சாமான்யன் ஆகிய நான்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 9, 2025
பார்வையிட்டோர்: 143 
 
 

தேர்தல் திருவிழா, வழக்கமான சடங்கு சம்பிரதாயங்களுடன்  கோலாகலமாக நடந்து, முடிந்து, அதன் இறுதக்கட்டமாக   தேர்தல் முடிவை அறிவிக்கும் நாளும் வந்துவிட்டது,

முன்னணி நிலவரங்கள் அனைத்து தொலைக்காட்சி களிலும்  பரபரப்பாக ஒளிபரப்பிக் கொண்டிருக்க, முன்னணியில் சாமான்யனே வந்துகொண்டிருக்க, ஆளும் கட்சியாக இருந்தவர்களுக்கும், எதிர்கட்சியாக இருந்தவர்களுக்கும், எரிச்சலை ஏற்படுத்தியது. 

யாருடா அது சாமான்யன்? சனியன் புடிச்சவன்?  எரிச்சலாய் கேட்டார் முன்னாள் முதல்வராக இருந்தவர்,   

அவன்  எல்லாம் ஒரு ஆளே கிடையாது தலைவரே, முன்னணி நிலவரத்தை வெச்சி சொல்லமுடியாது. இருங்க தலைவரே பாரக்கலாம்,

அடிபொடி சொன்னதில் சற்று  சமாதானம் ஆனாலும், தலைவர்களுக்கு கொஞ்சம் கிலி வந்தது என்னவோ உண்மைதான்,

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது,ஆரம்பத்தில்   மட்டுமல்ல இறுதிவரை,  முன்னணி  யிலேயே இருந்து   வெற்றி பெற்ற. வேட்பாளராக அறிவிக்கப்பட்டான் சாமான்யன்,

கடுகடுப்பான எதிர்கட்சிதலைவராக இருந்த வேதாச்சலம், அடிபொடிகளைப் பார்த்துக் கத்தினார், ஏண்டா பணமெல்லாம் ஒழுங்கா பட்டுவாடா பண்ணீங்க ளா?இல்ல நீங்களே அமுக்கிட்டீங்களா?

என்ன தலைவரே எங்களை சந்தேகப்படறீங்க? ராப்பகலா நாங்க எப்படி ஒழைச்சோம்? எங்கவீட்டுப்பக்கமே நாங்க இன்னும் போகல, இப்டி சொல்டீங்களே

பின்ன என்னடா? எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டீங்களே? இதுக்கா இத்தனை வருசமா காத்திருந்தேன்? யாரு அந்த சாமான்யன்?

அவன் ஒரு ஒரு வெத்துப் பையன் தலைவரே. அவனோட தாத்தா சுதந்திரப்போராட்ட தியாகி யாம், அப்பாவும் அந்தவழியில வந்தவராம்.இவன் கதை,கவிதை எழுதறவனாம், அப்பப்போ மேடையில் போய் பேசுவானாம், சமுதாயத்தை திருத்தறேன் மாத்தறேன்னு சொல்லிட்டு திரிஞ்சிகிட்டிருந்த பய, இவனுக்கு யார் ஓட்டுப்போடுவானுங்க ன்னு பார்த்தோம்.              

நல்லா பார்த்தீங்க போடா, வயிறெல்லாம் எரியுது,                  

தலைவரே கவலைப்படாதீங்க இவன்லாம் நமக்கு ஒரு ஆளே இல்ல, பழம் தின்னு கொட்டை போட்டவங்களாலயே நாட்டை சமாளிக்க முடியல, இவன் என்ன கிழிக்கறான்னு பார்க்கலாம், அப்படியே நல்லபடியா நாடு போக நாங்க விட்ருவமா, பார்த்துக்கலாம் தலைவரே, நீங்க எதுவும் பதட்டப்படாதீங்க.

இது வே தேர்தலில் போட்டியிட்ட அனைத்துஅரசியல் கட்சிகளிலும் பேசுபொருளாக இருக்க, வெற்றி பெற்ற சாமான்யனை சுற்றிச் சுற்றி வளைத்தன அனைத்து மீடியாக்களும்,

இந்த வெற்றி எப்படி உங்களுக்கு சாத்தியமானது? அதுவும் எந்த  பின்புலம் இல்லாமல், நிருபரின் கேள்விக்கு, பதில் கூறத்துவங்கினான் சாமான்யன்,      

இந்த வெற்றி முழுக்க முழுக்க மக்களின் வெற்றி, என் முன்புலம் பின்புலம் எல்லாம் மக்கள் தானே தவிர வேறு எவரும் எதுவும் இல்லை., நான் ஒரே ஒரு வாக்குறுதி மட்டும் தான் தந்தேன், அதற்கே எனக்கு வெற்றியைத் தந்திருக்கிறார்கள் எனில், இனி சொல்லாத வாக்குறுதி களை நிறைவேற்றும் பட்சத்தில்,  அவர்களின் அதீத அன்பினை நான் மொத்தமாக  பெறமுடியும் என நம்புகிறேன், புன்னகையுடன் கூறிய அவனை இடைமறித்தார் மற்றொரு நிருபர், யாருமே சொல்ல பயப்பட்ட ஒரு விஷயத்தை  நீங்க முதலாவது வாக்குறுதி யா வைத்து இந்த தேர்தல்ல. நின்னு வெற்றி பெற்றிருக்கீங்க, அதாவது,  டாஸ்மாக்கடைகளை இழுத்து மூடுவேன்னு சொல்லியிருக்கீங்க.அது எப்படி முடியும், நாட்டோட வருமானமே போய்விடுமே? அதை எப்படி  சமாளிப்பீங்க? நிருபர் அடுக்கடுக்கான கேள்விகள் தொடுக்க, கொஞ்சமும் சளைக்காது பதில் அளிக்கத்துவங்கினான் சாமான்யன்.

அரசோட செலவுகளை மட்டுப்படுத்தினாலே, சாராயக்கடைகளால கிடைக்கிற வருமான இழப்பினை சரி செய்திடமுடியும்.  நான் முதலமைச்சரா பதவிஏற்கிற நிகழ்வுகள் அனைத்தும் மிக மிக எளிமையாக நடத்தப்படும்,  அனைத்து தொகுதி எம்,எல், ஏக்களும் தம் சொந்த செலவில் தான் சென்னைக்கு வரவேண்டும். எவ்வித ஆடம்பரசெலவுகளும் இன்றி எளிமையாக நடத்தப்படும் இந்த நிகழ்வுகளை தொலைக்காட்சியின் மூலம், மக்கள் நேரலையாக பார்க்கலாம்.

இதுபோல அரசின் ஒவ்வொரு நிகழ்வுகளையும், எளிமை யாக்கினால், அந்த இழப்பினை சரி செய்துவிட முடியும்,  அது மட்டுமல்லாமல், ஒரு நாட்டின் முதன்மையான வருமானம்,மூலதனம் என அனைத்துமே     உழைப்புதான். இங்க மக்களில் நிறைய பேர் உழைக்க மனமின்றி ஊதாரிகளாய் திரிகின்றனர். அவர்களை உழைப்பவர்களாக மாற்றவேண்டும். பொறுத்திருந்து பாருங்கள்,இது சம்பந்தமாக நீங்களும் உங்கள் யோசனைகளை முன் வைக்கலாம்.புன்னகையுடன் கைகூப்பி விடைபெற்றான் சாமான்யன்

பட்டி தொட்டி முழுக்க இதுவே பேசுபொருளாக இருந்தது.  மக்கள் அனைவரும் அவனின் பதவிஏற்பு நிகழ்வினை காண ஆர்வமாக இருந்தனர்.

பதவியேற்கும் நாளும் வந்தது. சாமான்யன் ஆகிய நான், என்கிற சிம்மக்குரலைக் கேட்டதும், தொலைக்காட்சி யில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் படபடவென கைகளைத் தட்டினர்.

பதவியேற்பு விழா  முடிந்த  அன்று மாலை 6 மணியளவில் அரசுத் தொலைக்காட்சி யில் நேரலை யில் தோன்றினான் சாமான்யன்.  மக்கள் அனைவர்க்கும் வணக்கம். இன்று நான் போட்ட முதல் கையெழுத்து டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா செய்வதற்காக  ஆகும்.

என்னை நம்பி வாக்களித்த உங்களை காப்பது என் கடமை. இந்தக் குடிப்பழக்கத்தை உடனே நிறுத்துவது மிகக்கடினம். எனவே அரசு மறுவாழ்வு நிலையத்தில் அந்த குடிமகன்களை சேர்த்து அவர்களுக்கு தகுந்த பயிற்சியும் சிகிச்சை யும் வழங்கப்படும். எனவே பெண்கள் தங்கள் கண வன்மார்களை,தந்தையை,சகோதரன்களை அதில் சேர்த்துவிட வேண்டும்.குடிப்பழக்கத்திலிருந்து மீண்ட பின்னர் அவர்களுக்கு எந்தவித வேலையும் இல்லாமலிருக்கும் பட்சத்தில், அவரவர்  தகுதி,  திறமைக்கு ஏற்றாற்போல் வேலைவாய்ப்பு வழங்கப்படும் இது உறுதி. சாமான்யன் சொல்லிமுடித்தவுடன் இல்லப்பெண்களுக்கு மிக மகிழ்ச்சி ஏற்பட்டது. பாழாய்ப்போன இந்த சாராயக்கடை மூடியாச்சி.இனி நிம்மதி, அடுத்தது என்ன?  இந்த குடிப்பழக்கத்தை முற்றிலும் துறக்க மறுவாழ்வு இல்லத்துல சேர்க்கணும்.இப்படி மனதில் உள்வாங்கியவாறு தத்தம் கணவன்மார் களை அதட்டலாக,கெஞ்சலாக, கொஞ்சலாக, தம்வழிப் படுத்தும் வேலையில் ஈடுபட்டனர் பெண்கள்.

இது பாருய்யா, இத்தன நாளா குடிகுடின்னு மொத்தக்காசையும் அழிச்ச, குடியினால உன் வேலையும் போச்சி, இந்த மவராசன் சொல்றபடி கேளுய்யா. மறுவாழ்வு நிலையத்துல சேர்ந்து முதல்ல மனுசனாவு. அதுக்குப்பொறவு அவங்களே வேலைய ஏற்பாடு பண்ணித்தருவாங்க. நல்லபடியா வேலைக்கி போயி நம்ம புள்ளைகள படிக்கவெக்கலான்யா, நம்ம சந்தோசத்துக்காக பொறந்த புள்ளைங்க.நாமதான அதுகளுக்கு எல்லாம் பண்ணனும். என்று கண்ணீரோடு கைகூப்பி அழும் பெண்களாய்,, இருக்க, அடுத்து வந்த நாட்களில் மறுவாழ்வு நிலையங்கள் நிரம்பி, பயிற்சி களும் ஆரம்பிக்கப்பட்டன.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாரும், இந்த குடிகாரப்பயலெல்லாம் திருந்திடுவானுங்க போல இருக்கே, அடுத்த வட்டமும் ஆட்சிய பிடிககமுடியாதோ என்று புலம்பினர், அப்போதும் அடிபொடிகள் விட்டுத்தருவதாக இல்லை. அது எல்லாம் நடக்காது தலைவரே, அப்பறம் கள்ளச்சாராயம் எதுக்கு இருக்கு.  காய்ச்சிடுவோம் அந்தச் சாமானியனையும் சேர்த்து, நக்கலாய்ச் சிரித்தனர்.

ஒவ்வொரு நாளும் மாலை 6 மணியளவில் அரசுத் தொலைக்காட்சி யில் நேரலையில் மக்களை சந்திப்பதை வழக்க மாக்கினான் சாமானியன்.

ஒவ்வொரு தொகுதி எம் எல்,ஏ, சேர்மன்,கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் மற்றும்  அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு குழுவாக ஒன்றுபடவேண்டும்.இவர்களுக்கு  வேலை சட்டமன்றத்தில் இல்லை, இனி மக்கள் மன்றத்தில் மட்டுமே இவர்களின் பணியாக இருக்கும். வாரத்தில் ஆறு நாட்களும் இவர்களுக்கு பணிநாட்கள்ஆகும். ஒவ்வொரு வீதியாக சென்று அங்குள்ள சாலை,குடிநீர், மின்இணைப்பு போன்ற தேவையில் பிரச்னை ஏற்படும் பட்சத்தில் அவற்றை உடனுக்குடன் முடித்திடுதலே தலையாய பணியாகவேண்டும்.அதிகபட்சம் இரண்டு நாளைக்குள் பிரச்னை சரிசெய்யப்படவேண்டும். இதை மக்களே கண்காணித்து மேற்பார்வை யிடவேண்டும்.

மேலும் சாலைப்பராமரிப்புக்கென மானியம் ஒதுக்கித்தரப்படும். அந்தத்தொகை முழுவதும் பராமரிப்பு பணிக்கென மட்டுமே செலவிடப்படவேண்டும். மக்களிடம் செலவினத்தை மட்டும் காட்டாமல் பொருள் வாங்குவது, ஒப்பந்தப்பணி என அனைத்தும் எந்த ஊழல் இல்லாமல் ஒளிவு மறைவு இல்லாமல் காட்டப்படவேண்டும். ஏனென்றால் முந்தைய ஆட்சிகளில் இந்த உண்மைத்தன்மை இல்லாததால்தான்  பத்தாயிரம் ரூபாய் செலவு செய்ய ஒப்பந்தம் செய்த பணியில் வெறும், ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்து காண்பித்த ஊழலால், ஆறுமாத காலத்திற்குள்ளாகவே அனைத்து சாலைகளும் பல்லிளித்துப் போனதை பார்க்கமுடிந்தது. இதை தவிர்க்கவே, இன்றைய மக்களாட்சி விரும்புகிறது. ஊழல் நிகழ்ந்ததற்கான ஆதாரம் இல்லைஇல்லை அறிகுறி தென்பட்டாலே, போதும் உடனடியாக,  ஊழல் செய்தவர் 

அதற்கு காரணமாக இருந்தவர் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுவர்.

அடுத்து வந்த நாட்களில் வேலைகள் அனைத்தும் துரிதகதியில் நடைபெற்றன. குழுக்கள் அனைத்தும் வீதி வீதியாக விரைந்தன

வழக்கமான மாலை 6 மணி, நேரலையில் சாமான்யன்,  மக்களிடம் உரையாற்றிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்த மாவட்ட இருப்பிட நிலையைப் பொறுத்து, தொழிற்சாலையோ அல்லது,   நிறுவனமோ துவக்கப்படும். அதில் பணியில் சேர முதல் தகுதி பொருளாதாரத்தில் மிகப் பின்தங்கியவராக இருத்தல்வேண்டும்.அடுத்ததாக இதுவரை எந்தப்பணியிலும் இல்லாதவராக இருக்கவேண்டும். இதை தாசில்தார்,கிராம நிர்வாக அலுவலர் அடங்கிய குழு கண்காணிக்கவேண்டும். பணிக்கு தேர்வானவர்களுக்கு, தகுந்த பயிற்சி வழங்கப்படும்.

மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது அரசின் செயல்பாடுகள்.     அவரவர்கேற்ற பணியில் சேர தம்மை தயார்படுத்த துவங்கினர். இதையெல்லாம் பார்த்து க்கொண்டிருந்த எதிர்கட்சிகள் ஏதாவது கலவரத்தை தூண்டலாமா?  என யோசிக்க ஆரம்பித்தது

அதை ஒடுக்கும் விதமாக அடுத்த நாள் சாமான்யன் பேச்சும் அமைந்தது.

அனைத்துக் கட்சியைச் சார்ந்த தொண்டர்களே,  இந்த. ஆட்சி என்பது மக்களுக்கானது. அவர்களின் தேவையை நிறைவேற்றும் பொறுப்புதான் எனது இந்த பதவி.இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த ஏதாவது கலவரங்களை தூண்டினால், அதனால் பாதிக்கப்படுவது, உனது பங்காளி, மாமன்,மச்சான்மற்றும் உன்னுடைய, இரத்த சொந்தங்கள்தானாயிருக்கும்.உன்னைத் தூண்டி விட்ட தலைவரது தலைமுறை பத்திரமாய், சுகமாய்.பங்களாவினுள் கிடக்கும், அமைதியிழந்து ஆபத்துக்கு உட்படுவது உன்னைப் போன்ற இனத்தவர்தான்.

இதைக் கேட்டு முடித்தபின் தொண்டர்களது குடும்பத்திற்குள் எதிர்ப்பு பலமாக கிளம்பியது.

இதோ பார், ஏற்கனவே போன ஆட்சியில நீ பண்ண போராட்டத்துல பலியானது.உன் தம்பிதான்.உன் தலைவன் என்ன பண்ணான்?, நஸ்ட ஈடுதான்கொடுத்தான்.  போன உயிரையா திருப்பித்தர முடிஞ்சது. அதனால உன் வேலையெல்லாம் கொஞ்சம் அடக்கி வை. இந்த மனுசன் வந்ததுக்கு அப்புறம் நாட்டுல நல்லது நடக்குது. உன் தலைவர் சொல்றதுதான் கேட்பேன்னு நின்னா, எங்கள விட்டுடு,உன் தலைவரு கூட போய் இருந்துக்கோ அம்புட்டு தான்.

அடிபொடிகளின் ஆட்டம் கொஞ்சம் குறையத்தான் செய்தன,

வழக்கமான மாலை ஆறு மணி, நேரலை யில் சாமான்யன் மக்களை சந்திக்க வந்திருந்தான். வணக்கம் மக்களே, அனைத்து பணிகளும் தொய்வு இல்லாமல் நடைபெறுகிறது என்றால் அதற்கு காரணம், நீங்கள்தான், உங்களின் ஒத்துழைப்புதான்.நன்றி,மக்களே. அடுத்து நாம் செய்யவேண்டிய முக்கியமான பணி ஒன்று. அதுதான் விவசாயம்.   நமக்கு ஆதாரமே விவசாயந்தான்.ஆனால் நாம் அதை ஒரு பொருட்டாக மதிப்பிடு வது கிடையாது. காசு கொடுத்தால் கிடைக்கிறது என்ற உணர்வில் உள்ளோம். காசு கொடுத்தாலும் பொருள் இல்லை என்கிற நிலைமை வரும்போது தான் அதன் மதிப்பு நமக்கு புரியும். எனவே, விவசாயத்தை போற்றுவதும் வாழவைப்பதும் அரசின் முக்கிய கடமை யாகும். ஒவ்வொரு சிறு கிராம, நகர அமைப்பிலும், விவசாயக்குழு ஒன்று நிர்மாணிக்கப்படும். அதில் வயது முதிர்ந்த, அனுபவசாலி விவசாயிகள் தலைவராக நியமிக்கப்பட்டு தகுந்த ஆலோசனை, தீர்வுகள் வழங்குவர். சிலர் விவசாய நிலத்தை அதிக லாபம் பெறவேண்டி ப்ளாட்டுகளாக. மாற்றும் நிலைமையும் அதிகரித்து இருக்கிறது. அவ்வாறு விற்பவரிடமிருந்து அரசே அந்த நிலத்தை வாங்கி  விவசாய நிலமாக, விளைச்சல் தரும் நிலமாக. பாதுகாத்து விவசாயம்  தொடர்ந்து செயல்படும். .   குறிப்பாக இயற்கை விவசாயத்திற்காக ஆதரவு கொடுப்பதும் இந்த அரசின் முக்கிய நோக்கம் ஆக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் மாலை 6 மணியளவில் ஆர்வமுடன் அரசு தொலைக்காட்சி யில் முதல்வரை சந்திக்கவும், அவர் தரும் முக்கியச்செய்தியை கேட்கவும் மக்கள் அமர்ந்தனர்.

வணக்கம் மக்களே என்கிற அவரது குரலைக் கேட்டதும், உற்சாகம் பெற்றனர். தொடர்ந்து வரும் செய்தியை கேட்க ஆயத்தமாயினர் நான் கொடுத்த எண்ணிலும், முகவரியிலும் ,இந்த அரசு பற்றிய நிறை,குறைகளையும், மேலும்   அரசு செவ்வனே நடைபெற உங்களின் ஆலோசனைகளையும், எழுதி அனுப்பிவைக்குமாறு கேட்டிருந்தேன் .அனைவரது தகவல்களும் எங்களுக்கு கிடைத்த அடுத்த நொடியே அது பற்றி பரிசீலித்து,உரிய நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று சொல்லவேண்டிய முக்கிய செய்தி ஒன்று உள்ளது. நிறைய மனிதர்கள், வசிக்க இருப்பிடம் இல்லாமல், நடைபாதை அருகாமை யிலும், கோவில்களிலும், பொதுவெளிகளே தங்கள் இருப்பிடங்களாக பாவித்து மழை,வெயில் எல்லாவற்றையும் தாங்கி அவதியுறுவதை பார்க்க முடிகிறது. அதே போல் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டிருக்கும்  மனிதர்களையும் இங்கு காண்கிறோம்.இந்த அவலங்களையும் ஒழிப்பதும் நம்முடைய முதன்மை யான கடமையாகும்.

எனவே அவர்களுக்கான வசிப்பிடம் அமைத்து கொடுக்கப்படும், மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு , அவர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து அரசு பூந்தோட்டங்களைப் பராமரிக்கும் பணியும் அளிக்கப்படும். அதேபோல் பிச்சை எடுப்போரில் நோய்வாய்ப்பட்டோரையும், வயது முதிர்ந்த வர்களையும் மருத்துவ பராமரிப்பில் விடப் பட்டு ஏனையோர், அவரவர்களின் விருப்பநிலையையும் பொறுத்து அடிப்படைக் கல்வியும்  வேலை வாய்ப்புப் பயிற்சியும் அளிக்கப்படும்.

அதாவது உழைப்பின்றி ஊதியம் இல்லை என்கிற மனப்பான்மை அனைவருக்கும் வரவேண்டும்.வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்தையும் தானே ஈட்டுவதுதான் மனிதனின் உண்மையான அழகாகும்.இலவசம் என்று எங்கேயும் சென்று கையேந்தும் நிலையை  கனவிலும் நினைக்கக்கூடாது.மனிதனின் சோம்பேறி த்தனத்தை அகற்றி உழைப்பில் ஈடுபடுத்துவதே ஒரு நல்ல அரசின் செயல்பாடாகும்.அதைத்தான் நான் செய்துவருகிறேன். அடித்தட்டு மக்களுக்கு என  நிறைய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி ஒவ்வொரு குடும்பமும் வளம் பெறவேண்டும். அப்போதுதான் நம் நாடு ம்   அதிக சுபிட்சம் பெறும்.

சாமான்யன் சொல்வதைக்கேட்ட ஒருசில மக்கள் மனதளவில் கரைய, இன்னும் சிலர் கண்ணீரிலும் கரைந்தனர். அடித்தட்டு மக்களையும் உழைப்பின் மூலம் உயர்த்த நினைக்கும் அவனது செயலை பாராட்ட வார்த்தைகளின்றி தவித்தனர் என்றே கூறலாம்.

எதிர்கட்சியனர் கூட பரவாயில்லை யே என்று சொல்லுமளவிற்கு சாமான்யன் பெயர் பெற்றான்

ஆட்சி நடந்து மூன்றாண்டை கடந்த நிலை,யில் தமிழகம் இவ்வாறாக காணப்பட்டது. 

ஒவ்வொரு சாலையும் எந்த விரிசலும் இன்றி, வழுவழுப்பான கறுப்புப்போர்வைக்குள் மூடப்பட்டாற் போலிருந்தது.

விவசாயத்தின் அருமை பெருமை உணரப்பட்ட தால், முறையான ஆலோசனை, வழிகாட்டுதல் பேரில் வயல் வெளிகள் எல்லாம் பச்சைக்கம்பளம் போர்த்தப்பட்டு அனைவரையும் வருக வருக என வரவேற்றன.  குடித்து விட்டு நடு ரோட்டில் புரண்டு கிடந்த குப்பன்,சுப்பன், எல்லாம் இப்போது, டிப்டாப் பாக டிரெஸ் பண்ணி மதிய சாப்பாட்டு பை எடுத்துக்கொண்டு மனைவி குழந்தைகளுக்கு டாட்டா காட்டிவிட்டு உற்சாகமாக வேலைக்கு செல்கின்றனர்.

நடைபாதை வாசிகளும், பிச்சைக்காரர்களும் எங்குமே தென்படவில்லை. அரசு அலுவலகத்தில் எங்கும் எவ்வித ஊழலும் இன்றி நேர்மையாம அனைத்து பணிகளும் நிகழ்கின்றன.

இப்போதெல்லாம் மக்கள் அடிக்கடி இவ்விதமாக பேசிக் கொள்கின்றனர். இதெல்லாம்  கனவா, இப்படி எல்லாம்கூட நடக்குமா? இல்லை  டைரக்டர் சங்கர் படம் ஏதாவது பார்க்கிறோமோ? என்று கேட்டுவிட்டு இல்லைஇல்லை இது நிஜந்தான் என்றுகூறி உணர்ச்சிவசப்படும் நிலை பெறுகிறார்கள்.

அது ஒரு மனநல மருத்துவமனை, அங்கு பணிபுரியும் ரவி, கோபியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான். இன்னைக்கு காலைல அட்மிட் ஆச்சே அந்த கேஸ பத்தா தெரியுமா?

தெரியல, ஆனா   வந்ததிலிருந்து, கத்திக்கிட்டு இருந்தான். சாமான்யன் ஆகிய நான், அப்படின்னு, அப்புறம் டாக்டர் வந்து பார்த்துட்டு ஊசி போட்டு போயிருக்கார், அதற்கு அப்புறந்தான் தூங்க ஆரம்பிச்சான.அதுவரைக்கும் நான் இத பண்ணுவேன், அத பண்ணுவேன்   என்னை நம்பி ஓட்டு போடுங்க அப்படின்னு சொல்லி கத்திக்கிட்டு இருந்தான். ஆமா யாரு அவன்?

அவன் பேரு சாமானியனாம்.சுதந்திரத்திற்கு போராடின குடும்பத்தை சேர்ந்தவனாம்.நிறைய புத்தகம் எழுதியிருக்கானாம். அறிவாளி போல, அத்தோட நிறுத்தியிருக்கலாம்.அரசியலுக்கு வந்து நல்லது பண்ணலாம்னு நினைச்சி  வந்திருக்கான்.நாலுமுறை வேட்பாளரா நின்னு, நாலுமுறையும் டெபாசிட் காலியாம்,

அச்சச்சோ பாவம், அதான் இங்க கிடக்கான்  

இருவரும் பரிதாபப்பட்டு அங்கிருந்து அகன்றனர்.

அங்கே  சாமான்யன் மட்டும்படுத்துக் கிடக்கவில்லை, அவனது அருமை பெருமை  உணராத மக்களும்  அறியாமை எனும்கோமாவில் படுத்துக் கிடக்கின்றனர்.ஒருவேளை அவனுக்கு வாக்களித்து முதல்வராக்கி இருந்தால் இந்த கதை  உண்மையாகி இருந்திருக்கும்,அப்படி இல்லாமற்போனதால்   இது வெறும் சாமான்யன் என்கிற சாதாரண மனிதனின் கற்பனையாக மட்டுமே முடிந்துபோய்விட்டது. 

 சாமான்யனின் வாய் மெல்ல முனங்கியது.

 சாமான்யன் ஆகிய நான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *