கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 17, 2023
பார்வையிட்டோர்: 2,791 
 

அத்தியாயம் 19 – 20 | அத்தியாயம் 21 – 22 | அத்தியாயம் 23 – 24

அத்தியாயம் – 21

சித்திரை வருஷப்பிறப்பு.

ஸ்ரீராம பஜனைமடத்தில் பஞ்சாங்கபடனம் வெகு சிறப்பாக முடிந்தது.

“பஞ்சாங்க படன பலன் என்ன மாமா?”

கிண்டலாகக் கேட்டான் மகேஷ்.

“பலாச்சுளை…!” என்றார் சுந்தர பாகவதர்.

பஞ்சாங்கம் வாசித்தக் காஸ்யப கனபாடிகள் உட்பட அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

பரிஹாசமாப் பேசினது, சிரிச்சதெல்லாம் போறும். யதார்த்தத்தை உள்ளபடி தெரிஞ்சிக்கணும் மகேஷ்.”

“சொல்லுங்கோ மாமா தெரிஞ்சிக்கறேன்.”

பஞ்சாங்கத்தின் முக்கியத்துவத்தை முதலில் சொன்னார்.

பஞ்சாங்க படனத்தின் பலாபலன்களை விளக்கமாக சொன்னார் கனபாடிகள்.

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு, வருடம் எப்படியெப்படிப் போகும்…;

லாபமா, நட்டமா, சமமா;

அதாவது வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்குமா…?

இப்படியாகத் தொடர்ந்தது படனம்.

ஆஸ்திகர்கள் ரசனையோடு ஸ்ரவணம் செய்தார்கள்.

தங்கள் ராசி, குடும்பத்தினர் ராசிக்கானப் பலனை மனதில் வாங்கிக் ‘லாப-நட்ட-சமக்’ கணக்குப் போட்டார்கள்.

“ஆஹா…!”

“அடடே…!”

“ஹா…!”

“ஓஹோ…ஹொ… …!”

வியப்பையும், பக்தியையும் வெளிப்படுத்தி ரசித்தார்கள்.

மகேஷ் போன்றோர் கதைப் போலக் காதில் வாங்கினார்கள்.

“தேசத்தின் கால நேரம், மழையளவு, விளைச்சல், பஞ்சம், வெயிலின் வீர்யம்… சூர்ய, சந்த்ர கிருஹணங்கள், இப்படி எத்தனையோ விஷயங்களை ஆராய்ச்சிப் பண்ணி, விஞ்ஞான ரீதியாச் சொல்ல ஒரு டிபார்ட்மெண்டே இருக்கு இங்கே… அப்படித்தானே, மகேஷ்…?”

“ம்…!”

“டாக்ட்ரேட்’ பண்ணின நிபுணாள் ராப்பகலா, ஆராய்ச்சிப் பண்ணி, அப்பப்போ விஞ்ஞானப் பூர்வமாச் சொல்றதுதான் அவா வேலை….?”

“சரியாச் சொன்னேள்…!”

“ஒண்ணு யோசிச்சுப்பாரு…”

“… … … … … … … … …”

சின்னதாய் ஒரு இடைவெளி விட்டார்.

மகேஷ் காதைத் தீட்டிக்கொண்டான்.

“வருஷம் பொறந்த மொத நாளே, நாம எல்லாத்தையும் தெரிஞ்சிக்கற அளவுக்குத் துல்லியமா கணிச்சுடறாளே பஞ்சாங்கம் கணிக்கறவா, அது எப்படி?”

“… … … … … … … … …”

“நக்ஷத்ரம், ராசி, அதி தேவதை, ப்ரத்யதி தேவதை… இதையெல்லாம் விடு. ஒரே ஒரு கேள்விக்குப் பதில் சொல்லு.”

“… … … … … … … … …”

‘இந்த நாள்ல, இத்தனை மணிக்குக் கிரகணம் பிடிக்கும்;

இத்தனை நாழிகை நீடிக்கும்;

இத்தனை மணிக்கு விடும்’னு கணிச்சபடி, இம்மி பிசகாமல் நடக்கறதோன்னோ..!

நீயேப் பாத்துருக்கயோன்னோ…!

மகேஷ் ஆழ்ந்து யோசித்தான்.

கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகளுக்கு முன், பஞ்சாங்கக் கணிப்பின்படி, மழையேப் பெய்யாமல், ஏரி,குளம்,குட்டை,கிணறு எல்லாம் வரண்டு, விவசாயம் பொய்த்துப், பசியும் பஞ்சமும் பட்டிணிச் சாவுமாய் ஊர் உலகமேப் பட்டப் பாடு, அவள் கண்முன்னே நிழலாடியது.

இந்த வருஷம் பொழியப்போகிறக் கடுமையான மழை வெள்ளத்தைப் பற்றிக் கனபாடிகள் சொன்னது குந்தலாம்பாளின் மனத்தில் அழுத்தமாய் உறுத்திக்கொண்டே இருந்தது.

‘அன்றுப் பெய்யாமல் பழி வாங்கிய வானம், இடி மின்னலுடன் பேய் மழையாய்ப் பெய்து பழிவாங்குமோ..?

நினைக்கும்போதேப் பயத்தில் படபடத்தது.

உடம்புப் தூக்கிப் போட்டது குந்தலாம்பாளுக்கு.

மாதய்யா இருந்தவரை, நஞ்சைக் கொல்லையில் வருஷத்துக்கு இரண்டு பாட்டம் கொத்து நடக்கும்.

கொத்தாட்கள் பளாரென்றுக் காலை ஆறு மணிக்கெல்லாம் மண்ணில் மண்வெட்டியை பாய்ச்சிவிடுவார்கள்.

தலையில் முண்டாசுடன், வரிசையாகக் கொல்லை அகலத்துக்கு இருபது இருபத்திரெண்டு ஆட்கள், சீராய்ப் பரவி நிற்பார்கள்;

மண்வெட்டியை ஒரு போலத் தூக்கிச் ‘ச்சொத்…ச்சொத்…” எனப் போடுவது, ஏகத் தாளகதியில் சீராய் ஒலிக்கும்.

பாளம் பாளமாய்ச் செக்குப் புண்ணாக்குப் பத்தையைப் போல, மண்வெட்டி இலையில் தங்கிய மண்ணைப் புரட்டிப் போடுவதே கண் கொள்ளாக் காட்சி..

துப்பாக்கியை ஒன்றுப் போலத் தூக்கி இறக்கும், ராணுவ அணுவகுப்பை ஒத்திருக்கும் அந்தக் கொத்தல்.

‘பொசபொச’வெனப் பசுமையாய் வளர்ந்து நிற்கும் புற்களும் பூண்டுகளும் புரண்டுப் பூமிக்குள் போகும்.

வெட்டுவாய்த் தழும்போடு, புரண்டு கிடக்கும் மெழுகுப் பதமான நிலத்துண்டு, வானம் பார்த்து மினுக்கும்.

முன் கொல்லைத் தொடங்கிப் பின் கொல்லைக்குக் கொத்து நகரும்.

காலங்காலமாக இப்படிக் கொத்திக் கொத்திப் பிரட்டிப் பிரட்டித்தான், முன் கொல்லைத் தூக்கலாயும், பின் கொல்லைத் தாழ்ந்தும், ஏற்ற-நீர்ப் பாசனத்துக்கு வாட்டமாகக் கிடக்கிறது புஞ்சை.

முன் கொல்லைக் கிணற்றில் ஏற்றம் இறைத்துக் கொட்டினால், பத்துப் பதினைந்துச் சால் தண்ணீர்க் கவிழும் முன் எல்லை நனைந்துவிடும்.

நாளுக்கு இரண்டுப் பாத்தி முறை.

ஐந்து நாளுக்குப் பத்துப் பாத்திகள் வாட்டமாய்க் கிடக்கும்.

மாதய்யாக் காலமான ஒண்றரை வருடங்களாய் நஞ்சை அளவுக்கு புஞ்சையைப் கவனிக்கவில்லை.

மாதய்யாப்போல் எட்டுக்கண் விட்டெறிய எல்லோராலும் முடியுமா என்ன…?

அருகம்புல், அம்மான் பச்சரிசி, தும்பை, மூக்கரட்டை, விசுவாமித்திரைப் புல், காஞ்சான் கோரை, நாயுருவி, துத்தி, …………..

புல்லும் பூண்டும் செடியும் கொடியும் வளர்ந்து, முதிர்ந்து, பூத்துத், காய்த்துப், பழுத்துக், காய்ந்து, வெடித்து, விதை வீசி, வம்சம் பல்கிப் பெருகிக் கால் வைத்துச் செல்ல இடமில்லாது காடாய் வளர்ந்துவிட்டது.

“கலியா…!”

“சொல்லுங்க அய்யாம்மா…!”

“கொல்லைக் கொத்தி வருஷம் ஒண்ணரை ஆச்சு. கொத்திட்டாத் தேவலை…”

“சரிம்மா…”

“கொத்துக்கு முன்னால, காய்ப்பு நின்னத் தென்ன மரம் சிலது இருக்கல்ல, அதை வெட்டி, விறகு பொளந்துரலாம்.”

“… … … … … … … …”

“பூவரசு, தேக்கு, வேம்பு, மா, பலா, நாவல்…………, எல்லா மரமும் ஓங்குத் தாங்கா உயர்ந்துக், கப்புங் கிளையுமாப் பரவித் தழைஞ்சி இருளோனு கிடக்குதே கொல்லை. கழிச்சாத்தானே வெய்யில் உள்ற வரும்.. பாட்டையன் ஊர்ல இருக்கானா…?”

“இருக்கான்……………….”

இழுத்தான் கலியன்,.

“என்ன இழுவை… தயங்காமச் சொல்லு, கலியா..”

“தென்ன மரத்துக்கு நல்ல கிராக்கியிருக்கும்மா. வித்துரலாமே….!”

“விக்கெவேணாம் கலியா…! வெறகுதான் பிளக்கணும். வரச்சொல்லு பாட்டையனை…!”

“… … … … … … … …”

வெட்ட வேண்டிய மரங்களை வெட்டியாயிற்று.

கழிக்கவேண்டிய மரங்களைக் கழித்து, அடுப்பெறிக்க வசதியாகத் துண்டாடியாயிற்று.

விறகு பிளந்தாயிற்று.

ஒரு வாரம் பத்து நாட்கள், வெய்யிலில் கிடந்தன.

சுக்காய்க் காய்ந்தன.

அல்லூர் சடையன் வந்தான்.

அடைசல்களாய் இருந்தப் பொய்ப் பாளை, கூராஞ்சி, பண்ணாடைகளை அறுத்தெடுத்தான்.

பாளம்பாளமாய் வீசிய மட்டைகளின் அடி ஓலைகளை கொத்தாய் இழுத்து நீக்கினான்.

அறுபத்து மூவருக்கும் அபிஷேகமாகி, புது வஸ்த்ர அலங்காரத்துடன் நின்று பக்தர்களை ஈர்ப்பதுபோல,

தென்னை மரங்கள் அனைத்தும் துடைத்து வைத்தாற்போல பளிச்சென நின்றன.

“வைகாசி வெட்டுக்கு ரெண்டு சுமை ஏத்தமா வுளும்.” ஆரூடமும் சொல்லிப் போனான் சடையன்.

மூங்கில் கொத்துக்கள் ‘சீத்துபோத்தாய்’ மதாளித்திருந்தன.

ஆணி ஆணியாய், அலகு ஊசியாய் முறுக்காய்ப் புடைத்த முள்ளுடன் பரவி நின்ற கொத்துக்களில் லாகவமாய் முள் அறுத்தான் செல்லதுரை.

கயிராய்க் தரையில் கிடத்தியப் படர்ந்த இள முள்ளை வாங்கி, இறுகக் கட்டி நேர்த்தியாய் அடுக்கினான்.

இலை வதங்கி உதிர ஒரு வாரம் கிடந்தபின் படல் போட்டனர் மாணிக்கமும், மருதையும்.

கிளுவை, கிளேரியா, ஆமணக்கு, உதியம் போத்துக்களை உயிர் வேலிக்கால்களாய் நட்டான் வீரமுத்துவும், தங்கையனும்.

தேவையான பாளைகளைக் கிழித்தான் பரமசிவம்.

பூர்வாங்க வேலைகள் எல்லாம் ஆனதும், படல் அணைத்து, வரிச்சி வைத்து, எதிர் வசத்தான், கவைக்குச்சியால் நெறுக்கித்தரப், பாளைத் திருகி இறுக்கி, வேலிக்கட்டை நேர்த்தியாக முடித்துக் கொடுத்தது பஞ்சவர்ணம் கோஷ்டி.

அனைத்துத் தென்னை மட்டைகளையும் அள்ளிப்போய்ச் சமுதாயக் குட்டையில் அமுக்கிப் பாறாங்கல் வைத்து ஊறப்போட்டு எடுத்துக், கீற்று முடைந்தார்கள் பஞ்சவர்ணம் குடும்பத்தார்.

அவ்வப்போதுச் சொருகுக் கீத்து மட்டும் வைத்துச் சமாளித்துக் கொண்டேக் கிடந்தப் பின்-கட்டுச் சார்ப்பு இந்த ஒண்ணரை வருடங்களில் சுத்தமாக மடித்துக் கொட்டிவிட்டது.

முழுசாகப் பிரித்துவிட்டுப் புது மூங்கில் மாற்றிப் புதிதாகக் கூரை வேய்ந்தான் பந்தல் சரவணன்.

புதுக் கொட்டகையில் புதிதாய் முளையடித்துப் பரண் கட்டினான்.

அடிமட்டை, கூராஞ்சி, பாளை, பன்னாடை, விறகுகள், சுள்ளிகள், உறிமட்டைகள், கொட்டாங்கச்சிகள் என எரிபொருட்களை வகைத்தொகையாகப் பிரித்துப் பாங்காக அடுக்கி வைத்தாயிற்று.

“உங்க ஒருத்தருக்கு இவ்ளோ எதுக்கும்மா…?”

கலியன் கேட்டான் இயல்பாக.

“இந்த வருஷம் மழையோனு கொட்டப்போவுதுன்னு பண்டிதர் பஞ்சாங்கம் படிச்சாரு.

அடுப்பெறிக்க விறகுத் தேடி அலையுற நாலு பேருக்குக் உபயோகமாகுமே…!”

‘… … … … … … … …’

‘மாதய்யாவைத் தாண்டித் தயாள குணமிருக்கே…!’

கலியன் வியந்து நின்றான்.

முள்ளறுப்பு, கிளைக் கழிப்பு, மரம் வெட்டு, விறகுப் பிளப்பு, ஓடு மாற்று, பாளைக் கிழி, வேலிக் கட்டு…

மேல் வேலைகளெல்லாம் முடித்தன.

கொத்து கோஷ்டி, வேலை தொடங்கித் தொடர்ந்தார்கள்.

கொத்தி வாங்கிப், பாத்தியை முறையாகக் கிழித்தாயிற்று.

மாதையாவின் கொல்லைக்கே உரிய கம்பீரம் வந்துவிட்டது.

மழைக் காலம் நெருங்கும் முன் எதற்கும் இருக்கட்டும் என்று நான்கைந்து கலம் நெல் புழுக்கிக் காயவைத்து, அறைத்துப் புடைத்துப் பீப்பாயில் கொட்டி வைத்தாள் குந்தலாம்பாள்.

“… … … … … … … …”

‘பிரளயம் என்பது இதுதானோ…?’

‘கலி முற்றிவிட்டது, கலி முற்றிவிட்டது என்றுப் பரவலாகச் சொல்லப்படும் கலி, முற்றிப் பழுத்துக் கனிந்து வெடித்துச் சிதறுகிறதோ?’

இடிச் சத்தம் காது கிழிகிறது.

வானத்தில் கிளைகள் விரித்ததைப் போலப் பளிச்சிடும் அழுத்தமான மின்னல், கண்களைக் குருடாக்குகிறது.

வாரக்கணக்கில், ஓயாத அடை மழை.

“உய்… உய்ய்ய்…!”

சுழன்றடிக்கும் காற்றில் காளியாட்டமாய் மரங்கள்.

பூமி, சூரியனைக் கண்டுப் பல நாட்களாகிவிட்டது.

ஈரத்துணிகளின் துர்நாற்றம் எங்கெங்கும்.

பகல் முழுதும் கையெழுத்து மறையும் நேரமாகவேக் கடந்தது.

‘வெள்ளை இருட்டைப் பார்ப்போமா…!?’

எதிர்பார்ப்பிலும் ஏக்கத்திலும் மக்கள்.

தவிட்டுத் தூற்றல்…;

மித மழை…;

கன மழை…;

இடி, மின்னலுடன் மிகக் கன மழை…;

அடை மழை…;

காற்று…;

சூரைக் காற்று…;

புயல்….

மாறி மாறி … பாட்டம் பாட்டமாய்…

மரங்கள், பயிர்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள்…

எல்லாரும், எல்லாமும் பட்டன வதை.

மரங்களை வேரோடுச் சாய்த்தது.

வீடுகளை இடித்துத் தள்ளியது.

தண்ணீர்…! தண்ணீர்…! தண்ணீர்…!

எங்கெங்கும் தண்ணீர்…!

காடு மேடெல்லாம் வெள்ளக்காடு.

“கம்பரசம் பேட்டைத் தாண்டி வாட்டர் ஹவுஸ்க்கும் , குடமுருட்டி ஆத்துக்கும் நடுப்புற காவிரியாறு உடைச்சிக்கிட்டுதாம்…”

வைரலாய்ப் பரவியதுச் செய்தி.

உண்மையா, வதந்தியா எனத் தெரியவில்லை.

“அதையெல்லாம் யாரும் யோசிக்கவுமில்லை.

எந்தச் செய்திக்கும் ‘டக்’ கென்று எதிர்வினைப் புரிந்தார்கள்.

“அய்யோயோ…!”

“ஆண்டவா… இதென்னச் சோதனை…!”

“அனத்தக் காலம் வந்துருச்சே…!”

“அழிவுக் காலம் தொடங்கிருச்சே …! ”

புலம்பினார்கள்…!

முணுமுணுத்தார்கள்…!

கேவினார்கள்…!

அழுதார்கள்…!

தொழுதார்கள்…!

படபடப்பாய் இருந்தார்கள்.

பரபரப்பாய் ஓடினார்கள்.

ஆத்திரப்பட்டார்கள்.

சண்டைப் போட்டார்கள்.

சமாதானம் ஆனார்கள்.

வரட்டு வேதாந்தம் பேசினார்கள்.

மரண பயம் அப்பட்டமாய்ப் பலர் முகத்தில்.

உயிருக்காய்ப் பரிதவித்தார்கள்.

“காவிரியாத்து உடைப்பால… மல்லாச்சிபுரம் மொத்தமா முளுகிருச்சாம்…!”

“அய்யோ கடவுளே…!”

“அப்பக் கம்பரசம்பேட்டை…?”

கூட்டாய் புலம்பினார்கள்.

கும்பல் கும்பலாய்க் குமுறினார்கள்.

படித்தவர்கள் சான்றிதழ்களோடும், அவசியத் தேவைகளோடும் முகாமில் அகதிகளானார்கள்.

“பாதி முளுகிடுச்சாம் கம்பரசம்பேட்டை.!”

“ஒளிஞ்சிது போ. அநத்தம்தான்….! ”

“உறையூரைக் காப்பாத்திக்க கோணக்கரையை இடிச்சிட்டாங்களாம். திருச்சி டவுனுக்குப் பேராபத்து… ஸ்ரீரங்கம் முழுகப்போவுது…”

“கல்லணை உடைச்சிக்கட்டுதாம்….!

“மேட்டூர் புட்டுக்கிட்டதாம்….! ”

வாய்க்கு வந்தபடி வதந்தி பரப்பினார்கள்.

திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு குடைச்சல் கொடுத்தார்கள்.

விழித்தெழுந்த நிர்வாகம் அரசாங்க ஆபீசர்களை குழுக்குழுவாய் பிரித்தது.

எல்லாத் திக்கிற்கும் அனுப்பியது.

‘வதந்திகளை நம்ப வேண்டாம்…!”

எச்சரித்தார்கள்.

ஆனால், எது வதந்தி எது உண்மை என்பதை அவர்களாலும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

“பட்டாணித் தெரு, சேக்காளி-சாயபு வீடு வுளுந்துருச்சாம்.”

யாரோச் சொன்னார்கள்.

வேடிக்கைப் பார்க்க ஓடியது கூட்டம்.

அங்கேப் போனால், சேக்காளி வீட்டுத் திண்ணையில் ஏழெட்டுக் குடும்பங்கள் குஞ்சுக் குளுவான்களோடு அடைக்கலமாகி ஒண்டிக்கொண்டிருந்தது.

சேக்காளிப் பட்டாணியார், தன் வீட்டில் அடைக்கலமான குடும்பங்கள் எப்படி தனக்கு இடைஞ்சலின்றி இருக்கவேண்டும் என்ற விதிமுறைகளை உரத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

அகதி முகாம் தலைவர் போல இருந்தது அவரது அதட்டல்கள்.

பாதிப்படைந்தோர் தங்குவதற்குத் தன் வீட்டுத் திண்ணை, மாட்டுத் தொழுவம், பின்-கட்டுச் சார்ப்பு என இடம் மட்டும் கொடுக்கவில்லை குந்தலாம்பாள்.

விறகு , அரிசி, புளி, வீட்டில் ஆட்டியத் தேங்காய் எண்ணை, போர்வைகள், மறைப்புக் கட்டக் கோணிச் சாக்குகள், வேட்டித் துண்டுகள், ஜமுக்காளம், பாய்கள், தண்ணீர் குடம்…பெரும்படிச் சமையல் பாத்திரங்கள் எனத் தந்தாள்.

புயல் ஆரம்பித்த அன்று பின் கட்டில் மூட்டிய கோட்டை அடுப்பு கரை கடக்கும் வரை அடங்கவே இல்லை.

ஒவ்வொரு வேளையும் முறை போட்டுக் கொண்டு சமையல் செய்வதும் சாப்பிடுவதுமாக சுற்றுலாவைப்போல் அனுபவித்தார்கள் அகதிகள்.

காசு பணம் ஏகமாய்க் கொட்டிக் கிடக்கலாம். கொடுக்க வேண்டும் என்ற மனமும் இருக்கவேண்டுமே…!

சாயபு வீட்டின் இடிபாடுகளை வேடிக்கைப் பார்க்க ஓடியவர்களுக்கு ஏமாற்றமாகிவிட்டது.

புரளி கிளப்பியவனை வசைபாடினார்கள்.

அந்தனூரில், பட்டாணித் தெரு, பெரியத் தெருவிற்குப் பின் மேட்டுப் பகுதி அக்கிரஹாரத் தெருதான்.

அங்கேதான் கூட்டங்கூட்டமாய் ஓடினார்கள்.

ஆபத்துக்கு ஒண்டிக்கொள்ளத்தான் வந்தார்கள்.

ஒண்ட இடம் கிடைத்ததும், மூங்கில் கால், சவுக்குக் கம்பம் என நட்டுத் தார்ப்பாய் போட்டு மூடிகொண்டார்கள்.

வலியோர் ஆக்ரமித்தார்கள்.

எளியோர் முனகினார்கள்.

மென்மையாய் ஞாயம் கேட்டார்கள்.

வன்மையாக மறுத்தனர் வலியோர்.

மறுத்ததோடு நிற்கவில்லை

சுள்ளென்று விரட்டினார்கள்.

துக்கிரியாய்ப் பேசினார்கள்.

துடுக்காய்க் கடிந்தார்கள்.

ஓடுகிற நாயாய் விரட்டினார்கள்.

புழுமாதிரி நசுக்கினார்கள்.

ஆடு, மாடு, நாய்,… என வளர்ப்புப் பிராணிகளையும் கொண்டு வந்து வைத்துக்கொண்டார்கள்.

“மனிசன் இருக்கவே இடமில்லையாம். இதுல ஆடு மாடுங்களைக் கட்டிக்கிட்டு…!”

ஆத்திரமாகக் கத்தியபடி ஆடுமாடுகளைக் கட்டவிழ்த்துவிட வீரத்துடன் போனான் ஒருவன்.

“அதுங்க மேலே கை வெச்சியோ.. வகுந்து கூறு போட்ருவேன்…ஆமா…!”

வலியவன் மிரட்டினான்.

எளியவன் அடங்கினான்.

‘அகதிகளாய் இப்படி அடைந்துக் கிடக்கிறோமே…!’

ஆதங்கத்தில் எழுந்த வார்த்தைத் தடிப்புகள்.

காதில் விழும் சோகச் செய்திகளுக்கேற்பப் புலம்பல்கள்.

பரிதாபப் பட்டு, விநியோகிக்கும் சோற்றுப் பொட்டலங்களுக்கு அடித்துக் கொண்டார்கள்.

விருந்திருக்க உண்ணாதானும் , பசிக்குப் போட்டி போட்டான்.

பொட்டலங்கள் கிழிந்தன.

சோறு சிதறியது.

குரல், செயல்பாடுகள் அனைத்திலும தேவைக்கு அதிகமாகக் கடினம் இருந்தது.

கைகலப்பும் அறங்கேறியது.

‘ஒரு சாண் வயிலு இல்லாட்டா…’

தத்துவம் நிதர்சனமானது.

இன்னொரு புறம் சூழல் வேறுமாதிரி இருந்தது.

சிறு வயதில் பார்த்த பல்வேறு இயற்கைச் சீற்றங்களை நினைவு கூர்ந்தனர் வயசாளிகள்;

பாதிப்புகளை விளக்கினர்;

மீண்டு வந்ததைச் சாகசங்களாய்க் கதைத்தனர்;

‘இதுவும் கடந்து போகும்..’

ஆறுதல் தந்தது அவர்களின் பேச்சு.

உலகப் போர் பற்றிக் கூட வார்த்தையாடினார்கள்.

அதுவும் பேரிடர்தானே…!

எண்ணைக் காணாப் பரட்டைத் தலை, அழுக்கு வேட்டி, மழிக்கப்படாத தாடை, ஈரம் காயாத உடுப்புகளுடன் ஆண்கள்…

பஞ்சையாய்ப் பரிதேசிகளாய் அங்குமிங்கும் அலைந்தார்கள்.

தங்கள் தெரு சென்று, நிலமை அறிந்து வந்தார்கள்.

“உருலாசு வீடு முளுக்க முளுகிடுச்சி…!”

“பாட்டையன் வூடு இடிஞ்சி தரையோட தரையாயிட்டுது.”

“விநாயகர் கோயில் தென்னண்ட சுவர் சாஞ்சிருச்சு..

செய்திகளைத் திரட்டுவதும், கைச்சரக்கைச் சேர்த்துத் தருவதுமாக இருந்தார்கள்.

ஈரம் காயாத கசங்கின புடவை – ரவிக்கையும், சிடுக்கும் – சீலைப் பேனுமாய், கோடாலி முடிச்சோடு, கண்களில் சோர்வும் சோற்றுக்குத் தவிப்பும்-ஏக்கமுமாய் பரிதவித்தனர் பெண்கள்.

‘பள்ளிக்கூடம் இப்போதைக்குத் திறக்கவேக் கூடாது…!’

குழந்தைகளின் ஆசைக் கண்களில் ஒளிர்ந்தது.

‘இந்தப் புயல் நிற்கவேக் கூடாது. தொடரணும் தொடரணும்’

குழந்தைகள் கூட்டுப் பிரார்த்தனை செய்தன.

கவலை அறியாக் குழந்தைகளின் குறும்புகள், விஷமங்கள், பிடிவாதங்கள், அடங்காத்தனங்கள்…

அனைத்தும் அறங்கேறிக்கொண்டுதான் இருந்தன.

கூச்சலும், கத்தலும், பேச்சுக்களும், சாபங்களும், வைராக்ய வார்த்தைகளும், சண்டைகளுமாக அக்கிரகஹாரம் தெரு அல்லோல-கல்லோலப்பட்டது.

எதுவும் இதயத்திலிருந்து வரவில்லை.

இயலாமையின் வெளிப்பாடுகள் அவை.

உதட்டளவில் வந்ததுதான்.

கடந்து போனதும் காணாமல் போய்விடும்.

அன்றைய வெகுஜென மீடியாக்கள், செய்தித் தாளும், ரேடியோவும்தான்.

காற்று-வெள்ளத்தால், எங்கெங்கும் மரங்கள் சாய்ந்துக் கிடந்தன.

மின்தடை ரேடியோவின் வாயை பொத்திவிட்டது.

நியூஸ் பேப்பர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ, மூன்று நாட்கள் கழித்தோ வந்தன.

இறுக்கமானச் சூழலில் ‘லைவ் நியூஸ்’ கொடுத்த்து ‘டிரான்சிஸ்டர் மட்டும்தான்.’

‘டிரான்ஸிஸ்டர்வாலா’க்களில், சிலரே புத்திசாலிகள்.

வெற்றுப் பொழுதுபோக்கைத் தவிர்த்து, புயல் வெள்ளச் செய்தியறிய மட்டுமே பயன்படுத்துபவர்கள்.

சிலர் வானொலிச் செய்தியை பரப்பும்போது, தங்கள் கைச்சரக்கையும் சேர்த்துக்கொண்டார்கள்.

அனைவரையும் அதிர்ச்சியில் உரைய வைத்தார்கள்.

காவிரி தெளும்பியது.

அங்குலம்-அங்குலமாகப் இல்லாமல் அடி-அடியாகப் பெருக்கெடுத்தது.

“பெட்டவாத்தலை பக்கம் காவிரி உடைப்பாம்…!”

‘உண்மையா, புரளியா…?’

கலங்கினார்கள்.

மரண பயத்தில் மக்கள்.

காவிரி நீரின் எதிர்ப் பாய்ச்சலைத் தாங்க வலுவின்றி கோணக்கரை அருகே குடமுருட்டி உடைப்பெடுத்தது.

குடமுருட்டி தெற்கிலிருந்தும், காவிரி கிழக்கிலிருந்தும் இரு முனைத் தாக்குதல் நடத்தியது.

கம்பரசம்பேட்டை, மல்லாச்சிபுரம், முருங்கப்பேட்டை, முத்தனூர், கனமனூர், கக்குடி, பழூர்… எல்லாம் ஆக்ரமித்துவிட்டது வெள்ளம்.

ரயில் வழி, சாலை வழி முற்றிலும் முடங்கிவிட்டன.

முத்தனூர்வாசிகள் ரயிலடி, பள்ளிக்கூடம், கோவில், எனத் தற்சமயம் நீர் புகாப் கட்டடங்களில் தஞ்சமடைந்தனர்.

அந்தனூர் அக்ரஹாரம் தெருவில், கிடைத்த இடத்திலெல்லாம் கூடாரம் போட்டுக்கொண்டுக், குடித்தனம் நடத்தினார்கள்.

தெரு வாசலில் நடப்பதற்குப் பாதையற்று, அடைத்தாற்போல் ஆக்ரமித்திருந்தனர்.

மனிதர்கள் குரல் மட்டுல்லை.

ஆடுகளின் ‘ம்…மே…!’

மாடுகளின் ‘ம்…மா…!’,

கோழி, சேவல்களின் ‘கொக்கரக்கோ…’

நாய்களின் ‘லொள்…’

பூனைகளின் ‘மியாவ்…’

முராரி பாடிப் பாடி முகம் வீங்கிக் கிடந்தன அனைத்தும்.

தொண்டை தீனமாகிவிட்டது.

அந்தனூரையும் ஆக்ரமித்தது வெள்ளம்.

மூச்சு முட்டுகிறபோது ‘மூச்சுக் காற்றுக்கு ஏங்குகிறான் மனிதன்.

கிடைத்ததும் மற்ற மற்றத் தேவைகளுக்கு அலைகிறான்.

தன்முனைப்பால் தன்னிலைத் தாழ்கிறான்.

நீயா?நானா?

சவால் விடுகிறான்.

வீட்டுக்குள் இருப்போர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

தன் வீடே சிறையானது அவர்களுக்கு.

அவ்வப்போது வரும் செய்திகள் திகில் கொள்ள வைத்தன.

“அக்கிரஹாரத் தெருவுலயும் தண்ணி பூருதுண்ணே…!”

மண்வெட்டிகள், அன்னக்கூடைகளுடன் ஓடினர்.

மழையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி, கீழக்கோடி பள்ளிக்கூடத்துக்கு அருகில் அணை போட்டனர்.

கொல்லைப் புறத்தில் தண்ணீர் மட்டம் உயர்ந்தது.

“கொல்லை வழியாக வீட்டுக்குள் தண்ணீர்ப் புகாதவாறு சாளரத்தை அடைத்தார்கள்.

கரையைத் தொட்டுக்கொண்டு ஓடும் காவிரிப் படிக்கட்டில், கவலையோடும், பரபரப்போடும், திகிலோடும் நின்றது மக்கள் கூட்டம்.

வேடிக்கைப் பார்க்கும் ஆவலோடு நிற்கும் ஜனங்களும் இல்லாமலில்லை.

காவிரியோடு அடித்துச் செல்லப்படும் கூரை வீடுகள்.

ஆட்டு மந்தைகள்.

மாடுகள்.

மேசை நாற்காலிகள்.

மரக் கட்டில்கள்.

மெத்தைகள்…

மர பீரோக்கள்.

பாத்திரம் பண்டங்கள்…

தாரோடு வாழைமரங்கள்

வேரோடு வரும் மரங்கள்.

மரங்களில் தலைதூக்கி நின்று தப்பிக்க ஆயத்தமாய் நிற்கும் பாம்புகள்.

இன்னதுதான் என்றில்லை…

அவ்வப்போது சற்றேத் தலைக் காட்டும் சூரிய ஒளியில் கவிழ்ந்தபடி மின்னிக்கொண்டே மிதந்து செல்லும் பித்தளை, எவர்சில்வர் குடங்கள்.

மனிதப் பிரேதங்கள்.

திருச்சிக் காவிரிப் பாலத்தின் மேல்-விளிம்பைத் தொட்டபடிச் சென்றது வெள்ளம்.

மனிதப் பிரேதங்களைக் கரையேற்றிப் பாலத்தில் கிடத்தினார்கள், பேரிடர் மேலண்மையினர்.

பாத்தியமுடையோர், அடையாளம் சொல்லிப் பிரேதம் பெற்றுச் சென்றனர்.

திருச்சிக் காவிரிப் பாலமும், கொள்ளிடம் பாலமும் ‘மார்ச்சுவரி’ வார்டாய் மாறியிருந்தது.

உள்ளத்தை உரைய வைக்கும் காட்சிகளுக்கு நடுவே சில மனிதர்களின் விந்தையான, வக்ரமான செயல்பாடுகளுக்கும் குறைவில்லை.

அடித்துச் செல்லும் வெள்ளத்தில் , அடைந்த வரை ஆதாயம்..’

உயிரைப் பணயம் வைத்து பலவிதப் பொருட்களையும் இழுத்துப் போட்டுக்கொண்ட மனிதப் பதர்கள்.

கட்டையின் ஊறிய அங்கங்களில் இறுகியும் இறுக்கப்பட்டுமிருந்த, மோதிரம், சங்கிலி, பேசரி, கம்மல், கொலுசுகள் எல்லாவற்றையும் பிய்த்துப் பிய்த்துக் களவாடும் அருவருப்பான, மூர்க்கமான மனித மிருகங்கள்.

வாழைத்தாருக்கு ஆசைப்பட்டு இழுக்கப்போய், பாம்புகடித்து மரணித்தான் ஒருவன் என்று செய்தியும் வந்தது.

‘கொர… கொர… கொர…

“வுஷ்……….ஷ்…………”;

“உய்………”;

“கூ…….”;

மாறி மாறிக் கத்தியது முதலில்.

பிறகு புயல் வெள்ள நிலையைப் பதிவு செய்தது டிரான்ஸிஸ்டர்.

கேட்டவர் வயிறு “சொர… சொர…த்தது.

“அய்யோ..! மவளுக்கு ஜுரம் அனலாக் கொதிக்குதே…!”

“ ஏய்…! மல்லிகா…! என் மவனை எங்கனாப் பாத்தியாடீ…?”

“ ஐயோ…! இப்படி ஒரு மளைய என் வயசுக்குப் இப்பத்தான் பாக்கேன். உலகம் அளியப்போற அறிகுறியோ இது…”

“இதுக்கு மேலத் தாங்காது கடவுளே…!”

“அம்மாப்…பசிக்குதும்மா…!”

“ஒரு குந்துமணி அரிசி இல்லியே…! என்னாச் செய்வேன். ஏதுச் செய்வேன்.”

“புள்ளைங்கத் துடிக்குதேப் பசியால…!”

“… … … … … … … … …”

அழுகைகள், குமுறல்கள், முனகல்கள், புலம்பல்கள், பிரார்த்தனைகள், சாபங்கள், திட்டுக்கள், கெஞ்சல்கள், மிரட்டல்கள், ஆடல்கள், அடங்கல்கள்………….

மனிதத்தின் அனைத்துப் பரிமாணங்களும் வெளிப்பட்டன.

விடாத அடை மழை;

சுழன்று சுழன்று அடிக்கும் புயல் காற்று;

மின்னலும், இடியும், காற்றுமாய் சேர்ந்து அடித்த பேய் மழை.

சாலையெங்கும் குறுக்கும் நெடுக்குமாய், விகாரமாகச் சாயும் பல்வேறு மரங்கள்;

நொடிக்கு நொடி இறுக்கமானது சூழ்நிலை.

ஜனங்கள் பலஹீனமானார்கள்.

திடீரென்று வானம் வெளுத்துச் சூரிய ஒளித் தலைக் காட்டி மறைந்தது.

இரவு இருண்டு வந்து, பூமிச் சுழற்சியை உறுதிப்படுத்தியது.

தவறு செய்யும் துணிவைத் தருகிறது இருள்.

கிடைத்ததைத் தின்று பசியாறியதும், அகதியாய் இருந்ததை மறந்தார்கள்.

அக்கிரஹாரத்தெரு வாசிகள் வீட்டினுள் சுகவாசியாக இருப்பதாக நினைத்துக்கொண்டார்கள்.

அவர்கள் வேறுவிதமாகத் தவிப்பதை நினைத்துப் பார்க்கவில்லை.

வீட்டுக் கதவுகளைப் பலம் கொண்ட மட்டும் தட்டினார்கள்.

இம்சித்தார்கள்.

திறக்காகத் கதவுகளை உடைத்து உள்ளேச் செல்லும் மூர்க்கம் மூண்டது.

தெருவின் இரண்டு கோடிகளிலும் அணையை உயர்த்தியபடியே இருந்தார்கள்.

அணை உயர உயர, நீரின் மட்டமும் உயர்ந்தது.

நம்பிக்கை அற்றுப் போயிற்று.

பிரார்த்தித்தார்கள்.

மனோபலமுள்ளோர், ‘சூழ்நிலையோடு’ நேர்த்தியாகப் பொருத்திக் கொண்டார்கள்.

நெஞ்சுரமும், நேர்மைத்திறமும் அற்றோர், ‘உயிர் பிரியும் முன் அனுபவிப்போம்…!’ என்று மூர்க்கம் காட்டினார்கள்.

பசியாறத் திருடினார்கள்.

பிடுங்கித் தின்றார்கள்.

உடற்பசிக்கு தீனித் தேடினார்கள்.

சூழலை மேலும் மோசக்கமாக்கினார்கள்.

வழக்கமாக அக்கிரஹாரத் தெருவின் அறுபது வீட்டு வாரித் தண்ணீரும், வடிகால் குழாய் வழியாகத் தெருவில் கொட்டும் மொட்டை மாடித் தண்ணீரும் ஓடிக், கீழண்டை வாய்காலில் தான் வடியும்.

வெள்ள நீர் உள் வராமல் அணை போட்டதால் நீர் வடிய வழியில்லை.

விடிய விடியக் கொட்டிய மழைநீர் தெருவில் குளம் கட்டி நின்றது.

குளத்தில் மிதந்தன கூடாரங்கள்.

கூடாரவாசிகள், வீட்டுத் திண்ணைகளில் தஞ்சமடைந்தார்கள்.

கோண சமுத்திரம் பசவய்யா வீட்டு வாசல் திண்ணையில் பல பேர் ‘திமுதிமு’வென்று நெறிந்தார்கள்.

வலிவற்ற தூண்கள் கூட்டத்தின் மூர்கத்தால் சாய்ந்தன.

ஓட்டுச் சார்ப்பு கவிழ்த்துக்கொண்டது.

மரண ஓலம்.

மூஞ்சி, கை கால்கள், மண்டை, என மானாவாரியாக உடைந்துக், குறுதிக் கொட்டியது.

கரைக் கடக்கும் தருணத்தில் இயற்கைக் காட்டும் மூர்கத்தை அலட்சியம் செய்தார் கங்கய்யா.

ஒட்டு மாங்காய் பொறுக்க மாந்தோப்புக்குச் சென்றார்.

மாங்கிளை முறிந்துத் தலையில் விழுந்து ஸ்தலத்திலேயே மாண்டார்.

நாற்பத்தைந்து வயது கங்கய்யாவின் அகால மரணம் ஊரையே உலுக்கிப் போட்டது.

உலகமே அழியப்போவது போல் இயற்கை சீறிச் சீறியடித்தது.

கரைக் கடக்கும் முன் ஆராட்டம் செய்தது வானம்.

பொழுது விடிந்தது.

பொலபொலவென ஒளிக்கதிர்களை வீசியது சூரியன்.

புயல் கரை கடந்ததாக அறிவித்தது டிரான்சிஸ்டர்.

கரை கடந்துவிட்டாலும், வெள்ளம் வடிய இரண்டு மூன்று நாட்களாவது ஆகும் என்பதால், அவசரத்திற்குப் போடப்பட்ட கூடாரங்களைச் சற்றே செப்பனிட்டுக் கட்டிக் கொண்டார்கள் அகதிகள்.

பட்டாணித் தெரு, பெரியத் தெருவெல்லாம், மறு நாளே வடிந்துவிட்டதால், அந்தத் தெருவாசிகள் கூடாரத்தைக் காலி செய்துக் கொண்டுச் சென்றுவிட்டார்கள்.

ஒருவரைப் பார்த்து மற்ற சிலரும் இடத்தைக் காலிச் செய்தார்கள்.

காலிச் செய்தவர்களைக் காட்டி, காலிச் செய்யச் செய்தார்கள்.

‘தெருவிற்குப் போய், உங்கள் வீட்டில் இருந்தால்தான் அரசாங்கம் தரும் நிவாரணங்களை வாங்க முடியும்..’

இப்படியெல்லாம் சொல்லி சொல்லி இரண்டு நாட்களிலேயே அக்ரஹாரம் தெருவிலிருந்து அனைவரையும் கிளப்பிவிட்டார்கள்.

கணக்கபிள்ளை, பட்டாமணியம் இவர்களையெல்லாம் தண்ணைக் கட்டிக்கொண்டு, எந்தப் பாதிப்பும் இல்லாத விவசாயிகள் கூட நிவாரணம் வாங்கினார்கள்.

இடியாதச் சுவற்றைத் தட்டிவிட்டு, நிவாரணம் பெற்றார்கள்.

நிறைய இழப்புக்களைச் சந்தித்தும், சாமர்த்தியமில்லாத விவசாயிகளை, நிவாரணம் தராமல் ஏமாற்றினார்கள்.

நிவாரணப் பொருட்களைப் பதுக்கினார்கள்.

நிவாரணத்தை வைத்து விளம்பரம் தேடினார்கள்.

“எல்லா வயலும் முழுகிப்போச்சு… குந்துமணி நெல்லுத் தேராது…!”

“ஏகப்பட்டப் பஞ்சம்தான் வரப்போவுது… சந்தேகமே இல்ல…!”

“ரெண்டு நாள்ல வெள்ளம் வடிஞ்சா, படிக்குப் பாதித் தேத்தலாம்…!”

இளநீர், தேங்காய், மாங்காய், நாரத்தங்காய், வாழைக் கச்சல், வாழைப்பூ …

புயலில் சாய்ந்ததைப் பொறுக்கி வைத்துக் கொண்டனர்.

மதியம் 3 மணி சுமாருக்கு காவிரியில் வெள்ளம் வடிவதற்கான அறிகுறி தெரிந்தது.

பதினெட்டு படிகள் இறங்கிக் குளிக்கும் காவிரியில், ஒரு படி கூடத் தெரியாத அளவுக்கு கரையைத் தொட்டுக்கொண்டு ஓடிய தண்ணீர், இப்போது இரண்டாவது படிக்கட்டைத் தொட்டு ஓடியது.

“மொதப் படிக்கட்டு தெரியுது பாரு, வெள்ளம் வேகமா வடியுதுண்ணே…!”

“நீங்க நல்லா இருக்கோணும்…”

குந்தலாம்பாள் வீட்டு பிரும்மாண்டமான மாட்டுத் தொழுவத்தில், வசதியாகத் தங்கிய ஜனங்கள் வாழ்த்திவிட்டுச் சென்றார்கள்.

குந்தலாம்பாள் பார்த்துப் பார்த்துச் செய்த உதவிகளைச் சிலாகித்துச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

இப்படி ஒரு நிலை வருமென்று முன்பே அறிந்து, விறகு முதல், அரிசி வரை தயாராக வைத்தும், தொழுவம், பின்கட்டுக் கூறைகளை செப்பனிட்டும், கோட்டை அடுப்பை திறந்து போனது வந்தது குத்துக்கல்களை பரத்தியும், அண்டாகுண்டாக்களுக்கு ஈயம் பூசியும் தயாராக வைத்த அய்யாம்மாவின் முன் யோசனையை எண்ணி எண்ணி வியந்தான் கலியன்.

பின் கட்டின் வெம்மை உணர்ந்தபோது, தொடர்ந்து எரிந்த கோட்டை அடுப்பின் சூடு முற்றிலும் குறைய எப்படியும் பதினைந்து நாட்களாவது ஆகும் என்று தோன்றியது.

வெள்ளம் வடிந்த கையோடு, கலியன் தன் குடிசையையோ, தெருவையோ பார்க்கப் போகவில்லை.

மாதய்யாவின் புஞ்சையைப் பார்த்து வந்தான்.

“அய்யா ஆசையா வளத்த செவ்விளநி மரம் சாஞ்சிருச்சும்மா…”

கவலைப்பட்டான்.

“கவலைப் படாதே. நாத்து சாத்தி நட்டு வம்சத்தை விருத்தி பண்ணிட்டியே…!”

ஆறுதல் கூறினாள் குந்தலாம்பாள்.

கங்கய்யாவின் இழப்பைச் சொல்லிச் சொல்லிக் கண்கலங்கினாள்.

வெள்ள பாதிப்புகளை பார்வையிட நிபுணர் குழு வந்தது.

ஆப்பக்கார அரும்பாவின் குடிசை அருகில் கூடி நின்றார்கள் குழுவினர்.

“க்ரேட் லாஸ்…!”

“பேத்தடிக்…!”

ஆங்கிலத்தில் பேசிக்கொண்டார்கள்.

“ஹூ…ம்…”

“ப்…ச்…!”

“த்…ஸெள..த்…ஸ்ஸெள…!”

ஒலி எழுப்பி ஆதங்கித்தார்கள்.

குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த சப்பாணிப் பேச்சி முத்து ஒரு ஆபீசரிடம் சொன்னான்.

“அய்யா…! தெருவுக்குள்ற நெறைய வூடு இடிஞ்சிட்டு…!”

தெருவில் தேங்கி நிற்கும் வெள்ளத்தைப் பார்வையிட்டார்கள்.

அதில் நடந்து சென்றவர்களைப் பார்த்தார்கள்.

நெஞ்சளவுத் தண்ணீர் கிடந்தது.

‘வயல் வாய்க்கால் தண்ணீரெல்லாம் வடிந்த பிறகுதான் தெருத்தண்ணீர் வடியும்…!’

‘குறைந்த பட்சம் எப்படியும் இரண்டு நாட்களாவது ஆகும் வடிய…!’

குழுவினர் பேசிக்கொண்டார்கள்.

அரும்பா.

ஆப்பக்கார அரும்பா என்பதுதான் அந்தனூர் மேட்டுத்தெருவில் பிரசித்தம்.

ஊர் எல்லை மேட்டில் உள்ள குடிசை அவளுடையது.

உள்ளே ஓர் ஆட்டுக் கல், அம்மிக் குழுவி, தோசைக்கல், ஒரு கடாய், சில கரண்டிகள், இரும்புக்குடங்கள். சாம்பார் வைக்கும் டேக்சா, சோறு வடிக்கும் குண்டா… பிளாஸ்டிக் டம்ளர்கள், அலுமினியத் தட்டுக்கள்.

இவ்வளவுதான் அவள் உடமைகள்.

மேட்டுத் தெரு வாசிகள் மட்டுமல்லாது மற்றத்தெருவாசிகளும் அவளிடம்தான் ஆப்பம் வாங்கித் தின்னுவார்கள்.

அப்படி ஒரு கைப் பக்குவம் அவளுக்கு. கைப் பக்குவம் மட்டுமில்லை வாயும் நீளம் அவளுக்கு.

எஸ்டேட்டில் வேலை பார்த்திருந்தால் வாயாடி வித்யாவை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவளை விடப் பன்மடங்கு அதிக நீளம் அரும்பாவின் நாக்கு.

“ஆபீசருங்க நீங்க. தண்ணிய காலால மிதிக்கவே மாட்டீங்க. இடுப்பளவுத் தண்ணிய கண்ணாலயாவது பாக்குறீகளே…?” குதர்க்கமாகப் பேசினாள்.

நிபுணர் குழுவில் இருந்த இளங்கோவுக்குச் ‘சுருக்’கென்றது.

“பாட்டீம்மா…’’

“சொல்லுங்க பேராண்டீ…”

“கிராமத்துல பொறந்து வளந்த நாங்கதான். பேண்ட்டு சூட்டு போட்டதால சீமைகாரங்கனு நெனைக்காதே…!”

“நான் என்னா நெனைச்சா என்னா ஆவப் போவுது. தெருவுக்குள்ற அவனவன் தவியாத் தவிக்கறான். நீங்க கொளாய மாட்டிக்கிட்டு எட்ட நின்னு பாக்க வந்துட்டீங்க..!”

“… … … … … … … … …”

“நான் தெரியாமத்தான் கேக்கேன். உங்களுக்கு எலிகாப்டர் ஏதும் இல்லீங்களா..?”

“தண்ணீல இறங்கி ஊருக்குள்ளே போய்ப் பாக்கணும். அதானே உன் ஆசை. பாக்கறோம்…”

சிரித்தாள் அரும்பா.

“வாயால வடசுடுறீங்களேடா…!” என்று பரிகசிப்பது போல இருந்தது அரும்பாவின் சிரிப்பு.

தடாலடியாய் தண்ணீரில் இறங்கிவிட்டார் இளங்கோ சார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

சூப்ரண்டே இறங்கிவிட மற்றவர்கள் சும்மா இருக்கமுடியுமா மற்றவர்களும் இறங்கி மார்பளவுத் தண்ணீரில் நடந்தனர்.

பேண்ட் சட்டையோடு தண்ணீரில் நடக்கும் ஆபீசர்களை வியப்புடன் பார்த்தாள் அரும்பா.

இப்போது போல பொக்ளைக்களும், ஜேசீபிக்களும், மிஷின் ரம்பமும் அப்போது பிரபலமில்லை.

மனிதச் சக்தியையே நம்பியக் காலக்கட்டம்.

போக்குவரத்துக் கொஞ்சம் கொஞ்சமாகச் சீராகியது.

செய்தித்தாள்கள் வரத் தொடங்கின.

புயல் வெள்ள பாதிப்புகள், கருப்பு வெள்ளைப் புகைபடமாக வெளியானது.

பள்ளிகள் காலவரையற்ற விடுமுறைச் செய்திக் குழந்தைகளை குதூகலப்படுத்தியது.

குடமுருட்டிக்கு அருகே ரயில்வேத் தண்டவாளங்கள் பாலம் போலத் தொங்கின.

கூட்ஸ் கூட்ஸாகக் கொட்டப்பட்ட சரளைக் கற்கள், எங்கே போனதென்று தெரியாமல் அரித்துக் கொண்டு போய்விட்டது.

“டிராக் சரியாக ஒரு மாசத்துக்கு மேலே ஆயிடும்…!” என்றார் ரயில்வேயில் பணிபுரிந்த மணி மாமா.

‘பள்ளிக்கூடம் திறக்க இன்னும் ஒரு மாசம் ஆயிடும்…” என்று ஹேஸ்யமாகச் சொன்னார் பிச்சுமணி சார்.

‘ஹை…! ஜாலி…!’

மகிழ்ந்தனர் திருச்சியில் படிக்கும் சிறுசுகள்.

மத்திய மந்திரி வெள்ளச் சேதத்தை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.

குழந்தைகள் வேடிக்கைப் பார்த்தார்கள்.

“தரைல இறங்காம பாத்துட்டுப் போயிடுவாங்க… பிச்சை போடறமாதிரி நிவாரணம் கொடுப்பாங்க. நம்ம பொழப்புதான் மானங்கெட்ட பொழப்பு.”

நொந்துகொண்டனர் விவசாயிகள்.

கணக்குப்பிள்ளைக்கு வேண்டிய மேட்டுக்குடி வாசிகள், எந்த சேதாரமும் இல்லாமலே உடனடி நிவாரணம் பெற்றார்கள்.

மாதய்யாவின் பண்ணையாள் என்பதாலேயே வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கும் கலியனுக்கும் தெரு வாசிகளுக்கும் வெள்ள நிவாரணம் வருவதில் தாமதம் ஆயிற்று.

எருதின் ரண வலி காக்கைக்கு என்றுதான் தெரிந்தது.

கணக்குப்பிள்ளையின் அலட்சியத்தை குந்தலாம்பாளிடம் முறையிட்டனர்.

“அய்யா இருந்திருந்தா எங்களை இப்படி விட்டிருக்கமாட்டாரும்மா…!”

“கவர்மெண்ட் தரம்போது தரட்டும். நான் கொடுக்கறதை வாங்கிக்கோங்க.”

தேவையானவற்றைக் கொடுத்து ஒத்தாசை செய்தாள்,.

தென்னந்தோப்பில் விழுந்த மட்டைகள் எல்லாம் கீற்றாக உருமாறி கலியன் தெருக் குடிசைகளைப் புதுப்பித்தன.

காளவாய்ப் போடுக் கட்டுக் கட்டாய் கரன்ஸி எண்ண ஆசைப்பட்டு அறுத்து அடுக்கப்பட்ட பச்சை வெட்டுக் கல் ஆசுகள், புயல் மழையால் கரைந்து மண்மலையாய் நின்றது.

வலுவான கல் கட்டடங்களையே அஸ்திவாரத்துடன் சாய்த்துவிட்ட புயலுக்கு , கீற்று மறைப்புக்கள் எம்மாத்திரம்.

கல்லறுப்புக்கு மண்ணெடுக்கத் தோண்டப்பட்டப் பிரம்மாண்டமான குழி, குளமாய்த் தளும்பி நின்றது.

குந்தலாம்பாள் இதுகளைக் கண்டு கிஞ்சித்தும் கவலைப் படவே இல்லை.

மாறாக ஒரு வித நிம்மதியே அடைந்தாள் அவள்.

சம்பாக் காணியின் நிலையைச் சொன்னான் கலியன்.

“வயித்தெரிசலா இருக்கும்மா…!” என்றான்.

“எனக்கு வயிறு எரியலை கலியா. வயித்துல பால் வாத்தா மாதிரி இருக்கு…”

“ஏம்மா, சவால் விட்ட பிள்ளை தோத்ததுக்காக சந்தோசப்படறீங்களா…?”

“என்னையா அப்படி நினைக்கறே…? என்னதான் கொடுமைக்காரனா இருந்தாலும் , பெத்த புள்ளை தோத்துட்டான்னு எந்தத் தாயும் சந்தோசப்படமாட்டா கலியா.”

“… … … … … … … … …”

“நம்ம குடும்பத்துல யாருக்குமே காளவா ராசியில்லாதப்போ இவன் கல்லு அறுத்து வெச்சிட்டானே, பாதிப்பில்லாம பத்த வெச்சிப் பிரிக்கணுமே’னு மனசுப்பூரா கவலையா இருந்துச்சு. பெத்த மகனுக்கு பாதிப்பில்லாம பணங்காசு நட்டத்தோட போச்சேனுதான் சந்தோசம்.”

“… … … … … … … … …”

அய்யாம்மாவை தவறாகப் பேசிவிட்ட கழிவிரக்கத்தில் கலங்கினான் கலியன்.

“நான் கும்பிடற எல்லையம்மா என் வயித்துல பால் வாத்துட்டா. தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சே…”

சொல்லியபடியே கோவில் இருந்த திக்கு நோக்கி கையெடுத்துக் கும்பிட்டாள் குந்தலாம்பாள்.

‘காளவாய்க்கு கல்லறுத்துக் கிடக்கே… என் ஆச்சோ… ஏது ஆச்சோ…”

கவலையில் கலங்கினான் துரைராமன்.

எப்போதும் டிரான்ஸிஸ்டரும் கையுமாக இருந்தான்.

காவிரி உடைப்பு, குடமுருட்டி உடைப்பு, என்றெல்லாம் திருச்சி வானொலியில் கேட்கும் போது துரையின் மனசு பதறியது.

தபால், தந்திப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்ததால், கிராமத்துச் செய்திகள் ஏதும் அவனுக்கு எட்டவில்லை.

‘எப்போது போக்குவரத்துச் சீராகும், கிராமத்துக்கு போகலாம்…’

ஒரே சிந்தனைதான் துரைராமனுக்கு.

அம்மாவிடம் சவால் விட்டான்.

ஆபீசில் லோன் போட்டான்.

மாதப்பிடித்தம் போக மீதிப் பணத்தில் காலட்சேபம் செய்தான்.

ஆபீசுக்கு அடிக்கடி லீவு போட்டு, கெட்ட பெயர் சம்பாதித்தான்.

ஒரு முறைக்குப் பல முறை மெட்ராசுக்கும், அந்தனூருக்கும் வந்து போனான்.

கரன்ஸிக் கனவுளிலேயே எப்போதும் மிதந்தான்.

‘கல்லறுத்து’ அடுக்கியாகிவிட்டது.

சொந்தப் புஞ்சைகளில் நின்ற மரங்களை வெட்டித் துண்டாடி அடுக்கியாகிவிட்டது.

காளவாய் அடுக்கி அடுப்பில் தீயிடவேண்டியதுதான் பாக்கி.

கல் அறுத்த நேரத்துக்கு, கொளுத்தியிருந்தால், மண் கல்லாகி, கரன்ஸிகளாகி மூன்று மாதங்கள் முடிந்திருக்கும்.

கரன்ஸிகளை கை எண்ண வேண்டிய நாளில், கல் வடிவக் களிமண்ணைப் பற்றிக் கவலைப்பட்டான்.

ஒவ்வொன்றையும் தள்ளித் தள்ளிப் போட்ட கிட்டா கிட்டாவய்யாமேல் வெறுப்பு வந்தது.

தொழில் அனுபவம் இல்லாத துரை கிட்டாவையே பூரணமாய் நம்பினான்.

“ஆயிரம் கொடு, ஐநூறு குடு…”

பணம் கறந்துகொண்டே இருந்தார்

கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு அவர் சொன்ன நாளில் வந்து பார்த்தான்.

ஒரு துரும்பு கூட நகர்ந்திருக்கவில்லை.

கிட்டாவய்யா ஊரிலேயே இல்லை.

அடுத்த வாரம் மீண்டும் வந்தான்.

“என் மச்சினன் பேரனுக்கு முடியிரக்கணும்னு வரச்சொன்னான். போனேன். ரெண்டு வாரம் அங்கேயே தங்கவேண்டியதாப் போச்சு. ஆகட்டும் வர வாரம் முடிச்சிப்பிடறேனே…”

அதிராமல் சொன்னார் கிட்டாவய்யா.

“அப்போ அடுத்த வாரம் வந்துடறேன் மாமா..”

“நான் தபால் போடறேன். தபால் கிடைச்சதும் வந்தாப் போதும்.”

“நீங்க சொல்றதை வெச்சிப் பாத்தா, அடுத்தவாரமும் நடக்காது போல இருக்கே..”

“தொரை, நீ மெட்ராஸ் சிடில இருக்கே. கிராமத்துச் சமாச்சாரம் தெரியாம பேசறே நீ.”

“நீங்க ஒரு வாரம் சொன்னேளேனு….”

“வாஸ்தவம்தான் தொரை. ஒருவாரம்னு சொன்னேனோல்லியோ… இன்னும் ரெண்டு நாள்’லயே முடிஞ்சாலும் முடிஞ்சதுதான்.”

“சரி மாமா… புரியறது…!”

ச்சே இவனெல்லாம் ஒரு மனுஷனா என்று ஆத்திரம் வந்தாலும் பொறுத்துக்கொண்டான்.

“இன்னும் ஒரு ரெண்டாயிரம் குடு. விறகு போறாதுன்னு படறது. சூளையை அடுக்கிட்டு விறகுக்கு அலையப்படாது பாரு…”

“என்ன மாமா.. வாய்க்கு வந்தபடி பேசறேள்…”

தன்னை மீறி கடுப்படித்துவிட்டான் துரை. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா.

“அப்படி என்ன பேசினேன் தொரை உன்கிட்டே… கடுப்படிக்கறே…?”

“மரம் எதேஷ்டமா இருக்கு. காளவாப் போட்டதுப் போக மீறும்னு போன வாரம் சொன்னேள். இப்போ இப்படிப் பேச்சு மாத்திப் பேசறேளே…”

“ஏண்டாப்பா… தொரை. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். என் வேலையெல்லாம் விட்டுட்டு ஒத்தாசை பண்ணினதுக்கு இப்படி எடுத்து எறிஞ்சிப் பேசறியே…!”

துரைக்கு என்ன பேசுவது , எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை.

கிட்டாவய்யாவே தொடர்ந்தார்.

“காளவா போட எனக்கு ஒத்தாசை பண்ணுங்கோ மாமான்னு கேட்டே நீ. நானும் சரி கேக்கறியேனு என் வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு நீ சம்பாதிக்கறதுக்கு நான் அலையா அலைஞ்சிருக்கேன். அலைச்சலை விடு. என் கைக்காசு ஐயாயிரம் ரூபாய்க்கு மேலே போட்டிருக்கேன். அதைக் குடுத்துட்டு ஆளை விடுப்பா சாமி..”

கழட்டிக் கொண்டார் கிட்டாவய்யா.

ஆரம்பத்திலிருந்து கிட்டாவய்யாவின் நடவடிக்கைகளையெல்லாம் நினைத்துப் பார்த்தான் துரை.

சுயரூபம் தெரிந்து கொண்டான்.

அப்பாவும் அம்மாவும் கிட்டாவைப் பற்றி அடிக்கடி சொல்லும் அபிப்ராயம் உண்மை எனத் தெரிந்தது.

அடுத்த பாட்டம் வந்து கலியனைக் கலந்து கொண்டு முடித்துவிடலாம் என்று திட்டம் போட்டான் துரை.

ஆபீஸ் வேலை…

புயல்…

வெள்ளம்… என முடக்கிவிட்டது.

புயல் வெள்ளத்துக்குப் பின் போக்குவரத்து சீராக பதினைந்து நாட்களாகிவிட்டது.

துரைராமன் வந்தான்.

மண் மலையைப் பார்தான்.

மடுவாய்க் குளத்தைப் பார்த்தான்.

காளவாய்க்கு வெட்டிய பள்ளம் என்று யாரேனும் சொன்னால்தான் தெரியும்.

தூர் எடுத்து சீர் படுத்திய குளம் போல இருந்தது அது.

கலங்கினான். மருகினான்.

கிட்டாவின் துரோகத்தை நினைக்க நினைக்க நெஞ்சு பதறியது.

அம்மாவும் கலியனும் ஆறுதல் சொன்னார்கள்.

துரைராமன் கண் கலங்கியது.

அவமானத்தால் தலை குனிந்தான்.

“துரை, நீ ஏன் தலை குனியணும். ஏன் கண் கலங்கணும்னேன்.”

“… … … … … … … … …”

பெற்ற தாயை பாசத்துடன் நோக்கினான் துரை.

“துரை. தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சேனு விடு. அடுத்த வேலையைப் பாரு.” ஆறுதல் சொன்னாள் குந்தலாம்பாள்.

தோல்வி என்பது வாழ்வின் ஓர் அங்கம்.

தோற்றுவிட்டோம் என்பதை விட, தோல்வி மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டதையே அவமானமாகக் கருதியது துரையின் உள்ளம்.

கலியன் ஆறுதல் சொன்னதை துரைராமன் கிஞ்சித்தும் விரும்பவில்லை.

இந்த இடத்தில் கலியனை எதிர்த்துப் பேசினால் , அம்மா அதை விரும்ப மாட்டாள்.

அமைதியாக இருந்தான்.

துரைராமனின் உள்ளம் அடுத்து என்ன செய்யலாம் என்று தீவிரமாகத் திட்டம் தீட்டியது.

அத்தியாயம் – 22

“அந்தனூர் அக்ரஹாரத் தெருமுனைத் திரும்பியதும், கண்ணில் படுவது நாயக்கர் ரைஸ்மில்.

மில்’லை ஒட்டி ‘ராஜம்மா-தென்னந்தோப்பு.’

என்றென்றும், இது ‘சத்தரம் பஸ் ஸ்டாண்ட்’…தானே…!

அதுப் போலக் காரணப் பெயர்தான் ராஜம்மாத் தென்னந்தோப்பும்.

பலப்பலக் கைகள் மாறி மாறி, அந்தத் தோப்பு இப்போது மருதவாண உடையாரிடம் இருக்கிறது.

ஆனால் எல்லாரும் சொல்லுவதென்னவோ, ‘ராஜம்மாத்-தென்னந்தோப்பு.’

தோப்பு எல்லையில் முனியன் வாய்க்கால்.

கால்வாயின் குறுக்கேக் கருங்கல் பத்தைகள் பரத்திய வாய்க்கால் பாலம்.

பாலம் கடந்ததும், நஞ்சையும் புஞ்சையுமாக ஏகப்பட்டது இருக்கிறது மாதய்யாவுக்கு.

மலையும்-மடுவுமாக காட்சியளித்தது, எல்லையம்மன் கோவிலுக்குப் பின்புறம் உள்ள மாதய்யாவின் சம்பாக்-காணி.

“பொணம் போன வயங்க; அதான் விருத்திக்கே வரலை…!”

“அண்ணிக்கேச் சொன்னேன் நான்; நீங்க நம்பல…!”

“வெளையற காணீல தூக்கிட்டுப் போனது தப்பு; விவசாயத்துக்கே லாயக்கில்லாம மேடு-பள்ளமா. கரடு-முரடா. பொரம்போக்கா ஆயிருச்சுப் பாரு…!”

“எப்படி வௌஞ்ச வய; கொளமும் கரையுமாயிருச்சே…!”

“மாடுங்க மேய்க்கறதும், நாயி காலு தூக்கறதும் காண வயிறு எரியுது…!”

“ஊர்ச் சனங்க ஒதுங்க வாட்டமாயிருச்சேச் சம்பாக் காணி…!”

“காலக் கொடுமைங்கறது இதுதான் போல…!”

சம்பாக் காணியை வாய்க்கு வந்தபடிக்குப் பேசினார்கள்.

அந்தக் காணிக்கு கீழண்டைக் கையில், எல்லையம்மன் கோவிலுக்கு முன்னே செல்கிறது ஊர்ப்பாதை.

காவிரியில் குளித்து திரும்புவோர், பஸ் இறங்கி வருபவர்கள், போகிற வருகிற ஜனங்கள்…

நின்று எல்லையம்மனுக்குக் கும்பிடு போட்டுவிட்டுத்தான் செல்வார்கள்.

சாலைக்குக் கீழண்டை பூராவும், பெரிய வாய்க்கால் வரைக்கும் வாழைக் கொல்லை.

பூவன், ரஸ்தாலி, மொந்தன், பச்சை, பேயன், நேந்திரன், செவ்வாழை என, வாழைத்தார்களை வெட்டிக் கொண்டுவந்து, தரம் பிரித்து அடுக்குவது எல்லையம்மன் கோவில் முன்னே கிடக்கும் திடலில்தான்.

அங்கேதான் வாழை-லாரி தாராளமாக நிறுத்தி லோடு ஏற்ற வசதி இருந்தது.

லாரியை வாகாய் நிறுத்தி, இஞ்சினை ஆஃப் செய்துவிட்டு, டிரைவர் மரத்தடியில் கிடக்கும் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக் கண்மூடுவான்.

இதுபோல நேரங்களில்தான் டிரைவர்கள் கண் அசர முடியும்.

க்ளீனர்.

வண்டியை ஒரு முறைத் துடைப்பான்.

தேவையான இடங்களில் கிரீஸ் பிஸ்டலை ‘புஸ்க் புஸ்க்’ என அழுத்தி, குமிழ்க் குமிழாய் வைப்பான்.

“டொக்..டொக்’ எனத் தட்டித் தட்டி, மிருதங்கத்துக்கு ரவை கூட்டுவதும் குறைப்பதும்போல…

கட்டையால் எட்டுட் டயர்களையும் ‘டும்…டும்…’ என ஓசையெழ அடிப்பான்.

எழும் ஒசையை வைத்தே எந்தச் சக்கரத்தில் காற்றுபிடிக்கவேண்டும் என்று மனதில் குறித்துக் கொள்வான்.

‘தினமும் என்னைக் கவனி…!’

என்ற வாக்கியத்தை மதிப்பான்.

அது கிளீனருக்கான வாசகம் அல்லவா…!

அடுத்து, ஆயில் கரைப் பிடித்த இரும்புப் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து வைப்பான்.

தண்ணீர் பாட்டில்களில் நீர் நிரப்பி உரிய இடத்தில் வைப்பாப்.

அதோடு முடியும் அவன் வேலை.

அதற்குப் பிறகு லோடு ஏற்றிய பின், வண்டிக் கிளம்பும்வரை லாரிக்கு அடியில் தார்பாய் விரித்துத் தூங்க வேண்டியதுதான்.

அடுத்த வேலை வண்டியை எடுக்கும் முன்புதான்.

அந்தனூர் மண்ணுக்கு அப்படி ஒரு வளம்.

காலத்தில், கிடை மறித்தும், தொழு-உரம் அடித்தும் புழுதி அடித்துப் புரட்டியும் விடுவதால் நீடிக்கும் மங்காத மண்வளம்.

உப்புப் பூத்த அலர் மண்ணுக்கு அந்தனூரில் இடமே இல்லை.

நிலம் தயாராவதற்கு முன்பே, நடுவதற்குக் வாழைக்கட்டை தேர்வு செய்து நேர்த்திசெய்து வைத்தலே நடைமுறை.

அந்தப் பணி ஒருரு யக்ஞம் போல நடக்கும் அந்தனூரில்.

கட்டை தேர்வு ஒரு கலை.

‘கட்டைக்குத் தக்கபடிதானே காய் சுரப்பு…!’

பதமாய்க் காயவைத்து, நீரில் நனைத்த நயமான வாழை நார்ப் பட்டைகளைக் கட்டிக் கையில் எடுத்துக்கொண்டு முதலாளியும் கங்காணியும் கொல்லைக்குள் போவார்கள்.

ஈட்டி இலை, சீக்கு வாழை நீக்கி, ரயில்தார் ஈன்ற முறையான குத்துக்களை வாழை நார்க் கட்டி அடையாளம் வைப்பார்கள்.

ஏறியத் தென்னைமரம் கணக்கிடத் தென்னை ஓலைக் கட்டுவார்களே அது மாதிரி.

‘எத்தனைச் சிங்கங்கள் பெயர்க்கலாம்…?’

மனசுக்குள் கணக்கு ஓடும்.

அடையாளம் வைத்த குத்துக்களில் தேவையான கட்டைகள் தலையறியப்படும்.

அடுத்த வேலை கட்டைப் பெயர்த்தல்.

நடவுக்கான கட்டைகளில் ஒட்ட ஒட்ட வேர் நீக்கிப் பஞ்சகவ்யக் கரைசலில் நனைத்தெடுப்பார்கள்.

ஏற்கெனவே ஏழு சுற்று, எட்டுச் சுற்றுப்பட்டையோடு வீரியமாயிருக்கும் முரட்டுக் கட்டைக்கு மேலும் வீரியம் கூட்டுவார்கள்.

வாழைக் கொல்லைக்கு, ஐந்து உழவு ஓட்டுவார்கள் அனுபவஸ்தர்கள்;

‘மூணு போதும்…!’ என்பது சிலர் கணக்கு.

உழவுக்குத் தக்கபடி எகிறும் மகசூல்.

இப்பொழுதுபோல ‘வீல்பரோ’வை டிராக்டரில் பொருத்தி ஓட்டும் மேம்போக்கான உழவு போல் இருக்காது

முழுக்கலப்பையும் மூழ்குமளவுக்கு புழுதி பறக்கும் உழவு.

பூவன் வாழையா…7 க்கு 7;

செவ்வாழையா 8 க்கு 8.

ரகத்துக்குத் தக்க இடைவெளி விட்டு வாங்கிய குழியில் மண்புழு உரம், வேப்பங்கொட்டை கரைசலென ஆர்கானிக் உரமிட்டு, ஓரிறு நாட்கள் குழி ஆறும்.

எரு, மண்சூடு தணியும்.

மீண்டும் குழிக் கிளறி, கட்டை புதைத்து-மூடி நன்குக் குத்தி மிதித்துவிட, ஒரு மாதத்தில் குருத்துக்கள் கிளிப் பச்சையாய் சுருண்டு, நீண்டு, வாளிப்பாய் விரியும்.

முற்றி முதிர்ந்து கெட்டிப் பச்சையாய் ஆவதற்குள், அடுத்தக் குறுத்துக் குழலாய் நிமிர்ந்து நீளும்.

ஜீவானந்தக் கரைசல், முட்டைக் கரைசல் என முறையாய்த் தெளித்தும்;

ஒடிந்தும், காய்ந்தும் தொங்கும் சருகுகளை அவ்வப்போது அறுத்து நீக்கியும் வர, காலத்தில் கண்ணாடி இலைச் சுருண்டு நீண்டு, விரிந்துக் குலை தள்ளும்.

கிடேரியின் அரைவழியேக் கும்பிடு போட்டபடி கன்று கழல்வதைப் போல் பலன் எட்டிப் பார்க்கும்.

மடல்களை ஒவ்வொன்றாய் உதிர்த்து, உதிர்த்துத் தன்னை வளர்த்த பூமியை அர்ச்சிக்கும்.

அடுத்த ஈடுப் பலனுக்கு நிற்கும் ‘பயிற்கன்றை’ மட்டும் வளரவிட்டு, சீத்து போத்தாய் ஆங்காங்கே வளரும் வாழையடிச் சிங்கங்களைத் தலையறியத் தலையறியத் தாய்மரத்தில் வாழைத்தார் ஊட்டமாய், உரமாய்ப், விண்’ணெனச் சுரக்கும்.

பயிற்கன்றும் ‘நெகுநெகு’வென வாளிப்பாய் உயரும்.

மடல் உதிர உதிரப், பூ முதிரும்.

கச்சலாகும்…

காயாகும்…

மலட்டுப் பூ பல்லிளிக்கும் மடல்தான், எல்லை.

‘வாழைப்பூ’ ஒடிக்க அதுவே அடையாளம்.

பூ ஒடிந்த தார், வலுவாய்ச், சீராய், முற்றிச் சுரந்து விண்ணென்று நிற்கும்போதுதான் லாரிக்காரர்களோடு விலை படியும்.

மூன்று உழவோடு நிறுத்திப், பராமறிப்பிலும் குறை வைத்து, பயறு, மல்லி என ஊடுபயிறுக்கும் ஆசைப்பட்ட விவசாயிகள், அறுவடை நேரத்தில் லாரியில் ஏற்றும் விவசாயியைப் பார்த்துப் பொறுமுவார்கள்.

கரளையும், பங்கரையுமாகச் சூம்பிப்போய் நிற்கும் குலை வாங்க எந்த லாரிக்காரன் வருவான்.

ஐந்து உழவுக்காரன் தயவை நாடுவார்கள் மூன்று உழவுக்காரர்கள்.

பத்து பேர் உள்ள பராரியின் வீட்டில்கூட ரெண்டொருவர் இயற்கையாகவே ‘கொழுக் மொழுக்’ என்று இருப்பார்களில்லையா…?

அதுபோல மூணு உழவுக்காரர்கள் கொல்லையிலும் ஒரு சில ரயில்தார்கள் இருக்கும்.

அதுகளை வெட்டி வந்து லாரி விலைக்குச் சேர்க்கச் சொல்லிக் பல்லிளிப்பார்கள்.

‘வயத்தெரிச்சல் தணியட்டும்…!’ என்று இந்த உபகாரத்தைச் செய்து கொடுப்பார்கள் ஐந்து உழவுக்காரர்கள்.

மாதய்யாவை அணுகாத விவசாய ஆபீசர்கள் இல்லை.

வாழை போடச் சொல்லி நச்சரித்தார்கள்.

மானியம் தருவோம் என்றார்கள்.

பணப்பயிரான வாழைப் போடக் கடைசீ வரைப் பிடி கொடுக்கவே இல்லை மாதய்யா.

“நெல்லுதான்.” என்று உறுதியாக நின்றார்.

அதெல்லாம் பழைய கதை.

எங்கு லோடு ஏற்றினாலும், என்ன லோடு ஏற்றினாலும் லாரிக் கிளீனருக்கு எனச் சாங்கியங்கள் உண்டு.

டிரைவர் ஏறிச், சாவித் திருகி இஞ்சினை உருமவைக்கும் முன், கிளீனர் ஏறிவிடவேண்டும்.

கேபினில் மாட்டியிருக்கும் வினாயகர், லட்சுமி, வெங்கடாசலபதி, என ஏழெட்டுச் சாமிகளை வரிசையாக வைத்து நீளமான செவ்வக வடிவத்தில் சட்டமிட்ட படத்துக்கு ஒரு கிள்ளோ, ஒரு முழமோ… கிடைக்கும் பூவைப் போடவேண்டும்.

பத்திக் கொளுத்தி வைக்க வேண்டும்.

‘அடடே, கிளீனர் பிழைப்பு இவ்வளவு சுலபமா இருக்கே..’

இப்படி யாராவது நினைத்தால் அது அறியாமையே.

கிளீனர் பலியாடு மாதிரி.

குடி போதையிலோ, கண்ட இடங்களில் படுத்து எழுந்த களைப்பிலோ, தூக்கக்கலக்கத்திலோ, பிரேக் பழுதாலோ… என்ன காரத்தால் விபத்து என்றாலும், கிளீனர்தான் கம்பி எண்ண அனுப்பப்படுவான்.

லோடுமேன்.

லாரியின் பின்புறம் ஏறுவான்.

ஏற்கெனவே கீழேப் படிந்திருக்கும் நமுத்துப் போன வாழைச் சருகுகளைக் குவித்துக் கீழேத் தள்ளுவான்.

புது வாழைச் சருகுகளை வாங்கி லாரியின் அடிப்பாகத்தில் மெத்தைப் போலச் சீராய்ப் பரத்துவான்.

அங்கும் இங்கும் நடந்துப் பார்ப்பான்.

அவன் கால்களில் இருக்கும் கண்கள் பார்த்துப் பார்த்துச் சொல்லும் இடங்களில் மேலும் கொஞ்சம் சருகைப் போட்டு மிதித்துவிடுவான்.

சருகு-பரத்தல்’ மட்டும் சரியானபடி அமையவில்லை என்றால் வாழை வியாபாரிகள் நிறைய நட்டம் பார்க்கவேண்டியதுதான்.

அடிப் பலகையில் உரசி உரசி வாழைத்தாரின் முகம் நசுங்கிவிடும்.

பார்வை போன வாழைத்தார் விலை போகாது.

அடித்தட்டு நசுங்க நசுங்க கட்டுக் குலையும். மேலே மேலே அடுக்கப்பட்ட தார்கள் இளகி நழுவும்.

லாரி போகும் வேகத்தில், தார் நொடித்துக், காம்பு ஒடிந்து தொங்கும்.

ஒடிந்து தொங்கிய தாருக்கு மவுசு கிடையாது.

வாழை லோடு ஏற்றும்போது மிகவும் கவனம் தேவை.

காரணம், பல நேரங்களில் ஏஜெண்டுகள் லாரியை விட்டுச் சரக்கை இறக்காமலேக் கை மாற்றி விட்டுவிடுவார்கள்.

சமயத்தில், ஏற்றிய வாழைத்தார்களை லாரியிலிருந்து இறக்கப் பத்துத் பதினைந்து நாட்கள் கூட ஆகிவிடும்.

அதுவரைத் தார்பாலின் கட்டுக்குள் குடாப்புப் போட்டாற்போல் கிடக்கும் வாழைத்தார்கள்.

இப்படிப் பல நாட்கள் கழித்து இறக்கும்போது, மஞ்சள் பூத்துப், பழமாய்ப், பார்க்கத் தங்க ரேக்குகளாய்ப் பளிச்சிடும்.

காம்பொடிசலோ, நுனி சீப்பு நசுங்கலோ இருந்தால் போச்சு…

கெட்டப் பழத்தோடு சேர்ந்த நல்லப் பழத்தின் கதிதான்.

லோடு இறக்கும்போதே சில்லறை வியாபாரிகளின் வாயில் புகுந்து புறப்படும் சரக்கின் தன்மை.

“என்னாது… வாளைத்தாரா, கம்போஸ்ட்டா…!”

“எலே முருகா…! சாராய ஊரலுக்குப் போவேண்டிய ராலி, மார்க்கட்டுக்கு வந்துருச்சுடா…!”

“தோலி இறங்குதுடா; பஞ்சாமிர்தம் அடீல படிஞ்சி கிடக்கு போல…!”

“இது கதைக்கு ஆவாது…!”

“படிக்குப் பாதி கூடத் தேறாது போல இருக்கே…!

“அடுத்த லோடுல சரக்கெடுக்கலாம்ணே…!”

சரக்குத் தேவையில்லை என்று, திரும்புவது போலப் பாவ்லாக் காட்டுவார்கள்.

“ப்…ச்…!”

“ஹூ..ம்…!”

“அய்யய்யே…!”

சலிப்பு , அருவருப்பு ஒலி எழுப்பிக் காட்டுவார்கள்.

தலையில் தட்டிக்கொண்டும், கன்னத்தில் கை வைத்தும், கைகளை விரித்தும், அபிநயம் பிடிப்பார்கள்.

பாதி விலைக்கும் கீழேக் குறைத்துக் கேட்பார்கள்.

தனியாளாய் இருந்தால் மேக்கரித்துவிடலாம்.

சில்லரை வியாபாரிகள் மொத்தமாய்ச் சேரும்போது, ஏஜண்டுகள் சமாளிக்க முடியாமல் திணறிப் போவார்கள்.

சில நேரங்களில் மரண அடி வாங்கவேண்டியிருக்கும் ஏஜெண்டுகள்.

பாதிக்கப்பட்டுவிட்டோமே என லோடு மேனையோ, டிரைவரையோ எவரையுமோ கடிந்துகொண்டுவிடவும் முடியாது.

தொடர்ந்து ஊறல் சரக்கு ஏற்றிப் பழி வாங்கிவிடுவார்கள்.

நட்டத்தை ஜீரணிக்க வேண்டும்.

சரக்கு பவுன் போல வரும்போது, இழந்த நட்டத்தை ஈடு கட்ட வேண்டும்.

கும்பலில் குறைத்துக் கேட்ட சில்லறை வியாபாரி தனியாக வரும்போது முறுக்குக் காட்ட வேண்டும்.

“சங்கத்தலைவனா கடன் தாரான். நான்தானே தாரேன் உனக்கு…”

சொல்லிக்காட்டவேண்டும்.

அப்படி-இப்படி ,அகா-சுகாக் காட்டவேண்டும்.

உதட்டில் புன்னகையும் உள்ளத்தில் கள்ளமுமாய் உலவ வேண்டும்.

இரண்டுநாள் தாங்குமென்றால் கிராக்கி காட்ட வேண்டும்.

இன்றைக்கே தாங்காது என்றால் வந்த விலைக்குத் தள்ளிவிடவேண்டும்.

கத்திமேல் நடக்கிற சமாச்சாரம் வாழைத்தார் வியாபாரம்.

தார் ஏற்றும்போது மிகவும் கவனம் வேண்டும்.

தவறினால் இறக்குகிற இடத்தில் சிக்கல்.

சருகு பரத்தும் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு சரக்கு ஏற்ற கங்காணி வருவான்.

“அய்யா.. நேந்தரம்தாரு” என்பான்.

கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருக்கும் முதலாளி சிலேட்டுப் பலகையில் ‘உ’ எனப் பிள்ளையார் சுழி போடுவார்.

அடிக்கோடிடுவார்.

‘நெந்தரம்’ என்று பால் குச்சியால் எழுதுவார்.

அந்த நேரத்தில், அறிவாளை பூமியில் வைத்துக் கண்மூடிப் பிரார்த்திப்பான் கங்காணி.

வரிசையாக நிறுத்தப்பட்ட வாழைத்தார்களில் ஒன்றைக் ‘சரக்’கெனச் சீவுவான்.

“லாபம்…!”

வாய் உரத்துக் சொல்லும்.

“ரெண்டேய்… மூணேய்…” என்று அடுத்தடுத்து சீவக்கொண்டே செல்வான் கங்காணி.

சீவச் சீவ , ஒருவன் தூக்கிவிடுவான்.

வாழைச் சருகால் செய்து தலையில் கட்டிக் கொண்ட சும்மாட்டில் வாழைத்தார் வாகாய் உட்காரும்.

தலையிலிருக்கும் வாழைத்தாரை, லாரிமேல் நிற்கும் லோடுமேன் லாகவமாய் வாங்கி வசம்பார்த்து அடுக்குவான்..

பிலேடு கணக்காகத் தீட்டப்பட்டப் பித்தளைப் பூண் போட்ட வாழைக்கொல்லை அறிவாளால் ‘சரக்… சரக்…’ எனச் சீவுவதைப் பார்க்கப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும்.

சீவும்போதே முதலாளி சிலேட்டுப் பலகையில் கோடு போட்டு கணக்கு செய்துவிடுவார்.

தகரத்தில் தலைகீழாய் இனிஷியல் போட்ட மோல்டு அச்சு வைத்திருப்பார்கள் சில முதலாளிகள்.

சீவியதும் தார்க் கட்டையில் அந்த அச்சைப் பதிப்பான் ஒருவன்.

பால் உறைந்ததும் வயலட் வண்ணத்தில் இனிஷியல் தெரியும்.

சமயத்தில் சந்தேகம் வந்தால் சீவிச்சாய்த்த வாழைக்கட்டைகளை மீண்டும் எடுத்து எண்ணிச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வார்கள்.

கோஹினூர் காபியிங் பென்சிலால் கட்டையில் இனிஷியல் எழுதும் எஜமானர்களும் உண்டு.

சில நேரங்களில், வாழைத்தார் ஏற்றியதும் சருகுகள் பரப்பித், தார்பாய் மூடிக் கட்டும்போது உதவிச் செய்வான் டிரைவர்.

வாழைத்தார் ஏற்றும் நாட்களில் குழந்தைகள் குதுகலமாய் இருக்கும்.

கும்பலாக அங்கு வரும் குழந்தைகள் சீவிப் போட்ட வாழைக்கட்டைகளை வாழைத்தாராக பாவித்து அடுக்கி வைப்பார்கள்.

சைக்கிளை கொண்டு வந்து நிறுத்திக் கொண்டு வாயால் “பூ..ம்… பூம்…” என்பான் ஒருவன்.

‘ராலி’ வந்துருச்சுண்ணே!” என்பான் மற்றவன்.

கேட்டுக் கொண்டிருக்கும் சிறுவன் அங்கே பாதி தரையில் பதிந்த ஒரு பாறாங்கல்மேல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு மீசையை முறுக்குகிறார்போல் பாவனையுடன் பார்ப்பான்.

“சருவு போட்ரா மொத”

அதட்டும் குரலில் சொல்வான்.

“சரிங்க முதலாளி”

சொல்லியபடியே சருகுகள் சிலவற்றை சைக்கிள் கேரியரில் வைப்பான் அவன்.

“ராலியேத்து …”

முதலாளியிடமிருந்து உத்தரவு வரும்.

சீவுவதைப் போல ஒருவன் நடிப்பான்.

மற்றவன் கட்டையைத் தூக்கிக் கேரியரில் வைப்பான்.

“எழுபது மொந்தன், முப்பது ரஸ்தாலி…!” என்று லாரிக்காரனாய் நடிப்பவன் கணக்கு ஒப்பிப்பான்.

பையில் இருந்து தட்டிச் சமமாக்கப்பட்ட வட்டமான சோடாமூடிகள் சில்லறையாகவும், சிகரெட் அட்டையைக் கிழித்து எழுதப்பட்டவை ரூபாய் நோட்டுகளாகவும் டிரான்ஸாக்‌ஷன் நடக்கும்.

பணத்தை எண்ணிக் கல்லாவில் போட்டதும், லாரி போக அனுமதிப்பார் முதலாளி..

“அடுத்த ராலி வரச்சொல்லு…!”

வேறு ஒருவன் சைக்கிள் தள்ளிக்கொண்டு வருவான்.

முதலாளி மாறுவான்.

குறிப்பாக விடுமுறை நாள்களில் வாழைத்தார் ஏற்றி விட்டால் கிட்டத்தட்ட இருபது முப்பது ராலி விளையாட்டுக்கள் விளையாடிவிடுவார்கள் சிறுவர்கள்.

மனித உறவுகள் அற்புதமானவை. ஆழமானவை.

அதன் சூட்சுமம் ஒரு ரசவாதம்.

எப்போது, எதற்காக, யாருக்கு, யார்மேல் அன்பும் காதலும் மரியாதையும் பாசமும் படரும் என்பது எவரும் அறியா பிரும்ம ரகசியம்.

ஒருவரைப் பிடித்துவிட்டால், ஒருவரோடு மனதால் இணைந்துவிட்டால், செய்யும் தவறுகள் கூடச் சரியாகத் தெரிகின்றன.

பிடிக்காதவர் எனில், முழுக்க முழுக்க சரியேச் செய்தாலும் மனம் ஒப்புவதில்லை.

தேடித் தேடித் தவறு சுட்டுகின்றன.

அல்லூர்ச் சந்தைக்குச் சென்று சுமையோடு திரும்பினார்கள் விவசாயக்கூலி சின்னப்பொண்ணு, தவசமுத்து, தனவேலு, கொளஞ்சி நால்வரும்.

அந்தனூர் ரயில்வே கேட் தாண்டி, பெரியவாய்க்காலுக்கும் எல்லையம்மன் கோவிலுக்கும் இடையே கீழண்டை நிற்கும் புளியமரத்தடியில் நின்றார்கள்.

கைச்சுமையையும், தலைச் சுமையையும் இறக்கி முண்டு முண்டாய் எழும்பி நிற்கும் வேரடியில் வைத்தார்கள்.

குதறிப்போட்டாற்போலக் கிடக்கும் கோவில் சம்பாக் காணியைப் பார்த்தார்கள்.

உள்ளத்தில் ஏறியது சுமை.

சின்னப்பொண்ணுவுக்குத் துக்கம் எகிறிக்கொண்டு வந்தது.

‘எப்படிப் பொன்போல விளைந்த நிலம்…! இப்படிக் கிடக்கிறதே…!’

ஆதங்கம் வந்தது.

குமுறியது மனசு.

கன்னிவாய்க்கால் மூலையில் உயர்ந்து நிற்கும் பனைமரத்தடியில்தான் நிற்பார் மாதய்யா…

பாட்டுக் கட்டுவார்.

பகடி பேசுவார்.

சின்னப்பொண்ணுவை இன்னதுதான் என்றில்லை. எதுவும் சொல்லிக் கலாய்ப்பார்.

காரியவாதமாய்ப் பழகும் மனிதர்களிடம் சகமனிதன் ஒட்டுவதில்லை.

பாசமாய்ப் பழகும் மனிதர்களோடு விலகாமல் பலமாய் ஒட்டிக்கொண்டுவிடுகிறது மனித மனசு.

இந்தக் காணியில்தான் எத்தனையெத்தனை எதிர்ப்பாட்டுக் கட்டியிருப்பாள் சின்னப்பொண்ணு.

மாதய்யாவைக் கண்டுவிட்டால் அவளுக்குக் கொட்டாட்டம்தான்.

கடைசீயாக அந்த வயலில் நடைபெற்ற நடவு நினைவில் வந்தது அவளுக்கு.

பனைமரத்தடியில் கிடந்த சிமிட்டிக் கட்டையில் உட்கார்ந்திருந்த மாதய்யாவின் கணீர்க் குரல்.

“எவடீ அவ சின்னப் பொண்ணு…”

“சின்னப் பொண்ணுக்கு என்னா வெச்சிருக்காம் இப்போ…?”

“எலே மருதை…!”

“சொல்லுங்கய்யா…!”

“சம்பாக் காணீல நடவுதானே நடக்குது…!”

“ஆமாங்கய்யா…!”

“சபாநாயகர் சந்நிதீல நட்டுவம் ஆடுறாப்ல இருக்கேனு கேட்டேன்…!”

“ஆட்டம் போட்டு நட்டாலும் அதிகக் குத்து நட்டது நான்தேன்; ‘ஹு..க்.. கூம்…!’ என்று கழுத்து திருப்பி, உதடு கோணி நொடித்தாள்.

யாரும் எதுவும் பேசவில்லை; அவளேத் தொடர்ந்தாள்.

“கண்மூடி நிக்கிறாகளா,

கண் பார்வை மங்கிப்போச்சா

கேட்டுச் சொல்லு மருதண்ணே…!”

“தன் வாயாலயே மாட்டுது பாரு மருதை…!” என்று சொல்லிப் பலமாய்ச் சிரித்தார் மாதய்யா.

சிரிப்பு அடங்கியதும் சொன்னார்.

“ஒரு நாத்து நடுற இடத்துல, நாலு நாத்து சேத்து வெச்சி நடுறதைப் பாத்துத்தான் கேட்டேன். அதுவே ஒத்துக்கிடுச்சி.”

“ … … … … … … … …”

“சின்னப்பொண்ணு கணக்கா நாத்து நட்டா, பாதி வயலுக்குதானே நாத்து வரும். மீதி இடத்துல மேடை போட்டு நாட்டியம் ஆடுவளோ…?”

கேட்டுச் சொல்லு மருதை.

மருதை தவிப்பான். குனிந்து சிரிப்பான்.

அடிக்கடி மாதய்யாவுக்கும் சின்னப்பொண்ணுக்கும் ஏற்படும் வாக்கு வாதத்தை எல்லோரும் ரசிப்பார்கள்.

சில நேரங்களில் தாத்தா, பேத்தியிடம் பாசத்தோடு விளையாடுவதுபோல இருக்கும்.

பெற்ற மகளிடம் பொய்க்கோபம் காட்டுவதாய் இருக்கும்.

நண்பனாய்,

மந்திரியாய்

நல்லாசிரியனாய்

பண்பிலே தெய்வமாய்

பார்வையிலே சேகவனாய்..

மாதய்யா இருப்பது அவரிடம் பழகியவர்களுக்குத்தான் தெரியும்.

பெற்ற மகளாய்த் தன்னைப் பார்த்த, மாதய்யாவின் நினைவு மனதை அழுத்தியது.

சம்பாக் காணி இப்படி நாசக்காடாவதற்குக் காரணமான கிட்டாவய்யாவின் மீது வெறுப்பும் ஆத்திரமும் வந்தது.

கைச்சுமை, தலைச்சுமையோடு, மனச்சுமையும் ஏறியது.

மேலே நடந்தார்கள்.

வாழைத்தார் லோடு ஏற்றிக்கொண்டு லாரி சென்றதற்குச் சாட்சியாக எல்லையம்மன் கோவில் முன் பின்னிப் பிணைந்துக் கிடந்த வாழைத்தார்க் கட்டைகள், பச்சை வாழைக் கிழிசல்கள், சருகால் சுற்றிய சும்மாடுகள், புகையிலை, சீவல் கவர்கள், குழந்தைகளின் விரல்மேடுபோல் கிடக்கும் பிய்த்தெறிந்த நுனி சீப்புகள்…

கடந்து சென்றபோது எதிரே வந்தார் கிட்டாவய்யா.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள்.

அது சுயநலமாக ஆத்திரப்படுபவனுக்கு மட்டுமே பொருந்தும் சொலவடை.

சமுதாயக் கோபமும் ஆத்திரமும் பொங்கும்போது புத்தி விழித்துக்கொள்ளும்.

ஊருக்கெல்லாம் தெரிந்த உண்மையான குற்றவாளியின் மீது சினம் ஏறும்போது, ஆத்திரக்காரனுக்குப் புத்திக் கூர்மையாகிறது.

‘குற்றவாளியை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டும்…’ என்ற வெறி உந்துகிறது.

‘எப்படிப் பிடிக்கலாம்…’

மனம் சிந்திக்க,

‘எப்படிப் பொறி வைக்கலாம்…’

என புத்தி யோசிக்கிறது.

‘பசுந்தோல் போர்த்திக்கொண்டு அலைகிற இந்த ஓநாயை ஊர்சிரிக்கச் செய்யவேண்டும்…!’

மூர்க்கமான உந்துதலால் தனியாக மாட்டியக் கிட்டாவய்யாவைப் பழிவாங்கத் துணிந்தாள் சின்னப்பொண்ணு.

“ … … … … … … … …”

பாழ்ப்பட்ட வயலையும், கிட்டாவய்யாவையும் மாறி மாறிப் பார்த்தாள்.

‘திடீரென்று ஒருவரை எப்படித் தாக்க முடியும்…?’

வழி முறைகளை யோசித்தாள்.

அவர் கவனத்தைத் தன் வசம் திருப்ப ஒரு யுக்த செய்தாள்.

‘க்…ஹ்………த்… தூ…” என்று காரித் துப்பினாள்.

“எதுக்க ஆளு வருதுல்ல… கவனிச்சுத் துப்பவேண்டியதானே…!”

சுள்’ளென்று முகம் காட்டி எரிந்து விழுந்தார் கிட்டா.

“நான் துப்புறது தெரியுதுதானே…! கவனிச்சி வரவேண்டியதுதானே…!”

அதே அளவு சுள்ளாப்புடன் கடிந்தாள் சின்னப்பொண்ணு.

ஆத்திரப்பாட்டார் கிட்டா.

‘தன்னை இப்படிப் பேசிவிட்டாளே. தன் கௌரவம் போயிற்றே…’ என்றெல்லாம் சுயம் எழ எழ மாதய்யாவுக்கு ஆத்திரம் வந்த்து.

அவர் புத்தி மட்டாயிற்று.

“எவடீ அவ…! நான் யார்னு தெரியாம என் கிட்டே வாலாட்டுறே…?”

“யோவ்… உன்னை யாருன்னா தெரியாது…! ஊருக்கே உன்னை தெரியும்வே…! சம்பாக் காணிய மந்தக்கரையாக்கி குடி கெடுத்தவன்தானே நீ…! ”

“என்னாடீ மரியாதை மட்டில்லாம பேசுறே நீ…?”

“நீ மட்டும் என்னவாம். ஒரு பொம்பளையப் பாத்து வாடீ போடீன்றியே இது எந்த ஊரு ஞாயண்டா…?”

படிப்படியாக வார்த்தைகளில் மரியாதைக் குறைத்தாள்.

கிட்டாவய்யாவின் ஆத்திரத்தை உச்சத்துக்குக் கொண்டு சென்றாள்.

அடிக்கக் கை ஓங்கிவிட்டார் கிட்டாவய்யா.

“பொம்பிளைய அடிக்கறது என்னா பளக்கம்…”

தனவேலு கேட்டான்.

“பொம்பளையப் போட்டு இந்த அடி அடிக்கறியே…” என்றான் தவசமுத்து.

“செய்யாத குத்தத்தை ஜோடிச்சிப் பழிவாங்கறதும் குத்தம் செய்வதற்குச் சமம்தான்.”

ஒரு முறை மாதய்யா ஒரு பஞ்சாயத்தின்போது சொன்னது மனதில் வந்து உறுத்தியது.

உலுக்கிப் போட்டவாறு தலையைச் சிலுப்பினாள் சின்னப்பொண்ணு.

“ச்சீ…! நாம ஏன் இவ்வளவு கேவலமா நினைக்கறோம்…?”

“என்னாச்சு என்னாச்சு என்று கொளங்சீ…?” பரபரத்தாள். சின்னப்பொண்ணுவின் முதுகு தடவி விட்டாள்.

திடீரென்று அவள் முகத்தில் கண்ட உணர்வுப் பிரதிபலிப்பைக் கண்ட, தனவேலுவும், தவசமுத்துவும் என்னேவோ ஏதோ என்று பயந்துவிட்டனர்.

“ஒண்ணுமில்லாக்கா. ஒரு மாதிரி கேரியா இருந்துச்சு…!” என்று சமாளித்துவிட்டாள்.

சுற்றுமுற்றும் பார்த்தாள்.

கிட்டாவய்யாவை எங்கும் காணோம்.

எல்லாமே மனப்பிராந்தி என்று தெரிந்தது.

“அதர்மத்தை யாரும் அழிக்கவே வேண்டாம். அது தன்னைத்தானே அழிச்சிக்கும்…!”

மாதய்யா அடிக்கடி சொல்வது இப்போது சின்னப்பொண்ணுவின் மனதில் பிரதிபலித்தது.

புயல் வெள்ளத்துக்குப் பிறகு, கட்டுமானத் தொழில் செய்வோருக்கு ஏக கிராக்கி.

எங்கு பார்த்தாலும் ஓடு மாற்றுதலும், கீத்து பரப்புதலும், கட்டடம் கட்டுதலுமாக வேலைகள் தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தன.

ஊரில் இருந்த கீத்து சரவணன் கோஷ்டியும், முத்து கோஷ்டியும் எப்போதும், பிஸியாகவே இருந்தனர்.

சிலர் கலகலத்துவிட்ட ஓட்டுக் கட்டிடங்களை மொத்தமாகவோ, ஒரு சில பகுதிகளையோ ஒட்டுக்கட்டிடங்களாக மாற்ற முடிவெடுத்தனர்.

ஓட்டு வீடாக மாற்ற எண்ணம் கொண்ட கூரைக்கட்டுக்காரர்கள் வீடு பிரித்த இடத்திலிருந்து, பழைய ஓடுகள், உத்தரம், குத்துக்கால், கட்டைக்கால், அனந்தரம், வளை, சரம் எல்லாவற்றையும் செட்டாக நம்பர் போட்டு அப்படியே கொண்டு வந்து இறக்கிக்கொண்டனர்.

கொத்தனார்களின் கரணைகளுக்கும், ஆசாரிகளின் இழைப்புளிகளுக்கும் ஓய்வே இல்லை.

விவசாயம் பாதிக்கப்பட்டதால், விவசாயக் கூலிகள் மற்ற மற்றக் கூலி வேலைகளுக்குச் சென்றார்கள்.

கீற்று முடைந்தார்கள், சித்தாளாகிக் கட்டு வேலைக்குச் சேறு குழைத்தார்கள், சாந்து சுமந்தார்கள், கல் தூக்கினார்கள். கலவை போட்டார்கள்…

கலியன் தெருவில் புஷ்பவனம், கூரை வீட்டை ஓட்டு வீடாய் மாற்றினான்.

“கூரையப் பிச்சி எறிஞ்சிட்டு, ஓடு போட்டு மூடேன்..!”.

குந்தலாம்பாள் உட்பட பலபேர் கலியனிடம் யோசனைச் சொன்னார்கள்.

“ஒண்டிக்கட்டைக்கு இது போதும். ஒளுவாத இருந்தாப் போதும். மோட்டுல இருக்கறதால வூட்டுக்கு ஏதும் பாதிப்பில்ல. அடிச்ச காத்துல உச்சி மோடு பிச்சிக்கிட்டுப் போயிருச்சு. அங்கங்கே சொருகு கீத்து மட்டும் வெச்சி, உச்சி மோடு குத்திட்டாப் போதும்…!”

சொல்லிவிட்டான் கலியன்.

“ உச்சி குத்தவாண்ணே…?”

இரண்டு மூன்று முறை கலியனைப் பார்த்தபோதெல்லாம் கேட்டான் பந்தல் சரவணன்.

“எனக்கென்னா அவுசரம். செமந்த வேலையெல்லாம் முடிச்சிட்டுவா. சம்சாரிங்க வேலைங்களெல்லாம் முடியட்டும். கடேசியா நம்ம வேலை பாத்துக்கலாம்.”

தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தான் கலியன்.

கேட்டால் “அப்புறம் ஆகட்டும்” என்பான் கலியன்.

பந்தல் சரவணன் கலியனைக் கேட்காமலே கொட்டகைக்கு வேண்டிய கீற்று, பாளை, தேங்காய் நார்க் கயறு, மூங்கில்கள் என எல்லாவற்றையும் இரட்டைமாட்டு வண்டியில் கொண்டு வந்து இறக்கி விட்டான்.

கலியனால் இந்த முறை ஒத்திப்போட முடியவில்லை.

வேலை ஆரம்பித்தார்கள்.

மரத்தடியில் திரிசங்கு கட்டிலைக் கொண்டு வந்து போட்டான்.

நிம்மதியாக உட்கார்ந்தான் கலியன்.

கடந்த ஒரு வார காலமாக அப்படி ஒரு கடுமையான வேலை கலியனுக்கு.

உட்கார்ந்து கீத்து பிரிப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்தவன் லேசாகச் சாய்ந்தான்.

உடம்பு அலுப்பில் அறியாமல் கண் அசந்துவிட்டான் கலியன்.

“ஏலப் பொடி மணக்கும் – நீங்க

நின்ன இடம் பூ மணக்கும்.

கதம்பப் பொடி மணக்கும் – நீங்க

கெடந்த இடம் பூ மணக்கும்

ஏலப் பொடி வாசனைய

ஏனய்யா விட்டுப் போனீர்.

கதம்பப் பொடி வாசனைய

ஏனய்யாக் கடந்துபோனீர்…!”

தாரை தப்பட்டைகளில் பின்னணியில் ஒப்பாரி ஒலிக்க, ஆடி அசைந்துச் சென்றது யாத்திரை.

பஞ்சமுக வாகனத்துக்கு முன்னால்

ஒருத்தன் பூக்களை அள்ளி அள்ளி வீசினான்.

ஒருவன் பொறி கடலை இறைத்தான்.

சில்லறைக் காசுகளை இறைத்தபடி வந்தான் ஒரு ஆசாமி.

பொறிகடலைக்காரன் அவ்வப்போது வாயில் போட்டுக் கொறித்தான்.

சில்லறைக்காரன், சில்லறையை இக்கில் சொருகிக் கொண்டான்.

பூத்தூவி, வாயில் போட்டுக் கொள்ளவும் முடியாமல், இக்கில் செருகவும் முடியாமல் வாடினான்.

மலர் தூவுகிறவன் முகத்தில் வாட்டம்.

“பொன்னு உரு வட்டாவுல

பாயாசம் கொண்டுவந்தேன்…

பாயாசம் வேண்டாமுன்னு

பொன்னு ரதம் போறீகளே…

தங்க உரு வட்டாவுல

தல பாகம் கொண்டுவந்தேன்.

தல பாகம் வேண்டாமுன்னு

தங்கரதம் போறீகளே…!”

வைர உரு வட்டாவுல

வாய்க்கு ருசியாக் கொண்டாந்தேன்.

வா ருசிக்கு வேண்டாமுன்னு

வைர ரதம் போறீகளே…!”

மயானத்தை நெருங்கிவிட்டது வாகனம்.

திடீரென்று எழுந்தது பூத உடல்.

தலைமுழுதும் முடி பிடுங்கப்பட்டு, பிடுங்கப்பட்ட இடத்தில் ரத்தம் உரைந்து, முருக்கமரத்தில் திரண்டு நிற்கும் பிசின் போல் பல்வேறு அளவுள்ள கட்டிகளாகப் பளிச்சிட்டது.

நகம் இருக்க வேண்டிய இடத்தில் நகம் பிடுங்கப்பட்டு, ரத்தம் உறைந்து பொறுக்குத் தட்டியிருந்தது.

இடுப்பில் அரணாக்கொடி அறுத்து ரணகளமாகித் தொங்கியது.

ராட்சத உருவம்.

அருகில் போய் முகத்தை உற்று நோக்குகிறான் கலியன்.

மாதய்யா.

“அய்யா…”

கதறுகிறான் கலியன்.

கதறலுடன் சடாலென்று எழுகையில் கயிற்றுக் கட்டில் “க..ர்..ரெ..க்…” என ஒலி எழுப்பிற்று.

எழுந்து உட்கார்ந்த கலியனின் உடலில் நடுக்கம்.

கீத்துக் கட்டியாகிவிட்டது.

மோடு குத்தியாகிவிட்டது.

எல்லா வேலையும் முடித்துவிட்டு, குப்பைக் கூளங்களைக் கூட்டி எட்டக் கொண்டுபோய்க் கொட்டி எரித்தார்கள் ஆட்கள்.

நெருப்பில் கொட்டக் குப்பைகளை எடுத்துப் போனவன், கலியன் அதிர்ந்து எழுந்த சத்தம் கேட்டுக் குப்பைக் கூடையோடு அவசரமாய் அவன் முன் வந்தான்.

“என்னாச்சுண்ணே…?”

ஆதரவாய்க் கேட்டன்.

அதிர்ந்தான் கலியன்.

கவண் விட்டுக் கிளம்பும் கல்லாய், விருட்டென எழுந்து, அந்தக் குப்பைக் கூடையில் கிடந்த மஞ்சள் பையை டக் கென்று கையில் எடுத்தான்.

மாதய்யாவின் கடைசீ ஆசையை நிறைவேற்ற, சிதையைக் கலைத்து, அவருடைய நகம், முடி, அரணாக்கொடியையெல்லாம் வைத்திருந்த அந்த மஞ்சள் பையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் கலியன்.

‘இந்தக் கனா மட்டும் வரலேன்னா…?’

நினைக்க நினைக்க மிரட்சியாக இருந்தது கலியனுக்கு.

இப்படி பையில் வைப்பது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை என்பதை உணர்ந்தான் கலியன்.

உடனடியாக அயிலாண்டக் கிழவியைச் சந்தித்தான்.

நீண்ட நேரம் அவளோடு பேசினான்.

இறுதியாகக் கிழவி சொன்ன யோசனைதான் சரியெனப் பட்டது கலியனுக்கு.

– தொடரும்…

விகடன் மின் இதழான மை விகடன் இதழில், 02.05.2022 அன்று கலியன் மதவு என்ற சமூக நாவல் தொடங்கித் தொடர்ந்து 28.01.2023 ல் அதை நிறைவு செய்யும் வரை, அதைச் சிறப்பாக வெளியிட்டு ஊக்குவித்த ஆனந்த விகடன் ஆசிரியர், மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் – ஜூனியர் தேஜ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *