உறவுகளை தேடி




இரவு எட்டு மணி ஆகி விட்டது. கோயில் வளாகத்தில் காத்திருந்த இவரின் நண்பர்கள் அணிக்கு இன்னும் ராமசாமி வந்து சேரவில்லை, மற்ற நால்வரும் எட்டு மணிக்கு சரியாக வந்து விட்டார்கள். இனி இரண்டு மணி நேரம் அரட்டைதான், அதன் பின் வீடு போய் சேர்ந்து தூக்கம், காலை எழுந்து வழக்கம்போல ஓய்வு பெற்ற ஆண்கள் அனுபவிக்கும் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும்.
சம்சாரம் நல்ல ‘மூடில்’ இருந்தால் காலையில் எழுந்த உடன் காப்பி, இல்லை அவளுக்கு வயதானவுடன் வந்து விடும் உடல் உபாதைகளால் தென்பட்டு விட்டால் அவ்வளவுதான், இவரே காப்பி போட்டு குடித்து விடுவார், சம்சாரத்துக்கும் போட்டு கொடுத்து விடுவார், ஆனால் அதற்குள் அவள் போடும் அலுப்பு கூச்சல், இவருக்கு தாங்க முடியாததாய் இருக்கும்.

பெங்களூரில் வசிக்கும் பையன் வாய் திறந்து, என்னிடம் வந்துவிடுங்கள் என்று சொல்லுவான்.என்று இவளுக்கு ஒரு நப்பாசை, அப்படி இப்படி கூப்பிட்டால் இதை சாக்கிட்டு அங்கு போய் உட்கார்ந்து கொள்ளலாம், இவள் எண்ணம் இப்படி.
ஆனால் இவருக்கு அப்படி கூப்பிட்டால் மிகவும் அவஸ்தைதான். அவருடைய மகிழ்ச்சியே இங்கு நண்பர்களுடன் கூடி பேசும் அரட்டைதான். அடுத்து இவர்கள் இரண்டு பேர் மட்டுமே இருப்பதால் விரும்பியதை சாப்பிடலாம், அவனிருக்கும் இடம் போய்விட்டால் எல்லாவற்றிற்கும் மகனை ஒரு வார்த்தை கேட்டுத்தான் ஆக வேண்டும், இதை வாய் திறந்து சொல்லாவிட்டாலும் நடைமுறைக்கு வந்து விடும் அல்லவா? இங்கிருப்பதே இவருக்கு சொர்க்கமாக இருந்தது.
ஒரு தகப்பனாய் மகனை வழிப்படுத்த முடியும் மனம், மகனாய் இருந்து தகப்பனை இப்படி வழி நடத்தினால் தகப்பன் மனம் ஒத்துக்கொள்ள மறுத்துத்தான் விடுகிறது.
இவனென்ன சொல்றது? இப்படியும் நினைக்கும், இல்லை இவன் என் விஷயத்தில் தலையிடுகிறானே? என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.
இவர் மட்டும் இப்படி இல்லை, இவர்கள் அணியில் இருக்கும் பாலகிருஷ்ணன், அமுதகணேசன், ராஜசேகரன் அனைவருமே இப்படி தனி தனி தீவுகளாய் வசிப்பவர்கள்தான். நினைத்தால் எங்காவது கிளம்பி விடுவார்கள்,. எங்காவது ஒரு கோயிலுக்கோ, இல்லை சுற்றுலா ஸ்தலங்களுக்கோ சென்று ஒரு நாள், இரு நாள் இருந்து விட்டு வருவார்கள்.. வீட்டில் மனைவிகள் விரும்பினால் அழைத்து செல்வார்கள்,. இல்லை என்றால் இவர்கள் மட்டும் செல்வார்கள்..
ராமசாமி மட்டும் இதில் விதி விலக்கு, கொஞ்சம். கொஞ்சமென்ன நிறையவே விதி விலக்குத்தான். ஓய்வு ஊதியம் குறைவானவர், இன்னும் ஒரு பெண் திருமணத்திற்கு நிற்கிறாள். அதனால் ஓய்வு பெற்ற பின்னாலும் ஏதோ கம்பெனிக்கு வேலைக்கு போகிறார். அவரும் இவர்கள் அணியில்தான் சேர்ந்திருக்கிறார். இவர்களுக்கு அவர் மீது கொஞ்சம் பரிவு உண்டு. அவர்களுடன் சில நேரங்களில் ஊர் சுற்றுவதற்கு உடன் வந்தால் செலவுகளை அவருக்காக போட்டுக்கொள்வார்கள்.. ஆனால் அதை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்து விடுவார். காரணம் நால்வருக்குமே அதை சொல்லிக் காட்டும் பழக்கம் உண்டு. இது இவருக்கு புரிகிறது, என்ன செய்வது? சில சமயம் தானாக வந்து விடுகிறது. அதுவும் ஒன்றுமில்லாத அரசியல், சினிமா விஷயங்களை பற்றி விவாதிக்கும் போது, கொஞ்சம் சூடாகி விட்டால், அப்பொழுது அவரை வாருவதற்காக உங்களுக்கே வழியில்லை, இதுல இது வேறயா? போனற வார்த்தைகளை வீசி விடுவார்கள்.. இதனால் அவர் மனசு சங்கடப்படும்
பொதுவாக அவர் புள்ளை பூச்சி, மற்றபடி உண்மையில் உலக விஷயங்கள், அனைத்திலும் அவர் இவர்களை விட விவரம் அதிகம் அறிந்தவர். என்றாலும் வசதியில் இவர்கள் தான் அதிகம். இதனால் அவர் எப்பொழுதும் தன்னை தாழ்த்தி கொள்வார்.
ராமசாமி வந்து விட்டார், ஆனால் முகம் சோர்ந்தாற்போல் இருந்தது, என்ன விஷயம்? மெல்ல கேட்டார்கள். பொண்ணுக்கு ஒரு இடம் தகைஞ்சிருக்கு, ஆனா பையன் இராணுவத்துல இருக்கான், அதனால கல்யாணமான உடனே அவ டெல்லி பக்கம் போகணும், அதான் சங்கடமா இருக்கு. அவளும் நான் உங்களை விட்டு போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறா. உள்ளூர் மாப்பிள்ளை பாருங்க அப்படீங்கறா? எனக்கும் வீட்டுக்காரிக்கும் மனசு கேட்கலை. பையன்
உறவுப்பையன், ரொம்ப நல்ல மாதிரி, அவங்கப்பா, அம்மா எங்களோட ஒத்து போறவங்க, பணம் காசை அதிகம் எதிர்பார்க்கலை, அதனால விட்டுட மனசு இல்லை.
அமுதகணேசன் அப்புறம் என்ன உங்க வசதிக்கு தக்க மாதிரின்னா உடனே முடிச்சுட வேண்டியதுதானே, பொண்ணு அப்படித்தான் சொல்லுவா, அதை பார்த்தா நம்ம கடமை எப்ப முடியறது.
ராமசாமி எதுவும் பேசவில்லை,, அன்று இவர்களுடைய பேச்சு மகனுக்கும், மகளுக்கும் திருமணம் செய்வித்தலை பற்றி இருந்ததால் வழக்கம் போல இரண்டு மணி நேரம் கழிந்ததே தெரியவில்லை.
அடுத்த ஒரு வாரமாய் ராமசாமி வரவில்லை. மறு வாரம் இவர்கள் சந்தித்த போது உற்சாகமாய் இருந்தார். பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டா, மாப்பிள்ளையும் கல்யாணம் முடிஞ்சு இரண்டு மாசத்துல டெல்லிக்கு பக்கத்துல அவங்களே கோர்ட்டர்ஸ் கொடுத்துடுவாங்களாம், உங்க பொண்ணோட நீங்க வந்து மூணு மாசம் தங்கிட்டு போங்க, அப்ப உங்க பொண்ணுக்கு செளகர்யமா இருக்கும் அப்படீன்னு சொன்னாரு
பாலகிருஷ்ணன் உடனே முகத்தை சுழித்தார். அதெப்படி மாப்பிள்ளை வீட்டுல போய் மூணு மாசம் தங்க முடியுமா? அதுவும் டெல்லி கிளைமேட் நமக்கு ஒத்துக்கணுமே?
ராமசாமி அதயெல்லாம் பாத்தா முடியுமா? நமக்கு ஒத்துக்குதோ இல்லையோ, கடைசி வரைக்குமா அங்க போய் இருக்க போறோம், கொஞ்ச நாள் அவங்களுக்கு ஒரு துணை இருக்கறமாதிரி இருக்கட்டுமே..
இவர் ராமசாமி என்ன இருந்தாலும் இப்ப இருக்கறமாதிரி வருமா? நாம் நினைச்சா எல்லாம் செய்யறோம், அங்க போனா கஷ்டம்தானே?
ஒரு மூணு மாசம் போய் கஷ்டப்படறதுனால நமக்கு என்ன துன்பம் வந்துடப்போறது இப்படி அவர் சொல்லவும் இவர் வாயை மூடிக்கொண்டார்.. வீட்டில் மனைவியிடம் இதை பற்றி சொன்னார்.. அவள் எதுவும் பேசவில்லை.
ஒரு மாத்த்தில் ராமசாமியின் பெண் திருமணம் சிம்பிளாய் கோயிலில் வைத்து முடித்து ஒரு ஹோட்டலில் சாப்பாட்டை முடித்துக்கொண்டார். அடுத்த மாதமே மகளுடன் அவர்களும் கிளம்பி விட்டார்கள்
ராமசாமி இல்லாமல் இவர்கள் அணியின் அரட்டை நடந்து கொண்டிருந்த்து. என்றாலும் அவ்வபொழுது அவர் இவர்களுடன் தொலைபேசி உரையாடலை வைத்துக்கொண்டார்.
வீட்டில் இவர் மனைவியின் நச்சரிப்பு ராமசாமியின் செயலுக்கு பிறகு அதிகமானது, நாமும் போய் பையன் வீட்டுல பத்து நாள் தங்கிட்டு வரலாமே?
அதெப்படி போறது, அவன் நம்மளை கூப்பிடணுமே? கூப்பிட்டாத்தான் போகணுமா?
இவருக்கு கூச்சம் பையனிடம் எப்படி கேட்பது, நான் உன் வீட்டுல வந்து பத்து நாள் தங்கலாமா? அப்படீன்னு இதனால் மனைவியின் பேச்சை தவிர்த்து வந்தார்..
பொறுத்து பொறுத்து பார்த்தவள் ஒரு நாள் அவளே போன் மகனுக்கு போன் பண்ணி ஏண்டா நானும் அப்பாவும் உன் வீட்டுல வந்து பத்து நாள் தங்கலாமுன்னு இருக்கோம், நீயா கூப்பிடுவே கூப்பிடுவேன்னு பார்த்தா கூப்பிடவே மாட்டேங்கறே?
போனின் மறு பக்கம் அவன் பதறுவது தெரிந்தது, ஐயோ அம்மா என்னம்மா இப்படி சொல்லிட்டே, அப்பா எங்க கூப்பிட்டாலும் வரமாட்டேங்கறாரே அப்படீன்னுதான் உங்களை கூப்பிட தயங்கிட்டு இருந்தேன். தாராளமா வாங்க, நானே உனக்கும் அப்பாவுக்கு டிக்கட் எடுத்து அனுப்பி வைக்கறேன்
அவள் இவரிடம் பெருமையாக சொன்னாள், இவருக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தாலும், போய்த்தான் பார்ப்போமே.
அந்த அணியில் இவரின் பத்து நாள் பிரிவு அவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது, எங்குமே செல்லாத ஆள் எப்படி இந்த பயணத்துக்கு ஒத்துக்கொண்டார் என்று.
மகன் வசிக்கும் பெங்களூருக்கு சென்ற இவரின் பயணம் பத்து நாள் என்பது பதினைந்து,இருபது என ஓடி ஒரு மாதம் கழித்தே வந்தார்கள்.
என்ன பாக்கியசாமி இப்படி ஒரு மாசம் பையன் வீட்டுல டேரா போட்டுட்டே? நண்பர்களின் கேள்விக்கு இவர் சொன்ன பதில், இப்போதான் இவ சந்தோஷமா இருக்கறா, நமக்கும் உறவு இருக்குதுன்னு. பையன் ஆரம்பத்துல கூப்பிடலையேன்னு வருத்தம் இருந்துச்சு, அப்புறம் இங்க நாம இருக்கற வசதி அங்க கிடைக்குமான்னும் தயங்கினேன்.
ஆனா பையன் வீட்டுல வசதி குறைவா இருந்தாலும் மனசு சந்தோசமா இருந்துச்சு, இதை மறுக்க முடியலை. அவங்க கூடவும், பேரன் பேத்திக கூடவும் இருந்ததுல இப்ப மனசு ரிலாக்சா இருக்கு, அவளுக்கும் அப்படித்தான் இருக்கு. இனி வருசத்துக்கு ஒருக்கா இப்படி எங்காவது உறவுகளை பார்த்துட்டு வந்தா நல்லா இருக்கும்னு நாங்க முடிவு பண்ணி வச்சிருக்கோம்.
கேட்டுக்கொண்டிருந்த அமுதகணேசன், பாலகிருஷ்ணன், ராஜேசேகரின் முக பாவனைகள், நாம் கூட உறவுகளை பார்க்க வெளியூருக்கு போய் வந்தால் என்ன ? என்ற யோசனையில் இருப்பதை கண்டு கொண்டார்.
![]() |
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க... |