சந்திர மண்டலத்து மனிதர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 5, 2025
பார்வையிட்டோர்: 85 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பௌர்ணமிக்கும் மூளையின் நரம்புகளுக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்குமோ என்று யோசித்தேன், முதலில். ஆங்கிலத்தில் பைத்தியக்காரர்களை ‘சந்திர மண்டலத்து மனிதர்’ என்கிறார்களே என்று நினைத்துப் பார்த்தேன். மதி என்றால் சந்திரன்; மதி என்றால் புத்தி. நிச்சயம் ஒரு சம்பந்தம் இருக்கிறது. அப்படியில்லாத பக்ஷம் இந்த மனிதன் ஏன் பௌர்ணமி தினம் பார்த்து இப்படி வரவேண்டும்? 

கார்த்திகை மாதத்துப் பௌர்ணமி அன்றுதான் முதன் முதல் எங்கள் வீட்டுக்கு வந்தான் அவன். சாயந்திரம் ஆறு மணிக்கு நான் ஆபீஸிலிருந்து திரும்பிய போது என் மனைவியும் குழந்தைகளும் கையில் தடிக் கம்புடன் அவனை வெளியே துரத்த முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். அவன் நகருவதாகக் காணோம்! 

இப்பொழுது நானும் சேர்ந்து கொண்டேன், அவனைத் துரத்துகிற முயற்சியில். 

என்ன ஆச்சரியம்! எத்தனை முறை விரட்டினாலும் அவன் எங்கள் வீட்டு முற்றத்தைவிட்டு நகர மறுத்தான். கோபத்தில் தடியால்கூட ஓங்கி அடித்துவிட்டேன். அந்த அடியின் வேதனை தாங்க மாட்டாமல் முற்றத்தை விட்டு வெளியே சென்றான். கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தால், பத்து நிமிஷத்துக்கெல்லாம் பழைய படி வாசலிலே நின்று தாழ்ப்பாளைக் கிலுக்கினான் அவன்! 

அந்த மனிதன் ஒரு பைத்தியம்! பைத்தியம் என்றால், வேட்டி சட்டையைக் கிழித்துக்கொண்டு அலைகிற கோட்டியில்லை. அழுக்கு உடுப்புத்தான்; ஆனாலும் ஒரு கால்ச்சராய். அதற்குமேல் ஒரு நீலச் சட்டை. சட்டைக்கு மேல் ஒரு உல்லன் மப்ளர். அந்த மப்ளருக்கு மேல் ஓபன் கோட்; அந்தக் கோட்டின் திறந்த காலரைப் பிரித்துக் கழுத்து வரை தூக்கிவிட்டு மூடியிருந்தான். தலையிலே ஒரு அழுக்குக் குல்லாய்! 

இரவு முழுதும், நிலா வெளிச்சத்தில், கொட்டுகிற பனியில், கடிகார முள் மாதிரி மையமான ஏதோ ஒரு பாசத்தில் கட்டுண்டு எங்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தான் அவன். விடியற்காலை கதவைத் திறந்து பார்த்தால் ஆளைக் காணவில்லை! 

அடுத்த பெளர்ணமி வந்தது. வந்து விட்டான், மறுபடியும், அதே பைத்தியம்! இந்தத் தடவை கையில் ஒரு துருப்பிடித்த பழஞ்சாவி. வழியில் எங்கோ கிடந்து எடுத்திருக்கிறான். காம்பவுண்ட் கதவை அடைத்தால், அதில் ஒரு துவாரம் இருப்பதுபோல் பாவனை செய்து கொண்டு சாவியைக் கொடுத்துச் சுற்றுவான், அந்தச் சந்திர மண்டலத்து மனிதன்! 

இந்தத் தடவை அவனைச் சற்றும் பொருட்படுத் தாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து விட்டோம்! 

மூன்றாவது பௌர்ணமி வந்தது; பைத்தியமும் வந்துவிட்டான். ஆனால் இந்த முறை அவனை எப்படியும் விரட்டிவிடுவது என்று தீர்மானித்தோம். 

அன்று சாயந்திரம், சூர்யநாத் சர்வகலாசாலை மனத் தத்துவப் பேராசிரியர் ராகவன் ஜட்கா வண்டியிலிருந்து எங்கள் வீட்டு முன்பு இறங்கியபோது, அவருடைய வரவேற்பாளர்களான நாங்கள் அனைவரும், கையில் தடிக்கம்புகளுடன் பைத்தியத்தைத் துரத்துகிற காரியத்தில் மும்முரமாகி நின்று கொண்டிருந்தோம்! 

“ஏது, வரவேற்பு பலமாக இருக்கிறதே!” என்று புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் ராகவன். 

பெட்டி படுக்கைகளை உள்ளே கொண்டு வைக்கும்படி வண்டிக்காரனிடம் சொல்லிவிட்டு, ராகவனை வீட்டினுள் அழைத்தேன். அவரோ, நாங்கள் துரத்துவதைப் பைத்தியம் எப்படி எதிர்த்துச் சமாளிக்கிறான் என்பதிலேயே கவனமாக நின்றார். 

“சுந்தரம், நான் சொல்வதைக் கொஞ்சம் கேட்கிறீர்களா?” என்றார் பேராசிரியர். 

“சொல்லுங்கள். கேட்காவிட்டால், விட்டுவிடப் போகிறீர்களா!” என்றேன். 

“இவனைத் துரத்தாதீர்கள். உள்ளே அழைத்துச் செல்வோம்” என்றார் மனத்தத்துவ ஆசிரியர். பக்கத்தில் நின்ற என் அம்மாவுக்கோ கோபம் வந்தது! 

“பைத்தியக்காரனை வீட்டுக்குள் அழைப்பதா?” என்றாள் அவள். 

“ஒரு பைத்தியத்துக்கு இடம் கொடுக்கிறீர்களல்லவா? இன்னொரு பைத்தியத்தையும் அனுமதித்து விடுங்களேன்” என்றார் ராகவன் சிரித்துக்கொண்டே. 

பைத்தியத்தை வீட்டுக்குள் விட்டோம். ஆசிரியர் அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டார்! 

“ஆசிரியர் அவர்களே! வீடு வாடகை வீடு. சுவரில் ஆணி அடிக்கவே சம்மதிக்கமாட்டார் செட்டியார். பைத்தியம் நுழைகிறது!” என்றேன். 

“கவலைப்படாதீர்கள் சுந்தரம்! எப்பொழுதுமே ஒரு பைத்தியத்துக்கு இன்னொரு பைத்தியத்தைச் சமாளிக்கத் தெரியும்!” 

ஆசிரியர் எதைக்கொண்டு அப்படிச் சொன்னாரோ தெரியாது. உண்மையில், வீட்டுக்குள் நுழைந்ததும் பைத்தியம் ஒரே மௌனமாகிவிட்டது! கையைப் பிடித்திருந்த ஆசிரியரைக்கூட உதறிவிட்டு, அமைதியாக உள்ளே நடக்க ஆரம்பித்தது அது! அவ்வளவு தானா! வராந்தா, அதையடுத்துப் பட்டசாலை, தொட்டிக் கட்டு, சமையலறை – எல்லாவற்றையும் மிக மிகப் பழகின மனிதர் மாதிரிக் கடந்து சென்று புறவாசலுக்கு வந்தது பைத்தியம். அங்கே ஐந்து நிமிஷம் நின்றது. 

திகைப்பும் ஆவலும் நிறைந்தவனாய். அந்தப் பைத்தியத்தையே கவனித்தேன் நான். அவனுடைய கண்கள் எங்கெங்கோ சுழன்றன. அந்த வீடு முழுவதையும் பின்வாசலில் நின்றவாறு அப்படியும் இப்படியும், மேலும் கீழும் மருண்டு பார்த்தான் அவன். அப்பொழுது அந்தக் கண்களைக் கவனித்தேன்;- மனத்தின் கோடியிலே எங்கோ அறுந்து போயிருந்த நினைவுச் சரட்டின் சிதறிய இழைகளை ஒன்று சேர்த்து முடிபோட முயற்சிப்பது போலச் சுழன்றது பார்வை! அடுத்த நிமிஷம் அவன் பின்வாசலைத் தாண்டிக் கிணற்றடிக்குச் சென்றான். ஆசிரியர் அவனுக்கு அருகிலும், நான் சற்று விலகியும் தொடர்ந்தோம். 

கிணற்றுக்கு அப்பால் தனியான ஒரு சிறு அறை; பழங்காலத்தில் யாரோ ஒரு வயதான மனிதர் அங்கு இருந்ததற்கு அறிகுறியாக சிமென்டினால் கட்டியிருந்த ஒரு சிறு திண்ணை. இப்பொழுது நாங்கள் அதில் கரி மூட்டை அடுக்கி வைத்திருக்கிறோம்! 

பைத்தியம் அந்த அறைக்குள்ளே சென்று உள்ளே நூலாம்படை அடைந்த ஒரு சிறு அலமாரியைத் திறக்க முயற்சித்தது. அதைத் திறந்து வருஷக் கணக்காக ஆகியிருக்கும்! கொஞ்ச நேரம் கதவுகளோடு மல்லுக் கொடுத்த பிறகு, அலமாரி திறந்துகொண்டது. அதனுள் ஒரு ஓரத்திலிருந்த சிறு புகைப்படத்தை எடுத்துக் கண்ணுக்குப் பக்கமாக வைத்து வெகு நேரம் பார்த்தான், அந்தப் பைத்திய மனிதன்! 

ஆசிரியரும் நானும் எட்டி நின்று அந்தப் படத்தையே கவனித்தோம். ஒரு வயதான கிழவரின் புகைப் படம் அது. பைத்தியத்தின் கண்களிலிருந்து பொங்கி வந்த கண்ணீர், சொட்டுச் சொட்டாக அந்தப் படத்தை நனைத்தது. விம்மி விம்மி அழுதான் அவன்!  

இப்பொழுது மீண்டும் அந்தக் கண்களைப் பார்த்தேன். அவற்றின் ஆழத்திலே எங்கோ ஒரு கோடியில் கிடந்த நினைவின் ஒளி, நிலாக் கீற்றுப்போல் கருவட்டத் திலே மின்னலிட்டது! கரி மூட்டையைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டே எங்கள் பக்கம் திரும்பினான் அந்த மனிதன். 

“ஸார், என்னை மன்னியுங்கள்..” – அப்படிச் சொன்னபோது அவனுடைய, இல்லை, அவருடைய குரலில் பெருந்தன்மை, வழி வழியாக வந்த ஒரு பண்பாடு, ஒலித்தது! 

“வாருங்கள், மாடிக்குப் போகலாம்” என்றேன் அவரைப் பார்த்து. 

“மாடிக்கா? அந்த மேலோரத்து அறைக்குத்தானே? போவோம்; இன்று ஒரு நாளைக்கு அந்தப் பாக்கியம் எனக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. வாருங்கள்!” என்றார் அந்த மனிதர். 

அவரை அழைத்துக்கொண்டு ஆசிரியர் மாடிப்படிகளில் ஏறினார். நான் சமையலறைக்குச் சென்று காப்பி கொண்டு வரச் சொல்லிவிட்டு, அவர்களைப் பின் தொடர்ந்தேன். 

“சாப்பிடுங்கள்” என்றேன், அந்தப் புதிய மனிதரை.

“காப்பிதானே? அவசியம் சாப்பிடுகிறேன்!” என்றார். 

டம்ளரைக் கையில் வாங்கி ஒரே மடக்கில் அத்தனை காப்பியையும் சாப்பிட்டு விட்டு என்னைப் பார்த்தார்! ஆசிரியரோ ஒரே மெளனமாக இருந்தார். 

“காப்பி சாப்பிட்டு எத்தனை நாள் ஆகிவிட்டது! இன்னொரு டம்ளர் கொடுங்கள்.” 

ஆசிரியர் ராகவனும் நானும் ஒரே சமயத்தில் இரண்டு டம்ளரையும் நீட்டினோம். சிரித்துக் கொண்டே அந்த இரண்டு டம்ளர்களையும் தமது இரண்டு கையாலும் வாங்கிக்கொண்டார்! 

“இந்த மாதிரிக் காப்பி சாப்பிட்டு எத்தனை வருஷம் ஆகிவிட்டது! உண்மையில், இந்தக் காப்பியின் வாசனை பல வருஷங்களுக்கு முன்பு இதே அறையில் நான் சாப்பிட் டுள்ள எத்தனையோ கப் காப்பிகளை நினைவுக்குக் கொண்டு வருகிறது!” என்று சொன்னார் அந்த மனிதர். 

சூடான காப்பியின் கொதிப்பில் உருகி வந்த அவருடைய நினைவுகளெல்லாம் வார்த்தைகளாக ஓடின. 

“நீங்கள் இப்பொழுது வசிக்கிற இந்த வீடு உங்களுடையது இல்லை; தன்னுடையது என்று சொல்லிக் கொள்ளும் உங்கள் செட்டியாருடையதும் இல்லை. இது என்னுடைய வீடு! 

“என்னுடைய வீடு என்றால், எனக்கு இப்பொழுது அநுபவ உரிமை உள்ள வீடு என்று அர்த்தம் இல்லை. ஒரு வீட்டை என்னுடையது என்று சொல்லிக்கொள்வதற்கு ரிஜிஸ்டர் பத்திரம் ஒன்றுதான் அவசியமா? அப்படிப் பார்த்தால் இது இன்று செட்டியாருடைய வீடுதான். அதே சமயம், அநுபவ பாத்தியதையைக் கொண்டு பார்த்தால் இது இன்று செட்டியாருடைய வீடும் இல்லை. உங்களுடைய வீடு! ஆனால் நான் சொல்வது என்ன வென்றால், இந்த வீடு உங்கள் இருவருடைய வீடும் இல்லை. இது எங்கள் வீடு! 

“இதோ இந்தச் சிறு புகைப்படம் எதுவரை இந்த வீட்டில் இருக்கிறதோ, அதுவரை இது எங்கள் வீடுதான்! நீங்கள் இந்த வீட்டில் குடியிருப்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால் இந்த வீடு என் உள்ளத்தில் குடியிருக்கிறது!” 

புதிய மனிதர் இவ்வாறு உணர்ச்சிகளைக் கொட்டிக் கொண்டே சென்றார். சுவடு சில இடங்களில் மங்கியும் சில இடங்களில் மறைந்தும் போயிருந்த நினைவுப் பாதையிலே, தடம் கண்டு பிடித்து மேலே செல்வதற்காக அவர் வெகு நேரம் சுற்றிச் சுற்றி வந்தார். பிறகு சொல்ல ஆரம்பித்தார்:- 

“இந்த வீடு எத்தனையோ தலை முறையாக எங்களுக்கு இருந்து வந்தது. பாட்டனார் காலம் வரை. நாங்கள் மிகவும் செயலாக இருந்த குடும்பம். பாட்டனாருக்கு என் தகப்பனார் ஒரு ஆண் தவிர, ஐந்து பெண் குழந்தைகள்! 

‘அஞ்சு பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். பரம்பரைக் கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் பெண்களைக் கட்டிக் கொடுப்பதற்குள் பூர்விகச் சொத்து எல்லாம் போய்விட்டது. கடைசியில் மிஞ்சியது இந்த வீடு ஒன்று தான். இதிலும் என் தகப்பனார் கல்யாணத்துக்காக அடமானம் வைத்து இரண்டாயிரம் ரூபாய் கடன்! இந்த நிலைமையில் கிணற்றடி அறையிலே சிமென்ட் திண்ணையில் படுத்துப் படுத்துப் பிராணனை விட்டார் பாட்டனார். அவர் மடியும்போது, என் தகப்பனாரைக் கூப்பிட்டுச் சொன்னார்: ‘உனக்கு அதிகமாக ஒன்றும் நான் வைத்துப் போகவில்லை. இந்த வீடு, பூர்வீக வீடு, இருக்கிறது. இரண்டாயிரம் ரூபாய் கடனும் இருக்கிறது. இதை இனித் திருப்ப என்னால் முடியாது. உன் வாழ்க்கையில் இந்த வீட்டைக் கடனிலிருந்து மீட்டுவிட வேண்டியதே லக்ஷியமாக வைத்துக்கொள்.’ 

இந்த மாதிரிச் சொல்லிவிட்டுப் பாட்டனார் உயிர் நீத்தார். தகப்பனாரோ ஸப் ரிஜிஸ்ட்ரார் ஆபீஸில் கிளார்க்காகச் சேர்ந்தார். அந்தப் புகழ்பெற்ற இலாகாவில் காலை எட்டு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை, ஆள் காட்டி விரல் தேய எழுதி எழுதி, கிளார்க்காகச் சேர்ந்தவர் கிளார்க்காகவே பென்ஷனும் வாங்கினார்! சம்பாதித்து மிச்சம் பண்ண முடியாததோடு போகவில்லை. இரண்டாயிரம் ரூபாய் கடன் எண்ணாயிரமாகப் பெருகி விட்டது! – என் தகப்பனாருக்கும் ஐந்து பெண்கள்! 

செட்டியார் கோர்ட்டில் வியாஜ்யம் தொடுத்தார். எதிர்வாதம் செய்வதற்கு என்ன சட்டம் உண்டு? டிக்கிரி ஆயிற்று. வழிவழியாக நாங்கள் ஆண்டு அநுபவித்து வந்த வீட்டைக் காலி செய்ய வேண்டியது ஏற்பட்டது! 

நண்பர்களே, இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. வீட்டைக் காலி செய்து சாமான்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தோம். கிணற்றடி அறையிலே சிமென்ட் திண்ணையில் சோர்ந்து படுத்திருந்த தகப்பனாரைக் கைத் தாங்கலாகப் பிடித்துக்கொண்டு வெளியே வந்தேன். அவருடைய மனசில் என்ன தோன்றியதோ, கால் தள்ளாடிக் கீழே விழுந்தார். உயிர் போய்விட்டது! 

இதற்கெல்லாம் மேல் என்ன உண்டு? எல்லாம் முடிந்தது; என்றாலும் எத்தனையோ தலைமுறையாக என் முன்னோர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மடிந்த பூர்விகமான வீட்டை விட்டுக் கிளம்புகிறபோது என் மனம் ஒரு நிலையில் இல்லை! தந்தையின் விருப்பம் பூர்த்தியாக வில்லையே என்ற ஏக்கம் வேறு! ‘என் வாழ்க்கையில் இனிக் கல்யாணம் வேண்டாம், இகலோகத்து சுகங்கள் வேண்டாம், இந்தப் பூர்விக வீடு நமக்குத் திரும்புகிற வரை நான் மனிதன் இல்லை’ என்றெல்லாம் உறுதிப் படுத்திக்கொண்டேன். ஆனாலும் அதுவரை தகப்பனாரின் ஆவி சாந்தியற்று வான வெளியிலேயே சுற்றித் திரிவதா? கூடாது என்று எண்ணினேன். 

அவருடைய இதயம் வாசம் செய்கிற இந்த வீட்டில், பிறருடைய கண்கள் பார்த்து ஏளனம் செய்யாத வகையில், கிணற்றடி அறையில் அந்த அலமாரியின் உள்ளே ஒரு ஓரத்தில் அவருடைய புகைப்படமாவது இருக்கட்டும் என்று நினைத்து, அதைப் பத்திரப்படுத்தி வைத்துவிட்டு வெளியே வந்தேன். அன்று பௌர்ணமி. நிலா வெளிச்சத்தில் கிணற்றடியிலிருந்து சற்று நகர்ந்தேன். தலை சுற்றியது. கண் இருண்டது. அப்படியே கீழே விழுந்து விட்டேன். 

அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை என்னைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றிருப்பார்கள். அங்கிருந்து, இந்த நோய் குணத்துக்கு வராத நோய் என்று வெளியே அனுப்பி யிருப்பார்கள். அல்லது என்னைக் கொன்று முடித்திருப்பார்கள்! இல்லை. அப்படியிராது! நான் மடிந்திருந்தால் தான் மோக்ஷம் என்ற வீட்டிலே என் தகப்பனாரைச் சந்தித்திருப்பேனே! இல்லை; இல்லை. அந்த வீடு எனக்கு எதற்கு? இந்த வீட்டிலே தான் அவரைச் சந்திக்க வேண்டும். ஆமாம்; சந்தித்துவிட்டேன். 

ஸார்…ஸார்… என்ன திகைக்கிறீர்கள்? நீங்களே சொல்லுங்கள். நான் மடிந்தே போனாலும் இது யாருடைய வீடு? சொல்லுங்கள் ஸார், இது யாருடைய வீடு?…” 

இப்படிப் பேசிக்கொண்டே எழுந்தார் அந்த மனிதர். அவருடைய கண்களை அப்பொழுது பார்த்தேன்; நினைவின் ஒளி மறைந்துவிட்டது. விழியின் வட்டத்தில் விவரிக்க முடியாத ஒரு சூன்யம் படர்ந்திருந்தது. சிரித்தார், அழுதார்; மறுபடி சிரித்தார். வெறியின் வேகத்தில் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு விட்டார். 

“சுந்தரம், அவர் போகட்டும். ஜாக்கிரதையாக அவரை வெளியே கொண்டு சேர்த்துவிடுவோம்” என்றார் பேராசிரியர் ராகவன். 

திகைப்பு நீங்கி நாங்கள் எழுந்து போய் அவரைத் தொடர்வதற்குள் மாடிப் படிகளில் இறங்கி, முற்றத்தைத் தாண்டி வெளியே போய், திறந்த கதவை முன் போலச் சாத்திவிட்டு, வெகு விரைவாக மறைந்தார் அவர்! 

மாடி அறைக்குத் திரும்பினேன். அவர் இருந்த இடத்திலே இப்பொழுது அவர் தகப்பனாரின் புகைப் படம் கீழே விழுந்து கிடந்தது! 

சந்திர மண்டலத்து மனிதரின் நினைவாக இன்றும் அந்தப் படத்தை என்னுடைய அறையில் மாட்டியிருக்கிறேன். அவருடைய ஆசையைக் கௌரவப் படுத்தும் முறையில் வேறு ஒன்றும் என்னால் செய்ய முடியவில்லை! 

– இந்த தொகுப்பில் உள்ள பன்னிரண்டு கதைகளும் கல்கி, ஆனந்த விகடன், கலைமகள், வசந்தம் முதலான பத்திரிகைகளில் வெளியானவை.

-மஞ்சள் ரோஜா முதலிய கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1954, பாரி நிலையம், சென்னை.

மீ.ப.சோமு மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *