சரித்திர ஆராய்ச்சி
(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இந்தியனுக்கு ஏது ஸார் மூளை?” என்றார் ஒருவர்.
“உண்மை; முற்றிலும் உண்மை. நமது சரித்திரத்தை எழுதுவதற்கு நம்மால் முடியவில்லை. ஒரு வி.ஏ.ஸ்மித்தோ,
லேன்பூலோ, ராபர்ட்ஸோ, அல்லது எல்பின்ஸ்டனோ வேண்டியிருக்கிறது” என்று இன்னொருவர் முதலில் பேசியவரை ஆமோதித்தார்.
“ரமேச் சந்திர தத்தர், பி.தி. ஸ்ரீநிவாஸையங்கார், டாக்டர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் முதலியவர்களைப் பற்றி என்ன ஸார் சொல்லுகிறீர்கள்?” என்றேன் நான்.
”ஆயினும் ஆங்கில ஆசிரியர்களோடு ஒப்பிடுமாறு, அவர்கள் ஒன்றும் பிரமாதமாய்ச் செய்துவிடவில்லையே!” என்றார் முதலில் பேசியவர்.
“இன்று பாருங்களேன். வில்லியம் டானியல் என்னும் ஆங்கில ஆசிரியர் பண்டை மதுரையைத் தோண்டி எடுத்து, அநேக அரிய விஷயங்களைக் கண்டு பிடித்திருக்கிறார். இப்படி எந்த இந்தியன் ஸார், செய்திருக்கிறான்?” என்று கேட்டார் இரண்டாவது நபர்.
அவர் சொல்லிய வில்லியம் டானியல் என்பவர் எங்கள் கல்லூரிச் சரித்திர ஆசிரியர். எங்களுக்கு இந்து தேச சரித்திரம் கற்றுக் கொடுப்பவர். ‘வெட்டியெடுக்கப் பட்ட மதுரை’ என்னும் விஷயத்தைப் பற்றிச் சர்வ கலாசாலை (ஸெனட் ஹவுஸ்) பேரவையில் சென்ற ஒரு வாரமாக அவர் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார்.
அதில் ஒரு சொற்பொழிவுக்கு நாங்கள் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தபோதுதான் மேற்கண்ட சம்பாஷணை நடந்தது.
அக்காலத்தில் நான் பி.ஏ. ஆனர்ஸ் முதல் வகுப்பில் படித்துக்கொண் டிருந்தேன். சரித்திரப் பாட மென்றால் எனக்கு வெகு உற்சாகம். அதிலும் இந்துதேச சரித்திரமென்றால் குதூகலந்தான். எங்கள் ஆசிரியர் தாம் அதற்குக் காரணம் என்று சொல்லலாம். வில்லியம் டானியல் ஆங்கிலேயர் ஆயினும் பாரத தேசத்தின் மீது பற்று மிகுந்தவர். இந்து தேச சரித்திரத்தில் அபார ஞானமுடையவர் என்றும் சிறந்த ஆராய்ச்சியாளர் என்றும் பெயர் பெற்றிருந்தார். கல்லூரி விடுமுறை நாட்களில் தென்னிந்தியா முழுவதும் பிரயாணம் செய்து கொண்டிருப்பார். சரித்திர சம்பந்தமான பழைய நகரங்களையும் கோட்டைகளையும் அரண்மனைகளையும் பார்வையிடுவார். புராதனக் கோயில்களிலுள்ள சிற்பங்களையும், சித்திரங்களையும், கல்வெட்டுக்களையும் பரிசோதிப்பார். “இந்தியச் சிற்பியும் சித்திரகாரனும் வாளா இருந்த காலமே இல்லை. புராதன இந்தியக் கோவில்களிலுள்ள சிற்பங்களையும் சித்திரங்களையும் வைத்தே, இந்திய சரித்திரத்திலுள்ள பள்ளங்களை மேவி விடலாம்” என்பது அவருடைய கொள்கை. “குஷான் வம்சத்திற்கும் குப்த வம்சத்திற்கும் நான் பாலம் கட்டி விடுகிறேன், பார்!” என்று அவர் அடிக்கடி விருது கூறுவதுண்டு. இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் விடுமுறை இருந்தாலும், அவர் ஊரில் இருக்கமாட்டார். திருச்சி மலைக் கோட்டையிலுள்ள சித்திரங்களையோ, மதுரை மீனாக்ஷியம்மன் கோவிலிலுள்ள சிற்பங்களையோ பரீக்ஷித்துக்கொண்டிருப்பார். சோழ ராஜ்யத்தின் தலை நகரமாகிய உறையூரும் காவிரிப்பூம்பட்டினமும், இப்பொழுது பூமிக்குள் புதைந்து கிடக்கின்றன என்றும், அவற்றை வெட்டியெடுத்தால், பண்டைக் கால இந்தியாவின் சரித்திரத்தை அறிவதற்கு அது அரிய சாதனமாக இருக்குமென்றும் அவர் அடிக்கடி கூறுவது வழக்கம். ஒரு சமயம் மதுரையிலிருந்து சில ரோமானிய, கிரேக்க நாணயங்களைக் கொண்டுவந்து எங்களுக்குக் காட்டினார்.
அவ்வருஷம் கிறிஸ்துமஸ விடுமுறையில் நாங்கள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றோம். வில்லியம் டானியலும் சரித்திர ஆராய்ச்சி சம்பந்தமாக வழக்கம் போல் புறப்பட்டார். சுமார் பதினைந்து தினங்களுக்கு அப்புறம், ஒரு நாள் நான் தினசரிப் பத்திரிகையைப் பிரித்த பொழுது, பெரிய எழுத்துக்களில் பின் வரும் தலைப்புகளைக் கண்டு திடுக்கிட்டேன்: “கடைச் சங்கத்தின் இருப்பிடம் பழைய மதுரை வெட்டி யெடுக்கப்பட்டது – இந்து தேச சரித்திரத்தில் அநேக நூதன உண்மைகள் வெளியாகின்றன.” வெகு ஆவலுடன் கீழே படித்துப் பார்த்தேன். பண்டைக் காலத்து மதுரை தற்கால மதுரைக்குக் கிழக்கே நாற்பது மைல் தூரத்தில் இருக்கிறதென்றும். கடைச் சங்கம் அங்கு இருந்ததாகக் கருதுவதற்கு அநேக சாதனங்கள் கிடைத்திருப்பதாகவும், அங்கு வெட்டியெடுக்கப்பட்ட சாமான்களினின்றும் இன்னும் அநேக உண்மைகள் வெளியாவதாகவும், அவற்றை எல்லாம் கண்டு பிடித்தவர் மிஸ்டர் வில்லியம் டானியல் என்பதையும் கண்டு, மகிழ்ச்சியும் சிறிது பெருமையும் கொண்டேன். அன்று முதல் பத்திரிகையை ஆவலுடன் பார்த்தேன். வெட்டியெடுக்கப்பட்ட மதுரையைப் பற்றி நாள் தோறும் ஏதாவது செய்தி வந்துகொண்டே இருந்தது. சுமார் ஒரு சதுர மைல் வெட்டியிருப்பதாகவும், மிஸ்டர் வில்லியம் டானியல் மிக உற்சாகமாக வேலை செய்கிறார் என்றும் நான் பத்திரிகைகளினின்றும் அறிந்தேன். எங்கள் ஆசிரியர் நாவினின்றே எல்லா விஷயங்களையும் கேட்க எனக்கு மிக ஆவலாக இருந்தது. ஆகையால் கல்லூரி திறக்கும் நாளை எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கல்லூரி திறந்தது. நானும் சென்னை போய்ச் சேர்ந்தேன்.
ஆனால் அங்கு ஒரு பெரும் ஏமாற்றம் என்னைக் காத்துக்கொண்டிருந்தது. எங்கள் சரித்திர ஆசிரியர் வில்லியம் டானியல் இன்னும் சென்னை வந்து சேரவில்லை! அவருடைய ஆராய்ச்சி முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் ஆகுமென்றும், அதுவரை அவர் ரஜா வாங்கி யிருக்கிறார் என்றும் மரணவர்கள் பேசிக் கொண்டார்கள். அவர் வரவை நாங்கள் அனைவரும் வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தோம். இரண்டு மாதங்கள் கழிந்த பிறகு, அவர் சென்னை வந்தார். உடனே அவருடைய ஆராய்ச்சியைப் பற்றிச் சர்வ கலாசாலைப் பேரவையில் தொடர்ச்சியாக அநேக பிரசங்கங்கள் செய்யுமாறு பல்கலைக் கழகத்தார் வேண்டிக் கொண்டார்கள். அந்தப் பிரசங்கங்களில் ஒன்றுக்குத் தான் நாங்கள் அன்று பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தோம்.
வெட்டியெடுக்கப்பட்ட மதுரையில் கிடைத்த சில சாமான்களைப் பற்றி, அன்றைச் சொற்பொழிவில் அவர் விவரித்துக் கூறினார். கடைச் சங்கப் புலவர்கள் நாற்காலிகளில் உட்கார்ந்து தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கவேண்டும் என்று ஆரம்பத்திலேயே யாவரும் திடுக்கிடும்படி ஒரு வெடிகுண்டைப் போட்டார். அங்கு அகப்பட்ட பொருள்களில் ஓர் இரும்பு மடக்கு நாற்காலியும், ஒரு மர நாற்காலியும் இருக்கின்றன என்றும், அவற்றிலிருந்து சங்கப் புலவர்கள் நாற்காலிகளில் உட்கார்ந்து தங்கள் விவாதங்களை நடத்தினார்கள் என்று நாம் அநுமானிக்க இடம் இருக்கிறதெனவும் சொன்னார். கடை சங்க காலத்தை கி.பி. முதல் நூற்றாண்டாக நிர்ணயிக்கலாம் எனவும், ஆகவே சுமார் இரண்டாயிர வருஷங்களுக்கு முன்பே,தென்னிந்தியாவில் இரும்பு சாதாரணமாக உபயோகத்தில் இருந்ததாக அறியக் கிடப்பதாகவும், இரும்பில் மடக்கு நாற்காலி செய்திருப்பது பண்டைத் தமிழர்களுடைய நுண்ணிய அறிவையும் வேலைத் திறத்தையும் காட்டுகிறது எனவும் கூறினார்.
சிறிது நேரத்தில் மிஸ்டர் வில்லியம் டானியல் “பண்டைப் துரையின் உற்சாகம் கரை மீறி எழுந்தது. பாண்டிய நாட்டின் தலை நகராகிய மதுராபுரியில் வெட்டி யெடுக்கப்பட்ட பொருள்களில், தண்ணீரை நீராவியாக்கி மீண்டும் அதைக் குளிர வைக்கும் கண்ணாடிக் குழாய் ஒன்றும், இரண்டு மூன்று சோதனைக் குழாய்களும் கிடைத்திருப்பது கவனிக்கத் தக்கது. இவ்விரண்டு சாமான்களும் அங்கு எப்படிக் கிடைத்திருக்கக் கூடும் என்பதை யோசித்து யோசித்து என் மூளை குழம்பி விட்டது. கண்ணாடிக் குழாய்கள் யவன நாட்டிலிருந்து வந்ததாகக் கொண்டாலும், அவை என்ன காரியத் திற்காக இங்கு உபயோகப்படுத்தப்பட்டன என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம். எனது நீண்ட ஆராய்ச்சியில் எனக்குத் தோன்றுவது என்னவென்றால், பண்டைத் தமிழ்ச் சங்கத்தில் புலவர்கள் இலக்கிய ஆராய்ச்சி மட்டும் நடத்தவில்லை, ரஸாயன பௌதிக ஆராய்ச்சிகளும் நடத்தினார்கள் என்பதே. இதை எவரும் மறுக்க இயலாதவாறு நிரூபிப்பதற்கு வேண்டிய சாதனங்கள் இப்பொழுது என் கைவசம் இருக்கின்றன என்று நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன். (பலத்த கரகோஷம்.) பண்டைத் தமிழகத்தில் விஞ்ஞானப் புலவர்களும் இருந்திருக்க வேண்டும் என்பது வெள்ளிடை மலை. முதல், இடைச் சங்கங்கள் வெறும் தமிழாராய்ச்சிக் கழகங்களாகவே இருக்க, கடைச் சங்கம் எல்லா வித ஆராய்ச்சிகளும் நடந்த ஒரு சர்வகலாசாலையாக மாறியிருக்க வேண்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நாளந்தா, காசி சர்வகலாசாலைகளைக் காட்டிலும், புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட இம்மதுரைச் சர்வ கலாசாலை எவ்வகையிலும் பின்னடைந்ததல்ல என்பதே எனது அபிப்பிராயம் (கேளுங்கள்! கேளுங்கள்!). ஆனால் இந்த விஷயத்தில் ஆராய்ச்சி போதாது. இத்துறை இப்பொழுது புதிதாகத் திறக்கப்பட்டிருக்கிறது. வேலை செய்பவர்கள் மிகச் சொற்பம். இந்திய மாணவர்கள் இத்துறையில் இறங்கி ஆராய்ச்சி செய்ய முன்வருவார்களானால், அது தமிழ் நாட்டிற்கும், சரித்திரத்திற்குமே செய்த ஒரு மாபெருஞ் சேவையாகும் (மீண்டும் கரகோஷம்).
“கடைசியாக உங்களுக்கு ஒரு சந்தோஷச் செய்தியைத் தெரிவித்துவிட்டு, இன்றைப் பிரசங்கத்தை முடித்துக்கொள்கிறேன். சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு ஓர் இடத்தை வெட்டிக்கொண்டிருந்தோம். அது மண்ணில் புதைந்த ஒரு மாளிகை போல் தோன்றியது. செங்கல்கள் குவியல் குவியலாகக் கிடைத்தன. அத்தகைய மாளிகைகள் அடுத்தடுத்துச் சுமார் ஐந்தாறு தோண்டி யெடுக்கப்பட்டிருக்கின்றன. ஏறக்குறைய இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பு, ஆகாயத்தை யளாவும் அரச மாடங்களாக இருந்த அக்கட்டிடங்கள் இன்று வெறுஞ் செங்கற் குவியல்களாக இருப்பது என்னே பரிதாபம்! என்னே காலத்தின் கோலம்!
“அம் மாளிகைகளைப் பற்றி நமக்குக் கவலையில்லை. அவற்றில் கிடைத்த சில ஏட்டுச் சுவடிகளைப்பற்றி உங்களுக்குக் கூற விரும்புகிறேன், ஐம்பெருங் காப்பியங்களில் இதுவரை அகப்படாதிருந்த ‘வளையாபதி’ என்ற சங்கநூல் இப்பொழுது கிடைத்துவிட்டது என்பதை அறிய நீங்கள் குதூகலமடைவீர்கள். அப் பண்டைத் தமிழ் நூல்களை நன்கு ஆராயுங் காலை, அற்புதமான சில விஷயங்கள் வெளியாகின்றன. கி. பி. மூன்றாவது. நான்காவது நூற்றாண்டுகளில் இந்து தேச சரித்திரத்தைப் யற்றி இதுவரை ஒன்றும் தெரியவில்லை. அச்சமயத்தில் இந்தியா முழுவதும் பாண்டியர்களது ஏகாதிபத்தியத்தில் இருந்தது என்பதைக் காட்ட நமக்குச் சில ஆதாரங்கள் இப்பொழுது கிடைத்திருக்கின்றன. புதிதாய் அகப்பட் டிருக்கும் இக்காப்பியத்தை ஆராயுங்காலை, “சிந்துவில் நங்கொடி நாட்டிய மாறன்” “பஞ்சநதம் வென்ற குஞ்சர முடையோன்” “திருநகர் வென்ற இருநெடுந் தோளான்” என்னும் அடிகளைக் காண்கிறோம். எப்பொழுது, யார் காலத்தில் பாண்டிய சாம்ராஜ்யம் பஞ்சாப், காஷ்மீரம் முதலிய நாடுகள்வரை பரவியிருந்தது என்பது இன்னும் நிச்சயமாகத் தெரியவில்லை. இவ்விஷயத்தில் இன்னும் நீண்ட ஆராய்ச்சி செய்தல் அவசியம்” என்று சொல்லி முடித்தார்.
சர்வகலாசாலையில் வில்லியம் டானியலின் பிரசங்கங்கள் முடிந்தன. நாடெங்கும் அவரைப்பற்றியும், அவருடைய ஆராய்ச்சியைப் பற்றியுமே பேச்சாக இருந்தது. சர்வகலாசாலை அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது. சர்க்கார் அவருக்கு ஸர் பட்டம் கொடுத்தார்கள்.. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்னும் பழமொழியைப் பின்பற்றித் துரையவர்களும், ‘வெட்டியெடுக்கப்பட்ட மதுரை’ ‘பாண்டிய சாம்ராஜ்யம்’ என்னும் இரண்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டார். அவை ஆயிரக் கணக்கில் விலையாயின். கூடிய சீக்கிரத்தில் அவருக்குச் சீமையிலேயே ஒரு சர்வ கலாசாலையில் இந்திய சரித்திர ஆசிரியர் வேலை கிடைக்கவும் புறப்பட்டுப் போய்விட்டார்.
ஸர் வில்லியம் டானியல் சீமை சென்று இரண்டொரு வாரங்களாயின. நானும் என் நண்பன் ஜகந்நாதனும் எங்கள் ஊருக்குச் சென்றோம். எங்கள் ஊருக்குச் செல்லும் வழியில்தான் மதுரை இருக்கிறது. ஆயினும் நாங்கள் அதுவரை அந் நகரைப் பார்த்ததே இல்லை. ஆகையால் மதுரையில் இறங்கினோம். மீனாக்ஷி யம்மன் கோவில், புதுமண்டபம், திருமலை நாயக்கர் மஹால் முதலிய இடங்களைப் பார்த்தோம். அங்கிருந்து நாற்பது மைல் தூரத்தில்தான் புதிதாய் வெட்டியெடுக்கப் பட்ட மதுரை இருக்கிறதென்று எங்களுக்குத் தெரியும். ஆகையால் அதையும் பார்த்துவிட்டு வரலாமென்று எங்களுக்கு ஓர் ஆவல் தோன்றியது. மறுநாள் காலை பஸ்ஸில் அவ்விடத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கு ஒரு பழம் பொருட்காட்சிசாலை(Museum) கட்டியிருந்தார்கள். அதைப் பார்த்துவிட்டு, வெட்டியெடுக்கப் பட்ட நகரத்தைப் பார்க்கச் சென்றோம். அங்கு இன்னும் வேலை நடந்துகொண்டிருந்தது. நாங்கள் அதைப் பார்த்துக்கொண்டு வரும்போது, பக்கத்துக் கிராமவாசிகள் இருவர் ஏதோ பேசிக்கொண்டு செல்லும் சப்தம் கேட்டு, அவர்கள் என்ன பேசுகிறார்களென்று நான் கவனித்தேன்.
ஒருவன் :- இதென்ன அண்ணே! ஏதோ வெட்டிகிட்டிருக்காங்க, மூணு, நாலு மாசமாப்புடுச்சு?
மற்றொருவன்:- நாலஞ்சு மாசங்களுக்கு முன்னே, ஒரு வெள்ளைக்காரத் தொரை வந்தான். ரெண்டு, மூணு நாளா என்னமோ இந்த இடத்தைச் சுத்திச் சுத்திப் பார்த்தான். அப்புறம் 50,60 ஆளைக் கொண்டுவந்து வெட்டச் சொல்லிச் செங்கல்களை வண்டி வண்டியா ஏத்திக்கிட்டுப் போயிட்டான்.
ஒருவன்:- இங்கு முன்னாலே என்ன இருந்தது அண்ணே?
மற்றொருவன்:-அது ஒனக்குத் தெரியாதா? 30, 40 வருஷத்திற்கு முன்னே, அந்த இடத்திலே, சங்கிலித் தேவன் இண்ணு ஒருவன் அஞ்சாறு செங்கல் காளவாசல் வச்சிருந்தான். அப்புறம் ஒரு பெரிய வெள்ளம் வந்து ஒரே மணல் மேவிப் போய், எல்லாம் பூமிக்குள்ளே அமுங்கிப் போச்சு. நாங்கூட நாலு வருஷத்துக்கு முன்னாலே, வீடு கட்டறதற்கு அதிலே இருந்துதான் செங்கல் தோண்டி எடுத்துக்கிட்டுப் போனேன். இப்ப அந்த வெள்ளக்காரப் பயல் வந்து, அவ்வளவு செங்கல்லையும், வண்டி வண்டியா ஏத்திகிட்டுப் போயிட்டான்.
நாங்கள் இருவரும் இந்தச் சம்பாஷணையைக் கேட்டுத் திடுக்கிட்டோம்.
“சரித்திர ஆராய்ச்சியின் லக்ஷணம் எப்படி இருக்கிறது?” என்றான் என் நண்பன்.
– வாடா விளக்கு முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.
![]() |
சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 7, 2025
பார்வையிட்டோர்: 78
