சா நிழல்
கதையாசிரியர்: கே.டானியல்
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 15, 2025
பார்வையிட்டோர்: 35
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சாமி சாமி, தட்டுவாணிப் பய எம் முதுகுத் தோலை உரிச்சிட்டாஞ் சாமி சாமி சாமி….”
விம்மிப் பொருமிக் கொண்டே காளி என் முன்னே வந்து நிற்கிறாள். உமிச் சுருக்கெறிந்து, மதமதப்பாக ஆனால் பட்டுப் போல இருக்கும் முதுகுப் புறத்தைத் திரைநீக்கி அவள் காட்டுகிறாள்.
அந்த மதமதப்பிலே பார்வையைப் புதைத்துக்கொண்டு நான் அவஸ்தைப்படுகிறேன்! அவள் விம்மும் ஓசை என் செவிக்குள் புகுந்து கொள்ள முடியாமல் எவ்வளவு நேரந்தான் காத்து நிற்கிறதோ!
“ஐயோ சாமி, கழுவாணிப் பய, தட்டுவாணிப்பய என்னை ஒதைச்சிட்டாஞ் சாமி, எம் முதுகுத் தோலை உரிச்செடுத்திட்டாஞ்சாமி…”
காளி இப்படி மீண்டும் மீண்டும் கத்திக் கொண்டே இருக்கிறாளா?
நான் இப்போது அவள் முகத்தைப் பார்க்கிறேன். அதில் தோன்றி நெளியும் வர்ணஜாலக் கோடுகளைப் பார்க்கிறேன்.
“ஐயோ நான் அழுதிட்டே இருக்கேன். நீங்க சிலையாட்டாமா இருந்திட்டே இருக்கியளே சாமி, கழுவாணிப் பய வாறானே சாமி, தட்டுவாணிப்பய வந்து என்னை ஒதைச்சு முதுகெழும்பை முறிச்சிடப் போறானே சாமி! சாமி, சாமி நீங்கதாஞ் சாமி இந்த மானங்கெட்ட பயலுக்குப் பாடங் கற்பிச்சுக் கொடுங்க, சாமி, சாமி…”
காளி நியாயம் கேட்கும் படியா என்னைக் கேட்கிறாள்!
சுருண்டு, நெளிந்து, தயங்கி, சாகசம் புரியும் அவளின் உடல் துவழ்ச்சிகளுக்கு என் கண்ணின் மணிகளைத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு நான் கபோதியாக இருக்கிறேனா?
“காளி, டீயே காளி….!”
மறமறத்த அகங்கார வெறிக்குரல் கேட்கிறது. அது சற்றுத் தொலைவிலிருந்துதான் கேட்கிறது. அது சுடலையின் குரலா? நான் ஏன் மரத்துப்போய் இருக்கிறேன்? காளியை அங்கமங்க மாகப் பிய்த்துத் தின்று கொண்டிருக்கிறேனா?
கேட்பது கடலின் இரைச்சலா? காளியின் பெருமூச்சுக்களா?
“டீயே…. டீயே காளி….” என் காதுச் சவ்வுகளைத் துளைப்பது கடலின் குரலா? குத்தூசியின் முனைகளா?
நான் திடுக்குற்றுச் சதாகரித்துக் கொள்கிறேன்.
சற்றுத் தூரத்தில் நடைபாதையின் திருப்பு முனைக்கு அப்பால் இறுமிக் கொண்டு நிற்பது சுடலை, காளியின் கணவன் வைத்திய விடுதியின் தோட்டி.
“டேய் சுடலை, வாடாய்ங்கே!”
அதிகாரத்துடன், துணிச்சலுடன் அழைக்கின்றேன். இந்தவேளை அவனை நான் அப்படித்தான் அழைக்கவேண்டும். குடித்துவிட்டு, அதன் போதைக்கு வசப்பட்டு, நிலை தடுமாறி நிற்கிறான். இதமாக அழைத்து விட்டால் வந்து விடுவானா? ஆனாலும் நான் அவனை ஏன் இப்படி அழைக்கின்றேன்? அவனிடம் எனக்கு ஏன் இந்த அதிகாரம்? இந்த அதிகாரத்தை எனக்கு யார் தந்தார்கள்? “சாமி, அளந்து பேசுங்க சாமி, எனக்குப் பாலுஞ் சோறும் தந்தியா சாமி?” என்று அவன் கேட்டுவிட்டால்….
அவன் என்னை அப்படிக் கேட்கமாட்டான். அப்படிக்கேட்கும் துணிச்சல் அவனுக்கு எங்கே வரப்போகிறது! என்னை எதிர்த்து அவனால் ஒரு வார்த்தை தன்னும் பேச முடியுமா, என்ன?
நான் இருக்கிறேன். நான் ஒருவன் இல்லாவிட்டால் அவன் எங்கே இருப்பானோ? சுடலை என்ற ஒருவன் இருந்தானே’ என்ற நினைவே இந்த வைத்திய விடுதிக்கும் எனக்கும் விடுபட்டுப் போயிருக்கும்’ அவனை நான் பல தடவைகள் பாதுகாத்திருக்கிறேன். இப்போதும் அதையேதான் செய்து வருகிறேன்.
பயல் என்னிடம் எத்தனை உதையை வாங்கித் தின்றிருக்கிறான்!
அவனுக்கு உணர்வு வந்திருக்கிறது!
மடைப்பயல்! வீணாக எனக்கும், தனக்கும் வேதனைகளைத் தேடிக்கொள்கிறான். எப்போதுமே இவன் இப்படித்தான் நடந்து கொள்கிறான்.
“சுடலை, நீ ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாய்?” என்று அவனை எத்தனையோ தடவைகள், அனுதாபத்துடன் கேட்டுப்பார்த்து விட்டேன்.
“உனக்கு வெட்கமாக இல்லையா?” என்று கண்டித்துப்பார்த்து அலுத்துப் போய் விட்டேன். இவைகளுக்கு அவன் சொல்லும் பதில்களோ மிகவும் வேடிக்கையானவை; வினோதம் நிறைந்தவை! அந்தப் பதில்களை நான் கேட்டு என்னுள்ளேயே கிரகித்துக் கொள்வேன். அப்படித்தான் ரசிக்கத் தோன்றும். உன் மனதுக்குள் சிரிப்பாய் வரும். ஆனாலும் நான் இந்த ரசிப்பையும் சிரிப்பையும் வெளியே கொட்டிவிட முடியுமா? அப்படிக் கொட்டிவிட்டால் அவனைக் கண்டித்து வழிநடத்துவது தான் எப்படி?
அவனை நான் மிரட்டுவேன். முறைப்பேன், உதைப்பேன், எதிர்த்து ஒருவார்த்தை! கைகட்டி வாய்பொத்தி, பரிதாபகரமாக நிற்பான், செய்யக் கூடாததை செய்யவேண்டா மென்பதைச் சதா சதா திருப்பித்திருப்பிச் செய்து கொண்டே இருப்பவன் மேல் பரிதாபப்படுத்துவதில் என்ன அர்த்தமிருக்கிரது.
நீலவானம் வில்லாகி கடலின் அந்தத்தைத் தொட்டு நிற்கிறது.
அந்ததற்கும் அப்பால் தொடுவானக் கரையோடு தனக்காக ஒருத்தி காத்திருப்பதாக சுடலை நினைத்தபோதெல்லாம் சொல்லுவான்.
கடற் பரப்பின்மேல் அந்தரத் தியானம் செய்யும் பாய்மரக் கோடுகளை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே சிலைபோல விறாந்தையின் படியில் உட்கார்ந்திருப்பான். பெருமூச்சின் பாரத்தைச் சுமக்க முடியாமல், அவனின் மார்பகங்கள் உயர்ந்து தாழும்போது கடலின் அந்தத்திற்கப்பால் இருக்கும் அந்தப் பெண்ணை அவன் கெஞ்சி அழைப்பது போன்ற குரல் கேட்கும்.
எனக்கும் பேச்சுத் துணைக்கு யார் இருக்கிறார்கள்? சுடலையோடு பேச்சுக்கொடுத்து நேரத்தைக் கழித்துக் கொள்வதில் ஒருவித மகிழ்ச்சியும் இருக்கிறது.
“சுடலை, பெருமூச்சு விட்டுக்கொண்டு ஏன் செத்துப் போகிறாய்?” என்று நான் கேட்பேன்.
“பொம்பிளைப் பேய் என்னை ஏமாத்துது சாமி” என்பான் ஒரு நாள்.
“பொட்டைச் சிறுக்கி ராத்திரி நித்திரையிலை வந்து முந்தானை விரிச்சு என்னைக் கொண்டிட்டுது சாமி” என்பான் இன்னொரு நாள்.
வேறு ஓய்ந்து போன நேரங்களில் கம்பர்மலைக் கள்ளுத் தண்ணியை மூக்குமுட்டக் குடித்து விட்டு வந்து பேசாத பேச்செல்லாம் பேசுவான்; கொச்சையாகக் கொச்சையாக; கொச்சை கொச்சையாகப் பிதற்றிக்கொண்டே இருப்பான்.
இப்போதும் நானும் ஒண்டியாகத்தான் இருந்தேன்.
எனக்காக ஒருத்தி இருந்தாள்.
அவளுடன் நான் கழித்து விட்ட இன்பமான நாட்களையெல்லாம் நினைத்துப் பார்ப்பேன். அந்த காரமான நினைவுகள் வந்த போதெல்லாம் என் துர்ப்பாக்கியத்தை நொந்துகொள்வேன். சிறிய வைத்திய சாலைக்குள் அடைபட்டுக்கிடந்த மூன்றாண்டு காலத்துள் நான் எத்தனையைக் கண்டுவிட்டேன்…..
சுடலையை நான் திட்டுகிறேன், மிரட்டுகிறேன், நையாண்டி செய்கிறேன். சுத்த ஹம் பக். என்னை நான் மறந்து விடுகிறேன். என்னை எனக்குள்ளேயே மறைத்துவிட முயற்சிக்கிறேன். சேட்டும் சூட்டும் அணிந்து கொள்கிறேன். ‘ஸ்டெலஸ்கோப்’ பின் இரு கைகளையும் விரித்து கழுத்தோடு இணைத்து உறவாடவிட்டு, அந்தப் பவிசுக்குள் என்னையும், எனது அசிங்க உணர்வுகளையும் மறைத்துக் கொள்கிறேன்.
எல்லோரும் எனக்கு விநயம் செய்கின்றனர். என் வாயசைப்பிற்காக காத்திருக்கின்றனர். நீலக்கடலின் அலைத் தளிர்களை அணைந்து வரும் காற்று என் உடலின் மயிர்க்கண்களால் ஊடுருவுகிறது. இந்த ஊடுருவலால் நான் அவதியுற்ற நாட்களையும், வியவஸ்தைக்குப் பணிந்து போகத் துடித்த பொழுதுகளையும் என்னால் கணக்கிட முடிந்ததா?
அந்தி வானக் குமிழிக்குள் மஞ்சள் பொழுது சரிந்து போகும் போதெல்லாம், அடிவானச் செழுமையின் பிரதிபலிப்பு கடற்கரை மணல் பரப்பில் படிந்து கிடக்கிறது. கன்னத்தோடு கன்னத்தை உரச வைத்துக் கொண்டு மனித சோடிகள் வருகின்றன. போகின்றன. மணல் பாளத்தில் விழுந்து புரள்கின்றன. நீர் வாழும் ஜீவசோடிகள் கடலுக்கடியில் விரகதாபம் கண்டு கட்டிப் புரள்கின்றனவோ! கருக்கல் வேளைகளில் எல்லாம் கடல் பரப்புப் பொங்கி எழுந்து கீழ்மடிந்து பெருமூச்சுசிடுகிறது.
கருக்கல்வேளைகளில் எல்லாம் தன்னந்தனியாக – ஒண்டியாக, ஆனால் செத்துப்போன என் காதலியின் மானசீக உருவத்தோடு உரசிக்கொண்டு அந்த மணல்பரப்பில் நான் நடந்து வருவேன்.
சுடலை, மூக்கு முட்டக் குடித்து விட்டு, கடற்கரை மணல் பாளத்துள் நெஞ்சைப் புதைத்துப் புரண்டுகொண்டு பிதற்றுவான். அமானுஷ்யமான பிரதேசத்தின் மணல் பரப்பில் செருக்குண்டு கிடக்கும் கட்டையைப் போன்று அவன் கிடக்கும் கோலம்…….
பரிதாபத்துக்குரிய அவன், அக்கரை சென்று அவனுக்காகக் காத்திருக்கும் அவளை அழைத்துவர, அரசினரிடம் அனுமதி பெற்றுக்கொடுத்து அனுப்பி வைத்தேன் ஒருநாள்.
சுடலை அக்கரைக்குப் போய் விட்ட பின்னர், அவள் வீடு போய்ச் சேர்ந்துவிடலாம் என்ற நேரத்திலிருந்து, அவனையும் அவனது ஆசைப்பத்தினி காளியையும் சேர்த்து வைத்துக்கொண்டு என் மனக்கண்கள் கண்டவையெல்லாம்…. சீ, அசிங்கமானவை!
சமூகத்தால் அசிங்கமாகக் கணிக்கப்பட்டவைகளைத் தனியாக இருந்து யோசிக்கும் போது, சட்டென அவை அசிங்கமாகவே படுகின்றன. அது மனித மனதோடு ஒட்டிப்போய்விட்ட நோய் ஆனாலும் அந்த அசிங்கத்தைதான் நினைத்துப்பார்க்க ஆசையும் வருகிறது. இதையேதான் நானும் நினைத்து, நினைத்துப் பார்க்கிறேன். இது எனக்கு வேடிக்கையாகவும் இருக்கிறது. சுடலை வெறும் தோட்டிதான். ஆனாலும் தனியாக அவனை நினைத்துப்பார்க்கும் போது என்றுமே ஏற்பட்டிராத ரம்மிய உணர்வு, அவனையும், அவனின் அவளையும் இணைத்து வைத்துப் பார்க்கும் போது ஏற்படுகிறது. வெகு தொலைவுக்கப்பால் கடலின் கொடூரம், மேகத்தோடு தழுவிப் பசுமையடைவதைப் போலத்தானா இந்த ரம்மியமும்?
மனதின் விருப்பிலே பசுமை நிறைந்த ரம்மியம் தெரிகிறது. ஆனால் அடிமனதுக்குள்ளே நடப்பதெல்லாம் வெறும் குழப்பந்தான். போலியாகவோ, தற்செயலாகவோ என்னால் கட்டிக் காத்து வரப்பட்ட – வரப்படுகிற என்று மனதுக்குத் தெரிந்த நிலையிலிருந்து நான் தள்ளப்பட்டு விடுவேனோ என்று எண்ணக்கூடிய அளவுக்கு என் உணர்வுகளெல்லாம் மிருதுவாகிட்ட பின்பு…
நர்ஸூகள் வருகிறார்கள். எனக்கோ அவர்கள் எனக்காக ஏங்கி நிற்பது போன்ற பைத்தியக்கார நினைவுகள் கடலின் பெரு மூச்சுக்கள் சதா கேட்டுக்கொண்டே இருக்கின்றன. சந்தியா வேளையின் மென்மையான சூடு என் ஒருவனுக்கு மட்டும்தான் நெருப்பாக இருக்கிறதா? இரவின் மெளனம், தன் பஞ்சுக்கரங்களை என் சர்வாங்க மயிர்க்கண்களுக்கு மேலாகவும் நகர்த்திவிட்ட நாட்களையெல்லாம் நான் கணக்கிட்டேனா?-
சின்னஞ்சிறிய வைத்திய விடுதியில் சுமார் இரண்டாண்டு காலம் என்னோடு கூடவே இருந்து எனக்குப் பேச்சுத் துணை புரிந்த சுடலை என்னைப் பிரிந்து அக்கரை போய்விட்ட பின்பு வெறுமை அடைந்துவிட்ட என்னை நினைவுகள் சரிவுக்கு தள்ளிக்கொண்டே வந்தன. அந்தச் சரிவிலே நான் பாதி வழி போய்விட்டேன்.
கடைசியில் சுடலை வந்தான். மனைவி காளியையும் கையில் பிடித்துக்கொண்டு வந்து விட்டான்.
காளி!
இவள் ஒரு தோட்டிக்கு மனைவியா? நான் நம்பித்தான் ஆகவேண்டும்! நெளிந்து, சுருண்டு, வளைந்து, பணிவாக ஒதுங்கி, நாணத்தோடு அவள் என் கண்முன்னே நின்றாள்.
“இதுதாஞ்சாமி என் காளி” என்று சுடலையும் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டான்.
“கும்பிடுறன் சாமி!”
நாதவெள்ளத்திலே தோய்ந்து, அகாரச் சுழிவு சுழித்து வந்த குரல்….
விஸ்வாமித்திரருக்கு முன்னால் காளியை நிற்கவைத்து ‘சுவாமி’ என்று ஒரு வார்த்தை பேச வைத்திருந்தால், உடலை வளைத்து கால்களை மிதித்து, கழுத்தை முறித்து, ஜடையை வீசி, இடையைத்துவட்டி, புருவங்களை நெறித்து, இதழை விரித்து, கண்களை வெட்டி மேனகை படாதபாடு பட்டிருக்க வேண்டாமே!
நான் பார்த்த பார்வையின் தாக்கத்தை அவளால் தாங்க முடியவில்லை. காளி தலையை தொங்கப்போட்டுக் கொண்டாள். விஸ்வாமித்திரரும் ஒரு நாள் நிஷ்டை கலைந்து இப்படித்தான் மேனகையை பார்திருப்பார். ஆனால் மேனகை மட்டும் காளி போலத் தலையை தொங்கப்போட்டுக் கொண்டாளோ என்னவோ!
“உயர்தர மனிதருக்கும், கீழ்தரமனிதருக்கும், உருவ, உடமைப்புகளின் வேற்றுமை, பார்த்தாலே பட்டென்று தெரிந்துவிடும்” என்பார்கள் ஆனால் காளியைப் பொறுத்த வரை … விடுதியின் ஒதுக்குபுறமாக கிடந்த அறை ஒன்றுக்குள் அடங்கிப் போய்க்கிடந்த சுடலைக்கு இப்போது வசதியோடு கூடிய அறையொன்று வேண்டிக்கிடந்தது. அவன் அப்படி ஒன்றும் கேட்டுவிடவில்லை. நான் அப்படித்தான் செய்தேன். என் அறையின் பின் விறாந்தைக்கு நேராகச் சற்றுத் துாரத்தில் காளி குடும்பம் நடத்த வைத்துவிட்டேன்.
ஓய்ந்த போதெல்லாம் விறாந்தையில் இருந்து காளி குடும்பம் நடத்துவதைப் பார்த்து ரசிக்கிறேன். உலகம் இருண்டு போய்க்கிடக்கும் போதெல்லாம், விறாந்தையில் தனித்திருந்து அங்கேயே வெறித்து நோக்குகிறேன். ஏதோ ஒன்றை இழந்துவிட்டு அதை எடுத்துக்கொள்ள நினைத்துக்கொண்டு அவதியுறுவதைப் போல, விந்தையான பரிதாபகரமான உணர்ச்சி மனதுள் ஊறிக் கூத்தாடுகின்றது. ஏன் தான் இப்படியோ?
சுடலை இப்போதெல்லாம் எனக்கு முன்னே எப்போதுமே தோன்றிக் கொண்டிருக்க மாட்டான். இப்போது அவனுக்கு இது முடியாது.
காளி என்றொருத்தி அவனுக்காக காத்திருக்கிறாள்.
சுடலை இப்போது முன்பைவிடத்திருத்தமாக இருக்கிறானா?
வெயர்வைப் பசியைப் போக்கி, உடலைப் பட்டுப் போல வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசையா அவனுக்கு வருகிறது!
மேலுதட்டில் கற்றையாக வளர்ந்து, கீழுதட்டோடு தொட்டு, வெற்றுச்சாயம் படிந்து கிடக்கும் முரட்டு மீசையை நைசாக நறுக்கிவிட்டும், காதை மூடிப்படிந்து கிடக்கும் மயிர்த்திரட்சிகளை ஒதுக்கி விட்டும், பஞ்சாகப் பறந்து காட்டும் தலைமுடியை வாரியும் விட்டுக்கொள்கிறானா? ஓய்வு நேரத்தில் உடுப்பையாவது துவைத்துச் சுத்தமாக வைத்துக்கொள்கிறானா? சுபாவமான குரலிலுள்ள கடுமையை – முரிட்டுத்தனத்தை இதமாக்கிக் கொள்கிறானா?
சிவந்து போய் கிடக்கும் கண்களின் வெறித்தன்மையை மாற்றி சற்று இன்பக் கசிவாவது ஊறவைத்துக் கொள்கிறானா?
காளி எவ்வளவு புனிதமாக இருக்கிறாள்!
எப்படித்தான் சுடலையோடு சேர்ந்து கொண்டு அவள் சயனிக்கிறாள்!
இருளின் போர்வைக்குள் இந்த உலக இன்பதுன்பங்களுக்கப்பால் சென்று மோனத்தில் நிலைத்துவிடுகிறாளா?
என் கண் பார்வையில் அவள் அடிக்கடி தென்படுகிறாள். அவள் முகத்தில் எந்த அசுயையுமே காணோம்!
எனக்காக முன்பு ஒருத்தி இருந்தாளே! நான் சற்று நலங்கிப்போய் இருந்துவிட்டால் முகத்தைச் சுழித்து அருவருத்துக் கொள்வாள்! நிலமையைப் புரிந்து கொண்டு நானும் நடந்து கொள்வேன்.
காளி எப்படித்தான் ஒப்புக்கொள்கிறாளோ!
என் முன்னே காளி வருகிறாள். அவள் முகத்தில் அருவருப்பின் ரேகைகள் படர்ந்து வருகிறதா என்பதையெல்லாம் நான் ஆராய்கிறேன். அப்படி என்னால் எதையும் காணமுடிவதில்லை. இந்த ஆராய்ச்சி எனக்குத் தேவையற்றது. ஆனாலும் நான் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறேன். என் மனதுக்கு இதனால் ஒரு முடிவு வேண்டிக்கிடக்கிறது. அந்த முடிவை அறிந்துவிட நான் துடிக்கிறேன். எப்போதுமே நான் இதைத்தான் விரும்புகிறேன். அடிக்கடி சுடலையின் முரட்டு அதட்டல்கள் எனக்குக் கேட்கும். அந்த முரடனின் கடுமையை நான் கற்பனை செய்து பார்ப்பேன்.
“காளி, இந்த முரடனோடு சேர்ந்து உனக்கு வாழ முடிகிறதா?”
நேற்று நான் இதை காளியிடம் கேட்டுவிட்டேன்.
வழமைபோல தலையை தாழப்போட்டுக் கொண்டு அவள் சிலையாக நின்றாள்.
அவள் முகத்தில் தோன்றி மறைந்த சுழிவுகளின் கருத்தை அனுமானித்துக்கொள்ள நான் பாடுபட்டேன்.
கவலையின் நிழல் – அசுயையின் கோடுகள் அந்த முகத்தில் படிந்து கிடந்தனவா?
அப்படிப் படிந்து கிடப்பதை நான் புரிந்து கொண்டு விட்டதான புத்திசாலித்தனமான பார்வையில் அவளைச் சுதாகரித்தேன். கோணி நெளிந்து கொண்டு அவள் போய் விட்டாள். “வாழ்வின் சுகத்தையெல்லாம் எண்ணியெண்ணி அவள் ஏங்கிக் கொண்டிருப்பதாகத்தான் நான் எண்ணினேன்.
கடந்த இரவு நான் உள் விறாந்தையில் இருந்தேன். முன்பெல்லாம் முன் விறாந்தையில் இருந்து இராக்கடலின் பரிசுத்த தனத்தைப் பார்த்து என்னைப் பரிசுத்தப்படுத்திக் கொள்வேன். இப்போதோவெனில் பின்புறத்தேயிருந்து அசிங்க நினைவுகளுக்கு உருப்போட்டுக் கொள்கிறேன்.
கடந்த இரவு ஜாமவேளைக்குப்பின், சுடலையின் கோரக் குரல்களையும், காளியின் முனகல் சிணுங்கல்களையும் திட்டலையும் நான் கேட்டேன்.
“கோமாளிப்பயலை ஆனை அடிப்பானே…”
இப்படித்தான் அவள் திட்டினாள்.
”சதக், சதக் கென்று மந்த ஓசை கேட்டது. சுடலை அவளின் மென்னுடல் மேல் கையைப் பொத்திப் பிடித்துக் கொண்டு மொந்தினானா?”
என் நெஞ்சுக்கள்ளே பெரு மோதல் விழுந்தது. உடம்பெல்லாம் துடித்தது.
கால்கள் தானாகவே என்னை நடத்திச் சென்றன. அந்த அறையின் முன்பாக நான் நின்றுவிட்டேன். “சுடலை, சுடலை” என்று கத்திக்கொண்டே கதவை இடித்தேன்.
“என்னங்க சாமி” என்று குரலில் நடுக்கம் எடுக்க, சுடலைக் கதவை திறந்துகொண்டு வெளியே வந்தான்.
திரிவிளக்கின் சிவந்த வெளிச்சத்தில் ஜடை கலைந்த நிலையில் காளியின் உருவம் நன்றாக தெரிந்தது.
அவள் களைத்துப்போய் விட்டாள். உடல் ஒடுங்ஙி, விரிந்து இழைத்துக் கொண்டிருக்கிறது. அவளின் மேல் மூச்சும் கீழ் மூச்சும் என் நெஞ்சுக்குள் கேட்கிறது.
என் குரலிலிருந்த கடுமையில் சுடலை தீய்ந்து போய் விட்டான். அவன் சுருங்கிப் போய் ஒடுங்கிப் போய் நிற்கிறான்.
சில நிமிட நேர வேளைதான் என்னால் அங்கு நிற்க முடிந்தது. காளி ஏதாவது முறையீடு செய்தாளாயினும் அந்தச் சாக்கில் நிற்கலாம்!
“சுடலை, ஏண்டா இப்படிச் செய்கிறாய், சரி சண்டை பிடிக்காமல் போய்ப் படு.”
இதைத்தான் என்னால் சொல்ல முடியும். பெரிய மனிதர்கள் இதைத்தான் சொல்வார்கள். நான் விறாந்தைக்கு வந்து விட்டேன். உணர்வுக்கும் எட்டாது தோல்வியின் எதிரொலி ஒன்று நெஞ்சில் உறைப்பது போல இருந்தது.
விறாந்தையில் வெகுநேரம் இருந்தேன். புலன்களைக் கூர்மையாக்கிக் கொண்டு ஓசைகளுக்காக காத்திருந்தேன். அதன் பின்பு படுக்கைக்கு போய் விட்டேன்.
விடிந்து நான் வெளியே வரும் போது சுடலை தொழில் தளபாடங்களோடு நடந்து சென்றான். என்னைப் பார்த்து அவன் வெட்கப்படுகிறானா? கறுவிக் கொள்கிறானா?
‘சுடலை’ என்று அழைத்தேன். யந்திரப் பாவையாக அவன் வந்து முன்னே நின்றான். ‘சுடலை’ காளியை நீ ஏன் ராத்திரி அடித்தாய்?’
மிகவும் இதமாகவும், மிருதுவாகவம் நான் கேட்டேன். அவன் இக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. கழுத்தை மடக்கிப் பிடரியைத் தடவி உருட்டிக் கொண்டே நின்றான்.
“சுடலை நீ, இப்படி முரடனாக இருக்கக் கூடாது!”
மறுபடியும் நான் தான் பேச வேண்டியிருக்கிறது.
“இந்தப் பெட்டைக் குட்டி என் மானத்தை வாங்குது சாமி!’
சுடலையின் பேச்சுக்கு என்னால் பதில் சொல்ல முடியுமா? அவள் தவறி நடந்து விட்டாள் என்று அவன் நினைத்துக் கொண்டானா?
எனக்கு நெஞ்சுக்குள் இடி இடித்தது.
சுடலை வெடுக்கெனப் போய் விட்டான்.
கடல் கொந்தளிக்கிறது. அதற்கு வெறி பிடித்திருக்க வேண்டும்.
“எனக்குப் பாலுஞ் சோறும் தந்தாயா சாமி என்று சுடலை கேட்கவேயில்லை. அவன் எனக்குப் பக்கத்தே வந்துவிட்டான். எப்போதும் போல பழக்கத்தாலான மன உந்தலால் அவன் எனக்கு முன்னே வருவிக்கப்பட்டான். ஆனால் அவன் முகத்தில் ஒட்டிப் போய்க்கிடந்த கோரத் தன்மை வழக்கத்திற்கு மாறானது.
அவனின் மீசைத் துடிப்பு தெரிகிறது. எண்ணெய் வழுவழுப்பான தோள்கள் தினவெடுக்கின்றன. இன்று அவன் அதிக அசிங்கமாகவும் இருக்கிறான்.
ஒரு தடவை கழுத்தை மறுபுறமாகத் திருப்புகிறேன்.
எனக்கு முன்பாக கவரோடு வைக்கப்பட்டிருக்கும் கவருக்குள் காளி நிற்கிறாள். விறாந்தையின் துாணோடு முகத்தை புதைய வைத்துக்கொண்டு சுருங்கிப் போய் நிற்கிறாள். குறுக்காகப் போடப்பட்டிருக்கும் மாறாடி கயிறென முறுக்கி நிற்கிறது.
வெம்மையான அந்தப் பட்டு மேனியின் சுழிவுச் சுருக்கங்கள்…
இந்தப் பட்டு மேனிக்கு சோளி அணிந்திருந்தால் காளி இப்படி அழகாக இருப்பாளா?
முன்போல நேராகவே அவளைப்பார்க்க நினைக்கிறேன். ஆனாலும் ஆசை கண்ணாடியோடுதான் சங்கமமாகி நிற்கிறது.
“டேய் சுடலை, காளியை நீ அடித்துக் கொல்லப்போகிறாயா? ஏனடா இப்படி அடிக்கிறாய்?”
மரமாக விநயமாய் நிற்பதாக நினைத்து நிற்கும் சுடலையை நான் அதட்டுகிறேன். ‘பொட்டைக்குட்டி என் மானத்தை வாங்குது சாமி’ என்று காலை பதில் சொல்லியிருக்கிறான். ஆனாலும் நான் இப்போதும் கேட்கிறேன்! பெரிய மனிதர்கள் இப்படித்தான் கேட்டக வேண்டும்!
‘இந்தப் பெட்டைச் சிறுக்கி, பிறந்து என் மானத்தை வாங்குது சாமி, அதனாலே நான் அடிச்சேன். அவளைக் கொண்டு போட்டுத்தான் சாமி நான் சாப்பிடுவேன். அப்பத்தான் என் மானம் பிளைக்கும் சாமி!
சுடலை படபடவென்று பேசுகிறான். இத்தனை அவசரப்பட்டு நான் அவன் கன்னத்தில் அறைந்திருக்கக் கூடாது.
சுடலை அப்படியே நிலத்தில் குந்திவிட்டான். அவனின் இரு கைகளும் தலையைப் பொத்திக் கொண்டு துடிக்கின்றன.
காளியின் விம்மல் கேட்கிறது. நான் ஏன் அவனை அடித்தேன்? இந்த அதிகாரத்தை எனக்கு யார் தந்தார்கள்? இரு கைகளாலும் கண்களைப் பொத்தி விசித்தபடி காளி தன் அறையை நோக்கி ஓடுகிறாளே! அவள் வஞ்சம் தீர்த்துக் கொண்டாளா? அல்லது………. சுதாகரித்துக்கொண்டு கண்ணாடியைப் பார்க்கிறேன். அவளின் மென்னிடை ஒடிந்து விடுமோ? அவள் ஓடுகிறாள். வெளியே நல்ல வெயில் காற்றையே காணோம். கண வேளைக்குள் உலகம் செத்துப்போய்விட்டதா? என் வலக்கரம் விறைத்து வலிக்கிறது. என் இதயம் இத்தனை வேகமாக துடிக்கிறதே! நான் செய்துவிட்ட தவறுக்காக அது வேதனைப்பட்டுக் கொள்கிறது?
சுடலையை என்னால் பார்க்க முடியவில்லையே! நான் கண்ணாடிக்குள் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். காளி துாரத்தில் வருகிறாள். ஒல்லியாக இருந்திருந்து அவள் உருவம் பெருத்து கண்ணாடியை நிரம்பும் வரையும் நான் அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
காளியின் கரத்தில் தகரக்குவளை ஒன்று பக்குவமாகப் புகுந்து விடுகிறது.
காளியின் முகம் கண்ணாடியை நிறைத்து விட்டது.
காளியின் முகத்தில் தெரிவது மனித உறவாசைகளின் தளிர்களா?
“சாமி இந்தாங்க சாமி இதை அதுக்கிட்டைக் குடுத்துச் சாப்பிட வையுங்க சாமி….நேத்திலிருந்து பட்டினி சாமி!”
என் கரங்களில் தகரக் குவளை சுடுகிறது. கண்கள் குவளையை நோக்குகின்றன.
அப்போதுதான் அவித்து உடைக்கப்பட்ட இரண்டு முட்டைகள்!
என்நெஞ்சு தீய்வதுபோலிருக்கிறது.
நான் கடைசித் தடவையாக கண்ணாடியைப் பார்க்க ஆசைப்படுகிறேன். முட்டாள் தனமான ஆசை! கண்ணாடிக்குள் தெரிவது காளியின் முகத்தில் பாதிதான். என் முகம் முளிசாகவே தெரிகிறது. நான் இப்படி கோரமாக மாறிவிட்டேனா சற்று முன்பு கூட அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்தேனே! என் முகத்தில் இப்போது படிந்து வருவது இது சாநிழலா
பிரிய வாசகர்களுக்கு,
சமீபத்தில் நான் சனட்டோரியத்தில் இருந்த போது எனக்கு அணித்தாக ஒரு மனிதர் இருந்தார். அவர் பழகுவதற்கு இனிமையாக இருந்தார். பார்ப்பதற்கு அழகாகவும், எப்போதும் சுத்தமாகவும் காணப்பட்டார். நான் முதலில் நினைத்துக் கொண்டது போல அவர் ஒரு டாக்டர். மனந்திறந்து அவர் என்னோடு பேசினார். அவர் பெயர் இக் கதையில் நான் அவராகவே நிற்கிறேன். அவரை உங்களுக்கெல்லாம் தெரிந்தால் மனதோடு வைத்துக்கொள்ளுங்கள்.
கே.டானியல்
ஈழத்தின் பிரபல்யமான நாவலாசிரியர் அமரர் கே.டானியல் எழுதிய மையக்குறி, முருங்கையிலைக்கஞ்சி என்ற இரண்டு நாவல்கள் ஈழநாடு இதழ்களில் தொடராக வெளிவந்துள்ளன. தலித் எழுத்துக்களின் பிதாமகர். ஏராளமான சிறுகதைகள் எழுதியுள்ளார். அவை டானியல் சிறுகதைகள் என்ற தொகுதியாக வெளிவந்துள்ளன. கானல் மிகச்சிறந்த நாவலாகக் கருதப்படுகின்றது.
– 25.03.1962
– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.
| கே. டானியல் (25 மார்ச் 1926) ஈழத்தின் பஞ்சமர் இலக்கிய முன்னோடி. இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் பிறந்த டானியல் பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார். இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் பங்கு கொண்டு 11 மாதங்கள் சிறைப்பட்டார். தமிழகத்திற்கு வந்து தஞ்சையில் தங்கினார். இலங்கையில் தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கத்தின் அமைப்பாளராகவும், மக்கள் கலை இலக்கியப்…மேலும் படிக்க... |