காலிங் பெல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 3, 2024
பார்வையிட்டோர்: 1,717 
 
 

(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு வாசலில் ஒரு காலிங்பெல்லுக்கான பட்டன் இருந்தது. நீலபட்டன். வெள்ளையைப் போல் நீலம் இருட்டில் அடையாளம் புலப்படவில்லை. இதற்கு முன் ஒரு தடவை கிருஷ்ண மூர்த்தியைப் பார்க்க இரவு எட்டு மணிக்கு மேல் போய் திண்ணை விளிம்பில் கால்முட்டு உரசப் படிகட்டில் நின்று, இருட்டில் நிலைப் படிக்கு மேல் எங்கெங்கோ துழாவி விட்டுக் கடைசியில் அது அகப்படாமல் அவன் திரும்பி வந்ததுண்டு.

கிருஷ்ணமூர்த்தியின் போர்ஷன் மூன்று கட்டுகளைத் தாண்டி, அந்த நீட்டுவாக்கு வீட்டின் கோடியில் ஏறக்குறைய அடுத்த தெருவை நெருடுகிற எல்லையில் இருந்ததால் அழைப்பு மணி அவசியமாய் இருந்தது. அதற்கப்புறம் ஒரு நாள் பகலில் போயிருந்த போது இவனுக்குக் கிருஷ்ணமூர்த்தியே பட்டன் பதித்திருந்த தடத்தை அடையாளம் காட்டி, இனி எப்போது வந்தாலும் நிலைப்படிக் குறட்டின் வலது மூலையில் ஸ்ரீவைஷ்ணவச் சின்னங்களின் சித்திர வேலைப்பாடு சுவற்றைத் தீண்ட முடியாமல் தடைபட்டுத் திணறுகிற அந்தச் சின்ன இடைவெளியில் சுட்டு விரலை வைத்து அழுத்தச் சொல்லி இருந்தான்.

அதனால், இன்றைக்கு அவனுக்கு அந்தப் பழைய சிரமங்கள் ஏற்படவில்லை நீலத்தடத்தைச் சரியாய் அனுமானித்து அழுத்திவிட்டுப் படியிலேயே கதவு திறப்பதை எதிர்பார்த்துக் கொண்டு நின்றான். வீட்டுக் கோடியில் அது எழுப்புகிற நாதம் ஒரு மெல்லிய முனகலாகக் கூட வாசற்புறத்தில் வெளிப்படக் காணோம். ஒரு பரமரகசியம் பாதுகாக்கப்படுகிற மாதிரி அப்படியொரு கொடூர மூடுமந்திரம். விரல்களில் மட்டும் பிளாஸ்டிக்கின் ஸ்பரிசம் இன்னும் அப்படியே இருந்தது. இருட்டில் ரூபமிழந்து போகிற வஸ்துக்களுக்கு இந்த ஸ்பரிசம் மட்டுமே அடையாளம்…

கொஞ்ச நேரம் பொறுத்து யாரோ கதவைத்தட்டுகிற சப்தம் கேட்டது. மேற்கூரையின் இறக்கம் கதவுக்கு இந்தப்புறம் ஆளோடியில் ஏராளமாய் நிழலை அள்ளி தெளித்திருந்ததால் அதன் மத்தியில் நின்று கதவை
பாதிமட்டும் திறந்து வைத்துக் கொண்டு விசாரிக்கும் பெண்ணின் முகம் இவனுக்குப் புலப்படவில்லை.

அவன் நிலைப்படியைப் பார்த்துக் கொண்டே ‘கிருஷ்ணமூர்த்தி இருக்கானா?’ என்று கேட்டான்.

“இருக்கார், சாப்பிடறார்” என்று சொல்லி விட்டு, அவனுக்கு வழி காட்டுகிற மாதிரி அவள் முன்னே நடந்து போனாள். “வாங்கோ” என்று கூப்பிடா விட்டாலும் அந்த நடையின் பாவனைக்கு அதுதான் சம்பிரதாயமான அர்த்தமாய் இருக்கும் என்று அனுமானித்துக் கொண்டு அவனும் பின் தொடர்ந்தான். ஒரு வேளை அன்னிய புருஷர்களோடு பேச அவளுக்கு அனுமதிக்கப்பட்ட வார்த்தைகள் அவ்வளவாகவே இருக்கலாம். 

மூன்று கட்டுகளையும் ஒரு நாடா போல் பக்கவாட்டில் இணைக்கிற ரேழியில் அந்தந்தக் கூடங்கள் குடித்தது போக மிஞ்சிய வெளிச்சம் அங்கங்கே திட்டுத் திட்டாய் உமிழ்ந்து வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு திட்டைக் கடக்கிற போதும் அங்கங்கே முன்னால் போகிற முதுகிலும் அவற்றைப் போலவே விட்டு விட்டு விச்சிக்கிற செம்மண் திட்டுக்கள். அது கிருஷ்ண மூர்த்தியின் மனைவியாகத் தான் இருக்க வேண்டும் என்று மனசுக் குள் ஊகித்துக் கொண்டே பின் தொடர்ந்தான். கிருஷ்ணமூர்த்தி இவ்வளவு உயரம் இருப்பானா? நிலைகள் வருகிற போதெல்லாம் இவள் நிறையக் குனிய வேண்டி இருக்கிறது. கிருஷ்ணமூர்த்தி இத்தனை குனிய மாட்டான்… ‘இவள் கிருஷ்ணமூர்த்தி விவகாரத்திலும் இந்த அளவுக்குத் தினம் குனியவேண்டி இருக்குமே’ அவன் நினைத்துக் கொண்டான். அங்கு குடியிருப்பவர்களுக்கெல்லாம் மொத்தம் மூன்று நிலைப்படிகள் என்றால் அவளுக்கு மட்டும் ஒன்று ‘சர்ப்ளஸ்’ என்று நினைத்த போது சிரிப்பு வந்தது. 

கடைசி போர்ஷன் வந்ததும் அவள் சமையலறைக்குள் புகுந்து மறைந்து போனாள். கிருஷ்ண மூர்த்தி சமையலறையிலிருந்து வெளிப்படுவதற்குப் பிடித்த சில நிமிஷங்களில் அவன் கூடத்தில் இருந்த ஈஸிசேரில் உட்கார்ந்தபடியே சுவற்றில் தொங்கும் புகைப் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். எதிர் சுவற்றில், அப்போது தான் ஃப்ரேம் போட்ட மாதிரித் தொங்கிய அந்த போட்டோவில் மாலையும் கழுத்துமாய் ஒரு ஜோடி நிற்பது தெரிந்தது. உத்தரத்திலிருந்து தொங்கும் கூடத்து விளக்கின் பீங்கான் ஷேடிலிருந்து அரைவட்டமாய் ஒரு நிழல் கிளம்பிப் போய் அந்தப்படத்தின் மேல் பாதியில் இலக்காய்க் குமிழ்ந்திருக்கவே நிற்கிறவர்களின் முகம் சரியாகத் தெரியவில்லை. அது கிருஷ்ண மூர்த்தியும் அவன் மனைவியுமாய்த் தான் இருக்க வேண்டும் என்று இவனாய் அனுமானித்துக் கொண்டான். எழுந்து போய்ப் பக்கத்தில் நின்று உற்றுப் பார்த்து ஊர்ஜிதம் பண்ணிக் கொள்ள ஆசையாய் இருந்தது. ஆனால் ஷேடின் நிழலை விடப் போலி நாகரிகங்களின் நிழல் இன்னும் பெரிதாய் நிஜங்களைக் கவ்வி மூடிக் கொள்ளவே உடம்பு ஈஸிசேரில் அழுத்தமாய் ஒட்டிக் கொண்டது. 

கிருஷ்ணமூர்த்தி டர்க்கி டவலில் உள்ளங்கையைத் தேய்த்தபடியே கூடத்துக்கு வந்தான். “ஒன் மேலே நான் ரொம்பக் கோபமாய் இருக்கேன்” என்றான். ஈஸிசேரில் இருந்த நிலையிலேயே இவன் ஒரு புன்சிரிப்போடு கையை நீட்டிக் கொண்டு, “ஐ ஆம் ஸாரி” என்றான். “எனக்குக் கல்யாணம் நடந்ததுக்கா சொல்றே?”-கிருஷ்ணமூர்த்தி இன்னொரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டான். வந்தவன் சங்கடங்களோடு சிரித்தான். 

“மேரேஜுக்கு வரமுடியாம போயிடுத்து. இன்ஃபேக்ட் அன்னிக்குத் தஞ்சாவூர்லே ஒரு முக்கியமான் ஸ்டாஃப் மீட்டிங். கிரீட்டிங்ஸ் டெலிகிராம் கொடுக்கக் கூட ஒழியலே. மறுநாள் லெட்டர் போட்டிருந்தேனே வந்துதோ?” 

”நத்திங். நீ ஒரேடியா மறந்துட்டேன்னே நான் முடிவு பண்ணிட் டேன்”

கிருஷ்ணமூர்த்தி உள்புறம் திரும்பி “பானூ” என்று குரல் கொடுத்தான். “ஒரு தட்டுலே பட்சணம எடுத்துண்டு வா..”

“ஐ ஆம் ஸாரி, கிருஷ்ணமூர்த்தி. நான் இப்பத் தான் ஆத்துலே ஹெவியா சாப்பிட்டேன். சும்மா ஒன்னை பார்த்துக் கல்யாணம் விசாரிச்சுட்டுப் போகலாம்னு வந்தேன்”

“இதுக்கும் ஸாரியா? அதுக்குள்ளே ரெண்டு ஸாரி செல்லிட்டே. நீ துக்கம் விசாரிக்க வந்த மாதிரி இருக்கு”

“ஐ ஆம்…” அவன் நாக்கைக் கடித்துக்கொண்டான். விளக்கின் ஷேடை ஒரு பல்லி அசைத்து ஆட்டி விட்டதில் இப்போது நிழல் எதிர்ச் சுவற்றுப் புகைப்படம் முழுசையுமே பீடித்துக் கவிந்து கொண்டது.

”நீ லெட்டர் போட்டதாவா சொல்றே?” என்று கிருஷ்ணமூர்த்தி அவனிடம் மறுபடியும் கேட்டுக் கொண்டே சமையலறைப் பக்கம் அவள் வருகிறாளா என்கிற மாதிரிப் பார்த்தான்.

“ஸர்ட்டன்லி. ஆனா அட்ரஸ் தான் தப்பாப் போட்டுட்ட மாதிரி ஃபீலிங். வேலைக் குழப்பம். ஒரு ஆபீஸிலே டிரான்ஸ்ஃபர் ஒரு விஷயமா ஏகப்பட்ட தகறாரு.”

புரை தீர்த்த நன்மை பயக்கும் பொய்களைப் பற்றி அவனுக்கு ஸ்கூலில் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். பள்ளிப்படிப்பு வாழ்க்கைக்குப் பயன்படுவதில்லை என்று சில பேர் தப்பாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

புடவைச் சரசரப்போடு ஒரு தட்டில் ஸ்வீட் வகையறாக்கள் அவனுக்கெதிரில் ஒரு ஸ்டூலின் மீது பிரத்தியட்சமாயின. நிமிர்ந்து பார்க்கக் கூச்சப்பட்டுக் கொண்டே “இதல்லாம் என்னத்துக்கு” என்று கேட்டு விட்டு மைசூர் பாகில் விரல்களைப் பதித்தான் ஒரு கையால் விள்ள முடியாது போல தோன்றவே இரண்டு கையையும் உபயோகித்து அதைப்பிளந்தான. அவன் படுகிற சிரமங்களைக் கவனித்து “சும்மா பல்லாலே கடிச்சு சாப்பிடு” என்றான் கிருஷ்ணமூர்த்தி.

மறுபடியும் புடவைச் சரசரப்பும் குப்பென்று ஒரு அடையாளம் புரியாத பவுடர் வாசனையும் சமீபித்தன. என்ன பவுடர் அது, குடி கூராவாய் இருக்குமோ? கிருஷ்ண மூர்த்தி கஞ்சன், அவ்வளவு விலை கொடுத்துப் பவுடர் வாங்க மாட்டான்.

ஸ்டூலின் விளிம்பில் இப்போது ஒரு எவர்சில்வர் செம்பு நிறையத் தண்ணீரும் பக்கத்தில் ஒரு டம்ளரும் தோன்றின. டம்ளரின் முலாம் ஏறிய வெளிப்பரப்பில் ஒரு கையின் சிவப்பு ஜிவு ஜிவு என்று குவிந்து கவிவதை கவனித்துக் கொண்டே அவன் ரவாலாடை உதிர்த்தான். அவன் பிரயோகித்த அளவுக்கு மிஞ்சிய அழுத்தத்தில் தட்டு முழுவதும் மாவு வெள்ளைச் சிதறல்களாக பரவி மற்ற பட்சணங்களை எல்லாம் நிறமிழக்கச் செய்துவிட்டு, ஸ்டூல் பரப்பிலும் தெறிக்கவே, அவன் தான் அத்தனை வேகப்பட்டிருக்கக் கூடாது என்று நினைத்தான்.

அவன் சாப்பிடுகிறபோது கிருஷ்ண மூர்த்தி நிறையப் பேசிக் கொண்டிருந்தான். தன் ஆபீஸ் விவகாரங்களைப் பற்றிச் சொன்னான். ஒரு மாதம் லீவு எடுப்பதற்குத் தான் எத்தனை சிரமப்பட வேண்டியிருந்தது என்று பெரிதாய்க் குறைப்பட்டுக் கொண்டான். யூனியன் செகரட்டரியிடம் தனக்கு எந்த அளவுக்குச் செல்வாக்கு இருக்கிறதென்பதை ரொம்பவும் விஸ்தாரமாய், உள்ளே இருக்கிற அவளும் கேட்கட்டும் என்கிற மாதிரியான குரலில் இரைந்து சொன்னான். இவன் தனது அலுப்புக்களை பட்சண பகளில் கரைத்துக் கொண்டு மௌனமாய் இருந்தான்.

சமையல் கட்டைக் கூடத்திலிருந்து பிரிக்கிற நிலைவாயிலில் ஒரு ஸாட்டின் ஸ்க்ரீன் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் பெரும் பகுதியில் திட்டுத்திட்டாய் எண்ணெய்க் கரை படிந்திருக்கவே, ”சமையலறையில் இருக்கிறவள் அவ்வப்போது வந்து அதில் தன் கைகளைத் துடைத்துக் கொண்டு போகிறவளாய் இருக்க வேண்டும்” என்று அவன் தண்ணீர் குடித்துக் கொண்டே நினைத்தான். தூக்கி, உதட்டில் படாமல் தண்ணீர் அருந்துவதில் நிறையச் சௌகரியங்கள் இருக்கின்றன. எந்தப் பீடிகையும் தயக்கமுமின்றி, அறிமுகங்களுக்குக் காத்திராமல் எதிரில் நிற்கிற யார் முகத்தையும் தீர்க்கமாய் பார்க்கலாம். அவர்களுக்கும் தாங்கள் பார்க்கப்படுகிற பிரக்ஞை இருக்காது…

தண்ணீர் கொண்டுவந்து வைக்கப் பட்டவுடனேயே கொஞ்சம் குடித்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான். இப்போது அவனையும், கிருஷ்ணமூர்த்தியையும் தவிர்த்துக் கூடத்தில்வேறு யாரும் இல்லை.

கிருஷ்ணமூர்த்தியிடம் வளரும் உலகின் அடிப்படையான நாகரிக பிரக்ஞைகள் எதுவும் இல்லாமல் போய்விட்டதாய் அவன் மனசுக்குள் குறைப்பட்டான். இவனைக்கட்டிக் கொண்டு இந்த நாலாவது கட்டு இருட்டுக் குகையில் இனி வாழ்க்கை முழுவதும் சிறை இருக்கப் போகிற ஆத்மாவை நினைக்கிற போது அவனுக்குப் பரிதாபமாய் இருந்தது. சமையல் பண்ணுகிற நேரம் போக, பாக்கி நேரம் முழுவதும் ஒரு காலிங்பெல் சமிக்ஞைக்காகக் காத்துக் கொண்டு அந்தக் கூண்டுக்குள் காலகாலத்துக்கும் செய்ய வேண்டிய வனவாசம் வனவாசம்கூட இல்லை – அக்ஞான வாசம். மிஞ்சிமிஞ்சிப் போனால் முன்கட்டுப் பெண்களுடன் கோயிலுக்குப் போகலாம்; காமரா அறையில் தோளை நன்னாய்ப் போர்த்திக் கொண்டு மாமியாரோடு பல்லாங் குழி ஆடலாம்; மத்தியானம் வெறும் தரையில் ஓருக்களித்துப் படுத்துக்கொண்டு தூக்கம் வருகிற வரை ஆனந்தவிகடனிலும் குமுதத்திலும் தொடர்கதை படிக்கலாம். சாயங்காலம் ரேடியோவில் சிலோன் வைத்து சினிமா பாட்டுக் கேட்கலாம். அப்புறம் கிருஷ்ணமூர்த்தி வந்து விடுவான். அப்பா அண்ணன் தம்பிகளுக்குப் பிறகு அவளோடு அனுமதிக்கப்பட்டிருக்கிற ஒரே ஆண்பிள்ளை.

“ஆல்பம் பார்க்கறியா?” என்று கேட்டுக் கொண்டே கிருஷ்ண மூர்த்தி உள்ளே போனான். வந்தவனுக்கு ஒரு சின்ன ஆறுதல் நேர்ந்தாற் போலிருந்தது. அவன் வேறு புறம் திரும்பி நோக்கினான். ஜன்னலும், ஓரு சின்ன அறையும், அறைச்சுவரை ஒட்டின மாதிரி ஒரு கட்டிலும் கட்டிலின் மேல் மேலுறை கழற்றப்பட்டு சிவப்பாய் ஸாட்டின் உள் உடம்பு தோன்ற ஒரு மெத்தையும் தெரிந்தன. இது தான் சாந்தி முகூர்த்தத்துக்கு வாங்கினதா? என்று கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால் உள்ளேஅவள் இருக்கிற போது போது தான் அதைக்கேட்பது நாகரிகமில்லை என்று எண்ணி வாளாவிருந்து விட்டான். மேலுறையைச் சலவைக்குப் போட்டிருக்க வேண்டும். அதற்குள்ளாகவா அத்தனை அழுக்காய் அடித்து விட்டார்கள்? அவனுக்குக் குறும்புத்தனமாய்ச் சிரிப்பொன்று வந்தது. திடீரென்று இன்னொரு சந்தேகமும் எழவே அவன் சோம்பல் முறிக்கிற மாதிரி ஈஸிசேரிலிருந்து எழுந்திருந்து, நின்று கொண்டு கவனித்தான். இன்னொரு மெத்தை தரையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது ஏன் தரைக்குப் போயிற்று என்றுதான் புரியவில்லை. ஒரு வேளை அவர்களுக்குள் ஏதேனும் பிணக்கு நேர்ந்திருக்கக்கூடும். தமிழ் சினிமாவில் வருகிற ஊடல் காட்சிகள் மாதிரி…

கிருஷ்ணமூர்த்தி திரும்பி வந்தான் ‘‘ஐ ஆம் ஸாரி, ஆல்பத்தை எதித்தாத்துலே கொடுத்திருக்கு. இன்னொரு நாள் சாவகாசமாக் காட்றேன்” என்றான்.

”இப்போ நீயும் ஸாரி சொல்லிட்டே” என்று இவன் சொல்லி பலமாய்ச் சிரித்தான். உடனே உள்ளே அவள் இருக்கிற போது தான் அப்படிச் சிரித்திருக்கக் கூடாது என்று நினைத்து வெட்கப்பட்டுக் கொண்டான்.

அவன் கிளம்பும் போது எதையோ தேடுகிற மாதிரி அண்ணாந்து சுற்றும் முற்றும் பார்த்து விட்டு “காலிங் பெல்லை எங்கே Fix பண்ணி இருக்கே?” என்று கேட்டான்.

”சமையல் ரூமில். அங்கே இருந்தாத்தான் சௌகரியமா இருக்கும்” கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து பதில் வந்தது.

இந்த தடவை, கிருஷ்ணமூர்த்தியே அவனை வாசல் வரை வந்து வழியனுப்பினான். நிலைப்படியருகே நின்று கொண்டு “அடிக்கடி வந்து போயிண்டிரு” என்றான். அவன் என்னமோ நினைத்துக் கொண்டு “இந்த ரேழிக்கும் வாசலுக்கும் வீட்டு ஒனர்கிட்டே சொல்லி ஒரு பல்பைப் போடச் சொல்லேன், எதுவுமே நெப்புத் தெரியலே” என்று சொல்லிக் கொண்டே படிகளில் இறங்கினான். “அப்படியே உங்காத்துக்துக் கூடத்து பல்புலேருந்து ஷேடையும் கழட்டி வச்சுடு. சொவறெல்லாம் பாதிக்கு மேலே மறைக்கறது”

கிருஷ்ண மூர்த்தி ‘குட்நைட்’ சொல்லிவிட்டுக் கதவை மூடிக் கொண்டு உள்ளே போன பின்னும் அவன் ஏனோ சில விநாடிகள் படிகளிலேயே தாமதித்தான். இப்போதும் கூட, இருட்டில் காலிங் பெல் பட்டன் இருக்கிற தடம் அவனுக்குத் தெரியவில்லை. அருகில் போய் கையால் துழாவி மறுபடியும் அதைக் கண்டு பிடித்து அழுத்தி சமிக்ஞை செய்யலாம் போலிருந்தது. ஆனால், கிருஷ்ண மூர்த்தி இன்னும் ஒரு கட்டு கூடத் தாண்டி இருக்க மாட்டான். அவன் திரும்பவும் வந்து கதவை திறந்து. ‘ஹே! வாட் ஹேப் பண்ட்? கர்சீப் கிர்சீப் ஏதாவது கூடத்துலேயே வச்சுட்டு வந்திட்டியா?’ என்று கேட்பான்.

அவன் எதிலோ அதிருப்தியும், யாரிடமோ அனுதாபமுமாய் தெருவில் இறங்கி வீட்டைநோக்கி நடந்தான்.

– சுவடு, 1978.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *