவர் திரும்பி வரும் போது மணி ஒன்றே கால்! 

“என்ன… ஏதாவது விசேஷம் உண்டா? டெலிபோன் வந்ததா?…” என்று வழக்கப்படி கேட்டுக் கொண்டே வந்தார். 

“இப்போது நந்தா வருகிறார். தங்களைப் பார்க்க வேண்டுமாம்!”  

“என்னவாம்? என்ன வேணுங்கிறார்?” 

திரு. காமராஜின் முகத்தில் பசியும், களைப்பும் தெரிகின்றன. 

நந்தா வந்ததும் அவருடன் பேசி முடிப்பதற்குள் மணி ஒன்றே முக்கால் ஆகி விட்டது. அவரை வழி அனுப்பி விட்டுச் சாப்பிட உட்காரும் போது ஒன்று ஐம்பது! மேசையில் சாப்பாடு தயாராக எடுத்து வைக்கப்பட்டிருந்தது. அவரைக் கண்டதும் நான் எழுந்து நின்றேன். 

“நீங்க உட்காருங்க” என்று என்னை அமரச் சொல்லி விட்டுத் தாமும் உட்கார்ந்தார். 

கொஞ்சம் சாப்பிட்ட பிறகு பேச்சுக் கொடுக்கலாம் என்று காத்திருந்தேன். இரண்டு கவளம் சாப்பிட்ட பிறகு பேச்சைத் தொடங்கினேன். 

“மக்கள் மனம் வைத்தால் லஞ்ச ஊழலை ஆறே மாதத்தில் அடியோடு ஒழித்து விடலாம் என்று மொரார்ஜி தேசாய் கூறுகிறாரே…?” என்றேன். 

“அதெப்படி? ஜனங்களேதான் லஞ்சம் கொடுக்கிறார்கள். குறைந்த சம்பளம் வாங்குகிறவர்கள் அரை ரூபாய், ஒரு ரூபாய் வாங்குவதைப் பெரிய குற்றமாகச் சொல்ல முடியாது.” 

“தேவைக்கு வேண்டிய சம்பளம் பெறுகிறவர்களும், வாழ்க்கை வசதி உள்ளவர்களும் லஞ்சம் வாங்காமல் இருக்கலாமல்லவா?” 

“தேவைக்கு எது அளவுங்கறேன் ? வாழ்க்கை வசதிக்கு எல்லை ஏதுங்கறேன்? அப்புறம் கார் வாங்கணும்; வீடு வாங்கணும். ஆசை உள்ள வரைக்கும் தேவை என்பது இருந்துகிட்டேதான் இருக்கும்.” 

“சில மந்திரிகள் பதவியிலிருந்து விலகுவதால் அடுத்தாற் போல் வரும் மந்திரிகள் ஏற்கெனவே உள்ள கொள்கைகளையும், திட்டங்களையும் மாற்றி அமைக்க நேரிடுகிறதே…” 

“மாத்தட்டுமேங்கறேன். திட்டம், கொள்கையெல்லாம் மக்களுக்காகவா? மந்திரிகளுக்காகவா? மக்களுக்குப் பிடிக்காத கொள்கை, திட்டம் எதுவாயிருந்தாலும் மாத்தறதிலே என்ன தப்புங்கிறேன்?” என்று கூறியபடியே எழுந்தார். 

பார்லிமெண்டரி போர்டு கூட்டத்துக்குப் போய் விட்டு இரவு ஏழேகால் மணிக்குத்தான் திரும்பி வந்தார். அப்போது தம்முடன் திரு.அசோக் மேத்தாவையும் காரில் அழைத்து வந்திருந்தார். 

“என்ன?” என்று கேட்டுக் கொண்டே கீழே இறங்கி வந்த திரு.காமராஜ், திரு.அசோக் மேத்தாவின் பக்கம் திரும்பி, “கமான், வி ஷல் கோ அப்ஸ்டேர்ஸ்” என்றார். 

இருவரும் மேலே போய் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். நானும், நண்பர்கள் சிலரும் கீழே பூந்தோட்டத் தில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். அந்த அரை மணி நேரமும் என் கவனம் முழுவதும் மேல் மாடியில் அவர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்பதிலேயே இருந்தது. 

திரு.காமராஜ் குரல்தான் ஓங்கியிருந்தது. அதுவும் அவர் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. என்ன பேசுகிறார் என்கிற விஷயந்தான் புரிய வில்லை. கடைசியில் இருவரும் கீழே இறங்கி வந்தார்கள். திரு.அசோக் மேத்தா காரில் ஏறிச் சென்றதும் திரு.காமராஜ் தம்முடைய வழக்கப்படி, “என்…ன?” என்றார். 

அந்த ‘என்…ன?’ என்ற கேள்விக்கு யாரும் பதில் சொல்லத் தேவையில்லை. பதிலை அவரும் எதிர்பார்ப்பதில்லை. ஒரு அலுவல் முடிந்து இன்னொரு அலுவலுக்குத் தயாராகும் போது அவர் வழக்கமாகக் கேட்கும் கேள்வி அது. 

அன்றிரவு திரு. டி.டி.கே. வீட்டில் அவருக்குச் சாப்பாடு. பத்தே நிமிடங்களில் குளித்து வேறு சட்டை மாற்றிக் கொண்டு கிளம்பி விட்டார். போகும் போது “ராஜு (திரு. ஜி.ராஜகோபாலன், எம்.பி.) நான் இன்றிரவு பத்து மணிக்குச் சாஸ்திரியைப் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்!” என்றார். 

இரவு ஒன்பதரை மணி இருக்கும். திரு.ராஜகோபாலன், நடராஜன் முதலிய நண்பர்களுடன் தோட்டத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று “ராஜு! இருபத்து நாலாந் தேதி என்ன கிழமை?” என்று விசாரித்தார். 

“செவ்வாய்க்கிழமை” என்றார் ராஜு. 

“அன்று ராகுகாலம் எத்தனை மணிக்கு?” 

“மூணு – நாலரை.” 

“மெட்ராஸுக்கு டெலிபோன் போட்டுக் கூட்டத்தை மாலை ஆறு மணிக்குப் போடச் சொல்லி விடு.” (காங்கிரஸ் சட்ட சபைத் தலைமைப் பதவிக்காகக் கூட்டப்படும் கூட்டம் அது.) 

“ஏன்? சாப்பிட்ட பிறகு ராகு காலமாயிருந்தால் பரவாயில்லை என்பார்கள்” என்றார் ராஜு. 

“இப்படி எல்லாவற்றுக்குமே ஒரு மாற்று வைத்திருப்பாங்க நம்மவங்க. அது கிடக்கட்டும்; கூட்டத்தை ஆறு மணிக்கே நடத்தி விடலாம். முன்னாடி நாலு மணிக்கோ, ஐந்து மணிக்கோ கூட்டம் போட்டால் யாராவது ரெண்டு பேர் ராகுகாலம் என்பாங்க. அப்புறம் மாத்தணும். அப்படிச் சொல்றதுக்கும் இடம் வைக்காம முன்னாடியே செய்துட்டா நல்லதில்லையா?” 

காலையில் ஆறு மணிக்கு எழுந்து குளித்து விட்டுப் பத்திரிகைகளைப் படித்து முடித்ததும் அவரைத் தேடி வரும் பல தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். டி.டி.கே., லால்பகதூர் சாஸ்திரி, நேருஜி இம்மூவரையும் தவிர அநேகமாக எல்லோரும் இவரைத் தேடி வருகிறார்கள். இவர்களைச் சந்திப்பதைத் தவிர, லஞ்ச ஒழிப்புக் கமிட்டிக் கூட்டம், தேசியப் பாதுகாப் புக் கமிட்டிக் கூட்டம், பார்லிமெண்ட்ரி போர்ட் மீட்டிங் என்று தினமும் மூன்று, நாலு மீட்டிங்குகளுக்குப் போய் வந்தார். 

சென்னைக்குப் புறப்படும் முதல் நாள் இரவு. “காலையில் விமானத்துக்குப் புறப்பட வேண்டும். நீங்களும் என்னுடன் தானே வருகிறீர்கள்? என் பக்கத்திலே ஸீட் ரிசர்வ் செய்து விட்டார்களா? விசாரித்தீர்களா?” என்று கேட்டார். 

“ஆமாம்” என்றேன். 

“சரி, பின்னே காலையிலே புறப்படத் தயாராயிருங்க…” காலையில், ஐந்தரைக்குள்ளாகவே விமானக் கூடம் போய்ச் சேர்ந்தோம். 

‘விமானம் பழுது பார்க்கப்படுகிறது. ஆகையால் புறப்படுவதற்கு ஒன்றேகால் மணி நேரம் தாமதமாகும்’ என்று ஒலிபரப்பப்பட்டது. 

அந்த ஒன்றேகால் மணி நேரத்தில், காலைப் பத்திரிகைகள். எத்தனை உண்டோ அவ்வளவையும் படித்துத் தீர்த்தார். கடைசி யில் விமானம் புறப்பட்டது. 

அவரை என்னென்னவோ கேள்விகள் கேட்க வேண்டு மென்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் ஒன்றுமே கேட்கத் தோன்றவில்லை. விமானத்தில் உட்கார்ந்ததும் ஏர்ஹோஸ்ட்டஸ் வந்து பஞ்சும், பெப்பர்மிண்ட்டும் கொடுத்து விட்டுப் போனாள். திரு.காமராஜ் பெப்பர்மிண்ட் ஒன்றை மட்டும் எடுத்துப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டார். உடனே பத்திரிகை படிக்கத் தொடங்கி விட்டார். நான் அவரையே கவனித்த வண்ணம் வாய் மூடி மௌனியாக உட்கார்ந்திருந்தேன். பத்திரிகைகளையெல்லாம் படித்து முடிக்கட்டும் என்று காத்திருந்தேன். 

அவர் படித்து முடித்ததும் கண்களை மூடிக் கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டார். அரை மணி நேரம் உறங்கியவர், சட்டென்று கண் விழித்துக் கொண்டு, “என்…ன?” என்றார். 

“உங்கள் மனத்தில் ‘காமராஜ் திட்டம்’ எப்போது உதயமாயிற்று ? எப்படி உதயமாயிற்று?” என்று கேட்டேன். 

‘”ரொம்ப நாளாகவே இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் சர்க்காரையும், பதவியையுமே சுற்றிச் சுற்றி வர ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் கவனத்தை வேறு பக்கம் திருப்பியாக வேண்டும். அதற்கு என்னைப் போன்றவர்கள் பதவியிலிருந்து விலகி வெளியே வந்தால்தான் சர்க்காரிலும், பதவியிலும் உள்ள கவர்ச்சி குறையும். காங்கிரசில் புதிய திட்டங்கள் வகுக்க வேண்டும். முதலில் சென்னையில் நான் மட்டும் பதவியிலிருந்து விலகி மற்ற ராஜ்யங்களுக்கு வழி காட்டலாமா என்று எண்ணினேன். பல பேரிடம் என் திட்டத்தைப் பற்றிக் கூறி ஆலோசித்தேன். டில்லிக்குப் போயிருந்த போது நேருஜியிடமும் சொன்னேன். அதை அவர் ஒப்புக் கொண்டார், மேலும் அதைப் பற்றி சர்ச்சை செய்ய வேண்டும் என்றார். ஹைதராபாத்தில் சந்தித்துப் பேசினோம். அதன் பயனாகவே இது அகில இந்தியத் திட்டமாக உருவாயிற்று. இதுதான் என் திட்டம் உருவான கதை” என்றார். 

“பதவியிலிருந்து விலகுவதால் தங்களுக்குத் திடீரென்று ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்படாதோ?” 

“எனக்கென்ன அசௌகரியம்? வீடு சர்க்கார் கொடுத்த தில்லை. காரும் என்னுடைய சொந்தக் கார்தான். வீட்டு வாடகையும், வரியும் போக எனக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதில், காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்துக்காக டில்லிக்குப் போனால், விமான டிக்கட் அறுநூறு ரூபாய் செலவழிந்து விடும். போக நானூறு ரூபாய் மிஞ்சும். என் துணிமணிச் செலவு, தாயாருக்கு அனுப்பும் பணம் போக மிச்சப் பணத்தை ஏழைப் பிள்ளைகளுக்குச் சம்பளம் கட்டி விடுகிறேன். இனிமேல் காரியக் கமிட்டிக் கூட்டத்துக்குப் போனால் என்னால் விமான டிக்கெட் வாங்க முடியாது. காங்கிரஸ் ஸ்தாபனந்தான் வாங்கித்தர வேண்டும். முதல் மந்திரி என்பதற்காக நான் எங்கே போனாலும், வந்தாலும் இரண்டு கான்ஸ்டபிள்கள் வந்து நிற்பார்கள். இனி அவர்கள் வரமாட்டார்கள். நான் பதவியை விடுவதால் ஏற்படக் கூடிய வித்தியாசம் இவ்வளவுதான்” என்றார். 

“திரு. பக்தவத்சலம் அவர்களுக்கு இனி வேலை அதிகமாகி விடாதா? அவருக்கு உதவியாக மேற்கொண்டு புதிய மந்திரிகள் யாராவது நியமிக்கப் படுவார்களா?” 

“இராது; ஆர்.வி. இருக்கிறார். கக்கன் இருக்கிறார். ராமையா இருக்கிறார். இவர்களெல்லாம் பழைய மந்திரிகள். திறமைசாலிகள். அநுபவசாலிகள். புதிய மந்திரி என்றால் உடனே ‘நீ நான்’ என்ற போட்டி ஏற்பட்டு விடும். அதிலிருந்து பல சங்கடங்கள் எழும். ஆதலால் மந்திரி சபையில் மாற்றமே இருக்காது. வேண்டுமானால் காரியதரிசிகளை நியமித்துக் கொள்ளலாமே? மந்திரிகள் எதற்கு?” என்றார். 

மணி ஒன்று. விமானம் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது. 

“இன்றைக்கு ஏன் தெரியுமா விமானம் இவ்வளவு லேட்டாகப் புறப்பட்டது? நாலைந்து நாட்களுக்கு முன் ஆக்ராவுக்கருகில் விமான விபத்து ஏற்பட்டதல்லவா? அதனால் இப்போது உஷாராகப் பழுது பார்க்கிறாங்க என்று நினைக்கிறேன்” என்று கூறியபடியே, பெல்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டார். கண்ணாடி வழியாகக் கீழே பார்த்தபடியே உட்கார்ந்திருந்தவர், “அதோ பார்த்தீர்களா, பெரம்பூர் ரயில்வே ஒர்க் ஷாப்” என்றார். 

நான் எட்டிப் பார்த்தேன். அதற்குள் அது மறைந்து போய் விட்டது. 

“அதோ பாருங்கள் சைதாப்பேட்டை பிரிட்ஜ். சலவைத் தொழிலாளிங்க துணி துவைத்துக் கொண்டிருக்கிறாங்க” என்றார். 

“ஆமாம்; அதோ பாருங்க, என்னுடைய சட்டைகூட அங்கே தெரிகிறது” என்று சொல்ல எண்ணினேன். ஆனால் சொல்லவில்லை. 

இதற்குள் விமானம் கீழே இறங்கி விட்டது. விமானத்திலிருந்து இறங்கியதும், “என்… ன?” என்றார் என்னைப் பார்த்து. ‘நான் அடுத்த அலுவலை கவனிக்கச் செல்கிறேன். வரட்டுமா?’ என்பதுதான் அதன் பொருள். 

(முற்றும்)

– சிவகாமியின் செல்வன், சாவியில் தொடராக வெளிவந்த காமராஜரின் அரசியல் வாழ்க்கை, நான்காம் பதிப்பு: ஜனவரி 1990, மோனா பப்பிளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *