சப்த வேதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 12, 2024
பார்வையிட்டோர்: 999 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குரலோசை – இல்லை சப்தங்களின் சோதனையில் என் வாழ்க்கை அழிந்தது. 

சங்கீதமல்ல – வாழ்க்கையின் தினசரி ஓசைகள் – பண்டங்கள் உருளல் – கதவுகள் திறத்தல் – எச்சிலின் துப்பல் – இருளில் ஒரு தும்மல்- இம்மாதிரி சப்தங்கள் என் வாழ்க் கையை அப்போதைக்கப்போது, அவைகளின் இஷ்ட உரு வாக்கி என்னைக் குட்டிச்சுவராக்கிவிட்டன். 

கற்பனை என்பது ஆபத்து. கட்செவி போன்று, அதி ஸன்னமான ஓசைகளைப் பெறும் செவியையும் படைத்து, பிறகு அவ்வோசைகளின் உள்ளர்த்தங்களைக் கண்டுபிடிக்க. அவ்வழியே கற்பனையையும் ஓட்டிவிட்டால் அப்புறம் தசரதனின் சப்த வேதி’ சமாசாரம்தான். அவன், புனலில் அமிழும் குடத்தை புலியின் தாகமெனத் தப்பாக அர்த்தம் பண்ணி அழிந்தான். நான் சரியாக அர்த்தம் பண்ணி அழி கிறேன். இதுதான் வித்தியாசம். இறுதியில் இருவரும் கண்ட பலன் ஒன்றுதான். 

சப்தங்களின் அர்த்தம் என் மனதில் முதன்முதலில் உறைத்த பொழுது எனக்கு ஒன்றும் பிரமாதமாய் வயதாகி விடவில்லை. பதிமூன்று, பதினாலு இருக்கும். இரண்டுங் கெட்டான் வயது. ஒரு நாளிரவு எல்லோரும் சாப்பாடாகி, படுக்கையுமாகி, விளக்கை அணைத்துவிட்டு, தூக்கம் வராமல் பேசிக் கொண்டிருந்தோம். வீட்டில் ஒரு விருந்தாளி. அன்று மாலைதான் ஊரிலிருந்து வந்திருந்தார். பேச்சுக்குக் கேட்பானேன்? என்னென்னவோ ஆரம்பித்து, எங்கெங்கோ சென்று எது எது வோ ஆகி, பிறகு, அவர் எப்பவோ. பட்டணத்திலிருந்து திருச்சினாப்பள்ளிக்குச் சென்ற ஒரு ரயில் பிரயாணத்தில் போய் முடிந்தது. 

அவருக்கே ஒரு தனி மிருதுக் குரல். தாழ்ந்த சுருதியில் கனகன’வென நெருப்பில் வைத்த பக்குவத்தில், அவ் விருளில், அவ்வறையை நிறைந்து, செவியில் மோதும் பொழுது, அவர் சொல்வதெல்லாம் கண்முன் வந்து நின்றது. அப்பொழுது வைகாசி மாதம் இருந்தும்,ஐப்பசி மாதக் குளிரில் விறைத்தாற்போல், நான் படுக்கையில் அக்குரலின் வசப்பட்டுக் கட்டையாய்க் கிடந்தேன்:- 

“நீங்கள்கூடப் பேப்பரில் படித் திருக்கலாம். நானு ம் அதே ரயிலில் அதே வண்டியில் உட்கார்ந்திருந்தேன். என் நல்ல காலம் எனக்குத் தூக்கம் வரவில்லை. அவர்களுக்கு வேளைக்காலம் தூங்கி வழிந்துகொண்டிருந்தார்கள். ஆனால் அப்படியும் நேரமாகி விடவில்லை. 

இன்னும் கொள்ளிடம் பாலம், தண்டவாளம் போட்டு ரயில் ஓடிக்கொண்டிருந்தாலும் கட்டி முடியவில்லை. வண்டி ஸ்ரீரங்கத்தை விட்டு ‘பாஸ்’ ஆகிவிட்டது. ஆடி மாதம் நேரமாகாவிட்டாலும் முன்னிருட்டு. காவேரி பிரமாதமான பெருக்கிலிருந்தாள். அவ்வெள்ளத்தை எப்படி வர்ணிப்பது? 

நானிருந்த பெட்டியில் அவ்விருவர்தான் இருந்தனர், கூலியாட்கள் போலும் அவனவன் கையில், சரியாய், கால் படி மோருஞ் சாதம் பிடிக்குமளவில் ஒரு டிபன் டப்பாவை அமுக்கிக் கொண்டிருந்தான். இப்பொழுதுகூட, இதோ என் கண் முன் நிற்கிறார்கள், அவர்கள்- கன்னம் முண்டி கடை வாயில் புகையிலைச் சாறு வழியத் தூங்கிக்கொண்டு. 

திடீரென்று நடுப்பாலத்தில் வண்டி நின்றது. இன்னமும் கைகாட்டி சாயவில்லையோ என்னவோ? வீல்” என்று வண்டியின் ஊதல் அலறியது. அவ்வலறல், அப்பரந்த வெளியில் ஆகாயத்தைக் கிழித்துச் சென்றது. அதைக் கேட் டதும், உடனே விழித்துக்கொண்டு விட்டார்கள். அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று எனக்கெப்படித் தெரியும்? ஸ்டேஷன் வந்துவிட்டதென்று நினைத்துக் கொண்டு விட்டார்கள். அவசர அவசரமாய், டிபன் டப்பா வைத் தூக்கிக்கொண்டு கதவைத் திறந்துகொண்டு ஒருவன் இறங்கினான். அவனை ஒட்டினாற்போல், மற்றவனும் இறங்கிவிட்டான் 

நான் என்ன பண்ணிக்கொண்டிருந்தேன்? எனக்குத் தெரியாது.இன்னமும் தெரியவில்லை. மூளையைச் சுரண்டி யோசனை செய்கிறேன், இன்னமும் தெரியவில்லை. இந்த பயங்கரம். என் மனதில் ஊறி. நான் அபாய அறிவிப்புச் சங்கிலியை இழுக்குமுன், கைகாட்டி சாய்ந்து வண்டி வேக மெடுத்துவிட்டது. நிறுத்தியும் என்னபயன்? அந்நள்ளிரவில், நடுவெள்ளத்தில், எதைத் தேடுவது? கரையோரமாய்த் தான் தேடவேண்டும், காலையில் முதலை விழுங்காமலிருந் தால் – ஐயோ உனக்கென்ன? – 

நான் “வீல்’ என்று அலறிவிட்டேன். எல்லோரும் என்னைச் சுற்றிக்கொண்டார்கள், எனக்கு மூன்று நாள் சரி யான ஜுரம் அடித்தது. வேளை வந்ததும், காலத்தை முடிக்க, எவ்வளவோ கணக்காய் ஏற்பாட்டைச் செய்து, காரியத்தை முடிக்கும், விதியின் வெல்ல முடியாத் தன் மையை, ஆணி அறைந்தாற்போல், அவ்விருளில் அழுத்த மாய் உணர்த்திய அக்குரலின் பயங்கரத்தை என்னால் ஸகிக்க முடியவில்லை. அன்று முதல் என் உடலில், பழைய துணிச்சலும், ஆரோக்கியமும் ஒருநாளும் இருந்ததில்லை. 

ஒருவேளை காலையில், இந்தக் கதையை கேட்டிருந் தால், அவ்வளவு பயந்திருக்க மாட்டேனோ?-இருளில் கேட்டதால் வந்த விபத்தோ? ஆம். இரவில்தான் சப்தங் களின் சக்தி வலுக்கிறது. ஒளி மங்கியதும், ஒலி ஓங்குகின்றது. 

ஆனால் அன்று முதலே என்னை அறியாமலே சப்த சோதனைக்கு ஆரம்பித்துவிட்டேன். அதில் அசரீரி… அநுபவமும் ஒன்று. நம் நினைவின் ஓட்டத்தில், திடீரென்று எங்கிருந்தோ, சம்பந்தமில்லாத ஒரு தனிகுரல் கல்லெறிந் தாற்போல் விழுந்து கலக்குவதை? – இதைச் சகுனம் பேசுதல் என்பதா சப்தஜாலம் என்பதா?- 

எனக்கு ஒரு பிராண சிநேகிதனிருந்தான், அவனைப் பற்றி நினைக்கவும் கஷ்டமாயிருக்கிறது. அவன் என் வாழ்க் கையில், புகுந்து, இருந்து, மறைந்தது. ஒரு இன்பக்கனவு கண்டு விழித்தது போலேயாகும். அம்மாதிரி சிநேகிதத் திற்குப் பாத்திரனாக என்ன புண்ணியம் செய்தேனோ, அதைப்பூரா அனுபவிக்கக் கொடுத்து வைக்காவிட்டாலும் :- 

அவன் ஒருநாள் மாலை உலாவிவிட்டுப் படுத்தான். தலை வலிக்கிறதென்று. அவ்வளவுதான். மடமடவென்று அன்றிரவு ஏறிய ஜூரத்தில் காலை வரையிலும் காத்திருக்க முடியவில்லை. இரவோடிரவாய்க் கொண்டுபோய் ஆஸ்பத் திரியில் சேர்த்துவிட்டார்கள். மறுநாள் எனக்கு வார்த்தை வந்தது. அவனைக் காண வீட்டை விட்டுக் கிளம்பினேன். வாசல்படியிலிருந்து காலெடுத்து வைக்கும்போதே – தெருவில் யாருடனோ, எதுவோ பேசும் எவனோ ஒருவன் அது அப்பவே தீர்ந்துவிட்டதே! – என்றான். எனக்கு அப்பவே தெரிந்துவிட்டது ஆஸ்பத்திரியில் அவன் படுக் கையை சுருட்டியாய் விட்டதென்று.இருந்தும் சென்று, அந்தக் கட்டிலை வெறுத்துப் பார்த்துக்கொண்டே நின்றேன்..அடிவயிறு சுருட்டியது. 

அவருடலை அப்பவே கெடங்குக்கு எடுத்துப் போயிட் டாங்களே!’ என்று வார்டு பையன் கூறியது காதில் விழுந்ததேயொழிய அப்பொழுது மூளையில் ஏறவில்லை! 

அப்புறம் பவானி! 

பவானியும் நானும் காலேஜில் ஒரே வகுப்பில் படித்தோம். 

வாழ்க்கையில் அக்கட்டத்தில் எனக்கு உதவுகின்றவர் ஒருவருமில்லை. நானே ராஜா. நானே மந்திரி. அப்பா நல்ல வேலையாய். தான் போகுமுன், நான் கஷ்டப்படாத படிக்கு கொஞ்சம் சொத்து வைத்துவிட்டுப் போயிருந்தார். பிதுரார்ஜிதமும் இருந்தது. உத்தியோக வேட்டையாடும் கஷ்டமுமில்லை. எனக்கு உத்தியோகத்தில் அக்கறை யில்லை. களம்பறித்துப் படிக்காமல், என்னிஷ்டப்படி படிப் பில் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான் பவானியைச் சந்தித்தேன். 

வகுப்பில் எத்தனையோ பெண்களிருந்தார்களே, அவர் களிடம் என் புத்தி செல்லவில்லை! ஆம், பாவனியைவிட எவ்வளவோ, அழகிகளெல்லாம் இருந்தார்கள். ஸ்வர்ணா என்று ஒருத்தி. அவள் பெயர் அவளுக்குத்தான் தகும். ஸ்வர்ணா விக்ரஹம்தான். ஆனால் வாயைத் திறந் தாலோ, மயில் அகவுவது போலிருக்கும். ஆனால் மிஸ் பவானியோ! 

ஒருநாள் மாலை, காலேஜ் புத்தக சாலையில், நேர மானதும் தெரியாமல், படித்துக்கொண்டிருந்தேன். என்ன புத்தகம் என்று மறந்துவிட்டது. (டாகூரின் கீதாஞ் சலியோ?) எழில் மிகுந்த நடை, வாய்விட்டு வார்த்தைகளை எழுத்துக் கூட்டுவதுபோல், நாவில் உருட்டி உருட்டி சுவைத்து, அவைகளின் சப்தத்தை அனுபவித்துக்கொண் டிருந்தேன். 

அப்பொழுது அவ்வந்திப் பொழுதினிலே, எந்த சமயத் தில் என்ன நேருமோ என்றும் இனிப்பான அச்சம் ததும்பும் அந்த இந்திரஜால வேளையிலே, கிரந்தங்களின் உயிர்களும், அவைகளை சிருஷ்டிக்க, தங்கள் இதயச்சாறை அவைகளுக்கே பலியான இலக்கிய கர்த்தாக்களின் ஆவிகள் உலவும் அந்த நேரத்திலே, என் பின்னிருந்து ‘கிளுக்’ என்று ஒரு சிரிப்பு ஒலித்தது. அது என்செவியில் மோதியதும், நான் என்னத்தைக் கேட்டேனோ? கனகசபையில் ஆடும் சிவபிரானின் காற் சிலம்பொலியோ? அவன் கேலிக்கூத்தின் ஏளனம் அத்தனையும் அச்சிரிப்பில் ஒலித்தது. 

“ஹல்லோ” எத்தனை நாளாய் அரிச்சுவடியில் முனைந் திருக்கிறீர்கள்? காலேஜ் வந்ததும் ஸ்கூல் பாடம் திருப்புகி றீர்களோ?- 

அவளுடைய குளிர்ந்த மூச்சு என் பிடரியில் விளையாடியது. புன்னகையில் அவள் கன்னம் குழிந்தது. மை தீட்டிய விழிகளில் குறும்பொளி வீசியது. 

‘பவானி!’ 

புன்னகை தவழும் முகத்துடன் அவள் சற்றுப் பின்ன டைந்தாள். அவள் மயிரில் பதுங்கிய சாமந்திக்கொத்தின் மணம் அவளைச் சுற்றிக் கமிழ்ந்தது. அவள் கட்டியிருந்த மூக்குப்பொடிக் கலர் புடவை – அவள் நடக்கும்பொழுது சலசலத்தது. அணைக்கவே கடைந்தாள் போன்ற அவள் இடை, அவள் நடக்கும் பொழுது ஒடிந்தது. 

நான் இதுவரை காணாததை அன்று கண்டேன். 

நானும் பவானியும் மணம்புரிந்து, தனிக்குடித்தனம் நடத்தினோம். காலேஜ் வாழ்க்கையின் நாகரிகம் அவள் பசுமையை வெதும்பி, அவளைப் பிஞ்சில் பழுத்த வெம் பலாக்குமுன், நான் அவளைக் கொண்டுவிட்டேன். 

ஆனால், பவானி, கொலுவில் வைத்த பொம்மைபோல், பார்க்கவும் கேட்கவும் அழகேயன்றி, வேறு சமையல் செய் யவோ, வீட்டு வரவு செலவுக் கணக்கைக் கவனிக்கவோ, குடும்பப் பொறுப்பை ஏற்கவோ பயனிலள். அதனால் என்ன,கடவுள் புண்ணியத்தில் ஏதோ கொஞ்சம் சௌகரியங்களிருக்கின்றன. காசைக் கொடுத்தால் சமையல்காரி – இதெல்லாம் என்ன பவானியைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தாலே போதுமே, பசியும் வருமோ? 

பவானியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இல்லை எங்கு பார்த்திருக்க முடியும்? கதவின் மேல் சாய்ந்தவண்ணம் ருகாலை அழுந்த ஊன்றி இன்னொரு காலை ஒடித்து, நிலை வாசலில் நின்றுகொண்டு, நெற்றிப்பொட்டில் சரிந்த மயிர் சற்றுக் கலைந்து மோத, தோளில் மோவாய்க் கட்டையை அழுத்தி, கண்களை மலர்த்தி, உம்முடைய கண்களினுள் உம்மை வெறித்து சற்றுக் குழிசிரிப்பாய் சிரித் தாளெனில் வந்தது உலை, உம்முடைய மனநிம்மதிக்கும் தூக்கத்திற்கும். அத்துடன் உரக்க உரக்கவும் சிரித்து விட்டால் – என் செவியின் கூர்மையில், என் கண்கள் மங்கி விட்டன. அவள் உடலழகைவிட, அவள் சிரிப்பின் ஒலியை யும், அவள் குரலின் ஓசையையும் தான், நான் அனுபவிக்க முடியும். 

அவள் பேச்சுக்கு குடத்தில் தண்ணீர் தளும்பும் சத்தம் தான் உவமை. அவள் சிரித்தால் ஓடும் தண்ணீரில் கல்லை விட்டெரிந்தாற்போல், ஸ்வரமும், அபஸ்வரமும் கலந்த ஒரு தனி நாதம் கிளம்பி உள் இதயத்தைக் கொள்ளை கொண்டு விடும். ஆம் நீங்கள் பவானியைப் பார்த்தும் கேட்டுமிராத. வரையில் தப்பித்தீர்கள். அவளுடைய தரிசனத்தின் இன்பமே, ஒரு சகிக்கவொண்ணாத் துன்பம். அவ் வானந்தமே ஒரு அவஸ்தை. ஒரு பேதை. எனக்கு  திடீர் என்று தீராத ஒரு சந்தேகம். அவள் கஷ்டம் என்பதையே அறியாளோ? எப்பொழுதும் சிரித்த முகம் தான். கண்டதெல்லாம் சிரிப்பு. ஒன்றுமில்லாவிட்டால் எதையாவது நினைத்துக்கொண்டு பாவம் சிரித்துக்கொண் டிருப்பாள்! 

திடீரென்று ஒருநாள் நினைத்துக்கொள்வாள். மூலை யில் புழுதி படிந்து உரையும் போடாமல் நிற்கும் வீணையை எடுத்து மீட்டி, பட்டைகளில் விரலை யோட்டும்பொழுது அக் கை விசேஷத்தில், ஸ்வர ஜாதிகள் புதுப்புது விதமாய்க் கூடி, புதுப்புது நாதங்கள் பிறக்கும். 

அவள் போக்கின்படி நான் விட்டு அவளிடமிருந்து வரும் நாதங்களைக் கேட்டு இன்புறுவேன். 

ஆனால் அதேமாதிரி ஏன் என்னை என் இஷ்டப்படி விடுவதில்லை. அறுபது நாழியும் வீட்டுக்குள்ளேயே எப்படி உங்களால் உட்கார்ந்திருக்க முடிகிறது? ஐயோ, முகமெல் லாம் வெளுத்துக் கண்ணெல்லாம், வரவா உள்ளே போகின்றதே! 

ஏன் சும்மா எங்கேயோ பார்க்கறேள்? என்னத்தைத் தேடறேள்? ஆம், நான் எதைத் தேடுகிறேன்? 


வானம் அமைதியாயிருக்கின்றது. என்னென்ன சப்தங் களோ, ஆகாய வெளியில் நீந்துகின்றன. ஆனால் வானம் மாத்திரம், வாயை மூடிக்கொண்டிருக்கிறது. 

பிறகு- 

ஒரு நாளிரவு வானம் இருண்டு, இன்னும் குமுறுகிறது. சந்திரன் எங்கோ ஓடி ஒளிந்துவிடுகிறான். 

பிசுபிசு வென்று ஒன்றிரண்டு தூறல் – பிறகு மழை ஜோ வென்று ஊற்றும். மழை – காற்று – புயல் – சொடேர்- சொடே ரென்று மின்னல் எங்கேயோ ‘மொள மொள வென்று, ஒரு மரம் முறிகிறது- மின்னல் வானத்தை வெட்டும்பொழுதெல்லாம், வானம் அடிபட்ட விலங்கு போல் அலறியது. 

இயற்கை வெறி. 

“ச-பா-ஷ்!” 

“ஐயோ, இதென்ன கூத்து! மின்னல் கண்ணைப் பறிக்கிறது. ஜன்னலண்டை போய் நிற்கிறேளே! –குழந் தைக்குத் தூக்கித் தூக்கிப் போடுகிறது – ஐயோ, கதவை மூடுங்களேன்! எனக்குப் பயமாயிருக்கே! 

சீ, ஆயிரம் படித்தால் என்ன, பெண் புத்தி பின் புத்தி தான் – இவ்விடியில் நாசக்கூடத்தின் டமருக ஒலி எனக்கு மாத்திரம் கேட்டு அவளுக்கு ஏன் கேட்கவில்லை? சப்த சோதனையின் மஹாபோதையைப் பற்றி அவள் என்ன கண்டாள்? 

ஆம், இவள் வரவர என்னை ஒதுக்குகிறாள் – முன் போல் புதுப்புடவையின் மடிப்போசையுடன் வளைகள் குலுங்க மாடிக்கு ஓடி வருவதில்லை. நிச்சிந்தையான அவள் சிரிப்பு வீட்டில் ஒலித்து எத்தனையோ நாளாகிறது. நான் மாடியில் இருந்தால் அவள் கீழிருக்கிறாள். நான் கீழேயிருந் தால் அவள் மாடியிலிருக்கிறாள். குழந்தையைச் சாக்கிட்டு அவள் வேறு அறைக்கும் மாற்றிக்கொண்டு விட்டாள். 

மலர்ந்த மொக்கு வாயுடன் குழந்தை அறைக் கண் மூடியபடி தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தான். நான் பக்கத்தில் போய் நின்று, குனிந்தேன். அவன் விழித்துக் கொண்டு சிறு கைகளை நீட்டி, என் மோவாய்க்கட்டையை எட்டிப் பிடித்து, ‘கிளுக்’ என்று சிரித்தான். 

குழந்தைகளின் ஸ்பரிசமோ, குரலோசையோ பட்ட மாத்திரத்தில் உடல் புளகிக்கிறது. ஸஹிக்க முடியாத ஆனந்தத்தில், மயிர் கூச்செறிகிறது. அச்சமயம் உடம்பில் பரபரக்கும் வெறியில் என்ன செய்கிறோம் என்பதும் தெரிய வில்லை. அக்குழந்தை கெக்கரிப்பைக் கேட்டதும் உடைப் பெடுத்து ஆசைப்பெருக்கில் அவனை அப்படியே வாரி உடலோடு சேர அணைத்துக்கொண்டேன். வரண்ட பூமி உறிஞ்சிய தண்ணீரைப் போன்றிருந்தது என் தாபத்தின் தவிப்பு. 

“ஐயையோ கொலை, கொலை!” 

பயத்தால் வெளுத்த அவள் முகத்தில் நீலமும் படரு வதை என் கண்ணாலேயே கண்டேன். குழந்தையை அப்படியே கீழே வளர்த்திவிட்டு, அங்கு விட்டு அகன்றேன். 

அன்றுமுதல் குழந்தை அருகே செல்லவும் எனக்குச் சமயம் வாய்ப்பதில்லை. அவன், அவளிடுப்பிலிருந்து கொண்டு, கைகளை நீட்டி நீட்டி, என்னைப் பார்த்துச் சிரிக் கிறான். நான் வேதனையடைகிறேன். 


நாதபிந்துவின் பிரம்மாண்டமான சுழலில் சில சமயங் களில் அதன் வேகத்தை நாம் தொட முடிகிறதேயொழிய, காதால் கேட்க முடிகிறதில்லை. அம்மாதிரியான அபூர்வ மான சந்தர்ப்பங்களில் நம்மனம் அக்கன வேகத்தில் அகப் பட்டு, தன் செயலிழந்துவிடுகிறது. உடலெல்லாம் ஒரே மாதிரியாய் விறுவிறு க்கின்றது. மெளனமும் வாய்விடாமல் அலறி நம்மைக் கட்டிவிடுகிறது. 

அம்மாதிரிதான், இன்றிரவு, நான் எங்கேயோ போய் விட்டுத் திரும்பி,மாடியேறி, ஹாலில் நுழைந்து விளக்கைப் போட- 

இல்லை போட வரவில்லை. பொத்தானை அமுக்க விரல் மறுத்துவிட்டது. என் இதயம் தொண்டைவரையில் எழும்பி வாயை அடைத்துவிட்டது. உடம்பெல்லாம் ஒரு பயங்கர பரவசம். 

என் அறையில் யாரோ இருப்பதாக உணர்ந்தேன். பொத்தானில் வைத்த கை வைத்தபடியே, அப்படியே கல்லாய்ச் சமைந்தேன். 

“எனக்கு வரவர பைத்தியம் பிடித்துவிடும்போல இருக்கு – வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கேன்.” 

(இது பவானி) 

“நான் அப்பவே சொன்னேன்-” 

இது வேற்றுக்குரல், சப்த சோதனைகளிலேயே தோய்ந்த என் மூளை விறுவிறுவென்று வேலை செய்து, சாதக வேகத் தில் இந்தக் குரலையும் தாக்கல் செய்துகொண்டு, அதன் குண குணங்களை அலசி ஆராய்ந்து – எல்லாம் ஒரு இமைப் பொழுதில் பாகுபடுத்திவிடுகிறது- 

ஆம் இதுவும் சுவாரஸ்யமான சாரீரந்தான். அசாதாரண மில்லாவிட்டாலும் ஆண்மை மிகுந்து கன மிருதுவாய் மழை இருளைப்போல் மனத்தின் ஒரு இன்பமான அச்சத்தை யுறுத்தும் பெண்களுக்கு மிகவும் இச்சையான குரல்- 

“ஆமாம் நான் அப்போ என்னத்தைக் கண்டேன்?” 

“ஆம், என்னத்தைக் கண்டாய்? – உனக்குப் பணம் ஒன்றுதான் பிரதானமாயிருந்தது. புதுப்புடவை, தைலம், ஸ்நோ, நகை,நட்டு-” 

“சுதர்சனா, இந்த சமயத்தில் சொல்லிக் காண்பிக்கவா உம்மைக் கூப்பிட்டு அனுப்பித்தேன்?” 

“ரொம்ப பேஷ், பெண்கள் ஸ்பாவமே இப்படித்தான். தங்களிஷ்டப்படி ஆடவும், தங்கள் சிக்கல்களை நிவர்த்திக் கவும் தான் கடவுள் ஆண்களைப் படைத்திருக்கிறார் என்று -பவானி, அந்நாளை நினைத்தால்- 

“சுதர்சன், நாம் இப்பொழுது சண்டையா போடப் போகிறோம். அந்த சமயத்தில் ஏமாந்துபோய்விட்டேன். என் வீட்டில் என்னமோ படிக்க வைத்தார்களேயொழிய, கையில் ஒன்றும், ஈரம் இல்லை. எனக்கும் மாற்றாந்தாய்க் கொடுமை பொறுக்காமல், எப்படியாவது வீட்டை விட்டுத் தப்பித்தாலே போதும் என்றாகிவிட்டது. ஆனால் அப் பொழுது இவர் அவ்வளவு மோசமாயில்லையே… 

“என்றைக்குமே அவன் கிறுக்குத்தான். என்ன செய் கிறான்?” அம்மாதிரி கேட்டால் நான் என்னத்தைச் சொல்ல? “அவருடைய பார்வை எனக்குப் பயமாயிருக்கு எங்கேயோ எதையோ பார்த்துக்கொண்டு – நிலைத்த பார்வையேயில்லை தூக்கத்தில் நடக்கிறப்போல எப்பவும் காக்காய்போல தலையை சாய்த்துக்கொண்டு – இங்கித்து நினைப்பேயில்லாரம் ஏற்கனவே பூனைக்கண் அதுவும் இப்போ அதில் காக்காயும் வெளியும் பிடிச்சிருக்கு – எப்பவும் இருட்டிலேயே வந்து, விளக்கைப் போட்டால், சாதாரண மாய் (நாம் ஏதாவது யோசனையாய் வந்து) திடுக்கென, குத்துக்கல் மாதிரி சுவரோரமாய் ஒக்காந்திண்டுருக்கு… எத்தனையோ தடவை நான் அம்மாதிரி வந்து தூக்கிவாரிப் போட்டு அலறிப் புடைச்சுண்டுருக்கேன். அது குழந்தை யண்டைப் போறப்பெல்லாம் நடுங்குகிறது – எப்பவும் பாய்ச் சல்லேயே பதுங்கிண்டிருக்கு” அவள் குரல், பயங்கர வெறியும், கிறீச் சென்று உச்சஸ்தாயிக்கு ஏறிக்கொண்டே போயிற்று. • * உஷ் பவானி- -யாராவது வரப்போறா  அடக்கிக்கொள் வீண் பிராந்திக்கெல்லாம் மனசில் இடம் கொடுக்காதே – நீ படிச்ச பெண். இல்லை – நான்… பொம்மனாட்டி- (அவள் தன் வசத்திலில்லை. அவள்போடும் கூச்சலில் கீழிருந்து யாராவது வராமல் இருக் கணுமே) என்னால் இனிமேல் ஸஹிக்க முடியாது… ஒன்னு என்னை அழைச்சுண்டு போயிடு – இல்லாட்டா இங்கே ஏதாவது நடந்துடும் – தூக்குப்-” 

‘பளீர்’ என்று அவள் கன்னத்தில் அவன் அறைந்த அறையில் கூடம் அதிர்ந்தது. அவள் வெறியும் தணிந்தது. கூச்சலும் சட்டென்று அடங்கியது. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். 

எள் காதில் சமுத்திரம் இறைந்தது.மண்டை திகு திகு வென்று எரிந்தது. 

நான் அவ்விடம் விட்டு அகன்றேன். 

இனி என்ன செய்வது? 

என் பவுரஷம் எல்லாம் எங்கே போயிற்று. ஒரு காரணமு தமில்லாமல் என்னைக் காட்டிக் கொடுத்த அவள் பின் சென்று அவள் மயிரைப் பிடித்து இழுத்து, அவள் முகத்தை நிமிர்த்தி, குரல் வளையில் கையை தைத்து அழுத்து,நாவல் பழம் போன்ற அவள் கண்கள் பிகுங்குவதை- 

“சீ, இதென்ன, அவள் சந்தேகப்படுவதே போல் எனக்கு நிஜமாகவே பைத்தியம் பிடித்துவிட்டதா?” 

மறுபடியும் அந்த ‘ஜோ’ சத்தம் – என் எண்ணங் களுடன் கலந்து,நினைவின் ஓட்டத்தையே கலக்குகிறது. 

இல்லை அவளைக் கொல்வதில் என்ன பயன்? என்ன நியாயமுண்டு? – நீ அவளை மணந்தாயா- அல்லது அவளிடம் பரிணமிக்கும் இனிய நாதங்களை சதா அவளிட மிருந்து பருகுவதற்கே மணந்தாயா? – நாத சோதனையின் தத்துவத்தையும் ஸ்திரீ புருஷ வாஞ்சையையும் ஒன்றாய்க் குழப்பி உன்னையே நீ ஏமாற்றிக் கொள்ளாதே – 

அவ்விரைச்சலில் எனக்கு யோசனையே ஓடமாட்டேன் என்கிறது. அவள் இனி உன்னிடம் இருக்கமாட்டாள் அவளில்லாமல், நீ இருப்பாயா?–‘ 

“ஜோ-ஓ-ஓ-” 

எனக்கு மூச்சுத் திணறிற்று. ஜன்னலைத் திறந்தேன். மையிருள், உலகத்தை மலைப்பாம்பைப் போல் விழுங்கி யிருந்தது. குளுகுளுவென்று, சுழல் காற்று, முகத்திலும், கண் ரப்பையிலும் மோதியது. சமுத்திரக் காற்று- அலைகள் ஓயாது, கரையில் மோதி மோதி அலறுகின்றன. 

‘ஜோ-ஒ-ஒ-ஒ-“-ஓசையின் முடிவு. ஓங்காரத்தின் குழலோசை, அலைகளைத் தாண்டினால் – அப்பால் நாதாந்த மோனம் – நிர்ச்சலம்,நிம்மதி- 

ஆம், இதுதான் வழி – அதுவும் ஒரே வழிதான் – எனக்கு அலுப்பாயிருக்கிறது – ரொம்பவும் அலுப்பா-யிருக்கிறது.

அலை ஓய்வது எப்போ? – நான் நீந்தி அக்கரை போவது எப்போ? – அலை ஓயும்வரை நான் காத்திருக்க முடியுமா? 

– உத்தராயணம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 1992, வானதி பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *