கோபத்தின் மறுபக்கம்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2025
பார்வையிட்டோர்: 222 
 
 

மனித மனமானது உண்மையை விட பொய்யை முழுவதுமாக நம்புகிறது என்பதை விட, விரும்புகிறது என்பது தான் முற்றிலும் உண்மை. 

பொய்யாக, கற்பனையாக எழுதப்பட்டு, எடுக்கப்பட்ட சினிமாவையும், உண்மையான முகத்தை முழுவதுமாக ஒப்பனையில் மாற்றியமைத்து, அப்படத்தில் நடிக்கின்ற நடிகர்களையும் நாம் கொண்டாடுவதற்கு காரணம் நம் மனதின் செயல் தான் என்பதை ராதிகா யோசித்ததில் புரிந்து கொண்டாள்.

“நீங்க ஐஸ்வர்யா ராயைப்போல அழகா இருக்கீங்க…” கல்லூரியில் ஒருவர் தன்னைப்பார்த்து பொய்யாகச்சொன்ன வார்த்தையில் மயங்கி விழுந்தவளால் இன்று வரை பதினைந்து வருடங்களாக எழ முடியவில்லை. சொன்னவர் சொன்னபோது சக கல்லூரி மாணவர், சொன்ன பின் மனதுக்கு பிடித்த காதலர், தற்போது கணவர்….

“ஏங்க…. முடியலீங்க…. உங்க டிரஸ் தான்… சோப்பு பவுடர்ல ஊற வெச்சுட்டேன். துவைச்சி காயப்போட்டிடுங்க. நாளைக்கு என்னோட பிரண்டோட அக்கா பொண்ணு கல்யாணத்துக்கு போகும் போது போட உங்களுக்கு பிங்க் கலர் டிரஸ்தான் நல்லா இருக்கும்….” பெட்டில் படுத்தபடி ஜண்டுபாம் எடுத்து நெற்றியில் தேய்த்து விட்டு, மூக்கில் விரலை வைத்து உறிஞ்சிய படி கணவன் ரகுவிடம் சொன்னாள் ராதிகா.

“ஞாயித்துக்கிழமை ஒரு நாள் தான் ஆபீஸ்ல லீவு கொடுக்கறானுக. இன்னைக்காவது என்ற விருப்பத்துக்கு வாழ விட மாட்டியா? துணிய நாந்தொவைக்கனமா…? என்னோட ஆபீஸ் வேலைய நீ செய்வியா…?” கண்கள் சிவக்க காதல் மனைவியைப்பார்த்து கோபத்தைக்கக்கினான் ரகு.

“கல்யாணமாயி பதினைஞ்சு வருசமா ஒரு நாள் துணி தொவைக்க நான் உங்ககிட்ட செல்லிருப்பனா…? டயேடா இருக்கு. காலைல யோசிக்காம சோப்பு பவுடர்ல சட்டைத்துணிய ஊற வெச்சுட்டுன். நாளைக்கு வரைக்கும் சோப்பு தண்ணீல கிடந்துச்சுன்னா சாயம் விட்டுப்போயி எல்லாத்துணிகளும் வீணாப்போகும்னு தானே சொன்னேன். இனிமேல் சொல்ல மாட்டேன்டா சாமி….” கண்கள் கதகதக்க கூறியவள், இரண்டு கைகளையும் கூப்பியபடி ‘திருமணத்துக்கு முன் பொய்யாக அன்பு காட்டும் ஆண்கள், நல்ல வார்த்தைகளை மட்டும் தேடிப்பிடித்துப்பேசும் ஆண்கள், திருமணத்துக்கு பின் உண்மையாக கோப முகத்தை மட்டும் காட்டுகிறார்கள்….’ என நினைத்தபடி கணவனைப்பார்த்து படுத்திருந்தபடியே கும்பிடு போட்டாள்.

தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்ததை விட்டு விட்டு வேறு வழியின்றி எழுந்து சென்ற ரகு, துணிகளை எடுத்து தண்ணீரில் அலசி முறுக்கிப்பிழிந்து உதறி காய வைத்தவன், காய்ந்த பின் எடுத்து வந்து நேர்த்தியாக மடித்து வைத்ததை ஜன்னல் வழியாகப்பார்த்த ராதிகாவுக்கு தன் கணவன் மீது கல்லூரியில் ஏற்பட்டது போன்று காதல் தற்போதும் ஊற்றெடுத்தது.

‘கோபப்படுகிறவர்களிடம் உடனே அன்பும் வெளிப்படுகிறது. ஆணவத்தால் வருகின்ற கோபத்தை விட இயலாமையால் வெளிப்படும் கோபங்களுக்கு ஆயுள் குறைவு தான்’ என்பதை முதலாகப்புரிந்து கொண்டாள்.

வேலையை முடித்து விட்டு சமையலறைக்குள் சென்றவன் காபி போட்டுக்கொண்டு வந்து மனைவியைக்குடிக்கச்சொன்னான். மனைவியின் நெற்றிக்கு இரண்டு பக்கமும் இரண்டு விரல்களை வைத்து அழுத்தியபடி, “ரொம்ப வலிக்குதா…? போயி டாக்டரைப்பார்த்துட்டு வரலாமா…?” எனக்கேட்டதும், ஆனந்தக்கண்ணீர் பொங்க எழுந்து கணவனை அணைத்துக்கொண்டாள்.

“எப்பவும் இப்படியே இருங்க. ஆபீஸ்ல நீங்க படற கஷ்டம் எனக்கு புரியுது. ஒரு மனைவியா தன்னால முடியாத போது கணவன் தன்னோட வேலைய பகிர்ந்துக்கனம்னு எந்த மனைவிக்கும் இருக்கும். அதுவும் ஒடம்புக்கு முடியாத போது. அது கூட உங்களுக்காகத்தான். பீரோவுல நிறைய சட்டைகளை அயன் பண்ணி வெச்சிருக்கேன். இருந்தாலும் பிங்க் கலர் சட்டைல நீங்க அப்படியே ஹீரோ மாதிரி என்னோட கண்களுக்கு தெரியுவீங்க. நான் உங்களை பார்க்கிறதோட என்னோட பிரண்ட் ராதா பார்க்கனம். ஏன்னா அவளத்தானே காலேஜ்ல மொதல்ல காதலிச்சிருக்கீங்க. அவ உங்கள கறுப்பா இருக்கீங்கங்கிற காரணத்தால சிவப்பான ராகவனை தேடி பிடிச்சி காதலிச்சா…. அவனும் ராதாவை விட அழகான கீதாவ விரும்பி கல்யாணம் பண்ணி கிட்டான். அந்த ராதா நாளைக்கு நாம போற கல்யாணத்துக்கு வருவா. அவ முன்னாடி நீங்க பதினைஞ்சு வருசத்துக்கு பின்னாடியும் என் கூட காதல் மாறாம சந்தோசமா வாழறத காட்ட வேண்டாமா? சந்தோசமா வாழ நிறம் முக்கியமில்லைன்னு அவ தெரிஞ்சுக்க வேண்டாமா? அதுக்காககத்தான் என்னால முடியாத போதும் உங்களை துவைக்கச்சொன்னேன்” என்றாள்.

மனைவி தன் மீது மாறாத காதலை குறையாமல் வைத்திருப்பதையும், தன்னை பிறர் முன் உயர்வாகக்காட்ட நினைப்பதையும் நினைத்த போது ஆனந்தக்கண்ணீர் ஊற்றெடுக்க, காற்று இடையில் புகாதவாறு மனைவியை இறுக கட்டியணைத்து “தேங்க்யூ டி தங்கம்” என்று கணவன் ரகு காதலோடு தன் காதில் சொன்ன போது ராதிகா பூரித்து மகிழ்ந்தாள்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *