கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 9, 2024
பார்வையிட்டோர்: 1,357 
 
 

(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40 | அத்தியாயம் 41-45

அத்தியாயம் முப்பத்தாறு

வயல் லயத்தில் வெகு காலமாக வாழ்ந்து வந்த கங்காணி ஒருவர் இறந்துவிட்டார். அதனால் தோட்டத்தில் இரண்டு மணிக்கே வேலை விட்டிருந்தனர். 

வேலை முடிந்து லயத்துக்குத் திரும்பிய தொழிலாளர்கள் அன்று மாலை நடக்கவிருக்கும் ‘கேதத்தி’ல் பங்குபற்று வதற்காக வயல் லயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். வீரய்யா முன்நின்று மரணச் சடங்குகளுக்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தான். 

அந்த வேளையில் மடுவத்திலிருந்து திடீரென பிரட்டு மணியின் ஓசை ‘டாண், டாண்’ என அதிர்ந்தது. திடுக்குற்ற வீரய்யா வெளியே ஓடிவந்து கரத்தை ரோட்டின் பக்கம் பார்த்தான். 

வழக்கமாக வரும் நில அளவைத் திணைக்களத்தினரின் வாகனம் தான் வருகிறதென்பதை எல்லோரும் புரிந்து கொண்டனர். ஆனால், புதிதாக இன்று வேறொரு வாகனமும் வந்துகொண்டிருந்தது. அது யாருடைய வாகனமாக இருக்குமென எல்லோரது மனதிலும் கேள்வி எழுந்தது. 

எல்லோரும் மடுவத்தை நோக்கி விரைந்தனர். அந்த வாகனங்கள் இரண்டும் மடுவத்தை வந்தடையும் முன்னரே குறுக்குப் பாதை வழியாகத் தொழிலாளர்கள் மடுவத்தை வந்தடைந்தனர். வீரய்யா தொழிலாளர்களின் முன்னால் நின்றுகொண்டிருந்தான். மடுவத்தைப் பிந்தி வந்தடைந்த ராமு பெரும் சிரமத்துடன் அந்தக் கூட்டத்துக்குள் நுழைந்து முன் பகுதிக்கு வந்தான். 

”அடே பொலிசுடா….” 

முன்னால் வந்துகொண்டிருந்த வானின் உள்ளே கவனித்த செபமாலை பலமாகக் கூறினான். 

அங்கு நின்றிருந்த சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் தொழிலாளர்களுக்கும் மனதிலே திகைப்பு இருந்தபோதிலும் வீரய்யாவும் ராமுவும் செபமாலையும் முன்னால் நிற்பது அவர்களுக்குத் தென்பை அளித்தது. 

சனக்கூட்டம் ரோட்டை மறித்துக்கொண்டு இருந்ததால் ஜீப் வண்டிகள் இரண்டும் மடுவத்தின் அருகே தெரு வோரமாக நிறுத்தப்பட்டன. பொலிஸ் ஜீப்பில் வந்தவர்கள் வாகனத்தை விட்டு வெளியே குதித்தார்கள். 

இரண்டு பொலிஸ்காரர்கள் குண்டாந்தடியுடன் – நடந்து வந்து சனக்கூட்டத்தின் முன்னால் நின்றனர். 

“ஏய்…ஏன் நீயெல்லாங் இப்புடி கூட்டமா நிக்கி றது… ரோட்ட மறிக்காம எல்லாம் லயத்துக்கு ஓடிப் போ…” என அவர்களில் ஒருவன் குண்டாந்தடியை ஓங்கியபடி பலமாகக் கூறினான். 

“நாங்க ஒருத்தரும் இந்த எடத்த வுட்டுப் போக மாட்டோம்” என நிதான மாகப் பதிலளித்தான் வீரய்யா. 

“என்னடா பேசுறது? இப்ப நாங்க போறதுக்கு இடங் கொடுக்காட்டி எல்லோரையும் அடிச்சு ‘ரிமாண்டில கொண்டுபோய் போடுறது” என்றான் பக்கத்தில் நின்ற பொலிஸ்காரன். 

“நீங்க எதை வேணுமுனாலும் செய்யுங்க. நாங்க இந்த எடத்த வுட்டு அகலமாட்டோம்” எனக் கூறியபடி முன்னே வந்தான் ராமு. 

“ஆமா, நாங்க இந்த எடத்த வுட்டு ஒருத்தரும் போகமாட்டோம்…” எனப் பல குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன. 

பொலிஸ்காரருக்கு கோபம் பொங்கியது. திடீரெனக் கையில் இருந்த குண்டாந்தடியால் அவர் ராமுவைத் தாக்கியபடி, “போடா சுறுக்கா” எனக் கத்தினார். 

குண்டாந்தடி ராமுவின் தோள் பட்டையில் தாக்கியது. ராமு ஆத்திரத்தால் தன்னை மறந்தான். ஆவேசம் வந்தவனாக அந்தப் பொலிஸ்காரன் மீது பாய்ந்து அவர் வைத்திருந்த குண்டாந்தடியை லபக்கெனப் பிடுங்கிக் கொண்டு பொலிஸ்காரரை முறைத்துப் பார்த்தான். 

“ராமு… நெதானத்த இழக்காதடா” என வீரய்யா எச்சரித்தான். 

ராமுவுக்கு அப்போதிருந்த ஆத்திரத்தின் வேகத்தில் அங்கிருந்த பொலிஸ்காரர்களை அடித்து நொறுக்கி விடுவான்போல் தோன்றியது. வீரய்யா கூறியதுந்தான் ராமு ஒருவாறு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான். 

அப்போது பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பொலிஸ்காரர் கோபத்துடன், “ஏய் நீ எல்லாம் இந்த எடத்த வுட்டு போகவேணும். இல்லாட்டி நான் இந்த ஜீப்பை ஆளுகளுக்கு மேல ஏத்திக்கிட்டு போறது. ஒங்க உயிர் வேணுமுனா எல்லாங் ஓடிப்போ” எனக் கூறிவிட்டு கோபத்துடன் விரைவாகச் சென்று ஜீப்பில் ஏறி ‘றைவர்’ ஆசனத்தில் அமர்ந்துகொண்டு ஜீப்பை ‘ஸ்ராட்’ செய்தார். 

சனங்களிடையே அப்போது சலசலப்பு ஏற்பட்டது. பொலிஸ்காரர் கோபத்தில் முரட்டுத்தனமாக ஜீப்பை ஓட்டிவந்து ஆட்களுக்கு மேல் ஏற்றிவிடுவாரோ என அவர்கள் பயந்தார்கள், 

பொலிஸ்காரர் ஜீப்பை ‘ரிவேர்ஸ்’ செய்துகொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு மிக வேகமாகச் சனங்களை நோக்கி ஓட்டி வருவதற்கு ஆயத்தமானார். 

“யாரும் பயப்புடாதீங்க இந்த எடத்த வுட்டு ஒருத்தரும் அசையவேணாம்” என வீரய்யா கட்டளை இட்டான். 

ஜீப் கொலை வெறியுடன் சனக்கூட்டத்தை நோக்கிப் பாய்ந்து வந்தது. 

‘சடார்’ என வீரய்யா ரோட்டின் குறுக்கே விழுந்து படுத்துக்கொண்டான். 

ஜீப்பின் சக்கரங்களுக்குள் வீரய்யா அகப்பட்டு சின்னா பின்னம் அடையப்போவதைப் பார்க்கச் சகிக்க முடியாத பலர் கண்களை மூடிக்கொண்டனர். 

சற்றுத் தூரத்தில் நின்றுகொண்டிருந்த அவனது தாய் மீனாச்சி, “ஐயோ…வீரய்யா…” என அலறினாள். 

வேகமாக வந்த ஜீப் பயங்கர உறுமலுடன் ‘பிரேக்’ போட்டு நிறுத்தப்பட்டது. அதன் முன் சக்கரங்கள் வீரய்யாவின் உடலை உரசியபடி இருந்தன. ஒரு மயிரிழை தப்பியிருந்தால் வீரய்யாவின் உடல் அந்தச் சக்கரங்களுக்குள் நசிந்து போய் இருக்கும். 

எல்லோரும் ஒருகணம் திகைத்து நின்றனர். 

“இவன் எதற்குமே அஞ்சமாட்டான் போல் இருக்கிறது’ என முணுமுணுத்தபடி ஜீப்பில் இருந்து இறங்கிய பொலிஸ்காரர் வீரய்யாவின் தீரத்தை எண்ணி மனதிற்குள் வியந்துகொண்டார். 

அங்கு இனித் தாமதித்தால் நிலைமை வேறுவிதமாக மாறிவிடுமோ எனப் பொலிஸ்காரர்கள் நினைத்துக்கொண்டனர். 

நில அளவையாளர்கள் அங்கு நடந்த எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தனர். 

“ஏய் நீ எல்லாங் இந்த எடத்த வுட்டு போறது இல்லைத்தானே.நான் அடுத்த முறை வந்து எல்லாரையும் சுட்டுப்போடுறது” எனக் கோபமாகக் கூறிய பொலிஸ்காரர் மீண்டும் ஜீப்பில் ஏறி ‘றைவர்’ ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். கீழே நின்றுகொண்டிருந்த பொலிஸ்காரர்களும் ஜீப் வண்டியினுள் ஏறிக்கொண்டனர். 

ஜீப் இப்போது ‘ரிவேர்சி’ல் செலுத்தப்பட்டது. அப்போதுதான் வீரய்யா மெதுவாக எழுந்திருந்தான். 

பொலிஸ்காரர் ஜீப்பைத் திருப்பிக்கொண்டு நில அளவையாளர்களையும் அங்கு தாமதிக்க வேண்டாமெனக் கூறிவிட்டு ஜீப்பை வேகமாகச் செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து நில அளவையாளர்களின் வாகனமும் புறப்பட்டது. 

வீரய்யாவின் தீரச்செயல் அங்கிருந்த ஒவ்வொரு தொழிலாளர்களின் உள்ளத்திலும் பெரும் வீர உணர்ச்சியைத் தூண்டிவிட்டிருந்தது. அவர்கள் எது வந்தாலும் உயிரைக் கொடுத்தாவது எதிர்த்துப் போராட இப்போது தயாராகியிருந்தனர். 

அத்தியாயம் முப்பத்தேழு

அதிகாலை நேரம். பனிமூட்டம் இன்னும் அகலவில்லை. குளிர்காற்று சில்லென வீசிக்கொண்டிருந்தது. தொழிலாளர்கள் எல்லோரும் வேலைக்குப் புறப்பட்டு மடுவத்தை வந்தடைந்தனர். அப்போது, துரை காரில் அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் கண்டக்டரும் கணக்குப்பிள்ளையும் அவருக்கு வந்தனம் தெரிவித்தனர். 

“இன்று தொடக்கம் ஒருவருக்கும் வேலை கொடுக்க வேண்டாம். எனக்கு மேலிடத்திலிருந்து உத்தரவுவந்திருக்கின்றது” என கண்டக்டரிடம் ஆங்கிலத்தில் கூறினார் துரை. 

பின்பு தொழிலாளர் பக்கம் திரும்பி, “தோட்டத்தில் வேலை நிப்பாட்டி இருக்கு. இனிமே இங்க ஒருத்தருக்கும் வேலை இல்லே. நீங்க இங்க இருந்து பிரயோசனங்இல்லே. வேற தோட்டத்துக்கு போறதுதான் நல்லது” எனக் கூறி விட்டு அங்கு நின்ற எல்லோரையும் ஒருதடவை பார்த்தார். 

“என்னாங்க தொர, திடீருனு வேல இல்லேனு சொல்லுறீங்க. வேல நிப்பாட்டிட்டா. நாங்க எப்புடிங்க தொர சாப்புடுறது?’ வீரய்யா திகிலுடன் கேட்டான். 

“நான் ஒன்னும் திடீருனு வந்து சொல்லல்ல. ஒரு மாசத்துக்கு முந்தியே நான் எல்லாத்துக்கும் சொல்லியாச்சு” என்றார் துரை அலட்சியமாக. 

“நாங்க எல்லாம் இந்த தோட்டத்தவுட்டு போறதில்லேனு தொரகிட்ட சொல்லி இருக்கோம் தானுங்களே. அதுக்கு ஒரு முடிவும் தெரியாம ஏங்க தொர வேல நிப்பாட்டுறீங்க. ஆளுங்க எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. எப்படியாச்சும் வேலை கொடுங்க” என மன்றாட்டமான குரலில் கூறினான் வீரய்யா. 

“அது நமக்கு ஒன்னுங் செய்ய முடியாது. வேலை நிப்பாட்ட சொல்லி மாவட்டக் காரியாலயத்தில் இருந்து ஓடர் வந்திருக்கு. என்னால ஒன்னுங் செய்ய முடியாது” எனக் கூறி கையை விரித்தார் துரை. 

வீரய்யாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வேலை வழங்காமல் விட்டால் தொழிலாளர்கள் எல்லோரும் பட்டினி கிடக்க நேரிடும். தொழிலாளர்களை பட்டினி போட்டே தமது காரியத்தைச் சாதிப்பதற்கு மேலிடத்தில் திட்டம் போட்டுவிட்டார்கள் என்பதை வீரய்யா நன்கு உணர்ந்து கொண்டான். 

“நீங்க தொழிலாளிங்களுக்கு வேலை கொடுக்காம இருக்க முடியாதுங்க… வேலை கொடுக்காம இருக்கிறது சட்டப்படி குத்தமுங்க” என்றான் வீரய்யா. 

“ஓ, அது சரிதாங்; வேலை குடுக்கிறது இல்லைன்னு யாரும் சொல்லேல்ல… ஒங்களுக்கெல்லாம் வேற தோட்டத்தில வேலை குடுக்கிறதுதானே” என்றார் துரை. 

“நாங்க ஏன் வேற தோட்டத்துக்கு போகனுங்க? இந்தத் தோட்டத்திலேயே எப்போதும் வேலை கொடுத்த மாதிரி எங்களுக்கு வேலை கொடுத்தா என்னங்க? நாங்க என்ன குத்தம் செஞ்சோம்?” 

”கொம்பனிக் காலம் மாதிரியில்ல இப்ப… தோட்டங்கள எல்லாம் அரசாங்கம் எடுத்திருக்குத்தானே. அதுனால், அரசாங்கத்தில வேலை செய்யிற ஆளுகளுக்கு வேற எடத்துக்கு மாற்றம் வாறமாதிரி, இப்போ உங்களுக்கும் மாற்றம் வந்திருக்கு” என்றார் துரை முன்னால் இருந்த மேசையில் சாய்ந்தபடி. 

வீரய்யா ஒருகணம் திகைத்து நின்றான். துரை கூறுவதிலும் சட்டரீதியான நியாயம் இருப்பதுபோல் அவனுக்குத் தோன்றியது. 

“நீங்க சொல்லுறது சரியுங்க தொர; மாற்றம் வாற பொழுது, அதற்கு ஏற்ற காரணம் காட்டி மாற்றத்தை மறுத்துக் கூறவும் எங்களுக்கு உரிமை இருக்குத்தானுங்களே” என்றான் வீரய்யா யோசனையுடன். 

அப்போது பக்கத்தில் நின்ற ராமு, “அதுமட்டுங்களா, அரசாங்கம் எங்களுக்கு மாற்றம் கொடுக்கிறதா இருந்தா, எங்க எல்லோரையுமா ஒரே நேரத்தில மாத்திப் போகச் சொல்லுது. எந்த எடத்திலும் எல்லாருக்கும் ஒரே நேரத்தில மாற்றம் வராதுங்க… இந்த தோட்டத்தில் தானுங்க இப்புடி வந்திருக்குங்க… இது வேற ஒண்ணும் இல்லீங்க. தொழிலாளிங்க எல்லாத்தையும் தோட்டத்தை வெரட்டிறதுக்கு, போட்ட திட்டமுங்க…” எனக் கூறினான். 

“அப்புடி எல்லாங் நீங்க நெனைக்க வேணாங்…அரசாங்கம், நம்ம நாட்டில காணி இல்லாம கஷ்டப்படுற ஆளுகளுக்கு காணி கொடுத்து ஒதவி செய்யிறதுக்குத்தான் இப்புடி செய்யிறது… உங்களை மட்டும் தோட்டத்தைவிட்டு போகச் சொல்லலை, நம்மளுக்கும், கண்டக்கையாவுக்கும் எல்லாத்துக்கும்தான் மாற்றம் வந்திருக்கு… நாங்க எல்லாம் வேற தோட்டத்துக்குப் போறதுதானே…” எனக் கூறிவிட்டு துரை தனது காரில் ஏறிப் புறப்பட்டார். 

துரை இப்படிக் கூறியது அங்கு நின்றவர்கள் எல்லோருக்கும் திகைப்பைக் கொடுத்தது. துரையும் மற்ற உத்தியோகத்தர்களும் தோட்டத்தை விட்டுப் போய்விட்டால் பின்பு தொழிலாளர்கள் மட்டும் தோட்டத்தில் இருந்து வேலை செய்ய முடியாது. இப்போது பிரச்சினை புதிய உருவத்தில் ஏற்பட்டிருக்கிறதென்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டனர். 

அத்தியாயம் முப்பத்தெட்டு

தோட்டத்தில் வேலை நிறுத்தப்பட்டதிலிருந்து தொழிலாளர்கள் எல்லோரும் பெருந் திகிலுடன் இருந் தனர். மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதிலேயே அவர்களது எண்ணம் முழுவதும் லயித்திருந்தது. வீரய்யா தீவிரமாக யோசனையில் ஆழ்ந்திருந்தான். 

அன்று மாலை ராமு, செபமாலை உட்பட பல இளைஞர்கள் வீரய்யாவின் வீட்டுக்குச் சென்றிருந்தனர். 

“வேலையையும் தோட்டத்தில் நிப்பாட்டிப்புட்டாங்க: கண்டக்கையாவுக்கு வேற மாற்றம் வந்திருக்குனு தொர சொல்லுறாரு. இனிமே நாம என்னதான் செய்யணும்?” எனக் கவலையுடன் கேட்டான் செபமாலை. 

“கண்டாக்கு மாத்தி போனாதான் நல்லதாச்சே. அவன்தானே எல்லா வெசயத்தையும் அவுங்க ஆளுகளுக்கு சொல்லுறவன். அவன் போனாதான் நம்மளோட திட்டத்தை ஒழுங்கா செய்யலாம்” என்றான் ராமு. 

“அவன் போனா ஒரு சனியன் தொலைஞ்ச மாதிரியிருக்கும் அப்புறம். கோப்புறட்டி மனேஜர் அவுங்க கூட்டாளிமார் எல்லோருமே போயிடுவாங்க” என்றாள். அடுப்பின் முன்னால் இருந்த மீனாச்சி. 

இவர்களது சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டு காம்பராவின் உள்ளே இருந்த மாயாண்டி, எழுந்து இஸ்தோப்புக்கு வந்தார். 

“இப்ப மேற்கொண்டு என்னதான் தம்பி செய்யலாமுனு நெனைச்சிகிட்டு இருக்கீங்க?” அங்கிருந்த வாங்கொன்றில் அமர்ந்தவாறு கேட்டார் மாயாண்டி. 

“என்னதாங்க மாமேன் செய்யுறது? அதுதான் தோட் டத்தவுட்டே போகச் சொல்லுறாங்களே. எண்னைக்கு தோட்டத்த அரசாங்கம் எடுத்திச்சோ, அன்னிக்கே நம்ப தோட்டத்துக்கு சனியன் புடிச்சமாதிரி.” 

“இந்தா பாருங்க தம்பி. இப்போ எதைப்பத்தியும் பேசி கொறைப்பட்டுக்கிட்டு இருக்கிறதில பொரயோசன மில்லை. நடக்க வேண்டியதை புத்திசாலித்தனமா செய்யிறதுதான் நல்லது. இந்த நிலையில நாம ரெம்பக் கவனமாத் தான் நடக்கணும்” என்றார் மாயாண்டி. 

“இங்க பாருங்க, கொஞ்ச நேரம் பேசாம இருங்க. அவுங்கதான் கதைச்சி ஒரு முடிவு காங்கட்டுமே. ஊடையில் நீங்க வேற அது இதுனு சொல்லிக்கிட்டு” என இடைமறித்தாள் அங்கே வந்த மீனாச்சி. 

“நான் பேசுறதுதான் ஒருத்தருக்கும் புடிக்காதே. ஆரம்பத்துல இருந்தே சொல்லிகிட்டு இருக்கேனே… ஒரு காலமும் இல்லாம தோட்டத்த அரசாங்கத்துக்கு எடுத்து, என்னென்னமோ செஞ்சி, இப்ப எல்லாத்தையும் தோட்டத்தவுட்டே வெரட்டுறாங்க. இதுல ஏதோ ஆபத்து வரப் போவுதுனு அப்பவே சொன்னேனே; யாராச்சும் கேட்டீங் களா?” என்றார் மாயாண்டி, மீனாச்சியைப் பார்த்து. 

“இப்ப கண்டாக்கும், நாட்டில உள்ள ஆளுங்களும் ஒன்னா சேந்துகிட்டு திட்டம் போட்டுத்தான் வேலை செய்யுறானுங்க. எப்படியாச்சும் நம்மளை தோட்டத்தவுட்டு வெரட் டிப்புட்டு, காணி வாங்கலாம் எங்கற நெனைப்போட அவுங்க இருக்காங்க. அதுக்கு தகுந்தாப்போல அரசாங்கம் எல்லா வேலையும் செய்யுது” என்றான் செபமாலை யோசித்த வண்ணம். 

”கண்டக்கையா தோட்டத்தவுட்டு போயிட்டாருன்னா அப்புறம் வேர கண்டக்கையா புதுசா வேலைக்கு வரப்போறாரா? ஒருத்தர் போனவொடனை அப்புறம் தொர, மத்த ‘ஸ்டாப்பு’ மாருங்க எல்லாம் போயிடுவாங்க. கடைசியா தோட்டத்தில் நாம மட்டுந்தான் உக்காந்துகிட்டு இருக்கோனும்” என்றார் மாயாண்டி. 

“யாரு போனாதான் என்னாங்க மாமேன், நாம தோட்டத்தவுட்டு போயிடவா போறோம். கடைசிவரைக்கும் போராடித்தான் தீருவோம்'” என்றான் ராமு. 

“என்னா ராமு அப்பிடி சொல்லுற, தோட்டத்திலை தான் வேலையை நிப்பாட்டிப்புட்டாங்க. நாம வேலை செய்யாட்டி, எங்கே இருந்து சாப்பாடு வரும்? நாலு நாளைக்கி பட்டினியாக் கெடந்தா நாமளாகவே தோட்டத்தவுட்டு போக வேண்டியதுதான். 

தந்தை கூறுவதில் உண்மை இருக்கிறதென்பதை வீரய்யா நன்கு உணர்ந்து கொண்டான். 

“நீங்க சொல்லுறதும் எனக்குச் சரியாதான் படுது. அப்புடினா, இந்த நெலையில நாங்க என்னதான் செய்யுறது?” வீரய்யா தந்தையைப் பார்த்துக் கேட்டான். 

“நம்மளுடைய போராட்டத்தில் வெற்றி கிடைக்கணுமென்னா இந்த தோட்டத்தவுட்டு ஒருத்தரையும் வெளியே போகவிடக்கூடாது – இந்தக் கண்டாக்கைக்கூட கண்டிப்பா போகவுடாம் நிப்பாட்டணும்” என்றார் மாயாண்டி உறுதியான குரலில். 

“என்னாங்க மாமேன், இவ்வளவு அநியாயம் செஞ்சவனையா புடிச்சி வைச்சிக்கிட சொல்லுறீங்க? இந்தக் கண்டாக்கு மாத்திப் போனாதான் நமக்கு நல்லது” என்றான் ராமு. 

”எவ்வளவு கெட்டவனா இருந்தாலும் நம்மளுடைய வெசயம் சரிவரனுமென்னா கட்டாயம் யாரையும் வெளியிலை போகவிடக்கூடாது. அப்படிச் செஞ்சாதான் அவங்களுக்காகவாவது அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்கும்” என்றார் மாயாண்டி. 

மாயாண்டி கூறியது இப்போதுதான் அங்கிருந்த இளைஞர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. 

“ஆமா ராமு…அப்பா சொல்லுறதும் சரிதான். நாம இந்தக் கண்டாக்கை போகவுடவே கூடாது” என்றான் வீரய்யா. 

“நான் ஒன்னுமட்டும் சொல்லுரேன் வீரய்யா, இந்தப் போராட்டத்தில் நமக்குத்தான் வெற்றி கெடைக்கும். அப்புறம் இந்தக் கண்டாக்கை நான் ஒதச்சி வெரட்டாம விட மாட்டேன்” என்றான் ராமு ஆவேசத்துடன். 

”சரி நேரமாகுது. நம்ப தோட்டத்தில் உள்ள பொடி யங்களுக்கு இதை இப்பவே சொல்லிப்புடுவோம்” எனக் கூறிக் கொண்டே எழுந்திருந்தான் செபமாலை. அவனைத் தொடர்ந்து ராமுவும் இளைஞர்களும் எழுந்திருந்தனர். 

இளைஞர்கள் அவ்விடத்தைவிட்டு அகன்றதும்தான் னாச்சிக்குச் செந்தாமரையின் நினைவு வந்தது. பீலிக்குச் சென்றவளை வெகுநேரமாகியும் காணவில்லையே என்ற எண்ணத்துடன் அடுப்படிப்பக்கம் சென்றாள். தண்ணீர்க் குடம் அடுப்பின் அருகேயுள்ள திட்டில் இருப்பதைப் பார்த்ததும் அவளது மனதில் சந்தேகம் துளிர்த்தெழுந்தது; பீலிக்குச் சென்று பார்க்கும் எண்ணத்துடன் வெளியே வந்தாள். 

அப்போது குப்பன் மூச்சு இரைக்க இரைக்க அவர்களது இஸ்தோப்பினுள் நுழைந்தான். 

“இங்க பாருங்க அக்கா, நம்ம செந்தாமரைய அந்த பியசேனாப் பய நாட்டுப் பக்கமா கூட்டிக்கிட்டுப் போறான்; நான் என் கண்ணால பாத்தேன். அதுதான் நேரா ஒங்ககிட்ட சொல்லுறதுக்கு ஓடியந்தேன்.” 

-குப்பன் கூறியதைக் கேட்டதும், “ஐயோ…வீரய்யா அவள் அந்தப் பயலோட ஓடிப்போயிட்டாளாமே” எனக் கதறியழுதாள் மீனாச்சி. 

மாயாண்டி அதிர்ச்சியுடன் எழுந்தார். 

ராசாத் தோட்டத்தில் இருக்கும் அவரது தங்கையின் மகனுக்கும் செந்தாமரைக்கும் விரைவில் திருமணம் செய்து வைப்பதற்கு வேண்டிய ஒழுங்குகளை, சென்றகிழமைதான் அவர் இரகசியமாகச் செய்து முடித்திருந்தார். அதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிடுமென அவர் எதிர்பார்க்கவே இல்லை. 

அவரது தலை சுற்றியது; அந்த லயமே இடிந்து நொருங்கித் தலையில் விழுந்ததுபோல் இருந்தது. மறுகணம் அவர் அப்படியே நிலத்தில் சாய்ந்தார். 

வீரய்யா செய்வதறியாது திகைத்துப்போய் மரமாக நின்றான். 

அத்தியாயம் முப்பத்தொன்பது

கிராமத்து  மக்களில் சிலர் தாம் கொண்டுவந்த கொழுந்துகளுடன் பண்டா முதலாளியின் கடையின் முன்னால் அவரது வரவுக்காகக் காத்திருந்தனர். 

வழக்கமாக நான்கு மணிக்கெல்லாம் கொழுந்து நிறுத்து விடும் முதலாளி, அன்று மந்திரியைச் சந்திக்கச் சென்றிருந்ததால் சற்றுத் தாமதமாகியே வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வந்ததும் கையில் 

கொண்டுவந்த ‘பைலை’ கடையின் முன் பக்கத்திலுள்ள மேசையின் மேல் வைத்து விட்டு அவசர அவசரமாகக் கொழுந்து நிறுக்கத் தொடங்கினார். 

வழக்கத்துக்கு மாறாக அன்று அநேகர் குறைவா கவே கொழுந்து கொண்டு வந்திருந்தனர். அதனைக் கவனித்த பண்டா முதலாளி, ‘“என்ன… இன்று மிகவும் கொழுந்து குறைவாக இருக்கிறதே; என்ன காரணம்?” எனப் பக்கத்தில் நின்ற பொடிசிங்கோவிடம் விசாரித்தார். 

“கிராமத்துப்பக்கமாக இருக்கும் மலைகளில்கொழுந்து முடிந்துவிட்டது. தோட்டத்தின் நடுப் பகுதிக்குப் போய் கொழுந்தெடுப்பதற்கு இப்போது ஒருசிலர் தயங்குகிறார்கள். அதனாலேதான் இன்று கொழுந்து மிகவும் குறைந்து விட்டது” என்றான் பொடிசிங்கோ. 

“ஏன் நீங்கள் தயங்கவேண்டும்? இப்போதுதான் தோட்டத்தில் வேலை நிற்பாட்டிவிட்டார்களே… அதனால் தொழிலாளர்கள் மலைக்குச் செல்லமாட்டார்கள். எல்லோருமே பயப்படாமல் சென்று கொழுந்தெடுக்க வேண்டியதுதானே?” என்றார் பண்டா முதலாளி. 

“அப்படியில்லை முதலாளி…இப்போது தொழிலாளர்கள் மிகவும் தீவிரமாக இயங்குகிறார்கள். முன்பு அவர்களுக்குத் தோட்டத்தில் வேலையிருந்தபோது ஒரளவுக்கு நிதானமாக எதையுமே செய்தார்கள். ஆனால் வேலை நிறுத்தப்பட்டபின் அவர்களிடையே போராட்ட உணர்வு அதிகமாகி இருக்கிறது. அதனாலேதான் லயன்களுக்கு அருகே இருக்கும் தேயிலை மலைகளுக்குச் சென்று கொழுந் தெடுப்பதற்கு நம்மில் சிலர் பயப்படுகிறார்கள்” என்றான் பொடிசிங்கோவின் பக்கத்தில் நின்றவன். 

“அதுமட்டுமல்ல முதலாளி; அந்தத் தொழிலாளர்களது போராட்டத்துக்குச் சார்பாக நமது கிராமத்தில் உள்ள ஒரு சிலரும் இப்போது கிளம்பியிருக்கிறார்கள்” என்றான் அங்கிருந்த வேறொருவன். 

“அதற்கெல்லாம் காரணம் அந்த முதியான்சேயும். சுமணபாலாவுந்தான்.” 

“அவர்களது ஆதரவிலேதான் உங்கள் பியசேனா கூட அந்த மாயாண்டியின் மகளைக் கூட்டிவந்து இங்கே கிராமத்தில் வைத்திருக்கிறான்” என்றான் பொடிசிங்கோவின் பக்கத்திலே நின்ற இளைஞன். 

“உங்களது சொந்தக் காணியிலேயே குடியிருந்து கொண்டு, உங்களுக்கு மாறான காரியங்களை அவன் செய்வதை நீங்கள் அனுமதிப்பதுதான் எங்களுக்கு வியப்பாக இருக்கிறது” என்றான் பண்டா முதலாளியின் பக்கத்தில் நின்றவன். 

“அதைமட்டும் சொல்லாதீர்கள். அந்தப் பெண்ணையும் அவனையும் பிரித்து வைப்பதற்கு நான் எவ்வளவோ முயற்சிகள் செய்தேன். ஆனாலும் இப்படி அவன் திடீரென அந்தப் பெண்ணையே நாட்டுக்கு அழைத்து வருவானென நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை” பண்டா முதலாளி யோசனையுடன்.  என்றார் 

“முதலாளி நீங்கள் மட்டும் எனக்கு அனுமதி கொடுங்கள். நான் இன்று இரவே அவனது குடிசைக்கு நெருப்பு வைத்துவிடுகிறேன்” என்றான் பொடிசிங்கோ. அவனது கண்கள் சிவந்திருந்தன. 

“இல்லை… இல்லை அப்படியொன்றும் அவசரப்பட் டுச் செய்துவிடாதே. நான் காரணத்தோடுதான் அவர்களைச் சும்மா விட்டு வைத்திருக்கிறேன். அந்தப் பெண் நமது மத்தியில் இருக்கும்போது அவளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமென்ற எண்ணத்தில் இனி அந்த வீரய்யாவினால் தீவிரமாகப் போராட முடியாதல்லவா? நமது காரியம் நிறைவேறிய பின்பு அவளை நானே அடித்து விரட்டி விடுவேன்” என்றார் பண்டா முதலாளி. 

“ஆமாம் முதலாளி, நீங்கள் கூறுவதிலும் விஷயம் இருக்கிறதுதான். அவளை இங்கிருந்து இப்போதே விரட்டி விட்டால் அவள் மீண்டும் தோட்டத்திற்கே போய்விடுவாள். பின்பு அந்த வீரய்யாவுக்கு எந்தவித கவலையும் இருக்காது” என்றான் வேறொருவன். 

“அந்த வீரய்யா இனிமேல் அதிகமாகத் துள்ளினால், இங்கே அவனது தங்கையைக் கொலை செய்யப்போவதாக அவனை நான் பயமுறுத்தப்போகிறேன்” என்றான் பொடி சிங்கோ. 

“அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துவிடாதே. நமக்குக் காணி கிடைப்பதுதான் முக்கியம். நமது கிராமத்திலேயே ஒரு சிலர் எமக்கு மாறாக இயங்குகிறார்கள். அத்தோடு இப்போது தோட்டத் தொழிலாளர்கள் பொலிஸ்காரரையே எதிர்க்குமளவுக்குத் தீவிரமாக இருக்கிறார்கள். அதனால் நாம் மிகவும் தந்திரமாகவே நடக்கவேண்டும்” என்றார் பண்டா முதலாளி. 

”எனக்கொரு யோசனை தோன்றுகிறது முதலாளி… பொலிஸ்காரர்கள் வரும்போது தோட்டத் தொழிலாளர்கள் அடிக்கும் அந்தப் பிரட்டு மணியைக் கழற்றிவிட்டால் என்ன? பின்னர் அவர்களால் ஜீப் வரும்போது ‘சிக்னல்’ கொடுக்க முடியாதல்லவா?” என்றான் பொடிசிங்கோவின் பக்கத்தில் நின்ற ஓர் இளைஞன். 

“ஆமாம்! அது நல்ல யோசனைதான். இன்று இரவே நான் அந்த மணியைக் கழற்றி வந்து விடுகிறேன்” என்றான் பொடிசிங்கோ. 

“அப்படிச் செய்வதால் நமது திட்டம் வீணாகிவிடும். அந்த மணியை நாம் கழற்றிவிட்டால், அவர்கள் அதற்குப் பதிலாக வேறொரு மணியைக் கட்டிவிடுவார்கள். அத்தோடு அந்த மணியைக் கழற்றுவதால் அவர்களுக்கு எம்மீது சந்தேகமும் ஏற்படலாமல்லவா?” என யோசனையுடன் கூறினார் பண்டா முதலாளி. 

“நீங்கள் இப்படி ஒவ்வொன்றிற்கும் ஏதாவது பதிலைச் சொல்லிக் கொண்டிருந்தால் நாம் எப்படித்தான் அந்தத் தோட்டத் தொழிலாளர்களை மட்டந் தட்டுவது?” எனப் படபடத்தான் பொடிசிங்கோ. 

“அதற்காகத்தான் அந்த மணியைக் கழற்றவேண்டா மெனச் சொல்கிறேன். அதிலேதான் எனது திட்டமே அடங்கியிருக்கிறது. அந்த மணியை வைத்தே அவர்களைத் தோட்டத்தைவிட்டு விரட்டுகிறேன் பாருங்கள்… முதலில் அவர்கள் தோட்டத்தைவிட்டு ஓடவேண்டும். பின்புதான் அந்தப் பியசேனா கூட்டிவந்து வைத்திருக்கும் குட்டியை ஓட ஓட விரட்டவேண்டும்” என ஆவேசமாகக் கூறினார் பண்டா முதலாளி. 

இப்போது அவரது கண்கள் சிவந்திருந்தன. 

அத்தியாயம் நாற்பது

அந்தக் குடிசையின் முன் பகுதியில் தொங்க விடப் பட்டிருந்த அரிக்கன் லாந்தர் ஒளி உமிழ்ந்துகொண்டிருந்தது. அதன் ஒளி கண்களைக் குத்தாதவாறு, மறுபுறம் திரும்பிச் சுவர்ப் பக்கம் பார்த்தவாறு படுத்திருந்தாள் பியசேனாவின் தாய் மெரினோனா. 

செந்தாமரை அடுப்படியிலிருந்து இரவுச் சாப்பாட் டைத் தயாரித்துக்கொண்டிருந்தாள். பியசேனாவின் தாய் அவளை மிகவும் அன்புடன் நடத்தினாள். பியசேனாவும் எந்நேரமும் அவளைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். அந்தச் சிறிய குடிசையில் அவளுக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை. ஆனாலும் அவள் மிகவும் வாடிப்போயிருந்தாள். 

வீட்டு நினைவு அடிக்கடி வந்து அவளை அலைக்கழித்த வண்ணம் இருந்தது. தன்னைக் காணாது தாய் துடித்துப் போவாளே என்ற நினைவு அவளை வருத்திக்கொண்டிருந்தது. தோட்டத்தில் மதிப்போடு இதுவரை காலமும் வாழ்ந்துவந்த தந்தை, இப்போது அவமானத்தால் குன்றிப்போய் இருப்பாரே என நினைத்தபோது அவளது நெஞ்சுக்குள் ஏதோ அடைப்பதைப்போல் இருந்தது. தோட் த்துத் தொழிலாளர்களுக்கே தலைவனான தனது தமையனுக்குத் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டேனே என எண்ணியபோது அவளது கண்கள் கலங்கின. 

தாய் தந்தையர் தனக்கு இரகசியமாகத் திருமண ஏற்பாடு செய்வதை ராக்கு மூலம் அறிந்ததும், தன்னை உடனே வந்து அழைத்துப் போகும்படி அவள் பியசேனாவிடம் வேண்டியிருந்தாள். அப்போது அவளிடமிருந்த ஆர்வமும் துடிப்பும் இப்போது மிகவும் குன்றிப் போயிருந்தன. 

இதுவரை நேரமும் குடிசையின் பின்புறத்தில் விறாந்தையொன்றை அமைப்பதற்கு வேண்டிய மரக் கம்புகளைச் சீவிக்கொண்டிருந்த பியசேனா, இப்போது அவள் அருகே வந்தான். 

“என்ன செந்தாமரை, ஏதோ யோசிச்சுக்கிட்டு இருக்கிறே?” பியசேனாவின் குரல் கேட்டுத் திடுக்குற்று நிமிர்ந்தாள் செந்தாமரை. 

“ஒண்ணுமில்லீங்க…” எனக் கூறிய செந்தாமரை. அவனைப் பார்த்துச் சிரிக்க முயன்றாள். 

“இல்ல செந்தாமரை… நீ எதையோ மறைக்கப் பாக்கிற, ஒம் முகத்தைப் பாத்தாலே தெரியுது” எனக் கூறிய பியசேனா, அவள் அருகே அமர்ந்துகொண்டான். 

“இல்லீங்க நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்.” 

”நீ பொய் சொல்லுற செந்தாமர… ஒனக்கு ஏதாவது கொறை இருந்தா எங்கிட்ட சொல்லு” என அவளது கைகளைப் பற்றியவாறு கூறினான் பியசேனா. 

“இங்க எனக்கு ஒரு கொறையுமே இல்லீங்க” எனக் கூறிய செந்தாமரை ஒரு கணம் தயங்கிவிட்டு, “எங்க வூட்டுல அப்பா அம்மா என்ன நெலைமையில் இருக்காங்களோ தெரியல்ல. அத நெனைக்கத்தான் எனக்கு கவலையாக் கெடக்கு” அவளது குரல் கரகரத்தது. 

“இதுக்குப் போய் ஏன் செந்தாமர கவலைப்படுற…நீ எங்கூடத்தான் வந்திருப்பேன்னு ஒங்க வூட்டுக்கு தெரிஞ்சிருக்குமே. கொஞ்சநாள் போனா எல்லாமே சரியா போயிடும்” எனக் கூறி அவளைத் தேற்ற முயன்றான் பியசேனா. 

“அதுக்கு சொல்லலீங்க… இப்போதான் தோட்டத்தைவுட்டு எல்லாரையுமே போகச் சொல்லியிருக்கே. அப்புறம் எங்கம்மா, அப்பாவை இனிமே எப்புடீங்க பாக்கப் போறேன்.” 

செந்தாமரையின் கண்கள் கலங்கின. 

“அப்புடியெல்லாம் ஒண்ணுமே நடக்காது செந்தாமரை. தோட்டத்து ஆளுங்க ஒரு நாளும் தோட்டத்தவுட் டுப் போகமாட்டாங்க” பியசேனாவின் குரலில் உறுதி தொனித்தது. 

“இல்லீங்க… இப்ப நாட்டாளுங்களும் ரொம்ப கொழம்பிக்கிட்டு இருக்காங்க. தோட்டத்து ஆளுங்களும் போக மாட்டேனு பிடிவாதமா இருக்காங்க. இப்புடி இருக்கிறப்போ என்னா நடக்குமோனுதான் எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க” என்றாள் செந்தாமரை. 

“இந்தா பாரு செந்தாமரை… நீ ஒண்ணுக்கும் கவ லைப்படாத; ஒனக்கு ஒரு கஷ்டமும் வராம நான் பாத்துக்கிறேன். சும்மா சும்மா மனசுல ஏதாச்சும் நெனைச்சி கவலைப்பட்டுக்கிட்டு இருக்காத…” எனக் கூறிய பியசேனா. 

அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டான். 

அப்போது முன்புறத்தில் படுத்திருந்த பியசேனாவின் தாய் எழுந்து, “மே, பலண்ட புத்தே… மேயிங் கவுதோ எவில இன்னே” எனக் குரல் கொடுத்தாள். 

யார் இந்த நேரத்தில் வந்திருக்கக்கூடும் என எண் ணியவாறு வாசலுக்கு வந்தான் பியசேனா. அங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சியடைய வைத்தது. 

வீரய்யாவும், ராமுவும் குடிசையின் வாசலில் நின்றிருந்தனர். 

செந்தாமரையைத் திருப்பியழைத்துச் செல்லும் நோக்கத்துடன் வீரய்யா அங்கு வந்திருந்தான். தோட்டத் தொழிலாளர்களின் மேல் கிராமத்தவர்கள் பகை கொண்டிருக்கும் இந்த நேரத்தில் செந்தாமரை கிராமத்தில் இருப்பது எந்த நேரமும் அவளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற எண்ணம் வீரய்யாவின் மனதைக் கலக்கிக்கொண்டிருந்தது. அவனால் எதையும் நிம்மதியாகச் சிந்தித்துச் செயலாற்ற முடியவில்லை; பெரிதும் குழம்பிப் போயிருந்தான். தோட்டத் தொழிலாளர்களைச் சரியான முறையில் வழி நடத்தவேண்டிய பெரும் பொறுப்பு தன் மேல் இருக்கும் இந்த வேளையில் சொந்தப் பிரச்சினைகள் தன்னைப் பாதிப்பதை அவன் விரும்பவில்லை. செந்தாமரையை எப்படியாவது திருப்பி அழைத்து வரும்படி தாய் மீனாச்சி வேறு எந்த நேரமும் அவனை நச்சரித்தபடி இருந்தாள். அதனாலேதான் அவன் ராமுவையும் அழைத்துக்கொண்டு அங்கு வந்திருந்தான். 

இந்த நேரத்தில், அதுவும் இப்போதுள்ள குழப்பமான சூழ்நிலையில் வீரய்யாவும், ராமுவும் அங்கு வந்திருப்பது பியசேனாவின் உள்ளத்தில் ஒருவிதபய உணர்வை ஏற்படுத்தியது. 

“எங்க செந்தாமர…?” வீரய்யாவின் குரல் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு ஒலித்தது. 

உள்ளேயிருந்த செந்தாமரையின் உள்ளம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது. அவள் பயத்துடன் மெதுவாக எழுந்து வெளியே எட்டிப் பார்த்தாள். 

“செந்தாமர எங்கூடத்தான் இருக்கிறாள்.” பியசேனாவின் வார்த்தைகள் தடுமாறின. 

”அவளை வெளியே வரச் சொல்லு; அவளைக் கூட்டிக் கிட்டுப் போகத்தான் நாங்க வந்திருக்கோம்” என்றான் வீரய்யா. 

“அவளை நான் அனுப்ப முடியாது. இனி இங்கதான் அவள் இருப்பாள்” என்றான் பியசேனா திடமான குரலில். 

“அதை நான் செந்தாமரகிட்டேயே கேக்கிறேன். அவளை இங்க வரச் சொல்லு.” அடுப்படிப்பக்கம் பார்த்தவாறு கூறினான் வீரய்யா. 

வீரய்யா இப்படிக் கூறியதும் செந்தாமரை பயத்துடன் வெளியே வந்தாள். 

வீரய்யாவுக்கு அவளைப் பார்த்தபோது எரிச்சலாக இருந்தது. ஆனாலும் எப்படியாவது அவளைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிடவேண்டுமென்ற எண்ணத்துடன் அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். 

“என்ன செந்தாமரை? நீ எங்கூட இப்ப வாறியா இல்லியா?” என அதட்டும் குரலில் கேட்டான் வீரய்யா. 

செந்தாமரை பதில் எதுவும் கூறாது மௌனமாகத் தலைகுனிந்தபடி நின்றாள். 

“இங்கபாரு செந்தாமர… நீ இங்க வந்ததில இருந்து, அம்மா சாப்பிடவே இல்லை. அழுதுகிட்டே இருக்காங்க. ஒன்னை பாக்காம அவுங்களால ஒண்ணுமே செய்ய முடியல.” 

வீரய்யா இப்படிக் கூறியதும் செந்தாமரை பெரிதாக அழத் தொடங்கினாள். 

”என்னை மன்னிச்சிடுங்க அண்ணா… நான் இனி இங்க தான் இருக்கப்போறன்” விம்மலுக்கிடையே கூறினாள் செந்தாமரை. 

“அப்பா ஒரே பைத்தியம் பிடிச்சமாதிரி இருக்காரு.நீ இப்புடிச் சொன்னா நான் என்னதான் செய்யிறது?” எனக் கூறிக்கொண்டே செந்தாமரையின் அருகில் சென்றான் வீரய்யா. 

“அண்ணா…இனி என்னால அவரப் பிரிஞ்சி இருக்க முடியாது. தயவு செஞ்சி என்னை வற்புறுத்தாதீங்க” எனக் கெஞ்சும் குரலில் கூறினாள் செந்தாமரை. 

இனி அவளைத் தன்னுடன் வரும்படி அழைப்பதில் பிரயோசனமில்லை; அவள் ஒரு போதும் பியசேனாவைப் பிரிந்து வரமாட்டாள் என்பதை வீரய்யா உணர்ந்து கொண்டான். 

“சரி செந்தாமரை… அப்படீனா நீங்க ரெண்டு பேருமே தோட்டத்துக்கு வந்திடுங்க.” 

அப்போது இதுவரை நேரமும் மெளனமாக நின்ற ராமு, “ஆமா பியசேனா, நீ செந்தாமரையைக் கூட்டிக்கிட்டு தோட்டத்துக்கு வாறதுதான் நல்லது. செந்தாமரையைக் காணாட்டி. அவுங்க அம்மா உயிர விட்டாலும் வுட்டுடுவாங்கபோல இருக்கு” எனக் கூறினான். 

பியசேனாவுக்கு என்ன பதில் கூறுவதென்றே தெரியவில்லை. அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. மௌனமாக நின்றான். 

“செந்தாமரை, நாட்டுல ஒனக்கு ஏதாச்சும் ஆபத்து வந்திடுமோனு நெனைச்சு ஒங்க அம்மா எந்த நேரமும் அழுது புலம்பிகிட்டு இருக்காங்க. நீ எப்புடியாச்சும் பியசேனாவைக் கூட்டிக்கிட்டு தோட்டத்துக்கு வாறதுதான் நல்லது.” இப்போது செந்தாமரையின் பக்கம் திரும்பிக் கூறினான் ராமு. 

பியசேனா சிறிது நேரம் யோசித்தான். வீரய்யா மிகவும் நல்வவன். ஒருபோதும் தனக்குத்தீமை செய்யமாட்டான் என்பது அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது. இப்போதுள்ள சூழ்நிலையில் செந்தாமரையோடு கூடச்சென்று தோட்டத்திலே தங்கிவிடுவது ஒரு பாதுகாப்பான செயலாக இருக்கு மென அவன் எண்ணினான். 

“என்ன பியசேனா, ரெம்ப யோசிக்கிறே? நீ ஒண்ணுக்கும் பயப்படத் தேவையில்ல. இப்பவே செந்தாமரையை கூட்டிக்கிட்டு எங்ககூட வந்திடு” என பியசேனாவின் தோள்களைத் தன் இரு கைகளாலும் பற்றியவாறு கூறினான் வீரய்யா.  

பியசேனாவால் எவ்வித மறுப்பும் தெரிவிக்க முடியவில்லை. 

”சரி வீரய்யா; நீ சொல்லுறபடி செய்யிறேன்; ஆனா, இந்த நேரத்தில் அம்மாவைத் தனிய வுட்டுட்டு வர முடியாது” என்றான் பியசேனா. 

“ஆமா அண்ணா. நாளைக்கி கட்டாயமா ரெண்டு பேருமா அங்க வர்றோம், அம்மாகிட்ட சொல்லுங்க” என்றாள் செந்தாமரை. 

வீரய்யா சிறிது நேரம் யோசித்தான். 

“ஆமா வீரய்யா, நாளைக்கி அவுங்க ரெண்டு பேருமா வரட்டும்; அதுதான் நல்லது. பியசேனாவும் அவுங்க அம்மாவுக்கு ஒரு ஒழுங்கு பண்ணிட்டுத்தானே வரணும்” என்றான் ராமு. 

இனிமேலும் அவர்களை வற்புறுத்துவது சரியில்லை என நினைத்த வீரய்யா, ”சரி நாளைக்குக் கட்டாயம் வாங்க; ஒங்களை எதிர்பார்த்துகிட்டு இருப்போம்” எனக் கூறிவிட்டு ராமுவுடன் அங்கிருந்து புறப்பட்டான்.. 

பியசேனாவும், செந்தாமரையும் அவர்கள் இருவரையும் வாசல்வரை சென்று வழியனுப்பி வைத்தனர். 

மறு நாள்- 

வீரய்யாவுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி செந்தாமரையையும் அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்குச் சென்றான் பியசேனா. 

செந்தாமரையைக் கண்டதும் மீனாச்சி ஓடிவந்து அவளைக் கட்டியணைத்துக்கொண்டு பெரிதாக அழத் தொடங்கினாள். செந்தாமரையால் எதுவுமே பேச முடியவில்லை. தாயின் மார்புக்குள் முகத்தைப் புதைத்தவாறு விம்மினாள். 

மாயாண்டி மௌனமாகக் கட்டிலில் படுத்திருந்தார். செந்தாமரையின்மேல் அவருக்கிருந்த கோபம் தணியவேயில்லை. ஆனாலும், அவள் கிராமத்திலிருந்து ஏதாவது ஆபத்தில் சிக்கிவிடாமல் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தது, அவரது மனதிற்கு ஓரளவு நிம்மதியைக் கொடுத்தது. 

வீரய்யாவின் மனதிலும் பெரும் ஆறுதல்ஏற்பட்டது. இனித் தோட்டத்து விடயங்களை எவ்வித குழப்பமு மின்றிக் கவனிக்கலாம் என எண்ணிக் கொண்டான்.

– தொடரும்…

– குருதிமலை (நாவல்), முதற் பதிப்பு: ஜூலை 1979, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *