கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2024
பார்வையிட்டோர்: 1,231 
 
 

(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 36-40 | அத்தியாயம் 41-45

அத்தியாயம் நாற்பத்தொன்று

மறு வாரத்தில் ஒரு நாள் மாலை! 

கண்டக்டரின் பங்களாவிலிருந்துகரத்தை ரோட்டு வந்து முடியும் குறுக்குப் பாதையில் பண்டா முதலாளியின் லொறி நின்றுகொண்டிருந்தது. அவரது கையாட்கள் இருவர், கண்டக்டருக்குச் சொந்தமான பொருட்களை லொறியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். 

லொறி அங்கு வந்து நிற்பதையும் பொருட்கள் ஏற்றப்படுவதையும் அறிந்த தொழிலாளர்கள் கண்டக்டரின் பங்களாவின் முன் கூட்டமாகக் கூடிவிட்டனர். 

விஷயமறிந்த வீரய்யாவும், ராமுவும், செபமாலையும் அப்போதுதான் அவசர அவசரமாக அங்கு வந்து சேர்ந்தனர். 

பங்களாவின் உள்ளேயிருந்து கண்டக்டரும், பண்டா முதலாளியும் வெளியே வந்தனர். அவர்களைத் தொடர்ந்து கண்டக்டரை வழியனுப்ப வந்த பெரிய கிளாக்கரும், கோப்பரட்டிவ் மனேஜரும் ஏதோ கதைத்த வண்ணம் வந்தனர். 

தோட்டத்துக்குரிய தளபாடங்களைத் தவிர மற்றவை யாவும் லொறியில் ஏற்றப்பட்டுவிட்டன. 

“‘என்னாங்க ஐயா? நாங்க போராடிக்கிட்டு இருக்கிறப்போ, நீங்கமட்டும் தோட்டத்தவுட்டுப் போறது சரியில்லீங்க” என்றான் வீரய்யா கண்டக்டரைப் பார்த்து. 

“எங்களுக்கெல்லாம் செய்யிறத செஞ்சிப்புட்டு தோட்டத்துவுட்டு தப்பிப் போகலாமுனு பாக்கிறீங்களா? நமக்கு ஒரு முடிவு வந்தாத்தான், நீங்க தோட்டத்தவுட்டுப் போகலாம்” என்றான் செபமாலை. 

வீரய்யாவும், செபமாலையும் இப்படிக் கூறியதும் கண்டக்டர் ஒருகணம் நிலைதடுமாறிப் போனார். 

பக்கத்தில் நின்ற பண்டா முதலாளிக்கு வீரய்யாவைப் பார்ப்பதற்கே எரிச்சலாக இருந்தது. இவனால்தானே எல்லாக் காரியங்களும் தடைப்படுகின்றன. கிராமத்திலிருந்து தனது தங்கையை அழைத்து வந்ததுமல்லாமல் இப்போது பியசேனாவையும் தனது குடும்பத்தில் ஒருவனாகச் சேர்த்துக்கொண்டுவிட்டான். இனி இவன் எதற்குமே பின்நிற்க மாட்டான் என எண்ணியவாறு அவர் மௌனமாக நின்றார். 

கண்டக்டர் எதுவும் பேசாது அலட்சியமாக முகத்தை வேறுபுறம் திருப்பியபடி படியில் இறங்கத் தொடங்கினார்.

லொறியை அண்மித்ததும், அதனைச் சுற்றிப் பலர் கூட்டமாகக்கூடி நிற்பதைக் கவனித்த எல்லோருக்கும் சிறிது அதிர்ச்சியாக இருந்தது. 

“என்னாங்க ஐயா… நாங்க சொல்லுறதுக்கு ஒன்னும் பேசாமப் போறீங்க…?” என அவர்களின் பின்னே வந்து கொண்டிருந்த வீரய்யா கேட்டான். 

”இந்தா பாரு… நாங் தோட்டத்தைவிட்டுப் போறது எங் விருப்பங்… ஒங்களுக்கு என்னா? என்னையும் ஒங்க மாதிரி தோட்டத்தில கொழப்பங் பண்ணிக்கிட்டு இருக்க சொல்லுறதா?” என வீரய்யாவைப் பார்த்து முறைத்தபடி கூறினார் கண்டக்டர். 

“அப்புடி இல்லீங்க, நீங்க தோ ட்டத்தவுட்டுப் போயிட்டா, அப்புறம் எங்களால தனிய இருந்து ஒண்னும் செஞ்சிக்கிட முடியாதுங்க. அதனாலதாங்க கேக்கிறோம்.. நீங்க போகவேணாம்” என்றான் வீரய்யா. 

“ஏய், என்னா முட்டாள் மாதிரி பேசுறது; அரசாங்கத்துல இதுந்துதாங் நமக்கு மாத்திப் போகச் சொல்லி உத்தரவு வந்திருக்கு. நாங் வேற தோட்டத்திக்கி போய் வேலைசெய்ய வேணுங். நீ மடையன் மாதிரி கதைக்கிறது. எல்லாங் ஒன்னா சேந்துக்கிட்டு இங்க வந்து கொழப்பம் பண்ணுறது…எல்லாங் ஓடிப்போ” என லொறியின் அருகே வந்த கண்டக்டர் ஆவேசத்துடன் பலமாகக் கத்தினார். 

”என்னாங்கையா, நாங்க மரியாதையாப் பேசிக்கிட்டு இருக்கோம். நீங்க என்னாடானா ரொம்ப மேலை போறீங்க. நீங்க போகக்கூடாதுனா போகக்கூடாது” இதுவரை நேரமும் குமுறிக்கொண்டிருந்த ராமு கூறினான். அவனது உடல் வெட வெடத்தது. 

“நீங்க மத்தத் தோட்டத்துக்கு மாத்திப்போகத் தேவையில்ல; இதே தோட்டத்திலையே வேலை செய்யலாம். இதுக்குத்தானே நாம இப்ப அரசாங்கத்தோட போராடிக்கொண்டிருக்கிறோம்; ஒங்களை நாங்க போகவுடமாட்டோம்” என்றான் வீரய்யா. அவனது முகம் இப்போது வியர்த்திருந்தது. 

“இந்தா. சும்மா பேசவானாங். கண்டக்கையா தோட் துத்துல இருக்கிறப்போ எல்லாங் கரச்சலுக்கு வந்தது. இப்போ அவர் போற நேரங் போகவுடாம கொழப்பங் பண்ணுறது. ஒனக்கு என்னா பைத்தியங் புடிச்சிருக்கா?” 

பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பெரிய கிளாக்கர் எரிச்சலுடன் கூறினார். 

“எங்களுக்கு ஒண்ணும் பையித்தியம் பிடிக்கலீங்க. எங்களுடைய உரிமைக்காகத்தான் நாங்க போராடிக்கிட்டு இருக்கோம்” என்றான் ராமு சினத்துடன். 

“தோட்டத்தையே நாசம் பண்ணிப்புட்டு தப்பிச்சு போகலாமுனு நெனைக்கிறீங்களா?” என அங்கிருந்த ஒருவன் கத்தினான். 

“நீங்க வந்து எங்களுக்கு ஏதும் நல்லது செய்யல்ல; நீங்க நல்லவருனு சொல்லி போகவுடாம தடுக்குறோமுனு நெனைச்சிக்கிடாதீங்க. எங்களுடைய பிரச்சினை முடியிற வரைக்கும் நாங்க யாரையும் தோட்டத்தவுட்டுப் போக விடமாட்டோம். நாங்களும் தோட்டத்தவுட்டுப் போக மாட்டோம்” என்றான் வேறொருவன். 

“எங்களுக்கு ஒரு நல்ல முடிவு வந்தவொடன நீங்க எங்கசரி தொலைஞ்சு போனாலும் கவலையில்ல” என்றான் அங்கு நின்ற குப்பன். 

“இந்தாபாரு மனுஷன், இது அரசாங்கத்தோட சட்டம். ஒங்களுக்கு அதுபத்தி ஒண்ணும் தெரியாதுதானே. ஒங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு கண்டக்கையா நடக்க முடியாது. போராட்டம் போராட்டமுனு சொல்லிகிட்டு இருக்காம எல்லாந் தோட்டத்தவுட்டுப்போ. அரசாங்கத்தோட எதிர்த்துக்கிட்டு, ஒங்களுக்கு ஒண்ணுங் செய்ய முடியாது” என்றார் பெரிய கிளாக்கர் பலத்த குரலில். 

கண்டக்டரின் நிலைமை தர்மசங்கடமாகிவிட்டது. இவர்கள் திட்டம் போட்டுத்தான் எல்லாம் செய்கிறார்கள் என அவரது மனம் எண்ணியது. 

“அவருகிட்ட என்னா வீரய்யா கதைக்கிறது? வாங்கடா எல்லாம், லொறியில் இருக்கிற சமானத்த இறக்குவோம்” எனப் பலமாகக் கூறிவிட்டு லொறியின் பின்புறத்தில் போய்த் தாவி ஏறினான் ராமு. 

அப்போது அங்கே நின்ற பண்டா முதலாளி, “டேய், யாரு சரி நம்ப லொறியிலை ஏறவேணாம். லொறியில் ஏறினா காலை ஒடிச்சுப் போடறது” எனக் கத்தியபடி ராமுவை லொறியிலிருந்து வெளியே இழுப்பதற்காக அவனருகே சென்றார். 

”என்னா ஓய்… பெருசா பேசுற? எங்க யாரு மேல சரி கைவச்சா, அப்புறம் எல்லாத்தையும் அடிச்சி நொறுக்கி, இந்த லொறிக்கும் நெருப்பு வச்சிடுவோம்” என ராமு கோபத்துடன் கூறினான். 

அங்கு நின்ற தொழிலாளர்கள் யாவரும் திமுதிமு வென லொறிக்குள் பாய்ந்தனர். 

பண்டா முதலாளி ஒன்றும் செய்வதறியாது திகைத்து நின்றார். 

இப்போது இவர்கள் இருக்கும் நிலையில் எதைச் செய்வதற்கும் தயங்க மாட்டார்கள் என்பதை அவர் புரிந்துகொண்டார். 

லொறிக்கு ஏதும் சேதம் விளைவித்துவிடாமல் இருக்க வேண்டுமே என அவரது மனம் ஏங்கியது. 

லொறிக்குள் பாய்ந்த தொழிலாளர்கள் சில நிமிட நேரத்திற்குள் அதனுள் இருந்த பொருட்கள் எல்லாவற்றையும் இறக்கி பங்களாவின் உள்ளே கொண்டு சென்று வைத்தனர். 

“ஏய்… லொறியை இங்க நிப்பாட்டாம சுறுக்கா கொண்டுபோ” எனப் பல குரல்கள் ஒரே நேரத்தில் ஒலித்தன. 

லொறியில் பண்டா முதலாளி ஏறி உட்கார்ந்து கொண்டார். றைவர் லொறியை ‘ஸ்ராட்’ செய்தான். 

”அடே, நம்மல யாருன்னு நெனச்சது? நம்ப லொறியவா கொழுத்துறேனு சொன்னது. ஒங்களை எல்லாங் என்ன செய்யுறேன்னு பாரு” எனக் கர்ச்சித்தார் பண்டா முதலாளி. 

கூட்டத்திலிருந்து கேலிக் குரல்களும் கூச்சல்களும் பலமாக எழுந்தன. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் விசில் அடித்தனர், லொறி பேரிரைச்சலுடன் உறுமிக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றது. 

பண்டா முதலாளி பற்களைக் கறுவிக்கொண்டார்.

கண்டக்டரும், கிளாக்கரும், மனேஜரும் பெரும் குழப்பத்துடன் பங்களாவினுள்ளே சென்னறர். 

அத்தியாயம் நாற்பத்திரண்டு 

பண்டா முதலாளிக்கு இப்போது வியாபாரம் சிறிது குறைந்திருந்தது. ஆனால் அவர் அதைப்பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை. அவருக்குத்தான் முன்பைவிட பலமடங்கு வருமானம் கொழுந்து வியாபாரத்தில் கிடைக்கிறதே! பின்பு ஏன் அவர் அதைப்பற்றிக் கவலைப்படப் போகிறார். 

அன்று மாலை அவரது வீட்டின் பின்புறத்தில் இருக்கும் கள்ளுக்கடையில் நாட்டில் உள்ள பல இளைஞர்களும் முக்கியஸ்தர்களும் கூடியிருந்தார்கள். கிராமசேவகரும் அங்கு வந்திருந்தார். 

கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் முக்கியமானவர் கள் எல்லோரும் அங்கு வந்திருக்கிறார்களா என பண்டா முதலாளி நோட்டம் விட்டு விட்டு கூட்டத்தை ஆரம்பித்தார். 

“நான் உங்களை இங்கு எதற்காக அழைத்தேன் என் றால், நீங்கள் எல்லோரும் உங்களுக்குக் காணி கிடைக்கப் போகிறதென மிக ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் உங்களுக்கு ஒரு துண்டுக் காணி கூடக் கிடைக்கப்போவதில்லை என்பதைத் தெரிவிப்பதற்குத்தான்.” 

பண்டா முதலாளி இப்படிக் கூறியதும் அங்கு நின்றவர்களிடம் சலசலப்புத் தோன்றியது. 

“என்ன முதலாளி? நீங்கள் தான் முதலில் எங்களுக்குக் காணி கிடைக்கப் போகிறதெனக் கூறினீர்கள்; இப்போது இல்லையென்று சொல்லுகிறீர்கள். ஏன் இப்படி எங்களை யெல்லாம் ஏமாற்றுகிறீர்கள்?” எனக் கேட்டான் அங்கிருந்த பொடிசிங்கோ. 

“நான் உங்களை ஏமாற்றவில்லை.எங்களுடைய மந்திரியும் எங்களுக்கு நிலம் கிடைப்பதற்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்திருக்கிறார். ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் தான் எங்களுக்குக் காணி கிடைப்பதற்குத் தடையாக இருக்கிறார்கள்.” 

”ஓ… அது எங்களுக்கும் தெரியும். எங்களுக்குக் கிடைக்கப்போகும் காணியை கிடைக்காமல் செய்வதற்கு, எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு அவர்களுக்கு என்ன உரிமையிருக்கிறது?” என ஆத்திரத்துடன் கேட்டான் ஒரு இளைஞன். 

”அவர்களுக்கு உரிமையில்லைத்தான்… ஆனால் அவர்களிடம் வீரம் இருக்கிறது. எங்களைப் போல அவர்கள் கோழைகளல்ல” என்றார் பண்டா முதலாளி. 

“அப்படிச் சொல்லாதீர்கள் முதலாளி! எங்களைக் கோழைகள் என்று மட்டும் நினைக்காதீர்கள்” எனக் கத்தினான் அங்கிருந்த வேறொருவன். 

“உங்களிடம் என்ன வீரம் இருக்கிறது…? தோட்டத் தொழிலாளர் எல்லோரும் தோட்டத்தை வுட்டுப் போகப் போவதில்லையெனக் கூறிப் போராடுகிறார்கள். ஆனால் நீங்கள் ஒரு உங்களுக்குக் காணி கிடைக்க வேண்டுமென போதும் போராடியதில்லையே” என்றார் பண்டா முதலாளி. 

அப்போது கிராமசேவகர், “காணியளப்பவர்கள் நட்டுவைத்த கூனிகளைத் தோட்டத் தொழிலாளர்கள் பிடுங்கி வீசினார்கள். கொழுந்தெடுக்கப் போன உங்களை எதிர்த்து வலியச் சண்டைக்கு வந்தார்கள்; பொலிஸ்காரரையே எதிர்த்து உயிரைக்கூட மதியாமல் ஜீப்பின் முன்னால் படுத்து, அவர்களை விரட்டித் துரத்தினார்கள்” எனக் கூறினார். 

“அதுமட்டுமா, தோட்டத்திலிருந்து உத்தியோகத்தர் வெளியேறுவதைக்கூட தடுத்து நிறுத்தினார்கள். அன்று கண்டக்டரின் பொருட்களை ஏற்றப்போன என்னையும் அடிக்கவந்து லொறியையும் நெருப்புவைப்பதாகச் சொன்னார்கள்” என்றார் பண்டா முதலாளி. 

“அவர்கள் எல்லோரும் இப்படிப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் எங்களுக்குக் காணி வேண்டுமென நாங்கள் எப்போதாவது போராடியிருக்கிறோமா?” எனக் கேட்டுவிட்டு எல்லோரையும் ஒரு தடவை பார்த்தார் கிராமசேவகர். 

“தோட்டத்தொழிலாளர்கள் எல்லோரும் ஒற்றுமையாக நின்று போராட்டத்தை நடத்துகின்றார்கள். நம்மிடையே அப்படி ஒரு ஒற்றுமை இருக்கிறதா? முதியான்சேயும் சுமணபாலாவும் நமக்கு எதிராகப் பிரசாரம் செய்வதால், இன்று நம்மில் சிலர் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சார்பாகத் திரும்பி இருக்கின்றார்கள்” என்றார் பண்டா முதலாளி. 

“நம்மோடு நின்று போராடவேண்டிய பியசேனா இன்று அந்தத் தோட்டத் தொழிலாளர்களோடு சேர்ந்து கொண்டு நமக்கு எதிரான காரியங்களையும் செய்கிறான்’ என்றார் கிராமசேவகர். 

எல்லோரும் மௌனமாக இருந்தனர். 

“நான் உங்கள் எல்லோரையும் கோழைகள் என்று சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?” என பண்டா முதலாளி இப்போது கேட்டார். 

“நாங்கள் ஒருவரும் கோழைகள் அல்ல… நாங்கள் எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்.” பல குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன. 

பண்டா முதலாளி சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டார். 

மெனிக்கே, கிராமசேவகருக்கும், அங்கு நின்ற ஒருசிலருக்கும் சிகரெட் வழங்கினாள். 

“எங்கள் எல்லோருக்கும் காணி கிடைக்கவேண்டு மானால் அதற்குத் தடையாக இருக்கும் எல்லாச் சக்திகளையும் முதலில் ஒழிக்கவேண்டும்.” 

“இது நம் நாடு. நாம் எவருக்கும் பயந்து வாழத் தேவையில்லை” என்றார் பண்டா முதலாளி. 

“எமக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தொழிலாளர்களை அடித்து நொறுக்கிவிடுவோம்” எனக் கத்தினான் பொடிசிங்கோ. 

“இல்லையில்லை… அப்படிச் செய்யும்படி தூண்டுவதற்காக நான் உங்களை இங்கு அழைக்கவில்லை. நாமும் போராடவேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் உங்களை அழைத்தேன்” என்றார் பண்டா முதலாளி. 

“எங்களுக்குக் காணி கொடுப்பதைத் தடைசெய்பவர்களை நாங்கள் சும்மா விட்டுவிடப் போவதில்லை. அவர்களின் போராட்டத்தை எப்படியும் தகர்த்துவிடுவோம்” எனப் பலர் ஒரே சமயத்தில் கூறினர். 

“இதுதான் நீங்கள் எடுத்திருக்கும் முடிவா? அவர்களை உங்களால் எதிர்த்து நின்று போராடமுடியுமா?” எனச் சிந்தனையுடன் கேட்டார் பண்டா முதலாளி, 

“ஆமாம்; இதுதான் எங்கள் முடிவு. எத்தனை பேர் வந்தாலும், எங்களது உயிரைப் பணயம் வைத்துக்கூடப் போராடி, அவர்களை அடித்து விரட்டுவோம்” என்றான் அங்கிருந்த மற்றொருவன். 

பண்டா முதலாளி யோசனையுடன் தலையாட்டிவிட்டு, “அப்படியானால் நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். எல்லோரும் நான் சொல்வதை மிகவும் இரகசியமாக வைத்துக்கொள்ளவேண்டும்… முக்கியமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் இவ் விஷயம் தெரியக் கூடாது.” 

“இங்கு துரோகிகள் எவரும் இல்லையென்பதை நீங்கள் நம்பலாம். நீங்கள் கூறும் விஷயங்களை இங்குள்ள எவருமே வெளியிடமாட்டார்கள்” எனக் கூறினான் பொடி சிங்கோ உறுதியான குரலில். 

“மிகவும் நல்லது… எமக்கு எதிராகப் பிரசாரம் செய்பவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. இங்குள்ள எல்லோருமே ஒற்றுமையாக இருந்தால் நாம் எதையுமே சாதித்துவிடலாம்” எனக் கூறிய பண்டா முதலாளி தனது திட்டத்தை விளக்கத் தொடங்கினார். அவரது முகம் மிகவும் கொடூரமாக மாறிக்கொண்டு வந்தது. 

கடையில் நின்ற பெடியன் அங்கு வந்தவர்கள் எல்லோருக்கும் தாராளமாகக் கள்ளை ஊற்றிக் கொடுத்தான். முட்டிகளில் இருந்த கள்ளு முடிந்தபோது முதலாளியிட மிருந்த சாராயப் போத்தல்களும் வெளியே வந்தன. 

சிறிது நேரத்தில் அங்கிருந்த எல்லோரும் வெறியர்களாக மாறினர். 

அத்தியாயம் நாற்பத்துமூன்று 

இரவு, நேரம் ஏழு மணி இருக்கும்… 

லயத்துக்கு வெளியே எங்கும் ஒரே இருட்டாக இருந்தது. தொழிலாளர்கள் எல்லோரும் தத்தம் காம்பராக்களில் இருந்தபடி, தோட்டத்து நிலைமைகளைப் பற்றிக் கதைத்தவண்ணம் இருந்தனர். பெண்கள் சமையலில் ஈடுபட்டிருந்தனர். 

குண்டன் கங்காணி லயத்தில் பழைய மாரிமுத்துத் தலைவர் ‘ராஜா தேசிங்கு’ கதையை உரத்து, ஒருவித இராகத்துடன் படித்துக்கொண்டிருந்தார். அந்த லயத்தில் இருக்கும் நான்கைந்து வயதானவர்கள் அவரைச் சுற்றி வட்டமாக அமர்ந்துகொண்டு மிக ரசனையுடன் அந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்தனர். மாரிமுத்துத் தலைவரின் குரல் நிசப்தமான அந்த வேளையில் லயம்முழுவதும் ஒலித்துக்கொண்டிருந்தது. 

எங்கோ பூசாரி ஒருவன் உடுக்கடிக்கும் ஓசையும் காற்றிலே கலந்து வந்துகொண்டிருந்தது. 

தோட்டத்திலே வேலை நிறுத்தியதைத் தொடர்ந்து, என்ன நடவடிக்கை எடுக்கலாமெனக் கலந்து ஆலோசிக்கும் நோக்கத்துடன் வீரய்யா தனது நண்பர்களைத் தேடிச் சென்றிருந்தான். 

மீனாச்சி இரவுச் சாப்பாடு செய்வதில் முனைந்திருந்தாள். செந்தாமரையும் பியசேனாவும் இஸ்தோப்பில் இருந்தவாறு எதைப் பற்றியோ சுவாரஷ்யமாகக் கதைத்துக்கொண்டிருந்தனர். 

மாயாண்டி காம்பராவின் உள்ளே கிடந்த கட்டிலில் படுத்தபடி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார். 

வயல் லயத்தில் கறுப்பண்ணன் கங்காணியின் காம்ப ராவிலிருந்து, அவரும் அவரது மனைவியும் பெரிதாகச் சண்டை போடும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. கிராமசேவகர் வயலைப் பிடுங்கியதிலிருந்து அடிக்கடி அவர்களிடையே வாக்குவாதம் நடக்கும். அவரது மனைவி தனது நகை மூழ்கிப்போய்விட்டதை எண்ணிக் கவலையுடன் அவரோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தாள். 

குப்பன் வீட்டில் அவரது மனைவி அடுப்படியில் இருந்து ரொட்டி போட்டுக் கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி குப்பனும் அவனது நான்கு பிள்ளைகளும் வட்டமாக அமர்ந்தி ருந்தனர். பிள்ளைகள் அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் ரொட்டியையே பார்த்துக்கொண்டிருந்தனர். அரிசி இல்லாத காரணத்தால், கிடந்த இரண்டு சுண்டு மாவைப் பிசைந்து ரொட்டி போட்டுக்கொண்டிருந்தாள் குப்பனின் மனைவி. ரொட்டி வெந்ததும் அவள் அதனைப் பகிர்ந்து எல்லோருக்கும் கொடுக்கிறாள். அந்தச் சிறிய துண்டு ரொட்டியைச் சாப்பிட்டுவிட்டு வெறுஞ் சாயத் தண்ணியால் அவர்கள் வயிற்றை நிரப்பிக்கொள்கின்றனர். 

அந்த வேளையில் மடுவத்தின் பக்கத்திலிருந்து ‘டாண்.. டாண்…’ என மணியோசை பலமாகக் கேட்டது. 

லயத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் திடுக்குற்று எழுகின்றனர். ஒருநாளும் இல்லாதவாறு ஏன் இந்த நேரத்தில் மணியோசை கேட்கிறது? காணி அளப்பவர்கள் இரவு நேரத்திலா வரப்போகின்றனர்? பகலிலே அவர்கள் வருவதைத் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்துவதால், ஒருவேளை இரவு நேரத்தில் வந்திருப்பார்களோ? அல்லது கண்டக்டர் தான் இரவிரவாகத் தோட்டத்தைவிட்டுப் போக முயற்சி செய்யும்போது அதனைக் கண்டுகொண்ட யாராவது மணி அடித்திருப்பார்களோ? எவருக்கும் ஒன்றுமே புரியவில்லை, 

ஆண்கள் எல்லாரும் மடுவத்தை நோக்கித் தீப்பந்தங்களுடன் விரைந்தனர். செந்தாமரையுடன் கதைத்துக் கொண்டிருந்த பியசேனாவும் அவர்களோடு சேர்ந்து மடுவத்துப் பக்கமாக ஓடினான்.பெண்களும் வயோதிபர்களும் சிறுவர்களும் லயத்திலே தங்கிவிட்டனர். 

திடீரென லயத்தில் இருந்த நாய்கள் எல்லாம் பலமாகக் குரைக்கத் தொடங்கின. 

பலர் திமுதிமுவெனத் தேயிலைப் புதர்களில் இருந்தும் மறைவான இடங்களில் இருந்தும் லயத்துக் காம்பராக்களில் ஒரே சமயத்தில் புகுந்தனர். சிலரது கைகளில் கத்தியும் கோடரியும் தடிகளும் காணப்பட்டன. ஒருசிலர் பள பளக்கும் வாள்களுடன் பாய்ந்து வந்தனர். 

அவர்கள் எல்லோருமே மதுபோதையில் நிறைந்திருந்தனர். 

அவர்களைக் கண்டதும் லயத்திலிருந்த சிறுவர்களும் பெண்களும் பயத்துடனும் பீதியுடனும் கூச்சலிடத் தொடங்கினர். 

“ஏய்; யாருங் சத்தங் போடவேணாம் ; சத்தம் போட்டா வெட்டிப் போடுவேன்’ என அங்கு வந்த குண்டர்களில் ஒருவன் கூறினான். 

எல்லோரும் பயத்துடன் நடுங்கியவாறு வாயடைத்துப் போய் செய்வதறியாது திகைத்து நின்றனர். 

குண்டர்கள் காம்பராக்களுக்குள் புகுந்து சூறையா டத் தொடங்கினர். ஒருசில பெண்களின் கழுத்திலும் காதுகளிலும் இருந்த நகைகளை மூர்க்கத்தனமாகப் பிடுங்கி எடுத்தனர். எந்தெந்தக் காம்பராக்களில் எல்லாம் தொழிலாளர்களது உடைமைகளைச் சூறையாட முடியுமோ. அவற்றையெல்லாம் சூறையாடினர். 

குண்டன் ஒருவன், கண்களில் தென்பட்ட அழகான, வயதுவந்த பெண் ஒருத்தியைப் பலவந்தமாகப் பிடித்து, லயத்தின் சற்றுத் தூரத்திலுள்ள இருட்டான பகுதிக்கு இழுத்துச் சென்றான். அவள் எவ்வளவோ கதறியும், அவனிடமிருந்து விடுபட முயற்சி செய்தபோதும் அவளால் தப்பமுடியவில்லை. அந்தக் கொடியவனின் மிருக இச்சைக்கு அவள் பலியானாள். 

ஒருசில வயோதிபர்கள் அந்தக் குண்டர்களை எதிர்க்க முயன்றபோது, அவர்களைக் குண்டர்கள் அடித்துத் துன்புறுத்தினர். 

லயங்களில் இருந்த பொருட்கள் யாவும் சூறையாடப் பட்டதும், தாங்கள் தயாராகக் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெய், பெற்றோல் முதலியவற்றை லயத்தின் உள்ளேயும் வெளிப்புறத்திலும் ஊற்றி கையில் இருந்த பந்தத்தால் லயங்களுக்குத் தீ வைத்தனர். சில குண்டர்கள் முன்பே தயாராகக் கொண்டுவந்த பெற்றோல் குண்டுகளை லயங்களின் கூரைமீது வீசினர். அவை பயங்கரமாக, பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறி தீச்சுவாலைகளை எங்கும் பரவவைத்தன. 

பக்கத்திலிருந்த மாரியம்மன் கோயிலை நோக்கி ஒரு குண்டன் தனது கையிலிருந்த குண்டை வீசி அந்தக் கோயிலைத் தகர்த்தெறிந்தான். 

லயங்களில் இருந்த வயோதிபர்களும் பெண்களும் சிறுவர்களும் வீரிட்டு அலறிக்கொண்டு வெளியே ஓடினர். லயங்களில் பற்றிய நெருப்பு இப்போது சுவாலைவிட்டுப் பெரு நெருப்பாக எரிந்துகொண்டிருந்தது. 

குறுகிய நேரத்தில் அந்தக் கொடுஞ்செயல்களை நடத்தி முடித்துவிட்டு, தமக்குக் கிடைத்த பொருட்களுடன் குண்டர்கள் அவ்விடத்தைவிட்டு ஓடி மறைந்தனர். 

மடுவத்தைச் சென்றடைந்த ஆண்களுக்கு, அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பது புரிந்தது. யாரோ வேண்டுமென்று மணியை அடித்துத் தங்களை மடுவத்திற்கு வரவழைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். 

லயத்துப் பக்கமிருந்து பெண்களினதும் சிறுவர்களினதும் அவலக்குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. தீச்சுவாலைகள் கொழுந்துவிட்டு எரிவதை மடுவத்திலிருந்து பார்க்கக்கூடியதாக இருந்தது. இப்போது எல்லோரும் லயத்தை நோக்கி விரைவாக ஓடத் தொடங்கினார்கள். 

லயங்களின் அருகே நெருங்கக்கூட முடியவில்லை. தீப் பிழம்புகள் அனலைக் கக்கிக்கொண்டு இருந்தன. எங்கும் ஒரே புகைமண்டலமாகத் தெரிந்தது, தீப்பொறிகள் வெகு தூரம் வரை பறந்து சென்று பக்கத்திலுள்ள மரஞ் செடிகளைத் தாக்கின. 

லயத்தை அடுத்துள்ள, மீனாப் புல்லினால் வேயப்பட்டிருந்த மாட்டுத் தொழுவங்களின் கூரைகளில் தீ பற்றிய போது, அங்கிருந்த பசுமாடுகள் மிகப் பயங்கரமாகக் கதறிக்கொண்டிருந்தன. 

கோழிக் கூடாப்பிற்குள் அடைக்கப்பட்டிருந்த கோழிகள் யாவும் தீயின் வாயில் அகப்பட்டு மரண ஓலம் எழுப்பின. 

தொழிலாளர்கள் வளர்த்துவந்த நாய்கள் இப்போது தூரத்தே நின்று லயங்கள் எரிவதைப் பார்த்துப் பெரும் சோகமாக ஊளையிட்டுக்கொண்டிருந்தன. 

யாராலுமே அருகில் கூட நெருங்கமுடியவில்லை. ஆண்டாண்டு காலமாக அவர்கள் தேடிவைத்திருந்த உடைமைகளைப் பறிகொடுத்துவிட்டு, எஞ்சியவையெல்லாம் நெருப்பிலே வெந்து சாம்பலாவதைப் பார்த்துக்கொண்டும், பெருஞ் சோகமாக அழுதுகொண்டும் இருப்பதைத் தவிர அவர்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. 

வீரய்யாவும் ராமுவும் அவர்களது நண்பர்களும் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர். சனங்களின் கதறல் அவர்களுக்குத் தாங்கமுடியாத வேதனையைக் கொடுத்தது.நாட்டிலிருந்து வந்தவர்கள்தான் திட்டமிட்டு இப்படியொரு கொடுமையைச் செய்துவிட்டு ஓடிவிட்டார்கள் என்பதனை அங்கிருந்தவர்கள் வீரய்யாவிடம் கூறினர். 

தோட்டத்தை விட்டு வெளியேறாத ஒரே காரணத்திற்காக தொழிலாளர்களது உடைமைகளைச் சூறையாடி. இருப்பிடங்களைக் கொளுத்தி நாசம் செய்தால், தொழிலாளர்களுக்குப் போராடுவதற்குத் தெம்பு இருக்காதென நினைத்துத் திட்டந் தீட்டி இப்படியொரு கொடூரச் செயலை நாட்டில் உள்ளவர்கள் செய்துவிட்டார்கள் என்பதை இப்போது வீரய்யா புரிந்துகொண்டான். 

அங்கிருந்தவர்களுக்கு உண்ண உணவோ, உடுப்பதற்கு மாற்றுடையோ, வசிப்பதற்கு இடமோ எதுவுமே இல்லை. இப்படியான ஒரு பரிதாப நிலையில் தள்ளப்பட்ட மக்களைக் காப்பாற்றுவதற்கும், மேலும் அசம்பாவிதங்கள் நடவாமல் தடுப்பதற்கும் உரிய பெரும் பொறுப்பு தனக்கு இருக்கிற தென்பதை வீரய்யா உணரத் தொடங்கினான். 

அங்கு நிகழ்ந்து முடிந்துவிட்ட சம்பவங்களையும், இழப்புகளையும் ஒவ்வொருவரும் அவனிடம் கூறியபோது, வீரய்யாவின் நெஞ்சத்தில் உதிரம் கொட்டியது. 

சிலமணி நேரத்தின் பின் அங்கு நடந்து முடிந்துவிட்ட கொடுமைகளை அறிந்த பொலிசார் ஜீப்பில் தோட்டத்தை நோக்கி விரைந்து வந்தனர். 

அன்று எல்லோரும் இருப்பதற்கு இடமின்றிப் பக்கத்திலுள்ள தேயிலைச் செடிகளின் அணைப்பில் அந்தப் பயங்கரமான இரவைக் கழித்தனர். 


அந்த இரவு நீண்ட இரவாகவே இருந்தது. தொழிலாளர்கள் எல்லோரும் விடிவை நோக்கி காத்திருந்தனர். மறுநாட்காலை நிலம் வெளித்தபோது இரவு நடந்த கோரத்தின் சுவடுகள் ஒவ்வொன்றாகத் தெரியத் தொடங் கின. 

லயங்கள் யாவும் தரைமட்டமாகிப் போயிருந்தன, தீ இன்னும் அணையாமல், தணல்களிலிருந்து புகை கிளம்பிக் கொண்டிருந்தது. லயங்களைச் சுற்றியுள்ள பெருவிருட்சங்கள் எல்லாம் கருகிப்போய்க் கிடந்தன. மாமரங்களிலும் பலாமரங்களிலும் காய்கள் வெந்துபோய்த் தொங்கின. பக்கத்தில் இருந்த ஓரிரு மாட்டுத் தொழுவங்களும் தரை மட்டமாகிப் போய்க்கிடந்தன. சங்கிலியால் பிணைக்கப் பட்டிருந்த பசு மாடுகளும் கன்றுகளும் மிகக் கோரமாய் வெந்துபோய்க் கிடந்தன. 

கூரைத் தகரங்களெல்லாம் நெருப்பு வெக்கையில் வளைந்து சுருண்டுபோய் நிலத்தில் விழுந்து கிடந்தன. சுவர்கள் யாவும் கருமை படிந்தும், வெடித்தும் காட்சியளித்தன – காம்பராவில் கிடந்த ராக்கைகளில் சேர்த்து வைத்திருந்த பொருட்களும் அட்டாளை மரங்களும் எல்லாமே எரிந்து சாம்பலாகிப் போய்க்கிடந்தன. 

நெருப்பு ஒருவாறு அணைந்தபோது, தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தத்தமது காம்பராக்களுக்குள் சென்று ஏதாவது பொருட்கள் தீயின் பிடியிலிருந்து தப்பியிருக்கிறதா என்ற நப்பாசையோடு ஆராயத் தொடங்கினார்கள். 

வீரய்யாவும் ராமுவும் ஒவ்வொரு லயமாகச் சென்று தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுவிட்ட பெருந் துன்பத்தில் கலந்து கொண்டனர். 

மாயாண்டியும் மீனாச்சியும் தலையில கைவைத்தபடி காம்பராவின் முன் வெளிவாசலில் அமர்ந்திருந்தனர். செந்தாமரையினதும் மீனாச்சியினதும் கழுத்திலும் காதிலும் இருந்த நகைகளெல்லாம் சூறையாடப்பட்டுவிட்டன. வீரய்யாவின் குடும்பத்தினர் என்ற காரணத்தினாலோ என்னவோ குண்டர்கள் அந்த வீட்டில் தமது கைவரிசையைக் கூடுதலாகக் காட்டியிருந்தனர். 

பியசேனாவின் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவன் செந்தாமரையைப் பார்க்கும்போதெல்லாம் அவள் அழுதவண்ணம் இருந்தாள். அங்குள்ள ஒவ்வொருவரும் அவனைப் பார்க்கும் போதும் அவனுள் ஏதோ குற்ற உணர்வு ஏற்படுவதைப் போன்று அவன் உணர்ந்தான். ‘உனது ஆட்கள்தான் இப்படியொரு கொடுமையை எமக்கு இழைத்துவிட்டார்கள்’-என அவர்கள் குற்றஞ்சாட்டுவதைப் போன்று அவன் உணர்ந்தான். அவனது உள்ளம் பெரிதும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது. 

அங்குள்ள பலருக்குச் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டிருந தன. பலபெண்களின் காதிலிருந்த நகைகளைக் குண்டர்கள் முரட்டுத்தனமாகப் பிடுங்கி எடுத்ததினால் ஏற்பட்ட காயம் அவர்களுக்கு வேதனையைக் கொடுத்துக் கொண்டிருந்தது. 

வீரய்யா, முதல் வேலையாகத் தோட்டத்து லொறியை வரவழைத்து காயமடைந்த எல்லோரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டிய ஒழுங்குகளைச் செய்தான். பியசேனாவும் செபமாலையும் காயமடைந்தவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 

இரவு நடந்த கோரத்தை அறிந்து பக்கத்து தோட்டத் தில் இருக்கும் தொழிலாளர்கள் பெருங்கூட்டமாக அங்கு படையெடுக்கத் தொடங்கினர். டவுணில் உள்ள மக்களும் தொழிற்சங்கவாதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் இப் போது தோட்டத்துக்கு வரத்தொடங்கினர். எரிந்து சாம்பலாகிப்போய்க்கிடந்த லயன்களுக்கு பொலிசார் காவல் புரியத் தொடங்கினர். பக்கத்துத் தோட்டத் துரைமார்கள் ஒவ்வொருவராக அங்கு வந்து சேர்ந்தனர். 

முதல்நாள் இரவு எங்கோ லீவில் சென்றிருந்த தோட்டத்துரை சில்வா, தோட்டத்தில் நடந்து முடிந்த கோரத்தைக் கேள்விப்பட்டதும் மறுநாள் பதறியடித்துக் கொண்டு அங்குவந்து சேர்ந்தார். 

அங்கு வந்து சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் மனம் பதறினர். மனிதாபிமானமற்ற முறையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நடந்த அநியாயத்தைப் பார்த்துக் கொதித்தனர். தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தமக்கு நடந்த கொடுமைகளையும் இழப்புகளையும் பார்வையிட வந்தவர்களிடம் கூறிக் கதறியழுதனர். 

“ஐயா, ஏங் குடும்பத்துக்கு போன கெழமைதான் எம் சேவைகாலப் பணம் வந்திச்சி அந்தப் பணத்தை பொட்டியில வச்சிருந்தேன்; அவ்வளவு பணமும் எரிஞ்சு போச்சுங்க…” எனக் கூறி விம்மினார் ஒரு வயோதிபர், 

“என் மாடெல்லாம் உசிரோட எரிஞ்சு வெந்து போச்சுங்க; அத நம்பித்தான் நான் சீவிச்சுக்கிட்டிருந்தேன்” எனக் கதறினான் ஒரு நொண்டி. 

“வாற மாசம் நான் இந்தியாவுக்கு போயாகனும் அதுக்குள்ள இப்புடி ஒரு அநியாயம் நடந்திருச்சுங்க என் பாஸ்போட்டு எல்லாம் எரிஞ்சு சாம்பலாப் போச்சிங்க” எனக் கூறி கண்கலங்கினார் மாரிமுத்துத் தலைவர். 

“எங்க வூட்டுல ஒண்ணுமே இருக்கல்லீங்க… மாத்திக் கட்டுறதுக்கு மட்டும் ரெண்டு துணி கெடந்திச்சி. அது தானுக எரிஞ்சு போயிருச்சு” எனக் கவலையுடன் கூறினான் குப்பன். 

“ஏங் காதுல் கெடந்த நகையைக் கழட்டித் தரச் சொல்லி ஒருத்தன் கேட்டானுங்க, நான் தப்பி ஓடலாமுனு வச்சுக்கிட்டு தூக்கி வெளியே ஓடினேன். ஏம்புள்ளையத் வெட்டப்போறேனு கழுத்தில கத்திய வச்சான்; நான் பதறிப்போய் ஒரு காதுல இருந்த நகையைக் கழட்டப்போனேன்; அதுக்குள்ள அவேன் மற்றக் காதுல இருந்ததைப் பிரிந்து பிச்சு எடுத்துக்கிட்டானுங்க” எனக் கூறியபடி பிரிந்து போயிருந்த தனது காதைத் காண்பித்துக் கண்கலங்கினாள் பெண்ணொருத்தி. 

“அடுத்த நேரச் சாப்பாட்டுக்கே வழியில்லாம செஞ்சுப்புட்டாங்களே, இந்தப் பாவிக” எனக்கூறி தலையில் கை வைத்தவண்ணம் நிலத்திலே உட்கார்ந்தார் கருப்பண்ணன் கங்காணி. 

“புள்ளைங்க எல்லாம் பசியில கதறுதுங்க, என்ன செய்யிறதுன்னே எங்களுக்குப் புரியல்லீங்க” எனக்கூறிக் கண் கலங்கியபடி அருகே நின்றதன் குழந்தையை வாஞ்சையுடன் தடவினாள் ஒரு தாய். 

“போன கெழமைதாங்க எனக்குப் பெரசாவுரிமை கெடைச்சிச்சு. ரெம்ப கஷ்டப்பட்டுத்தானுங்க அத எடுத்தேன். அதெல்லாம் எரிஞ்சு போச்சுங்க” எனக் கூறிய ஒரு தொழிலாளி விரக்தியோடு சிரித்துவிட்டு, “அந்தக் கடதாசியெல்லாங் வெறுங் கடதாசிதானுங்களே; இந்த நாட்டுல எங்களுக்கு என்னதாங்க உரிமையிருக்கு? நாங்க எப்பவும் அடிமைதாங்க” எனச் சாகமாகக் கூறினார். 

வயதுபோன பெண்ணொருத்தி தனது ஒரே மகளைக் காண்பித்து “ஐயோ இந்தப் புள்ளைக்கு நடந்த கொடுமையை எப்புடீங்க என் வாயால சொல்லுவேன்” எனக் கூறிவிட்டுச் சோகம் தாங்காமல் பெரிதாக விம்மினாள். அவளது மகளின் உடைகள் யாவும் கிழிந்துபோய் இருந்தன. முகத்திலும் கைகளிலும் சிறிய காயங்கள் தென்பட்டன. அந்தப்பெண் உடலெல்லாம் குறுகத் தன் இரு கைகளாலும் முகத்தை மூடியபடி விம்மிக்கொண்டிருந்தாள். 

அங்கு நின்ற ஒவ்வொருவருடைய மனதையும் தொழி லாளருக்கு நடந்த துன்பங்கள் பெரிதும் கலக்கின. அதனைக்கண்டு சகிக்க முடியாத பலர் கண்கலங்கினர். 

ஒரு சிலர் வாய்விட்டுக் கதறினர், டவுனில் உள்ள கடைக்காரர்களும் பக்கத்து தோட்டத்துத் தொழிலாளர்களும் தொழிற்சங்கவாதிகளும், ஒருமுகமாகச் சேர்ந்து பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் உதவிகள் செய்வதற்கு முயன்றனர். 

தம்மால் இயன்ற சிறுதொகைப் பணத்தைச் சிலர் கொடுத்து உதவினர். சிலர் மாற்றுடைகள் கொடுத்து உதவினர், இன்னும் சிலர் ஒருநேர உணவைக் கொடுத்தனர். வேறுசிலர் அரிசி மாவு முதலிய பொருட்களை வழங்கினர். 

லயங்கள் எரிக்கப்பட்ட செய்தியறிந்ததும் கிராமத்திலிருந்து முதியான் சேயும் சுமணபாலாவும் தோட்டத்துக்கு வந்து நடந்த கொடுமைகளை பார்வையிட்டனர். 

அங்கு நடந்த கோரத்தைப் பார்த்த முதியான்சேயின் உள்ளம் பதறியது. இப்படியொரு கொடுமையைச் செய்து தான் கிராமத்து மக்கள் காணி பெறவேண்டுமா? அவர் எண்ணி மனம் மறுகினார். 

“இந்தக் கொடுமைகளுக் கெல்லாம் காரணமாக இருந்த பண்டா முதலாளி, கிராம சேவகர், கண்டக்டர் முதலியோரை நான் பொலிசில் காட்டிக் கொடுக்கப் போகிறேன்” என சூளுரைத்தான் சுமணபால. 

பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் தனித்தனியாகச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர். 

எதைச் செய்துமென்ன தொழிலாளர்கள் இழந்த எல்லாவற்றையுமே இனி யாரால்தான் திருப்பி கொடுக்க முடியும். 

அத்தியாயம் நாற்பத்துநான்கு

பாதிக்கப்பட்ட மக்களைத் தோட்டத்துரை அடிக்கடி வந்து சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். பிற இடங்களிலிருந்து பார்வையிட வந்தவர்களும், அயல் தோட்டத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தம்மா லியன்ற உதவிகளைச் செய்தனர். 

முன்பு காம்பராக்களில் தனித்தனிக் குடும்பமாக வாழ்ந்த தொழிலாளர்கள் எல்லோருமே இப்போது ஒரே குடும்பம்போன்று கூட்டமாக தோட்டப் பாடசாலைகளி லும், பிள்ளை மடுவத்திலும் தங்கியிருந்தனர். இதனால் பலர் தம்மிடையே இருந்த சிறு மனவேற்றுமைகளையும் மறந்து மிக அந்நியோன்யமாக ஒருவரோடு ஒருவர் பழகினர். மாரிமுத்துத் தலைவர், கறுப்பண்ணன் கங்காணி முதலியோர்  இப்போது வீரய்யாவுக்குப் பக்கபலமாக நின்று காரியங்களைக் கவனித்தனர். 

பியசேனா தன்னைச் சந்திக்கவந்திருந்த முதியான்சே, சுமணபால முதலியோரிடம், இனி தான் நாட்டுக்கு வரப்போவதில்லையெனக் கூறிவிட்டு தோட்டத் தொழிலாளர்களுடனேயே இருந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொடுத்துக்கொண்டிருந்தான் 

தோட்டத்துரை அன்று தொழிலாளர்கள் குழுமியிருந்த இடத்திற்கு வந்தார். அங்கு கூடியிருந்த தொழிலாளர்களைப் பார்த்து அவர் தனது மனதிலே தோன்றிய கருத்துக்களைத் தெரிவித்தார். 

“இப்ப நீங்க ஒங்களுடைய சாமானங் எல்லாங் பறி கொடுத்து, வூடுங் இல்லாம, சாப்பிடுறதுக்கு சாப்பாடுங் இல்லாம, இனிமே இந்தத் தோட்டத்தில இருக்கிறது, மிச்சங் கஷ்டங்தானே. இனி இங்க இருந்துங் பிரயோசனங் இல்ல. அரசாங்கம் சொன்ன மாதிரி, வேற தோட் டத்துக்கு போனா ஒங்களுக்கு எல்லா வசதியுங் கெடைக் கும். நீங்க எல்லாங் போறதுதாங் நல்லது.”

“தொர எங்களுடைய உடமை எல்லாத்தையும் பறிச்சி, இருக்க எடங்கூட இல்லாம செஞ்சா, நாங்க தோட்டத்தவுட்டு போயிடுவோமென்னு திட்டம் போட்டுத்தான் நாட்டாளுக இப்புடி செஞ்சிருக்காங்க, ஆனா போக நாங்க ஒரு நாளும் இந்தத் தோட்டத்தவுட்டுப் மாட்டோமுங்க” என வீரய்யா கூறினான். அவனது குரலில் உறுதி தொனித்தது. 

“நாங்க மட்டும் இல்லீங்க தொர. ஒங்களையுந்தான் இந்தத் தோட்டத்தைவுட்டு போகவுடமாட்டோம். என்னா கஷ்டம் வந்தாலும் நாங்க பயந்துக்கிட்டு மட்டும் தோட்டத்தவுட்டுப் போகமாட்டோம்” எனப் படபடத்தான் ராமு. 

“ஏய் நீ ரெண்டு பேருங் மிச்சங் முட்டாள்கதை பேசுறது. ஓங்க பேச்சக் கேட்டுத் தான் இந்த ஆளுங்களுக்கு எல்லாங் இப்புடி வந்தது” எனக் கோபத்துடன் கூறினார் துரை. 

“ஒங்க பேச்சக் கேட்டுக்கிட்டு நாங்கெல்லாம் தோட்டத்தவுட்டுப் போகமாட்டோம். சாகிறவரைக்கும் இந்தத் தோட்டத்திலதான் இருப்போம்” என்றான் ராமு. 

“தோட்டம் மூடியாச்சு; நீங்கெல்லாம் இங்க இருந்து என்ன செய்யப் போறது?” எனக் கேட்டார் துரை. 

“தோட்டத்த மூட நாங்க வுடமாட்டோங்க தொர… அப்புடி மூடினாலும், நாங்க நட்டு வளத்த தேயிலை இருக்கு மட்டும் நாங்க பொழச்சுக்குவோமுங்க” என்றார் அங்கே நின்ற கறுப்பண்ணன் கங்காணி நிதானமாக. 

“இனிமே நாங்க தோட்டத்தவுட்டுப்போனா, ஒவ்வொரு தோட்டத்திலும் இருக்கிற தொழிலாளிங்களுக்கும் எங்களுக்கு நடந்தமாதிரித்தான் நடக்கும்” என்றான் வீரய்யா. 

”நீ என்ன மனுசன் கதைக்கிறது? நீங்க எல்லாங் தோட்டத்தவுட்டுப்போன மத்த தோட்டத்து ஆளுங்களுக்கு ஏன் கரைச்சல் வாறது?” எனக் குழப்பத்துடன் கேட்டார் துரை. 

“இப்ப நாங்கெல்லாம் தோட்டத்தவுட்டுப் போனா… தோட்டத் தொழிலாளிங்களை பயங்காட்டி வெரட்டிப் புடலாமுனு எல்லாரும் நெனைச்சுக்கிடுவாங்க. அப்புறம் மத்த தோட்டங்களில இருக்கிற தொழிலாளிங்களையும் அநியாயம் செஞ்சி வெரட்டப் பாப்பாங்க… தோட்டத் தொழிலாளிங்க கோழைகள் இல்லேங்கிறதை நாங்க இங்கேயே இருந்து போராடிக் காட்டத்தான் போறோம்”. என வீரய்யா விளக்கமாகக் கூறினான். 

“நாங்க, எங்க இனத்தைக் காட்டிக்கொடுக்கமாட்டோமுங்க தொர. உயிரைக் கொடுத்தாவது போராடியே தீருவோம்” என்றான் ராமு. 

“என்னா மனுசன் போராட்டம், போராட்ட முனு சொல்லி பைத்தியக்காரன் மாதிரி பேசுறது. இப்புடி பேசித்தாங் இன்னிக்கு ஒன்னும் இல்லாம நீங்க எல்லாங் இருக்கிறது” என்றார் துரை எரிச்சலுடன். 

“எங்ககிட்ட ஒன்னும் இல்லைத்தாங்க தொர. நாங்க எல்லாத்தையும் இழந்திட்டோம். எங்க உயிர் தான் மிச்சமா இருக்குங்க. ஆனா இது நாங்க பொறந்த மண் எங்கிற உரிமையை நாங்க இன்னும் இழக்கல்லீங்க. அந்த உரிமைக்காக எங்ககிட்ட மிச்சமா இருக்கிற இந்த உயிரக் கொடுத்தாவது போராடத் தான் போறோம்” என்றான் வீரய்யா. இதைக் கூறும்போது அவன் உணர்ச்சி வசப்பட்டான். 

“ஆமாங்க…நாங்க இந்த எடத்தவுட்டுப் போகமாட்டோம்…” எனப் பல குரல்கள் அவனது கூற்றைத் தொடர்ந்து ஒலித்தன. 

“ஏய் ஏய், மிச்சங் சத்தங் போடவேணாம். நீங்க போகாட்டி, நாட்டில இருக்கிற ஆளுங்களுக்கு காணி கிடைக்கிறது இல்லத்தானே. அப்புறங் உங்களுக்கு மிச்சங் கரச்சல்தாங் வாறது” என்றார் துரை கோபத்துடன்.

“நாட்டாளுங்களுக்கு நாங்க காணி கொடுக்கவேணாமுனு சொல்லல்ல. அவுங்களுக்கு காணி கொடுக்கிறதுக்காக எங்கள தோட்டத்தவுட்டு வெரட்டவேணாமுன்னு தான் சொல்லுறோம்” என்றான் வீரய்யா, 

‘‘அதிக்கி என்னதாங் செய்ய முடியுங்… வேற வழி இல்லத்தானே” என்றார் துரை. 

“எங்களை எல்லாம் அனுப்பிவிட்டுத்தான் காணி குடுக்கோணுமுங்கிறது இல்லீங்க தொர…எங்களை இப்புடியே வச்சுக்கிட்டு அவுங்களுக்கும் காணி கொடுக்கலாந்தானுங்களே” என்றான் வீரய்யா.  

அவனது கூற்று துரையைச் சிந்திக்கவைத்தது. 

“ஆமாங்க தொர… நம்ம தோட்டத்திலதான் நெறைய எடம் சும்மா கெடக்குங்களே. அந்த இடத்தை யெல்லாம் நாட்டு ஆளுங்களுக்கு பிரிச்சி கொடுக்க முடியுந்தானுங்களே” என்றார் மாரிமுத்துத் தலைவர். 

“ஹோ… அது அப்படி செய்ய முடியுங்தான். ஆனா அரசாங்கம் இப்ப வேற மாதிரித்தானே செஞ்சிக்கிட்டு போறது” என்றார் துரை. 

“அப்புடீனா தோட்டத் தொழிலாளிங்களோட நாட்டாளுங்களும் ஒரேதோட்டத்துல ஒத்துமையா இருக்கிறத அரசாங்கம் விரும்பலீங்களா?” எனக்  கேட்டான் வீரய்யா. 

வீரய்யா இப்படிக் கேட்டதும் துரைக்கு ஒரே குழப்பமாக இருந்தது. 

”இதுபத்தி நாங் ஒன்னுங் சொல்லமுடியாது. எல்லாங் அரசாங்கத்தில பேசிதானே செய்யறது. அதினால அவுங்க சொல்லுறபடிதாங் நாங் செய்யவேனுங்'” எனக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றார் துரை. 

வீரய்யா கூறிய கருத்துக்கள் யாவும் துரையின் மூளையைப்போட்டுக் குடைந்துகொண்டு இருந்தன. 

தோட்டத்தொழிலாளர்களோடு கிராமத்து மக்களையும் குடியிருத்தி அவர்களது ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு ஏற்ற ஒரு நல்ல வழியிருக்கும்போது ஏன் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற அரசியல்வாதிகள் முனைகிறார்கள்? 

தோட்டத் தொழிலாளர்களோடு கிராமத்து மக்கள், ஒன்றாக வாழ்வதை ஏன் இந்த அரசியல்வாதிகள் விரும்பவில்லை? 

‘ஏன்? ஏன்? ஏன்?’ -துரைக்கு ஒரே குழப்பமாக இருந்தது. 

அத்தியாயம் நாற்பத்தைந்து

டாண்…. டாண்… 

மடுவத்திலிருந்து மணியோசை கேட்டுக்கொண்டிருந்தது. தூரத்தே மடுவத்தை நோக்கி மூன்று வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. 

மணியோசை கேட்டதும் தொழிலாளர்கள் எல்லோரும் மடுவத்தை நோக்கி விரைந்தனர். முதியவர்களும், இளைஞர்களும், பெண்களும், சிறுவர்களுமாக அணிதிரண்டு மடுவத்தை வந்தடைந்தனர். 

நில அளவையாளர் மீண்டும் அங்கு வரக் கூடும் என்பதை அவர்கள் எல்லோரும் எதிர்பார்த்துத்தான் இருந்தனர். அங்கு வந்து சேர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொரு வரது மனதிலும் விரக்திதான் மிஞ்சியிருந்தது. சகலதையுமிழந்து நிற்கும் அவர்கள், இப்போது எதையும் ஏற்கத் தயாராக இருந்தனர். எதுவந்தாலும் அதனை எதிர்த்துப் போராடும் மனநிலை அவர்களுக்கு உருவாகியிருந்தது. அவர்கள் எதையும் துச்சமாக மதிக்கத் தொடங்கியிருந்தனர். 

முன்பகுதியில் பியசேனா அந்தச் சனவெள்ளத்தின் நின்று கொண்டிருந்தான். தோட்டத் தொழிலாளர்களின் துன்பங்களில் பங்குபற்றிய அவன், இப்போது அவர்களில் ஒருவனாக மாறியிருந்தான். 

மடுவத்தில் மக்கள் வெள்ளம் அலைமோதி நிற்பதைக் நிறுத்தப் கண்டதும் அந்த மூன்று வாகனங்களும் அங்கு நிறுத்தப் பட்டன . முன்னும் பின்னுமாக நின்ற இருவாகனங்களிலும் பொலிஸ் படையினர் இருந்தனர். நடுவிவ் உள்ள வாகனத்தில் நில அளவையாளர்கள் காணப்பட்டனர். முன்பு அங்கு வந்தவர்களினால் காரியத்தைச் சாதிக்க முடியாமல் போய்விட்டதினாலோ என்னவோ இப்போது மேலிடத்திலிருந்து புதியவர்கள் அனுப்பப்பட்டிருந்தனர். வாகனத்தில் இருந்த பொலிசார் ஒவ்வொருவராகக் கீழே குதித்தனர். அவர்கள் ஒவ்வொருவரது கைகளிலும் துப்பாக்கிகள் காணப்பட்டன. 

தோட்டத் தொழிலாளர்கள் குழப்பம் விளைவித்ததன் உடைமைகளுக்கும். காரணத்தினாலேதான், அவர்களின் லயங்களுக்கும் சேதம் ஏற்பட்டது என்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டு, தோட்டத்தில் குழப்பம் விளைவிப்பவர்களை அடக்குவதற்காகவும், நில அளவையாளரைத் தடுத்து நிறுத்துபவர்களை எதிர்ப்பதற்காகவும் இப்போது பொலிஸ் படையினர் அங்கு வந்திருந்தனர். 

“ஏய் ரோட்டுல மறிச்சுக்கிட்டு நிக்காம எல்லாங் தூரப் போ” எனக் கூறிவிட்டு அங்குநின்றவர்களை விரட்டுவதற்காக துவக்கை ஓங்கினார் இன்ஸ்பெக்டர். 

அங்கு நின்ற எவருமே அவரது மிரட்டலுக்குப் பயபடவில்லை, 

அணி திரண்டிருந்த தொழிலாளர்கள், “நாங்க வெலகமாட்டோம்” எனப் பலமாகக் கத்திக்கொண்டே பொலிஸ் படையை நோக்கி முன்னேறினர். 

“ஏய் இனிமே யாராவது ஒரு அடி முன்னுக்கு வச்சாலும் சுட்டுப் போடுவேன்” எனக் கத்திய இன்ஸ்பெக்டர் ஆகாயத்தை நோக்கி மூன்று முறை சுட்டார். “எங்க எல்லாரையுங் வேணுமுனா சுட்டுக்கொன்னுப்புட்டு எங்க பொணத்துக்கு மேலே ஜீப்ப ஓட்டிக்கிட்டு போங்க” எனக் கூறிய ராமு தனது மார்பைத் திறந்து காட்டிக் கொண்டு முன்னே பாய்ந்தான். 

 இன்ஸ்பெக்டர் திடீரென அவனது தலையின்மேல் துவக்குப் பிடியினால் ஓங்கிப் பலமாக அடித்தார். ராமுவின் தலையில் இருந்து குபீரென இரத்தம் பெருகியது. ராமு வெறிகொண்டவன் போல் இன்ஸ்பெக்டரின் மேல் பாய்ந்தான். 

தனது கையிலிருந்த துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் அவனை மாறி மாறிப் பலதடவை தாக்கினார். 

அதைப் பார்த்த வீரய்யா, இன்ஸ்பெக்டர் ராமுவைத் தாக்காமல் தடுப்பதற்காக அவரது கையிலே இருந்த துப்பாக்கியைத் தன் இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக்கொண்டான். இன்ஸ்பெக்டர் அவனது பிடியில் இருந்து துப்பாக்கியை இழுத்துப் பறிக்க முயன்றார். ஆனால் வீரய்யா தனது அசுரப்பிடியை விடவேயில்லை. இருவரும் துப்பாக்கியைப்பிடித்தபடி போராடிக்கொண்டிருந்தனர். 

ராமு மயக்கமுற்று கீழே சாய்ந்துவிட்டான். வீரய்யா இன்ஸ்பெக்டருடன் போராடுவதைப்பார்த்த பியசேனாவும், செபமாலையும் ஆவேசத்துடன் இன்ஸ்பெக்டரை தாக்கும் நோக்கத்துடன் முன்னே பாய்ந்தனர். 

கூட்டத்திலிருந்த பலர் இப்போது வெறிகொண்டவர்களாகப் பொலிசாரை நோக்கிப் பாய்ந்தனர். இன்ஸ்பெக்டர் போராடிக் களைத்துப் போய் துவக்கின் விசையை அழுத்தினார். 

‘டுமீல்’ என்ற சத்தத்துடன் பக்கத்தில் பாய்ந்து வந்த செபமாலையின் காலில் குண்டு பாய்ந்தது.செபமாலையும் காலைப் பிடித்தபடி கீழே சாய்ந்தான். 

பியசேனா இப்போது வெறிகொண்டவன் போல் இன்ஸ்பெக்டரின் மேல் பாய்ந்து அவரின் முகத்திலே பலமாகத் தாக்கினான். இன்ஸ்பெக்டர் நிலைதடுமாறினார். அவரது மூக்கிலிருந்து இரத்தம் வழியத் தொடங்கியது. 

பியசேனா தொடர்ந்தும் இன்ஸ்பெக்டரின் முகத்தில் தாக்கிய வண்ணம் இருந்தான். 

பக்கத்திலே நின்ற பொலிஸ்காரர் பியசேனாவைச் சுட்டு வீழ்த்தும் நோக்கத்துடன் அவனது நெஞ்சைப் பார்த்துக் குறி வைத்தார். 

அதனைக் கவனித்த வீரய்யா அந்தப் பொலிஸ்காரரின் துப்பாக்கியை தட்டிவிடும் நோக்கத்துடன் குறுக்கே பாய்ந்தான். 

‘டுமீல்…’ 

பியசேனாவின் மேல் பாயவிருந்த குண்டு வீரய்யாவின் மார்பைத் துழைத்தது. 

வீரய்யா அசுர வேகத்துடன் இப்போது பொலிஸ்காரரின் மேல் பாய்ந்தான். 

‘டுமீல்- டுமீல்-‘ 

குண்டுகள் மாறி மாறி அவனது நெஞ்சைத் துளைத்தன . மறுகணம் அவனது உடல் தள்ளாடியது. கண்கள் இருண்டு கொண்டு வந்தன, அவன் கீழே சாய்ந்தான். 

வீரய்யா சுடப்பட்டுக் கீழே சாய்ந்ததைப் பார்த்ததும் அங்கு நின்ற தொழிலாளர்களின் உள்ளத்தில் போராட்ட வெறி கிளர்ந்து எழுந்தது. நீட்டப்பட்டிருந்த துப்பாக்கி அவர்கள்களின் எதிரே எதற்கும் அஞ்சாதவர்களாக, வெறிகொண்டவர்கள் போலப் பொலிசாரை நோக்கிப் பாய்ந்தனர். அவர்களிடையே காணப்பட்ட வெறியையும் வேகத்தையும் ஆயிரமாயிரம் துப்பாக்கிகளால்கூடத் தணிக்க முடியாது என்பதைப் பொலிசார் பார்த்துத் திகைத்தனர். 

நிலைமையை இனி அவர்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதனை அவர்கள் உணர்ந்து கொண்டனர். இனிமேலும் அங்கு தாமதித்தால் அந்தச் சனவெள்ளத்தின் வேகத்துக்கு தாங்களும் பலியாகிவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுமோ என அச்சமுற்றனர். மறுகணம் எல்லோரும் பாய்ந்து தமது வாகனங்களுக்குள் ஏறிக் கொண்டனர். 

கீழே இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த வீரய்யாவின் அருகில் மீனாச்சி அமர்ந்து அவனது தலையை மடியிலே எடுத்து வைத்தாள். 

அவளது கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. பெருஞ் சோகத்துடன் அவள் விம்மினாள். 

வீரய்யாவின் உதடுகள் அசைந்தன. அவன் தாயிடம் ஏதோ கூறுவதற்கு முயன்றான். 

மறுகணம் அவனது தலை, அவளது மடியில் சாய்ந்தது. மீனாச்சியின் இதயத்தைப் பிளந்து கொண்டு பெரிதாகவிம்மலொன்று வெளிப்பட்டது. 

அப்போது அங்கே ஓடிவந்த செந்தாமரை இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த வீரய்யாவைப் பார்த்ததும் “ஐயோ அண்ணா…” எனக் கதறியபடி அவன் மேல் வீழ்ந்து மூர்ச்சையானாள். 

வீரய்யாவின் பாதங்களைப் பிடித்தவாறு மண்டியிட்டிருந்த பியசேனாவின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது. அவனது நெஞ்சைத் துளைக்க இருந்த குண்டைத் தனது நெஞ்சிலே ஏற்று உயிரை மாய்த்துக் கொண்ட அந்தத் தியாகியின் பாதங்களைக் கண்ணீரால் கழுவத்தான் அவனால் முடிந்தது. 

இப்போது பொலிசாரின் ஜீப் பின்னோக்கி வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. 

சனசமுத்திரம் முன்னோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது – அசுரவேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தது. 

இனி அந்த வெள்ளத்திற்கு யாராலுமே அணை போட முடியாது. 

வீரய்யாவின் உயிர்த்தியாகமும், தொழிலாளர்களின் போராட்டம் பத்திரிகை வாயிலாகவும், பார்வையாளர்கள் மூலமாகவும், நாடெங்கும் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் பொதுசன அபிப்பிராயம் அவர்களின் போராட்டத்துக்குச் சாதகமாக அமைந்தது. தொழிலாளர்களை அகற்றுவதில் தீவிரமாக நின்ற அரசியல்வாதிகள் செயலிழந்தனர். அவர்களுக்கும் மேலான சக்திகள் இப்போது செயல்படத் தொடங்கின. தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவித்த கண்டக்டர், கிராமசேவகர், பண்டா முதலாளி முதலியோர் சட்டத்தின் பிடியில் சிறைப்பட்டனர். 

வீரய்யாவின் உடலில் இருந்து வடிந்த குருதியில், தோய்ந்து செழுமையுற்ற அந்த மலைப் பிரதேசத்தில், இப்போது தேயிலைச் செடிகள் புதிதாகத் துளிர்விடத் தொடங்கின.

(முற்றும்)

– குருதிமலை (நாவல்), முதற் பதிப்பு: ஜூலை 1979, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *