குற்றம் புரிந்தவன்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 29, 2025
பார்வையிட்டோர்: 9,740 
 
 

சட்டென்று ஓர் உணருதலில் மூக்கிலிருந்து நீர் வழிந்திருப்பது தெரிந்தது. இடது கையால் அவசரமாக அதைத் துடைத்து விட்டுக் கொண்டான். அப்படிச் செய்த வேகத்தில் அது தீற்றிக் கொள்ள, மடியில் போட்டிருந்த துண்டால் மீண்டும் அழுந்தத் துடைத்தான். எப்பொழுது வழிந்திருக்கும் என்று தெரியவில்லை. விமலாவுடன் பேசிக் கொண்டே சாப்பிட்ட போது தான் சளிநீர் கீழே இறங்கியிருக்க வேண்டும். ஆனால் அதை வழியும் முன்பே உணர முடியவில்லை: பேச்சு சுவாரஸ்யத்தில் இப்படி ஆகலாம் என்று சமாதானம் செய்து கொள்ள இயலாது.

விமலா சொல்லவில்லை. கவனிக்காமலிருந்திருக்கலாம். எப்படி இதைச் சொல்வது என்று கூட இருந்திருக்கலாம்.

சமீபகாலமாகத்தான் இப்படி ஆகிறது. கடந்த ஓரிரு மாதங்களாகத் தான் இந்த உணர்வற்ற நிலை. எப்பொழுதுமே சாப்பிடும் வேளையிலெல்லாம் பருக்கை எதுவும் வாய் ஓரங்களிலோ, மீசையிலோ ஒட்டியிருக்கிறதா, எதுவும் வழிகிறதா என்றெல்லாம் கவனமாயிருந்து துடைத்து விட்டுக் கொள்வான். பார்ப்பவருக்கு அசிங்கமாய்த் தெரியக் கூடாது என்பதில் கவனம் அதிகம். அம்மாதிரியான ஒரு ஜாக்கிரதை யுணர்வு தன்னிடம் மந்தமாகியிருப்பதை எண்ணினான்.

ஏனிப்படி? என்னவாயிற்று? தசைகள் சக்தியிழக்க ஆரம்பித்து விட்டனவா? உணர்வு நரம்புகள் தன் நிலை தளர்ந்து விட்டனவா? எண்ணங்கள் பயமுறுத்தின.

“என்னங்க? என்ன யோசனை திடீர்னு?”

“ம்… ஒண்ணுமிலலை.

“எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதிலே கான்ஸன்ட்ரேஷன் வேணும்னு நீங்கதானே சொல்வேள்… இப்போ சாப்டுண்டு இருக்கேள்.. கவனம் அதில் தான் இருக்கணும் இல்லன்னா சாப்பாடு உடம்பிலே ஒட்டாது.”

இவன் அமைதியாயிருந்தான். கையும் வாயும் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தது. கவனம் மீண்டும் பழைய நிலைக்கே வந்து விட்டிருந்தது.

சட்டென்று மடியில் போட்டிருந்த துண்டால் மீண்டும் ஒரு முறை மூக்கைத் துடைத்து விட்டுக் கொண்டான். இப்பொழுது வழியவில்லை என்று தெரிந்தது. ஆனாலும் அது மீண்டும் வழிவதற்கு முன் அதை விமலா பார்ப்பதற்கு முன் துடைத்துக் கொண்டு விட வேண்டும். மனதில் அசிங்கமாய்த் தோன்றிக் கூட அதை அவள் வெளிக்காட்டாதிருக்கலாம். இவனையும், இவன் நடவடிக்கைகளையும் அவை எங்ஙன மிருப்பனும், அதை சகித்துக் கொள்ள அவள் பழகிக் கொண்டிருக்கிறாள். மிக இளமைக்காலத்திலேயே அந்தப் பக்குவம் அவளுக்குக் கைவந்திருக்கிறது. ஆனால் தனக்கு…?”

தான் அப்படி இருக்கவில்லையே என்று மனது உறுத்தியது. நெஞ்சிலிருந்து பிடுங்க முடியாத, நிரந்தரமாகக் குத்தி நின்று விட்ட முள் அது ஏற்படுத்திய ரணம். ஆறாத புண். வாழ்க்கை முழுவதும் அனுபவித்தே தான் ஆக வேண்டும் என அனுதினமும் வதைக்கும் வேதனை.

“தள்ளாமையும், முதுமையும் மனுஷாளாப் பொறந்தவாளுக்கெல்லாம் பொதுவாக்கும். அத மனசில வச்சிக்கோ. அதை நினைக்காம இப்படி ஆட்டம் போடறியே? இது தகாது! அந்த ஆண்டவனுக்கே அடுக்காது. ஒரு காலத்துலே நீ இதை உணரத்தான் போறே..”

அழுகையும், துக்கமும் பொங்கப் பொங்க நெஞ்சடைத்த மூச்சு நின்று விடுமோ என்று அச்சம் கொள்ளும் விதத்தில் அம்மா கண்ணீர் வடித்து நின்றாளே அந்த அளவுக்கு வேதனை கொள்ள வைத்தோமே அவளை!

அந்த மாதிரி வேளையிலும் கூட அப்பா ஒரு வார்த்தை சொன்னதில்லையே?

“சளி வழியறதா ரமணா… தெரியலேப்பா …” சொல்லிக்கொண்டே மடியில் போட்டியிருந்த துண்டால் துடைத்துக் விட்டுக் கொண்டார்.

இவனுக்கு ஆத்திரம் பொங்கியது. “தெரியலை? கவனமில்லேன்னு வேணா செல்லுங்கோ…. மூக்குப் பொடியை வேறே போட்டுக்கறேள்… அதுவும் சேர்ந்துண்டு கருப்பா. அசிங்கமா வழிஞ்சிண்டிருக்கு.. அப்படியே தட்டிலே விழுந்து அதையும் சேர்த்து சாப்பிட்டுடப் போறேள்…. கண்றாவி.. அநாச்சாரம்… பக்கத்துல ஒரு ஆள் உட்கார்ந்து சாப்பிட முடியாது..”

“டேய் ரமணா… வாயை மூடு! என்ன, நீ பாட்டுக்கு பேசிண்டே போறே? அப்பாங்கிற மரியாதை கூட இல்லாமே?.”

“சொல்லட்டுமேடி யாரு- நம்ப பிள்ளைதானே? உள்ளதைத் தானே சொல்றான்..?”

“ஆமா, பின்னே? கண்ணுலே படறபோது சொல்லாமலா இருக்க முடியறது? சளி வழியறதும், வாயிலே பருக்கை ஒட்டிண்டிருக்கிறதும் கூடத் தெரியலே…. சர்ரு சர்ருன்னு சத்தமா உறிஞ்சினா? பக்கத்துலே மனுஷா சாப்பிட வேண்டாமா?

இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த போது, அப்பா புறங்கையை நக்கிக் கொண்டிருந்தார். தட்டில் இருந்த சாதம் காலி என்று அர்த்தம். அல்லது எழப்போகிறார் என்றுபொருள்.

“சீ சீ.. என்ன பழக்கம் இது? சிறு குழந்தை மாதரி சாப்பிட்டது தான் வயிறு நிறைஞ்சிருக்குமே., பிறகு என்ன புறங்கையை நக்கறது? கர்மம், கர்மம்! என்ன சொன்னாலும் திருந்தப் போறதில்லை …”

“இங்க பார் ரமணா! இப்டி வா..” கை கழுவப் போன போது அம்மா கொல்லைப்புறம் கிணற்றடிப்பக்கம் நின்று கொண்டு அழைக்க..

“என்னம்மா?” எரிச்சலோடு போய் நின்றான்.

“வயசானவாளை அப்படியெல்லாம் பேசப்படாதுடா கண்ணா .. என்னானாலும் அவர் உன் தோப்பனார் இல்லியா? அவர் மனசு நோகும்படிப் பேசினா… அது உனக்குத் தான் கஷ்டம்… வாய் திறந்து எதுவும் சொல்லிவிட்டாலும் மனசிலே நினைப்பாரோல்லியோ… அது உன்னைப் பாதிக்குமாக்கும்…. இனிமே இப்டியெல்லாம் பேசாதப்பா….”

“இதையெல்லாம் பார்த்தும் ஒண்ணும் சொல்லப்படா துன்னா கண்காணாம எங்கேயாவது போயிட வேண்டியது தான்…”

இப்படிச் சொல்லியிருக்கிறோமே தவிர, தன் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இருந்ததில்லையே?

கடைசிவரை கோபமும், குரோதமும் ஒருங்கே கொப்பளிக்க, அன்றாட நடவடிக்கைகளையே எத்தனை நாசம் செய்திருக்கிறோம்?

“என்ன இது? மோர் சாதம் சாப்பிடலியா? அதுக்குள்ளேயும் எழுந்திட்டேள்?” மீண்டும் அமர்ந்தான்.

“மறந்தே போச்சு விமலா… ஏதோ ஞாபகம்…” ‘சாம்பாருக்கும், ரசத்துக்கும் சாதம் கம்மியா போட்டுண்டேள்… காயும் ஒழுங்கா சாப்பிடலை… மோர் சாதமாவது சரியா சாப்பிடுங்கோ.. வயிறு நிறையலேன்னா உங்களுக்குத் தூக்கம் வராது. அப்புறம் படுக்கையில் புரண்டுண்டே இருப்பேள்…”

அவள் சொன்னது எதுவும் தெளிவாக காசி விழுந்ததாகவே தெரியவில்லை .

சிந்தனை அனைத்தும் அம்மா அப்பா சார்பான தனது முந்தைய கொடுமைகளிலேயே நிலைத்திருந்தது.

சமீப காலமாய் மனதை ரொம்பவும் அறுக்கிறது. வதக் வதக் கென்று குத்துகிறது. ஒவ்வொன்றாக ஏதேனும் ஞாபகத்துக்கு வந்து கொல்கிறது. கணக்கிலடங்காத வகையில் அனுதினமும் தான் பாவமே செய்து வந்திருக்கிறோம் என்று உணருகிறது. சேர்த்து வைத்த பாவச்சுமை மனசை அமுக்குகிறது. சுமக்க முடியாமல் கிடந்து தவியாய் தவிக்கிறது.

“இதுக்கெல்லாம் நீ அனுபவிக்கத் தான் போறே. மொத்தமா அனுபவிப்பே பாரு.. எங்க வயித்தெரிச்சலை இப்படிக் கொட்டிக்காதே…. அது உனக்கு நல்லதில்லை …”

முன்பற்களைக் கடித்துக் கொண்டு, உடம்பு கூனி நின்று கையை நீட்டி நீட்டி அம்மா இட்ட சாபம்.

கை கழுவி வாய் கொப்பளித்தான். நேரே வராண்டாவுக்கு வந்து சாய்வு நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தான். இவனைப் போலவே சற்றுத் தள்ளியிருந்த வீடுகளிலும் சிலர் வெளியே அமர்ந்திருந்தார்கள். வயதில் பெரியவர்கள், ரொம்பவும் வயதான தாத்தாக்கள் இப்படி.

நேர் எதிர் வரிசையில் சற்றுத் தள்ளியிருந்த ஒரு வீட்டின் வாசலில் ஒரு அம்மணி. அறுபது வயதுக்குள் தேறும். போட்டிருந்த ஈஸிசேரில் சாயவும் முடியாமல், நிமிர்ந்து உட்காரவும் இயலாமல், “ஏவ்.. ஏவ்..” என்று நீட்டி முழக்கி நிமிடத்துக்கு இரண்டு தரம் ஏப்பம் விட்டு அவஸ்தைப் பட்டுக் கொண் டிருந்தார்கள்.

ஒத்திக்கு அந்த வீட்டை வாங்கி குடி வந்திருப்பதாக அறிந்திருந்தான் இவன்.

“டவுனுக்குள்ள இருக்க முடியல சாரே… எவ்வளவோ வைத்தியம் பார்த்தாச்சு…. ஒண்ணும் நடக்கலை. இந்த பாழாப்போன ஏப்பத்தை நிறுத்த முடியலை… என்ன பண்ணச் சொல்றீங்க சொல்லுங்க… அண்டை வீடு அசல் வீடுன்னு மூஞ்சிக்குப் பின்னாடி முணங்க ஆரம்பிச்சிட்டாங்க… அவுகளுக்கு தூக்கம் கெடுது, தொந்தரவா இருக்குன்னு… சுத்தி இருக்கிற குழந்தைகளெல்லாம் வேறே கேலி பண்ண ஆரம்பிச்சிடுச்சி…. எங்க தாயாருக்கு ஒரே வருத்தம்…. அதான் எதுக்கு வம்புன்னு இப்டி ஊருக்கு ஒதுக்குப்புறமா கூட்டியாந்திட்டேன்…”

ரிடையர்ட் ஹெட் சான்ஸ்டபிள்… அந்த அம்மாவின் ஒரே பிள்ளை …. இப்படிக் கூறினார் ஒரு நாள்.

தன் தாய்க்கு இருக்கும் பல்வேறு விதமான வியாதிகளைக் கருத்தில் கொண்டு, வரும் பெண் எப்படி இருப்பாளோ என்ற பயத்தில் கல்யாணமே செய்து கொள்ளாமல் இருந்து விட்டதாகச் சொன்னார்.

அவரோடு ஒப்பிடும்போது தான் எம்மாத்திரம் என்று தோன்றியது. இவனுக்கு. ஒழுக்கமும், பண்பாடும், தியாக உணர்வும் மிக்க தாய் தந்தையர்க்குப் பிறந்தும், புத்தி ஏனிப்படிப் பேதலித்துப் போனது? நல்லது கெட்டது என்று

பகுத்துணர்ந்து பார்க்கும் திறன் இருந்தும், நல்லதை மட்டுமே செய்யும், முடிவெடுக்கும் திறன் எப்படித் தன்னிடம் படியாமல் போனது?

அசூயையும், ஆங்காரமும், எதையெடுத்தாலும், தவறாகவே பார்க்கும் கண்ணோட்டமும், மனப்போக்கும், அர்த்தமில்லாத மனச் சலிப்பும், எப்போதும் நிரந்தரமாகக் குடி கொண்டிருந்த கோபமும்…. ஏன் அப்படி மாறிப் போனோம்? இன்று ரத்தம் சுண்டும் பொழுது அறிவு தெளிவு பெறுகிறதா? “எவ்வளவு நேரந்தான் இப்படி வெட்ட வெளியிலே உட்கார்ந்திருப்பேள்… வாடைக்காத்து வேறே வீசஅகன்று கிடந்த வானத்தைப் பார்த்தவாறே அண்ணாந்து கிடந்தான் இவன்.

விழியோரங்களில் நீர் திரண்டிருந்தது. துக்கம் நெஞ்சையடைத்தது. பக்குவப்பட்ட, பதமான ஒரு மனிதனாக வாழத் தவறி விட்டோமே? பிரதி மாதமும் சம்பளம் வாங்கி வீட்டில் கொடுப்பதோடு கடமை முடிந்தது என்று தாய் தந்தையர்க்கு ஆதரவாக, அணைப்பாக, அன்பொழுக என்றெனும் காரியமாற்றியதுண்டா ? ஒரு பொழுதேனும் அப்படிப் பேசியதுண்டா? அவர்களைப் பேணிக் காப்பதில் எத்தனை முறைகேடாய் நின்றோம்? பொறுப்பை உணர்ந்தும், செய்யக் தவறிய பாவியாய் அல்லவோ இருந்து விட்டேன்?

ஆதங்கம் மேலிட்டது. தனது வக்கிரங்கள் அனைத்தும் தன் சொந்தத் தாய் தந்தையர் மீதே பாயும் அளவுக்குக் கீழ்த்தரமாக இருந்துவிட்டதை எண்ணி வெதும்பினான்.

எப்பொழுது கண்ணயர்ந்தோம் என்று தெரியவில்லை. விமலா எழுப்பினாள். மணி பத்தரையைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உட்கார்ந்த வாக்கிலேயே தூங்கியிருக்கிறோம் என்று தெரிந்தது. அம்மாதிரியெல்லாம் ஆனதில்லை. காற்றாட உட்கார்ந்த இடத்திலேயே அப்படியே உறங்கிப்போவது சமீப காலமாய்த் தான் நிகழ்கிறது. உள்ளே ஹாலுக்குள் அமர்ந்து டிவிபார்த்துக் கொண்டிருக்கும் பொழுதுகூட இப்படி ஆகிறது. உடம்பு வலுவிழந்து போனால்தான் இப்படி ஆகக்கூடும் என்று நினைத் போது மனதுக்குப் பயமாக இருந்தது.

“அது தான் எட்டரை மணிக்கே படுக்கையை விரிச்சாச்சே… வயித்துக்குக் கொட்டிண்டாச்சுன்னா அப்படியே வந்து விழ வேண்டியது தானே… அப்புறம் என்ன வாசல்ல காற்றாட வேண்டிக்கிடக்கு? தானா போய், உட்கார்ந்து, தானா வர முடியுமானா சரி… பிறத்தியாரோட ஒத்தாசை இல்லாம முடியுமோ? சரி அடுத்தவாளுக்கு நம்மால சிரமம் வேண்டாமேங்கிற பிரக்ஞை கொஞ்சமேனும் வேணும்.மனசிலே நினைச்சா நினைச்சது தான்… ஒரே பிடிவாதந்தான்.

“அடேய் ரமணா… பெத்த தோப்பனாரை அப்படியெல்லாம் பேசாதடா….. நாக்கு அழுகிடும்…. வயசானவாளை நிறைவா வச்சுக்கத் தெரியாட்டாலும் அவாகிட்டேயிருந்து சாபத்தை வாங்கிக்காதே…. வாயை மூடிண்டு கிட….”

அதே அப்பா பெராலிடிக் அட்டாக்கில் விழுந்து. ஆஸ்பத்திரியில் கிடந்தபோதும், பின்பு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து போதும், தான் எப்படி நடந்து கொண்டோம். தனது பொறுப்பான பொறுமையான பணிவிடைகளைப் பார்த்து அப்பா கண் கலங்கிப் போனாரே…

“டே.. டேய்… என்ன செய்யப் போறே…! “நீங்க பாட்டுக்கு இருங்கோ. ஃபிஸியோதெராபிஸ்ட் எங்கிட்டே சொல்லிட்டு போயிருக்கார், அதை ப்ராம்ப்டா செய்தாகணும்…”

சொல்லிக்கொண்டே அப்பாவை இரும்புக்கட்டிலில் தூக்கி அமர்த்தி, தான் தரையில் அமர்ந்து கொண்டு அவர் காலைத் தூக்கித் தன் மடியில் வைத்துக் கொண்டு இழுத்து இழுத்து விரல்களை சொடக்குப் போட்டதும், முழங்கால் வரை நீட்டி மடக்கி அவரால் செய்ய முடியாத உடற்பயிற்சியை தான் செய்து விட்டதும், அப்படிச் செய்து கொண்டிருக்கும் பொழுதே அப்பாவுக்கு வெளிக்கு வந்துவிட, பெட் பேனைக் கொண்டு வந்து அடியில் வைக்க, அதற்குள் அடக்க முடியாமல் அப்பா திணற சட்டென்று ஒரு வேகத்தில் மலம் இவன் கை, கால் உடம்பெல்லாம் தெறித்தது. அந்த மாதிரி ஒரு நிலையில்கூட தான் சற்றும் கோபமோ, அசிங்கமோ படாமல், முகம் சுளிக்காமல் “பரவால்ல… பரவால்ல… அலம்பிட்டா போச்சு…” என்று சொன்னதும், செய்ததும். காலம் ஏன் தன்னை இப்படிப் பாடாவதியாய் மாற்றிற்று? எந்தக் காரணத்தை அடிப்படையாய்க் கொண்டு

காரண காரியமில்லாமல் பொழுதுக்கும் கோபமும், ஆர்ப்பாட்டமும் தலையெடுத்தன தன்னிடம்?

அசூயை, ஆங்காரம், வெறுப்பு கோபம் சலிப்பு ஆகிய துஷ்ட நிக்கிரகங்கள் ஏன் தன்னை அப்படி ஆட்டிப்படைத்தன?

“உன்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு யார் சொன்னா? பெரியவளுக்கு ஆகட்டும், அப்புறம் பண்ணிக்கிறேன்னு சொல்லிண்டு இருந்தே. அது மூணு வருஷம்னு இழுத்துடுத்து. அதுக்கு யார் பொறுப்பு? இப்போ வந்து மனசிலே அதை இதை நினைச்சுண்டு. பொழுது பொழுதா இருக்கிறவா மேலெல்லாம் ஆங்காரப்பட்டுண்டு கிடந்தேன்னா? உன்னோட மாரடிக்கிறதுக்கே . சரியாயிருக்கு… எங்க ஆவி இதுலயே போயிடும் போலிருக்கு? தள்ளாத காலத்துலே இதென்னடா கொடுமை? பகவானுக்கு அடுக்குமா இது? எங்க வயித்தெரிச்சல கொட்டிண்டியோ நீ வெளங்க மாட்டே, ஞாபகமிருக்கட்டும்,

புலம்பிக் கொண்டே ஓவென்று குரலெடுத்து, நெஞ்சிலடித்துக் கொண்டு அம்மா அலற, அப்பா ஒன்றும் செய்யத் தோன்றாது சிலையாய் அமர்ந்திருந்தார்.

“இந்த வீட்டிலே என்னிக்குத் தான் நிம்மதி கிடைக்குமோ?” சொல்லிக்கொண்டே கதவைத் தடாலென்று இழுத்துச் சாத்திவிட்டு வெளியே வர…

“ஏன்னா. ராத்திரி மணி பத்துக்கு மேலே எங்கே வெளியே போறான்? கூப்பிடுங்கோ அவனை…” அம்மா பதறினாள்.

“எங்கேடி போயிடப்போறான்… மிஞ்சி மிஞ்சிப் போனா ஒரு சினிமாவுக்குப் போவான்….. நீ வேறே எது மாதிரியும் கற்பனை பண்ணிட்டு மாய ஆரம்பிக்காதே… அவன் நம்ப பிள்ளையாக்கும்.எந்தக் கெட்ட பழக்கமும் அவ னை அண்டாது, அண்ட முடியாது…”

அப்பாவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் ஏதோ மனசில் உறுத்த. மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம்போல் தான் திரும்பி வந்து படுக்கையில் விழுந்ததும்…

“உம் பிள்ளை வந்துட்டாண்டி – நிம்மதியா தூங்கு…” என்று அப்பா கூறிய சற்று நேரத்தில்

“ரமணா… ஏன் தலையணையில்லாமல் படுத்திருக்கே.. கழுத்து சுளுக்கிக்கப் போறதுடா… இதை வச்சுக்கோ … அரைகுறைத் தூக்கத்தில் இருந்த இவனை எழுப்பி தலைக்கு அம்மா உயரம் வைக்க.

அன்று –

தான் ஏன் இப்படி மோசமாய் ஆகிப்போனோம்? என்ற ஆதங்கத்தில் தலையணை நனைய நனைய யாருக்கும் தெரியாமல் அழுதது நினைவுக்கு வந்தது இவனுக்கு.

வயதும்…. இளமையும், உடம்பில் ஏறியிருந்த திமிரும், பெண்ணையும், பெண்மையைப் பற்றியதுமான கற்பனைகளும், கனவுகளும்தான் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியதா? உடம்பு சுகம் தேடி, அது கிட்டாத ஏக்கத்தில் இது வக்கிரமாக மாறிப்போனதா? எங்கேனும் போய் சிலரைப் போல் பெண் சுகம் அனுபவித்துக் கொள்ளும் வடிகாலைத் தேடிப்போக இயலாமல் அமிழ்ந்து போயிருந்த ஒழுக்கமும், கட்டுப்பாடுமே தன்னை அப்படித் தறிகெட்டுத் திமிற வழி வகுத்ததா? காலா காலத்தில் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனதால் ஏற்பட்ட பொறுமலா? போயும் போயும் அதுவா தன்னை இப்படிப் மாற்றிற்று?

நெஞ்சைப் பிசைந்தன பழைய சம்பவங்கள். உறக்கம் பிடிக்கவில்லை .

“ஏன்னா, என்ன அப்படியே வந்து படுத்திருக்கேள்? உள்ள வரலியா? வழக்கமா சாப்பிட்டவுடனே, படுக்கறதுக்கு முன்னாடி பல் தேய்ப்பேளே? இன்னிக்கு என்னாச்சு?

விமலா கூறியபோது தான் இவனுக்கு ஞாபகம் வந்தது. வாயை ஒரு முறை நாக்கால் சுழற்றிப் பார்த்துக் கொண்டான். வழவழப்பாய் இருப்பது போன்ற ஒரு உணர்வு. எழுந்து போக வேண்டும் தான். லேசாய் ஒரு தேய் தேய்த்து சுவாசம் மணக்க ஒரு நிமிடத்தில் வந்து விடுவது தான் முடியவில்லை. இப்பொழுது உடலும் மனமும் செ தளர்ந்து போயிருக்கிறது. எழவும் மனசில்லை

கண்களைத் திறக்கக் கூட இஷ்டமில்லை . எதையல் வேண்டாம்போல் இருந்தது. கண்களைத் திறந்தால் உள்ளவர் முன் தான் குற்றவாளியாய் நிற்பது போன்ற உணர்

“இந்தாங்கோ பேஸ்ட்டும், பிரஷ்ஷும்… இங்கேயே வாய் கொப்பளிங்கோ”

“ஒண்ணும் வேண்டாம் விமலா….. கொண்டு வை….” சட்டென்று இவன் பதிலில் ஒன்றும் புரியாமல் நின்றாள் விமலா.

இவன் சிந்தனையோ அதற்குள் எங்கோ போய் நின்றது. சின்னச் சின்ன விஷயங்களில் கூட தான் பிணங்கியிருப்பதை எண்ணி வெதும்பியது மனம். உள்ளே வந்து படுக்கையில் விழுந்தபோது அது துரத்தியது. கஷ்டப்பட்டு உழைத்து, ஹோட்டல் உத்தியோகத்தில் நெருப்பின் முன் வெந்து தன்னை ஆளாக்கிய தந்தையை தான் எவ்வளவு நோக பண்ணியிருக்கிறோம்.

“சரியா பல் தேய்க்கிறது கிடையாது…. காறித் துப்பிக் கொப்பளிக்கிறது இல்லை. ஒரே நாத்தம் பக்கத்திலே நின்னு யாரும் பேசமுடியாது. சரி, அது தான் போக நாளைக்கொருதரம் ஷேவ் பண்ணிக்கங்கோன்னா கேட்கிறது இல்ல… பார்பரை அகத்துக்கு அழைச்சிண்டு வர்றேன்னாலும் சம்மதிக்கிறதில்லே… எதுக்கு செலவு அடிக்கடி பண்ணின்டு என்ன செய்யப்போறேன்னு வறட்டு வறட்டுன்னு சொறிஞ்சிண்டு பிச்சைக்காரன் மாதிரி, நிற்க யாராவது நம்ப அகத்துக்கு வந்தா, இவர்தான் எங்கப்பான்னு சொன்னா ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சிடுறா… தரித்திரக் கோலம் போட்டா யாரால்தான் சகிக்க முடியும்?

“அப்படியா ராஜா…… ஒண்ணு செய்யேன்.. உன் ஃப்ரெண்ட்ஸுகள் வர்றபோது சொல்லு…. நாவேணும்னா கொல்லைப்பக்கம் போயிடறேன்… அவா போனப்புறம் அகத்துக்குள்ளே வந்துக்கறேன்…. சரி தானா”

அப்பாவின் பதிலில் அப்படியே நொறுங்கிப் போனான் இவன் ஏதோவோர் எல்லையை மீற முடியாத அடிப்படைத் தன்மை தன்னிடம் ஆழப் புதைந்திருந்ததுவும், அதை அறிவு பூர்வமாய் அணுகத் தவறிவிட்டதுவும்……

அடுக்கடுக்காய் தொடர்ந்து ஞாபகம் வந்து கொண்டேயிருக்கும் சம்பவங்கள்… அனுதினமும் வதைக்கும் வேதனை.

இந்தப் புண்ணுக்கு எப்படி மருந்திடுவது? எப்படி இதை ஆற்றுவது?

அனுபவித்துத்தான் மாயவேண்டுமா? கேள்வி பயமுறுத்தியது.

விமலா தீர்வு சொன்னாள்.

“ஏன்னா, நா ஒண்ணு சொல்றேன் கேட்கறேளா?”

“என்ன ?” “கொஞ்ச நாளாவே என்னவோ போல இருக்கேளே… உங்க அம்மாவையும், அப்பாவையும் இங்க கூட்டிக்கொண்டு வந்து வச்சிக்கோங்களேன்… உங்ககளுக்கு அது மனநிம்மதியைத் தரும்னு எனக்குத் தோணறது.. செய்றேளா?”

துணுக்குற்றான், இவன். தரையில் போடப்பட்ட மீனாய்க் கடந்து தவிக்கும் தன் மனப்போக்கை, வேதனைகளை எப்படி உணர்ந்து கொண்டாள்?

“விமலா, உண்மையாவா சொல்றே?”

“என்ன இப்படிக் கேட்கறேள்? உங்க நிம்மதிதானே என் நிம்மதி. அதுக்கு மேலே என்ன இருக்கு நேக்கு சொல்லுங்கோ…

நாளைக்கே உங்க அண்ணாவுக்கு லெட்டர் எழுதுங்கோ.. சரிதானா?”

மெல்ல நகர்ந்து விமலாவின் அருகில் வந்தான். அப்படியே அவள் மடியில் விழுந்து, முகம் புதைத்து சிறு குழந்தை போல விசும்பி அழ ஆரம்பித்தான்.

– குங்குமம், 1993.

உஷாதீபன் 1987 முதல் உஷாதீபன் என்கிற புனை பெயரில் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. அச்சு மற்றும்இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரைச் சொந்த ஊராகக் கொண்டவர். 1951 ல் பிறந்த இவர், தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராகப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *