கொன்று போடாதையுங்கோ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2026
பார்வையிட்டோர்: 1,334 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிதம்பரநாதபிள்ளை கதிர்காமநாதன் 07-09-1959 இல் பிறந்தவர். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது தொல்புரம் கிழக்கு சுழிபுரத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். பல சிறுகதைப் போட்டிகளில் பல பரிசில்களைப் பெற்றவர். ஈழநாதம் ஈழநாடு முரசொலி, வீரகேசரி, தினகரன், தினக்குரல், உள்ளம், கலைமுகம், சரிநிகர், சுடரொளி, அமுது சஞ்சீவி பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் வந்துள்ளன. முழுநேர எழுத்தாளர் சமூக உணர்வுடன் இணைந்த நகைச்சுவை கலந்த நடையும் எதிர்பாராத திருப்பமான முடிவும் இவரது தனித்துவமாகும்.. 


திடீரென்று கேட்ட கூச்சலும் அமளியும் என்னைத் திடுக்கிடச் செய்தது. என்ன கூச்சல் அது? படுக்கையில் இருந்து வெளியே வந்தேன். கிராமத்துப் பெரியவர்கள் சிறியவர்கள் ஒழுங்கையில் வேகமாக ஓடிப்போனார்கள். அவர்களின் பின்னால் வளர்ப்பு நாய்கள் வாலை ஆட்டியபடி குரைத்துக் கொண்டு பத்துமணி வெய்யில் புழுதி விரைவாக மேலெழுந்தது. மரத்து மந்திகள் அச்சங் கொண்டு கீச்சிட்டபடி மரத்திலிருந்து அடுத்த மரத்துக்குஇடம் மாறின. 

எனக்கு இது புது அனுபவமாய் இருந்தது. இன்று ஞாயிற்றுக் கிழமை சக ஆசிரியர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். திங்கட் கிழமை பாடசாலை திரும்புவார்கள். அயல் கிராமங்களில் தான் அவர்கள் இருப்பிடம் பிரச்சனையில்லை. என்னால் மட்டும் வீட்டிற்குப் போக உடன் முடியாது. 

காரணம் நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தவன் புண்ணியம் செய்தவர்கள்தான் காசியில் பிறந்தவர்களென்று சொல்வார்கள் புண்ணியம் செய்யாதவர்களையெல்லாம் பங்கிட்டு வடக்கு கிழக்கிற்கு அனுப்பி விட்டார்கள் போலும், இராம பிரான் பதினான்கு வருடங்கள் காட்டில் இருந்தது எல்லோருக்கும் தெரிந்ததே. பாவம் தமிழர்கள் எங்களுக்கு எத்தனை ஆண்டுகளென்று ஒருவரும் சொல்லவில்லை பதின்னான்கா பதினெட்டா, இருபதா, நாற்பதா தெரியவே தெரியாது அலையவேண்டியது தான். 

நாய்களின் குரைப்புச் சத்தம் அருகில் கேட்கத் தொடங்கியது எனக்கு சமையல் செய்யும் பியதாசாவை இன்னும் காணவில்லை. 

மதிய சாப்பாட்டிற்கு மீன் வாங்க சந்தைக்கு போய்விட்டானா? இண்டைக்கும் வழமை போல் அறக்குளா மீன் தான் வாங்கிக் கொண்டு வருவானா? தினமும் ஒரே மீன் சாப்பிட்டு அலுத்துவிட்டது. நாய்களின் விடாத குரைப்பு வவுனியாவில் வாரிக்குட்டியூரில் ஆசிரியத் தொழில் செய்து கொண்டிருந்த என்னை உசுப்பி விட்டது. இரவில் தேடுதல் நடவடிக்கைக்காக அப்படித்தானே வருவார்கள். நள்ளிரவு வேளையில் நிலம் மெல்ல அதிரும். சருகுகள் சப்பாத்துக் காலினால் மிதிபட்டு சலசலக்கும். மிக அவதானமாக நடப்பார்கள். இருளோடு இருளாக அதிகாரத்திலுள்ள பச்சை உடுப்புக்கள் மறைந்திருக்கும். 

ஆனால் ஊர் நாய்கள் அவர்களைக் காட்டிக் கொடுக்கும். முதலில் கண்ட நாய் காட்டிக் கொடுக்கத் தயங்குவதே இல்லை. 

“உறங்கும் தமிழ் மக்களே, உசார், உசார். அவங்கள் வாறாங்கள், வாறாங்கள்”. 

அப்புறமென்ன. 

ஒன்று, இரண்டு, மூன்று என தகவல் பரிமாற்றம் ஒரே அமர்க்களம். ஓடி ஓடிப் பாய்ந்து குரைப்பு நடக்கும். 

வீடுகளில் வெளிச்சம் மறைந்து இருளில் காணாமல் போய்விடும். கடைசி 

ஆள் கண்ணில் மறையும் மட்டும் அமளி அடங்காது. 

நாய்கள் நன்றியுள்ள மிருகங்கள். காட்டிக் கொடுப்பதிலும் சில நாய்கள் வாலை ஆட்டவும் செய்கின்றன. மறுபடியும் ஆர்ப்பாட்டம். பின் கூப்பாடுகள்.

‘விடாதே. 

ஓடு “….”

“வீமா வீமா”, 

“உதுக்குள்ளதான் உதுக்குள்ளதான்” 

“கந்தசாமி தெற்கே பார்.? 

குரல்கள் நெருங்கி வருகின்றன. 

நாய்களின் குரைப்பு. வேடிக்கை பார்க்கும் சிறுவர்களின் ஆரவாரம் “அண்ணேய் உந்தப் பக்கமாகத் தான் ஓடினது. நானும் பாத்தனான். உதுக்கதான் ஓடினது. 

“சரியான பெரிய முயலடா” 

சிறுவர்கள் மிகவும் சந்தோசமாக முயல் ஓடிமறைந்த இடத்தைக் காட்டிக் கொடுத்தார்கள். நாய்கள் மூசியபடி ஓடி வந்தன. ஆறுபேருக்கு மேல் இருக்கும். சாரங்களைத் தூக்கி மடித்துக் கட்டியிருந்தார்கள். காய்ந்து போன உடம்பில் புழுதி படிந்து அப்பிக் கிடந்தது. எங்கிருந்து வருகிறார்கள்? 

ஒவ்வொருவர் கைகளிலும் நீண்ட பொல்லுகள். அவர்கள் முயல் ஓடிப் பதுங்கிய இடத்தைச் சுற்றி வளைத்து நின்றார்கள். நாய்கள் நாக்கைத் தொங்கப் போட்டப்படி பற்றைக்குள் முயலைத் தேடின. 

விசில் சத்தம் 

கூக்குரல்கள் 

கூய்..ய்..ய்… 

எனக்கு மனது திக்கென்றது. 

அவர்கள் மெல்ல மெல்லக் கைகளில் ஓங்கிய பொல்லுகளுடன்… பியதாசா ஓடி வந்தான். 

“ஐயா முயல் பிடிக்க வந்திட்டாங்கள். நீங்கள் உது ஊரில் பார்த்திருக்க மாட்டியள்” பியதாசா ஆர்வமுடன் கூறினான். 

என்னை விடப் பத்து வயது இளையவன் தமிழரோடு கதைத்துக் கதைத்து தமிழ் “இனப்பிரச்சினையின்றி” சமாதானமாக வந்தது. உச்சரிப்பில் துல்லியம். 

பியதாசா என்ன கேட்டான்? 

முயல் பிடிப்பதை ஊரில் பார்த்திருக்க மாட்டியள். உண்மைதான் அங்கு முயலையா பிடிக்கவந்தார்கள். 

“சரி பியதாசா இண்டைக்கு மீன் வாங்கிப் போட்டியே?” நான் இன்னும் சந்தைக்கு போகேல்ல. இஞ்சினியர் ஐயா வீட்டில வேலை செய்துபோட்டு வாறன்.” 

“இண்டைக்கெண்டாலும் வாய்க்கு ஏத்த மாதிரி புதுசாய் என்னத்தையும் பிடிச்சு சமையன்.” 

“நானும் அதைத்தான் யோசிக்கிறன். முயலை யோசிக்கிறன். உவங்கள் பிடிச்சாங்களெண்டால் கேட்டுப் பார்த்தா என்ன? கன காலமாச்சு முயல் இறைச்சி சாப்பிட்டு.” 

பியதாசா நாக்கைச் சப்பை போட்டுச் சொன்னான். எனக்கும் வாயில் எச்சில் ஊறியது. முன்பும் முயல் இறைச்சி சாப்பிட்ட பல பேர் என்ன மாதிரிச் சொல்லியிருக்கிறர்கள். 

“முயல் இறைச்சி ஒரு நாளும் சாப்பிடேல்லையே… சா. எப்பிடியிருக்கும் தெரியுமே? வாய்க்குள்ள போட்டு கடிச்சு சப்பத் தேவையில்லை. சும்மா வாயை அசைத்தால் போதும். அப்படியே கரைஞ்சு போகும். வலு சொப்ற்” 

வயிறு உடனே எரியத் தொடங்கியது. முயல் இறைச்சி சாப்பிட உடன் மனது துடித்தது.

“விடாதே 
பிடி வீமா ஓடு 
ஓடுதடா” 

முயல் பாய்ந்து ஓடியது. எழும்பித் துள்ளியது. நாய்கள் விடவில்லை.

‘எறி விடாதே’ 

முயல் சடுதியாக அவர்களிடையே புகுந்து குறுக்காக எமது இருப்பிடத்தை நோக்கி ஓடியது. முயலைக் கலைத்துக் கொண்டு ஓடியவர்கள் இந்த திடீர் குழப்பத்தை எதிர்பார்க்கவில்லை. 

பியாசாவும் நானும் எங்களை மறந்து முயல்போன திக்கில் முயல் பிடிக்கவந்தவர்கள் வரமுன் நாங்கள் ஓடினோம். தறிகெட்டு ஓடிய முயல் திசை தெரியாமல் நான்கு புறமும் கட்டிடமாய் இருந்த இடத்தில் குழம்பி நின்று கடைசியில் திறந்து கிடந்த எங்கள் குசினிக்குள் நுழைந்து தன்னை மறைத்துக் கொண்டது. 

நானும் பியதாசாவும் விருட்டென்று குசினுக்குள் புகுந்து கதவினைச் சாத்தி தாளிட்டும் கொண்டோம். வெளியே கூக்குரல். 

“உந்தப் பக்கமாகத் தான் ஓடினது. எங்க போயிருக்கும்? “எங்கேயோ பதுங்கிட்டுது.” 

அவர்கள் அலைந்தார்கள். கையில் வைத்திருந்த பொல்லுகளால் சிறு பற்றைக்குள் மறைவிடங்களைத் தட்டிப் பார்த்தார்கள். 

நாய்கள் கடுப்புடன் சினம் பொங்க முயலைக் கண்டால் கடித்துக் 

குதறிவிடும் நிலையில் பேயாக அலைந்தன. 

“ஐயா, இப்ப என்ன செய்யிறது? 

“உவங்கள் முயலைப் பிடிக்காமல் போக மாட்டாங்கள் போல கிடக்கு” 

பியதாசா பதறினான் 

நான் மெல்ல அவன் காதில் சொன்னேன். 

“கொஞ்ச நேரம் அமைதியாய் இரு பியதாசா. இண்டைக்கு கடவுளாய்ப் பார்த்து முயலை எங்களிட்ட அனுப்பி விட்டார். பிறகென்ன மத்தியானம் விருந்துதான்.” 

நான் கண்களில் ஒளி மிளிர அவனைப் பார்த்தேன். “அப்ப என்ன ஐயா முயலை நாங்கள் பிடிப்பமோ?’ “பிறகென்ன யோசனை, பிடிக்க வேண்டியது தான். நான் வாழ்க்கையில் முயல் இறைச்சி சாப்பிட்டதேயில்லை.’ 

“ஐயா கவலையை விடுங்கோ, நானெல்லே இண்டைக்கு உங்களுக்கு முயல் இறைச்சி சமைச்சுக் காட்டுறன். சாப்பிட்டுப் போட்டு பிறகு எப்படியெண்டு சொல்லுங்கோ.” வெளியே முயல் பிடிக்க வந்தவர்கள் ஒருவரையொருவர் திட்டியபடி அலைந்தார்கள். குசினிக் கதவை நாய்கள் பிறாண்டின. 

நாங்கள் மூச்சை அடக்கிக் கொண்டோம். கொஞ்ச நேரத்தில் ஆரவாரம், இரைச்சல் ஓய்ந்து போனது. இப்போது நாம் இருவரும் முயல் பிடிக்க வந்தவர்கள் போல முயலைத் தேடத் தொடங்கினோம். 

முயல் எங்கே போய் ஒளிந்துள்ளது? 

பியதாசா கையில் ஒரு விறகுக் கட்டையைத் தூக்கிக் கொண்டு என்னையும் ஒரு விறகுக் கட்டையை எடுத்து வைத்திருக்கச் சொன்னான். 

விறகுக் குவியலும் பழைய சாமான்களும் நிறைந்திருந்த இடத்தில் முயல் எங்கு பதுங்கி உள்ளதோ? 

“ஐயா கவனம். உது பொல்லாத முயல். எங்களுக்கும் டிமிக்கி கொடுத்திடும். இண்டைக்கு எங்களுக்கு முயல் இறைச்சி யோடு தான் சாப்பாடு. கவனமாய் தேடுங்கோ! 

அவன் என்னை உற்சாகப்படுத்தினான். 

கையில் விறகுக் கட்டையை தூக்கிப்பிடிப்பது எனக்குப் புது அனுபவமாய் இருந்தது. முயலைக் கண்டால் விறகுக் கட்டையால் அடித்துச் சாகடித்து விடவேணும். கையில் நடுக்கம் ஏற்பட்டது. பியதாசா சொன்ன முயல் இறைச்சி மனதை அலைக்கழித்தது. விறகுக் கட்டையை இறுகப் பிடிக்கச் செய்தது. 

“ஐயா மெல்ல…மெல்ல” 

“உந்த விறகுக் குவியலுக்குள்ள தான் பதுங்கிக் கிடக்கும்”.

நெஞ்சு பெரிதாக அடிக்க மூச்சு பெரிதாக இரைத்தது. பியதாசா கொலை வெறியுடன்… 

அப்போது சுவரோடு கிடந்த விறகுக் குவியலுக்குள் அசைவு தெரிந்தது. 

“உங்க… உங்க.. உங்கதான். முயல் நிக்குது!” பியதாசா பெரிதாகக் கூப்பாடு போட்டான். நான் அருகே நெருங்கிப் பார்த்தேன். தன் நீண்ட காதுகளை அசைத்தபடி… பெரிய கண்களை கலக்கத்துடன் பயப்பீதியில் உருட்டிக்கொண்டு….

மேனி ரோமங்கள் சிலிர்த்தபடி பியதாய விறகு கட்டையை ஓங்கினான் ” என்னை அடிக்கப்போறியே…..’ 

நான் பாய்ந்து விறகுக் கட்டையைப் பிடித்தேன். 

“என்ன ஐயா கையை விடுங்கோ. முயல் ஓடப் போகுது. ஓரே போடு. ஆள் சரி.” 

“வேண்டாம். கொல்ல வேண்டாம்.” 

“என்ன நடந்தது உங்களுக்கு. அருமையான இறைச்சி தெரியுமே” 

“எனக்கு இறைச்சியும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம். முயலை அடிச்சுக் கொண்டு போடாதே. அதை அதை அப்படியே விட்டிடு.’ 

பியதாசா சினத்துடன் என்னைப் பார்த்தான். 

“உங்களுக்கு என்ன பிடிச்சிட்டுது. அப்ப அவங்களிட்ட சொல்லியிருந்தால் அடிச்சுக் கொண்டு போட்டு தூக்கிக் கொண்டு போயிருப்பாங்கள்” 

நான் இன்னும் பியதாசா ஓங்கிய விறகுக் கட்டையிலிருந்து கையை எடுக்கவில்லை. 

“ஐயா கையை எடுங்கோ. நேரம் போகுது” 

“ஐயோ பியதாசா முயலை அடிச்சுக் கொல்ல வேண்டாம்.” நான் பெரிதாகக் கத்தினேன். ஒரு குழந்தையைப் போல் என் குரல் வீரிட்டது. 

பியதாசா விறகுக் கட்டையைப் போட்டுவிட்டு அசைவற்று நின்றான். என் கையில் இருந்த விறகுக் கட்டை எப்போது. கீழே விழுந்தது எனக்குத் தெரியவில்லை. 

“பியதாசா இங்க வந்து முயலை வடிவாப் பார். இந்த அப்பாவி முயலை சாக்காட்டப் போறியே?’ 

நீண்ட செவி. 

குறுகுறுத்த பெரிய கண்கள். 

நடுங்கிக் கொண்டிருந்த மேனி. 

அந்தக் கண்கள் எங்களுக்கு என்னத்தையோ சொன்னது. “ஐயோ என்னைக் கொன்று போடாதேயுங்கோ. என்னைக் கொன்று போடாதேயுங்கோ. நான் இயக்கத்திற்கு உதவி செய்யேல்ல. யாரோ வேணுமெண்டு பெட்டிசம் போட்டிட்டாங்கள். எனக்கு ஒருத்தரையும் தெரியாது. என்னை அடியாதயுங்கோ. அடியாதயுங்கோ. உங்கள நம்பித்தான் ஊருக்கு வந்தனாங்கள். ஒண்டும் செய்து போடாதேங்கோ. நான் அப்பாவி.” 

“பார் பியதாசா. நல்லாப் பார். உந்த முயலை சாக்காட்டாதே. பேசாமல் கதவைத் திறந்து வெளியில் போக விடு.” 

பியதாசாவின் பார்வையில் இப்போது இரக்கம் தெரிந்தது. சற்று மௌனம். முயலின் நடுக்கம் இன்னும் அப்படியே… அவன் குசினிக் கதவைத திறந்து வெளியே பார்த்தான். 

எல்லாம் அமைதியாக இருந்தது. 

விறகுக் குவியலுக்கு இடையில் பதுங்கிக் கிடந்த முயலை தடியால் தட்ட உடன் துள்ளிப் பாய்ந்தது. வெளியில் வந்து வாசலில் காதுகளை ஆட்டியபடி எம்மைப் பார்த்தது. 

இப்போது அது நடுங்கவில்லை. 

கண்களில் அச்சம் கலந்த பீதியில்லை. தலையை அப்படியும் இப்படியும் ஆட்டிவிட்டு போய் வருகிறேன் என்பது போல் பாய்ந்து ஓடியது. “பாவம் முயல் இப்ப விழுந்தடிச்சுக் கொண்டு எங்ங போகுது?” 

பியதாசா ஆவலாகக் கேட்டான். 

“அவர் கன நேரமாயெல்லே எங்களிட்ட மாட்டுப்பட்டுப் போனார். இப்ப தன்ர வீட்டுக்குத் தான் ஓடுகிறார். வீட்டில பார்த்துக்கொண்டெல்லே இருப்பினம். போனவரைக் காணேல்லையே என்று….. என் குரல் தழுதழுத்தது. 

“ஐயோ நாங்கள் சாக்காட்டி இருந்தால்… என்ற குடும்பம் மாதிரித் தகப்பன் இல்லாமல் கஸ்ரப்பட்டிருக்கும்” என்றான் பியதாசா. 

நான் ஊரில் காணாமல் போன அப்பாவை நினைத்து அழத் தொடங்கினேன். 

– சரிநிகர் ஜனவரி 20-2001.

– இங்கிருந்து… பன்னிரண்டு சிறுகதைகள், முதற் பதிப்பு: 2001, நண்பர்கள் வெளியீடுபதிப்பகம், நல்லூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *