உறவுப்பாலம்
கதையாசிரியர்: உடுவில் அரவிந்தன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2026
பார்வையிட்டோர்: 182
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அப்புத்துரை அரவிந்தன் உடுவிலைச் சேர்ந்தவர். 21-03-1972 இல் பிறந்தவர். யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையின் நான்காம் வருடத்தில் கற்கும் இவர் சிறுகதை, கவிதை, ஓவியம், நாடகப பிரதியாக்கல் என்பவற்றில் ஈடுபாடுடையவர். இவருடைய படைப்புக்கள் இந்து இளைஞன், முரசொலி, மாலைமுரசு, அர்ச்சுனா, உதயன், சஞ்சீவி, கலைமுகம், தாயகம், உள்ளம் ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. பல சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர். 1999இல் உணர்வுகள் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். நடைமுறை சார்ந்து நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளும் இவரது கதைகளின் சிறப்பம்சமாகும்.
அவர் கூறியது உண்மையில் நடக்குமா? என்னுடைய ஐயாவும் அம்மாவும் இனியாவது எங்களை ஏற்றுக்கொள்வார்களா, ? சமூக வரையறைகளை மீறி வாழத்தொடங்கிய எங்களை, என் அக்காவைப் போல் அனைவரும் சேர்ப்பார்களா,?
நேற்றுமுன்தினம் தொடக்கம் தமயந்தியின் மனம் கண்டபடி சிந்தித்துக் கலங்கியபடியிருந்தது.
மேலே பூமிப்பந்துக்கு எதிராகச் சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியானது அறைக்குள் அசையாதிருந்த வளியை நகரச்செய்து காற்றாக உருமாற்றினாலும், பங்குனி வெயிலின் உக்கிரம் குறைந்ததாக இல்லை. வெளியிலுள்ள மரங்களும் மௌனம் சாதித்தன.
அக்கம்பக்கக்கட்டில்களில் தங்கள் இரத்தங்களைப் பிரதிபலிக்கும் புதிய பிறப்புக்களை உச்சிமோந்து உவகையடையும் நரைதிரைகளை தமயந்தியின் விழிகள் ஏக்கத்துடன் பார்த்தன. அவளது கரம் அருகில் மலர்ந்துகிடக்கும் தன் பிள்ளையை அவளையறியாமலே வருடிக்கொடுத்தது.
வழிய முயற்சிக்கும் கண்ணீருக்குத் தடையிடும் உத்தேச த்துடன் அவளுடைய இமைவிரல்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டன.
முற்றுமுழுதாக முன்னேறாவிட்டாலும் நாகரிகத்தின் சுவடுகள் பெருமளவில் வெளித்தெரிகின்ற கிராமம் அது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்த வெளிகளையும், அடர்ந்து நெருங்கிய தென்னந்தோப்புகளையும் இடையிடையே அணிந்து கொண்டதால் அழகின் வெளிப்பாடு அங்கே காணப்பட்டது.
பிரதானவீதியுடன் இணைந்து ஓடுகின்ற தண்டவாளங்கள் வளைந்து திரும்பும் இடத்தில் வரிச்சுமட்டைகளால் இணைக்கப்பட்ட வேலியைக் காணலாம். அந்த வேலியைத்தொட்டு நீண்டிருந்த வளவிலிருந்துதான். ஆரவாரம் கேட்கிறது விதானையார் சின்னத்துரை தென்னைமட்டை வெட்டும் நீண்ட கத்தியுடன் அந்தக் குடிசைக்கு முன்னால் நின்றிருந்தார். அவருடன் நாலைந்து இளைஞர்கள் பொல்லுகள் தடிகளுடன் துடித்துக்கொண்டிருந்தார்கள்.
விதானையார் உட்கொண்ட சரக்கின்காரம் கண்களின் வழியே வெம்மையாக வெளிப்பட்டது. தென்னோலைகளால் மிகநெருக்கமாகவும், வெகுபக்குவமாகவும் வேயப்பட்டிருந்த கொட்டிலின் கப்பினை புறக்கத்தியால் படீரென்று அடித்தவர் பெருங்குரலெடுத்துக் கத்தினார்.
“வெளியிலை வாடி…எளிய ….!” ஊர் உலகத்திலை என்னைத்தலைகுனிய வச்சிட்டியே தறுதலை! உன்னை…”
நேரகாலம் தெரியாமல் வந்துகுரைத்த ‘நோஞ்சான்’ நாயொன்று அவருடைய கத்தி வீச்சில் அகப்பட்டுச் சுருண்டு விழுந்தது. அதன் முனகல் அடங்குவதற்கிடையில் சாத்தப்பட்டிருந்த கதவு மெல்லத்திறக்க, அந்த நீக்கலினூடாக இருவிழிகள் தெறித்தன. அவை இரண்டிலும் கலவரத்தின் சாயல் முழுமையாக அப்பியிருந்தது.
அந்த விழிகளுக்குரியவளைக் கண்டதும் விதானையார் தொங்கிக் குதித்தார். “வாடி இஞ்சாலை! உன்னைரெண்டு துண்டாக்கிப் போட்டுத்தான் அடுத்த வேலை!”
“ஐயா இப்ப என்னத்துக்குக் குளறுறியள்? உங்களுக்குக் சிலவுத் தானம் வையாமல் நான் வந்திட்டன் தானே?
கதவு முற்றுமுழுதாகத் திறக்கப்படாமையால் இவளுடையகுரல் மட்டும் மிக மெல்லிதாகக் கேட்டது.
“வெக்கங்கெட்ட…!ஓடிவாறதுக்கும் ஒரு தகுதி வேணுமடி எங்கட காலை நக்கித்திரியிற அந்தப் பரதேசி நாயிட்டை என்னத்தையடி கண்டனீ?’
கதவைத் திறந்துகொண்டு சரேலென வெளிப்பட்டாள் தமயந்தி. அவளது விழிகளுக்கு நெருப்புத்தாவியிருந்து. தந்தையின் முகத்தை நிதானமாக ஊடுருவியவள், ஒவ்வொரு வார்த்தையாக அவரை நோக்கித் துப்பினாள்.
“எங்கட தோட்டத்துக்கு மட்டை பொறுக்க வாற பெண்டுக ளிட்டநீங்கள் என்னத்தைக் கண்டீங்களோ அதைத்தான்…..விருட்டென்ற உள்ளே நுழைந்து கதவைப்படீரென்று அடித்துச் சாத்தினாள்.
ஆயிரம் கருங்குளவிகள் கொட்டினாற்போலத் திடுக்கிட்டுப் பின்வாங்கினார் விதானையார்.
உச்சித் தென்னையிலிருந்து கீழ் நோக்கித் தாவிய காகமொன்று அவரைப் பார்த்து இளக்காரமாகக் கரைந்து கொண்டு போனது. கூடநின்ற கும்பலில் யாரோ ஒருவன் ‘கிளுக்’ கென்று சிரித்தான்.
விதானையார் ஒன்றும் பேச இயலாதவராக, எல்லாம் இழந்தவராகத் தளர்ந்து நடந்தார்.இவ்வளவு நேரமும் இந்தக் கூத்தை வேடிக்கை பார்த்த ஊர்ச்சண்டியன்களும் இணைந்து தொடர்ந்தனர்.
நிலத்திலே துவண்டு சரிந்து அழுத தமயந்தியை செல்வ ராசாவின் கரம் ஆதரவாகப்பற்றியது. சிலிர்த்துப் பரவிய கூந்தலை ஒதுக்கி, அவளுடைய கண்ணீரை மெல்லத் துடைத்து விட்டான்.
உரமேறிக்கிடந்த தாடையை இன்னும் இறுக்கியவன் தணிந்த குரலில் உறுதியாகக் கூறினான்.
“தமயந்தி …! நான் கூலிக்காரன் தான் எண்டாலும் எனக்குள் ளையும் இதயம் இருக்குது. நாங்களும் மனிசர் எண்டதை வாழ்ந்து நிரூபிக்கவேணும். செய்து காட்டுவம்….”
அவர்கள் தங்கியிருந்த தென்னந்தோப்பு மில் முதலாளி சுப்பிரமணியத்துக்குச் சொந்தமானது. ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் இருநூற்றைம்பது தென்னைமரங்கள் குலை தள்ளிக் திணறிக்கொண்டிருந்தன.
வடக்குப் பக்க வேலியோரம் ஏழேட்டுப் பனைகள் கருக்குகளுடன் காவல் காத்தன. வளவின் நடுப்பகுதியில் சற்று ஆழமாக வெட்டப்பட்ட துரவில் நீர் மௌனமாகத் தேங்கிக் கிடந்தது.
சுப்பிரமணியம் வடமராட்சியிலிருந்து மாதத்துக்கு ஒரு தடவை மட்டும் வந்து, தேங்காய்களையும், மட்டைகளையும் ஏற்றுவதன்மூலம் தன்னுடைய உரிமையை நிலைநாட்டிவிட்டுப்போவார். கணக்குத் தவறாமல் எல்லாவற்றையும் சரியாக ஒப்படைப்பதனால் செல்வராசாவின் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தார் சுப்பிரமணியம். அதனாலோ என்னவோ சம்பளத்தைவிட மேலதிகமாக கறித்தேவைக்குத் தேங்காய் உடுபுடவை என்பவற்றையும் கொடுத்துவிட்டுச் செல்வார். இந்த நடைமுறை இவர்களின் இணைவுக்குப் பின்னரும் தொடர்ந்ததால் இல்வாழ்வு ஒருவிதமாக மெல்ல நகர்ந்தது.
இருவருக்கும் இடைப்பட்ட அன்புப்பரிமாறல்களின் மொத்த விளைவாக தமயந்தி பொங்கிப் பூரித்து மலர்ந்தாள். ஒருநாள் வீதியில் கண்ட அவளுடைய அக்கா மனோரஞ்சிதம் நடந்ததை
நினைத்துக் கண்ணீர் விட்டாள். இரத்த உறவை நெகிழ்த்திக்காட்டிய அந்தக் கண்ணீர் தமயந்திக்கும் வராமலில்லை.
பூகம்பமாகக் கிளம்பி இறுதியில் புழுதிபோல அடங்கிப்போன அவளுடைய ஐயாவும் அதற்குப் பிறகு அவளைச் சந்திக்கவில்லை. தமயந்தியின் ஒடுங்கிய வயிறு இலேசாக உப்பிப் பெருத்து ஊரெல்லாம் அவரைத் தாத்தாவாக்கியபோதும் அவர் தன் பிடிவாதத்தை விடவில்லை.
முந்தைய காலங்களில் இரவில் ஊரடங்கு நேரப் ஃபிரசவங்களில் நடந்தேறிய அவலங்களை நினைத்த செல்வராசா, இரண்டு நாட்களுக்கு முன்பே தமயந்தியை வைத்தியசாலைக்கு அழைத்துவந்துவிட்டான்.
கன்னங்களில் வழிகின்ற கண்ணீரை யாரோ துடைத்துவிடுவது போன்ற உணர்வில் விழித்துப் பார்த்தாள் தமயந்தி.
செல்வராசா கட்டில் விளிம்பில் அமர்ந்திருந்தான். அவனுடைய விழிகளின் ஓரங்களும் பளபளத்தன. உழைத்து இறுகிய கைகளைப் பற்றியவாறு விம்மினாள் தமயந்தி.
“ஐயாவும் அம்மாவும் எங்களைச் சேர்ப்பினமோ? ஏதோ ஒரு ஓர்மத்திலை எல்லாரையும் பிரிஞ்சாலும் நல்ல வாழுறம். எண்டாலும் எல்லாரும் ஒண்டா இருக்கிற மாதிரி வருமே? இஞ்சை பாருங்கோ என்ரை செல்லத்தை! உலகத்திலை நடக்கிறது ஒண்டும் தெரியாமல் கையைக் காலை ஆட்டிக்கொண்டிருக்குது!”
இன்னமும் முற்றாகப் பிரிக்கப்படாத விழிகளால் அவர்கள் இருவரையும் பார்த்துத் திகைத்தபடியிருந்த அந்தக் குழந்தையை ஆர்வத்துடன் வருடினான் செல்வராசா.
“தமயந்தி உம்மட ஐயாவும் அம்மாவும் இதுக்குப் பிறகு கூட எதிர்ப்புக் காட்டினா என்ன செய்வீர்?”
அவனுக்கு பதில்சொல்ல வாயெடுத்த தமயந்தி வாசற்புறம் எதையோ பார்த்துக் கண்களை விரித்தாள்.
“அக்கா…..!”
மனோரஞ்சிதம்.மெல்ல முறுவலித்தவாறு உள்ளே நுழைந்தாள். அவளுக்குப் பின்னால் தமயந்தியின் விழிகள் அலைந்து ஏமாற்றத்துடன் கூம்பின. மனோரஞ்சிதம் கொண்டு வந்த பையை வைத்துவிட்டு குழந்தையைக் கொஞ்சினாள்.
“தங்கச்சி! சரியா உன்னை மாதிரியே பிறந்திருக்கிறானடி!” அவளுடைய குரலில் மகிழ்வின் மிதப்புத் தெரிந்தது.
“அக்கா! அம்மா வரேல்லையே?”
தயக்கத்துடன் ஒலித்த தமயந்தியின் குரலைக்கேட்டு மனம் வாடித் திரும்பிய மனோரஞ்சிதம் எதுவும் பேசாமல் யன்னலினூடு வெறித்தாள்.
“தங்கச்சி நீ பிள்ளைத்தாச்சியானது வீட்டை எப்பவோ தெரியும். அம்மாவுக்கு வலு சந்தோஷம்.ஐயா தான் கொஞ்சம் ராங்கியாத் திரியிறார். பிள்ளையைக் கண்டா எல்லாம் பறந்து போகிடும் பாரன். இதுதான் எல்லாரையும் சேர்த்துவைக்கப் போகுது.” தமயந்தியின் முகம் தமயந்தியின் முகம் பூவாக விரிந்தது. இமைக்கதவுகளைப் படபடவென்று மூடித் திறந்தாள். தவிப்புடன் செல்வராசாவைப் பார்த்தாள். அவன் மென்முறுவலுடன் நின்றிருந்தான்.
“அது சரி அக்கா நீ இஞ்சை வந்தது வீட்ட தெரியுமே?”
“என்ரை அவருக்குத் தெரியும் அம்மாவுக்கும் சொன்னனான்” …. தடுக்கேல்லை அதோட இந்தா அம்மா தந்துவிட்டவ. என்றவள் தமயந்தியின் கைகளினுள் ஆயிரம் ரூபாவைத் திணித்தாள். பிறகு செல்வராசாவைப் பார்த்துக் கேட்டாள்.
“அப்ப…..எப்ப தம்பி வீட்ட கொண்டு போகப்போறீர்?”
“இண்டைக்குத் துண்டு வெட்டுறதெண்டு பெரிய டாக்குத்தரம்மா சொன்னவ மத்தியானம் போல வெளிக்கிடவேணும்”
மெல்ல வார்த்தைகளை நழுவவிட்டான் செல்வராசா.
“நில்லக்கா! நீயும் எங்களோட ஒண்டாப் போகலாம்” தமயந்திக்குத் தலையசைத்துக் கொண்டே தான் கொண்டு வந்த உணவுப் பொதியைப் பிரிக்கத் தொடங்கினாள் மனோரஞ்சிதம். பிற்பகல் இரண்டு மணியளவில் அவர்கள் வைத்தியசாலையை விட்டு வெளியே வந்தபோது வாசலில் நின்ற ஓட்டோக்கள் வரவேற்றன. ஒழுங்கு முறைப்படி முன்னே காத்திருந்த ஆட்டோவில் ஏறினார்கள். மனோரஞ்சிதம் குழந்தையை அணைத்து வைத்துக் கொண்டாள். தலையணையை மடியில் கிடத்தியவாறு நடுவில் அமர்ந்தாள் தமயந்தி. மறுபக்கம் செல்வராசா ஏற ஓட்டோ புறப்பட்டது. ஓட்டோவை இயக்கிய இளைஞன் வசீகரமாகப் புன்னகைத்தான். அதீத இரைச்சலைப் பொறுக்கமுடியாமல் காதைப் பொத்திக் கொண்டான் செல்வராசா.
“ஏன் தம்பி தனி மண்ணெண்ணெயிலயோ ஓடுகிறீர்? இப்பிடிச் சத்தமாக் கிடக்கு”
“ஓம் அண்ணை அதோட இது நல்லா உழைச்சுத் தந்திட்டுது. ஆறுவருசமா ஓடுறன். “
அந்த இளைஞன் கண்ணாடியினூடாகப் பார்த்துப் பதிலளித்தான்.
“இவ்வளவு சின்ன ஆளாக்கிடக்கு ஆறுவருசமா ஓடுறன் எண்ணிறாய்?”
மனோரஞ்சிதம் ஆச்சிரியமாய்க் குறுக்கிட்டாள்.
“ஓம் அக்கா பதினெட்டு வயதில ஓடத் தொடங்கினனான் முதலுக்காக வைச்ச அடைவு மீள ரெண்டு வருசமாச்சுது. பிறகு காசு சேர்த்து அக்காவுக்கு ஒண்டைப் பேசிமுடிக்க இப்பதான் காலம் சரி வந்திருக்கு. வாற ஆறாந்திகதி கலியாணம் ”
பின்னால் அசுரவேகத்தில் வந்த இராணுவ வாகனத்துக்கு வழிகொடுப்பதற்காக வேகத்தைக் குறைத்து ஓரங்கட்டினான் அவன்” எத்தனையோ பேரை இடித்துத்தள்ளி தரையோடு தேய்த்து உயிரைப் பறித்த அது புகையைக் கக்கி இருமிக்கொண்டு போனது
“எளிய மூதேசிகள்!“அவன் முணுமுணுத்தது. மெல்லிதாகக் கேட்டது.
“ஏனப்பன் உனக்கு அண்ணைமார் இல்லையே? அப்பா…?” மனோரஞ்சிதம் பரிதாபத்துடன் கேட்டாள்.
“அதக்கா ரெண்டு அண்ணைமார் கிளாலியிலை நேவியிட்ட வெட்டு வாங்கிச் செத்தவை. ஒரு தம்பி இயக்கத்துக்குப் போட்டான். இந்தியன் ஆமிப்பிரச்சினைக்கே அப்பாவின் அட்ரஸ்சே இல்லை.அதுதான் படிப்பை விட்டிட்டுத் தொழிலிலை இறங்கிட்டன். ஒருமாதிரி அக்காவின்ர காரியம் ஒப்பேறப்போகுது. இனி..”
“இனி..?”
வெட்கத்துடன் புன்னகைத்தவன் ஒவ்வொரு சொல்லாகச் சொன்னான்.
“எனக்காக ஒருத்தி காத்திருக்கிறாள்.”
தீடீரென்று தெற்குப் பக்கமாகக் கேட்ட வேட்டுச் சத்தங்கள் அவனுடைய முகத்திலிருந்த மலர்ச்சியைக் கடன் வாங்கிக் கொண்டு போயின.கலவரத்துடன் திரும்பிப் பார்த்தான்.
“அது சும்மா தம்பி உப்பிடித்தான். இடைக்கிடை அடிபடுவாங்கள் பிறகு ஓஞ்சிடுவாங்கள் சனம் தானும் தன்ரைபாடும் எங்களுக்கு உதெல்லாம் பழகிப்போச்சுது என்னவோ சமாதானம் பேச்சுவார்த்தை எண்டு தொண்டை கிழியக் கத்துவாங்கள். நாலைஞ்சு பிக்குமார் கூத்தாடின உடனை எல்லாத்தையும் தூக்கி எறிவாங்கள் பாரன். உந்தப் பாதை திறக்க வெளிக்கிட்டது. ஏதோ எங்களுக்காக எண்டு காட்டிறதை! பாப்பம் எத்தினை நாளைக் கெண்டு நீர் பயப்படாமல் ஓடும்.
செல்வராசாவின் வார்த்தைகள் துணிவேற்ற அக்சிலேற்றரை முறுக்கினான் அவன்.
அந்தப் பிரதான சந்தியைத்தாண்டி உவர் மண் வெளியினூடு நெளிந்த வீதிவழியாக நகர்ந்து உயரமான மேட்டை நெருங்கியபோது வீதியோரம் நின்ற ஒருசிலர் கைகாட்டி மறித்தார்கள். வாகனம் நிற்க முன்பே அவர்களுடைய எச்சரிக்கை ஒலி உள்ளே நுழைந்து மோதியது.
“அண்ணை உங்கால கடும் அடிபாடு ஒரு சனமும் நுழையேலாது. ஞாயமான சனம் அம்பிட்டிட்டுது. போனா மாட்டுப்படுவியள்.
செல்வராசா திகைப்புடன் தமயந்தியைத் திரும்பிப் பார்த்தான். அவளுடைய விழிகள் கெஞ்சின.
“இனி எங்க திரும்பிப் போறது.? போய்த் தங்கிறதுக்கு எங்களுக்கு ஆர் இருக்கினம் ? வீட்டை போனாலாவது ஐயா அம்மாவை இருக்கினம். பிள்ளை இருக்கிறபடியா எங்களை ஒண்டும் செய்யாங்கள்.”
தமயந்தி புலம்ப மனோரஞ்சிதம் பிரமை பிடித்துப்போய் அமர்ந்திருந்தாள். அவளுடைய கையிலிருந்த அந்தப்பிஞ்சு எதுவும் புரியாமல் சிணுங்கியது தமயந்தியின் கண்ணீரைக் கண்டதும் செல்வராசா ஒரு முடிவுக்கு வந்து உறுதியாய்க் கூறினான்.
“தம்பி நீர் ஓட்டோவை எடும்”
“அண்ணை…!”
“நான் பேசினதுக்கு மேலையே தாறன்.”
“அண்ணை அதுக்கில்லையண்ணை அவன் இப்ப கொதியிலை நிப்பான் உதுக்குள்ளே போய் வீணா என்று தயங்கியவன் குழந்தையின் அனுங்கலைக்கேட்டு மனமிளகி ஓட்டோவைக் கிளப்பினான். சுற்றிவர நின்றவர்கள் திகைப்புடன் வழிவிட்டார்கள்.
ஆள் நடமாட்டமற்று வெறிச்சோடிக்கிடந்த கண்டி நெடுஞ்சாலையில் வெகு வேகமாகச் சென்று ஏற்றத்துக்கு அப்பால் இறங்கி ஒரு புள்ளியாக மறையும் வரை இங்கு நின்றவர்களின் விழிகள் நிலை குத்தியிருந்தன.
வேட்டுச்சத்தங்கள் இன்னமும் கேட்டுக்கொண்டிருந்தன.
இரவு.
நிலவு ஒவ்வொரு கொப்பாகத் தாவித்தாவி மரத்தின் உச்சியை அடைந்திருந்த வேளை காற்றுக்கூட பயத்துடன் பதுங்கியிருந்து.
கறுத்துக்கிடந்த கண்டி வீதியின் விளிம்பில் ஒரு வாகனம் நிற்பது இருட்புகாரை வெட்டிநோக்கும் இரு விழிகளுக்கு மட்டும் தெரிகிறது. துளையிடப்பட்ட அந்த வாகனத்தில் எஞ்சிய உயிர்ப்பை உறுதி செய்வதைப்போல மிக மெல்லிதாக ஒலிக்கும் குழந்தையின் அழுகை அந்தச் செவிகளுக்கு மட்டுமே கேட்கின்றது.
பளபளக்கும் விழிகளுடன் அது அந்த வாகனத்தை நோக்கி மெதுவாக நகரத்தொடங்குகின்றது.
– சஞ்சீவி, 22.04.2000.
– இங்கிருந்து… பன்னிரண்டு சிறுகதைகள், முதற் பதிப்பு: 2001, நண்பர்கள் வெளியீடுபதிப்பகம், நல்லூர்.
தொடர்புள்ள சிறுகதைகள்
நீ இல்லாத உலகத்திலே….!
வளர்கவி
October 21, 2026
அஞ்சல் நிலைய அதிகாரி
பூ.சோமசுந்தரம்
October 21, 2026
பிழி திறன்
உரு.வளவன்
October 21, 2026